Skip to content
Home » சித்தி – 15

சித்தி – 15

வீட்டிற்கு வந்த தன்னிடம் வீட்டில் உள்ளவர்கள் அன்பாக பேசுவதில் இன்ப அதிர்ச்சி அடைந்து அவர்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் உமா பாரதி.

நேரம் கடக்க அல்லிராணி மதிய உணவு உண்ண அனைவரையும் அழைத்தார். வீட்டில் அமர்வது போல் அஞ்சலியின் அருகில் அமர்ந்து கொண்டாள் உமா. அஞ்சலியின் மறுபக்கம் அமர்ந்தான் ஜீவானந்த்.

ஆட்டுக்கறி, கோழிக்கறி என்று கறி விருந்து பிரமாதமாக இருந்தது. அஞ்சலிக்கு பார்த்து பார்த்து ஊட்டி விட்டுக் கொண்டிருந்த உமாவை அவளின் தங்கை ஆச்சரியமாக பார்த்தாள். 

உணவு வேளையில் காளிமுத்துவும் அவனது மகனும் வந்தார்கள். அவர்களுக்கும் உணவு பரிமாறினார் அல்லிராணி உமா பாரதியின் எதிரில் அமர்ந்த இருவரும் பார்வையாலே உமா பாரதியை துயில் உரித்தனர்.

அவர்கள் வந்ததிலிருந்து அவர்களை கவணித்த ஜீவானந்த் அவர்களின் பார்வை தவறாக இருப்பதை உணர்ந்து கொண்டான். உணவு உண்பது போல் குனிந்து உமா பாரதியை பார்க்க அவளோ தர்ம அருவருப்பாக அவர்களை பார்த்தவாறு தர்ம சங்கடமாக அமர்ந்து கொண்டிருந்தாள்.

பார்த்த உடனேயே ஜீவானந்த் அவர்கள் இருவரின் குணத்தையும் தெரிந்து கொண்டான். உணவு உண்டு முடித்ததும் முத்துராமனிடம் “நாங்கள் கிளம்புவதாக கூறினான். 

அவரோ “இன்னும் சற்று நேரம் இருந்துவிட்டு சாயங்காலமாக கிளம்பலாமே!”  என்று கேட்க, 

நெற்றியை கட்டை விரலால் நீவிக்கொண்டு, “இல்லை… எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது. வேண்டுமென்றால்…” என்று உமா பாரதியை பார்க்க, 

சற்றென்று அவள் தன் தந்தையிடம், “அப்பா நாங்கள் இப்பொழுதே கிளம்புகிறோம்” என்று அவசரமாக கூறினாள்.

மகளின் நிலைமையையும் புரிந்த முத்துராமன் ”சரி” என்று ஒத்துக் கொண்டு அல்லிராணியை பார்க்க அவள் ஒரு தாம்பலத்தில் ஜீவானந்த், உமா பாரதி இருவருக்கும் புது உடையும் சில நகையும் பூ பழம் வைத்து கொடுத்தார். 

அங்கு நடப்பவற்றை கண்டு உமா பாரதிக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம். இது எப்படி சாத்தியம் என்று நினைத்துக் கொண்டே தந்தை மற்றும் சித்தியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். 

அதே போல் அஞ்சலிக்கு புது உடையும் பொம்மையும் பரிசாக கொடுத்தார் முத்துராமன். மிகவும் மகிழ்ச்சியாக அவற்றை வாங்கிக் கொண்டாள் அஞ்சலி. 

அதன் பிறகு அனைவரிடமும் சொல்லிவிட்டு தங்கள் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டிற்கு வந்த பிறகு கூட உமா பாரதி தன் சித்தியும் அவரின் பிள்ளைகளும் எப்படி இப்படி மாறினார்கள் என்று யோசித்துக் கொண்டே இருந்தாள். 

ஜீவானந்த் இன்னும் வராததால் அஞ்சலி அவனைத் தேடிக் கொண்டே இருந்தாள். நேரம் கடக்க மரகதம் அவளை தன்னறையில் உறங்க வைத்தார். 

வழக்கமாக படுக்கும் இடத்தில் உமா பாரதியும் படுத்துக் கொண்டு அவனது வரகைக்காக காத்திருந்து கொண்டே எப்பொழுது உறங்கினோம் என்று தெரியாமலேயே உறங்கியும் விட்டாள். 

வெகு தாமதமாக வீட்டிற்கு வந்த ஜீவானந்த் உறங்கும் உமா பாரதியை அழுத்தமாக பார்த்துக்கொண்டு தன்னறைக்குச் சென்று விட்டான். மறுநாள் விடிய வழக்கம் போல் அவரவர் வேலைகளை செய்தனர். 

அஞ்சலியும் இன்று பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால் உமா பாரதி அவளை தயார்படுத்தி அனுப்புவதில் கவனமாக இருந்தாள். ஜீவானந்த்  வேலைக்குச் சென்றதும் மரகதத்திடம் அப்பாவிடம் பேச வேண்டும் என்றாள் உமா. 

அவரும் ஃபோனை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.  தந்தைக்கு அழைத்த உமா பாரதி அனைவரையும் நலனையும் விசாரித்துவிட்டு, பின் நேற்று எப்படி சித்தியின் என்னுடன் சுமூகமாக பேசினார்கள்? என்று தனக்குள் அழுத்திக் கொண்டிருந்த கேள்வியை தன் தந்தையிடம் கேட்டு விட்டாள். 

அவரும் சிறிது மௌனத்திற்கு பிறகு அவளது திருமணத்தன்று வீட்டில் நடந்தவற்றை கூறிவிட்டார். அதில் தன் தந்தை தனக்காக பேசி இருக்கிறார் என்பதில் சற்று மகிழ்ந்தாலும், “அப்பா… அவர்கள் குணம் தெரிந்தும் நீங்கள் இப்படி பேசி இருக்க வேண்டாம். மாமா கோபத்தில் ஏதாவது செய்து விடுவார்களோ? என்று பயமாக இருக்கிறது” என்று தனக்குள் தோன்றிய பயத்தை தன் தந்தையிடம் தெரிவித்து விட்டாள். 

அவரும், “நானும் யோசித்தேன் அம்மா. ஆனால் இன்னும் அப்படியே இருந்தால் என்ன தான் முடிவு?”  என்று தான் இப்படி பேசி விட்டேன். 

“எனக்கு எந்த சொத்தும் தேவையில்லை அப்பா. உங்கள் பாசம் போதும். அவர்களுக்கே கொடுத்து விடுங்கள்” என்று கூறினாள் உமா பாரதி.

“அதற்காக நான் உன்னை அப்படியே விட்டு விட முடியுமா? எல்லோருக்கும் செய்ய வேண்டியவை செய்து தானாக வேண்டும்” என்று சொல்லிவிட்டு “நீ இதைப் பற்றி எதையும் ரொம்ப யோசித்து உன்னை குழப்பிக் கொள்ளாதே டா. அப்பா பார்த்துக்கொள்கிறேன் என்றார். 

பின்னர் “நேற்று காளிமுத்துவும் அவன் மகனும் எங்கோ சென்று நல்லா அடிவாங்கி வந்துள்ளார்கள். கை முறிந்து முகம் எல்லாம் நல்லா அடி. யார் கிட்ட வம்பு இழுத்தார்களோ தெரியவில்லை. தேறி வர எப்படியும் நாலு அஞ்சு மாசம் ஆகும் போல. அதன் பிறகு உன் சித்தியும் கொஞ்சம் பயந்தது போல் தான் உள்ளாள். 

என்ன என்று தெரியவில்லை. சரி போகட்டும் கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்து தானே ஆகனும். பார்ப்போம் . எப்படியும் ஒரு நாள் தெரிய போகிறது. சரிம்மா.. நீ இங்கு உள்ளதை பற்றி யோசிக்காதே. அப்பா பார்த்துக்குறேன். நீ சந்தோசமா இரு” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.

அதன் அதன் பிறகு நாட்கள் அப்படியே எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்து கொண்டிருந்தது. வீட்டு வேலைகள் முழுவதையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டாள் உமா பாரதி. 

மரகதம் இப்பொழுதெல்லாம் அதிக ஓய்வில் தான் இருக்கிறார். அதனால் அக்கம் பக்கம் உள்ள கோயில்களுக்கு அடிக்கடி சென்று வருவது, தூரத்து உறவினர்களை சென்று பார்த்து வருவது என்று அவருக்கு நேரம் கிடைத்தது.

இப்படியாக மூன்று மாதங்கள் கடந்து விட்டது. அன்று வெள்ளிக்கிழமை மரகதத்தின் தூரத்து உறவினர்கள் வீட்டில் ஞாயிறு அன்று திருமணம் இருப்பதால் அஞ்சலியை அழைத்துச் செல்லலாம் என்று நினைத்திருந்தார் மரகதம். 

அதன்படியே பள்ளியிலிருந்து வந்தவுடன் அவளை அழைத்துக்கொண்டு திருமணத்திற்கு செல்ல கிளம்பினார். ஞாயிறு இரவு தான் வருவேன் என்று உமா பாரதியிடம் சொல்லிவிட்டு பத்திரமாக இருந்து கொள்ளுங்கள் என்று கிளம்பினார். 

கிளம்பும் பொழுது ஜீவானந்திற்கு போனில் அழைத்து தான் ஊருக்கு கிளம்புவதாகவும் இரவு சீக்கிரம் வீட்டில் வீட்டிற்கு வந்துவிடு உமா தனியாக இருப்பாள் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

அவர்கள் கிளம்பியதும் வேலைகளும் முடித்து இருந்ததால், நேரம் கடப்பது மெதுவாக இருப்பது போல் உமா பாரதிக்கு தோன்றியது. காய்ந்த துணிகளை மடித்து வைத்துக்கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று சில்லென்று காற்று வீச தொடங்கியது. இன்று மதியம் வெயில் அதிகம் கொளுத்தியதால் மழை வரும் என்று நினைத்து,  மாடுகள் எல்லாம் கொட்டகைக்குள் உள்ளதா என்று பார்க்க கொல்லைப்புறம் சென்று  வெளியே இருந்த மாடுகளை அவிழ்த்து கொட்டகைக்குள்  கட்டிக் கொண்டிருந்தாள். மழை நன்றாக தூற ஆரம்பித்து விட்டது.

அனைத்தையும் கட்டி முடித்துவிட்டு கன்று குட்டியை அவிழ்த்து பசுவின் அருகில் கட்டும்போது கன்றுக்குட்டி துள்ளி குதித்து அவளது கையில் இருந்து கயிறு உருவிக் கொண்டு ஓடியது.

வேகமாக பிடிக்க அதன் பின் ஓடினாள் உமா. அதற்குள் பின்பக்க தட்டியை  தாண்டி வெளியே ஓடிவிட்டது.  மழையும் சடசடவென்று வேகமாக பெய்ய கன்று குட்டி துள்ளிக்கொண்டே வேகமாக அங்கு எங்கும் ஓடியது. ஒரு வழியாக அதைப் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தாள்.

அவள் வேலியை நெருங்கும் பொழுது வீட்டின் பின் வாசலில் ஜீவானந்த் நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான். 

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

2 thoughts on “சித்தி – 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *