தன் மகளின் திருமணத்திற்கு ஒரு பைசா கூட செலவு பண்ண முடியாது என்று கூறிய அல்லிராணியை வேதனையுடன் பார்த்தார் முத்து ராமன்.
ஏற்கனவே இரண்டாம் தாரமாக தன் மகளை கட்டிக் கொடுக்க வேண்டுமா? என்ற யோசனையில் அமர்ந்திருந்த முத்துராமன் தன் மனைவி இவ்வாறு பேசியது மேலும் வேதனையை தந்தது.
இந்தக் குடும்பத்திற்காக இதுவரை ஓடி ஓடி உழைத்தேன். என் மகள் மாடாய் வீட்டு வேலை செய்தாள். அவளுக்கு உரிய வயதில் திருமணம் செய்து வைக்கத்தான் முடியவில்லை. இப்பொழுது தானாக வந்திருக்கும் வரனையும் தன் மனைவி இப்படி பேசுவதை கேட்டு வேதனையுடன் அமர்ந்திருந்தார்.
உடனே மரகதம் “நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டாம். கோயிலில் வைத்து எளிமையாக திருமணம் செய்து விடலாம். மேலும் ஆகின்ற செலவு அத்தனையையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்” என்று அல்லிராணியை பார்த்து கூறிவிட்டு, முத்துராமனை பார்த்து “உங்களை நான் வற்புறுத்துவதாக நினைக்க வேண்டாம். நிச்சயம் உங்கள் மகள் என் வீட்டில் நன்றாக மகிழ்ச்சியாக வாழ்வாள். அந்த ஒரு உறுதியை நான் உங்களுக்கு தைரியமாக கொடுக்க முடியும்” என்று கூறினார்.
இவை அனைத்தையும் பேசும் பொழுது உமாவின் கை மரகதத்தின் கைக்குள்ளேயே இருந்தது. உமா தலை நிமிரவே இல்லை. பெரியவர்களே பேசிக் கொள்ளட்டும் என்று தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
முத்துராமனுக்கு என்ன முடிவு எடுப்பது என்று புரியாமல் தன் மகளைப் பார்க்க, அவளோ தரையையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“உமா” என்று மென்மையாக அழைத்தார் முத்துராமன். மெதுவாய் நிமிர்ந்து தந்தையை பார்க்க, தந்தையின் கண்களில் உனக்கு சம்மதமா? என்று கேள்வி தேங்கியிருந்தது.
என்ன பதில் சொல்வது என்று உமாவிற்கும் தான் தெரியவில்லை. திருமணத்திற்கு சம்மதித்தால் தந்தையை விட்டு பிரிந்து செல்ல வேண்டும். நான் சென்று விட்டால் இனி தந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற யோசனையே அவளுக்குள் ஓடிக் கொண்டிருக்க, அதை அவளின் முகபாவத்தை வைத்தே புரிந்து கொண்ட முத்துராமன், தன் மகளிடம் கேட்டு சொல்வதாக சொல்லிவிட்டு தன் மகளை அழைத்துக் கொண்டு தனது அறைக்குள் சென்றார்.
அவர் உள்ளே சென்றதும் பின்னாலே சென்றார் அல்லிராணி இருவரும் பேசுவதை கேட்பதற்கு.
உள்ளேன் நுழைந்ததும் முத்துராமன் தன் மகளை கட்டிலில் தன் அருகே அமர வைத்து, “என்னை பற்றி கவலைப்படாதே மா. நான் வாழ்ந்து முடித்து விட்டேன்.
எனக்கு அப்புறம் உன்னை இங்கு உள்ளவர்கள் நிச்சயம் நன்றாக கவனித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை நான் கண்கூடாக பார்த்து விட்டேன். இந்த நிலையில் உன்னை இப்படியே விட்டு விட்டால், என் மரணம் கூட என்னை மன்னிக்காது” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
அவரின் வாயை மூடிய உமா, “இப்படி எல்லாம் பேசாதீர்கள் அப்பா நீங்கள் நன்றாக இருப்பீர்கள். உங்கள் இஷ்டம்” என்று கூறிவிட்டாள்.
அவர்கள் பேசி முடித்ததும் அல்லிராணி தன் கணவனிடம், “இங்க பாருங்க அவளுக்கு என்னால் எந்த நகையும் போட முடியாது. வேண்டுமென்றால் ஒரு சங்கிலியும் கைக்கு ஒரு வளையலும் கம்மல் மட்டும்தான் போட்டு விடுவேன். வேறு எதுவும் என்னிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்” என்று கராராக சொல்லி விட்டார்.
“ஏண்டி சின்னவளுக்கு ஐம்பது பவுன் நகை கிட்ட போட்டு விட்ட தானே? இவளுக்கு ஒரு இருபத்தைந்து பவுன் கூட போட மாட்டியா?” என்று கவலையாக கேட்டார்.
“அதெல்லாம் முடியாது” என்றார் சத்தமாக.
“சரி சரி வாயை மூடு” என்று சொல்லிவிட்டு வெளியே வந்து, மரகதத்திடம் “நான் திருமணத்திற்கு சம்மதிக்கின்றேன்” என்று சொல்லிவிட்டு, “என்னால் முடிந்த அளவிற்கு சீர் செய்கிறேன்” என்று தயக்கமாக கூறினார்.
உடனே மரகதமோ, “அதெல்லாம் எதுவும் வேண்டாம் உங்கள் மகள் என் மருமகனையும் பேத்தியையும் நன்றாக கவனித்துக் கொண்டால் மட்டும் போதும்” என்று சொல்லிவிட்டு, “விரைவில் என் மருமகனிடமும் சொல்லி, திருமண ஏற்பாடு செய்துவிட்டு, உங்களுக்கு செய்தி அனுப்புகிறேன்” என்று கூறி கிளம்பினார்.
தந்தையின் அறையில் இருந்த உமாவிற்கு ஏதோ ஒரு புதுவிதமான உணர்வாக இருந்தது. தனக்கு திருமணம் நடக்கும் என்று அவள் இதுவரை நினைத்ததே இல்லை. இப்பொழுது கல்யாண பேச்சு வந்ததும் ஏதோ உள்ளம் குறுகுறுவென்று இருந்தது. அவர்கள் கிளம்பிய பின்னும் அறைக்குள்ளேயே அமர்ந்திருந்த உமாவின் காதுகளில் வெளியே அல்லிராணி கத்தும் சத்தம் கேட்டு சுயம் வந்து எழுந்து வந்தாள்.
“என்ன…? கல்யாணம் என்ற உடனே மகாராணி கனவு காண ஆரம்பிச்சிட்டீங்களோ?, வேலை எல்லாம் அப்படியே கிடக்குது. மதியம் பிள்ளைங்க எல்லாம் சாப்பிடணும் இல்ல?” என்று சிடுசிடுவென்று கத்தினார்.
சற்றுமுன் அவளுக்குள் தோன்றிய உணர்வுகள் அத்தனையும் வடிந்து நிர்மலமாகியது.
வேகமாக சமையல் அறை சென்றாள் உமா. வழக்கம் போல் அவளின் நாள் தொடர்ந்தது.
முத்துராமன் வந்த பெண்மணியிடம் மாப்பிள்ளை பெயரை கேட்க மறந்ததை எண்ணி வருந்தினார். யாரிடம் விசாரிப்பது என்று எதுவும் தெரியாமல், சரி… பக்கத்து ஊர் தானே, நேராகவே சென்று விசாரித்து விடுவோம் என்று தனது டிவிஎஸ் 50யில் கிளம்பினார்.
ஊர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அரச மரத்தின் சுற்றி அமைக்கப்பட்ட திண்டில் அமர்ந்து ஊர் கதை பேசிக் கொண்டிருந்த பெரியவர்களிடம் சென்று, “இந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர்…” என்று சொல்லும் போதே ஒருவர், “அதோ வெள்ளையும் சொள்ளையுமா போறாரே அவர் தான்” என்று சொல்லி விட்டு “என்ன விசயமாக அவரை பார்க்கனும்” என்று கேட்டார்.
“இவர் இல்லை… முன்னாள் இருந்தவர்… அவரின் மருமகனுக்கு இப்போ பொண்ணு பார்க்கிறாங்க…” என்று தயங்கிய படி கேட்டார்.
“அட நம்ம ஆனந்து தம்பிய கேக்குறீங்களா?” என்று முத்துராமனின் முகத்தைப் பார்த்தார்.
அவரும் ‘ஆமாம்’ என்று தலையாட்டி, அவரினருகிலேயே அமர்ந்து, தோளில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டார்.
என்ன உங்க பிள்ளைய கொடுக்குறதா தான் முடிவு பண்ணி இருக்கீங்களா?” என்று கேட்டார் அந்த முதியவர்.
இவரும் தயக்கமாக தலையை ஆட்ட, “நல்ல, தங்கமான பய. நம்பி கொடுங்க. அவன் அத்தை மகளுக்கு தான் அவனோட வாழ கொடுப்பினை இல்லாம போயிடுச்சு.
ஒரு பொட்ட புள்ள இருக்கு. அதுவும் தங்கமான பிள்ளை தான். ரெண்டாந்தாரம் என்று வெசன படாதிய. உங்க பொண்ணு இங்க வந்தா நிச்சயமா நல்லபடியா இருப்பா.
நாங்களும் எவ்வளவோ தடவ அவன வேற கல்யாணம் பண்ண சொல்லிகிட்டு தான் இருந்தோம். இப்பதான் ஒரு வழியா ஒத்து இருக்கான்னு அவன் அத்தை சொல்ல கேள்வி” என்றார்.
முத்துராமன் பெரியவர் கூற்றில் மகிழ்ந்து, அவரின் பெயர் என்ன? என்று கேட்க, “ஜீவானந்தம்” , “நாங்க எல்லாரும் ஆனந்து ஆனந்து கூப்பிடுவோம்” என்றார் உதட்டில் உரசிய மீசையை இரு பக்கமும் ஒதுக்கி விட்டுக் கொண்டு.
பெரியவர்களிடம் மாப்பிள்ளையை பற்றி கேட்டதே போதுமானதாக இருக்க டிவிஎஸ் 50யை தனது ஊரை பார்த்து ஓட்டினார் முத்துராமன்.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
Akka next epi eppo poduvinga??? Story very nice starting! Adutha adutha episodes ku eagerly waiting
நன்றி மா 😊😊😍
சாரிமா லேட் ஆனதற்கு 😊
Nice epi
உமாக்கு விடிவு காலம் வந்தா சரி