அத்தியாயம்-3
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அதிகாலை துயில் களைந்து ஜன்னலை திறந்தான் ஆதித்யா.
நேற்றைய கண்ணீரை உகுத்திய விழிகள், நீர்கள் வற்றி பாலைவனமாக மாறியது போல நின்றான்.
அன்னை பார்வதியை தேடி விழியில் அலசி, அறையிலிருந்து நடந்து வந்தான்.
கைலாஷோ “ஆதித்யா வந்துட்டான் நான் சொன்னதை கேட்டுப்பாரு.” என்று கிசுகிசுத்து வெளிவர அவரை புன்முறுவலோடு கடந்து அன்னையிடம் “அம்மா நேரமாச்சு… டிபன் சாப்பிட்டு புறப்படணும் லஞ்ச் பேக் பண்ணிட்டிங்களா?” என்று கேட்டு தட்டை வைத்து ஹாட்பாக்ஸை திறந்தான்.
திணை தோசை மல்லி சட்னி போட்டு ருசிக்க, “ஆதித்யா நானும் அவரும் இத்தனை நாள் பிரிந்து இருந்ததில் நிறைய பேசணும். கடைசியாக உன் திருமண விஷயம் பேசப்பட்டது.
அவர் உனக்கு பொண்ணு பார்த்திருக்கிறார். அவர் பார்த்த அந்த பொண்ணை கல்யாணம் செய்துப்பியா என்று கேட்கறார்” என்றதும் ஆதித்யா நெற்றி சுருங்கியது.
பார்வதி காணும் முன் தன்னை சமாளித்து கொண்டான்.
இத்தனை நாள் அன்னையை தேடி வராமல், இதோ இப்பொழுது புயலாய் நுழைந்தார். இதில் என் தலையெழுத்தை இவரிடம் எழுத காட்டுவதா? என்று தயக்கமாக நின்றான்.
“நேத்து வந்தவர் இன்னிக்கு உன் திருமணத்தில் தலையிடுவதா நினைச்சா வேண்டாம் ஆதித்யா.” என்று பார்வதி ஆதித்யா மனநிலையை புரிந்தவராக பேசவும், “சேச்சே அப்படியில்லை அம்மா. எத்தனையோ முகம் தெரியாத தரகரிடம் பெண் பார்க்க சொல்றோம். அதனால் நான் அப்படி நினைக்கலை.” என்று கூறிமுடித்தான்.
பார்வதி மகனை வாஞ்சையாக தலைக்கோதி, “நீ இப்படி தான் சொல்வேன்னு தெரியும். அதனால் தான் அவரிடம் பொண்ணை பத்தி விசாரிச்சிட்டேன்.
இவரோட பிரெண்ட் சுரேந்திரன்னு ஒருத்தர் இருக்கார்.
அவரோட பொண்ணு திலோத்தம்மா. பார்க்க லட்சணமா இருப்பாளாம். நல்ல வசதியான குடும்பம். அம்மா இல்லாத பொண்ணு என்பதால் தெரிந்தவங்களோட சம்பந்தம் பேச ஆசைப்படறாராம்.” என்றதும் ஆதித்யா ஆள்காட்டி விரலால் நெற்றி கீறியபடி, “என்ன நேம் சொன்னிங்கம்மா? பெயரை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு” என்று கேட்டான்.
“திலோத்தம்மா.. இப்ப தானே உன் பிறந்த நாளுக்கு கல்யாண பேச்சு எடுத்தப்ப ரம்பையோ திலோத்தம்மையோ பாருங்கன்னு சொன்ன. அந்த பெயர்லயே பொண்ணு பெயர். அதான் கேள்விப்பட்ட பெயரா இருக்கு” என்றதும், “அந்த பொண்ணுக்கு அம்மா இல்லையா? அப்பா பெயர் என்ன?” என்றான்.
“அம்மா துர்கா மூனு வருஷம் முன்ன இறந்துட்டாங்களாம். அப்பா சுரேந்திரன் மட்டும் தான்.
இவருக்கு அவர் ஸ்கூல் பிரெண்ட்” என்று கூறவும் கைலாஷ் இடையே வந்து சேர்ந்தார்.
“உனக்கு சம்மதம்னு பொண்ணு பார்க்கலாம்னா, அவனிடம் எந்த நாள், நேரம்னு தகவல் சொல்லிடலாம்” என்றதும் ஆதித்யா இரண்டு வினாடி யோசனையில் ஆழ்ந்தான்.
“அவங்களுக்கு எந்த நாள் தோதுப்படுமோ அவங்களிடமே சொல்ல சொல்லுங்க. அன்னைக்கு போகலாம்” என்றவன் அலுவலகம் செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டான்.
ஆதித்யா சென்றதும் கைலாஷ் மனைவியிடம் “நான் சுரேந்திரனிடம் பேசிடறேன். பொண்ணு பார்க்க சம்மதிச்சிட்டா, நான் திரும்ப தலை நிமிர்ந்து நிற்பேன்” என்று கண்கள் மின்ன கூறினார்.
இந்த காலத்தில் இரண்டு மனைவியிடம் வாழ்ந்தவரென்ற பெயரை விட, இரண்டாவதாக கட்டிக்கொண்டவள் ஓடிப்போனதாக தானே பேச்சு கசிகின்றது. அந்த ஊர் வாயை இந்த திருமணம் நிகழ்த்தி அவமானத்தை துடைத்தெறியும் முயற்சி எனலாம்.
அதனால் நண்பன் சுரேந்திரனை காண சென்றார்.
சுரேந்திரன் வசதியாக இருப்பதும், இந்த திருமணம் உடனடியாக நடந்தால், நானும் என் முதல் மனைவியும் குடும்பமாய் வாழ்கின்றோமென்ற ஜம்பமாய் உரைக்கவும் கைலாஷ் திட்டம்.
நண்பனிடம் ஆதித்யாவின் புகைப்படத்தை போனில் அனுப்பி, படிப்பு உத்தியோகம் உரைத்தார்.
சுரேந்திரனுக்கு படிப்பு உத்தியோகம் எல்லாம் காணும் முன் ஆதித்யாவின் வசீகரமான முகம் மனதை நிறைத்தது. படிப்பும் வேலையும் பார்த்தார். வேலை இப்படி யாரிடமோ கை நீட்டி சம்பளம் வாங்குவது மட்டும் இடித்தது. தனக்கு மருமகனாக வந்தால் வீட்டோடு மாப்பிள்ளையாக மாற்றலாம். தன் தொழிலையும் கைலாஷ் கம்பெனியும் பார்க்கும் வல்லமை ஆதித்யாவிற்கு போதாமானதாக அமையலாம். அப்பொழுது இந்த வேலையை விடுத்து முதலாளியாக மாறுவானென்று விட்டுவிட்டார்.
அதே போல ஆதித்யா வசீகரமான முகம் பிறப்பின் ரிஷிமூலம் காண தேவையற்றதாக இருந்தது.
மனநிறைவாக தான் சுரேந்திரன் “உன் மனைவியோடு வளர்ப்பு பையனை கூட்டிட்டு பொண்ணு பார்க்க வாடா. பொண்ணு போட்டோவை போன்ல அனுப்பறேன்” என்று கூறினார்.
கைலாஷ் மனைவி பார்வதியிடம் நற்செய்தியை தெரிவித்தார். போனில் ‘திலோத்தமா’ புகைப்படம் வந்ததும் பார்வதியிடம் காட்டினார்.
“உன் பையனுக்கு பொண்ணை பிடிக்குமா?” என்று கைலாஷ் கேட்க, “நான் கண்ணை மூடி ஒரு பொண்ணுக்கு தாலி கட்ட சொன்னாலும் செய்வான்.” என்று தீர்க்கமாய் உரைத்தார் பார்வதி.
இத்தனை நாள் அன்பு செலுத்தி வாழ்கின்றதில் அன்னைக்காக எதையும் செய்வானென்ற கர்வம் அதிலிருந்தது.
ஆதித்யா அலுவலகம் முடித்து வீட்டிற்கு வரும் நேரத்திற்கு காத்திருந்தார். அவன் இரவு ஏழு மணிக்கு வரவும், புகைப்படத்தை காட்டி நேரில் கருத்தை கேட்டார்.
புகைப்படத்தை பார்த்தவன் பின்னங்கழுத்தை தடவி, “உங்க இஷ்டம் மேற்படி என்ன செய்யணும்னு பாருங்கம்மா” என்று அறைக்கு விரைந்தான்.
பார்வதியும் கைலாஷும் வரும் வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு அரைநாள் விடுப்பு எடுத்து பொண்ணு பார்க்க போகலாமா? என்று பேசி முடிவெடுத்தனர்.
முகமலம்பி வந்த ஆதித்யாவிடம் வரும் வெள்ளி பெண் பார்க்க செல்லலாமா? என்று கேட்க, “போகலாம்” என்றவன், எப்பொழுதும் போல இருக்க, கைலாஷ் பொண்ணு பார்க்க வெள்ளி வருவதாக அலைப்பேசியில் சுரோந்திரனிடம் தெரிவித்திட தனியாக சென்றார்.
பார்வதி மகனருகே அமர்ந்து, “நீ பொண்ணு போட்டோ பார்த்த, ஆனா உனக்கு அனுப்ப சொல்லி கேட்கலையே. அம்மா உனக்கு நல்ல பொண்ணா பார்த்திருக்கேனா? உள்ளுக்குள்ள என்னவோ நீ மனசார சம்மதிக்கலையோனு பயமாயிருக்கு” என்று மீண்டும் கேட்டார்.
“அம்மா… நீங்க யாரை பார்த்தாலும் தாலி கட்டுவேன். அதுவும் இந்த பொண்ணு ஏ-ஒன். பாருங்க பெயரே திலோத்தமா… அழகா லட்சணமா இருக்கா.” என்று சமாளித்தான்.
“அப்படின்னா போட்டோ கேட்கலையே. இரண்டு நிமிஷம் பார்த்துட்டு ரூமுக்கு போயிட்ட.” என்று தன் ஐயத்தை கேட்டார்.
“ஏன் அம்மா… பொண்ணுங்களுக்கு தான் வெட்கமிருக்குமா? எனக்கு இருக்க கூடாதா? நீங்களா அனுப்புவிங்கன்னு கேட்கலை. இப்ப என்ன எனக்கு இந்த போன்லயிருந்து பிக்சரை செண்ட் பண்ணுங்க.” என்று கூற மடமடவென அனுப்பினார் பார்வதி.
அவன் போனில் வந்தடைந்தது அப்பெண்ணின் புகைப்படம்.
“உங்க மருமக போட்டோவும் எனக்கு வந்துடுச்சு. இனி அடிக்கடி கனவுல போயிட்டா, என்னை உலுக்கி கேலி செய்ய கூடாது சொல்லிட்டேன்” என்று அன்னையிடம் இயல்பாய், கிண்டலாய், பேசினான்.
அவர் நகர்ந்ததும் அவசரமாய் தனதறைக்கு சென்றவன் போனில் அப்பெண்ணின் புகைப்படத்தை கண்டு எரிச்சலடைந்து, போனை மெத்தையில் வீசியெறிந்தான்.
‘எவன் எவனோ எனக்கு பொண்ணு பார்க்க தலையாட்டற நிலைமை.’ என்று பல்லை கடித்து முனங்கினான்.
தனக்கு திருமணம் என்றால் பார்வதி அம்மாவே பார்த்து முடிப்பாரென்று நிதானமாய் இருந்தான். இப்படி நேற்று பெய்த மழையில் திடீரென முளைத்த காளானாக கைலாஷ் என்பவன் முன் வந்து, அப்பா என்று உரிமை கொண்டாடிட ஆதித்யாவுக்கு பிடிக்கவில்லை. அதோடு பார்வதி அன்னையை விட்டுவிட்டு ஒரு பெண்ணை நாடி சென்றவர் என்ற எண்ணம் முள்ளாய் நெருடியது. இவர் எந்தளவு தனக்கு பெண் பார்த்து வைப்பாரென்ற இளக்காரம்.
‘இந்த அம்மாவுக்காக பொறுத்துட்டு போகணும் ஆதித்யா’ என்று மனசாட்சி எடுத்துரைத்தது.
அதன் பின் கொஞ்ச நேரம் எரிமலையை விழுங்கியவனாக இருந்தான். கொஞ்சம் கொஞ்சமாய் அவனாகவே குளிர்ந்து வெளிவந்தான்.
இரவு உணவை மூவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.
கைலாஷ் தான் வளவளவென பேசினார். “சுரேந்திரனுக்கு உன்னை பிடிச்சிருக்காம். அவன் பொண்ணு திலோதம்மாவுக்கு உன் போட்டோ காட்டி அபிப்ராயம் கேட்டிருக்க, அவளுக்குமே பிடிச்சிருக்குன்னு தான் சொன்னாளாம். பொண்ணு பார்க்க போறப்ப, ஒருமுறை பார்த்ததுட்டா மீதி மடமடவென கல்யாண வேலை பார்க்கலாம்.” என்று பேசினார்.
அவர் மிகத்தீவிரமாக இருக்க, ஆதித்யாவோ உதடு பிரிக்காமல் லேசாய் போலியாய் சிரித்தான்.
நிச்சயம் இது வெட்கம் என்று கைலாஷ் எடுத்து கொண்டார். பார்வதியோ மகனுக்கு இன்னமும் கணவரிடம் பேச தயக்கமென்று நினைத்தார். உண்மை என்னவெனில் ஆதித்யாவிற்கு துளியும் திருமண விஷயத்தில் எவ்வித ஆனந்தமும் இல்லை. போலியான புன்னகையை முகத்தில் வரவழைக்க கஷ்டப்பட்டான்.
அவசரமாய் சாப்பிட்டு அலுவலக நண்பன் அழைப்பதாக கூறி ஆபிஸ் விஷயம் பேசுவதாக அறைக்கு வந்துவிட்டான்.
வெளியே கைலாஷ் பார்வதியிடம், ”நம்ம வீட்டுக்கு எப்ப வருவ பாரு. சுரேந்திரன் ஸ்டேடஸுக்கு இங்க எல்லாம் இருக்க முடியாது. அவன் பொண்ணு இந்த வீட்ல வாழ முடியாது.” என்று நிதர்சனத்தை தெரிவித்தார்.
இந்த வீடு இரண்டு படுக்கையறை ஹால் கிச்சன் என்று அளவாக இருந்தது. திலோத்தமா செல்வந்தர் சுரேந்திரன் மகள் என்பதால் தனது வீட்டுக்கு மனைவியை மகனை அழைத்தார்.
பார்வதியோ நீண்ட வருடம் கழித்து கணவர் வீட்டுக்கே திரும்ப செல்ல வேண்டுமாயென சிந்தித்தார்.
மகனுக்காக செல்வோமா? வேண்டாமா? கணவன் மனைவி விவாகரத்து பெற்று ஒன்றாக வாழும் பட்சத்தில் இருவர் சேர்ந்தே தங்குவது நல்லது. ஆனால் இங்கே ஆதித்யாவிற்கு மணமானால், பெரிய வீட்டு பெண், தங்க வசதி போதாதென்று கைலாஷ் உரைக்க பார்வதி மகனிடம் பேசி பார்க்கின்றேன்” என்றார்.
அறையிலிருந்த ஆதித்யாவுக்கு அன்னை பேசுவது துல்லியமாக விழுந்தது.
‘கல்யாணம் அதுயிதுன்னு சாக்கு சொல்லி, இனி அவன் வீட்டுக்கு வேற மொத்தமா அழைத்தாலும் போகணுமா?’ என்ற மலைப்பு கூடியது.
திருமண பேச்சு எடுத்திலிருந்து ஆதித்யா முகம் கருத்து விட்டது. பெண்ணின் புகைப்படம் எல்லாம் அவனை சமாதானம் செய்திடவில்லை. அவனை பொறுத்தவரை பணம் பகட்டு வசதி, எல்லாம் சிறு வயதிலேயே துறந்துவிட்டான். அதனால் பணக்கார பெண் என்றோ, அழகான பெண் என்பதிலும் ஆதித்யாவின் மனம் தொலையவில்லை.
ஆனால் திலோத்தமா ஆதித்யா புகைப்படத்தில் தன்னை தொலைத்தவளாக ரசித்திருந்தாள்.
அவள் ரசித்தது நிச்சயம் இந்த ஆதித்யாவிற்கு தெரிந்திருக்காது. ஆண்டாண்டு காலமாக இவனோடு வாழ்ந்தவளாக அப்பேதை மனம் அவன் புகைப்படத்திலேயே கணவனாய் காண ஆரம்பித்தாள்.
அவன் இல்லாமல் தன் வாழ்வு இனிக்காது என்ற அளவிற்கு திலோத்தமா காதல் ஆதித்யா மீது கரைப்புரண்டது.
-தொடரும்.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍
Aadi ku parvathy avanga parthu irundha indha alavukku erichal aagi iruku sh mata n nenaikiran and athae pola surendiran avaruku aadi oda appa amma kum ethachum link irukum nu thonuthu parpom
aadhi vera kovama irukane kailash mela ithu normal thana ipo vanthutu udane ponnu solli ethukanuma ninaikirathu thane aana ithula etho oru vishayam ninaikiren ena nu tha therila sissy twist eppai kodukraanganu pakanum
Interesting
Interesting