அத்தியாயம்-4
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இன்று இங்கே பெண் பார்க்க வந்திருந்த வீட்டை அளவுக்கு அதிகமாகவே ஆதித்யா அளவிட்டிருந்தான்.
சுரேந்திரனிடம் கைலாஷ் அறிமுகப்படுத்த, வணக்கம் வைத்து குஷன் சோபாவில் அமர்ந்துவிட்டான்.
எது கேட்டாலும் அம்மா பதில் சொல்வார்களென்ற ரீதியில் இருந்தான்.
சுரேந்திரனுக்கு ஆதித்யாவின் அமைதி, வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க கூறினாலும் சம்மதிப்பானோ என்று தோன்றியது. அவருக்கு ஒரே மகள் அவளை விட்டு பிரிய மனம் வராதே.
திலோத்தமா இன்றே கல்யாண பெண் போல தான் கூடத்தில் வந்து நின்றாள்.
ஆதித்யா முன் மிக பவ்வியமாக அவனுக்கு தன்னை பார்த்ததும் பிடித்திடும் வகையில் அப்சரஸாக நின்றிருந்தாள்.
ஆதித்யா அவள் நீட்டிய ஜூஸை சுவைத்து, அவளை ஏறிடாமல் தவிர்த்தான். திலோத்தமா பார்வதி அருகே அமர்ந்து ஆதித்யாவை மெல்ல ஏறிட்டாள்.
தந்தையின் போனில் அனுப்பிய போது பார்த்ததை விட, பேரழகனாகவே இருந்தான் ஆதித்யா.
சுரேந்திரன் கைலாஷிடம், “என்னப்பா பையன் அமைதியா இருக்கான்” என்று காதில் கிசுகிசுக்க, “உன்னிடம் சொல்லறதுக்கு என்ன? அனாதை ஆசிரமத்துல இருந்து பார்வதி எடுத்து வளர்த்ததா சொன்னேன்ல. பார்வதி மட்டும் சொந்தமா பார்த்து வளர்ந்தான். இப்ப நம்மளை கண்டு பேச்சு வரலை. அதோட இந்த அளவுக்கு வசதியை நினைச்சிருக்க மாட்டான். அதனால் கூட அமைதியா இருப்பான்” என்றார் கைலாஷ்.
கைலாஷ் கூறியப்பின் இப்படியொரு கோணத்திலும் நினைத்து அமைதியாகி இருக்கலாமென்று ஆதித்யாவிடம் மகளை பிடித்திருக்கின்றதா என்று அபிப்ராயம் கேட்டார்.
ஆதித்யா திலோத்தமாவை ஏறிட்டு இரண்டு நொடியில் “பிடிச்சிருக்கு” என்று கூறினான்.
அதன் பின் கைலாஷ் சுரேந்திரன் இருவரும் திருமண விஷயம் பேசினார்கள்.
பார்வதியோ திலோத்தமாவிடம் படிப்பு விருப்பமானதை கேட்க, திலோத்தமா பதிலுரைத்தாள்.
அடிக்கடி ஆதித்யாவை அடிக்கண்ணால் ரசிக்கவும், பார்வதியே “ஆதித்யா நீயும் திலோத்தமாவும் தனியா பேசிட்டு வாங்க” என்று அனுப்பினார்.
ஆதித்யா முதலில் வேண்டாமென்று கூற வந்தவன் திலோத்தமாவின் சிறு ஆனந்தத்தை உதட்டோரம் கண்டதும் எழுந்தான்.
“திலோத்தமா… மாப்பிள்ளைக்கு வீட்டை சுத்தி காட்டு. அதுக்கே நேரம் ஓடிடும்” என்று சுரேந்திரன் கூற “சரிங்கப்பா” என்று ஆதித்யாவை அழைத்தாள்.
திலோத்தமாவின் பார்வையும் பேச்சும் ஆதித்யாவை அவளுக்கு பிடித்திருந்ததாக பறைச்சாற்றியது.
அவள் பின்னால் நடந்தான். எஸ்-வடிவத்தில் வளைந்து செல்லும் படிக்கட்டு இருக்க அதில் ஏறியவளை பின் தொடர்ந்தான்.
அவன் கைகள் படிக்கட்டின் பிடியை தடவியபடி வீட்டை அளந்தான்.
அவன் பார்வை முழுதும் வீட்டை அளவிட்டது. மாடியறைக்கு அழைத்து வந்தவள், “இங்க இரண்டு ரூம், கீழே இரண்டு ரூம். அது என்னுடைய ரூம்” என்று சுட்டிக்காட்ட, ஆதித்யாவின் பார்வை அந்த அறையை விழியால் அலசினான்.
“நான் அம்மா தங்கிருக்கற வீடு இந்த அளவு இருக்கும். என்ன ஹால் ரூம் இந்தளவு இருக்கும்” என்றான்.
திலோத்தமாவோ ”அப்பா கூட முதல்ல இந்தளவு வசதியில்லை. வளரவளர இந்த வசதி. நாங்க முதல்ல அப்பார்ட்மெண்ட்ல இருந்தோம்” என்றாள்.
”நான் மாச சம்பளக்காரன், என் வீடு குறுகிய அளவு இருக்கும். ஆல்ரெடி கைலாஷ்.. அ…அப்பா அவர் வீட்டுக்கு அழைக்க நினைக்கிறார். என்னால அங்கயும் போக முடியாது. உங்கப்பா பார்வை கணக்கு போடுவது போல, வீட்டோட மாப்பிள்ளையாவும் இருக்க முடியாது. ஆப்டர் மேரேஜ் என் வீட்ல உன்னால இருக்க முடியும்னா நாம கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லைன்னா உங்கப்பாவும் கைலாஷ் அப்பாவும் நண்பர்களாவே இருக்கட்டும்.” என்று தன் உள்ளுக்குள் ஓடியதை தெரிவித்தான்.
திலோத்தமா ஆதித்யா பேச்சில் அதிர்ந்தாலும், “எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு கல்யாணம் தான் நடத்தறாங்க. நான் எனக்கு துணையான ஒருத்தரை தான் தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். ஏடிஎம் கார்ட், வீட்டு வசதி இதையில்லை. அதே வீட்ல வீட்டோட தான் இருக்கணும்னு அடம் பிடிக்கவும் மாட்டேன்.” என்றாள்.
அந்நேரம் அவள் முகம் லேசாக வாடியது. ஆதித்யா தன்னை எப்படி நினைக்கின்றாரோ என்ற வாட்டம் அது.
“மச் பெட்டர். இந்தளவு பதில் வரும்னு நான் எதிர்பார்க்கலை” என்று பாராட்டினான்.
திலோத்தமா வெட்கம் உடைத்தவளாக, “அப்பா உங்க போட்டோவை எனக்கு காட்டியதும் உங்களை பிடிச்சிடுச்சு. உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்கா?” என்று ஆர்வமாய் கேட்டாள். ஆதித்யா பதில் கூறும் நொடிக்காக ஏங்கினாள்.
“ம்ம்ம்” என்று ‘உம்’ கொட்டினான்.
“உங்க முகம் இறுக்கமா இருக்கு? அதுயேன்? பிடிச்சிருக்குன்னு சொல்றிங்க கொஞ்சம் சிரிச்சிட்டு சொல்லலாமே” என்று மேற்கொண்டு கேட்க தயங்கினாள்.
“அம்மா என்னை ஆசிரமத்துல இருந்து வளர்த்தவங்க.
அப்பா... இப்ப தானே கைலாஷ் வந்தார். இப்ப மனைவி என்ற இடத்துல உன்னை பார்க்க வந்திருக்கேன். லேசான பயம். என்னயிருந்தாலும் நான் ஒரு ஆர்பனேஜ் சைல்ட்” என்றான்.
திலோத்தமாவோ “இப்படி அத்தை எதிர்ல பேசாதிங்க. கஷ்டப்பட போறாங்க. ஆக்சுவலி நீங்க பேசறது எனக்கே கஷ்டமாயிருக்கு.” என்று துடித்தாள்.
“ம்ம் உண்மை அது தானே. எனிவே நான் யாராயிருந்தாலும் உனக்கு வருத்தமில்லையே? என் கைப்பிடிச்சி நான் எந்த வீட்ல வாழ கூப்பிட்டாலும் மறுக்க மாட்டியே?” என்றதும் இல்லை என்பதாக தலையாட்டினாள்.
“தேங்க்யூ” என்று ஆதித்யா கூறிவிட்டு, “கீழ போகலாமா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்.” என்று படியில் நடந்தாள். “உங்..உங்க நம்பர்” என்று போன் நம்பரை பதிய வைக்கும் ஆவலில் கேட்டாள்.
ஆதித்யா பத்து இலக்கத்தை கூற, நெயில் பாலிஷ் கைகள் அதை போனில் பதிய வைக்கும் போதே மனதிலும் பதிய வைத்து கொண்டது.
அவன் எண்ணிற்கு மிஸ்டு கால் தந்து, “இது என் நம்பர்” என்றாள்.
போனை எடுத்து பார்த்து பேக்கெட்டில் வைத்து, கீழே படிகளில் இறங்கினான்.
பார்வதிக்கு ஆதித்யா படியில் இறங்கும் நேரம் ராஜ தோரணையாக காட்சி தந்தான்.
பார்வதியின் அருகே அமர்ந்து “போகலாமா அம்மா” என்று சிறு குழந்தை போல காதை கடித்தான்.
“போலாம் ஆதித்யா” என்று எழுந்தார் பார்வதி.
கைலாஷும் சுரேந்திரனிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டார். திலோத்தமா எதிர்பார்ப்போடு ஆதித்யாவையே பார்க்கவும் பார்வதியோ “ஆதித்யா பொண்ணுகிட்ட சொல்லிட்டு வா” என்று மென்குரலில் கூறினார்.
ஆதித்யா அன்னை சொன்னதும் திலோத்தமாவை ஏறிட்டு பார்வையாலே புறப்படுவதாக அழகாக பார்வை பரிபாஷையில் கடத்தினான்.
ஆதித்யா தலையாட்டி விழியால் செல்வதாக கூற, திலோத்தமாவும் தலையசைத்து உதட்டில் முறுவல் கூடி விழியால் சரியென்றாள்.
ஆதித்யா செல்லும் வரை வாசலையே கொக்கு போல கழுத்தை வளைத்து பார்த்தாள்.
சுரேந்திரன் அருகே வந்தும் “என்னம்மா… பையனை ரொம்ப பிடிச்சிருக்குப் போல.” என்று கேட்டதும் வெட்கப்பட்டாள்.
“என்ன வாயை திறந்து இரண்டு வார்த்தை பேச மாட்டேங்கறான். உன்னிடம் தனியா இருந்தப்ப பேசினானா?” என்று கேட்டார்.
“ஷார்டா… அளந்தெடுத்து பேசினார் அப்பா. ஆனா வார்த்தை நறுக்குன்னு பேசறார்” என்று அபிப்ராயத்தை கூறினாள். அவன் பேசியதை தந்தையிடம் உரைக்கவில்லை. அப்படி கூறியிருந்தால் இன்றே திருமணத்தை தடுத்திருப்பார். சுரேந்திரனுக்கு வீட்டோட மாப்பிள்ளையை தான் எதிர்பார்த்தார்.
கைலாஷும் “வீட்டோட மாப்பிள்ளை என்றால் அளவோடு பேசறதும் நல்லது” என்று நினைவுப்படுத்தும் விதமாக பேச திலோத்தமா அமைதியானாள்.
நறுக்கு தெரித்து ஆதித்யா பேசியதில் அவர் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க மாட்டார். அதோடு கைலாஷ் மாமா வீட்டிலும் இருக்க மாட்டாரென்று அல்லவா உரைத்தது. அதை இப்பொழுது கூறிவிட்டால் தந்தை திருமணத்தை தடை செய்வாரா? அல்லது அதனால் பிரச்சனை எழுமோ?
கலக்கமாய் நின்றாலும் கொஞ்ச நேரத்தில் ‘எப்படியும் கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அதுக்கு பிறகு மாமனார் ஜெயித்தாலும் சரி, மருமகன் ஜெயித்தாலும் சரி, இப்பொழுது இந்த பேச்சு வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.
சுரேந்திரனோ, ‘ஆசிரமத்தில் கொஞ்ச நாள் வளர்ந்ததால் நிறைய பேசமாட்டான்னு நினைக்கறேன். மத்தபடி ராஜ அம்சம் முகத்துல தாண்டவமாடுது.
அந்த பார்வை என்னவோ உருவி எடுக்குது’ என்று சிலாகித்தார்.
”ஆமாப்பா… கண்கள் கூட பேசும்னு இப்ப தான் தெரியுது. அவருக்கு இந்த வீடு ஆடம்பரம் பெரிசா ஆர்வமில்லை. என்னிடம் நேரா பார்த்து பேசறப்ப வேறென்னனென்வோ அவர் பார்வையில் வெளிவருது. என்னால தான் அதெல்லாம் என்னனு பிரித்து பார்க்க முடியலை. கொஞ்ச நேரம் அவர் கண்ணை பார்த்தாலே எனக்கு வெட்கமா வருதுப்பா.” என்று கூறவும் சுரேந்திரன் கலகலவென நகைத்து விட்டார்.
“பரவாயில்லையே… கல்யாண பேச்செடுத்தா பொண்ணுக்கு வெட்கம் வரும்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்ப தான் நேர்ல பார்க்கறேன். என் மக வெட்கப்படறா” என்று மகளின் பேச்சை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
மனதிற்குள் வீட்டோட மாப்பிள்ளையாக வச்சி என் மக சந்தோஷத்தை இதே போல கொடுக்கணும்’ என்று சூளுரைத்து கொண்டார்.
இந்த பக்கம் கைலாஷ் தன் காரை அவர் வீட்டுக்கு எடுத்து சென்றார்.
“நம்ம வீட்டுக்கு நீ வந்து பத்து வருஷம் இருக்குமா?” என்று பார்வதியை பார்த்து கேட்டார் கைலாஷ்.
“அதுக்கு முன்னாவே நீங்க டிவோர்ஸ் கொடுத்தாச்சுங்க” என்று பார்வதி உரைக்க கைலாஷ் அமைதியானார்.
இரண்டு நிமிடம் கழித்து “நீ போனப்பிறகு நிறைய மாற்றம். இப்ப தான் மீண்டும் பழைய பொலிவு வீட்டுக்கு வந்திருக்கு.” என்று வீட்டின் முன் நிறுத்தினார்.
“நானா எங்கங்க போனேன். நீங்க விவாகரத்து கொடுத்தப் பிறகும் இங்க இருக்க முடியாதே.” என்று பார்வதி உரைக்க, கைலாஷிற்கு மனைவியிடம் எது சொன்னாலும் வெட்டுதலாக பேச்சு விழுவதை புரிந்து கொண்டார். வீட்டுக்கு வந்தால் பழைய நினைவுகள் வருவதை தடுக்க முடியாத பேச்சு.
கைலாஷ் மனைவி வந்ததும் பணியாட்களிடம் அறிமுகப்படுத்த, “ப்ளீஸ்… நான் இப்ப நல்ல மனநிலையை கெடுத்துக்க விரும்பலை. ஒரு காபி மட்டும் குடிக்கறேன்” என்று வார்த்தையை கடினப்பட்டு உரைத்தார்.
மகனுக்கு பொண்ணு பார்த்து வந்த சந்தோஷ மனநிலை இங்கு வந்ததும் மாறிடக்கூடாதே. இங்கு வருவதாக கூறியது மறந்தே போனது. இப்பொழுது இங்கு தன்னால் வரமுடியுமா என்று சிந்தித்தார். நன்றாக வாழ்ந்து மனைவி அந்தஸ்தில் இருந்து, பிறகு கணவனை வேறொருத்தியை மணக்க, குழந்தை பிறக்கவில்லையென்று காரணம் காட்டி வீட்டிலிருந்து விவாகரத்து கொடுத்து அனுப்பியது எல்லாம் காட்சியாய் வந்து போனது.
“அம்மா… காபி குடிங்க. நம்ம வீட்டுக்கு போகலாம்.” என்று ஆதித்யா கூறவும் வாங்கி பருகினார்.
கைலாஷ் கவலையாக, “இன்னிலயிருந்து நீங்க இங்க இருப்பிங்கன்னு நினைச்சேனே” என்று கூற, “அம்மா இங்க தங்க இன்னும் ப்ரிப்பர் ஆகலை. அப்படி தங்கறேன்னு சொன்னதும் நானே கூட்டிட்டு வர்றேன்” என்று ஆதித்யா கூறிவிட்டான்.
கைலாஷிற்கு கணவன் மனைவிக்குள் இவன் என்ன முடிவெடுக்க என்ற கோபம் உருவானது. ஆனால் இவன் திருமணத்தை முன்னிட்டு தான் நண்பனுடனும், இழந்த மனைவியை சொந்தங்களோடு ஜம்பம் காட்டி பேசவும் திட்டம் தீட்டியது. அதனால் அமைதியாக வேடிக்கை பார்த்தார்.
மனைவியிடம் மட்டும், “மன்னிப்பும் மறக்கறதும் தான் வாழ்க்கை பார்வதி. திரும்ப நாம ஒன்னா ஒரே வீட்டில் வாழ முடிவெடுப்போம். அதுவும் நம்ம பையன் கல்யாணம் முடிவாகறதால குயிக்கா முடிவெடு.” என்று இலைமறைவாக இக்கட்டை கூட்டினார்.
ஆதித்யாவோ ‘கல்யாணம் நடந்தா திலோத்தமாவை நான் என் வீட்ல தான் வாழ வைப்பேன். அப்ப என்னயென்ன பிரச்சனை எழுமோ?’ என்று பின்னால் நடப்பதை நினைத்து பெரிதாக கனவு காணவில்லை. இன்றே சுரேந்திரனிடம் இதை பற்றி பேசவில்லை. திலோத்தமா அவள் தந்தையிடம் கூறி, அவர் கேட்டால் ஆமென்று கூறலாமென நினைத்தான்.
ஆனால் அங்கே திலோத்தமா பெரிய பெரிய கனவுக்கோட்டையை கட்டினாள். ஆதித்யாவோடு கனவில் திருமண வைபோகத்தையே நினைத்து பார்த்து மகிழ்ந்தாள். தந்தையிடம் ஆதித்யா கூறியதை பகிராது மறைத்தாள்.
-தொடரும்.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 thilothama marachadhanala enenna prechanai varapogudho🙄
Thilo enga aadhi sonnathu sonna prachanai varum nu marachita ah and aadhi veetu ah ipadi pakkura thu ah partha oru vela ithu avan oda veedu ah irukumo
🫣🫣🫣 @Kavbharathi
It’s interesting waiting for nxt epi