கண்ணிலே… மதுச்சாரலே…
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
*கதை கணமணியில் வெளியான நாவல். தினபதிவு போடப்படும். கதை முடியவும் நீக்கப்படும்.
அத்தியாயம்-1
‘அன்பாலயம்’ என்ற ஆசிரமத்தில், பதிமூன்று வயது சிறுவன் ஆதித்யா தனியாக படிக்கட்டில் வீற்றிருந்தான்.
“தம்பி… போறவர வழியில உட்காராத. வண்டியிலயிருந்து சாப்பாடு எடுத்துட்டு வர்றவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும். அங்க போய் உட்காரு” என்று எழுப்பினார் அந்த இடத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த சுபாஷ்.
ஆதித்யாவோ தன்னை எழுந்து வேறிடம் அமர கூறியவரை பார்த்து மெதுவாக எழுந்தான்.
அதற்குள் சுபாஷோ, “எழுந்து விரசா போறானா. இந்த இடத்துலயிருந்துட்டு என்னவொரு திமிரு.
நல்ல வெள்ளை நிறமா, பால் கொழுக்கட்டை மாதிரி” என்று கடிந்தபடி சென்றார்.
இன்று யாரோ ஒரு பணக்காரனின் மகனுக்கு பிறந்த நாள். அதனால் இந்த ஆசிரமத்தில் சாப்பாட்டை வினியோகம் செய்திருக்க, அதற்கான வண்டியிலிருந்து உணவுகள் வந்திறங்கியது. அதை தான் சுபாஷ் பொறுப்பாய் சாப்பாடு கூடத்திற்கு எடுத்து செல்ல மேற்பார்வையிட்டு உதவியது.
ஓரளவு உணவு உண்ணும் இடத்தில் அனைத்தையும் நிரப்பிவிட்டனர்.
வண்டியும் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த சென்றனர்.
மதியம் உணவருந்தும் நேரம், குழந்தைகள் ஒன்று சேர்வதற்காக மணியோசை அடிக்கப்பட்டது. ஆங்காங்கே விளையாடிய பிள்ளைகள், படித்துக் கொண்டிருந்தவர்கள், சின்னசின்ன கிராப் வேலைபாட்டில் மூழ்கிய குழந்தைகள், வரிசையாக சாப்பாட்டு தட்டை பெற்று, அவ்வரிசையில் நின்றனர்.
சுபாஷோ “டேய் தம்பி நீ சாப்பிட போகலை” என்று ஆதித்யாவை கூப்பிட, அவனோ சுபாஷை பார்த்துவிட்டு வெறுமென திரும்பி கொண்டான்.
“அட… நல்ல சாப்பாடு உன்னை தேடி வந்திருக்கு. காலியாகறதுக்கு முன்ன போய் சாப்பிடலாம்ல. என்னயிருந்தாலும் இங்க வந்ததிலிருந்து இங்கயிருக்கற பிள்ளைங்களை பார்த்துட்டு இருக்கேன். இந்தளவு திமிரை நான் பார்த்ததில்லை.” என்று மொழிந்துவிட்டு மற்றொரு பணியாளான பரமசிவத்திடம், “என்னங்க அண்ண. அந்த பையன் இவ்வளோ திமிரா இருக்கான். பேசினா மரியாதைக்கு எழுந்து சாப்பிடவும் போகாம இருக்கான்.” என்று கேட்டான்.
சுபாஷை அன்பாலயத்தில் பணிப்புரிய சேர்த்துவிட்ட பரமசிவமோ, “அட அது ஆதித்யா தம்பிடா.
இங்க எப்பவும் ‘சக்கரவர்த்தி இன்டஸ்ட்ரிஸ்’ல நல்ல நாளுக்கு நாள் தவறாம சுவையான சாப்பாடு கொடுத்து, நன்கொடையா பணமும் அள்ளி தந்த வினுசக்கரவர்த்தியோட ஒரே பையன். இரண்டு மாசத்துக்கு முன்ன நடந்த கார் ஆக்சிடெண்ட்ல வினுசக்கரவர்த்தியும் அவர் மனைவி அனுராதா அம்மாவும் இறந்துட்டாங்க. விபத்துல உயிர் பிழைச்சது ஆதித்யா மட்டும் தான்.
இப்ப ஆதித்யா சக்கரவர்த்தியோட குடும்பம் இல்லை. என்ன நடந்ததோ அவரோட சொத்தும் இல்லை.
நன்கொடை கொடுத்த இதே ஆசிரமத்துல சொத்தில்லாத இவனை சொந்தக்காரங்க இங்க சேர்த்து விட்டிருக்காங்க .
பையனுக்கு உலகம் தெரியற வயசு இல்லையா?! இவ்வளோ நாளா பணக்காரனா வாழ்ந்தவன், இப்ப தட்டை எடுத்து எல்லாரும் சாப்பிடற மாதிரி வரிசையில் போகவும் சங்கடமா நினைக்கிறான்.
இப்படி தான் எப்பவும் தனியா உட்கார்ந்துயிருக்கான். போன பிறந்த நாள் அப்ப இங்கயிருக்கற பிள்ளைகளோடு விளையாடி, எல்லாருக்கும் கிஃப்ட் எல்லாம் தந்தான்.
ம்ம்ம்ம்… காலம் எப்படி மாத்திடுச்சு பாரு. இப்ப யாருடனும் பழக பிடிக்காம தனிச்சுயிருக்கான்.
நம்ம நிர்வாகி சாந்தகுமார் வந்து சாப்பிட வைப்பார். வா நான் போய் அவரிடம் சொல்லிட்டு வர்றேன்.” என்று புறப்பட்டார் பரமசிவம்.
போகும் போது, ‘ஒன்னு கடவுள் இல்லாதவனாவே படைச்சி விட்டுடணும். இல்லையா கொட்டி கொடுக்குற அளவுக்கு பணத்துல குளிச்சவனா இருந்தா, கடைசிவரை பணத்தோடவே வாழ வைக்கணும். இப்படி நடுவுல எல்லாத்தையும் பிடுங்கி ஏக்கத்தை தரக்கூடாது. ஆனா இந்த கடவுளுக்கு இப்படி விளையாடி பார்க்க தான் சந்தோஷம் போல’ என்று புலம்பி செல்வதில், ஆதித்யா அவரை வைத்த கண் இமைக்காது பார்த்தான்.
நிர்வாகி சாந்தகுமார் வரும் பொழுது ஆதித்யா தனியாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.
தன்னை போல மற்றவரை சாந்தகுமார் தினமும் சாப்பிட அழைத்தால் நன்றாக இருக்குமா? என்று அந்த வயதில் பக்குவம் தோன்றிவிட்டது.
“ஆதித்யா சாப்பிட்டியாப்பா” என்று வந்தார் சாந்தகுமார்.
“எஸ் அங்கிள். பினிஸ்ட்” என்றான் துணி நாக்கு ஆங்கிலத்தில்.
அவருக்குமே தினமும் ஆதித்யாவை காணும் போது வினுசக்ரவர்த்தியை எண்ணி கலங்கினார்.
‘குழந்தைக்காகவாது ஒருவரை உயிரோடு விட்டிருக்கலாம். கடவுளுக்கு இரக்கமில்லையா?’ என்று வழிபடுதலுக்காக வாசலை கவனித்தார்.
அங்கே முப்பதை தாண்டிய பெண்மணி ஒருவர் வந்துக் கொண்டிருந்தார்.
அவரை இதற்கு முன் இங்கே கண்டதில்லை. பரமசிவம் அழைத்து வரவும் சாந்தகுமார் ‘யார் இவங்க?’ என்று வந்தார்.
“ஆசிரமத்து நிர்வாகியை பார்க்கணும்னு சொன்னாங்க. இங்க அழைச்சிட்டு வந்தேன் சார்.” என்று அறிமுகப்படுத்த ஆதித்யா ஓரமாய் நடந்து சென்றான்.
அங்கு வந்த பெண்மணியோ, ஆதித்யாவின் பார்வையை கவனித்து சாந்தகுமாரை நெருங்கி வந்தார்.
“சொல்லுங்கம்மா என்ன விஷயம்” என்று கேட்டார்.
“குழந்தை தத்தெடுக்கற விஷயமா பேசணும் சார்.” என்று குரல் எழும்பாத விதத்தில் கேட்டார்.
இது போன்ற விஷயம் என்றதும் “வாங்கம்மா ஆபிஸ் ரூம்ல போய் பேசுவோம்” என்றதும் அங்கிருந்த பிள்ளைகளை ஏக்கமாய் பார்த்து பின் தொடர்ந்தார் பார்வதி.
ஆசிரமத்தின் அலுவலக அறைக்கு வந்ததும், இருக்கையில் அமர வைத்துவிட்டு, “சொல்லுங்கம்மா” என்று பணிவாய் கூறினார்.
“சார்… என் பெயர் பார்வதி. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. பத்து வருஷமா குழந்தையில்லை. இப்ப சமீபகாலமா எனக்கும் என் கணவருக்கும் சண்டை. நான் குழந்தையை தத்தெடுக்கலாம்னு சொல்ல, அவர் மறுத்தார். இப்ப அந்த சண்டை விவாகரத்து வரை போயிடுச்சு.
எனக்கு குழந்தை வளர்க்க ஆசையாயிருக்கு சார்” என்றார் ஒளிவு மறைவின்றி.
“இங்க பாரும்மா… இங்க தம்பதிகளுக்கு தான் குழந்தையை தத்து கொடுப்போம். தனி நபர் குழந்தையை வளர்க்க தரமாட்டோம். குழந்தையை தத்தெடுக்க சில விதிமுறைகள் இருக்கு.
அதுல முக்கிய விதியே குழந்தை தத்தெடுக்கறவங்க தம்பதிகளா இருக்கணும். அப்ப தான் அப்பா அம்மா என்ற இருதரப்பினரோட அன்பும் குழந்தைக்கு கிடைக்கும்.
இரண்டாவது பொருளாதரத்துல செழிப்போடு இருக்கணும். ஏன்னா இங்கிருந்து போற குழந்தைகள் பசி பட்டினி இருக்கக்கூடாது.” என்றதும், இடைப்புகுந்த பார்வதியோ, ”சார் ஒரு குழந்தையை வளர்க்கற அளவுக்கு எனக்கு தேவையான பணம் இருக்கு சார்.
குழந்தை வளர்க்க, படிக்க வைக்க, தனியாகவே என்னால ஆளாக்க முடியும். அப்பா கொடுக்க வேண்டிய பாசத்தையும் தத்தெடுக்குற குழந்தைக்கு நானே கொடுப்பேன்.” என்று உருக வைக்கும் விதமாக கேட்டார்.
“அதெல்லாம் தத்தெடுக்கும் போது சொல்ல முடியாதும்மா. ரூல்ஸ்னா ரூல்ஸ் புரிஞ்சுக்கோங்க” என்று தன்மையாய் எடுத்துரைத்தார்.
கண்கள் கலங்கி உதடுகள் துடிக்க, ஒரு குழந்தையை தத்தெடுக்க தடையா? “சார் நான் நல்லா பார்த்துப்பேன். நல்லா படிக்க வைப்பேன். எனக்கு குழந்தை மட்டும் கிடைக்கலைன்னா நான் வாழறதுக்கு அர்த்தமேயில்லை. இதுக்கு நான் செத்துப் போயிடுவேன். தற்கொலை பண்ணிப்பது தான் தீர்வு.” என்று குலுங்கிகுலுங்கி அழுதார்.
சாந்தகுமாரோ “இங்க பாருங்கம்மா, நான் சொல்றதை கேளுங்க. பார்க்க பெரிய குடும்பத்து பொண்ணுன்னு எனக்கும் தெரியுது, விரக்தியில் பேசாதிங்க. கடவுள் உங்களுக்குன்னு ஒரு உறவை அமைத்து தருவார்.” என்று பொதுவாய் கூறினார்.
எல்லா இடத்திலும் இதே பதில் என்பதால் துவண்டு போயிருந்தார் பார்வதி.
“இல்லை சார் கடவுள் கைவிட்டுட்டார். எல்லா இடத்திலும் இதே பதில் தான். நான் வாழ ஒரு குழந்தை கேட்கறேன். நீ வாழவே வேண்டாம்னு கடவுள் விதிமுறை என்ற பெயர்ல இக்கட்டுல தள்ளறார்” என்று எழுந்து நடந்திட, அவரையே கவலையாக பார்த்தார் சாந்தகுமார்.
பார்வதி கடந்து செல்லும் போது நிறைய குழந்தைகளை வேடிக்கை பார்த்து அழுதபடி செல்ல தன் கைப்பையை தவறவிட்டார்.
அந்த பக்கம் வந்த ஆதித்யா அதனை எடுத்துக் கொடுக்க, அவனை வருடியபடி நன்றியுரைத்தார் பார்வதி.
கூடுதலாக அவன் தாடை பிடித்து, “உன் பெயர் என்னப்பா?” என்று கேட்டார்.
“மை நேம் இஸ் ஆதித்யா” என்று மொழிந்தான் பால் கொழுக்கட்டை போல இருந்த ஆதித்யா.
“அருமையான பெயர்.” என்று சாப்பிட சாக்லேட் கொடுக்க, “நோ தேங்க்ஸ்” என்று மறுத்துவிட்டு சென்றான். இதனை கண்ட சாந்தகுமாருக்கு மின்னலாய் யோசனை பிறந்தது.
சுபாஷை அழைத்து “இப்ப போனாங்களே… அந்த பொண்ணை அழைச்சுட்டு வா” என்று உத்தரவு பிறப்பித்தார்.
கணநேரம் தோன்றியது. சரிதானா? அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு திருப்பி அனுப்புவோமா? அல்லது ஆதித்யாவை அவரோடு அனுப்பி வைப்போமா? இது தான் சாந்தகுமாரின் மனதில் ரேஸ் குதிரை போல எண்ணங்களாக ஓடியது.
“சார் அந்தம்மா பார்வதி மயங்கிட்டாங்க” என்று பரமசிவம் கூற, சாந்தகுமார் ஓடி சென்றார்.
மரத்தில் நிழலில் ஒரு பெண்மணி மடியில் பார்வதியை தாங்கியிருக்க, சுபாஷ் தண்ணீரை தெளித்தான்.
மெதுமெதுவாய் இமைதிறந்து, மன்னிப்பு கேட்டு வெளியே செல்ல கால்களை எட்டுயெடுத்து வைத்தார்.
“கொஞ்சம் உட்காரும்மா. சுபாஷ் மத்தவங்களை போக சொல்லு” என்று சாந்தகுமார் கூற தண்ணீர் பாட்டிலை கொடுத்த பெண்மணியோடு பரமசிவமும் மற்றவர்களும் அவ்விடம் விட்டு அகன்றனர்.
சற்று அமைதியாக கழிந்த இரண்டு வினாடிக்குப்பின், “இங்கப் பாரும்மா ஆசிரமத்துல ரூல்ஸை மீறி என்னால எந்த குழந்தையையும் உங்களுக்கு தத்து கொடுக்க முடியாது. ஆனா நீங்க ஒரு பையனை மகனா தத்தெடுக்கலாம். அதுக்கு என் அனுமதி இருந்தா மட்டும் போதும்னு நம்பறேன்.” என்று ஆதித்யாவை கண்டார்.
“பையன் பொண்ணு யாராயிருந்தாலும் நல்லா பார்த்துப்பேன் சார். அன்பான தாயா, தந்தையா படிக்க வச்சி ஆளாக்குவேன்.” என்று அவசரமாய் கூறினார்.
“இங்க பாரும்மா. நான் சொல்லற பையன் தங்கதட்டுல வாழ்ந்தவன். ஒரு விபத்துல அப்பா அம்மாவை இழுந்துட்டான். என்ன நடந்ததோ சொத்தும் பறிப்போயிடுச்சு. அந்த பையனை அனாதையா நிர்கதியில் இருக்கான். இதுக்கு முன்ன அவன் அப்பா இந்த ஆசிரமத்துக்கு நிறைய பணஉதவியும், சாப்பாடுனு இங்க உதவியவர். அப்படிப்பட்டவரோட பையன் இங்க கஷ்டப்படுவது எனக்கே சங்கடமா இருக்கு. மத்த குழந்தைகள் தத்து கொடுக்கணும்னா நிறைய விதிமுறை இருக்கு.
ஆதித்யாவோட யாரும் இல்லாம போகவும், நான் தான் கூட்டிட்டு வந்தேன். அதனால் என் பொறுப்புல, நல்லா பார்த்துக்கற ஒரு குடும்பத்துல அவன் வளர்ந்தா நான் சந்தோஷப்படுவேன்.
எல்லா உறவும் கிடைக்கணும்னு காத்திருக்கிற நேரம், அவனோட வேதனையை பன்மடங்கு கூட்டுதோன்னு கவலை. அவனுக்கு அம்மா மட்டும் கிடைச்சி அன்பும் அரவணைப்பும், தினசரி உணவும், உடையும், நல்ல படிப்பும் இந்த நேரம் கிடைக்கணும்” என்று பேசவும் “நான் நல்லா பார்த்துப்பேன் சார். சத்தியமா… நான் பெத்த குழந்தையா நினைப்பேன். கொடுங்க சார். வளர்க்கறேன் சார்” என்று கெஞ்சினாள் பார்வதி. அவள் கண்ணில் ஆனந்த கண்ணீர் தாண்டவமாடியது.
பெருமூச்சை விடுத்து, ”முதல்ல ஆதித்யாவிடம் கேட்கணும். அவனுக்கு உங்களோட வர விருப்பமான்னு தெரிஞ்சுக்கணும்” என்றதும், பார்வதியோ குழந்தையில்லை ஏதோ சற்று வளர்ந்த குழந்தை என்றவரை பேச்சில் அறிந்துக் கொண்டார்.
“ஆங்… அதோ ஆதித்யா” என்று சுட்டிக்காட்ட தனியாக கன்னத்தில் கைவைத்து விளையாடும் சிறுவர் சிறுமியரை வேடிக்கை பார்த்திருந்தான்.
“ஆதித்யா நல்ல பெயர். அழகான குழந்தை. சற்று முன் கூட இந்த பெயரை கேட்டேன்” என்று பார்வதி உரைத்தார்.
ஆதித்யாவை நெருங்கும் வரை அவனை பற்றியும் அவன் பெற்றவர்கள் இறப்பையும், அவன் வாழ்ந்த பணக்காரத் தன்மையையும் கூறினார்.
“புரியுது சார். ஆதித்யா என்னோட வர சம்மதிச்சா நான் என் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துப்பேன்.” என்று கூறவும், ஆதித்யாவை நெருங்கினார்கள்.
“ஹாய் ஆதித்யா. நீ பசங்களோட விளையாட போகலையா?” என்று சாந்தகுமார் கேட்டதும், “நாட் இன்ட்ரஸ்ட் அங்கிள்” என்றான்.
“ஆதித்யா… இங்கயிருக்க கஷ்டமாயிருக்கா?” என்று தோளில் கைப்போட்டு கேட்டார்.
“நோ அங்கிள்” என்றான்.
“ஆதித்யா… நீ பிக் பாய். உனக்கு தெரியாதது இல்லை. உன்னோட அப்பா அம்மா இனி திரும்பி வரமாட்டாங்க. ஆனா கடவுள் உனக்குன்னு ஒரு அம்மாவை தர ஆசைப்படறார். நீ விரும்பினா இவங்களை அம்மாவா ஏற்று அவங்களோட வாழ போகலாம். அவங்களுக்கு கடவுள் உன்னை மாதிரி ஒரு குழந்தையை தரலை. அவங்க உன்னை அவங்க மகனா பார்த்து வளர்க்க விரும்பறாங்க. நீ விருப்பப்பட்டா அவங்களோட போய் சிறுகுடும்பமா வாழலாம்” என்றதும் ஆதித்யா பார்வதியை கவனித்தான்.
சற்று முன் கைப்பையை தவறவிட்டவர். மயங்கி சரிந்து இவ்விடத்தை கலவரமாக்கிய பெண்மணி.
தன்னை ஏக்கமாய் பார்த்ததை அவன் உணர்ந்தான். மகனாக வாழ சாந்தகுமார் அங்கிள் கேட்டதில் சற்று நிதானமடைந்தான்.
“எனக்கு டைம் கொடுங்க அங்கிள். நாளைக்கு சொல்லறேன்.” என்று கூறிவிட்டு, பார்வதியை உற்று நோக்கி நகர்ந்தான்.
“நாளைக்கு சொல்லறேன்மா. ஆதித்யா சம்மதிக்கலைன்னா என்னை மன்னிச்சிடுங்க. வேற குழந்தையை என்னால் இதுபோல அனுமதிக்க முடியாது. ஏன்னா ஒவ்வொருத்தர் பெயரையும் பதிவு செய்து டீட்டெய்ல் போட்டு வச்சியிருக்கேன். அவங்களை தத்து கொடுக்கணும்னா உங்க கணவரோட ஒத்துழைப்பும் தேவை.” என்று கூற, “கடவுளுக்கு என் மேல் கருணை வந்தா ஆதித்யா என் மகனா வளர சம்மதிப்பான் சார். நான் நாளைக்கு வர்றேன்.” என்று கண்ணீரை துடைத்து நடந்தார் பார்வதி.
-தொடரும்.
Sogamana Starting enralum Adhityavirku oru thai kidaikkapogira magizchiyil nan