Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-3

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-3

அத்தியாயம்-3

   துகிரா கையை தட்டிவிட்டு, “லுக்… அமுல்யா என் குழந்தை. குழந்தை அப்பா அம்மா கூட தான் இருக்கணுமே தவிர, யாரோ ஓருத்தரிடம் இல்லை” என்றான்.‌
   ‘யாரோ ஒருத்தர்’ என்ற வார்த்தையில் துகிரா ஸ்தம்பிக்க, அவளை தள்ளிவிட்டு அமுல்யாவை தூக்கி கொண்டான்.

   துகிராவோ, “நான் ஒன்னும் யாரோ ஒருத்தர் இல்லை. அவளோட அம்மா. என் குழந்தையை கொடுங்க” என்று கேட்க, காது கேளாமல் செவியில் விழாதது போல அமுல்யாவை தூக்கி கெண்டு வீட்டை விட்டு வெளியேறினான். அவன் வந்த காரில் அமுல்யாவை முன்னிருக்கையில் அமர்த்தி, சீட்பெல்ட் அணிவித்து புறப்பட்டு செல்லும் நோக்கத்தில் இருந்தான்.‌

     “இங்க பாருங்க.. நில்லுங்க. அமுல்யாவை கொடுங்க.” என்று பின்னால் ஓடிவந்த துகிராவை அலட்சியமாக நடத்திவிட்டு காரை இயக்கினான்.‌

  அமுல்யாவோ துகிராவை கண்டு சத்தமாய் அழுதாள்.

“ம்ம்மி.. ம்மமி” என்று கத்த, இஷான் தன் குழந்தை அழுகையை தாண்டி அவ்விடம் விட்டு முதலில் பறந்தான்.

    “மம்மி மம்மி.” என்று அழுதவளிடம், “வாயை மூடு. அவ உன் அம்மா இல்லை.” என்று கர்ஜித்திட, பிஞ்சு குழந்தையோ, வாயை மூடி, பயத்துடன் பார்வையிட்டது.
 
  இஷான் கோபம் குழந்தைக்கு பயத்தை தர, வாயை மூடி ஜன்னலில் பார்வையிட்டு துகிரா வருகின்றாளா என்று திரும்பி பார்த்தாள்.
 
  அமுல்யா லேசாக அழுதுக்கொண்டே வர, இஷானோ அமுல்யாவை ஆசையாக தீண்டி, “அமுல்யா.. நான் உன் அப்பா. ஏன் என்னை பார்த்து பயப்படற? உன் அம்மா இறந்துட்டா. அவ உன் அம்மாவோட தங்கச்சி. ஒரே முகமைப்பால் உன்னை அவ தூக்கிட்டு வந்துட்டா. நம்மளை ஏமாத்த பார்த்தா” என்று கூற, அமுல்யாவுக்கு என்ன புரிந்ததோ மலங்க மலங்க விழித்தாள். ஆனாலும் இஷான் தீண்ட வரவும் ஒடுங்கி சென்று விட்டாள்.
 
   பயத்தில் தொடர்ந்து அழுதழுது கார்கதவை திறக்க முடியாதென்று கொஞ்சம் கொஞ்சமாய் தூக்கத்திற்கு சென்றாள் குழந்தை. இருக்கையிலேயே சாய்ந்திட, களைப்பில் உறங்கிவிட்டாள்.

  இஷான் மெதுவாக குழந்தையை வண்டி இயக்கியபடி சிரத்தை தீண்டி, கன்னம் பிடித்து கைப்பிடித்து, தன் உயிர் என்று மனதில் பெருமிதம் கொண்டான்.

  துர்கா இறந்தது ஒர் அதிர்ச்சி என்றாலும், அந்த உண்மையை, ஏற்கனவே ஏற்று பழகியதால் சற்று மாறியிருக்க, தன் மகள் உயிரோடு இருக்கும் சந்தோஷம் இஷானுக்கு பலத்தை தந்தது. புதிதாக வாழ வேண்டும் என்று அவன் மனதில் மறுத்து போயிருந்த அன்பை பூக்க வைத்தாள்‌.

   குழந்தை இருக்கும் காரணத்தாலோ என்னவோ மிக கவனமாய் வண்டியை இயக்கினான்.
    ஏற்கனவே அமுல்யா ராகி நூடுல்ஸ் சாப்பிட்டதால் இப்பொழுது உறங்கவும், நிம்மதியாக சென்னைக்கு வண்டியை விடுத்தான்.

  நேற்று இரவும் இன்று காலையிலும் சாப்பிடாமல் வண்டியை இயக்கியவனுக்கு, மகளின் பூ முகம் பார்த்தே மனம் நிறைந்தது.
  அதனாலோ என்னவோ பசி தூக்கம் மறந்திருந்தான்.

   நேராக சென்னைக்கு சென்று அன்னையிடம் காட்டி அமுல்யாவை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தான். அமுல்யா எந்த பள்ளியில் படிக்க வைக்க வேண்டும், எப்படி வளர்க்க வேண்டுமென்று கண் திறந்தவாறு நீண்ட பட்டியலில் கனவு கண்டான்.

இங்கே துகிராவோ அக்கா மகளை தன் மகளாகவே வளர்த்து, பாதுகாத்து ஏன் அம்மா என்ற அடையாளத்துடனே வாழ்ந்துவிட, தற்போது அமுல்யா இல்லாமல், கையும் ஓடாமல் திக்பிரமை பிடித்தவளாக இருந்தாள்.

அவளது கவனத்தை அலைப்பேசி ஓசை கலைத்தது.

அடுத்து ஏதேனும் செய்ய வேண்டும். அக்கா புருஷனிடம் தன்னிலை கூறி அமுல்யாவை மீண்டும் தன்னோடு வைத்துக்கொள்ள கேட்க வேண்டும். அக்கா கணவர் சென்னை என்றதை தாண்டி அவளுக்கு ஒரு விவரமும் தெரியாமல் இருக்க இந்த அலைப்பேசியை நடுக்கத்துடன் எடுத்தாள்.

“ஹலோ… துகிரா நான் கிஷோரோட அம்மா லீலா பேசறேன்.” என்று ஒரு பெண் பேசினாள்.
கண்ணீரை துடைத்து, “நீங்க அமுல்யாவோட கே.ஜி பங்ஷன்ல அவளை வீடியோ எடுத்தவங்க தானே?” என்று சரியாக நினைவு வைத்து கேட்டாள்‌.

  “ஆஹ்… ஆமாங்க… அதை பத்தி தான் பேச போன் போட்டேன். ஆக்சுவலி அந்த வீடியோவை என் கணவரோட தங்கைக்கு அனுப்பியிருந்தேன். அவ அவளோட பிரெண்ட் பிரதன்யா என்பவளுக்கு அனுப்பியிருப்பா போல. அந்த பொண்ணு பிரதன்யா டான்ஸ் பார்த்தவ, கூடவே உங்களையும் பார்த்திருக்கா. அவளோட பெரிய அண்ணாவோட மனைவி நீங்க என்று கூறி, விவரம் கேட்டிருக்கா. கேரளா ஸ்கூல் நேம் சொல்லியதும் அவ அண்ணா நேரா இங்க வந்துட்டார். எங்க வீட்டுக்கு காலையிலேயே வந்து, இப்ப நீங்க இருக்கற அட்ரஸை கேட்டிருக்கார்.
  நான் காலையில் பிஷ் மார்க்கெட் போயிருந்தேன். அந்த நேரம் என் கணவர் ரவி உங்க வீட்டு அட்ரஸை சொல்லியிருக்கார்.
கொஞ்சம் பார்த்துக்கோங்க. ஏன்னா நீங்க அவரை விட்டு தனித்து வந்தது எனக்கு அரசல்புரசலா தெரியும்” என்றார்.

துகிராவுக்கு இஷான் வந்தது எப்படி என்று புரிந்தது. அதோடு இங்கே தனக்கு கல்யாணமாகவில்லை என்று கூறி அக்கா மகளை வளர்ப்பதாக கூறினால், யாரும் தன்னை மணக்க வருபவர் குழந்தையை ஏற்க மறுப்பார் என்று தான் ஏற்கனவே மணமாகி குழந்தை உள்ளது. கணவர் பற்றி கேட்காதிங்க. விவாகரத்து ஆகிவிட்டதென்று கதை கட்டியிருந்தாள்.

அந்த பொய்யை தான் கிஷோர் தாயார் இப்பொழுது உரைத்தது. மேலும் அக்கா கணவருக்கு ஒரு தம்பி ஒரு தங்கை உண்டு என்று அறிவாள். தங்கை மூலமாக செய்தி எட்டியதாக நினைத்தாள்.
  அஞ்சனாவுமே ரிஷியை பற்றி கூறினால் ஆபத்தென்று அவன் சொல்லியது போல பிரதன்யா தோழி என்பது போல மாற்றியிருந்தாள் அஞ்சனா.

   “என்னங்க அழறிங்களா?” என்று கிஷோர் அன்னை கேட்க, “அவர் குழந்தையை கூட்டிட்டு போயிட்டார்‌. எனக்கு அவரோட எந்த விலாசமும் தெரியாது‌” என்று அழுதாள் துகிரா.

   “அச்சோ..‌ கவலைப்படாதிங்க. நான் வீட்டுக்கு வந்ததும் என் கணவர் சொன்னதை வைத்து நான் என் நாத்தனாரிடம் விசாரிச்சேன். அவ பிரெண்ட் பிரதன்யா அட்ரஸையும் வாங்கிட்டேன். உங்களுக்கு இப்ப அனுப்பறேன். நீங்க அமுல்யாவை பாருங்க.” என்று துகிரா நெஞ்சில் பால் வார்த்தார்.

  “ரொம்ப நன்றிங்க” என்று கண்ணை துடைத்துவிட்டு விலாசத்தை பார்த்தாள். கண்ணீரை துடைத்துவிட்டு சென்னை புறப்பட தயாரானாள்.

   அவள் எடுத்து வைத்த பெட்டியில் துகிராவுக்கான உடையை விட, அமுல்யாவிற்கான உடையும் பொருட்களுமே இருந்தது.

  வீட்டை பூட்டிவிட்டு உடனடியாக கைப்பையையும் லக்கேஜையும் எடுத்துக்கொண்டு, பஸ்ஸில் பயணத்தை ஆரப்பிக்க, அதற்கான வேலையில் அலைந்தாள்.

  இதற்கிடையே, அமுல்யாவிற்கு அம்மாவாக இருந்தாலும், தன்னை மணக்க சம்மதித்த தன் தோழியின் அண்ணன் சார்லஸையும், தன் தோழி மெர்ஸியையும் சர்ச்சில் சந்திக்க வந்தாள்.

  அதிகாலையில் துகிராவின் தரிசனம் கண்டு சார்லஸ் மனமகிழ்ந்து, “என்ன முகம் வாடியிருக்கு. அமுல்யா கூட வரலையா? என்னாச்சு” என்று விசாரித்தான்.‌

  தோழி மெர்ஸியும் அவள் முகம் வாடியிருக்க, தோளில் கைவைத்து என்னவென்று காரணம் கேட்டாள்.

சார்லஸின் பெற்றவர்கள் இருவரும் இன்னமும் சர்ச் பாதரிடம் பேசியதால் துகிராவை காணவரவில்லை.

  தன் தோழியிடம் “அமுல்யாவோட அப்பா வந்து அவளை தூக்கிட்டு போயிட்டார்.” என்று அழுதாள்.
 
  மெர்ஸியோ அவருக்கு எப்படி உன் வீடு தெரியும்” என்றாள் வியப்பாய்.

அமுல்யா கூட படிக்கும் கிஷோர் மூலமாக அமுல்யாவை அறிந்துக்கொண்ட கதையை கூறினாள்.

  “மெர்ஸியோ இப்ப என்ன பண்ண போற?” என்று கேட்க, “எப்படியும் அமுல்யா நான் இல்லாம சாப்பிடமாட்டா. ஏன் புதுசா யாரிடமும் பழக மாட்டா. அதனால நான் சென்னை போறேன் மெர்ஸி. அதான் உன்னிடம் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.” என்றாள்.

  மெர்ஸியோ அவள் அண்ணன் சார்லஸை கண்டாள். “தைரியமா போயிட்டு வா துகிரா. குழந்தை அம்மாவோட தான் இருக்கணும்னு சட்டத்தில் ரூல்ஸே இருக்கு. அதுவும் அமுல்யா பெண் குழந்தை. அவர் மட்டும் குழந்தையை தரலைன்னா கோர்ட் மூலமாக பார்க்கலாம்‌” என்று நம்பிக்கை அளித்தான்.
  துகிராவோ, மெர்ஸியை காண, அவளோ தோழியை அழைத்துக்கொண்டு தனியாக வந்து, “இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்க? இங்க எங்க அண்ணா, எங்க அம்மா அப்பாவை பொறுத்தவரை நீ விவாகரத்து ஆன பொண்ணு என்று தானடி முதல்ல அறிமுகம் செய்து வைத்தேன்.‌
   இப்பவரை எங்க அண்ணாவிடம் உனக்கு கல்யாணமே ஆகலை, அது உன் அக்கா குழந்தைன்னு சொன்னதில்லை. அதனால் அவர் அப்படி சொல்லறார்.
   நீ உன் அக்கா கணவரிடம், துகிரானு சொல்லாம இருந்தாலாவது குழந்தைக்கு அம்மா நீ தான்னு சொல்லி கோர்ட்ல கேஸ் போட்டு குழந்தையை வாங்கியிருக்கலாம். உன்னை யாரு அவரிடம் துகிரானு சொல்ல சொன்னது?” என்று பாய்ந்தாள்.

  துகிரா எங்கனும் கூறுவாள்? இஷான் துர்கா என்றெண்ணி அவளை முத்தமிட்டதால் அவசரப்பட்டு துர்கா இல்லை துகிரா என்று கூறிவிட்டேனென்றா?

  “பச்… கோர்ட்ல இப்ப என் குழந்தைனு சொன்னா டி.என்.ஏல தெரிந்திடும்ல?” என்று படித்த முட்டாளாக கேட்ட துகிராவை மெர்ஸி முறைத்தாள்.

  “எதையும் யோசிக்காத… பாரு சின்ன விஷயம், ஆனாலும் அதுல குழம்பற. முதல்ல உங்க அக்கா கணவர் வீட்டுக்கு போய் பாரு. அமுல்யா பண்ணற ரகளைக்கு அவங்களே வீடு தேடி வந்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை. ஆனா நீ தான் அவங்களா வர்ற வரை காத்திருக்க மாட்ட. நொறுங்கிடுவ.” என்றாள்.

“நான் அப்ப புறப்படறேன். உங்க அம்மா அப்பாவிடம் சொல்லிடு. சார்லஸ் எனக்கு கல்யாணமாகிடுச்சுன்னு நினைத்தும் என்னை மணந்து, அமுல்யாவுக்கு அப்பாவா வர தயாராயிருந்தார். ஆனா சூழ்நிலை இப்படி இக்கட்டுது. சாரி மெர்ஸி. நீ இங்க பாரு. நான் புறப்படுறேன்” என்று கூற, மெர்ஸினும் சார்லஸும் வழியனுப்பினார்கள்.

   ஒரு யுகமே கடந்தது போல துடித்துவிட்டாள் துகிரா.
   அவளுமே காலையில் சாப்பிடவில்லை மதியம் வண்டி டிபன் செண்டரில் நின்ற போதும் இறங்கவில்லை. யார் தன்னை பார்த்தால் என்னயென்ற‌ ரீதியில் அழுதாள். தாரை தாரையாக கண்ணீர் மழையை பொழிந்தாள்.

  இதுவரை அக்கா கணவர் இஷானை பற்றி துகிரா துர்கா மூலமாக அறிந்தது எல்லாமே, கல்லூரியில் ரக்கட் பாய், சாக்லேட் பாய், ஆங்கிரி பாய் என்று நகைச்சுவையாக கூறியது. ஆங்கிரி பாய் அவதாரம் எடுத்தால் எதிரே இருப்பவர் அடிபணிந்தே ஆவார்கள். அந்தளவு இரும்பு இதயத்தால் உடும்பு பிடிப்பால் நின்று காரியம் சாதிக்கும் ஆடவன் என்று புகழாரம் சூட்டப்பட்டவன். இன்று அதை நினைத்து பயந்துப்போனாள்.

  குழந்தை தனக்கு கிடைக்காதா? என்று துடிக்க, போன் கேலரியில் அமுல்யா புகைப்படம் இவளை ஈர்த்தது.

  அமுல்யா முகத்தை புகைப்படத்தில் கண்டதும் ஆயிரப் யானை பலம் கூடியதாக உணர்ந்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
   








9 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-3”

  1. Kalidevi

    Ishanuku konjam kuda porumaiye illa ippadi kolanthaiya thukitu povan oruthi ethana varushama kolanthaiya kuda vachi vaathu iruka therinja udane vanthu ippadipanitan pavam thukira kolanthai

  2. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 3)

    அட ராமா ! இப்படி ஒட்டு மொத்தமா சொதப்பிடுச்சே.
    இப்ப என்ன செய்யப் போறா இந்த துகிரா. ஏற்கனவே குழந்தைக்கு தாயா மாநிட்டாள், இப்ப அந்த குழந்தையை தன் கைக்குள்ள கொண்டு வரணும்ன்னா, இஷானுக்கு
    ஒப்புக்கு பொண்டாட்டியாவாளோ..? ஆனா அதுக்கு முதல்ல இஷான் ஒத்துப்பானா…?
    அவங்கம்மா நிச்சயமா ஒத்துப்பாங்க, என்னை, பொம்பிளைப் பொண்ணு, அதுவும் சின்ன குழந்தை
    தாயில்லாம வளரக்கூடாதுன்னு கிடுக்கிப் பிடி போட்டுடுவாங்கன்னு தோணுது. கரெக்ட்டா ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!