திருமணம் முடிந்து மறு வீட்டிற்கு வந்த பிறகு தன் தந்தையின் வீட்டிற்கு இப்பொழுதுதான் அஞ்சலி மற்றும் ஜீவானந்துடன் வந்துருக்கிறாள் உமா பாரதி. அவர்களை அன்புடன் மகிழ் வரவேற்றார் முத்துராமன்.
முத்துராமனின் அன்பிற்கு சற்றும் குறையாமல் மகிழ்வுடன் உமா பாரதியுடன் பேசினார் அல்லிராணி. அதில் ஆச்சரியமடைந்த உமா பாரதி தன் தந்தையை பார்க்க, அவர் தன் மனைவி அல்லிராணியின் மனமாற்றத்தை பற்றி கூற ஆரம்பித்தார்
“உன் திருமணத்திற்கு வராததால், உன் சித்தியும் அவளின் பிள்ளைகளும் உனக்கு மதிப்பளித்தால் இந்த வீட்டில் இருக்கலாம். இல்லையென்றால் வெளியே சென்று படி சொல்லிவிட்டேன். என் எல்லா சொத்துக்களையும் உனக்கு மட்டுமே கொடுப்பதாகவும் சொன்னேன்.
அதில் பயந்து முதலில் கொஞ்சம் அமைதியாக இருந்த உன் சித்தி, தன் தம்பியின் உதவியுடன், என்னிடம் உள்ள சொத்துக்களை எழுதி வாங்க திட்டம் போட்டு இருக்கும்பொழுது தான், மாப்பிள்ளை காளிமுத்துவை போட்டு அடித்திருந்தார்.
உன் சித்தி, அவள் தம்பி காளிமுத்துவையும் அவனது மகனையும் யாரோ அடித்து விட்டார்கள், என்று கேள்வி பட்டு அவர்களை பார்க்க சென்று விட்டு, வந்த பிறகில் இருந்து ஏதோ பயந்தது போல் தான் இருந்தாள் அல்லிராணி.
என்ன என்று விசாரிக்க என்னிடம் அவள் எதுவும் கூறவில்லை. பிறகு தான் தெரிந்தது அவர்களை அடித்தது என் மருமகன் என்று. அது உன் சித்திக்கும் தெரிந்ததால் தான் அந்த பயம். அதில் எனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லை. அவர்கள் செய்த கேடுகெட்ட செயல்களுக்குத்தான் என்று எனக்கு புரியும்படி கூறினார்” என்று சோகமாக தன் மகளைப் பார்த்தார்.
“நீ இந்த வீட்டில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கின்றாய் என்பதை கூட அறியாமல் கண்ணிருந்தும் குருடனாய் இருந்து விட்டேன். என்னை மன்னித்து விடுமா” என்று அவளது கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டார்.
“என்னப்பா இது. மன்னிப்பு அது இது என்று பெரிய வார்த்தை எல்லாம் என்னிடம் கேட்கின்றீர்கள்?” என்று அவருக்கு ஆறுதலாக சொன்னாள்.
பின்னர் தொடர்ந்த முத்துராமன், உன் தம்பி வயல் வேலை செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டு மில்லில் வேலைக்குச் சேர்ந்து, மில் பக்கத்திலேயே வீடு பார்த்து தன் மனைவி குழந்தைகளுடன் சென்று விட்டான்.
உன் தங்கை கணவரையும் மாப்பிள்ளை கண்டித்து, இனி மாமனார் வீட்டில் இருந்து சும்மா சும்மா எதுவும் வாங்க கூடாது என்று புரிய வைத்து அவரையும் ஒழுங்காக வேலைக்கு செல்லும்படி சொன்னார்.
அவருக்கு வேலைக்கு செல்ல விருப்பமில்லாததால் அவர்கள் ஊரிலேயே மெயின் ரோட்டில் ஒரு மளிகை கடை வைத்து கொடுத்து கவனமாக நடந்து முன்னேறும் படி அறிவுரைகள் கூறினார்.
அது மட்டுமல்லாமல் வாரம் ஒரு முறை நம் வயலையும் வந்து பார்த்துக் கொண்டு என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்தார்.
என்னால் முன்பு போல் கடின வேலை செய்ய முடியாததால் அவற்றையெல்லாம் ஆள் வைத்து செய்ய ஏற்பாடு செய்து, அவற்றை அவர் கூடவே இருந்து மேற்பார்வை செய்தார்.
காளிமுத்து இருக்கும் வீட்டையும், அவன் என் பணத்தில் வாங்கி இருந்த விவசாய மனையையும் அவனின் பெயரிலேயே இருக்கட்டும் என்று கூறிவிட்டு, இனிமேல் என் வழிக்கு வரக்கூடாது. உன் வயலில் நீ வேலை செய்து சம்பாரித்துக்கொள், என்று முடிவாக சொல்லி விடும் படி கூறினான்.
அதன்படி காளிமுத்துவும் அதன் பிறகு என்னிடம் வரவில்லை. உன் சித்தியிடமும் இனி உன் தம்பியின் பேச்சை கேட்டோ,உன் பிள்ளை பேச்சை கேட்டோ, ஏதாவது என் மூத்த மகள் உமாவை தொந்தரவு செய்தால், என்னிடம் இருந்து முழுமையாக விலகி சென்று விடு என்று கோபமாக கூறிவிட்டேன்.
அதன் பிறகு உன் சித்தி முழுமையாக மாறிவிட்டார்” என்று நீண்ட விளக்கத்தை கொடுத்து அமைதியாக தன் மனைவியையும் மகளையும் மாறி மாறி பார்த்தார் முத்துராமன்.
தன் தந்தை கூறியவற்றை கேட்டு அதிர்ச்சியில் விழி விரித்து அமர்ந்திருந்தாள் உமா பாரதி. தன் கணவன் தனக்காக தன் குடும்பத்திற்கு இவ்வளவு செய்திருக்கிறாரா? என்று வியந்து தன் கணவனை பார்த்தாள்.
அவனும் இவற்றிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் தன் மகளை மடியில் வைத்துக் கொண்டு ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான்.
அவனை பார்க்க பார்க்க அவளுக்கு அவனின் மேல் உள்ள பிடித்தம் அதிகமாகி கொண்டே போனது.
அதன் பின் உணவு முடித்து மகிழ்வாகவே தங்கள் வீட்டிற்கு வந்தார்கள். நாட்களில் இனிமையாக கடந்தது அஞ்சலிக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாள் உமாபாரதி.
அஞ்சலியும் கொஞ்சம் கொஞ்சமாக உமா பாரதியை தன் அம்மாவாக ஏற்றுக் கொள்ள தொடங்கினாள். சிறு பிள்ளை தானே அவளுக்கு இருந்த பயம், உமா பாரதியின் அன்பில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது.
ஜீவானந்தும் வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஒவ்வொரு விஷயத்திற்கும் பாரதி பாரதி என்று மனைவியை தான் எதிர்பார்த்தான். தன் அன்பினால் மரகதம், அஞ்சலி, ஜீவானந்த் மூவரின் உயிர் மூச்சாக முழுவதும் மாறியிருந்தாள் உமா பாரதி.
நாட்கள் மகிழ்ச்சியாக கடக்க இவர்களின் மேல் உமா கொண்டுள்ள பாசத்தை கண்டு ஊரே வியந்தது.
யார் கண் பட்டதோ தெரியவில்லை. உமா பாரதியின் மகிழ்ச்சியில் ஒரு லாரி மண்ணை கொட்டியது போல் அன்று காலை மூன்றாவது தெருவில் வசிக்கும் குமாரசாமியின் வீட்டில் நடந்த துயர சம்பவம் மூலம் நடந்தது.
குமாரசாமி தன் முதல் மனைவி இறந்ததும் தன் மகனை வளர்ப்பதர்க்காக இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவரின் புது மனைவியும் ஆரம்பத்தில் அவரின் மகனை நன்கு கவனித்துக் கொண்டாலும், அவளுக்கு ஒரு மகன் பிறந்ததும் மூத்த தாரத்தின் மகனை கொடுமை படுத்த ஆரம்பித்தாள்.
அது பல நாட்களாக தொடர, இன்று அந்த சிறுவன் இரவோடு இரவாக வீட்டை விட்டு ஓடிவிட்டான். ஊர் மக்களுக்கு எந்த உதவி தேவை என்றாலும் முதலில் ஜீவானந்திடம் தான் வந்து நிற்பார்கள்.
அதே போல் இன்றும் அவனிடமே முதலில் விசயம் தெரிய வர, ஊரில் உள்ள இளந்தாரி பசங்களுடன் எட்டுத்திக்கும் தேட தொடங்கினான். எங்கு சிறுவன் கிடைக்காமல் போக, போலீஸில் புகார் அளித்தார்கள்.
அன்று முழுவதும் அலைந்து திரிந்து இரவு நேரம் கழித்து சோர்வாக வீட்டிற்கு வந்தான் ஜீவானந்த். வரும் வழியில் எல்லாம் ஒவ்வொருவரும் அவனிடம் சிறுவனை பற்றி விசாரித்தார்கள். அப்படியே குமாரசாமியின் மனைவியையும் அனைவரும் திட்ட, அவர்கள் பேசுவதை கேட்டு குழப்பமாகவே வீட்டிற்குள் நுழைந்தான்.
அப்பாவை எதிர்பார்த்து காத்திருந்த அஞ்சலியை தன் மடியில் வைத்து தூங்க வைத்துக் கொண்டு இருந்தாள் உமா பாரதி. மகளை பார்த்துக் கொண்டே உள்ளே வந்த ஜீவானந்திற்கு எவ்வளவு தடுத்தும் குமாரசாமியின் மனைவியையும் உமா பாரதியையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
ஒருவேளை உமா பாரதியும் அவளுக்கென்று ஒரு குழந்தை பிறந்தால் அஞ்சலியை வெறுத்து விடுவாளோ? என்று ஒரு மனம் சொல்ல, ச்சே ச்சே… என் பாரதி அப்படிப்பட்டவள் அல்ல! என்று மற்றொரு மனம் கூப்பாடு போட்டது.
இரண்டு மனதிற்கும் இடையே போராடியபடியே, உமா பாரதி சாப்பிட அழைத்தது கூட கேட்காமல் தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான் ஜீவானந்த்.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
Nice epi😀
அச்சோ