Skip to content
Home » கண்ணிலே மதுச்சாரலே-8

கண்ணிலே மதுச்சாரலே-8

அத்தியாயம்-8

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     சுரேந்திரன் முகமெங்கும் வேர்த்து வழிய, “என் மகளை பழிவாங்க கல்யாணம் செய்தியா?” என்று இந்நேரம் வரை பவ்யமாக பேசியவர், உறுமல் பேச்சை வீசினார்.

    சத்தமின்றி ஏளனமாய் நகைத்து, “பழிவாங்க கல்யாணம் செய்யணும்னு ஆசை தான். ஆனா நானா உன்னை தேடி வந்து பழிவாங்கலை. நீயா வந்த, என்‌ பொண்ணை கல்யாணம் செய்துக்கோன்னு நின்ற. நானா ஆடு தானா வருதேன்னு சம்மதிச்சேன். இப்ப புரியுதா? நான் உனக்கு மரியாதை தராததற்கு காரணம்.

   எங்கப்பாவிடம் தந்திரமா கையெழுத்து வாங்கி சொத்தை பிடுங்கின நாய் நீ.

நீ… எனக்கு வரதட்சணை தர்றியா? நீ உன் வீட்டோட என்னை தங்க வச்சி மாப்பிள்ளையா அழகு பார்க்கறியா? டேய்… அது என் வீடு. நாங்க இருந்த வீடு. உனக்கு பிச்சையா போட்டு பல வருஷம் ஆச்சு. நீ எனக்கு திரும்ப தந்தா அதை எப்படி நான் வாங்குவேன்.

  இதுவரை உனக்கு காரணம் தெரியாம தவிச்சிருப்ப. இப்ப காரணம் தெரியுதா? இனி என் வீட்டு பக்கம் வந்துடாத. அப்படி வந்த, உன் பொண்ணும் கிடைக்க மாட்டா.” என்று இத்தனை நாள் பேசாததற்கு சேர்த்து பேசி “வினுசக்கரவர்த்தி பையன் ஆதித்யா சக்கரவர்த்தி உனக்கு பேச கொடுத்த நேரம் இருபது நிமிஷம் அது முடிந்தது. இப்ப கிளம்பு.” என்று தன் போனை எடுத்து பேக்கெட்டில் வைத்து அலுவலகத்தில் வேலை செய்ய புறப்பட்டான்.

   சுரேந்திரனுக்கு அவ்விடம் விட்டு அசைய மறுத்தது கால்கள். கைலாஷ் இழுத்து சென்றார்.

   இருவரும் காரில் அமரவும், கைலாஷ் மெதுவாக, “என்னடா பேசறான் அவன்” என்று கேட்டார்.

  இனியும் மறைத்து என்ன பிரயோஜனம் “அப்படி என்ன செய்து முன்னேறின? அவன் என்னன்னவோ சொல்லறான்” என்று கேட்டதும், “ஏன்டா விளக்கமா தானே பேசினான். அவங்க அப்பன் சொத்தை ஆட்டைய போட்டதா. பல வருஷம் முன்ன சக்கரவர்த்தி இன்டஸ்டீரியல்ல வினுசக்ரவர்த்திக்கு கீழே சம்பளத்துக்கு வேலை பார்த்தேன்.
  அவன் காலேஜ் நண்பன் என்று எனக்கு வேலை போட்டு தந்தான். அவன் வாழுற வாழ்க்கையில் பிரமிப்பா இருந்தேன்‌. வினுசக்கரவர்த்தியோட இன்டஸ்ட்ரி எல்லாம் அவனோட சொந்த உழைப்பு. அதனால் அதை அவன் என்‌ பெயர்ல மாற்றியதா பத்திரம் பதிவு செய்து அவசரமா கிளம்பற அன்னைக்கு எல்லாம் கையெழுத்து வாங்கினேன். அவனும் பத்திரத்தை பார்க்காம கையெழுத்து போட்டான்.
  
  என் நேரம் சொத்து எனக்கு வந்துச்சு. அவன் நேரம் சொத்து போனதும் இல்லாம அதிர்ச்சியில் காரை எங்கயோ மோதியிருக்கான் ஸ்பாட் அவுட். பையனும் ஏதோ சொந்தக்காரங்க பார்த்துப்பாங்கன்னு நினைச்சிருந்தேன். இப்ப தான் தெரியுது ஆசிரமத்துல வளர்ந்து உன் பொண்டாட்டி மூலமாக தத்தெடுக்கப்பட்டு, உனக்கு பையனா வந்து, இப்ப என் மகளை கல்யாணம் பண்ணி நிற்கறான்.

  இவனுக்கு என்னை அடையாளம் தெரிந்து தான் என் மகளை கல்யாணம் செய்திருக்கான். என் மகளை கொடுமைப்படுத்தறானோனு சந்தேகமா இருக்கு. முதல்ல என் மகளை பார்த்து என் வீட்டுக்கு அழைச்சிக்கணும்” என்று காரை அவசரகதியில் இயக்கினார்.

   அவசரம் அவசரமாக ஓட்டவும் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. சிக்னல் போடவும், எதிரேயிருந்த காரில் இடித்து நின்றது.

  “சுரேந்திரன் மெதுவா.. மெதுவா. நீ இறங்கு நான் கார் ஓட்டறேன்” என்று கூற, தன் பள்ளி நண்பனை காரை இயக்க விட்டு மாறி அமர்ந்தார்.

  “என்… என்.. என்‌ பொண்ணை.. என் பொண்ணு வாழ்க்கை போச்சு. இனி அவன் வீட்ல இருந்தா ஏதாவது செய்வான்.
   இனி அவன் கூட என்‌ மக இருக்கக்கூடாது.” என்று வழிநெடுக புலம்பி வந்தார்.

   மகள் இருந்த வீட்டுக்கு வரும் போதே படபடப்பு கூடியது. கேட்டில் கைவைக்க, கைகள் நடுங்கியது.

   “திலோத்தமா… நீ கிளம்பு நம்ம வீட்டுக்கு கிளம்பு. இந்த வீடு வேண்டாம்‌.” என்று இழுக்க, “என்னப்பா ஆச்சு? ஏன் பதட்டம்? ஏன் இழுக்கறிங்க” என்று கேட்க காரணம் உரைத்திடாமல் மகள் கையை பற்றி, இழுத்து காரில் தள்ளினார்.

  “அப்பா என்னாச்சு?” என்று கேட்க, “இனி அவன் உனக்கு வேண்டாம். அவன் வேண்டாம்” என்று கூற, கைலாஷோ காரை சுரேந்திரன் வீட்டுக்கு செல்லும் வழியில் சுரேந்திரன் நெஞ்சை பிடித்து சுணங்கினார்.

   “அப்பா… என்னாச்சு… மாமா அப்பாவை பாருங்க. அப்பாவுக்கு ஏதோ ஆச்சு.” என்று கூற, சுரேந்திரன் நெஞ்சு வலியில் துடிக்க, “ஹார்ட் அட்டாக்னு நினைக்கறேன். ஹாஸ்பிடலுக்கு வண்டியை விடறேன்” என்று அருகே மருத்துவமனையை தேடி சேர்த்தார்.

   திலோத்தமா என்ன ஏதென்று கேட்க கைலாஷோ என்னவென்று உரைப்பார்.
   “உங்கப்பா கண் முழிக்கவும் அவனிடம் கேட்டுப் பாரும்மா. எனக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு சரியா தெரியலை. உன் புருஷன் ஆதித்யாவை தான் கடைசியா சந்திச்சான்” என்று தலைபாரத்தோடு மருத்துவமனையில் நண்பனுக்கு ஆதரவாய் இருந்தான் கைலாஷ்.

   திலோத்தமாவிற்கு மனதில் லேசான பயம் துளிர்த்தது. தந்தை வாங்கி அனுப்பிய பொருட்களை திருப்பி தந்திடவும் தந்தைக்கும் கணவருக்கும் வாக்குவாதம் வரவும் கணவர் ஆதித்யாவால் தந்தைக்கு இந்நிலையோ? என்று கணக்கிட்டாள்.

  இத்தனை வருடம் தன்னை உயிராய் மதித்து பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தையா, அல்லது தாலி கட்டி ஒரிரு மாதம் கடந்து அன்பால் கட்டி போட்ட கணவனா, யார் பக்கம் பரிந்து பேச? இதில் தந்தை உடல் நலம் வேறு கவலைக்கிடமாக இருக்க, ஆறுதலாய் தோள்சாய ஏங்கியவள் பார்வதிக்கு அழைத்து விஷயத்தை கூறினாள்.

  பார்வதியோ, பதறியடித்து வந்து மருமகளின் அழுகைக்கு தோள் தந்து நின்றார்.

  “என்னாச்சுனு தெரியலை அத்தை. அவருக்கும் அப்பாவுக்கும் பிரச்சனை.” என்று ஆதித்யா பெண் பார்க்க வந்தப் பொழுது ஆதித்யா வீட்டோடு மாப்பிள்ளையாக வரமாட்டேன் என்று தெளிவாக உரைத்ததும், தந்தை தற்போது பொருட்களை வீட்டிற்கு அனுப்பி அதை ஆதித்யா திருப்பி அனுப்பியதையும் கூறினாள் திலோத்தமா.

  பார்வதியோ, “யார் மனதையும் வதைக்க மாட்டானே ஆதித்யா.” என்று கூற, “இல்லை அத்தை… அவருக்கு பிடிக்கலை அது முகத்துல நல்லா தெரிந்தது.
  ஆனா அதுக்காக ஏன் இப்படி? இப்ப அப்பாவுக்கு தானே உடல்நிலை சரியில்லாம போச்சு? மாமா அவரெங்க?” என்று கேட்டாள்.

  அவன் ஆபிஸ்ல தான் இருப்பான்.” என்று கூற, திலோத்தமா உடனடியாக ஆதித்யாவிற்கு அலைப்பேசி மூலமாக அழைத்தாள்.

  ஆதித்யா வேண்டுமென்றே கத்தரித்தான்.

திலோத்தமா தந்தை உடல்நிலையை தெரிவிக்க ஆறேழு முறை அழைத்து பார்க்க துண்டித்தது மட்டுமின்றி போனை முழுதாக செயலிழுக்கும் வைக்கும் பொருட்டு அணைத்து வைத்தான்.

  திலோத்தமாவுக்கு அடுத்து பார்வதி அழைக்க, ஆதித்யா போன் சுவிட்ச்ஆப் என்றதும் ஆதித்யாவோடு பிறகு பேசிப்போமென தந்தை உடல்நிலை தேற இறைவனை துதித்தாள்‌.

   கடவுள் இன்னமும் சுரேந்திரனுக்கு அருள்பாலிக்கும் விதமாக மாலை நான்கு மணிக்கு, உயிருக்கு ஆபத்தின்றி அபாய கட்டத்தை தாண்ட வைத்தார்.

   திலோத்தமா கண்ணீரை துடைத்து தந்தை இமை திறக்க காத்திருந்தாள்‌. ஐந்து மணிக்கு திலோத்தமா அலைப்பேசியில் ஆதித்யா அழைப்பு வந்தது.

  இதற்கு முன் இத்தனை முறை இவள் அழைத்துப் போது சுவிட்ச்ஆப் செய்திருந்தான்.
  இப்பொழுது தான் எடுக்க வேண்டுமா என்று கோபமாய் எடுக்க மறுத்தாள்.
  மீண்டும் அழைக்கவும், துண்டித்தாள். அதன் பின் மூன்றாம் முறை அழைக்கவும் மனம் தாளாது எடுத்துவிட்டு மௌனம் சாதித்தாள்.

  “எங்கயிருக்க?” என்று ஒற்றை வினா தொடுக்க, விசும்பல் ஒலி கேட்டது.

  “ஆதித்யாவா?” என்று பார்வதி குரல் கேட்க, “ஆமாங்க அத்தை” என்ற திலோத்தமா குரல் கேட்டது.

  “நீ பேசும்மா நான் அவரிடம் இருக்கேன்” என்று ஊக்கவும், அதே அமைதி, அதற்குள் தன் அன்னை பார்வதி, திலோத்தமாவின் அருகேயிருந்து தள்ளி சென்றதையும் யூகித்தான்.‌

   “திலோ?” என்று கூப்பிட, “என்ன பேசப் போறிங்க? அப்பாவுக்கு இப்ப ஹார்ட் அட்டாக் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம். இன்னமும் கண் முழிக்கலை. சின்னதா எனக்கு பிரசண்ட் செய்ததுக்கு, என்ன பேசி அவர் மனசை காயப்படுத்தினிங்க? மாமா எது கேட்டாலும் சொல்ல மாட்டேங்கறார்” என்று விசும்பினாள்.

  ஆதித்யாவோ இன்னமும் இவளுக்கு விஷயம் தெரியாதென்றும், தன் அன்னை கூடயிருக்கின்றார் என்ற தெம்பும் வந்தவனாக, “உனக்கு என்னோட வாழணும்னு ஆசையிருந்தா… இந்த நிமிஷம் உங்கப்பாவை விட்டுட்டு அம்மாவை கூட்டிட்டு‌ நம்ம வீட்டுக்கு வா. இல்லை… இனி எப்பவும் வராத.

   இப்ப புரியும்னு நினைக்கறேன். விஷயம் சின்னதா பெரிசா என்று. நைட் பத்து மணிவரை உனக்கு டைம் திலோ. நல்லா கேட்டுக்கோ… நீ இன்னிக்கு வரலைன்னா என்னைக்கும் வரமுடியாது” என்று கண்டிப்பாய் பேசி அலைப்பேசியை அணைத்தான்.

  திலோத்தமாவிற்கு பகீரென்ற உணர்வு. இதென்ன தந்தை சீராக மூச்சு கூட விடவில்லை. இப்படி பேசுகின்றார்.
  சாதாரண வீட்டு பொருட்களை அனுப்பி வைத்ததற்கு சண்டை நீளுமா? அவரை பிறகு கவனிப்போம். முதலில் தந்தையை காண்போம் என்று புறம் தள்ளினாள்.
 
   கைலாஷ் மாமாவிடம் ‘என்னதான் பிரச்சனை?’ என்று கேட்டு விட்டாள். “நீ உங்கப்பாவிடமே கேளும்மா. எனக்குமே சரியா புரியலை‌” என்று நழுவினார்.

  மனதிற்குள் ‘ம்ம்ம் காலேஜ் நண்பனுக்கு துரோகம் செய்திருக்கான் சுரேந்திரன். ஏதோ ஆதித்யா அப்பா அம்மா இறப்புக்கு காரணமா இருந்திருக்கான். எப்படி தான் அவன் பொண்ணையே கல்யாணம் செய்திருக்கானோ. தெரிந்தே கல்யாணம் செய்திருக்கான் இனி என்ன பண்ணுவானோ?’ என்று பயந்தாலும் தன் பள்ளி நண்பனை விட்டு தரவும் முடியாதே.

  ஒரு விதத்தில் கைலாஷும் மனைவி பார்வதியை தள்ளி வைத்தவன் என்பதால், நண்பன் சுரேந்திரனின் ஆதித்யாவின் தந்தைக்கு செய்த துரோக செய்கை எல்லாம் பெரிய விஷயமேயில்லை என்ற மனநிலையில் இருந்தார். அவருக்கும் துரோகங்கள் செய்து பழகியதாக இருக்கலாம்.

     ஆதித்யா வாசலையும் போனையும் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாய் சினம் துளிர்த்தது.

   திலோத்தமா தந்தையின் உடல்நிலை சரியாக காத்திருந்தாள். அவளருகே பார்வதி ஆதரவாய் இருந்தார்.

      பார்வதியுமே மகனுக்கும் சம்பந்திக்கும் என்ன பிரச்சனையோ? வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க கேட்க, அது பிடிக்காமல் வீட்டுக்கு பொருட்களை தந்ததில் வெறுப்பு உண்டாகி, இன்று இருவரும் முட்டிக்கொள்ள, மருத்துவமனையில் சம்பந்தி அனுமதிக்கப் பட்டிருக்கின்றாரே? மருமகள் வேறு முகம் வாடி சோர்ந்துகிடக்க, அருகே இருந்தார்.

   ஆதித்யாவுக்கு அழைத்து பேசி வினாத்தொடுப்பதை மட்டும் தவிர்த்தார். பார்வதியை பொறுத்தவரை ஆதித்யா மிக நல்லவன் பொறுமைசாலி. அவனாக இப்படி நடக்கின்றான் என்றால், தவறு சம்பந்தி மீது இருக்குமென்று யூகித்தார்.

  ஆனால் தற்போது உடல்நிலை சரியில்லாத இதய நோயாளியாக படுக்கையில் இருக்க யாரை கேள்வி கேட்பது?

   மருமகளோடு ஆதரவாய் நிற்க மட்டும் முடிந்தது. ஆதித்யாவும் பார்வதிக்கு அழைக்கவில்லை.
   பார்வதியும் கண் திறந்து சுரேந்திரன் பேசவும் பார்த்து கொள்ள நினைத்தார். தான் இங்கு இருப்பது மகன் அறிவான்.

  ஆனால் இங்கு ஆதித்யாவின் உள்ளமோ, நேரங்கள் நகர, திலோ மீதான கோபங்கள் இமயமலை அளவு உயர்ந்தது.

-தொடரும்.
  


7 thoughts on “கண்ணிலே மதுச்சாரலே-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!