Skip to content
Home » சிநேகலோலாமம் 1

சிநேகலோலாமம் 1

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த இரயில் நிலையம். வருபவர் போவோர் என அனைவர் முகத்திலும் ஏதோ ஒரு உணர்வு. அவளை ஒருத்தியைத் தவிர. சற்று நேரம் காத்திருந்தவள் அவளுக்கான ரயில் வந்ததும் பதிவு செய்திருந்த இருக்கையைத் தேடி சென்று அமர்ந்து விட்டாள் ஆதவி நம் கதையின் நாயகி.

அமர்ந்த பின்னும் அவள் முகத்தில் எந்த உணர்வுகளையும் காண முடியவில்லை. அவளை வழியனுப்பவும் யாரும் வரவில்லை‌. யாருமில்லா துக்கம் வாட்ட முகம் இறுகிப்போய் இருந்ததா? என கேட்டால் அதுவுமில்லை. நார்மலான முகம். தனது அலைபேசியை எடுத்து அதனுடன் ஹெட் போனை இணைத்து அவளுக்கு அதிகம் பிடித்த பிரவீன் குமார் பாடல்களை கேட்க ஆரம்பித்தாள். அவள் கேட்க ஆரம்பித்த பாடல்கள் ஒவ்வொன்றும் அவள் உணர்வுகளோடு பேசியதோ என்னமோ அவள் முகத்தில் ஏதோ மாற்றம்.

நேரம் போக போக பெரும் அமைதியை குடிகொண்ட அவளை கலைக்கவெனவே அழைத்தது அவள் அலைபேசி

“ஹலோ சொல்லு” ஆதவி

“ட்ரெயின் ஏறிட்டியா” என குரல் ஒலித்தது மறுமுனையிலிருந்து. அது ஆதவியின் அன்புச்சகோதரி.

“இல்ல ட்ரெயின் என் மேல ஏறி இருக்கு” ஆதவி

“நல்லது, ரொம்பவே நல்லது உன்கிட்ட கேட்க வந்தேன் பாத்தியா என்னைய சொல்லணும்” என அக்கா தங்கை இருவரும் தொலைபேசியில் தங்கள் சண்டையை வளர்த்துக் கொண்டார்கள்.

ஆதவி, தமிழ் பெண்.
அனைவரும் வியந்து பார்க்கும் அளவு பேரழகு அல்ல ஆனாலும் அழகுதான். சென்னை பிரபல நியூஸ் சேனல் ஒன்றில் ரிப்போர்ட்டராக பணிபுரிந்து வருகிறாள். பெற்றவர்களின் செல்ல மகள். அக்காவிற்கு எதிரியும் நண்பியுமான கலவை. அக்கா தங்கை இருவரும் சில நேரம் நண்பர்களாகவும் சில நேரம் டாம் அண்ட் ஜெர்ரி ஆகவும் தங்களுக்குள்ளே அடித்துக் கொள்வர். ஆனால் எண்ணிலடங்கா அன்பினை இருவர் மனதிலும் கொண்டவர்கள்.
இந்த அழகான சிறு கூட்டினை பிரிந்து தற்போது ஒரு ப்ராஜெக்ட்காக மூன்று மாத கேரளாவுக்கு செல்லவிருக்கிறாள் ஆதவி. அதற்காகவே இந்த பயணம். இதுவரைக்கும் படிப்பு, வேலை என சொந்த வீட்டிலேயே செல்ல மகளாக வலம் வந்தவள் முதல் முறை வேறு ஊருக்கு மாற்றமாகி அதுவும் வேறு மாநிலத்திற்கே செல்லவிருக்கிறாள். இவள் போகமாட்டேன் எனக்கு அடம்பிடிக்க இவளது பெற்றோரும் சகோதரியுமே சென்றே ஆக வேண்டும் என அனுப்பிவைக்கின்றனர். வழியனுப்பிவிட வருகிறேன் என்றவர்களை நிராகரித்துவிட்டு தானே வந்து ட்ரெயினில் ஏறிக் கொண்டாள். முதல் முறை தெரிந்தவர்கள் யாரும் உடனில்லாது தெரியாத ஊருக்கு அதுவும் மொழி கூட பேசத்தெரியாத ஊருக்கு பயணம் செல்ல வருகிறாள் நம் நாயகி. இவையாவும் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்க நார்மலான முகத்தை வேண்டுமென்றே
வரவழைத்துக் கொண்டவள் தான் ஆதவி.

தமக்கையிடம் சண்டை போட்டுக்கொண்டு அழைப்பை துண்டித்தவள் தனது தாய்க்கு அழைத்திட அங்கு அழைப்பை ஏற்றுக் கொண்ட தாய் தமக்கையை திட்டிக் கொண்டிருந்தாள். அதற்கேற்றவாறே இவள் மனமும் இதல்லவோ பேரானந்தம் என மகிழ்ச்சியால் துள்ளிற்று.

“ஏண்டி புள்ளே இப்பதான் முதல் தடவை தனியா ஊரை விட்டு வேற ஊருக்கு போறா அவ கிட்ட போய் சண்டை வச்சுட்டு இருக்குற” என்றார் தாய்

“நான் எங்கம்மா சண்டை வச்சேன் பாசமா ட்ரெயின் ஏறிட்டியான்னு கேட்டா ட்ரெயின் என் மேல ஏறிடுச்சுங்குறா அப்புறம் என்ன நான் சும்மா இருப்பேனா?”, தமக்கை

” ரெண்டு பேரும் கல்யாண வயசுல இருந்துட்டு சின்ன பிள்ளைகளை மாதிரி இப்படி சண்டை போடுறீங்களே வெக்கமா இல்லையா ரெண்டு பேருக்கும் “தாய்

“இல்லவே இல்லம்மா இதுக்கெல்லாம் வெக்கப்பட்டா வாழ முடியுமா?” தமக்கை

“ஆமா இந்த வாய் வியாக்கானத்துக்கு எல்லாம் ஒரு குறையும் இல்ல போடி போய் வேலையை பாரு ” தாய்

எமோஷ்னல் டேமேஜ் என்றவள் அவ்விடத்திலிருந்து நகர்ந்துவிட

அலைபேசியை காதுக்கு கொடுத்த தாயார் “என்னமா பண்ற ட்ரெயின்ல செட்டில் ஆயிட்டியா” என்று கேட்க ஆதவிக்கு வாய் தான் சும்மா இருக்குமா இருக்காதே

“ட்ரெயின்ல இப்போதைக்கு செட்டில் ஆயிட்டேன் மொத்தமாவே ட்ரெயின்ல செட்டில் ஆகவான்னு யோசிச்சிட்டு இருக்கிறேன் அவ்வளவு வசதியா இருக்கு” ஆதவி.

“உன்கிட்ட என்ன பேசுறது போடி” என தாயார் கால் கட் செய்ய போக ” அம்மம்மா….ம்மா வச்சிடாதீங்க” எனக் கத்தி தாயை அழைப்பில் அமர்த்திக் கொண்டாள்.

“நான் ட்ரெயின்ல செட்டில் ஆயிட்டேன்மா விண்டோ சீட் நல்லா தான் இருக்கு. ஒரு ஏழு ஏழரை மாதிரி நீங்க குடுத்த சாப்பாட சாப்பிட்டு படுத்து தூங்கிட்டு நாளைக்கு காலையில போய் இறங்கிட்டு உங்களுக்கு கால் பண்றேன் டென்ஷன் ஆகாதீங்க மா”
என ஆதவிக்கூற

தான் கேட்க வேண்டிய கேள்விகளுக்கும் அறிவுரைகளுக்கும் சேர்த்து பதில் கூறியவளை நினைத்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை… முறுவல் பூத்தது அந்த தாய் உள்ளத்திற்கு.

“சரி மா பத்திரமா போயிட்டு வா” என கூறி அழைப்பை துண்டித்தார்.

தாயின் அழைப்பை துண்டித்ததும் தொடர்ந்து வந்தது தமக்கையின் அழைப்பு.. இவ ஒருத்தி என மனதில் நினைத்த ஆதவி அந்த அழைப்பை ஏற்று

“என்னடி வேணும் உனக்கு” என ஆதவி அலுப்பாக கேட்க

அவள் தமக்கையோ “இப்பதாண்டி நாம் முக்கியமாக விஷயம் பேச கூப்டிருக்கிறேன்”

“என்னடி சொல்ற”

“ஆமாடி….. யம்மாடி” என‌ ரைமிங்கில் சொதப்பியவள் “உன் பேக்ல” என இழுத்துக்கொண்டே நிறுத்த

“எம்மாடி என் பேக்ல” என ஆதவியும் கேட்க

“இந்த சன் ஸ்கிரீன், மாய்ஸ்ரைசர், கிளன்சர், லிப்ஸ்டிக், டேய் கிரீம், நைட் கிரீம் ஐலைனர், ஸ்டிக்கர் பொட்டு இது எல்லாம் இருக்கா பாரு “

“இதுக்கு பேசாம ஃபேஸ் கேர் கிட் இருக்கானனு கேட்டு இருக்கலாமே”

“கேட்டு இருக்கலாம் தான் ஆனா உடனே முடிஞ்சிடுமே “

“ஐயோ எல்லா வீட்டிலும் மூத்தது தான் கொஞ்சம் விவரமா இருக்கும் சின்னது விளங்காததா தான் இருக்கும்னு சொல்லுவாங்க. எங்க வீட்ல அப்படியே ஆப்போசிட்டா இருக்கே” என தனக்குதானே நினைத்து நொந்து கொண்டாள் ஆதவி

தங்கையின் மனக்குமுறல்களை அவள் வாய் சொல்லாமலே புரிந்து கொண்டாள் தமக்கை அத்யா.

“சரி சரி நீ புலம்பிக்கிட்டு இருக்காம போய் கிட் இருக்கா பாரு”

“கிட் மறந்துட்டேன் அத்திமா” என இதுவரை இருந்த கலவரக்குரல் மாறி தன்மையாக கூறினாள் ஆதவி.

“ஆமாடி உன் கிட் எல்லாமே வீட்லதான் இருக்கு. இனிமே நான்தான் அதெல்லாம் ஜாலியா யூஸ் பண்ணிக்க போறேன்” என்று குதூகலத்துடன் கூறினாள் அத்யா

“அட ஓசில பிறந்தவளே… ரொம்ப சந்தோஷப்படாத நான் அங்க போய் ரீச் ஆயிட்டு சொல்றேன் நீ அதுக்குள்ளாடி எனக்கு கொரியர் பண்ணிவிட்ரு”

“அதெல்லாம் முடியாது இதெல்லாம் இனி நான் தான் யூஸ் பண்ண போறேன் ஒரு லிப்ஸ்டிக் ஒரே ஒரு தடவை யூஸ் பண்ணதுக்கு என்ன ஆட்டம் ஆடுன… இப்ப பாரு மொத்தமும் எனக்கு மட்டும்தான்”

“அத்தி(அத்யா) ஒரே ஒரு தடவை தான் சொல்லுவேன் ஒழுங்கா கொரியர் பண்ணி விட்டுரு இல்ல அடுத்த தடவை நான் சென்னை வர்றப்ப நீ செத்த” ஆதவி

“அது அப்ப பாத்துக்கலாம் போடி ” என்றாள் அத்யா எகத்தாளமாக

“எல்லாமே சேர்த்து கணக்கு பண்ணி பார்த்தா ஒரு 2000 ல இருந்து 3000 பக்கத்துல வரும்.. கொரியர் பண்ணி விட்டுடி இதெல்லாம் திரும்ப செலவு பண்ண முடியாது அத்தி” என்றாள் ஆதவி

“இதெல்லாம் முடிஞ்சு போயிருந்தன்னா திரும்ப வாங்கிருப்ப தானே ஆதுமா அந்த மாதிரி வாங்கிக்கோ.. சிம்பிள்”

“மனசாட்சி இல்லையாடி உனக்கு எல்லாம் ” ஆதவி

“நோ நெவர்” என்றவள் ஆது அம்மா கூப்பிடுறாங்க நான் போனை கட் பண்ணவா செல்லம்…‌என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

” சை…‌ இவ்ளோ கேவலமாவா எல்லாத்தையும் மறப்பேன் என தன்னையேத் திட்டிக்கொண்டவள் புதிதாக அனைத்தையும் வாங்க ஆன்லைனில் தேட ஆரம்பித்தாள். அப்போது தான் தண்ணீரும் எடுத்து வரவில்லை என அறிந்தவள் ஒழுங்கா வீம்பு காமிக்காம அம்மா கிட்ட பேசி இருந்தா அம்மாவாச்சும் எல்லாம் பேக் பண்ணி தந்திருப்பாங்க… ஆதவி, உனக்கு இது தேவை தான் என மீண்டும் தன்னை மனதினுள் வறுத்து கொண்டவள் அடுத்த நிறுத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தாள். அடுத்த நிறுத்தம் வந்ததும் இறங்கி சென்று தண்ணீரை வாங்கியவள் மீண்டும் இரயில் பெட்டியுனுள் ஏற அங்கு மூன்று பேர் நின்று கொண்டு எந்த இருக்கை யாருக்கு என பேசிக்கொண்டு இருந்தனர். அந்த குரலிலே அவனை அடையாளம் கண்டு கொண்டாள். அவளுக்கு மிகவும் பரிச்சயமான குரல். அதிகமாய் நேசித்த அதிகமாய் வெறுக்கிற குரல். மீண்டும் இப்படி ஒரு நிலையா? என அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
சட்டென தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தன் கைப்பையில் இருந்த மாஸ்கினை அணிந்து கொண்டாள். “எக்ஸ்கியூஸ் மீ” எனக்கூறி நண்பர்களை தாண்டி தனது இருக்கையில் சென்றமர்ந்தாள்.
இருக்கையில் வந்தவள் பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். ஆனால் அந்த பெருமூச்சு இன்னும் தொடர்ந்து கொண்டே வரும் என்பதை அவள் அறியவில்லை.

அது சென்னை முதல் திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ். திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மதுரை விருதுநகர் திருநெல்வேலி நாகர்கோவில் தாண்டி திருவனந்தபுரம் சென்றடையும் அந்த ரயிலில் பலவிதமான மக்கள், தமிழையும் பலவிதங்களில் பேசும் மக்களையும் காண நேரலாம். அப்படிப்பட்ட அந்த ரயிலில் சென்னையிலிருந்து கேரளா நோக்கி செல்லும் பல மலையாளிகளும் வேற்று மொழி பேசும் சில மக்களையும் காணலாம்.
இந்த ரயிலில் ரசிப்பதற்கும் ஆச்சரியமாக பார்ப்பதற்கும் வினோதமாக பார்ப்பதற்கும் பல விஷயங்கள் நடந்தேறிக் கொண்டிருக்க அது எதுவும் அவளை சற்றும் பாதிக்காது எனும் தோற்றத்தில் அமர்ந்திருந்தாள் ஆதவி.. இவ்வாறாக அவளுக்கு பிடித்த பாடல்களோடு பயணம் திருவனந்தபுரம் நோக்கி நகர்ந்து கொண்டது.
இந்தப் பயணமும் அண்டை மாநிலமும் அவளுக்கு என்ன வைத்துக்கொண்டு காத்திருக்கிறது என வரும் அத்தியாயங்களில் தெரிந்து கொள்வோம்

5 thoughts on “சிநேகலோலாமம் 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!