Skip to content
Home » கண்ணிலே மதுச்சாரலே-7

கண்ணிலே மதுச்சாரலே-7

அத்தியாயம்-7

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   கைலாஷை அவர் வீட்டில் இறக்கிவிட்டு சுரேந்திரன் செல்லவும், மனைவி பார்வதியை தேடி கைலாஷ் வந்தார்.

பார்வதியிடம் ஆதித்யாவை பற்றி கேட்க நினைத்தார்.‌

  அவன் அன்பாலயம்’ ஆசிரமத்தில் தத்தெடுத்ததை அறிவார். அப்பா அம்மா பற்றி ஏதேனும் சொல்லியிருக்கின்றானா? என்று கேட்டிட வந்தார்.
 
   ஆதித்யாவுக்கு பிடிக்குமென்று ரவாலட்டு செய்ய ஆரம்பித்திருந்தார் பார்வதி.

  கைலாஷ் மனைவி அருகே வந்து, “இதெல்லாம் வேலைக்காரங்களிடம் செய்ய சொல்லிடலாமே நீயேன் செய்யற பாரு” என்று வந்தார்.

  ரவா லட்டை உருண்டை பிடித்து முந்திரியை அலங்காரமாக ஒன்றை வைத்து உருட்டிய பார்வதியோ, “யாரையும் நம்பி நம்ம வேலையை குறைச்சிக்க கூடாதுங்க. பிற்காலத்தில் வேலையே செய்யாம புதுசா செய்தா உடலுக்கு கஷ்டமாகிடும்” என்று கூறினார். அடிக்கடி கைலாஷை வறுத்தெடுத்தெடுக்கும் பட்சமாக மறைமுகமாக குத்தவே இப்பேச்சு.
 
  அதை அவரும் அறிந்தாலும் காரியம் ஆகவேண்டியே மனைவியிடம் “ஆதித்யா வீட்டுக்கு சுரேந்திரனோட போயிட்டு வந்தேன்.” என்றார்.

மகன் என்றதும் “ஆதித்யாவை பார்த்திங்களா? நல்லாயிருக்கானா” என்று ஆசையாக கேட்டார்.

   “ம்ம்ம் நல்லாயிருக்கான்” என்று மனைவி பக்கம் அமர, பார்வதி ரவாலட்டு செய்வதில் முனைப்பாக இருந்தார்.
  
  “ஆதித்யா நல்லா வளர்ந்து ராஜாவாட்டம் இருக்கான். நீ தத்தெடுக்கும் போது அவனுக்கு வயசென்ன?” என்று கேட்டதும், “பதிமூன்று பதினாலு இருக்கும். அப்பவுமே ராஜாவா தான் இருப்பான்.  சொல்லப்போனா அப்ப தமிழ் பேசுவதை விட இங்கிலிஷ்ல தான் பேசுவான்.” என்று முகமலர்ச்சியோடு கூறினார்.

  “அவனோட அம்மா அப்பா யாரு?” என்றதும் பார்வதி கணவரை ஏறிட்டு “அவன் அம்மா நான். அப்பா நீங்க” என்றார்.
  ‘இவயொருத்தி.’ என்று கைலாஷ் சலித்து கொள்ள, “அம்மாடி… நீ தான் அம்மா‌. நான் தான் அப்பா. நான் இப்ப கேட்கலை. முன்ன… தத்தெடுக்கும் முன்ன கேட்கறேன்.
  சில நேரம் நல்லா பேசறான். சில நேரம் மௌனமா இருக்கான். அதனால அவனை பத்தி தெரிய கேட்கறேன். நீ என்ன எகத்தாளமா பதில் சொல்லற. நான் இன்னமும் அதே கைலாஷ் இல்லை பார்வதி.” என்று பேசவும் பார்வதியோ கணவனை பார்த்து மெதுவாய் ரவாலட்டு உருட்டி ஒரு டிபன் பாக்ஸில் வைத்து மூடினார்.‌

  “அவன் அப்பா அம்மா ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. சொந்தம் பந்தம் எல்லாம் சொத்துயில்லைன்னு போயாச்சு. நல்ல வசதியான வீட்டு பிள்ளை.  அன்பாலயம் ஆசிரமத்துல தான் ஆதித்யா அப்பா பிறந்தநாள் கொண்டாடுவாராம்‌. அப்படி தான் சாந்தகுமார் பழக்கம். அதனால் அவரே ஆதித்யாவை அவரோட அழைச்சிட்டு வந்து கவனிச்சார். என்னயிருந்தாலும் ஆசிரமத்து குழந்தைகளோடு வளராம, ஒரு அப்பா அம்மாவோட அன்பு அரவணைப்புல ஆதித்யா வளர விரும்பி நான் தத்தெடுக்க கேட்டதும் ஆதித்யாவிடம் அபிப்ராயம் கேட்டு அனுப்பினார்.
 
   அவனை நான் தத்தெடுக்கலை. அவன் தான் என்னை அம்மாவா ஏற்றுக்கிட்டு வாழறான். இதெல்லாம் அவன் சின்ன வயசுல சொன்னது. அம்மா அப்பா பெயர் மறந்துடுச்சு.” என்று மட்டும் உரைத்தார்.

   கைலாஷிற்கு வசதியான பையன் அதனால் ஆடம்பரத்துல ஆச்சரியம் வரலை. அப்பா அம்மா ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. என்பதை மட்டும் உள்வாங்கினார்.

  அதையே நண்பன் சுரேந்திரனிடமும் அலைப்பேசி மூலமாக தெரிவித்தார். 
 
  “அன்னகாவடியா இருந்திருந்தா பணத்தை நாயா பேயா தேடி அலைவான். இவன் பிறப்புல பணக்காரன். அதான் பணத்தை வசதியை தேடி என்னிடம் கைகட்டணுமான்னு யோசிக்கறான்.
   ம்ம்ம்… இருக்கட்டும்.. என்னயிருந்தாலும் வாழ்க்கைக்கு வசதி தேவை என்பதை அவன் உணருவான். அப்ப வருவான்.” என்று அலட்சியமாய் பதில் தந்தார்.

      இப்படியாக சுரேந்திரன் நினைக்க ஆதித்யா அந்த எண்ணத்திற்கு நேர்மாறாக இருந்தான்.

   சுரேந்திரன் மகள் காபி போடுகின்றாளென்று காபி மேக்கரை அனுப்பியிருக்க, அதை பெட்டி கூட பிரிக்காமல் சுரேந்திரன் வீட்டுக்கே அனுப்பி வைத்தான்.

   திலோத்தமா முகம் வாட, “நான் என்ன அம்மில அரைக்க கஷ்டப்படுத்தறேன். காபி மேக்கர் எல்லாம் நமக்கு வேண்டாம். எனக்கு உன் கையால போட்டு கொடுக்கணும்.” என்று சமாதானம் செய்தான்.
 
  திலோத்தமாவோ, “என்னயிருந்தாலும் அப்பா அனுப்பியதை திருப்பி அனுப்பியிருக்க வேண்டாம்” என்று கூறினாள்.

  “இங்க பாரு திலோ, இப்ப காபி மேக்கர் அனுப்பின உங்கப்பா, அடுத்து நீ சமைக்க கஷ்டமாயிருக்குன்னு, ரைஸ் குக்கர், ஓவன், அதுயிதுன்னு அனுப்புவார். நாம திருப்பி வேண்டாம்னு சொல்ல யோசித்து விட்டுடுவோம்‌. அப்பறம் இதெல்லாம் வைக்க வீடு சின்னதா இருக்குன்னு ஒரு நாள் பெரிய வீடு பார்த்து பிரசண்ட் பண்ணுவார். அடுத்து வேலைக்காரி அனுப்புவார். மகளுக்கு பதில் உதவியாக இருக்கும்னு.
   இதெல்லாம் நான் வாங்கி அமைதியா இருந்தா கிட்டதட்ட வீட்டோட மாப்பிள்ளையா, உங்க வசதி வாய்ப்பை நேசிக்கறவனா என்னை நிறுத்திடும்.

இப்பவே மறுத்தா, உங்கப்பா அடுத்து  எதையும் வாங்கி இங்க அனுப்ப மாட்டார்‌” என்று கூறினான்.

     திலோத்தமாவிற்கு இந்தளவு விவரித்து மறுத்து பேசியவனிடம், வாதாட முடியுமா?!
   அதோடு இனிக்க பேசி மறுத்தாலும் ஆதித்யா பேச்சில் ஒர் தவிர்ப்பு இருப்பதும் பேச்சில் அழுத்தமும் வழிந்திருந்தது‌. அதில் என் பேச்சுக்கு மறுப்பு கூறாதேயென்ற உள்ளர்த்தமிருந்தது.

      ஆதித்யா அவளை அதற்கு மேல் யோசிக்க வைக்கவிடவில்லை.

  எப்பொழுதும் போல அவளை தன் எண்ணத்தின் பாதையில் செல்லும் வழியாக வழிநடத்தினான்.

   சாமி அருள் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டாராம். அது போல ஆதித்யா சும்மா இருந்தாலும் சுரேந்திரன் விடாமல் மகளுக்கு ஆதித்யா இல்லாத நேரம் டிரைஸிங் டேபிள் வித் அட்டாச் கப்போர்ட் கொண்டு வந்து இறக்கினார்.

   அன்று தந்தைக்கும் கணவருக்கும் இடையில் அள்ளாடியது திலோத்தமா மட்டுமே.

   ஆதித்யா வந்ததும் அதனை பார்த்து கோபப்பட, ”இல்லைங்க நான் இதெல்லாம் ஆசைப்படலை. அப்பா தான் கொண்டு வந்தார். நான் எடுத்துட்டு போக சொல்லியும் பிடிவாதமா வச்சிட்டார்.” என்று கையை பிசைந்தாள்.

   நிதானமாக போனை எடுத்து பேக்கிங் ஆட்களை வரவழைத்து கொண்டு வந்தது போல கிஃப்ட் செய்து சுரேந்திரன் வீட்டுக்கே அனுப்பப்பட்டது.

  அங்கிருந்து சுரேந்திரன் அழைத்து காரணம் கேட்க, திலோத்தமா போனை வாங்கி “நான் ஏற்கனவே வாங்கி வச்சியிருக்கற டிரஸிங் டேபிளிலேயே உங்க பொண்ணு முகம் தெரியுது அதுலயே அவ அழகா இருக்கா. அந்த அழகு என் கண்ணுல பளிச்சிடுது. இதுல நீங்க வேற எதுவும் வாங்கி தர தேவையில்லை‌. இது போல மறுபடியும் பண்ணாதிங்க” என்று கூறினான்.

  சுரேந்திரனோ ‘என்ன இவன் இந்தளவு கறாரா இருக்கான். இவன் பார்வை பேச்சு தினுசா இருக்குன்னு பார்த்தா. இவன் செயலுமே வித்தியாசமா படுதே?!’ என்று சிந்தித்தார்.

     திலோத்தமாவோ, நெஞ்சில் பயரேகை ஓடியது. முதலிலிருந்தே ஆதித்யா தெளிவாய் தன்னிடம் கூற, இம்முறை திருப்பி அனுப்பியதில் தந்தை வாடியிருப்பார். ஏதேனும் கேட்டு சண்டை வருமோயென்று  பயந்தாள். தந்தையிடம் கறாராய் பேசிய ஆதித்யாவோ திலோத்தமாவிடம், சாந்தமான முகத்தை காட்டினான்.

  ஏனோ சுரேந்திரனுக்கு ஆதித்யாவிடம் இதை பற்றி தனியாக பேச நினைத்தார்.

   முன்பு நண்பன் கைலாஷிடம் வீட்டோடு மாப்பிள்ளையாக ஆதித்யாவை கேட்டது. அவனிடம் கூறியதால் ஆதித்யாவிடம் அந்த பேச்சை எடுக்கவில்லை.
  கைலாஷின் பேச்சை ஆதித்யா செவி சாய்ப்பதில்லை என்று அறியவும், ஆதித்யாவிடம் தனியாக பேசி பார்க்க விரும்பினார்.

   இத்தனை சொத்துப்பத்து சேர்த்து எதையும் வாங்க மறுத்தால் எப்படி? தனக்கு ஒரு மகள் மட்டுமே. அனைத்தும் அவளுக்கு தானே?
 
    சொத்தை விடவும் முதலில் தன்‌மகள் தன்னோடு இருக்க ஆசைக்கொண்டார். அதுக்கே ஆதித்யா வீட்டோடு வராமல் தவிர்த்தால் எப்படி. இந்தமுறை சொத்தை விட, மகள் தன்‌ கண் முன் நடமாட ஆசைப்படுவதாக கூறி பார்த்து ஆதித்யாவிடம் பேச நினைத்தார்.

  அதனால் திங்கள் வருகைக்காக காத்திருந்தார். சனி ஞாயிறு அலுவலகம் விடுமுறை என்று மகளோடு மகாபலிபுரம் ரெஸார்ட் புக் செய்து சென்றதால், திங்கள் ஆதித்யாவின் வேலை செய்யும் அலுவலகத்தின் அருகே சந்திக்க நினைத்தார்.

  அது போலவே அவன் வருகையில் தடுத்து நிறுத்த, “உங்ககிட்ட பேசணும் மாப்பிள்ளை” என்றார்.
 
   அலுவலகம் முன் சுரேந்திரனை எதிர்பார்க்கவில்லை‌, கடிகாரத்தை பார்த்து, “ஆபிஸ் டைம்ல வந்துட்டிங்க.  ஒன்னு முன்னவே இங்க வர்றதா சொல்லிருக்கணும். இல்லை பிரேக் டைம்ல வந்திருக்கணும். இப்படி வந்தா எப்படி பேசறது. பதினொன்றுக்கு பிரேக் ஹவர் அப்ப வர்றேன். உங்களுக்கு வெயிட் பண்ண பிடிக்கலைன்னா வீட்டுக்கு போங்க. அங்க வெயிட் பண்ணுங்க” என்று பதிலை கூட நின்று கேளாது நடையை கட்டினான்.‌

  சுரேந்திரனுக்கு அப்பொழுதே ஏதோ தவறாய் தோன்றியது. ஆதித்யா லேசுப்பட்டவன் அல்ல என்று.
 
  அவன் சென்றப்பின் கைலாஷிற்கு அழைத்து விவரம் உரைக்க, “இப்ப எங்க இருக்க சுரேந்திரன்?” என்றார் அவர்.

  “வேறயெங்க உன் தத்து பையன் வேலை செய்யற ஆபிஸ் முன்ன, காரை நிறுத்திட்டு கார்ல உட்கார்ந்திருக்கேன்.” என்றார்.

  கைலாஷ் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு வந்தார்.‌ “ஆபிஸ்லயிருந்து நேரா வர்றேன். நீயேன்டா இங்க வெயிட் பண்ணற? பேசாம வீட்ல போய் பேசலாமே” என்று கூறவும் சுரேந்திரனோ “இல்லைடா… என் மக திலோத்தமா அப்பாவுக்கும் கணவனுக்கும் நடுவுல மாட்டிட்டு முழிப்பா அது பார்க்க கஷ்டமாயிருக்கு.
     ஆதித்யா மனசுல என்னவோ ஓடுது. நேர்ல கேட்டு அதை சரிபடுத்திடறேன். எனக்கு என் மக வாழ்க்கை முக்கியம்” என்று கூறினார்.

   கைலாஷோ தன் நண்பனை இந்தளவு பேசவிட்ட வளர்ப்பு மகனை கண்டு வியந்தார்.

  சொந்தபிள்ளையா பெத்திருந்தா சுரேந்திரனை நம்ம காலுக்கு கீழே நிற்க வச்சியிருக்கலாம். ம்ம்ம் நமக்கு குழந்தை பெத்தெடுக்கற கொடுப்பினை இல்லையே‌’ என்று பெறாத தத்து பையன் தன்னையும் எட்டி நிறுத்தி வைப்பது எதனால் என்றும், சுரேந்திரனிடம் என்ன பேச போகின்றான் என்று கையோடு கேட்டுக் கொள்ள நினைத்தார்.

    பதினொன்று மணியளவில் ஒரு செக்கியூரிட்டி வந்து கார் கதவை தட்ட, சுரேந்திரன் என்ன என்பதாய் கேட்க, “ஆதித்யா சார் கேண்டீன் வர சொன்னார்.” என்று கூறிவிட, அலுவலகத்தின் கீழே இருந்த கேண்டீனுக்கு இருவரும் சென்றனர்‌.

  “அட நீங்களும் வந்திருக்கிங்களா?” என்று ஆச்சரியப்பட்டவன் கைலாஷ் சுரேந்திரன் இருவரையும் முன்னிருந்த காலி இருக்கையில் அமர கூறினான். 
 
  ‘ஆபிஸ்ல வந்து பேசற அளவுக்கு என்ன மாமா அவசரம் என்று ஏதேனும் கேட்கின்றானா? ஏதோ இந்நிகழ்வை எதிர்பார்த்தேன்’ போல வரவேற்கின்றான். இது தான் சுரேந்திரன் மனதில் ஓடியது. அப்படியிருந்தும் எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினார்.

  “இருபது நிமிடம் என்னோட பிரேக் டைம். அதுக்குள்ள என்னிடம் பேச வந்ததை சொல்லுங்க. இல்லை ரொம்ப பெரிசா பேசப்படற தேவையிருந்தா வீட்ல திலோத்தமா கையால காபி குடிச்சு பேசலாம்‌” என்று சொன்னதும் அவன் பேச கொடுத்த நேரம் ‘இருபது நிமிடமா’ என்று கைலாஷ் வாயை பிளந்தான்.

   சுரேந்திரனோ, “நீங்க என் மகள் திலோத்தமாவை கல்யாணம் செய்து எனக்கு மாப்பிள்ளையானது ரொம்ப மகிழ்ச்சி. ஆனா வீட்டோட மாப்பிள்ளையா நான் பேசியதிலிருந்து நீங்க ஒட்டுதல் இல்லாம இருக்கிங்க. நான் என் மகளுக்கு அன்பா கொடுக்கற பொருட்கள் கூட, நீங்க திருப்பி அனுப்பினிங்க. அது வரதட்சணை இல்லை. ஆனா நீங்க தவறா எடுத்துக்கிட்டிங்களோன்னு கஷ்டமா இருக்கு.

என் சொத்தும் வசதியும் நீங்க கால் தூசா நினைக்கறது எனக்கு பெருமையா இருக்கு. ஆனா நான் உங்களை மட்டம் தட்டி உங்களை என்னோட வச்சிக்க நினைக்கலை. ஒரே பொண்ணு, இத்தனை சொத்தும் சேர்த்தது அவளுக்காக தான். ஆனா அவ வசதி குறைவா” என்றதும் ஆதித்யா புருவம் சுருங்க, “இல்லை… வசதில குறைச்சல் இல்லை. அவ நல்லா தான் வாழறா. நீங்க அந்தளவு பார்த்துக்கறிங்க. ஆனாலும் என்னோட நீங்க பேசறப்ப, பழகறப்ப ஏதோ தாமரை இலையில் ஒட்டாத தண்ணியா இருப்பதா தெரிந்தது. ஒரு வேளை வீட்டோட மாப்பிள்ளையா கேட்டதும் பொருட்களை உங்களை மீறி அனுப்பியதிலும் உங்களுக்கு கோபமாயிருந்தா மன்னிச்சிடுங்க.
  என் வாழ்க்கையே என் பொண்ணுக்காக தான். எனக்கு நீங்க மருமகனா இருப்பதை விட மகனா பார்க்க ஆசைப்படறேன். ஒருவேளை நான் நினைப்பது தப்பா கூட இருக்கலாம். எதுயென்றாலும் மன்னிப்பு கேட்டு நிற்கறேன்.” என்று கூறி தலைகவிழ்ந்து நின்றார்.

  “ஓ… அதுக்கு மன்னிப்பு கேட்டாச்சு… ம்ம்ம் ஓகே மன்னிச்சிடலாம். என் அப்பா அம்மாவை என்னிடமிருந்து பறித்து, என்னை அனாதையா மாற்றியதற்கு, எங்க வீட்டு சொத்தை பறிச்சு, எனக்கே நீ திருப்பி கொடுக்கறியே… இந்த பாவத்துக்கு நீ மன்னிப்பு கேட்டா என்னால எப்படி மன்னிப்பு கொடுக்க முடியும். இறந்த உயிர் திரும்ப வராது சுரேந்திரன்” என்று தெனாவட்டாய் உரைத்தான்.

  சுரேந்திரன் அதிர்ச்சியில் திகைத்து நிற்க, ஆதித்யாவோ “வினுசக்கரவர்த்தி பையன் ஆதித்யா சக்கரவர்த்தி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

-தொடரும்.

7 thoughts on “கண்ணிலே மதுச்சாரலே-7”

  1. Kalidevi

    Ada pavi avanga appa konnathu surendhiran thana itha eppadi aadhi kandu pidichan athan intha othukama ipo eppadi avanaye vanthu pesa vachan paru aadhi super aadhi unnaoda seyal la crt ah iruka nee

  2. Surendiran kum adi oda appa amma kum.yetho link irukum nu nenachathu correct than so indha aalu than avanga saavu ku karanam and ivan ippo iruku ah veedu la irundhu anubavaikira property ellamae adi oda thu ippo than avan yaru na ra identity la veli paduthi irukan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!