Skip to content
Home » கண்ணிலே மதுச்சாரலே-6

கண்ணிலே மதுச்சாரலே-6

அத்தியாயம்-6

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

ஒருவாரம் திலோத்தமா வீட்டில் அவள் தந்தை சுரேந்திரனும் இருக்க, பட்டும்படாமலும் அறையிலும் ஹாலிலும் இருந்தான் ஆதித்யா.

புதிதான இடம், புதுமண ஜோடி என்பதில் தயக்கம் கலந்த நடமாட்டம் இருக்குமென்று எண்ணியிருந்தார் சுரேந்திரன்.

இன்று ஆதித்யாவோ “நம்ம வீட்டுக்கு கிளம்பணும் திலோ. எத்தனை நாள் இங்கயிருக்க? எனக்கு கம்பர்டபிளா இல்லை. வேலைக்கு வேற போகணும். நீ உன் திங்க்ஸ் எடுத்துக்கிட்டா கிளம்பலாம்” என்றதும், ஏனோ புது செடியை பிடுங்கி வேறொரு இடத்தில் செல்லும் நிலையில் லேசாய் துவண்டாள்.

திலோத்தாமாவிடம் வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கமாட்டேன் என்று ஆதித்யா முன்னரே கூறியதால் தந்தையிடம் இதை தெரிவிக்க தாமதம் செய்தாள்.

இன்று சுரேந்திரனிடம் சமாளிக்கும் விதமாக அவரோட வீட்ல தங்க அழைச்சிட்டு போறார் அப்பா தனியா டைம் ஸ்பென்ட் பண்ணி கொஞ்ச நாள் போகட்டும்னு’ என்று சொல்வதற்கு திணறினாள்.

புதிதாக திருமணம் ஆனவர்கள் உடனடியாக ஹனிமூன் சென்று வர அந்தமான் தீவுக்கு டிக்கெட் எடுத்து நீட்டியும், ஆதித்யா வாங்க மறுத்துவிட்டான். அலுவலகத்தில் லீவ் தற்போது சாத்தியமில்லை என்று தெரிவித்துவிட்டான்.

அதனால் தனியாக வீட்டில் இருக்க விரும்புவதாக நினைத்து கொண்டு மகளை சீரும் சிறப்புமாய் வழியனுப்பினார்.‌

கைலாஷ் இது தான் சாக்கென்று பார்வதியிடம் ”பையன்‌ தனியா இருக்கட்டும். நீ இடைஞ்சல் செய்யற மாதிரி அங்க இருக்க வேண்டாம். நம்ம வீட்ல இரு” என்று அவரது வீட்டிலேயே பார்வதி இருக்கும் விதமாக நெயிற்சியாய் பேசினார்.

பார்வதியும் மகனும் மருமகளும் தனியாக பேசி பழக வேண்டும் என்று கணவனர் வீட்டில் இருந்துக் கொள்வதாக உரைத்தார்.

ஆதித்யா அன்னை அவரது கணவரிடமே சென்றதில் தனக்கு வசதி என்று விட்டு விட்டான்.

ஆதித்யா வீட்டில் திலோத்தமா வந்ததும் அவளது அறையை விட சற்று பெரிதாக இருந்த வீட்டை அளவிட்டாள். அவள் வீட்டை விட ஒப்பிட்டால் அளவில் அவளது அறையை மட்டுமே அளவு கொள்ள முடியும்‌

“அம்மா கூட வருவாங்கனு நினைச்சேன். அவங்க நமக்கு தனிமை தந்துட்டு அங்க போயிருக்காங்க. வீட்ல நாம மட்டும் தான்” என்று ஆதித்யா மையலிடும் பார்வையால் பார்வையிட, திலோத்தமா வெட்கம் கொண்டு தலைக்கவிழ்ந்தாள்.

“திலோ… உனக்கு சமைக்க தெரியுமா?” என்று கேட்க மிரளும் பார்வையில் அவள் பதில் தராமலேயே ஆதித்யாவுக்கு புரிந்தது.

அவன் குறும்புடன் “இட்ஸ் ஓகே… அம்மா எனக்கு சமைக்க சொல்லி தந்தாங்க. நான் உனக்கு சொல்லி தர்றேன் சேர்ந்தே சமைப்போம்” என்றவன் உரிமையான அணைப்பில் திக்குமுக்காடினாள்.

இல்லறம் இனிமையானது அதிலும் மனதிற்கு பிடித்தவனின் தீண்டல் சொர்க்கத்தில் மிதக்க வைக்கும் என்று திலோத்தமைக்கு புரிய துவங்கியது.

ஆதித்யா அதற்கேற்றது போல கொஞ்சி குலாவி மையலிலேயே மூழ்கடித்தான்.

அலுவலகம் சென்றாலும் திலோத்தமாவிடம் போரடிக்காமல் இருக்க சில வேலைகளை நாசுக்காக கூறி சென்றான்.

திலோத்தமாவிற்கு வீட்டை கூட்டி பெருக்கி டிவி பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். இதில் தந்தையோடு பேசி சிரிக்கவும், பார்வதி அத்தையோடு போனில் பேசவும் நேரத்தை கழித்தாள்.

அப்படி பேசும் பொழுது தான் பார்வதியிடம் “நீங்க எப்ப அத்தை வருவிங்க” என்று கேட்டாள். கேட்டப்பின்னே அபத்தமாக தோன்றியது. அவர்கள் பிரிந்த கணவரை தற்போது சேர்ந்திருக்க மாமனாரை விட்டு வருவாரா?

ஆனால் பார்வதி இது தான் கிடைத்த வாய்ப்பாக கருதி, மகன் போனதும் மருமகளை காண வந்து விட்டார்.

மாலை நான்கு வரை கூடவேயிருந்து பேசிவிட்டு கிளம்புவார்.‌

ஆதித்யா வரும்பொழுது ஏதேனும் அவனுக்கு பிடித்த உணவு பண்டம் ஃப்ரிட்ஜ் மேலே இருக்க சுவைப்பான். அது அன்னை வாங்கி வந்ததாக இருக்கும், அல்லது செய்ததாக இருக்கும்.

இப்படியே இரண்டு வாரம் கழியவும், சுரேந்திரன் மகளை காண வந்தார். அவர் கூட பேசுவதற்கு துணையாக கைலாஷையும் அழைத்து வந்தார்.

ஏற்கனவே ஒரு முறை இங்கு வந்தவரே. ஆனாலும் மகள் இவ்வீட்டில் சேலையுடுத்தி, காபி போட்டு வந்து தரவும், கண் கலங்கியது.

பாசமான மகள், வசதி வாய்ப்பு என்று வாழ்ந்தவளை இப்படி புறாக்கூடு போலிருக்கும் வீட்டில் காண சகித்தார்.

அதனால் வீட்டோடு மகளை அழைத்து செல்ல ஆதித்யாவிடம் பேச வந்திருந்தார். கைலாஷ் இருந்தால் பேச வசதியாக நினைத்தார்.

ஆதித்யா அலுவலகத்திலிருந்து கிளம்பும் போதே திலோத்தமா அழைத்தாள்.

“என்ன திலோ? ஏதாவது வேண்டுமா?” என்று குழைவாய் கேட்க, “அப்பாவும் மாமாவும் வீட்டுக்கு வந்திருக்காங்க. நீங்க சீக்கிரம் வாங்க” என்று கூறினாள்.

“ஏ… திலோ… அம்மா வந்திருக்காங்களா?” என்று கேட்டவனிடம், “இல்லைங்க அத்தை வரலை. மாமாவும் அப்பாவும் வந்திருக்காங்க” என்று இரண்டாவது முறையாக கூற செவிக்கு ஏற்றி பொறுமையாக தமாதப்படுத்தியே வந்தான்.

அவன் வரும்போதே, சுரேந்திரனை பார்த்துவிட்டாலும் நேராக முதுகுப் பையை கழட்டி திலோவை தான் கண்டான்.

“அப்பா” என்று சுட்டிக்காட்டவும், சன்னமான சிரிப்பை உதிர்த்தான்.

வீட்டுக்கு வந்தவர்களை ‘வாங்க எப்ப வந்திங்க?’ என்ற சம்பிரதாயமான வார்த்தையில் நலம் விசாரிக்கவில்லை.

நேராக உடைமாற்ற சென்றவனை பின்தொடர்ந்தாள் திலோத்தமா.

“அப்பா வந்திருக்கார்னு சொன்னேன். லேட்டா வந்திருக்கிங்க? எப்பவும் அரை மணி நேரம் முன்ன வருவிங்க?” என்று கேட்டு நின்றாள்.

சட்டை பட்டனை கழற்றி, “டிராபிக்ல மாட்டிக்கிட்டேன்.” என்று ஒற்றை வார்த்தையில் பதில் தந்தான்.

“நினைச்சேன்” என்றவள் கையை பிசைந்து அப்பாவை வாங்கன்னு கூப்பிட்டு இருக்கலாம்” என்று கேட்டாள்.

கால் சட்டையில் அணிந்த பெல்ட்டை கழட்டி, ஹேங்கரில் மாட்டி, “வந்ததும் சிரித்தேன். என் பாணியில் வெல்கம் பண்ணினேன்” என்றவன் தாமதிக்காது குளியல் அறைக்கு டவலோடு சென்றான்.

குளியலறையும் ஹாலும் மாறிமாறி பார்த்து ஆதித்யா வர காத்திருந்தாள்‌.

இரண்டு நிமிடத்தில் ஷவரில் குளித்து தலை துவட்டி ஷார்ட்ஸ் அணிந்து வந்தவனிடம் “வார்த்தையால வரவேற்கலாமே” என்றதும் ஹாலுக்கு வந்தான். பின்னாடியே திலோத்தமாவும் வந்தாள்.

“எப்ப வந்திங்க?” என்று கேட்டதும் சுரேந்திரனும், இவனுக்கு சளைக்காதவர் போல, “வந்து இரண்டு மணி நேரமாகுது.” என்று கூறினார்.

இவ்வளவு நேரம் காத்திருப்பதாக உரைத்தார்.

“ஓ… திலோ காபி போட்டு கொடுத்தியா?” என்று கேட்டவன் டீபாய் மீது இரண்டு காபி கோப்பை இருக்க, “ஓ.. திலோ போட்ட காபி குடிச்சிங்களா? எப்படி போட்டிருக்கா?” என்று கேட்டான்.

சுரேந்திரனோ, “என் மகள் காலையில் எழுந்தா காபி குடிக்க கூட சமையல் கட்டுக்கு போக மாட்டா. காபி அவ ரூமை தேடி போகும்.” என்று குற்றமாய் சாடினார்.

அதன் அர்த்தம் புரிந்த ஆதித்யாவோ, “அது உங்க வீட்ல. இது அவ வீடு‌. நீங்க அவ வீட்டுக்கு வந்திருக்கிங்க, அவ தான் செய்யணும்” என்றவன் “பொண்ணு கையால் முதல் முறை காபி குடிச்சிருங்கிங்க” என்று பெருமை பேசினான்.

சுரேந்திரனுக்கு மகள் கையால் காபி என்றதில் ஆனந்தம் என்றாலும், மகள் இனியும் இந்த வீட்டில், வேலை செய்ய கூடாதென்று முடிவெடுத்தவராக, “இத்தனை நாள் இங்க இருந்திங்க. இனி அங்க வந்து முழுசா தங்க வாங்க மாப்பிள்ளை.” என்று ஆரம்பித்தார்.

“அங்க வந்துட்டா…? என் வேலை?” என்று நெற்றி சுருக்கினான்.

கைலாஷோ, “சுரேந்திரனுக்கு இருக்கற கம்பெனியில் மேனேஜரா பொறுப்பை தரவும் செய்யலாம். கொஞ்ச நாள் அவன் கம்பெனில தொழிலை கத்துக்கோ ஆதித்யா” என்று கூற, அவரை கூர்பார்வையால் வாயடைத்தான்.

தொண்டையை செருமி, “சுத்தி வளைச்சி வீட்டோட மாப்பிள்ளையா கேட்கறிங்க. நான் வீட்டோட மாப்பிள்ளையா வரமாட்டேன்னு திலோத்தமாவிடம் பொண்ணு பார்க்க வந்தப்பவே சொல்லிட்டேன். என்ன திலோ சொன்னேன் தானே?” என்றதும் திலோத்தமா ஆமென்பதாய் தலையாட்டினாள்.

சுரேந்திரனோ ‘என்ன?’ என்று அதிர்ச்சியாக பார்த்தார்.

“தாலி ஏறும் முன்னவே முடிவா சொன்னவன் நான். அப்படியிருக்க கல்யாணம் முடிந்ததும், எப்படி உங்க வீட்ல வந்து இருப்பேன், உங்க கம்பெனியை பார்ப்பேன்னு நினைக்கறிங்க.” என்று கேட்க, கைலாஷோ, “ஆதித்யா… யாரிடம் பேசறனு யோசித்து பேசு. உன்னை நடுத்தெருவுல விட கூப்பிடலை. மாளிகையில் நடுநாயகமா உட்கார்ந்து அழகு பார்க்க சுரேந்திரன் கூப்பிடறான்.” என்று அறிவுறுத்தினார்.

“நான் இப்பவே நடுநாயகமா எனக்கு ராஜாவா தான் வாழறேன். எனக்கு இவரோட பணமோ வசதியோ எதுவும் வேண்டாம்‌. பொண்டாட்டி மூலமாக வர்ற எந்த வரதட்சணை பணமும் எனக்கு பிடிக்காது.” என்று மொழிந்தான்.

சுரேந்திரனோ, என்ன திலோ… பொண்ணு பார்க்க வந்தப்பவே இதை முன்னரே சொல்லியிருக்கலாம்ல?” என்று தந்தை அதட்டலாய் கேட்க, “அப்பா.” என்று கையை பிசைந்து கவலையாக நின்றாள்.

“ஏன்… முன்னவே சொல்லிருந்தா வேற மாப்பிள்ளை தேடியிருப்பிங்க தானே?” என்று நகைத்தான். சுரேந்திரனுக்கும் கைலாஷிற்கும் எரிச்சல் உருவானது.

திலோத்தமாவிற்கு ஏனோ கணவன் பேச்சும் தந்தை பேச்சும் ஏதோ தவறாய் செல்ல “அப்பா… முடிந்ததை பேச வேண்டாம். அவர் எங்கயும் வரலை. இப்ப இங்கேயே இருப்பதில் எனக்கு எந்த குறையும் இல்லை. இந்த டாபிக்கை விடுங்க” என்று வெள்ளை கொடியை ஏற்றி வைத்தாள்.

சுரேந்திரனும் மகளுக்காக அமைதிக்காக்க, “சரிம்மா நாங்க கிளம்பறோம்” என்று புறப்பட, வேறு வழியின்றி “நாங்க கிளம்பறோம் மாப்பிள்ளை. எதுக்கும் யோசிங்க. எனக்கு பையன் இல்லை. எனக்கு மாப்பிள்ளை மட்டுமில்லாம மகனாகவும் இருப்பதும் நீங்க தான்” என்று எழுந்தார்.

கைலாஷோ, “எதுக்கும் யோசி.. கார் பங்களா வசதி கம்பெனி எல்லா நேரமும் வாசல்ல வந்து நிற்காது” என்று பேசிவிட்டு நண்பனோடு புறப்பட்டார்.

திலோத்தமாவோ தந்தையை வாசல் வரை வந்து வழியனுப்பினாள்‌. ஆதித்யா அருகே தான் இருந்தான். சுரேந்திரன் கார் புறப்படவும், திலோத்தமையை குண்டு கட்டாக தூக்கி, “திலோ.. கெஸ்டுக்கு காபி எல்லாம் கொடுத்து ஜமாய்ச்சிட்ட” என்று கதவை தாழிட்டு காதலீலையில் கரைப்புரள வைத்திடும் வேகத்தில் இருந்தான் ஆதித்யா.

இங்கு சுரேந்திரன் கைலாஷ் இருவரும் காரில் நிசப்தமாக வந்தனர்.

சுரேந்திரன் தான், “யார் இவன்? உன்‌ பொண்டாட்டி எங்க பிடிச்சா இவனை? என்ன திமிரு? என்ன எகத்தாளம்? சமைய கட்டு எந்தபக்கம் என்று கேட்டா கூட அந்த திசையை தெரியாம வளர்ந்த என்‌ பொண்ணை காபி போட வச்சிட்டான். பொண்ணு பார்க்க வந்தப்பவே, என்‌ மக அவன் பேச்சை கேட்டு என்னிடம் வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க மாட்டான் என்பதை சொல்லலை‌. அந்தளவு மயக்கி வச்சிட்டான்.” என்று காச்மூச்சென்று கத்தினார்.

“எனக்கும் அதே எண்ணம் தான் ஓடுது. வீடு, வசதி, கம்பெனி வருது எந்த மடையனாவது மாமானார் வீட்ல தங்க யோசிப்பானா? அந்த இடத்துல பாய் விரிச்சி தவமிருப்பான். இவன் என்ன இப்படியிருக்கான்?” என்று தன்‌பங்கிற்கு பொறுமினார்.

“வந்ததும் வாங்க எப்படியிருக்கிங்கன்னு கூட கேட்கலை. அந்தளவு திமிரா இருக்கான். இதுல ஒன்னை கவனிச்சியா? என்னை மாமான்னு இதுவரை கூப்பிடலை.” என்று கூறினார்.

அதன் பின்னரே கைலாஷ் கூட, “அட ஆமா. அவன் என்னை கைலாஷ் அப்பான்னு சொல்வான். அது பார்வதி எதிரே, மத்தபடி என் பொண்டாட்டியை அம்மான்னு கூப்பிடற மாதரி என்னை அப்பான்னு முறை வச்சி கூட பேச மாட்டான்.‌ தனியா சந்திக்க நேர்ந்தாலும் கைலாஷ் அப்பான்னும் சொல்லமாட்டான்.” என்றார்.

சுரேந்திரனோ “இவன் சரியில்லை, பார்வை, பேச்சு எல்லாமே தினுசா இருக்கு. இவன்‌ யார்னு நதி மூலம் ரிஷி மூலம் பாரு” என்றதும் கைலாஷோ மனைவியை நாடி கேட்டிட முடிவெடுத்தார்.

-தொடரும்.






6 thoughts on “கண்ணிலே மதுச்சாரலே-6”

  1. Kalidevi

    Aadhi crt ah than irukan neenga vasathiya iruntha apadiye irukanuma ponnu velaiye seiya kudatha ena unga ponna entha koraium illama thana pathukuran apram ena intha kailash aala tha ellam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!