Skip to content
Home » கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-11

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-11

அத்தியாயம்—11
டாக்டரை பார்க்க காத்திருந்தாள் சுஜா. ஸ்ரீதர் டாக்டரை பார்த்துவிட்டுப் போகிறான் என்றால்
அவன் மனசும் பாரமாக இருக்கிறது என்று தானே அர்த்தம்.! அவள் பேர் சொல்லிக் கூப்பிட்ட
நர்ஸ், அவளை உள்ளே அனுமதித்தாள். யோசனையுடன் உள்ளே சென்றாள் சுஜா.
“வாங்க சுஜா……உக்காருங்க.” என்று டாக்டர் சொன்னதும் சுஜா தெம்புடன் அமர்ந்தாள். மிக
இயல்பாக நம்பிக்கை ஊட்டும் புன்னகையுடன் நடுத்தர வயதின் முதிர்வு தெரிய
அமர்ந்திருந்தார் டாக்டர் நந்தகோபால்.
“அப்புறம் சொல்லுங்க சுஜா. யூ லுக் பெயில் அண்ட் வொரீட். ஸ்பீக் அவுட்.”
“சுஜாவிற்கு கண்ணீர் வந்தது. அடக்கிக் கொண்டாள். பிறகு கடகடவென்று தன் துயரப்
பின்னணி சொன்னாள். தற்போது தன்னை வருத்தும் பிரச்சனை பற்றியும் சொன்னாள்.
டாக்டர் மென்மையாக சிரித்தார். கண்களால் கனிவு காட்டி பேசினார்.
“சுஜா….நீங்க யாருக்காகவும் எந்த காம்பிரமைசும் பண்ண வேண்டாம். உங்களுக்கு நீங்க
உண்மையா இருங்க. இது உங்க வாழ்க்கை. அம்மா தங்கை….குழந்தை என்று அவர்கள்
விருப்பத்திற்காக, உங்களுக்கு பிடிக்காத முடிவை எடுக்க வேண்டாம்.”
சுஜா ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“எல்லோரையும் டிசபாயின்ட் பண்ணரேனேன்னு குற்ற உணர்வா இருந்தது டாக்டர். இப்ப
நிம்மதியா பீல் பண்ணரேன். ஆனா சில சமயம் மனசு வெறுமையா இருக்கு. எனக்கு கிடைச்ச
நட்பு இனி தொடருமா என்ற ஏக்கம் இருக்கு. அதான் உங்க கிட்டே வந்தேன்.”
“கணவன் மனைவி உறவை தவிர எல்லா உறவுகளிலும் சூழ்நிலை சந்தரப்பத்திற்கு ஏற்ப ஒரு
கேப்….பிரிவுன்னு சொல்லலாம், வரத்தான் செய்யும். கல்யாணமாகி போய் விடுகிற ஒரு
மகள்….வெளியூரில் மாற்றலாகி போய்விடுகிற நெருங்கிய சொந்தங்கள்….இதெல்லாம் முதலில்
ஏத்துக்க முடியாம மனுஷங்க தவிப்பாங்க. நட்பும் அப்படித்தான். பகலை மூடிவிட்டுப் போகிற
சூரியன் இதுவரை இருந்ததே என்று வானம் ஆறுதல் அடைந்து இரவை
ஏத்துக்கறதில்லையா.? அது மாதிரி தான் மனித வாழ்க்கையின் உறவுப் பின்னணியும். ஜஸ்ட்
டேக் இட், இன் இட்ஸ் ஸ்டிரைட். புதிய நட்பு வரலாம். ஆம் ஐ ரைட் சுஜா.?”
மனசு தெளிந்து போயிற்று. பள்ளியில் ரேணு அவளுடைய இணைபிரியா தோழியாக
இருந்தாள். அவள் இல்லாவிட்டால் இவள் இல்லை என்ற நிலை. இப்போ ரேணு நியாபகம்
எப்பொழுதாவது தான் வருகிறது. நட்பு என்பது கடைசிவரை தொடரும் என்பதற்கு எந்த

Thank you for reading this post, don't forget to subscribe!

உத்திரவாதமும் இல்லை. எதற்காக குழம்பினோம் முட்டாள்தனமாக என்று தோன்றியது.
வசந்தம் வரும் போகும். நட்பும் வரும் போகும். மனசுக்குள் தென்றல் வீசியது.
“தேங்க்ஸ் டாக்டர்.”
“ஒரு விசித்திரம் பார்த்தீங்களா சுஜா. தன் காதலி தன்னை நம்ப மறுக்கிறாள், கடைசிவரை
வைத்து காப்பாற்ற மாட்டேன் என்று பயப்படுகிறாள், அவளுக்கு புரிய வைக்க நான் என்ன
செய்ய வேண்டும் என்று ஒரு வாலிபர் கேட்டு விட்டுப் போகிறார். புவர் சேப். உன் நிஜ
அன்பைக் காதலி புரிந்து கொள்ளவில்லை என்றால், நீ ஏன் அவளைக் காதலிக்கணும்.? யூ
டிசர்வ ஏ பெட்டர் லவர் என்று அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டேன். சரிதானே.?” என்று
சொல்லிவிடட்டு ஹா ஹா என்று சிரித்தார் நந்தகோபால். அந்த வாலிபர் ஸ்ரீதராகத் தான்
இருக்க வேண்டும் என்று சுஜா புரிந்து கொண்டாள். ஸ்ரீதரின் நேசிப்பின் ஆழம் முதல் முதலாக
அவள் நெஞ்சை தொட்டது. அவள் மனசுள் ஒரு புதிய ஒளி புகுந்தது போல் இருந்தது.
“நீங்க சொல்வது நிஜம் தான் டாக்டர். தேங்க்ஸ்.” என்று சொல்லி விடை பெற்றாள் சுஜா. ஒரு
புதியவளாக தன்னை உணர்ந்தாள். ஸ்ரீதர் எவ்வளவு ஆழமாக தனனி நேசித்திருந்தால், இப்படி
ஒரு டாக்டரிடம் வந்து. காதலி மனசை மாற்றி நம்ப வைப்பது எபபடி என்று கேட்டிருப்பான்.?
திடீரென தன்னுள் சிறைபட்டிருந்த காதல் உணர்வுகள், நீரோடை போல் சுழித்துக் கொண்டு
ததும்புவதை உணர்ந்தாள் சுஜா. பயம் என்கிற கரிய பூதம் அற்ப ஆயுளுடன் உயிர் விட்ட
அந்த தருணம் அவள் ஸ்ரீதரின் காதலை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவத்தை அடைந்தாள்.
அந்திமழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…. என்று அவள் மனம்
அறிந்தது போல் காரின் ஸ்டிரியோ பாடியது. அந்த பாட்டாய் ஆனந்தமாக ரசித்தாள். நெஞ்சு
நிறைய புதிய புதிய வானவில்கள் தோன்றி மறைந்தது. காரை ஷெட்டில் நிறுத்தி விட்டு
ஸ்ரீதருக்கு ஃபோன் செய்ய செல்லை எடுத்தாள். தன் மன மாற்றத்தை இப்பவே சொல்ல
வேண்டும் போல் அவளுக்கு இருந்தது. அந்த நேரம் ஆயா ஓடி வந்தாள்.
“அம்மா…… ஸ்ரீதரின் அம்மா அப்பா வந்து உங்களுக்காக காத்திட்டு இருக்காங்க. தம்பிக்கு
கல்யாணம் முடிவாயிடுச்சாம். கல்யாண பத்திரிகை கொடுக்க வந்திருக்காங்க.” என்றாள்.
கல்யாணத்தை முடிவு பண்ணிக் கொண்டு தான் அவன் டாக்டரை பார்க்க வந்தானா.? “என்ன
சொல்றீங்க ஆயா.?”
“ஆமாம் மா. சீக்கிரம் வாங்க.”
சுஜா பெரிதாக திடுக்கிட்டாள். அப்ப டாக்டர் சொன்னது யாரோ பற்றிய கதை தானா.? அவள்
தான் தப்பாக புரிந்து கொண்டுவிட்டாளா.? கையில் கத்தையாக எதையோ
வைத்திருந்தாரே?….கல்யாண பத்திரிகை கொடுகத் தான் டாக்டரிடம் வந்தாரா.? அப்ப
கௌண்டரில் பணம் கட்டியது……
“சுஜா….” ஸ்ரீதரின் அம்மா பொறுமையிழந்து கூப்பிடுவது காதில் விழுந்தது. மனசை
திடப்படுத்திக் கொண்டு வந்தாள்.
“சுஜா…..வாம்மா. ஒரு நல்ல செய்தி. ஸ்ரீதர் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான். வர்ற
வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு முகூர்த்தம். மணப் பெண் பேர் ஊர்மிளா. முந்தின
நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கே வந்துவிடு. என்ன..” என்றாள அம்மாள் உற்சாகத்துடன்.
நடுங்கும் கரங்களால் பத்திரிகையை வாங்கிக் கொண்டாள் சுஜா.

“வறோம் மா. இன்னும் நிறைய வீட்டுக்கு பத்திரிகை கொடுக்கணும்.” அவர்கள் போனதும்
சுஜா சொன்னாள்.
“அவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்”.
“இருக்காதா பின்னே.? ஒரே மகன் முப்பத்திரெண்டு வயசிலாவது கல்யாணத்துக்கு
சம்மதித்தாரே.” என்று அங்கலாய்த்தாள் ஆயா.
“அம்மா……பாட்டி தாத்தா எனக்கு சாக்லேட்ஸ், கல்யாணத்துக்கு ஊடுத்திக் கொள்ள பட்டுப்
பாவாடை சட்டை எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்காங்க. பாரும்மா. மேரூன் கலர்.”
ஆர்த்தி பாவாடையை எடுகத்துக் காட்டினாள்.
“நல்லாயிருக்கு ஆர்த்தி……” என்று குழந்தையை தட்டிக் கொடுத்துவிட்டு
தன் அறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் மட
மடவென்று சத்தம் இல்லாமல் இறங்கியது.

திருமண மண்டபம் கலகலவென்று இருந்தது. ஸ்ரீதர் பட்டு வேட்டியும், அழகான நீல நிற
ஷர்ட்டும் அணிந்திருந்தான். அவன் எழில் தோற்றம் நிறைவை தர, எல்லோரும் மேடையில்
அமர்ந்திருக்கும் அவனையே பார்த்தார்கள். மணமகள் ஊர்மிளா நாணமும் மெல்லிய
புன்னகையுமாக, மயில் அசைவுடன் மணமேடையை நெருங்கினாள். ஸ்ரீதரை பார்த்து முத்துப்
பற்கள் தெரிய சிரித்தாள். தேவர்கள் பூமாரி பொழியாத குறையாக அங்கே திருமண சடங்குகள்
விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
காலை எட்டு மணி ஆகியிருந்தது. விருந்தினர் பலரும் களை சிற்றுண்டிக்காக சாப்பாட்டு
கூடத்திற்கு அழைத்து செல்லப் பட்டுக் கொண்டிருந்தனர். அங்கே பல அயிட்டங்கள்
பரிமாறப்பட்டு, வந்தவர்கள் நாவும் வயிறும் நிறைந்து இருக்க, அவர்கள் மனசார வாழ்த்து
சொல்ல காத்திருந்தார்கள். என்ன ஒரு சாப்பாடு என்று சிலாகித்தனர்.
ஆர்த்தி மேரூன் நிற பத்துப் பாவாடையும் மஞ்சள் நிற பட்டுச் சட்டையுமாக ஸ்ரீதர்
கைபிடித்துக் கொண்டு மகிழ்ந்தாள்.
இங்கே….
சுஜா பொலிவிழந்து, உடந்த சிலை போல் கவனிப்பாரற்ற ஏக்கத்துடன் விசும்பிக்
கொண்டிருந்தாள். கண்ணீர் முட்டி முட்டி இறங்கிக் கொண்டிருந்தது.
“அம்மா….நான் கல்யாணத்துக்கு போறேன். நீ காலையில் வந்துடுவே தானே.? “ என்று
ஆர்த்தி சொல்லிவிட்டு, ஒரு சின்ன சூட்கேசுடன் முந்தின நாள் மாலையே ஸ்ரீதர் அனுப்பிய
காரில் போய்விட்டாள். ஆயா குளிப்பணியாரம் பண்ணிக் கொண்டு வந்தாள்.
“இது ஒண்ணு தான் குறைச்சல்….” தட்டை அவள் தட்டி விட குழிபணியாரம் சிதறியது. ஆயா
கடுமையான குரலில் உரிமையுடன் கூறினாள்.
“என்னம்மா இது.? உங்களுக்கே நல்லாயிருக்கா? அந்தத் தம்பி எத்தனை முறை வந்து
கெஞ்சுச்சு? அதெல்லாம் ஒத்து வராதுன்னு விரட்டி அடிச்சிட்டு, இன்னிக்கு அதுக்கு
கல்யாணம்ன்னு துடிச்சிப் போய் அழறீங்க. பொண்ணுகளுக்கு கொஞ்சமாவது தைரியம்
இருக்கணும். யார் என்ன சொன்ன என்ன.? இது உங்க வாழ்க்கை. எது சரீன்னு படுதோ

செய்ய வேண்டியது தானே.? இப்ப கிடந்து அழுது என்ன புண்ணியம்.? கண் கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரம் பண்ண முடியுமா.? எழுந்து கல்யாணத்துக்கு போய் தம்பியை ஆசீர்வாதம்
பண்ணிட்டு வாங்க.”
சுஜா மவுனமாக இருந்தாள். ஆயா சொல்வது நிஜம் தானே.? கடைசியில் ஸ்ரீதர்
கல்யாணதுக்கு ஒத்துக் கொண்டுவிட்டான். அம்மா அப்பா ஆசையை பூர்த்தி செய்ய
வேண்டியது அவன் கடமை தானே.?
இனி ஸ்ரீதர் யாருக்கோ சொந்தம். அவள் ஆவாணி நினைப்பது கூட தவறு. இது ஜீரணிக்க
முடியாத கஷ்டமாக இருந்தது. ஆனால் அது அவளே ஏற்படுத்திக் கொண்ட கஷ்டம் தானே.?
அமாவாசையாக அவர்கள் சந்திப்பு தொடங்கியது. மெள்ள மெள்ள பிறைச் சந்திரனாக
வளர்ந்தது. முழு நிலவு ஆவதற்குள் மீண்டும் அமாவாசை ஆகிவிட்டதே!
பூர்த்தியாகாத வட்டம் போல….கோடுகள் ஆகவே நின்றுவிட்ட தண்டவாளம் போல்….கை
நழுவிப் போன பிறகு அதன் தாக்கமும் வலியும் புரிகிறது. இந்த வலியோடு தான் அவள் வாழ
வேண்டுமா.? திடீரென டாக்டர் சொன்னது அவளுக்கு நியாபகம் வந்தது….
“உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்யுங்க.” அந்த வரி அவளை ஆட்டி வைத்தது.
என்ன ஒரு வரி செய்தி அது.!
எஸ்……நான் ஸ்ரீதரை நேசிக்கிறேன். இப்போ எனக்கு அவர் வேணும். இந்த கல்யாணத்தை
நிறுத்தப் போறேன். ஊர்மிளா பிளீஸ் என் ஸ்ரீதரை எனக்கு விட்டுக் கொடுத்துவிடு. உனக்கு
வேறு நல்ல வரன் அமையும். நான் தப்பு பண்ணிட்டேன். எனக்கு ஒரு சான்ஸ் கொடு. ஸ்ரீதர்
என்னைத் தான் நேசிக்கிறார். புரிஞ்சுக்க….” போய் கெஞ்ச வேண்டும் என்ற ஆவேசம்
அவளுள் பொங்கியது. அடங்காத காற்றாட்டு வெள்ளம் போல் அவள் மனம் குதித்து
கொண்டிருந்தது.
“ஆயா….நான் கல்யாணத்தை நிறுத்தப் போறேன்.” என்று சொல்லி எழுந்து கொண்டாள்.
ஆயா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“சுஜாம்மா….பையிதியக்கார வேலையெல்லாம் செய்யக் கூடாது.”
“இல்லே ஆயா. இன்னும் ஒரு மணி நேரமிருக்கு. ஸ்ரீதர் இல்லாமல் என்னால் வாழ முடியாது.
நான் புரிஞ்சுக்கிட்டேன்.” ஆயா திடுக்கிட்டாள்.
பீரோவில் கிடைத்த ஒரு புடவையை சுற்றிக் கொண்டு….லேசாக தலையை வாரி பின்னிக்
கொண்டு…..கிளம்பிவிட்டாள் சுஜா. அவள் போனதும் ஃபோன் வந்தது. ஆர்த்தி தான்.
“ஆயாம்மா அம்மா என்ன பண்ணிட்டு இருக்காங்க.? கல்யாணத்துக்கு வரலையா.? அவங்க
கிட்டே பேசணும்.” என்றாள்.
“ஆர்த்திம்மா. அம்மா கல்யாணத்தை நிறுத்தப் போறேன்னு சொல்லிட்டு கிளம்பி
போயிட்டாங்க. பயமா இருக்கும்மா.”
“அப்படியா….கவலைப்படாதீங்க. நான் ஸ்ரீதர் அங்கிள் கிட்டே சொல்றேன். அவங்க டீல்
பண்ணிக்குவாங்க.”
ஆயா ஆயாசத்துடன் சேரில் அமர்ந்தாள். என்ன நடக்கப் போகுதோ.? என்ன பெண் இவள்.?
கடவுளே காப்பாத்து என்று வேண்டிக் கொண்டாள்.

ஸ்ரீதர் மண்டப வாசலிலேயே நின்றான். டென்ஷனாக இருந்தது.
“ஸ்ரீதர் அங்க என்ன நின்னிட்ட்டு இருக்கே.? முகூர்த்தத்துக்கு நேரமாச்சு.” யாரோ வந்து
அவசரப்படுத்தினார்கள்.
“வரேன் வரேன்……நீங்க போங்க.”
ஆட்டோ மண்டப வாசலில் நின்றது. சுஜா இறங்கினாள். என்ன இது கல்யாண மாப்பிள்ளை
மாலையும் கழுத்துமாக மணவரையில் உட்காராமல், இங்கு வந்து வரவேற்கிறான்.? சுஜா
ஒன்றும் புரியாமல் மலங்க விழித்தாள்.
“ஏன் இங்கே வந்து நின்னிட்டு இருக்கீங்க.? அதுக்குள்ளே ஊர்மிளா கசந்து
போய்விட்டாளா.?” என்றாள் குத்தலாக.
“பயித்தியம் மாதிரி உளராதே. அங்கே முகூர்த்த நேரம் நெருங்கிட்டு இருக்கு. வா சீக்கிரம்.”
“இந்தக் காட்சியை பார்க்கத்தான் வந்தேன்னு நினச்சிங்களா.? நீங்க உடனே என் கூட
வர்றீங்க. கல்யாணத்தை முதல்லே நிறுத்துங்க.”
“நல்லவேளை இங்கே யாருமில்லை. உள்ளே முகூர்த்த நேரம்….தாலி கட்ற சமயம். வேகமா
வா.”
சுஜாவின் கையை பற்றிக் கொண்டு தரதரவென்று இழுத்துக் கொண்டு
அவன் மண்டபத்துக்குள் வரவும், அவன் சித்தப்பா மகன் ஸ்ரீதர ஷண்முகம் ஊர்மிளா கழுத்தில்
தாலி கட்டவும் சரியாக இருந்தது.
“என் தம்பி….அவன் பேரும் ஸ்ரீதர ஷண்முகம் தான்.”
“உங்கம்மா அப்பா கல்யாணப் பத்திரிகை கொடுத்து….”
“ஸ்ரீதர் கல்யாணத்துக்கு வான்னு சொல்லியிருப்பாங்க. நீ நான்னு நினச்சிருப்பே. எங்க தாத்தா
பேர் தான் எங்க ரெண்டு பேருக்கும். ஊர்மிளாவை அவன் காதலித்தான். அவள் குஜராத்திப்
பெண். அவ சைடிலே யாரும் ஒத்துக்கலை. நான் தான் அவங்க கிட்டே பேசி, இந்த
கல்யாணத்தை முடிச்சேன்.”
“டாக்டர் கிட்டே கல்யாண பத்திரிகை கொடுத்த போது. என்னை கண்டுக்காம போனீங்க…..”
குற்ற பார்வை பார்த்தாள்.
“உன்னை தவிக்க விடத் தான். எனக்கு எவ்வளவு ஆட்டம் காட்டினே.? ஸோ……சித்தப்பா
சித்தி இறந்து விட்டதாலே, எங்க அப்பா அம்மா பேர் கல்யாண பத்திரிகையில் போட்டு
விட்டார்கள். புரிஞ்சுதா.?”
“உங்க அப்பா அம்மா கூட எனக்கு எதுவும் சொல்லாம மறச்சிட்டாங்க.”
“சஸ்பென்ஸ் வேண்டாமா.? மேலும் நீ முடியாது முடியாதுன்னு பிகு பண்ணிட்டு இருந்த.
எங்களுக்கு வேறு வழி தெரியலை. இப்படி செய்யாட்டி நீ என்னை லவ் பண்றதை
சொல்லியிருக்கவே மாட்டே. என் தம்பி கல்யாணம் ஆச்சே. அதான் நானும் மாப்பிளை மாதிரி
பட்டு வேஷ்டி கட்டிக்கிட்டு மேடையில் கூடவே நின்னு கவனிச்சிட்டு இருந்தேன். ஆர்த்தி

என்னிடம் வந்து புயல் மண்டப வாசலில் வந்து மையம் கொள்ளப் போவுதுன்னு
சொன்னா……அதான் மண்டப வாசலிலேயே நின்னுட்டிருந்தேன். போதுமா விளக்கம்.?”
“பொல்லாதவர் நீங்க….எப்படி தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா.?”
“ஊர்மிளாவை கல்யாணம் பண்ணப் போறேன்னு நினச்சதாலே, உன் பொறாமை
கிளம்பிடும்னு நினச்சோம். அது சரியாப் போச்சு. எல்லாம் ஆர்த்தி தான், சொல்ல வேண்டாம்,
அம்மா ரியாக்ஷன் பார்க்கலாமுன்னு சொன்னா. உன்னை மாதிரி தத்தி இல்லே அவ.”
என்றான் சிரிப்புடன்.
“ரெண்டு பேரும் கூட்டா.? இருங்க வச்சுக்கிறேன்.” என்று பயமுறுத்தினாள்.
“வா..வா சுஜா. எங்கே நீ வராம போயிடுவியோன்னு பயந்தோம். இப்ப என் மகனை
கட்டிக்குவே தானே.?”
வாசலுக்கே தன் வருங்கால மருமகளை வரவேற்க வந்து விட்டனர் கனகவல்லியும்
மகாலிங்கமும்.

2 thoughts on “கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *