தனது நிலையை உணர்ந்த உமா பாரதி வெறும் உமாவாக மாறி விட்டாள். படிப்பை நிறுத்தியதில் இருந்தே காலை ஐந்து மணிக்கு எழுப்பி விட்டு வாசல் தெளிக்க வைத்து விடுவாள் அல்லிராணி. அன்று பழகியது இதோ இன்று வரை அலாரம் அடிக்காமலேயே எழுந்து விடுவாள்.
காலங்கள் ஓட முத்துராமனும் கொஞ்சம் கொஞ்சம் பணம் சேர்த்து தன் தந்தை வைத்திருந்த ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்ய ஆரம்பித்தார்.
சுற்று வட்டாரம் முழுவதும் புஞ்சை நிலம் என சொல்லப்படும் புன் செய் நிலம் தான். ஆகவே சோளம் அல்லது பருத்தி அல்லது மிளகாய் என்று காலநிலைக்கு தகுந்தவாறு மாற்றி மாற்றி பயிரிட ஆரம்பித்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக வருமானம் பெருகவும், தங்கள் குடிசை வீட்டை மச்சி ( மாடி) வீடாக மாற்றினார். கொல்லைப்புறம் கிணறு குளியலறை கழிப்பறை கட்டினார்கள்.
தரைத்தளத்தில் சமையலறை இரண்டு படுக்கை அறை பெரிய ஹால் மாடியில் இரு படுக்கை அறை என்று வசதியான வீடு.
எவ்வளவு வசதி இருந்தும் உமாவின் படுக்கை ஹாலில் ஒரு மூலையில் தான். நாட்கள் கடக்க பிள்ளைகள் பெரியவர்களாக மாறினார்கள்.
முத்துராமன் தன் மகள் வயதுக்கு வந்து விட்டதால். அறையில் தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், மாடியில் உள்ள ஒரு சிறிய அறை உமாவிற்கு வழங்கப்பட்டது.
பெயருக்கு தான் அது அவள் அறை. அங்கு அவள் இருப்பது ஐந்து மணி நேரம் தான். ஆம் உறங்க மட்டுமே அந்த அறை.
நாட்கள் கடக்க வீட்டில் முத்துராமனை தவிர மற்றவர்கள் அனைவரும் அவளை வேலைக்காரியாக நடத்தியதில் அவள் முழுதும் வேலைக்காரியாகவே மாறி விட்டாள்.
காலங்கள் ஓட பிள்ளை பருவத்தில் இருந்து இளமை பருவத்தில் அடியெடுத்து வைத்தனர் சிறுவர் சிறுமியர்.
காளிமுத்துவின் மகன் கல்லூரியில் அடி எடுத்து வைத்த ஒரு வாரத்தில் உமாவிடம் தவறாக நடக்க முயன்றான்.
அவனை அடித்து தவறை திருத்த முயன்றாள். அவன் அடித்த அவள் கையை முறுக்கி அவளை அடக்கினான்.
ஒழுங்காக நான் சொல்வதை கேள் என்று மிரட்டினான். அவள் சிறிதும் பயம் இல்லாமல் அவனை அடித்து வெளியே விரட்டிவிட்டு, சித்தியிடம் அவன் நடந்து கொண்டதைப் பற்றி கூறினாள்.
ஆண் பிள்ளை என்றால் அப்படித்தான் இருப்பார்கள். பெண் பிள்ளை நீதான் அடக்க ஒடுக்மாக இருக்க வேண்டும் என்று இவளையே திட்ட ஆரம்பித்தார்.
அதில் வருந்திய உமா இனி சித்தியை நம்பி பயன் இல்லை. தன்னை தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள். நாட்கள் கடக்க அவனின் பார்வை உமாவை மொய்த்துக் கொண்டே இருந்தது.
காளிமுத்து மாமாவின் வீட்டிற்கு சென்று தெரிவிக்க, அவளின் அத்தை வருந்தி மகனை கண்டிப்பாக கூற, காளிமுத்துவோ என் மகன் அப்படி தான் இருப்பான். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று அவளை விரட்டி விட்டான்.
இப்படியே நாட்கள் கடக்க மகன் போலவே காளிமுத்துவும் அவளை வம்பு பண்ண ஆரம்பித்து விட்டான். ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் காளிமுத்துவின் மனைவியும் இறந்து விட்டாள்.
அவள் இறந்து மூன்று மாதம் கழித்து தன் அக்காவிடம் உமாவை தனக்கு திருமணம் செய்து தரும்படி கேட்டான் காளிமுத்து.
அல்லிராணிக்கும் அவளை அவன் வீட்டிற்கு அனுப்பி விட்டால் தொல்லை இல்லை, திருமண செலவும் இல்லை என்று நினைத்து சம்மதம் கூற, பொங்கி எழுந்து விட்டார் முத்துராமன்.
“என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இருவரும்? என் பிள்ளையை ஏன் நான் இரண்டாம் தாரமாக கொடுக்க வேண்டும்? அதுவும் இவனுக்கு! என் பிள்ளையின் வயது என்ன? உன் தம்பியின் வயது என்ன?” என்று இருவரையும் திட்டி விட்டு, “இனி இதைப் பற்றி இந்த வீட்டில் பேசினால் யாரும் இங்கு இருக்க முடியாது” என்றார்.
அவரின் கோவத்தை கண்ட அல்லிராணியும் அதன் பிறகு சிறிது அடங்கி விட்டாள். அவளின் மகள் கல்லூரி படிப்பை முடிந்ததும், நல்ல வரன் பார்த்து திருமணம் முடிக்க பேச, முத்துராமன் மீண்டும் பெரியவள் இருக்கும் பொழுது சிறியவளுக்கு எப்படி மணம்முடிக்க முடியும் என்று கேட்டார்.
உமாவின் ஜாதகத்தில் தோஷங்கள் இருப்பதாகவும், சின்னவளுக்கு இப்பொழுது முடித்து விட்டால் பெரியவளுக்கும் விரைவாக திருமணம் முடியும் என்று ஏதேதோ காரணம் சொல்லி திருமணத்தை நடத்திய முடித்து விட்டாள் அல்லிராணி.
வரிசையாய் ஒவ்வொரு திருமணமும் அடுத்தடுத்து முடிய வருடங்கள் தான் ஓடியதை தவிர உமாவின் திருமணத்தைப் பற்றி அல்லிராணி ஒரு மூச்சு கூட விடவில்லை.
அதை தாமதமாகவே உணர்ந்த முத்துராமனுக்கும் முன்போல் உடல்நிலை இல்லாததால், மகளின் திருமணத்தை நடத்த முடியாமல் தவித்தார்.
ஆஸ்துமா பிரச்சனை வந்து, வேலைக்குச் செல்வதே குறைந்து விட, அவருக்கு பணிவிடை செய்தால் தனக்கும் அந்நோய் வந்துவிடும் என்று பயந்து அல்லிராணியும் அவருக்கு தனி அறை கொடுத்து தன் கணவனை ஒதுக்கி விட்டாள்.
அதுவும் நல்லதாகவே பட்டது உமாவிற்கு. தன் தந்தையை கவனித்துக் கொண்டு அவரது அறையிலேயே படுத்து உறங்க ஆரம்பித்தாள். மாடியில் தனது அறையிலோ ஹாலிலோ படுத்தால் காளிமுத்து, அவன் மகனின் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். இப்பொழுது தன் தந்தையின் அறையில் படுப்பதால் நிம்மதியாக உறங்கினாள்.
வீட்டிற்கு வந்த மருமகனின் கண்ணும் உமாவை எல்லை மீறி தீண்ட ஆரம்பித்தது. எப்படியும் ஏதாவது ஒரு நாள் இதிலிருந்து தன்னை இறைவன் காத்து விடுவான் என்ற நம்பிக்கையில், தன் தந்தையை கவனித்துக் கொண்டும் வீட்டு வேலைகளை செய்து கொண்டும் காலத்தை கடத்திக் கொண்டிருந்தாள்.
இதோ இன்று கொல்லை புறத்தில் குளிக்க செல்ல, அவளை உரசியபடி வந்து நின்ற காளிமுத்து, “என்ன உமா இந்த மாமனை கண்டுக்கவே மாட்டேங்கிறாய்?” என்று அவளை நெருங்கினான்.
அவனிடமிருந்து லாவகமாக விலகி வீட்டினுள் செல்ல முயல, அவள் கையைப் பிடித்து இழுத்து, “பதில் சொல்லுடி” என்று கையை முறுக்கினான்.
சரியாக அங்கு வந்த முத்துராமன் காளிமுத்துவை தடுத்து, “என்ன தைரியம். என் மகள் கையை பிடிக்கிறாய்?” என்று அடித்து விட்டார்.
“யோவ் மாமா… அக்கா வீட்டுக்காரர் என்று பார்க்கிறேன். இல்லைன்னு வை… திருப்பி அடிச்சேன் உயிரோட இருக்க மாட்ட” என்று அவரை மிரட்டி விட்டு தன் வீட்டிற்கு சென்று விட்டான்.
முத்துராமன் தன் மகளிடம் கையை கூப்பி, “என்னை மன்னித்து விடுமா. உன்னை பாதுகாக்க தவறிவிட்டேன். முப்பது வயதுக்கு மேல் ஆகியும் உனக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்து விட்டேன். உன்னை விட வயதில் சின்னவர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டி என்று குடும்பமாக இருக்காங்க. ஆனால் உன் வாழ்க்கையை நான் இப்படியே விட்டு விட்டேன். என்னை மன்னித்து விடுமா” என்று கண்ணீர் மல்க கேட்டார்.
அவரின் கையைப் பிடித்து இறக்கி. “அப்பா தயவு செய்து இப்படி பேசாதீர்கள். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. நான் நலமுடனே இருக்கிறேன். உங்களுடன் இருக்கும் வரை எனக்கு என்ன கவலை?” என்று
அவருக்கு ஆறுதல் சொன்னாள் உமா.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
☹️😡
இவர்கள் மனித இனத்தின் கேடு கெட்ட ஜென்மம்