அத்தியாயம்—12
நிறைந்த அந்த கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதரின் பெற்றோர் அப்படி கேட்டதும் சுஜா
நெகிழ்ந்து போனாள். மகனின் விருப்பமே தன் விருப்பம் என்று அவளை வாயார வாழ்த்தி
வரவேற்றார்களே….எவ்வளவு பெரிய மனசு.! விவாகரத்து வாங்கிய பெண்ணை ஏற்றுக்
கொள்ள பரந்த மனசு வேணுமே.! இது நிஜமா நிஜமா என்று மனம் கூவியது….
அவள் கொடுத்து வைத்தவள். அங்கேயே அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள் சுஜா.
“நல்லாயிரும்மா…. நல்லாயிரு.” என்று முகமும் அகமும் மலர வாழ்த்தினார்கள். ஸ்ரீதர்
மகிழச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இது எத்தனை வருஷத்து ஏக்கம்!
அவன் மனம் நிறைந்தது.
“வணக்கம் அண்ணி. அண்ணன் புலம்பி தள்ளிட்டார். நீங்க வருவீங்களோ
என்னமோன்னு….நாங்க பயந்திட்டோம்.” என்றான் மாப்பிள்ளை ஸ்ரீதர்.
ஊர்மிளா சுஜா கைபிடித்துக் குலுக்கினாள். “உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி.” என்றாள்
தமிழில்.
வணக்கம் சொன்ன சுஜா “யு லுக் பியூட்டிபுல்.” என்று சொன்னாள். அவள் வெட்கப்பட்டாள்.
“நீங்களும் தான்..” என்றாள்.
சுஜாவின் அம்மா, தங்கை சுதா அவள் கணவன் ஆனந் எல்லோரும் கல்யாணத்துக்கு
வந்திருந்தனர். அவளை நோக்கி வந்தார்கள்.
‘அக்கா….கல்யாணத்தை நிறுத்த வந்தியா.? ஆர்த்தி சொன்னா. ஏமாந்தியா.?” என்று சுதா.
சொல்ல எல்லோரும் சிரித்தனர்.
சாப்பிட கலைந்து போயினர். கூட்டம் குறைந்தது. மண்டபம் பாதிக்கு மேல் காலியாக
இருந்தது. ஸ்ரீதர் சுஜாவை கைப்பிடித்து உரிமையுடன் அழைத்து தன் அருகே அமர
வைத்தான்.
“சுஜா…. நீ எப்படியும் வருவேன்னு என் உள் மனசு சொல்லியது.”
சுஜா முகத்தில் நிம்மதியும் திருப்தியும் ரொம்ப நாளைக்குப் பிறகு
தெரிந்தது. ஆனால் கூடவே ஒரு சஞ்சலம் எங்கோ ஒளிந்து கொண்டு தான் இருந்தது.
“இவ்வளவு பிரியத்தை வச்சுக்கிட்டு, ஒண்ணுமே இல்லாதது போல் நடிச்சியே….நீல சாயம்
வெளுத்துப் போச்சு டும் டும் டும்.”
“போங்க நீங்க கேலி பண்ணிக்கிட்டு. நீங்க மனசார தானே என்னை ஏத்துக்கிட்டீங்க.?”
என்றாள். பெண்மையின் கவலை அது.!
“சுஜா….ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. எனக்குத்தான் கல்யாணமின்னு நீ நினச்சு
எவ்வளவு வருத்தப்படுவேன்னு நினச்சு நான் கலங்கிப் போயிட்டேன் தெரியுமா.? உனக்கு
எவ்வளவு வலித்திருக்கும்.? உன்னை கஷ்டப் படுத்றதுக்கா உன்னை காதலிச்சேன்.?….இந்த
விளையாட்டு வேண்டாமுன்னு சொன்னேன். ஆர்த்தி கேக்கலை. பிடிவாதமா இருந்தா. அரை
மனசா தான் சம்மதிச்சேன்.” என்றான்.
நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் என்று அவன் நிஜமாகவே உணர்ந்து
பாடியிருக்கிறான் என்று புரிய, சுஜா கண்களில் நீர் நிறைந்தது. எந்த அளவுக்கு தன்னை
முழுமையாக அவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்று இந்த பதில் அவளுக்கு உணர்த்தியது.
காதல் வேர்கள் ஆழமாக இறங்க இறங்க அவளின் சஞ்சலம் களை போல் தூக்கி
எறியப்பட்டது. அவள் அவனை காதலுடன் பார்த்தாள்.
சாப்பிட்டுவிட்டு தாம்பூலம் தரித்தபடி வந்த ஸ்ரீதரின் அப்பாவும் அம்மாவும் தன் மகனும்,
வருங்கால மருமகளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் அழகை ரசித்த வண்ணம்,
அவர்கள் அருகே வந்தார்கள்.
“ஒரு கல்யாணத்தின் போது, இன்னொரு கல்யாணம் நிச்சயமாகும் என்பது சரிதான்.’ என்று
வாய் கொள்ளா சிரிப்புடன் சொன்ன கனகவல்லி அம்மாவைப் பார்த்த ஸ்ரீதர்….
“அம்மா….எதுக்கும் தயாரா இரு, உன் மருமக பேக் அடிச்சிட போறா.” என்றான். அவன் பயம்
அதில் தெரிந்தது.
“அந்தக் கதையே வேணாம். ஜோசியர் கிட்டே ஏற்கனவே நான் குறிச்சு வச்சிட்டேன். அடுத்த
மாசம் மூணு முகூர்த்த தேதி இருக்கு. எது சரிப்படும்ன்னு சுஜா அம்மாகிட்டே கேக்க
வேண்டியது தான் பாக்கி.”
கல்யாண தேதி குறிக்கபட்டது.
கல்யாண வேலைகள் ஆரம்பம் ஆகிவிட்டது. தன் ஒரே மகனுக்கு கல்யாணம் என்பதால்
விமர்சையாக கொண்டாட முடிவு செய்து விட்டனர் ஸ்ரீதரின் பெற்றோர்.
“எதுவும் பேசக் கூடாது. எல்லாம் எங்க செலவு தான். சுஜா மணவறையில் வந்தமர்ந்து தாலி
வாங்கிக் கொள்ளவது ஒன்று தான் உங்க தரப்பு வேலை.”
சுஜாவின் மனசில் ஈர நெகிழ்வு. நன்றி ததும்ப அவர்களைப் பார்த்தாள்.
“ஸ்ரீதர் நீங்க எல்லாம் எவ்வளவு பெருந்தன்மையா இருக்கீங்க. அதுக்கு நான் தகுதி
உடையவள் தானா.?”
“ஆரம்பிச்சிட்டியா.? இதோட நூறு தரம் சொல்லிட்டே. இனிமே சொன்னே.. விலங்கு தான்.”
“அதான் ஏற்கனவே போட்டிட்டீங்களே காதல் பொன்விலங்கு.”
“சுஜா வர்ர சண்டே நாம ஆரத்தியோட வெளியில் போறோம். சாயங்காலம் நாலு மணிக்கு
வந்து பிக்-அப் பண்ணிடறேன்.”
“உத்தரவு அரசே….” சிரித்தாள் சுஜா.
சண்டே விடிந்ததில் இருந்தே ஒரே பரபரப்பாக இருந்தது சுஜாவுக்கு. அவள் கன்னிப் பருவ
மனசு மீண்டும் வந்து விட்டது போல் இருந்தது. என்ன உடை அணியலாம் என்று யோசிக்க
ஆரம்பித்தது மனசு.
“ஆர்த்தி….எந்த கலர் புடவை உடுத்திக்கட்டும்.?”
“அம்மா….புடவையெல்லாம் வேண்டாம். இந்த சாக்லேட் கலர் செல்வார் போட்டுக்கோங்க.
ஸ்ரீதர் அங்கிளுக்கு….ஸாரி அப்பாவுக்கு சாக்லேட் கலர் ரொம்பப் பிடிக்கும். பாருங்க எனக்கு
வாங்கிக் கொடுத்திருக்கும் ப்ராக், சாக்லேட் கலர்.” என்று ப்ராக்கை விரித்துக் காட்டினாள்.
“ஏய்….புதுசா இருக்கு. எப்ப வாங்கிக் கொடுத்தார்.?”
ஒரு சின்ன சூட்கேஸ் திறந்து காட்டினாள் ஆர்த்தி. நாலைந்து உடைகள் இருந்தன. எல்லாம்
அழகழான கலரில் இருந்தன.
“திருட்டுக் கொட்டு…..எனக்குத் தெரியாம ஒளிச்சு வச்சிருக்கியா.?”
“இனிமே ஒளிக்க வேண்டாம்…..பிளீஸ் நீயும் சாக்லேட் கலர் சல்வார்..”
“போட்டுக்கிறேன்….”
சரியாக மாலை நான்கு மணிக்கு வந்து இருவரையும் அழைத்துக் கொண்டு போனான் ஸ்ரீதர்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணிட்டு உயர்ந்த ரெஸ்டாரண்ட்
ஒன்றுக்குச் சென்றார்கள். ஆர்த்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். பிடித்த வகையறாக்களை
சாப்பிட்டுவிட்டு கடைசியாக ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணினான் ஸ்ரீதர். ஐஸ்கிரீம் வந்தது….
“சுஜா உனக்கெதுக்கு ஐஸ்கிரீம்.?
“ஏன்? நான் சாப்பிடக் கூடாதா.? நான் ஒண்ணும் சுகர் பேஷண்ட் இல்லை.”
“அதுக்கு சொல்லலை….நீயே ஐஸ்கிரீம் சிலை, உனக்கு எதுக்கு ஐஸ்கிரீம்.?’
“ஆகா…..ஐஸ் வச்சு….வாங்காம மிச்சம் பிடிக்க பிளானா.?”
சட்டென்று ஆர்த்தி முக்கூறுஞ்சும் சத்தம் கேட்டது.
“ஆர்த்தி என்னாச்சு? ஏன் அழறே.?’ சுஜா பதறினாள்.
“என்னாச்சு ஆர்த்தி? வேறு ஃப்ளேவர் ஐஸ்கிரீம் வேணுமா.?’
ஆர்த்தி கண் துடைத்தபடி மெள்ள சொன்னாள்.
“இந்த ரெஸ்டாரெண்ட் கூட்டி வந்து தான் என்னை அந்த தர்ஷினி முன்னால் அடிச்சிட்டார்…”
“யாரு ரமேஷா.?” கேட்டான் ஸ்ரீதர்.
“ம்ம்….ம்ம்….”
“ஏன்?” சுஜா முகம் ஜீவு ஜீவு என்று சிவந்தது.
“ஸ்கூலில் இருந்து என்னை இங்கு கூட்டி வந்து….இனிமே இவ தான் உன் அம்மா. அந்த
சுஜாவை விட்டிட்டு வந்திடணும். சரியான்னு கேட்டார். முடியாது….இந்த தர்ஷினி ஒரு
சனின்னு சொல்லிட்டேன். அதுக்கு அந்த சுஜா கிட்டவே இருந்துக்கோ….எங்க கிட்டே
வராதே, நாங்க சனியான்னு சொல்லி ஓங்கி அடிச்சிட்டார்மா. அதிலேயிருந்து தான் நான்
அவருக்கு டூ விட்டிட்டேன்…” சிறுமியின் கண்கள் குளமாகின.
அதிர்ச்சியில் உறந்து போயினர். ஸ்ரீதர் குழந்தையை முதுகில் தட்டி ஆறுதல் சொன்னான்.
“ஸ்வீட்டி…. இத நீ மறந்திடனும், சரியா.? இனிமே அப்பா உன்னைக் கண்ணுக்குள்ளே வச்சு
காப்பாத்துவேன். எங்கே ஒரு முத்தம் கொடு.”
ஆர்த்தி அவன் கன்னத்தில் முத்தமிட்டுச் சிரித்தாள். எவ்வளவு அழகான சிரிப்பு.! இதில் கூட
மயங்காத தகப்பன் ஒரு தகப்பனா.?
கல்யாணத்திற்கு இன்னும் இரெண்டு வாரங்களே இருந்தன. முகூர்த்த புடவை செலெக்ட்
பண்ணிவிட்டு பிளவுஸ் தைக்க கொடுத்துவிட்டு, மாலை ஆறு மணிக்கு வீடு வந்து சேர்ந்தாள்
சுஜா. ஆயா இரவு எட்டு மணிக்கு சூடாக ரவா தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்.
சாப்பிட்டுவிட்டு டி. வி யை ஆன் செய்தாள் சுஜா. திடீரென வந்த ஒரு விமான விபத்து பற்றிய
செய்தியை சுஜா திடுக்கிடலுடன் பார்த்தாள்.
துபாயிலிருந்து புறப்பட்ட விமானம் சென்னையில் தரை இறங்குவதற்கு சில வினாடிகள் முன்
தீப்பற்றி கொண்டதில் பலர் காப்பாற்ற பட்டனர் சிலர் இறந்துவிட்டனர். இறந்தவர்களில்
பிரபல தொழில் அதிபர் ஆராவமுதனும், அவர் மகள் மிஸஸ் தர்ஷினி ரமேஷும்
அடக்கம்…..என்று அறிவித்தது டி. வி
இப்படியா முடிய வேண்டும் தர்ஷினியின் வாழ்க்கை.!
உடனே ஸ்ரீதரிடமிருந்து போன் வந்தது.
“சுஜா……நியூஸ் பார்த்தியா.? தர்ஷினிக்கு நேர்ந்த விபத்து மிகப் பெரிய அதிர்ச்சியாக
இருக்கு….”
“கடவுள் இருக்காருன்னு நிரூபிச்சிட்டார். என்ன ஆட்டம் ஆடினாங்க ரெண்டு பேரும்..” என்று
ஆயா கோபத்துடன் சொன்னாள்.
நான்கு நாள் ஆகியிருக்கும் காலிங் பெல் அலறிற்று. அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த
சுஜா, அவசரமாக வந்து கதவு திறந்தாள். கனத்த சரீரத்துடன் அறுபது வயது மதிக்கத் தக்கவர்
நின்றார்.
“என்னம்மா….எப்படிம்மா இருக்கே.?’ கேட்டபடி உள்ளே வந்தார்.
“நீங்க….”
“என்னைத் தெரியலையாமா.? நான் தான் ரமேஷோட சித்தப்பா மருது.” இவர் எதுக்கு இங்க
வந்திருக்கார் என்று புரியாமல் சுஜா குழம்பினாள்.
சுஜா அவரைப் பார்த்தே ஆறு வருடம் இருக்கும். முரட்டு மனிதர் ஆச்சே! அவர்கள்
கல்யாணத்தின் போது குளிக்கச் சென்றிருந்தார் மனிதர். திடீரென எதிர்பாராமல் மோட்டாரில்
ஏதோ கோளாறு ஏற்பட்டு, தண்ணீர் வருவது நின்று போயிற்று.
“என்ன இது?….இப்படித்தான் ஏனோ தானோவென்று ஏற்பாடு செய்வீங்களா.? மாப்பிள்ளை
வீட்டாரை அலட்சியப்படுத்தறீங்க..?” என்று குதி குதி என்று குதித்தார்.
சமாதானப்படுத்துவதற்குள் உன் பாடு என் பாடு என்றாகிவிட்டது. இப்ப என்ன
வில்லங்கமோ.?
“ஆயா….காப்பி கொண்டு வாங்க….இப்ப என்ன விஷயமா வந்தீங்க.?”
“அது ஒண்ணுமில்லேம்மா….நீ நியூஸ் படிச்சிருப்பே….அந்த தர்ஷினி அற்ப ஆயூசிலே
போயிடுச்சு. என்ன செய்ய,? சங்கடமாத் தான் இருக்கு. அதும் சொத்து பூரா ரமேஷுக்கு
தான்….”
“அதுக்கு என்ன இப்ப.?”
“ஏதோ இடையிலே விட்டுப் போச்சு பந்தம். அதுக்காக அப்படியே விட்ற முடியுமா.? நீ தானே
பெண்டாட்டி.?”
“அதான் டிவோர்ஸ் ஆயிடுச்சு. இனிமே என்ன.?”
“டிவோர்ஸ் ஆனவங்க திரும்ப கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சட்டமா இருக்கு.?
உங்களுக்கு அழகு போல பிள்ளை இருக்கு…”
“நீங்க பேசறது நல்லாயில்லை….”
“வாஸ்தவமான பேச்சு. உனக்கு கல்யாணமாம். கேள்விப்பட்டேன். அதான் இன்னும்
நடக்கலையே. அதனாலே, கடவுள் புண்ணியத்திலே நீங்க ரெண்டு பேரும் சேர ஒரு
வாய்ப்பிருக்கு. தம்பி சொல்லி அனுப்பிச்சுது, கல்யாணத்தை நிறுத்திடுமா. முறைப்படி
அப்புறமா உங்க கல்யாணம் நடக்கட்டும்….என்ன நான் சொல்றது.?”
சிறிது யோசித்த சுஜா பிறகு தெளிவாக சொன்னாள்.
“இதுவும் நல்ல யோசனை தான் மாமா. நாளைக்கு காலை பத்து மணிக்கு அவர வரச்
சொல்லுங்க. நானும் பூமாலையோட ரெடியாயிருக்கேன்.”
சுஜா சொன்னதும் அதிர்ச்சியானாள் ஆயா.”
“ரொம்ப சந்தோஷம் மா. நீ சம்மதிப்பேன்னு ரமேஷ் ரொம்ப நம்பிக்கையா சொன்னான்.
சரியாப் போச்சு. அப்ப நான் வரட்டுமா.?”
மருது எருது மெள்ள நகர்ந்து போனார். சுஜா யோசனையுடன் நின்றாள்.
பிறகு ஆயாவிடம் சொன்னாள்.
“ஆயா….நாளைக் காலை நல்ல ரோஜாப்பூ மாலை….சந்தனம், குங்குமம் வாங்கி வாங்க.
கற்பூரம், ஊதுபத்தி வீட்டில் இருக்கு. விளக்கு ஏத்தி வச்சு சாமி முன்னாடி நடக்கணும்….அது
தானே முறை.?”
ஆயா சுஜாவை எரித்து விடுவது போல் பார்த்தாள்.
“என்னம்மா பேச்சு இது.? உங்களுக்கு புத்தி கெட்டுப் போச்சா.?”
“இப்ப தான் புத்தி வந்திருக்கு. சொன்னதை செய்யுங்க.” நறுக்கு தெறித்தது போல் சொன்னாள்
சுஜா.
ஆயா அந்தண்டை போய் ஸ்ரீதருக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னாள். “ஏதாவது செய்யுங்க தம்பி.