Skip to content
Home » சித்தி – 18

சித்தி – 18

    ஒரு வாரம் தோட்ட வீட்டிலேயே தங்கி இருந்த ஜீவானந்தை ஏன் சென்ற வாரம் இங்கு வரவில்லை என்று கேள்வி கேட்டார் மரகதம்.

ஜீவானந்தும் தன் மனதை அழுத்திய விஷயத்தை தன் அத்தையிடம் பேச ஆரம்பித்தான். “எனக்கு உமா பாரதி  என்று இல்லை, மீண்டும் யாரையும் திருமணம் செய்வதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை.

உங்களின் வற்புறுத்தலினால் தான் திருமணத்திற்கு சம்மதித்தேன். என் ஆழ் மனதில் என் மனைவியைத் தவிர தவிர வேறு ஒரு பெண்ணை உடலாலும் உள்ளத்தாலும் மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தேன். ஆனால் நீங்கள் அஞ்சலியின் வாழ்விற்காக என்னை திருமணம் செய்ய வற்புறுத்திக் கொண்டே இருந்தீர்கள். 

திருமணம் செய்து வருபவள் என்னை கணவனாக ஏற்றுக் கொண்டாலும் என் குழந்தையை மகள் போல் ஏற்று கொள்வாள் என்ற நம்பிக்கை எனக்கு சிறிதும் இல்லை. 

அதை உறுதி செய்வது போல் எங்களது திருமணத்திற்கு பாரதியின் தந்தையைத் தவிர வேறு ஒருவரும் வரவில்லை. ஆகையால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இரண்டாம் தரமாக அவளை மணம் முடித்து கொடுப்பதில் விருப்பமில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

அப்படி விருப்பம் இல்லாதவர்கள் எப்படி என் குழந்தையை அவளுடன் வளர விடுவார்கள் என்று நினைத்தேன். அதன் பிறகு மறு வீடு சென்றோம் அல்லவா?” என்று அத்தையை பார்த்தான். 

அவரும் ‘ஆமாம்’ என்று தலையாட்ட, “அன்று அவளது மாமாவும் அவரது பையனும் பாரதியை பார்த்த பார்வையே சரியில்லை.

அதன் பிறகு தான் நான் பாரதியை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது நம் அஞ்சலி மாதிரி தான் பாரதியும். சிறு வயதிலேயே தாயை இழந்தவள். சித்தியிடம் வளர்ந்தவள். 

அவளின் சித்தி நான் கேள்விப்பட்ட சித்தியைப் போலவே  சற்றும் மாறாத குணம் உடையவர். சிறுவயதிலிருந்து திருமணம் வரை கஷ்டத்தை தவிர வேறு எதையும் அனுபவிக்காதவள். இப்படிப்பட்ட பெண் நிச்சயம் என் மகளை நன்கு கவனித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை இருந்தது. 

அங்கு அவள் இருக்கும் பொழுது அவள் மாமனாலும் அவனது மகனாலும் அதிக கஷ்டப்பட்டு இருக்கிறாள். அவர்கள் அவளை மனதளவில் அதிகம் துன்புறுத்திருக்கிறார்கள். தன்னை காத்துக் கொள்ள அவள் படாத பாடு பட்டிருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டேன். 

அதை கேள்விப்பட்ட போது எனக்கு அவர்களை கொல்லும் அளவிற்கு ஆத்திரம் வந்தது. அதனால் அவர்களை நன்றாக அடித்து நையப் புடைத்து விட்டேன், இனி அவள் புறம் திரும்பக் கூடாது என்று எச்சரிக்கையுடன். 

இதுவரை அவள் பட்ட கஷ்டங்கள் போதும், இனிமேல் அவள் வாழும் வாழ்க்கையில் எந்தவிதமான இன்னல்களும் கவலைகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இருந்தாலும் அவளை  மனைவியாக ஏற்றுக் கொள்ள மனதளவில் முடியவில்லை. 

அதேபோல் அவள் என் மகளை என்றாவது ஒரு நாள் கஷ்டப்படுத்தி விடுவாளோ என்ற எண்ணமும் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அப்படி இருக்க போன வாரம் நான்….” என்று தயங்கி, நான் அவளுடன் உடலால் இணைந்து விட்டேன். ஆனால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒரே குற்ற உணர்வாக இருந்தது. 

அதனால் தான் அவளை பார்க்காமல் இருக்க நினைத்து தோட்ட  வீட்டில் இருந்தேன்.  தனியாக இருந்து யோசிக்க யோசிக்க எப்படி என்றாலும் இந்த ஊர் உலகத்தை பொறுத்தவரையில் அவள் என் மனைவி, ஆகையால் மனைவியுடன் வாழ்வதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்தேன். 

அவள் அஞ்சலியை நிச்சயம் வெறுக்க மாட்டாள் என்று என் மனதிற்கு தெரிந்தாலும் அறிவு என்னவோ சந்தேகப் பட்டுக் கொண்டே இருந்தது. அதனால் தான் நான் இங்கு வரவே இல்லை” என்று கூறி முடித்து அத்தையை பார்த்தான். 

அவரோ அதிர்ந்த நிலையில் தன் மருமகனின் பார்த்து, “எப்படி ஆனந்து நீ இப்படி நினைக்கலாம். அவள் அஞ்சலியை தன் குழந்தை போல் தான் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றாள். 

முதல் முதலில் நான் அவளை கோயிலில் வைத்து பார்க்கும் பொழுதே எனக்கு அவளை மிகவும் பிடித்து போய்விட்டது. அவளை பார்த்ததும் எனக்கு என் மகளை பார்ப்பது போல் இருந்தது. அப்பொழுது அக்கம் பக்கம் விசாரித்ததில் அவளது குணமும் அவளது சித்தியின் குணமும் எனக்கு நன்று புரிந்து விட்டது. 

அவள் அஞ்சலியை மட்டுமல்ல உன்னையும் என்னையும் நன்றாகவே கவனித்துக் கொள்வாள் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. ஆகையால் தான் தைரியமாக பெண் கேட்டேன்”. 

“நீங்கள் அப்பொழுதே விசாரித்து விட்டீர்கள் அத்தை. ஆனால் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் நான் எதைப் பற்றியும் அப்பொழுது யோசிக்கவில்லை. ஆனால் இப்போது அவளைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகுதான் அவளுடன் வாழலாம் என்று முடிவெடுத்தேன்” என்று சொல்லிவிட்டு, “நான் தோட்டத்திற்குச் சென்று தண்ணீர்  பாய்ச்சி விட்டு வருகிறேன். நேரமாகிறது” என்று கிளம்பும்போது பின் வாசலில் அதிர்ச்சியுடன் நின்றிருந்த உமாவை பார்த்து விட்டான். 

அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்து ஜீவானந்தும் சற்று அதிர்ந்து விட்டான். பின்னர் அவளின் அருகே அவன் நெருங்கி செல்ல, அவளின் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று வடிந்தது. 

ஏன் அவள் கண்களில் கண்ணீர் வடிக்கிறது என்று ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவளின் அருகே செல்ல, அவளோ தன் கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டு வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

ஏன் அழுகிறாள் என்று யோசித்தாலும் மின்சாரம் இருக்கும் பொழுதே மோட்டார் போட வேண்டிய அவசியம்  இருப்பதால் வந்து கேட்டுக் கொள்ளலாம் என்று அத்தையிடம் சொல்லிவிட்டு தோட்டத்திற்குச் சென்று விட்டான்.

கண்ணீர் வடிய சமையல் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் உமா பாரதி. மரகதமும் இப்பொழுது எதுவும் கேட்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு அஞ்சலியை எழுப்ப சென்று விட்டார். அதன் பிறகு  அஞ்சலியை சார்ந்து  நேரம் ஓடியது உமா பாரதிக்கு.

அவளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ஓய்வாக அமர்ந்த உமா பாரதியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டே, “ஆனந்து பேசியதை கேட்டு நீ ஏன் அழுதாய்? உன் மனதில் என்ன இருக்கிறது?” என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் மரகதம்.

“அவர் பேசுவதை ஆரம்பத்தில் இருந்தே கேட்டுக் கொண்டுதான் இருந்தேன் அம்மா. என் அப்பா சித்தியை திருமணம் செய்து கொண்டு வரும் பொழுது நான் அவர்களை அம்மாவாக தான் பார்த்தேன். ஆனால் அவர்கள் என்னை மகளாக பார்க்க வில்லை.

அப்பா இருக்கும்பொழுது ஒருவிதமாகவும் அவர் இல்லாத பொழுது ஒருவிதமாகவும் சித்தி என்னிடம் நடந்து கொள்வதை புரிந்து கொள்வதற்கே எனக்கு வெகு தாமதம் ஆகியது.

பாசத்திற்கு எப்படி ஏங்கினேன் தெரியுமா?. அப்படி இருக்க நான் எப்படி அஞ்சலியை வெறுப்பேன். அவுங்க என்னை இப்படி நினைத்தது வருத்தமாக இருந்தது” என்று தன் மனதில் இருந்ததை சொல்லிக் கொண்டு இருக்கும்போது தோட்டத்து வேலையை முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஜீவானந்த். 

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

2 thoughts on “சித்தி – 18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *