ஜீவானந்த் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது வாசலில் சத்தம் கேட்டதும் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு வெளியே வந்து பார்க்க, உமா பாரதியின் தந்தை தன் மகளுக்கு சீர் பொருட்களுடன் வாசலில் நின்றிருந்தார்.
வண்டியில் இருந்து அவற்றை இறக்கி வீட்டிற்குள் வைக்கும் படி சொல்லிக் கொண்டிருந்த முத்துராமனிடம் வந்த மரகதம், “எதற்கு இதெல்லாம். அதுதான் எதுவும் வேண்டாம் என்று சொன்னேனே. ஏன் நீங்கள் சிரமப்படுகிறீர்கள்” என்றார்.
அதற்கு முத்துராமனும், “என் மகளுக்கு என்னால் முடிந்ததை செய்கின்றேன். இதில் என்ன இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே வண்டிக்காரனுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
தன் தந்தையின் சப்தம் கேட்டு வெளியே வந்த உமா அங்கிருந்த பொருட்களை பார்த்து, மரகதத்தின் பேச்சையும் கேட்டு, என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தாள்.
பொருட்களை எல்லாம் எடுத்து ஓரமாக வைத்த பின்னர், ஒரு பையை மட்டும் உமாவின் கையில் கொடுத்து, “இதில் சில வெள்ளிப் பொருட்கள் இருக்கிறது. பத்திரமாக வைமா” என்றார்.
இப்பொழுது உமாவும் “ஏன் அப்பா இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? இதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடப் போகிறது” என்று அவருக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாக கேட்டாள்.
அவரும் தன் மகளைப் பார்த்து புன்னகைத்த படி, “உனக்கு செய்யாமல் வேறு யாருக்கு அம்மா செய்யப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டே மரகதத்தை பார்த்து என் மனைவி உமாவுக்கு திருமணம் முடிக்காமல் அவளின் தம்பி தங்கையற்கு மணமுடிக்கும் பொழுதே இவளுக்காக நான் சிறிது சிறிதாக பணம் தனியாக சேர்த்து வைக்க தொடங்கி விட்டேன். அதிலிருந்து தான் இப்பொழுது இவற்றையெல்லாம் வாங்கி இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஒரு பையை எடுத்து மரகதத்திடம் கொடுத்தார்.
“இதில் நான்கு லட்சம் பணம் இருக்கிறது” என்று சொல்ல மரகதம் அதை வாங்க மறுத்தார்.
“நான் உமாவை எனது சொந்த மகளாகத்தான் பார்க்கிறேன். நீங்கள் இப்படி பணம் கொடுத்து அந்நியப்படுத்தாதீர்கள்” என்று சற்று வருத்தமாக கூறினார் மரகதம்.
அதற்கு உடனே முத்துராமனும் “அவள் உங்கள் மகள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் நான் என் கடமையை செய்ய வேண்டும் அல்லவா? பின்னால் என் மகளுக்கு பிறரால் எந்த ஒரு அவ சொல்லும் வந்து விடக்கூடாது என்று தான் இவற்றை நான் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு, இது நான் என்னுடைய சொந்த உழைப்பால் சிறுக சிறுக சேர்க்க பணம் தான் என் மகளுக்காகவே!” என்று அவளின் தலையில் ஆசீர்வதிப்பது போல் கையை வைத்து தயவு செய்து இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
மரகதமோ தயங்கியபடியே “சரி… உங்கள் இஷ்டம் ஆனால் எனக்கு இந்த பணத்தை வாங்க மனதில்லை. உங்கள் மகளிடமே கொடுத்து விடுங்கள். அல்லது ஆனந்திடம் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு அவருக்கு குடிக்க எடுத்து வர உள்ளே சென்று விட்டார்.
அங்கிருந்த நாற்காலியில் தன் தந்தையை அமர வைத்துவிட்டு அவரின் காலடியில் அமர்ந்த உமா, “அப்பா இந்த பணத்தினால் உங்களுக்கும் சித்திக்கும் ஏதாவது பிரச்சனை வந்துவிடப் போகிறது. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அப்பா” என்று கவலையாக கூறினாள்.
முத்துராமனும் “அதெல்லாம் எந்த பிரச்சனையும் வராது. அப்படியே எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். இனிமேல் அந்த வீட்டைப் பற்றி நீ எதுவும் யோசிக்காதே. மாப்பிள்ளை பார்ப்பதற்கு மிகவும் நல்லவர் போல் தோன்றுகிறது. அவருடன் நீ மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய எண்ணம். இங்குள்ள மூவரையும் நீ நன்றாக கவனித்துக் கொண்டால் மட்டும் போதும். ஒரு மகளாய் நீ அந்த வீட்டில் நீ இவ்வளவு காலம் வாழ்ந்தாய் எல்லா வேலைகளையும் பொறுப்பாக செய்தாய். அதேபோல் இங்கு மருமகளாய் அனைத்தையும் பொறுப்பெடுத்து பார்த்துக்கொள். உன்னைப்போல் ஒரு பெண் மருமகளாக கிடைத்தது கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று இவர்கள் பேசும் அளவிற்கு உன்னுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும். அது ஒன்றே போதும் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவ்விடம் வந்த மரகதம்,
அவர் குடிப்பதற்கு மோர் கொடுத்தார்.
“மாப்பிள்ளை எங்கே காணும்” என்றார் முத்துராமன்.
“ஏதோ வேலை என்று வெளியே சென்றான். இருங்கள் நான் ஃபோன் செய்து பார்க்கிறேன்” என்று அவரிடம் சொல்லிவிட்டு உடனே ஜீவானந்திற்கு ஃபோன் செய்தார் மரகதம்.
“மதிய உணவு தயாராகி விட்டது சாப்பிட வா!” என்று அவனை அழைத்து விட்டு, “இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான்” என்று முத்துராமனை பார்த்து சொல்லிவிட்டு “நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்” என்று சமையலறைக்குள் சென்று விட்டார்.
சொன்னது போல் சற்று நேரத்திற்கெல்லாம் ஜீவானந்த வீட்டிற்கு வந்து விட்டான். அங்கு அமர்ந்திருந்த முத்துராமனை பார்த்து வரவேற்பது போல் தலையசைத்தான். பின்னர் நேராக கொல்லை புறம் சென்று கை கால் கழுவி விட்டு முகத்தை துடைத்துக் கொண்டு அவரின் அருகில் வந்து அமர்ந்து, “எப்பொழுது வந்தீர்கள்” என்று அங்கிருந்த பாத்திரங்களை பார்த்துக் கொண்டே கேட்டான்.
“இப்பதான் மாப்பிள்ளை. வந்து சிறிது நேரம் தான் ஆகிறது” என்று சொல்லிய முத்துராமன் தன் கையில் இருந்த பையன் அவரிடம் கொடுத்தான்.
‘என்ன இது? என்பது போல்’ அவரைப் பார்த்தான் ஜீவானந்த்.
“என் மகளுக்காக என்னுடைய சொந்த உழைப்பில் நான் சேர்த்து வைத்த பணம் இதில் இருக்கிறது மாப்பிள்ளை. மறுக்காமல் நீங்கள் இதை வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார்.
“இந்த பணத்திற்காக தான் நான் உங்கள் மகளை திருமணம் செய்து கொண்டிருக்கின்றேன் என்று நினைக்கின்றீர்களா?” என்று சற்று அழுத்தமாக கேட்டான் ஜீவானந்த்.
அவனின் குரலில் இருந்த பேதத்தை உணர்ந்த முத்துராமன், அவசர அவசரமாக, “அச்சோ… அப்படியெல்லாம் இல்லை மாப்பிள்ளை. இது என்னுடைய கடமை. அவள் பிறந்ததிலிருந்து அந்த வீட்டில் கஷ்டப்பட்டு கொண்டு தான் இவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாள். இனிமேலாவது அவள் இங்கு நிம்மதியாக இருக்க வேண்டும் அதுதான் என் ஆசை” என்றார்.
உடனே, “ஓ…. பணத்தை கொடுத்தால் தான் உங்கள் மகள் இங்கு சந்தோசமாக இருப்பாள் என்று நினைக்கின்றீர்களா?” என்று சற்று கோபமாகவே கேட்டான் ஜீவானந்த்.
“அச்சோ நான் அப்படி சொல்லவில்லை மாப்பிள்ளை” என்று அவர் தயங்க, ஜீவானந்த வீட்டினுள் நுழைந்ததில் இருந்து அங்கு ஓரமாக நின்று கொண்டு அவர்களது பேச்சை கேட்டுக் கொண்டிருந்த உமா தன் தந்தை அவரிடம் பேச தடுமாறுவதை கண்டு வருந்தினாள்.
இப்பொழுது உண்மையாகவே முத்துராமனுக்கும் ஒன்றும் புரியவில்லை. எப்படி பேசுவது என்று. அவர் தயங்கிக் கொண்டே அமர்ந்திருக்க, ஜீவானந்த் உமா பாரதியையும் முத்துராமனையும் மாறி மாறி பார்த்துவிட்டு, “சரி உங்கள் மகளுக்காக நீங்கள் செய்கின்றீர்கள். அதை தடுக்க நான் விரும்பவில்லை. அவளிடமே இந்த பணத்தை கொடுத்து விடுங்கள்” என்று சற்று சாந்தமாக கூறினான்.
அவனின் குரல் சற்று சாந்தப்பட்டதில் மகிழ்ந்த முத்துராமன், “சரிங்க மாப்பிள்ளை” என்று தன் மகளை அருகில் அழைத்து எங்கே அவள் மறுத்து விடுவாளோ என்று சிறிது பயந்து அவளின் கையில் பணப் பையை தினித்தார்.
இல்லை அப்பா வேண்டாம் என்று அவள் மறுத்துக் கொண்டே இருக்க, பிடிவாதமாக அவர்களிடம் ஏற்கும்படி வற்புறுத்தினார் முத்துராமன்.
இருவரின் செயல்களையும் பார்த்தவாறு அதில் தலையிடாமல் தன் ஃபோனை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஜீவானந்த்.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
Interesting
நன்றி 😊😊
Nice