புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

கால் கிலோ காதல் என்ன விலை -28

அத்தியாயம்-28

அமிழ்தினி திருவண்ணாமலையில் அவள் வீட்டில் அவள் மெத்தையில் ஒருகளித்து படுத்திருக்க, அவள் விழிகளிலிருந்து கண்ணீர் திரண்டு அவள் தலையணையை நனைத்தது. இங்கு வந்து ஒரு வாரம் ஆகியிருக்கும்.

அவள் கைகள் கண்ணீரை துடைப்பதற்கு பதிலாக அர்ஜுன் கருவை சுமந்த வயிற்றில் பதிந்திருந்தது.

அவள் பார்வை திருமணக் கோலத்தில் சட்டமாய் மாற்றி தொங்கவிடப்பட்ட பிரேமில் நிலைத்தது. 

அந்த புகைப்படத்தில் அர்ஜுன் சிரிக்க கூட இல்லை. ஆனால் அவர் புதர் போன்ற தலைமுடியும் தாடியும் அவளை இம்சித்தது.

இங்கு வந்து திருமணத்திற்கு பின் தங்கிய நாட்களை கைவிட்டு எண்ணிடலாம். அர்ஜுன் கடையை மூடாதவன். அதனால் வந்த இரண்டு நாளில் தங்கி செல்ல முற்பட, தீபாவளி பொங்கல் என்று நல்ல நாளை தவிர்த்து இங்கு அதிகம் அவனோடு இருந்ததில்லை. அப்படி அவனோடு இருந்த நேரமெல்லாம், பந்தலில் கொடியை போல பின்னியிருந்தனர்.

அத்தனை சில்மிஷமும், சேட்டையும் கலந்து தன்னையே மறக்க செய்வான்.

எத்தனை இலகுவாய் வாழ்ந்தான். கடமை பொறுப்பு என்பதெல்லாம் பாரமாய் ஏற்றிக்கொள்ளாமல் ஆனந்தமாய் ஏற்றவன்.

அவன் பார்க்கும் கழுகு பார்வை அவள் இதயத்தை கொத்தி செல்லும். அது இதயத்தை காதல் அம்பை கலந்திட செய்யும்.
இப்பவும் அப்படி தான் அவன் மாறவில்லை. ஆனால் சில பொறுப்புகள் கடமைகள் அவனை நிம்மதியில்லாமல் அலைகழிக்க, அம்மு துவண்டாள்.‌

அங்கிருந்து வரும் போது கூட, வாடகைக்கு என்று வைத்திருந்த பணத்திலிருந்து சில ஐநூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.‌

செலவுகளை குறைக்கவும் வழியின்றி, கூடுதலாக பணம் ஈட்டவும் தடுமாறி எப்படி தத்தளிக்கின்றானோ இதே தான் அவள் மனதில் குடைந்தது.

அவசரப்பட்டு குழந்தைக்கு ஆசைப்பட்டதாக கூட ஒருகணம் எண்ணினாள்.

ஆனால் உடனே ‘தப்பு தப்பு மன்னிச்சிடு ஈஸ்வரா’ என்று கன்னத்தில் போட்டு கொண்டாள்.

 சந்திரிகா வரும் அரவம் கேட்டு, உடனடியாக கண்ணீரை துடைத்தாள். 

'ஆப்பிள் பழச்சாற்றை குடிக்க கொடுக்கவும் வாங்கினாள். 

அர்ஜுன் கடையில் வைத்திருக்கும் ஆப்பிள் பழத்தை கத்தியால் வெட்டிய துண்டுகளாக்கி பேப்பரில் மடித்து வைத்து தருவான். மாங்காய் கொய்யாக்கியை போல… கடைக்காரன் புத்தி.

இல்லையேல் அமிழ்தினி பாதி கடித்து அணில் கொதறியது போல கொடுக்க வேஸ்ட் ஆகக்கூடாதென்று இவளது மிச்ச மீதியை திண்றிடுவான். எதையும் கழிக்க கூடாதென்ற எண்ணம்.

தற்போது பழச்சாற்றை பாதி குடித்து மீதி, அவன் நினைவுகளோடு முழுங்க முடியாது அன்னையிடம் திருப்பி கொடுத்தாள்.

சந்திரிகா மகளை பார்த்து வற்புறுத்தாமல் கணவர் தேவராஜனிடம் வந்தார்.

“நாம நம்ம பொண்ணை சென்னைக்கே கூட்டிட்டு போகலாம்ங்க. அவ மாப்பிள்ளையை ரொம்ப தேடறா.

ஒழுங்கா சாப்பிடறதில்லை, ஏதோ கடனேனு முழுங்கறா. முகமும் வாடியிருக்கு.
இந்த மாதிரி நேரத்துல புருஷன்காரன் கூடவேயிருக்க தோணுதோ எண்ணவோ.” என்றதும் தேவராஜன் சிந்தித்தார்.‌

அவரும் சில நேரம் மகளை காணும் பொழுது அவள் அந்த ஜன்னல் கம்பி பக்கம் திருவண்ணாமலை கோவில் திசையிருக்கும் பக்கமே வெறித்து நிற்பது அறிந்ததே.

இதில் கல்யாண போட்டோ அடிக்கடி மெத்தையில் இடம் பெறுவதை கவனித்தார்.

“நாம அங்க போய் மொத்தமா தங்கவும் முடியாதே சந்திரிகா.
எனக்கு இங்கன வேலையிருக்கு. இது ஏழாம் மாதம். குழந்தை பிறக்க இரண்டு மாசமிருக்கே. சம்பந்தி வீட்ல தங்க முடியுமா? இதுல மாப்பிள்ளைக்கு தொந்தரவு கொடுக்க கூடாது இல்லையா?” என்றார்.‌

“அதெல்லாம் பார்த்தா உங்க மக ஓடா தேய்ந்து போவா. அஞ்சனா வீட்லன்னா அவ மாமியார் கூட எல்லாம் தாராளமா பேச முடியலை. அளந்தெடுத்த பேச்சு. சின்ன மக வீட்ல அப்படியா? இளவழகி அண்ணி நல்லா பழகறாங்க. நிலைமையை சொல்லிடுவோம்‌. ” என்றதும் தலையாட்டி நாளைக்கு காலையில சென்னைக்கு போய் விட்டுட்டு வர்றேன். கிளம்பு” என்றார்.

அடுத்த நாள் மகளிடம் காலையில் பாலை நீட்டும் போதே, “பத்து மணி பஸ்ஸுக்கு சென்னைக்கு போறோம். ரெடியாகு” என்றார்.‌

அமிழ்தினி சந்தோஷமாய் “இரண்டு மாசம் இங்க தான்னு சொன்னிங்க” என்றாள்.

சந்திரிகா மகள் முகத்தில் தாடை பற்றி நிமிர்த்தி, “உன்‌முகம் இருளாட்டம் இருக்கு. மாப்பிள்ளை பார்க்க போறோம்னா வெளிச்சமாகுதே. அதுக்கு தான்” என்றதும் வெட்கப்பட்டாள். ‌‌

“அம்மா.. அவர் திட்டினா?” என்று கேட்டாள்.

“வந்தா ஏன் வந்தேன்னா சொல்ல போறாங்க.” என்றதும் அம்மு சிரிக்க, “உங்கப்பா விட்டுட்டு வந்துடுவாங்க. நான் மட்டுமா கூட இருப்பத முடிவெடுத்திருக்கேன்.” என்றதும் “அதெல்லாம் அத்தை ஒன்னும் சொல்ல மாட்டாங்க.” என்று கழுத்தை கட்டிக்கொண்டாள்.‌

‌ ”பார்த்தியா பார்த்தியா… கல்யாணம் ஆனப்ப, ஏன் என்னை துரத்தி விடறிங்கன்னு கேட்ட. இப்ப பிறந்து வளர்ந்து இருந்த இந்த ஊரு வீடு வேற இடமா பார்க்கற. இப்ப மாப்பிள்ளை தம்பி தான் உலகம். அப்படி தானே?” என்று சந்திரிகா மகளை கேலி செய்ய, “போம்மா.” என்று நாணினாள்.

உண்மையில் தாடிக்காரனை காணாமல் விடியவேயில்லை.

அந்தளவு உணர்வோடு உயிரோடு கலந்து விட்டானா என்ற ஆச்சரியத்தோடு அவனை காண புறப்பட்டாள்.

போன் செய்து தகவல் அளிக்கவில்லை. அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக செல்ல குதுகலமாக வந்தாள்.

பேருந்து பயணம் சற்று சிரமம் அளித்திருந்தது. ஆனாலும் அந்த தாடிக்காரன்‌ உம்முனா மூஞ்சியை காணும் ஆவலில் சிரமத்தை இனிதாய் ஏற்றாள்.

ரெட்ஹில்ஸ் வந்து கால்தடம் பதித்ததும் ஆசையாய் அர்ஜுனை காண வந்தாள்.

கடையில் முட்டை அடுக்கி முடிச்சிட்டவன், அம்முவை கண்டதும், “வாங்க.. மாமா. வாங்கத்தை என்னாச்சு… திடீர்னு சொல்லாம கொள்ளாம.. ” என்று அவசரமாய் மடித்து நீட்டி வரவேற்றான்.‌

மாமா அத்தையென்று விளிக்க இளவழகி கூறினார். அதுவும் வளையலிடும் போது, பொதுவில் “அவங்க வீட்டுக்கு போறா’ என்று கூற, அவங்க வீட்டுக்கு டா. அவ அப்பா வீட்டுக்குன்னு சொல்லு.. இன்னமும் மாமா அத்தைன்னு வருதா பாரு. இதே அம்மு என்னை அவங்க இவங்கன்னு சொன்னா நீ சும்மாயிருப்பியா. அதென்ன ஆம்பள திமிரோ’ என்று கடுகாய் பொரிய அன்று இருந்த மனநிலையில் கூப்பிட ஆரம்பித்தான்.‌

” அம்முவுக்கு அங்க விட இங்க இருந்தா நல்லா இருக்கும். ஹாஸ்பிடலும் இங்க தானே பார்க்கா. முதல் பிரசவம் ரொம்ப பயப்படறா. மாப்பிள்ளை கூடயிருந்தா தெம்பாயிருக்குமானு கூட்டிட்டு வந்தோம்” என்றதும் அம்மு அறைக்குள் முகம் கழுவி இலகுவான உடை மாற்ற சென்றாள்.

அர்ஜுன் தலையை சொரிந்தபடி, “போட்டது போட்டபடி இருக்கும். அவளுக்கு சுத்தமா நீட் பண்ணிட்டு வர்றேன்” என்று பின்னாலே வந்தான்.

தேவராஜுக்கு மனம் மகிழ, சந்திரிகாவோ, மகள் சரியாக சாப்பிடிமல் கொள்ளாமல் கல்யாண போட்டோ க்ஷவையே பார்த்து மருமகனை தேடுவதை உரைத்தனர்.

இளவழகியும் தன் பங்கிற்கு, “இங்க மட்டும் என்ன வாழுது, சதா என்னத்தையோ பறிக்கொடுத்தவன் கணக்கா திரியறான்.

பாருங்க முன்ன மாதிரி தாடி புதர் மாதிரி வளர்த்துட்டான். எல்லாம் அம்முவை இவனும் தேடுறான்.” என்று கூற அமிழ்தினியோ இளவழகி பேசியதை கேட்டு, “என்னை தேடினிங்களா?” என்றாள்.

அர்ஜுன் எதுவும் கூறாது ப்ரெஞ்ச் முத்தத்தை உபயோகப்படுத்தி ஆங்கில படத்தை ஓவர்டேக் செய்துக் கொண்டிருந்தான்.

பல ஜென்ம பிரிவை ஏற்று சேர்ந்தவராக முத்தங்களால் பேச, அம்மு கைகள் அவன் மண்டையில் வளர்ந்த சிகையை அழுத்தமாய் பிடித்தது.

கடைக்கு ஆட்கள் வந்து கத்தும் சத்தமும் அதற்கு இளவழகி செல்வதும் என்று அறிந்தாலும் அவளை பிரித்திடாமல் அழுத்தங்களை கூட்டினான்.

வயிறு தட்டவும் அதில் ஒரு கையை வைக்க, தாய் தந்தையரின் அன்பை போல அந்த கருவில் இருந்த சிசுவும் அங்கும் இங்கும் உலாத்தி தன் இருப்பை உணர்த்தியது.

“முன்ன விட வேகமா வேகமா அசைவு தெரியுது.” என்று அர்ஜுன் பேச, “என்னை மாதிரியே உங்களை தேடுது.” என்றதும் மீண்டும் முத்தத்தை பகிர்ந்தான்.

“என்னால அங்க இருக்க முடியலை. நீங்க திட்டிட்டே இருந்தா கூட எனக்கு பரவாயில்லை. உங்களோட இருக்கணும். இந்த பூச்சாண்டி முகத்தை பார்த்துட்டே இருக்கணும்” என்றாள்‌.

‘”கொழுப்பு டி… நான் பூச்சாண்டியா? கொஞ்சும் போதா தாடிகாரான்னு சிணுங்குவ அப்ப வச்சிக்கறேன் கச்சேரிய” என்றவன் “நீ இங்கயேயிரு” என்று கூறவும் தலையாட்டினாள்.

மெதுவாக "என்‌ மேல கோபம் போயிடுச்சா?" என்றாள்‌.

“கோபமா…. மூட்டைக் கணக்குல இருக்கு. ஆனா பஞ்சு மூட்டையா உன்னை சுமக்க, பாரமா தோணலை. என்னை தாடிக்காரனா, கோபக்காரனா இருந்தப்ப பிடிச்சி கல்யாணம் செய்தவ நீ. உன் மேல கோபத்தை காட்டி என்ன பண்ணறது?” என்றான்.‌

அவனை இறுக பிடித்து அணைத்து தேம்பினாள்.

“அழாத.. ஏய் அமிழ்தினி… உங்கப்பா அம்மா என்னை திட்ட ஆசையா?” என்றான்.

“பொண்ணு மாப்பிள்ளை கூட இருந்தா தான் சிரிக்கறான்னு அவர்களுக்கே தெரியுது. அதான் சம்பந்தி வீட்ல இருந்தா கூட பரவாயில்லை என்று அம்மா இங்க கூடியிருந்து பார்த்துக்க வந்திருக்காங்க. அப்பா மட்டும் கிளம்பறதா பேசிட்டு இருந்தாங்க” என்றாள்.

அர்ஜுனோ ‘இருக்கட்டும்’ என்று அம்முவின் கண் காது மூக்கு என்று புதிதாக பார்ப்பதை போல பார்த்தான்.

இந்த எட்டு நாளில் என் வாழ்க்கையில் இவளில்லை என்றால் வெறுமை என்ற பாடத்தை புகட்டி விட்டாளே என்ற ஆச்சரியத்தோடு அளவிட்டான்.

“நான் நைட்டி மாத்திட்டு வர்றேன்‌ நீங்க போங்க.” என்றாள்.

”மாத்து.. நான் ஓரமா இருந்துக்கறேன்” என்றவன், “ரொம்ப தூரமா வர கஷ்டமாயில்லை?” என்று உடையை மாற்றி உதவினான்.‌

“கால் தொங்க விட்டதுல வலி. உட்கார்ந்தே இருக்க தொடையும் வலிக்கு. இதுல வயிறும் லைட்டா வலிக்கு.” என்றதும், தலையில் நைட்டியை நுழைத்து முடித்தவன்.

“எதுக்கு இந்த கஷ்டம்?” என்றான்.‌

“இவ்வளோ நேரம் முத்தமிட்ட? இப்ப ஏன்‌ வந்தன்னு கேட்பிங்க போல.” என்று கூறவும் அர்ஜுன் லேசாய் முறுவல் புரிந்தான்.

இருவரும் ஒரு சேர வரவும், சந்திரிகா சூடான தண்ணீரை கொண்டு வந்து மகளின் காலை வைத்து கொள்ள கூறினார். கால் வீக்கம் வலி நீங்குமென.

அர்ஜுனோ தன்னை நம்பி வந்தவளை கவனித்து விட்டு கடைக்குள் புகுந்தான்.

தேவராஜும் கடையில் பிரிக்காத அரிசி மூட்டையில் அமர்ந்தார்.

மாமனாரும் மருமகனும் தனியாக பேச, இங்கே அம்மு அத்தை அம்மாவோடு கதைத்தாள்.

பிரயாண களைப்புக்கு முதுகில் சுடதண்ணீரை ஊற்றி முடித்தார். நைட்டி உடை வசதியாக இருந்தது.

தேவராஜிக்கு கடையில் புதுப்பொலிவு கண்டார்.

“கடை பிக்கப் ஆகிடுச்சா? ஏதோ சிலயிடத்துல கடனா போகுதுன்னு அம்மு அவ அம்மாவிடம் சொன்னா” என்று ஆரம்பித்தார்.‌

‘இவளுக்கு வாய் மட்டும் இன்னும் கொஞ்சமும் குறையலை. இதையெல்லாம் சொல்ல சொன்னாங்களா?’ என்று பாறையானான்.

“அதெல்லாம் கடன் கழுத்தை நெறிக்க வைச்சிக்க மாட்டேன் மாமா. கடன் அன்பை முறிக்கும்’ என்பது போர்டுல எழுத மட்டுமா? நானுமே கடன் வாங்க மாட்டேன். கொஞ்சம் போல வாங்கியதை அடைச்சிட்டேன்.

என்ன சேமிப்புக்கு வரலை. வாயுக்கும் வயிற்றுக்கும் குறைச்சலில்லை” என்றான்.‌

அம்முவிற்கு பிரயாணம் செய்து வந்ததில் சூட்டு வலியை கிளப்பிட வலியில் துடித்தாள். எங்கு ஏதேனும் அவஸ்தையை உரைத்தால் அர்ஜுனும் அத்தையும் கடிவார்களோயென பம்மினாள். வலியை தாங்கிக்கொண்டு நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டாள்‌.

  -தொடரும்

-பிரவீணா தங்கராஜ்

22 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை -28”

    1. அச்சோ..! வெறும் சூட்டு வலி தானே..!
      வேறெதாவது இருந்திடப் போகுது.
      இந்த அர்ஜூன் அண்ணாச்சி நம்ம அம்முவை
      திருவண்ணாமலையிலேருந்து
      கட்டி இழுத்துட்டு வந்துட்டாரு.
      😁😁😁

  1. So cute 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 waiting for next ud

  2. Awesome narration sis. I also felt that feel while i was pregnant. I need of my man presence with me. Arjun super. Intresting

  3. Ena thiti kova patalum ullukulla pasam iruka thana seium tha aadalanalum than sathai aadume apo kolanthai kagavum avalukagavum varutham iruka thana seium yar kittaum sariya pesathavan avan pondati kitta ithana urimaium apo antha pasam illama poiduma kamikama iruka mudiuma

  4. அட அர்ஜுனா இது தலைய சொரிஞ்சுகிட்டே amizthini கிட்ட ஓடுறான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!