Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-23

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-23

அத்தியாயம்-23

  இன்று முதல் அமுல்யாவிற்கு இருபது நாள் தொடர்ச்சியாக பள்ளி விடுமுறை என்று வந்ததும் கத்தி கூச்சலிட்டு கூறினாள்.
  துகிரா இமை மூடி, காதை பொத்தி பின்னால் நகர, அந்த நேரம் இஷான் வரவும், அவன் நெஞ்சில் பின்னந்தலை இடித்து நின்றாள்.

யார் மீது இடித்துவிட்டோமென பதறி திரும்ப, இஷான் என்றதும், தன் நெஞ்சில் கைவைத்து எதிரே ஓட பார்த்தாள்.
  ஆனால் தலைவாறியிருந்த பின்னலில் இஷான் ஷர்ட் பட்டன் வகையாக மாட்டிக் சிகை சிக்கியிருக்க, “அம்மா” என்று வலி தாளாமல் சுணங்கி நின்றாள்.
 
வலது இடதென தலையை திருப்பி ஒருவாறு திரும்பி பார்க்க, சிகை கூடுதல் சிக்கலானது.
“ஆடாம நிற்கறியா?” என்று இஷானின் பற்கடித்து பேச, சிலை போல நின்றாள். அவ்விடத்தில் பைரவி பிரதன்யா ரிஷி என்று இருக்கவும் இது போன்று தன் பட்டனில் மாட்டி திணறுவதை கண்டு அவர்கள் பார்வையில் திரைப்படத்தில் வரும் காதல் படக்காட்சி போல நமுட்டு சிரிப்பில் சிரித்தனர்.
  இஷானே பட்டனிலிருந்து சிகையை எடுத்துவிட, அமுல்யாவோ “டேடி மம்மியை திரும்ப கஷ்டப்படுத்தறிங்களா” என்று கேட்டு ஓடிவந்தாள்.
 
   ‘திரும்பவா?’ என்பது போல இஷான் விழிக்க, துகிராவோ, “நமக்குள்ள நடந்த பஸ்ட் மீட்டிங்கை சொல்லறா. நீங்க என் முடியை பிடிச்சி இழுத்தப்ப தானே அவ பயந்தது.” என்று விவரிக்க, துகிரா கூறிய காரணத்தை கேட்டுவிட்டு, “டேடி ஷர்ட் பட்டனை பார்க்கலையா. மூடி நிளமா இருந்தா இப்படி தான்.” என்று சிக்கிய கூந்தலை சேதாரமின்றி எடுக்க போராடினான்.‌

  துர்காவுக்கு தோள்வரை கூந்தல். துகிராவுக்கோ இடைவரை கூந்தல் என்பது ஒரு வித்தியாசமிருக்க, இஷானுக்கு இந்த நீண்ட கூந்தல் பிடித்திருந்தது.
 
   அமுல்யாவோ, தந்தை தாய் இருவருக்கு அருகே வந்து சேர, இஷான் மெதுவாய் எடுத்துவிட, துகிரா உடனே இடத்தை காலி செய்தாள். பைரவியோ குழந்தை எதிர்ல துகிராவை முடியை பிடித்து காயப்படுத்தியிருக்கின்றான் என்றவரை அறிந்து கொண்டதில் மீண்டும் இதெல்லாம் காதல்காட்சியில் சேராதா? என்று சலித்தனர். 

  “அப்பறம் அமுலுக்கு ஸ்கூல்ல லீவா?” என்று மகளை தூக்கி கொண்டான்.

“ஆமா டேடி. ட்வென்டி டேஸ். டேடி டேடி இந்த லீவுக்கு எங்கயாவது போகலாமா?” என்று மடியில் ஏறி கொஞ்சி கேட்க, இஷானோ யோசித்தான்.

  துகிராவோ “அம்மு… ஆல்ரெடி நீ ஸ்கூலுக்கு போக வர்றப்ப, பிக்கப் டிராப் உங்கப்பா வந்து போனதில் லீவு தருவாங்களானு டவுட். அவரை இக்கட்டான சிட்சுவேஷன்ல தள்ளாத” என்று கூறியதில் இஷான் துகிராவை  காணவும், “பேகை கொடு. நான் போய் வச்சிட்டு வர்றேன்” என்று ஓடினாள்.

“அப்பா.. அம்மா சொன்ன மாதிரி உங்களுக்கு லீவு இருக்காதா?” என்று வாடினாள்.

  “அப்பா டே அண்ட் நைட், இரண்டு ஷிப்டா அப்பயெல்லாம் ஆபிஸுக்கு உழைச்சிருக்கேன் டா. நீ அப்ப இல்லை. ஏன் இந்த உலகமே இல்லைன்னு வாழ்ந்த சமயம்.
  இப்ப உலகமே நீ தான்… அப்படியிருக்க சீக் லீவ் இல்லைன்னா வருஷத்துக்கு எடுக்காத லீவ் எல்லாம் எடுத்து உன்னை ஊர்சுற்றி காட்ட மாட்டேனா? ஆபிஸ்ல நாளைக்கு பேசறேன்” என்று கூற, படியில் ஏறிய துகிராவுக்கும் கேட்டது.

  ‘குழந்தையை கூட்டிட்டு போனா எனக்கு போரடிக்குமே’ என்று துகிரா மெதுவாக அறைக்கு வந்தாள். அதுக்காக அவ அப்பாவோட வெளியே ஊர்சுத்தாம இருக்க முடியாது. ம்ம் அதுக்குள்ள வேலை கிடைக்குதானு பார்க்கணும். இந்த லீவ்ல ஒரு வேலை தேடணும்.’ என்று முடிவெடுத்தாள்.

    கீழே வரும் போது, இஷான் வீட்டில் உள்ளவரிடம் லீவிற்கு செல்ல கேட்டிருப்பானோ என்னவோ, பைரவியோ “என்னால இந்த உடம்பை வச்சிட்டு ஊர்சுத்த முடியாது இஷான்.” என்றார்.

  “எனக்கு எக்ஸாம் வருதுன்னா” என்றாள் பிரதன்யா.
 
  “அண்ணா… எனக்கு பைனல் இயர். ஏற்கனவே கொஞ்சம் அரியர் வேற இருக்கு.” என்று தலையை சொரிந்தான்.‌

  “ஏன்டா… என்னவோ அடுத்து பார்க்க போற பிஸினஸுக்கு காசு சேர்த்து வச்சது போல சொல்லற?” என்றான் இஷான்.

  “க்ளியர் பண்ணிடுவேன் அண்ணா” என்று கூற, “அப்பா அரியர்னா? என்ன?” என்று அமுல்யா உள்நுழைந்து கேட்டாள்.‌

”ம்ம்ம் உன் சித்தா சில சப்ஜெக்ட்ல மார்க் கம்மியாம். மறுபடியும் எக்ஸாம் எழுதணுமாம்… படிக்கணுமாம்… ஊர்சுத்த வரமாட்டானாம்” என்றான் சலிப்பாய்.

“அய்யோ சித்தா… உன் கேர்ள் பிரெண்ட் யாரிடமாவது லெசன்ல டவுட் கேட்டு பாஸ் பண்ணிருக்கலாம்ல. நான் எல்லாம் கிஷோருக்கு மேத்ஸ் சொல்லி தருவேன்.” என்றாள் பெருமையாக.

“உங்க சித்தா கேர்ள்பிரெண்ட் கூட படிச்சி தான் மார்க்கை கோட்டை விட்டுயிருப்பான்.” என்று பைரவி உதட்டை கோணித்து முகத்தை திருப்பிக்கொண்டார்.‌

  “அம்மா… குழந்தையிடம் என்ன பேசறிங்க. அமுலு சித்தாவும் வரலையாம். நீயும் நானும் தனியா போகலாம்.” என்று இஷான் கூற, பைரவியோ வெடுக்கென திரும்பி, “தனியா ஏன் போகணும். உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போ.” என்று பேச, இஷானோ கற்பாறையாக முகம் மாற, “குழந்தை அம்மா இல்லாம எங்கயும் போகமாட்டா. நைட்டு அவளை கட்டிட்டு தூங்கணும். புது இடத்துல நீ சமாளிப்பியா? சட்டுனு ஜுரம் சளி காய்ச்சல் தலைவலின்னு என்ன செய்வ?

   சரி சட்டுனு பப்ளிக் பிளேஸ்ல பாத்ரூம் வருதுன்னு சொன்னா நீ லேடிஸ் ரெஸ்ட் ரூமுக்கு கூட்டிட்டு போக முடியுமா. அம்மா இருந்தா தான் எப்பவும் குழந்தைக்கு நல்லது.” என்றதும் இஷான் வேகமாய் சிந்தித்தான்.

  ‘அன்னை பைரவி சொன்னதிலும் தவறாக தோன்றவில்லை. அமுலுவிற்கு எந்த நேரம் உடல்நிலை பாதிப்பென்றாலும் பயந்திடும் ஆள். இதே துகிரா இருந்தால் சற்று குழந்தைக்கு பாதுகாப்புண்டு’ என்று புரிய, அதே நேரம் அமுல்யாவுமே, “டேடி டேடி மம்மி கூட வரணும்” என்று முகத்தை பாவமாக வைத்து கேட்க, இஷானோ “அப்பா எங்க போகலாம்னு முடிவெடுத்துட்டு சொல்லறேன். அப்ப உங்க அம்மாவுக்கு ஓகேவானு கேளு. அவ வரலைன்னா விட்டுடணும். அடம் பிடிக்காத.” என்று கூறிவிட்டு எழுந்து சென்றான்.‌

  ‘நான் எதுக்கு வரணும். நான் எங்கயும் வரலை’ என்று துகிரா மறுப்பாய் தலையாட்ட, பைரவியோ “குழந்தைக்கு ஐஸ்க்ரீம் வேண்டுமின்னா அளவிவ்லாம வாங்கி தருவான். எது தரணும் எது தரக்கூடாதுன்ற விஷயம் இஷானுக்கு தெரியாது. அதுவும் உன்‌பொண்ணு அவ அப்பாவுக்கு முத்தம் கொடுத்து காரியம் சாதிப்பா.
  ஊர்சுத்த எங்க போனாலும் நீயும் கிளம்பும்மா. குழந்தைக்கு நீ தானே அம்மா.” என்று மாமியாராக மருமகளிடம் பதிலை திணித்துவிட்டு நகர்ந்தார்.

  துகிராவுக்கு இப்படி உதிர்த்தால் மறுக்க தோன்றுமா? அமுல்யா உடல்நிலை எதையாவது தந்து பாதித்தால்?
அதிலும் ‘நீ தானே அம்மா’ என்ற வார்த்தை நங்கூரமாக இறங்கியிருக்க செல்வதற்கு மனதளவில் தயாரானாள்.‌

  இஷான் திட்டவட்டமாய் அன்னை துகிராவை தன்னோடு அனுப்ப முடிவெடுத்ததை அறிந்தாலும், துகிரா இல்லாமல் அமுல்யாவை சமாளிக்க இயலாதென்ற உண்மையும் புரிய, அந்த நேரம் வாதம் நிகழ்த்தாமல் தவிர்த்தான்.

   துகிராவோ கையை பிசைந்து அந்த நேரம் எதுவும் மூச்சுவிடாமல் நகர்ந்தாள்.

   அமுல்யாவிடம் எங்க செல்லலாம் என்ற விவரம் கேட்க அவளோ ஊட்டி என்றாள்.
 
  “ஊட்டியா?” என்று இஷான் மறுக்க பார்க்க, “அப்பா என் பிரெண்ட் எல்லாம் ஊட்டில ரோஸ் கார்டன் பார்த்ததா சொன்னாங்க. நானும் போகணும் அப்பா. ப்ளீஸ்ப்பா” என்று உதடு பிதுங்கி மகள் கொஞ்சி கேட்க, இஷானோ சம்மதமாய் தலையாட்டினான்.

   அவன் ஊட்டிக்கு செல்ல மறுக்க நினைத்தான். ஆனால் அமுல்யா ஆசையை துடைத்திட மனமில்லை. துர்காவோடு ஹனிமூனுக்கு சென்ற இடம். துர்கா உருவத்தில் துகிராவே நடமாடி நினைவை நீங்க விடாமல் நினைவுப்டுத்த, ஹனிமூன் சென்றயிடம் என்ன செய்திட போகின்றது என்று முடிவெடுத்தவனாக அடுத்த நாளிலே, ரயிலில் நீலகிரி எக்ஸ்பிரஸ் வண்டியில் டிக்கெட் முன்பதிவு செய்ய நினைத்தான்.
 
   அலுவலகத்திலும் இத்தனை வருடம் விடுமுறை எடுக்காத காரணத்தால் விடுமுறை கிடைத்தது.

   தெரிந்தவரின் உபயத்தாலா ரயிலில் டிக்கெட் பெற்று வீட்டுக்கு வந்திருந்தான் இஷான்.  

    நேராக அன்னை பைரவியிடம் மூன்று டிக்கெட் வாங்கியதாக உரைத்தான்.

  “அதை ஏன் என்னிடம் நீட்டற இஷான். உன் பொண்டாட்டியிடம் காட்டு, பிள்ளையிடம் சொல்லு.” என்றார் பைரவி.

  “நீங்க தானே வேண்டுமின்னே பிரதன்யாவை அனுப்ப மாட்டேங்கறிங்க?”என்று பைரவியிடம் கேட்க, “இதப்பாருடா.. படிக்கிற பிள்ளையை நான் மட்டம் போட சொல்ல மாட்டேன். உன் பிள்ளை ஸ்கூல் லீவு நீ போற. என் பிள்ளைக்கு எக்ஸாம் இருக்கு.” என்றார்.

  இஷானோ நம்பாத பார்வையோடு மாடிக்கு ஏறினான். அங்கே படம் வரைந்திருந்த, அமுல்யாவிடம் “ஊட்டிக்கு டிக்கெட் எடுத்தாச்சு” என்று கொடுக்க, “அப்பா அம்மாவிடம் கொடுங்க. நான் டிராயிங் வரைந்து பெயிண்ட் பண்ணறேன்.” என்று தீவிரமாய் பட்டாம்பூச்சிக்கு வண்ணம் தீட்டினாள்.
 
  இஷான் துகிராவிடம் டிக்கெட்டை நீட்டி, “டிரஸ் எல்லாம் எடுத்துவை. அமுலுக்கு குளிர் ஒத்துக்குமா? அதுக்கு தேவையான ஸ்வெட்டர் மெடிஸன் எல்லாம் எடுத்து வை.” என்று கொடுக்க, அதை வாங்கியவளுக்கு மூன்று டிக்கெட் என்றதும் பெயரை கவனிக்க, துர்கா என்ற பெயரில் டிக்கெட்டும் இருந்தது.
 
   “அக்கா பெயர் போட்டிருக்கே” என்று கூற, “உன் ஏஜ், டேட் ஆப் பெர்த் எதுவும் எனக்கு தெரியாது. டிக்கெட் எடுக்க பிராஸஸ்ல போன் பண்ணி கேட்கலாம்னா, எனக்கு உன் போன் நம்பர் தெரியாது. சோ… துர்காவோட பெயர்ல போட்டுட்டேன். ஆதார் வோட்டர் ஐடி அவளோடது இருக்கு. அதை எடுத்துக்கறேன்.” என்றான் விரைப்பாக.

   துகிராவுக்கு தன்னிடம் பிறந்த நாள் தேதி கூட, கேட்க பிடிக்காமல் இருப்பவனை கண்டு, அவளுமே மௌனமானாள்.
  உனக்கு அத்தனை வீம்பா.. எனக்கும் உள்ளதென்று அமைதியானாள். அதோடு துகிராவுக்கு துர்காவும் பெரிதாக உருவத்தில் வேற்றுமையில்லையே‌. முதல் முதலில் வண்டியோட்டிய சமயம் அக்காவின் லைசன்ஸ் எடுத்து தான் போலீஸிடம் காட்டி தப்பித்தாள்.
அதோடு வாழ்க்கையில் அக்காவின் மகள் அமுல்யா, அக்காவின் புருஷன் இஷானையே மணந்து விட்டாயிற்று.  அக்காவின் பெயரில் பிரயாணம் மட்டும் செய்ய கூடாதாயென்று மனதை திடப்படுத்தினாள். ஆனால் உள்ளுக்குள் என் பெயர்ல என் வயசு டேட்டாப் பெர்த், என்னோட ஆதார் இதெல்லாம் கேட்டிருக்கலாம். ஜஸ்ட் கேட்பதால் குடிமுழுகியா போகும்’ என்று நினைத்தவளால் இஷானிடம் கேட்க இயலாது அமுல்யாவிற்கு தேவையானதை எடுத்து வைக்கும் வேலையில் மும்முரமானாள்.

  ஒவ்வொரு விடுமுறைக்கு வீட்டில் தான் பொழுதை கழிப்பார்கள் அமுல்யா-துகிரா. சில நேரம் மெர்ஸியை அழைத்து வெளியே அழைத்து செல்வதுண்டு. கடந்த முறை தான் ‘அப்பா இருந்தா என்னை வெளியூருக்கு கூட்டிட்டு போவார்ல அம்மா. எனக்கு அப்பா இல்லை’ என்று வருந்திய அமுல்யாவை சமாதானம் செய்தாள். இன்று இஷான் அழைத்து செல்வதால் அமுல்யாவிடம் அதிகபட்ச ஆசை கனவெல்லாம் தீர்கின்றது என்று அமுல்யாவுக்கு ஸ்வெட்டர் மாத்திரை என்றெல்லாம் எடுத்து வைத்தாள்.

  அருகே இஷான் வந்து “உன் போன் நம்பர்?” என்று கேட்டு நின்றவனிடம், அவள் போனை எடுத்து மடமடவென அவன் எண்ணிற்கு அழைத்து, ஒரு ரிங் தந்துவிட்டு கத்தரித்து கொண்டாள். இஷான் தேவைக்கு மட்டும் பேசி செல்லும் போது, இவளும் தேவைக்கு அதிகமாக பேசுவதில்லை.

  இஷானும் இது துகிரா எண் என்றதில் ‘துகிரா’ என்று  சேமித்து கொண்டான்.‌
  
    துகிராவுக்கு தான் இந்த வாழ்க்கையில் எதிர்பார்த்து ஏமாற மாட்டேன்னு சொல்லி, இஷானிடம் அன்பை எதிர்பார்த்து ஏமாந்தாள் என்பதே வெளிச்சம்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

10 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-23”

  1. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்க ராஜ்
    (அத்தியாயம் – 23)

    அடப்பாவி.. ! கேட்காம கொள்ளாம முத்தம் கொடுப்பான், திட்டுவான், எரிச்சலை காட்டுவான், ஆனா அவ போன் நம்பர், டேட் ஆஃப் பர்த், இதெல்லாம் கேட்டுக்க மாட்டானாம். தாலியை கட்டிட்டு இதுக்கெல்லாம் சுணங்கினா எப்படி குப்பை கொட்டுறதாம் தெரியலையே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!