“உங்களுக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றான் ஆதன்.
“அவ சாகறதுக்கு முன்னாடி எல்லாம் பெருசா எதுவுமே நடக்கல சார். அவ செத்ததுக்கு அப்புறம்தான் நிறைய நடந்தது. என்னையும் அவளையும் நடத்த கெட்டவவுங்கன்னு சொல்லி அந்த அபார்ட்மெண்ட்ல முத்திரை குத்திட்டாங்க. அவ ஒழுக்கம் இல்லாம கண்ட நேரம் வீட்டுக்கு வர்றதாவும், நிறைய பசங்களோட பழக்கம் இருக்குன்னும் எவ்வளவு விமர்சனம் தெரியுமா? இரவு நேரத்தின் ஒரு மழை பொழுதில் அவளுக்கு அங்க என்ன வேலை. இப்படி எல்லாம் எத்தனை கேள்விகள் தெரியுமா? அப்போ எனக்கு கல்யாணம் நிச்சயமாகியிருந்துச்சு. மக்கள் என்னையும் சேர்த்து விமர்சித்ததால, என்னோட கல்யாணம் நின்னு போயிடுச்சு..” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.
அதில் அவனுக்கு தேவையான தகவல்கள் எதுவுமே இல்லை என்றாலும் அவளை பேச விட்டு வேடிக்கை பார்த்தான். ஏனெனில் மனதில் உள்ள கணம் குறைந்தால், ஒருவேளை அவள் உருப்படியான தகவல் ஏதும் சொல்லக்கூடும் என்ற எண்ணம் அவனுக்கு.
சற்று நேர அமைதிக்கு பின் அவனே வினா தொடுத்தான்.
“நிலாவுக்கு நிறைய பசங்களோட பழக்கம் இருக்குன்னு சும்மா சொல்லி இருக்க வாய்ப்பில்லையே?” என்று அவன் வினவ அவள் முறைத்தாள்.
“முறைக்காதீங்க, நான் சொன்னது தப்பான அர்த்தத்தில் பாக்காதீங்க. நிலா ஒரு காலேஜ்ல ஜூனியர் சயின்டிஸ்டா வேலை பார்த்திருக்காங்க அந்தப் ப்ராஜெக்ட் சம்பந்தமா சிறுகுடி கிராமத்தில் நிறைய பேரை சந்தித்தும் இருக்காங்க. அவங்களோட டிஎன்ஏ மூலக்கூறுகளை எடுத்து ஆராய்ச்சியும் செஞ்சிருக்காங்க. அப்போ கண்டிப்பா நிறைய பேரோட பேசி இருக்க வாய்ப்பு இருக்கு. அதில் உங்களுக்கு தெரிந்தவர்களைப் பத்தி சொல்லுங்க..” என்று விளக்கமாக கூறினான்.
“ம்ம்ம்… உண்மைதான் சார் நீங்க சொல்றது. ஆனா அவ எனக்கு அவ்ளோ பழக்கம் கிடையாது. எங்களுக்குள்ள எல்லாத்தையும் பரிமாறிக்கிற மாதிரி பரஸ்பர உறவு இல்ல. ரெண்டு பேரும் நல்லா பேசுவோம். நல்லா சிரிப்போம். ஆனா தனிப்பட்ட விஷயங்கள் நிறைய பேசினது கிடையாது. அவளும் அவ ப்ராஜெக்ட் பத்தி எல்லாம் என்கிட்ட சொன்னது கிடையாது. ஆனா ஒரு முறை, அவ கூட நான் அந்த கிராமத்துக்கு போயிருக்கேன். அங்க சில மக்களிடம் பேசினதெல்லாம் பார்த்திருக்கேன்..”
இந்த ரெண்டு பேரையும் உங்களுக்கு தெரியுமா என்று நெடுமாறன் மற்றும் கண்ணனின் புகைபப்டத்தை அவளிடம் காண்பித்தான்.
சிறிது யோசனைக்குப் பின் அவள் தெரியும் என்ற தலையாட்டினாள்.
“இப்போ இவங்க ரெண்டு பேரும் உயிரோட இல்ல..”
“வாட்?” என்று அதிர்ச்சியடைந்தாள்.
“அதனாலதான் நிலாவோட கேஸை திரும்ப ரீவிசிட் பண்ணனும்னு நான் சொல்றேன்.”
“இவங்கள என்னைக்கு எப்போ நிலாவோட பார்த்தீங்க?”
“நாங்க ஒரு நாள் சிறுகுடி போயிருந்தோம் சார். அன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. நான் மருத்துவமனையில் லேப்ல வேலை பார்ப்பதால் என்னை கூட்டிட்டு போனா. நிலா சில பிளட் சாம்பிள்ஸ் எல்லாம் சேகரிச்சா. அதுல இந்த பசங்க ரெண்டு பேருமே இருந்தாங்க.”
“பசங்க பழகுறதுக்கு எப்படிப்பட்ட ஆளா தெரிஞ்சாங்க..”
“நிலா மேல நிறைய மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தாங்க சார். எல்லாருமே அவ கிட்ட நல்லா பேசினாங்க. அந்த பசங்க ரெண்டு பேரும் அக்கான்னு அவ்வளவு உரிமையா பேசுனாங்க..”
“இவுங்களைப் பத்தி வேற ஏதாவது தகவல் தெரியுமா?”
“தெரியாது சார்..”
“அவ வேலைப் பார்த்த காலேஜில் தகவல் கேட்டா கிடைக்க வாய்ப்பிருக்கு. இங்க எங்க ஹாஸ்ப்பிட்டலில் கூட சில ப்ளட் சேம்பிள் டெஸ்ட் பண்ண கொடுத்திருந்தாங்க..”
“அதைப் பத்தின தகவல் எடுத்துத் தர முடியுமா?”
“ரொம்ப கஷ்டம் சார்.. அது மரபணு ஆராய்ச்சி துறை. எல்லாருக்கும் அக்செஸ் இருக்காது.”
“கொஞ்சம் முயற்சி செஞ்சு பாருங்களேன்..”
“இதுல ஏதாவது பிரச்சினை வந்தா என்னோட வேலை போகும்.. இதை நீங்க அபிஷியலா மருத்துவமனையில் கேட்கலாமே..” என்று அவள் வினவ அவன் பதில் கூறவில்லை.
அவளுக்கு புரிந்தது. அவன் கலர் சட்டையில் இந்த வழக்கை விசாரணை செய்கிறான் என்று. இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று தோன்றியது மஞ்சரிக்கு.
“மிஸ். மஞ்சரி, நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியிது. இது முடிஞ்சு போன வழக்கில்லை. இன்னும் தொடர்ந்து நடந்துட்டுருக்க ஏதோ ஒரு பெரிய தவறின் தவறிப்போன தவறுகள். ஏதையோ மறைக்க கொலைகள் நடந்துட்டே இருக்கு. அதை நிச்சயமா கண்டுபிடிக்கணும். டிபார்ட்மெண்டில் எல்லோரும் விலை போயிட்டாங்க. இதை விசாரிக்க ஆளே இல்லை..” என்று விளக்கம் கொடுத்தான்.
அவளுக்கு அவனுடைய பதிலில் பெரிதாக திருப்தி இல்லை. அவனுடைய பொதுநலம் நல்லதுதான். ஆனால் அதில் அவளை உள்ளிழித்து தியாகம் செய்துவிடகூடாதே. எப்பொழுதும் மனிதன் தன்னலம் பேணுவதில் பிழையொன்றுமில்லையே. அவள் ஏற்கனவே அடிபட்டவள். அடிப்படையில் நல்லவளாய் இருந்தாலும், மீண்டும் தவறு நிகழ்ந்துவிடுமோ என்று ஐயுறுகிறாள்.
“திரும்பவும் சொல்றேன். நீங்க என்னை நம்பலாம். உங்களுக்கு எந்தவொரு சங்கடமும் வராம நான் பாத்துக்குறேன்..” என்றான்.
“நான் முயற்சி செஞ்சு பாக்குறேன்..” என்று அவளறியாமலே அவள் உதடுகள் உதிர்த்துவிட்டது சொற்களை. அவன் மிரட்டவில்லை. அவன் அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை. அவன் நினைத்திருந்தால் அதையெல்லாம் செய்திருக்க முடியும். ஆனால் தன்மையாக கையாள்கிறான். நேர்மையாக ஒப்புக்கொள்கிறான். அதனால் மனச்சாய்வு அவன் பக்கம் நிகழ்ந்ததித் பேராச்சரியம் ஒன்றுமில்லை.
“இது என்னோட நம்பர்” என்று அவனுடைய அவுரி சீட்டை அவளிடம் நீட்டினான்.
தயக்கத்துடன் அவள் அதை வாங்கிக் கொண்டாள்.
ஆதன், அடுத்து நிலா வேலை பார்த்து கல்லூரிக்கு சென்றான். அங்கு சென்று விசாரித்ததில், அவனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவள் ஜூனியர் ரிசர்ச் சயின்டிஸ்ட் ஆக வேலை செய்து கொண்டிருந்த திட்டம் இப்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
அந்த ப்ராஜெக்ட் பற்றிய தகவல்கள் வேண்டும் என்று அவன் வினவ, மரபணுத்துறையின் தலைவர், சில தரவுகளை அவனிடம் கொடுத்தார். அதையெல்லாம் வாங்கிக் கொண்டு சிந்தனையுடனே வீடு வந்து சேர்ந்தான் இரவு 10 மணியாகி இருந்தது.
நிலாவின் கல்லூரியில் கொடுத்த கோப்புகளை ஆராயத் தொடங்கியவனுக்கு பேரதிச்சி. ஏனெனில் அந்த கோப்பில் சிறுகுடி மக்களிடம் பெறப்பட்ட டீ.என்.ஏ மாதிரி பற்றிய தகவல்கள் இருந்தது. அவர்களின் பெயர், வயது என்று இன்னும் பிற தகவல்களும் இருந்தது. ஆனால் நெடுமாறன் மற்றும் கண்ணனின் பெயர் அதிலில்லை. மஞ்சரியின் கூற்று உண்மையென்றால், இந்த பட்டியலில் அவர்களின் பெயரும் இருக்க வேண்டும் அல்லவா?
ஓரடி முன்னெடுத்தால், இரண்டடி பின்னே செல்கிறது வழக்கு. மஞ்சரியிடம் இதைப் பற்றி விசாரித்தே ஆக வேண்டும் என்று தோன்றியது.
மஞ்சரியின் எண் அவனிடம் இருக்கிறது. ஆனாலும் அழைக்க தயக்கம். இரவு பத்து மணியாகிவிட்டது. அலைபேசியை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
முருகனுக்கு அழைத்தான். சிறுகுடி கிராமத்தில் யாரெல்லாம் நிலாவின் ஆராய்ச்சிக்கு இரத்தம் மாதிரியாக கொடுத்தது என்று விசாரிக்க சொன்னான். இனி இப்படி அமர்ந்துகொண்டு விட்டத்தைப் பார்ப்பதில் பலனே இல்லை என்று உறங்கத் தொடங்கினான்.
அன்றிரவு பெரும் மழை. ஆங்காங்கே நிலச்சரிவு வேறு. சிறுகுடி கிராமத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்க, அந்த ஊரின் தலைவர் அவர்களையெல்லாம் பாதுகாப்பான பகுதியில் தங்க வைத்திருந்தார். பலர் வீடுகளை இழந்திருந்தனர். அடுத்த இரண்டு நாட்கள் அதுதான் தலைப்பு செய்தியாக இருக்கப்போகிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட அன்று, நடு சாமத்தில் அவனுக்கு அழைப்பு வந்தது. மீட்புப்பணிக்கு தயாராகும்படி செய்தியும் வந்தது. ஏதேனும் உயிரிழப்புகள் இருக்குமோ என்று அஞ்சி வெளியில் வந்தவனுக்கு முதிலில் நினைவுக்கு வந்தது சிறுகுடி கிராமம்தான்.
ஆனால் அந்ந கிராமத்தை சேர்ந்த யாருக்கும் எதுவும் நிகழவில்லை அவர்கள் அனைவருமே பத்திரமாக முகாமில் இருந்தனர். ஊர் தலைவர் தான் அதை செய்தது என்றும் முருகன் அவனுக்கு கூறினார். இன்னும் சில இடங்களில் நிலச்சரிவு நிகழ்ந்திருக்க, அங்கு சென்று மீட்பு பணிகளை செய்து முடித்தனர். இரண்டு நாட்கள் எதைப்பற்றியும் அவனால் சிந்திக்க முடியவில்லை அவ்வளவு இருந்தது. காவல்துறையை சேர்ந்த அனைவருமே மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மூன்றாவது நாள் மஞ்சரியை சந்திக்க சென்றான். அவள் கையில் ஒரு டைரியுடன் வந்தாள்.
“இந்தாங்க சார்.. இது நிலாவோட டைரி” என்று அவனிடம் கொடுக்க, அதை ஆர்வமாக வாங்கிப் பார்த்தான் அவன்.
அதில் நிறைய குறிப்புகள் எழுதி வைத்திருந்தார் அன்றாடம் செய்ய வேண்டியது செய்து முடித்தது என்று அனைத்து தகவல்களையும் அதில் குறித்து வைத்திருந்தாள். மிகவும் ஒழுங்குடன் நேர்த்தியாக செய்திருந்தாள். ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியாக குழப்பம் ஏதும் இல்லாமல் தெளிவாக எழுதி வைத்திருந்தாள். சனி ஞாயிறு விடுமுறையாதலால் அந்த இரு நாட்களுக்கு மட்டும் ஏதும் எழுதாமல் இருந்தது. முக்கால்வாசி பக்கங்கள் இப்படித்தான் இருந்தது. ஆனால் கடைசி சில பக்கங்களில், பணி நிமித்தமல்லாது, வேறு சிலவற்றையும் எழுதி வைத்திருந்தாள். அங்கங்கே கோலம் போட்டிருந்தாள். பூக்களை வரைந்திருந்தாள். ஓரிரு வரி கவிதை.. சில பாடல் வரிகள்.. என்று அந்தப் பக்கங்கள் அவள் காதல் வயப்பட்டிருந்ததை சுட்டியது.
“நிலாவோட வழக்கில் அவளுக்கு காதல் இருந்ததா எங்கயுமே குறிப்பில்ல..” என்று அவன் கூற, மஞ்சிருக்கும் அதைப் பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை.
“ஆனா ஒரு விஷயம் சரி. அந்த கடைசி சில நாட்கள் அவளிடம் ஒரு மாற்றம் இருந்தது உண்மைதான். எனக்கு அப்போ எதுவும் தோணல. ஆனா இப்போ இந்த டைரிய பாக்கும்போது அப்படி இருக்குமோன்னு தோணுது..
“அந்த பையன் யாராயிருக்க வாய்ப்பு இருக்கு?”
“ஒருதலை காதலா இருக்குமா சார். ஏனா உண்மையா காதலிச்சிருந்தா இப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது, அவன் நிச்சயம் வெளியில் வந்திருக்கணும் இல்லையா? அவனைப் பற்றி தகவல் தெரிந்திருக்கும்” என்று தன் சந்தேகத்தை அவனிடம் கூறினாள்.
“ஒரு தலை காதலாக இருக்க வாய்ப்பில்லை. அவங்க அங்கங்க கிறுக்கி வச்சிருக்கறத பாத்தீங்களா?” ஓரிடத்தில் இப்படி கூட காதலை சொல்லலாமா ஆச்சரியம்தான் என்று எழுதி இருந்தாள். அவன் தீண்டல் பற்றிய அவளின் சிலிரப்பு, அவன் பேசிய வார்த்தைகள் என்று சிலவற்றை ஆங்காங்கே எழுதி வைத்திருந்தாள். அவளுடைய அலைபேசி அழைப்புகளை மற்றொரு முறை சரிபார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
இப்பொழுது அவனுக்கு மற்றொரு சந்தேகமும் வந்தது. காதலன் இருந்திருந்தால், அவன் நிச்சயம் அவளுக்காக போராடியிருக்க வேண்டும். ஒருவேளை வெளியுலகுக்கு பெயர் தெரியாத அவனையும் கொன்றுவிட்டார்களா என்ன? ஏனெனில் நிலாவின் கொலையில் பெரும் மர்மம் இருக்கிறது. அப்படி இருக்கையில், நிலாவின் காதலனும் ஒரு தடைக்கல்தானே. இன்றுவரை நிலாவின் காதலன் என்று ஒருவனும் உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. ஒன்று அவனுக்கு ஏதேனும் நிகழ்ந்திருக்க வேண்டும். இல்லை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், அவன் சுயநலவாதியாக இருந்திருக்க வேண்டும்.
மழை தொடரும்…
interesting