Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 15

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 15

அந்த வலிநிறைந்த குரல் அவளது இதயத்தை ஊடுருவ பின்னால் திரும்பினாள்.
கண்ணணைகள் தத்தம் கொள்ளளவை தாண்டிவிட, தடுமாறிய இதழ்கள் தம்மையறியாது “சந்தனா” என உச்சரித்தன.(அருள்ன்னு நினைச்சவங்களுக்கு சாரிங்கோ…)
தங்கையின் தோள்களில் சாய்ந்தவளின் முதுகை மெல்ல தட்டிவிட்ட சந்தனா, “அமி…அமி…அமிக்கா…அக்க்க்கா இங்க பாருக்கா…அழாதக்கா…என்று அவளது கண்ணைத் துடைத்தாள், “அது சக்தியண்ணன் தான?” என்ற கேள்வியோடு.

‘ஆம்’ எனத் தலையசைத்தவளின் கண்கள் மீண்டும் கலங்கத் தொடங்க,
ஒருசில நொடிகள் அவளை அழுக விட்டு தலையை மட்டும் தடவிவிட்டவள்,
“அக்கா இங்க பாரு. சும்மா அழுகாத. சக்தியண்ணன் ஏன் இப்படில்லாம் பேசிட்டுப் போனாங்கன்னு எனக்கும் தெரியல. ஆனால் கொஞ்சம் யோசி. உன்னைப் பத்தி நல்லா தெரியாதவங்க ஏதாவது பேசுனா நம்மளப் பத்தி தெரியாம என்னைப் பார்த்து இப்படி பேசிட்டாங்களேன்னு நீ அழலாம். சக்தியண்ணனுக்கு உன்னை என்ன இன்னைக்கு நேத்தா தெரியும்? பத்து வயசுல இருந்து, நம்ம அம்மாஅப்பாவை அம்மாஅப்பான்னு கூப்பிட்டு, என்னைத் தங்கச்சியா நினைச்சு சேந்து விளையாண்டவர் தான சக்தியண்ணன். நீ என்கூட பிறந்தியா அவர்கூட பிறந்தியான்னு சந்தேகமா இருக்குன்னு மத்தவங்க கிண்டல் பண்ற அளவுக்கு தான ஒண்ணா இருந்தீங்க. எனக்குத் தெரிஞ்சு சக்தியண்ணனுக்கோ இல்ல உனக்கோ ஒருநாள் ஒருநாள் என்ன ஒருநிமிஷம் கூட அவர் இப்ப சொல்லிட்டுப் போனமாதிரி எண்ணம் வந்து பாத்ததில்ல. உன்னை நல்லா புரிஞ்சுகிட்டவரும் கூட. அப்படிபட்ட சக்தியண்ணன் உன்னை இப்படி பேசிட்டுப் போறாருன்னா உன்னை அவர்கிட்ட இருந்து எதுக்காகவோ தள்ளிவைக்க நினைக்கிறாருக்கா. ஏன் அப்படி பேசிட்டுப் போனாருன்னு மருகறதுக்குப் பதிலா ஏன் இப்படி நினைக்கணும்ன்னு யோசிக்கா. இதுக்கு மேல தங்களுக்குத் தெரியாத சட்டமொன்றும் இல்லை.மைலார்ட்” சீரியசாக ஆரம்பித்து சிரிப்பாக முடித்தாள். இதுதான் சந்தனா.
இந்தக்குணம் அமிழ்தாக்குத் தன் தங்கையிடம் மிகவும் பிடிக்கும். விளையாட்டுத்தனம் நிறைந்தவள் போல தோன்றினாலும் ஒருவரை சமாதானப்படுத்துவதில் அவளை விட பக்குவமடைந்தவர்கள் யாருமில்லை. அவளிடம் நன்கு புரிந்தவர்களிடம் எதைச் சொன்னால் எப்படி சொன்னால் சமாதானமடைவார்கள் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
தங்கையின் புரிதலை மெச்சியவள், அவள் “போக்கா போய் முகத்தைக் கழுவிட்டு வா” என்றதும் அங்கிருந்த வாஷ்ரூமில் போய் முகம் கழுவிவிட்டு வந்தாள்.

அவளை ஒருவன் வழிமறித்தான், வேறு யார் அருளாளன்தான்.

” ஒரு சின்னப்பொண்ணு உன் தங்கச்சிக்கு இருக்குற அறிவு கூட உனக்கு இல்ல அப்படித்தான? தகுதி இல்லாதவங்க மேலல்லாம் பாசம் வச்சா இப்படிதான் ஆகும் இதுக்கெல்லாம் அழுகிற. இவ்வளவு சென்சிட்டிவா இருந்தா இந்த வேலைக்கெல்லாம் ஏன் வர்ற?”

ஏற்கனவே சக்தி மேல் கோபத்தில் இருந்தவளின் மனம் அருளாளன் வரவும் இவனால்தானே அவனிடம் போய் இந்தப்பேச்சு வாங்கினோம் என்று சக்தியின் மேல் இருந்த கோபத்தை அருளாளனின் மேல் ‘டேக் டைவர்ஸன்’ என்று திருப்பிவிட, அவன் வேறு தன் வார்த்தைகளால் அந்தக்கோபத்திற்கு வேகத்தையூட்டினான்.
அதில் படபடவென பட்டாசாய் வெடிக்கத் தொடங்கினாள்.

“மிஸ்டர் முதல்ல எனக்கு அறிவிருக்கா இல்லையாங்கிற ஆராய்ச்சில நீங்க ஈடுபட வேண்டாம்.
நான் யார் மேல பாசம் வைக்கணும் வைக்கக்கூடாது, அதோட யாருக்குத் தகுதி இருக்கு இல்லங்கறது பத்திலாம் பேசற தகுதி செத்துப்போன மனுஷன் பேரை வச்சு ஊரை ஏமாத்திகிட்டு இருக்க க்ரிமினல் உனக்குக் கிடையாது.
என்ன சொன்ன என்ன சொன்ன ..
சக்தி உயிரோட இருக்கணும்ன்னு ஆசைப்பட்டா இந்த ஊரை விட்டே போகணுமா?
நீ அதைச் சொன்னன்னு பேசப்போய் தான் அவன் என்ன இந்தப்பேச்சு பேசிட்டுப் போறான்…
நாங்க பேசுனத ஒட்டுக்கேட்டன்னா என் தங்கச்சி சொன்னதைக் கேட்டிருப்பல்ல.
அவன் சக்தி.
என்னதான் என்னைத் தப்பாப் பேசினாலும் இந்த ஊரில எதுக்கு வந்துருக்கான்னு தெரியலன்னாலும் அவன் எந்தத் தப்பான காரியமும் பண்ண மாட்டான்ங்கிற நம்பிக்கை எனக்குத் தெரியும்.
ஏன்னா கிட்டத்தட்ட அவன் எங்க அம்மா அப்பா வளர்ப்பு. ஆனா நீ
எவ்வளவு தைரியம் இருந்தா எங்கிட்டயே வந்து ஆள்மாறாட்டம் பண்ணுவ?
இப்படி ஏதோதோ பண்ணிதான் இந்த ஊருக்கு வேலைக்கு வந்த 5 கலெக்டர விரட்டிருக்க இல்ல.
இதை நீ தனியா பண்ணிருக்க முடியாது. உன் பின்னாடி ஒரு பெரிய நெட்வொர்க்கே இருக்கணும். சொல்லுடா.”

“நிறுத்து.” எச்சரிக்கும் குரல்.

அந்தக்குரல் தன் வேலையைச் சரியாகச் செய்துவிட அவன் தொடர்ந்தான்.

” நீ என்னை நம்பு நம்பாத. அதைப் பத்திலாம் எனக்குக் கவலையில்ல, நீ என்னை என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. ஆனா நான் உனக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்குறேன்.
சக்தி உங்க அம்மாஅப்பா வளர்ப்பா இருக்கலாம்.
ஆனா அவனோட பிறப்பு?
அவன் அருணாச்சலத்தோட இரத்தமாமே. உனக்கு ஒண்ணு தெரியுமா?
அந்த அருணாச்சலத்துக்கு தன்னோட இரத்தத்து மேல ரொம்பரொம்ப பாசம், போகாத கோவில் இல்ல, வேண்டாத தெய்வம் இல்ல, தன்னோட பாவம் தான் பையனைப் பாதிச்சுரக் கூடாதுன்னு தானதருமம்லாம் பண்ணுவாருனா பார்த்துக்கோயேன்.
ஆனா பாவம் அவரோட மொத்தப்பாவமும் அவனைத்தான் போய்ச் சென்று சேரப்போதுன்னு தெரியல பாரேன். என்ன செல்லம் முழிக்கிறீங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னேனே, அந்த அருணாச்சலத்துக்கு மரணதண்டனையை விட அதிகபட்ச தண்டனையைக் கொடுக்கப்போறேன்னு. அது என்ன தெரியுமா? புத்திர சோகம்… அதுவும் சாதாரண புத்திரசோகம் இல்ல…
கண்ணிழந்தான் பெற்றிழந்தான்ன்னு சொல்வாங்களே கேள்வி பட்டுருக்கியா?
நான் ஏற்கனவே சொன்னமாதிரி பலமா இருக்குற பலவீனத்தைப் பார்த்து அடிச்சா எழுந்திருச்சு நிக்கக் கூட பலம் இருக்காது. அந்த அருணாச்சலத்தோட பலவீனம் என்ன தெரியுமா?
அவரோட ஒரே பையன். அதான் அவரோட அரசன், அவரோட சாம்ராஜ்யத்தோட, அவரோட ஒட்டுமொத்தப் பாசத்தோட அரசன் ஐ மீன் உன் ஆருயிர் நண்பன் சக்தியரசன். அந்தப் பலவீனத்தைப் பார்த்து அடிக்கப் போறேன்.
அதாவது என்னோட பழிவாங்கு படலத்துக்கு பலி அவன்தான்.
சரி ஒரு வாய்ப்பு கொடுத்துப்பார்ப்போம்ன்னு தான் உன்மூலமா எச்சரிச்சேன். பாவம் அவன் விதி,
உன்னாலயும் அவனைக் காப்பாத்த முடியல. இனி நீ மட்டுமல்ல யார் நினைச்சாலும் எங்கிட்ட இருந்து அந்த அருணாச்சலத்தோட மகனைக் காப்பாத்த முடியாது. அப்படி காப்பாத்தணும்ன்னு நினைச்சா, இதுவரை இந்த ஊருக்கு வந்த கலெக்டர்கள பயமுறுத்தி விரட்டியடிக்க மட்டும் தான் செஞ்சுருக்கேன்.
அதுவும் அவங்க கடமையை ஒழுங்காச் செய்யாம கேடுகெட்டத்தனமா இருந்ததால. நீ நல்லவளா இருந்தும் ஒரு வீணாப்போனவன காப்பாத்த நினைச்சு என்னால செத்துராத.”
கொலைவெறி என்றால் என்ன? என்பதை அவனது குரலையும் முகத்தையும் வைத்துப் பாடமே நடத்தலாம் போல.
அந்த அளவுக்கு அவன் முகத்தில் நவரசம் காட்டி நர்த்தனமாடியது அது.

சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு அவன் நகர்ந்து விட, நகரமுடியாமல் அவ்விடத்திலேயே வேரோடிப் போன அமிழ்தாவின் முகத்தில் யாரோ வேப்பிலை அடித்தார்கள்.
ஆம் நிஜமாகவே வேப்பிலைதான். அங்கிருந்த வேப்பமரத்தில் சிலபல இலைகளைக் காம்போடு பறித்து ஒன்று சேர்த்து,
அவளது தங்கை சந்தனாதான் அடித்துக்கொண்டிருந்தாள். அதுவும் ‘வேப்பிலை அம்மா வேப்பிலை வெக்காளியம்மன் வேப்பிலை’ என்று பாடிக்கொண்டே.

மூன்றாவது அடியில் அமிழ்தா உணர்வுபெற்று பரக்கப் பரக்க முழிக்க, ‘அப்பாடா’ என்று வேப்பிலையை சர்வேசன் கையில் கொடுத்துவிட்டு “வயசுப்பொண்ணைத் தனியா விட்டுவைக்காதீங்கன்னு சொன்னா இந்த தமயந்தியும் ஞானசேகரனும் கேக்குறாங்களா? இப்பப்பாரு நான் மந்திரிக்க வேண்டியிருக்கு” என்று பிரதாப் கையிலிருந்த வாட்டர் பாட்டிலை வாங்கி, கொஞ்சம் தண்ணீரைக் கையில் ஊற்றி அவளது முகத்தில் சுளீர் சுளீரென அடித்தாள்.

அவள் பார்த்த வேப்பிலை வைத்தியத்தில் தெளிந்து “ஏய் என்னடி பண்ற,” என்றவளுக்கு அப்பொழுதுதான் நினைவு வந்து “ஆமா நீ இங்க என்ன பண்ற” என்றாள்.

“அப்பாடி இப்பவாது கேக்கணும்ன்னு தோணுச்சே, ஆனா அதை அப்பறமா சொல்றேன். ஆனா இப்ப என்னமோ எம்.எல்.ஏ வெயிட்டிங்காம்.”

“எம்.எல்.ஏ….ஷ்ஷ் ” என்றவள் பிரதாப்பைப் பார்த்து,” ரொம்ப லேட்டாயிருச்சா சார் “எனக் கேட்டாள்.

“இல்ல மேடம் எம்.எல்.ஏ வும் ஏதோ ஸ்டூடன்ஸ் இஷ்யூ ன்னு இவ்வளவு நேரம் பிஸியாகத்தான் மேடம் இருந்தார். இப்பதான் மேடம் வரச்சொன்னாங்க.”

“ம்ம் ஓகே.எல்லாம் ரெடிதான ” என்றவள், சந்தனாவிடம் பத்திரம் என்றும் சர்வேசனிடம் அவளைக் கண்காட்டி கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டு எம்.எல்.ஏ அறையினுள் நுழைந்தாள்.

“வாம்மா வா… நீதான் புதுசா வந்த கலெக்டரா? நீ முன்னாடி வேலை பார்த்த ஊர் மினிஸ்டர் கிருஷ்ணய்யா நம்ம கட்சி காரர்தான்.
நமக்கு நல்ல பழக்கமும் கூட. அவர் சொன்னாரு…
நீ மாநகராட்சி ஆணையரா இருந்தப்பவே ரொம்ப கெடுபிடியான ஆளாம்மே.
இப்ப கலெக்டரா வேற ஆகிருக்க. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
உட்காரும்மா” குரலில் தேன் தோய்ந்திருந்தாலும் அது விஷம் தோய்ந்த நாவு என்பதை அமிழ்தாவின் அறிவு கோடிகாட்டியது.
அந்த கிருஷ்ணய்யா பழக்கம் என்றால் அது 90 சதவீதம் உறுதி என்று நினைத்தவள் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் புன்னகைத்து வணக்கம் தெரிவித்தாள்.

ஏதாவது சாப்பிடுறியாம்மா அவர் உபசரிக்க முயல,ஒன்றும் வேண்டாம் என புன்னகை முகத்துடனே மறுத்தவள் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.
அவள் சொல்லிய அனைத்தையும் கேட்டாலும் அவரது யாருக்கோ வந்த விருந்து முகபாவம் எரிச்சலைக் கிளப்பியது.
அதை அடக்கிக்கொண்டுதான் சொல்லிக்கொண்டிருந்தாள்.
வெளியே ஆயிரம் பிரச்சனையில் தவித்தாலும் ஒரு மக்கள் பிரச்சனையைக் கூட மறக்காமல் சொன்னவளை ஆச்சரியத்துடன் பார்த்தார் பிரதாப். பின்னே? அவருடைய பணிக்காலத்தில் அமிழ்தா, அருளாளன் போன்ற ஆட்சியர்களை எல்லாம் அத்திப்பூத்தாற்போலத்தான் கண்டிருக்கிறார்.
ஆச்சரியம் வரத்தானே செய்யும்.

‘எல்லாம் சொல்லிட்டேன்ல எதுவும் மீதி இருக்கா ‘ என அவள் இவரைப் பார்க்க, எம்எல்ஏ அவரது பிஏவைப் பார்த்து “கலெக்டர் அம்மா சொன்னது எல்லாத்தையும் குறிச்சு வைச்சுட்டல்ல.சரிம்மா.நீபோய்ட்டு வா” என்றார்.

“சார் .
நான் இதைக் கேக்கவா இவ்வளவு தூரம் வந்தேன்.
இதுக்கு கடிதம் ஒண்ணு போதுமே, கலெக்டர் நான் எதுக்கு நேரடியா வந்தேன். இதெல்லாம் முக்கியமான மக்கள் பிரச்சனைகள்.
நீங்க எதெது முடியும் முடியாதுன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நான் அதுக்கு
ஏற்றாற்போல ஆக்ஷன் எடுக்க வசதியா இருக்கும்.”

“ஆக்ஷன் எடுக்கறதா? அப்படி நீ ஆக்ஷன் எடுக்கறதா இருந்தா அருணாச்சலம் அண்ணன் மேலதான் எடுக்கணும்”
என்று கூறிவிட்டு ஏதோ சார்லிசாப்ளினுக்கு டஃப் கொடுத்துவிட்டது போல குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் அந்தச் சட்டமன்ற உறுப்பினர்.

அதில் கடுப்படைந்தாலும் “ஆமாம் சார் அந்த அருணாச்சலம் மேலதான் ஆக்ஷன் எடுக்கணும் என்னுடைய உத்தரவு மட்டுமே போதுமானதா இருக்கக்கூடியதுக்கு நான் அதற்கான ஏற்பாடுகளையும் அனுப்பிட்டேன். ஆனா இதுக்கெல்லாம் எனக்கு உங்களுடைய பர்மிஷனும் வேணும். அதனாலதான் இங்க வந்துருக்கேன்.” என்றாள் பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு.

தன் சிரிப்பை நிறுத்தியவர் “இங்க பாரும்மா, தேவையில்லாம அருணாச்சலம் அண்ணன பகைச்சுக்காத, அவர் ரொம்பரொம்ப நல்லவர்….அவருக்கு வேண்டியவங்களுக்கு மட்டும்.
ஆனா பகைச்சுட்டன்னு வையேன்.
அதோட பலனை அனுபவிக்கிற அளவுக்கு உனக்கு சக்தி இருக்காது.
நீ உனக்கு முன்னாடி ஏதோ நாலைஞ்சு கலெக்டர் ரெண்டு மூணு மாசத்துல ரிசைன் பண்ணிட்டுப் போனானுங்கன்னு தான கேள்விப்பட்டிருப்ப.
ஆனா அதுக்கெல்லாம் முன்னாடி ஒருத்தன் இருந்தான். அருளாளன்னு.
அவனும் உன்னை மாதிரியேதான் உங்க பி.ஏ ட்டையே கேட்டுப்பாருங்க, ரொம்ப ரொம்ப தங்கமான மனுஷன்.
உன்னை மாதிரியே தான் நேர்மை,மக்கள்,நீதின்னு அருணாச்சலம் அண்ணனுக்கு ரொம்ப குடைச்சல் கொடுத்தான்.
அருணாச்சலம் அண்ணன் எதுவும் பண்ணல அவனை, அவர்தான் ரொம்ப நல்லவர் ஆச்சே,
ஆனா பாரு பாவம் அவனுக்கு அல்பாயுசு, ஆக்ஸிடன்ட்ல போய்ச் சேந்துட்டான். போதைப்பழக்கமாம்.
பாவம் நைட்டெல்லாம் இழுத்துகிட்டே கிடந்து செத்துருப்பான் போல,
அவனாவது ஏதோ ஆம்பளை…
ஆனா நீ பாரு பொம்பளப்பிள்ள…
நம்ம நாடு சாவுல கூட கவுரவம் பாக்கும். இதெல்லாம் தேவையா என்ன?”

“என்ன சார் மிரட்டுறீங்க போல,”

“பரவால்லையேம்மா, கற்பூரபுத்திதான் போல, இல்லன்னா இவ்வளவு சின்ன வயசுல கலெக்டர் ஆகிருப்பியா? பாத்து சூதானமா நடந்துக்கத் தாயி, அருணாச்சலம் அண்ணன் என்னை மாதிரி பொறுமையானவர்லாம் கிடையாது.”

“நீங்கல்லாம் எதுக்கு சார் எம்எல்ஏ ஆனிங்க?”

“என்னது?”

“இல்ல சார்… அருணாச்சலம் சாரைப பத்தி இவ்வளவு உயர்வா சொல்றீங்களே, அவரே எம்.எல்.ஏ ஆகிருக்கலாம்ல, நீங்க எதுக்கு…”

“ஹாஹா…அண்ணன் நினைச்சா எம்எல்.ஏ இல்ல சி.எம் ஏ கூட ஆகலாம் ஆனா ஆகமாட்டாரு. அதுலல்லாம் தலையிட மாட்டாரு.
இவ்வளவு ஏன்? எங்க கட்சில மட்டுமில்ல. எந்தக் கட்சியிலயும் சேந்தது கிடையாது.
வலைவீசி பார்த்தவங்க ஏராளம். ஆனா சிக்கலயே.
ஆனா எல்லாக்கட்சியோட முக்கிமான பொறுப்புல இருக்குறவங்க, அரசாங்கத்துல முக்கியமான பொறுப்புல இருக்கறவங்கல்லாம் அண்ணன் கையிலதான்.
வெளியே இருந்தே ஆட்டிப்படைக்கிற ஆள் அவரு.”

“ஓ அப்ப நீ…ங்க அல்லக்கையா? சாரிசாரி வாய் தவறிருச்சு நீங்க அவரோட வலதுகையா இருப்பீங்க போலயே. ஆனா உங்க அண்ணன் கிட்ட அரசியலை மட்டும் ஆட்டிப்படைக்கச் சொல்லுங்க. அரசாங்கம்கிட்ட வரச்சொல்லாதீங்க.”

“என்னம்மா ரொம்ப தைரியமான பொண்ணா இருப்ப போல, அந்த அருளாளன்கூட இப்படித்தான். உன்னை விடக் கொஞ்சம் அதிகம்ன்னே அவனுக்குச் சொல்லலாம். ஆனா அந்த அருளாளனாலேயே ஒண்ணும் பண்ண முடியலன்னு நிம்மதியா மேலப் போய்ச் சேந்துட்டான் பாரேன்.”

“அருளாளன்.” அந்தப்பெயரை நிறுத்தி நிதானமாக உச்சரித்தவள்,
“நான் கூடப் பாவம் மனுஷன் அவராப்போய் தான் இறந்துட்டாருன்னு நினைச்சேன். ஆனா அவரோட சாவுக்கு உங்க அண்ணன் தான் காரணம்ன்னு மறைமுகமாவே தௌ்ளத்தெளிவா சொல்லிட்டிங்க. என்னோட சந்தேகத்தைத் தீர்த்து வைச்சதுக்கு தாங்க்ஸ்.
உங்க அண்ணன் கிட்ட சொல்லி எச்சரிச்சு வைங்க. சில உண்மைகளைக் கொன்னாலும் புதைக்கமுடியாதுன்னு. அந்த அருளாளன் சாரை வச்சே உங்க நொண்ணன் சாரிசாரி இன்னைக்கு டங்க ஸ்லீப் ஆகிட்டே இருக்கு உங்க அண்ணன் சாம்ராஜ்யத்தையே ஆட்டம் காட்டுறனா இல்லையான்னு பாத்துகிட்டே இருங்க.”

“என்னம்மா? எங்களையே மிரட்டுறதா நினைப்பா? செத்துப்போனவன வச்சு என்ன பண்ணமுடியும் உன்னால? என்ன எதுவும் ஆதாரம் வச்சுருக்கியா?”

“ஆதாரமா? அதுக்கு நான் எங்க போக?, பட் ஃபார் யுவர் கைன்ட் இன்பர்ம்மேஷன், மனுஷன் பேயாச் சுத்திகிட்டு இருக்காராம், அதுவும் உங்க அண்ணனை அழிக்காம விடமாட்டேன்னு கங்கணம் கட்டிகிட்டு. உங்களுக்குச் சாதகமா இருக்கட்டும்ன்னு நீங்க போஸ்டிங் போட வைச்ச கலெக்டர்ஸல்லாம் ரிசைன்னே பண்ணி ஓட வச்சது சாட்சாத் அவரேதானாம்.
ஆப்ஃடரால் ஒரு சின்ன்ன பொண்ணு நான் உங்களை மிரட்டமுடியுமா?
அருள் சார் எங்கிட்ட சொன்னததான் சொன்னேன்.
நானும் உங்க ஆள்ன்னு நினைச்சு முதல்ல மிரட்டிட்டாரு.
அப்பறம் என்னை அந்த கிருஷ்ணய்யா இந்த ஊருக்கு அனுப்பி வச்சா ரிசைன் பண்ணிட்டுப்போயிருவேன்னு நினைச்சுதான் போஸ்டிங் போட்டுருக்கீங்கன்ன தெரிஞ்சப்பிறகு எவ்வளவு ஆறுதலா பேசுனாரு தெரியுமா? எனக்கு எல்லாவகையிலயும் துணையா நிக்கறதா சொன்னாரு.
நீங்க வேற பாவம் அவர் உயிரோட இருக்கப்பவே அவரை எதிர்கொள்ள முடியாமதான் கொலைபண்ணிருப்பீங்க… இதுல செத்துப் பேயா வந்தா… சிவசிவா..”
என மேலே பார்த்துக் கன்னத்தைத் தட்டியவள்
” பாத்துப்பத்திரமா இருந்துக்கோங்க சார்…
அநியாயமா செத்த ஆன்மாவோட பழிவாங்குற வீரியம் எக்கச்சக்கமா இருக்குமாம்…” என்று அவரிடம் கூறிவிட்டு வெளியே செல்ல,
பின்னாலேயே வந்த பிரதாப் “மேடம் உண்மையா?” என்று கேட்டார்.

“என்னது சார் உண்மையா?

“இப்ப நீங்க சொன்னதெல்லாம்… அருள் சாரைப் பார்த்தது…”

அவரை புன்னகையுடன் இடையிட்டவள், “சார் எனக்குச் சின்ன வயசுல ஒரு கெட்டப்பழக்கம்… ஸ்கூலுக்கு ஒழுங்கா ஹோம்வொர்க் செஞ்சுட்டுப் போக மாட்டேன். ஹோம் வொர்க் செய்யாம போயிட்டு அதைச் சமாளிக்கிறதுக்குக் கோர்வையா கதை… ஐ மீன் பொய் சொல்றதுல நான் எக்ஸ்பர்ட்” என்று விட்டு நடக்க,

“பொய்யா? உண்மை மாதிரியே இருந்துச்சே மேடம்” என அவரும் நடந்தார்.

“சதுரங்க வேட்டை பாலிசி தான் நம்ம சொல்ற பொய்ல கொஞ்சம் உண்மையும் இருக்கணும். இப்பயும் இருந்துச்சே. ஒரு பிராடு நிஜமாவே நான்தான் அருளாளன்னு சொல்லிட்டு அலையுறான். அதனால உண்மை மாதிரி தோணிருக்கும்”

“ஆனா… அவர்கிட்ட எதுக்கு மேடம் அப்படி சொல்லிட்டு வந்தீங்க.?”

“அவர் கையைப் பார்த்தீங்களா?சந்திரமுகி அரண்மனைக் கதவை விட மோசமா தாயத்துக் கட்டி வச்சுருக்காரு. அப்ப இந்த பேய் பிசாசுலல்லாம் நம்பிக்கை அதிகம். ஒரு சைக்காலஜிதான். இவர் கிட்ட பேய்கீய்ன்னு சொன்னா பயந்து போய் ஒண்ணு நாம சொன்னதைச் செய்யலாம். இல்லன்னா கவனமா இருக்குறேன் பேர்வழின்னு அவரை அவரே காட்டிக்கொடுக்கலாம். எப்படி எப்படி ஒரு மனுஷன் நல்லது பண்ணா கொலை பண்ணுவாங்களா? பார்ப்போம். குட்டையைக் குழப்பி விட்டுருக்கேன் மீன் கிடைக்குதான்னு.”

பிரதாப்பிடம் பேசிக்கொண்டே அவள் வாசலுக்குப் போக, ஓடிவந்து “எக்கா என்னை மறந்துட்டு போறக்கா” என்று வழிமறித்தாள் சந்தனா.

“ஷ்,ஆமா, நீ எப்படி இங்க வந்த? அம்மா அப்பா எங்க? அதை முதல்ல சொல்லு.”

“அம்மா அப்பாவா அவங்க எங்க இங்க வந்தாங்க?”

“அப்பறம்? லூசு நீயாவா வந்த?”

“லூசு நானா வந்துருவனா? கூர்க் டூர் போறேன்னு சொன்னேன்ல.”

“அது சரி ஆனா… இந்த ஊருக்கு எப்ப இருந்து கூர்க்ன்னு பேர் மாத்துனாங்க. எனக்குச் சொல்லாம?
அதுவுமில்லாம நீ என்ன எம்எல்ஏ ஆபிஸ்ல வந்து சுத்திபாத்துட்டு இருக்க இந்த கூர்க்க…”

” பைத்தியமே என்னை முழுசா சொல்லவிடு.
கூர்க்தான் போய்கிட்டு இருந்தோம். வழில வேற ஒரு ஏதோ கட்சிமீட்டிங்ககாக ஆள் ஏத்திட்டு வந்த லாரி லைட்டா எங்க பஸ்ஸைத் தட்டிருச்சு.
யாருக்கும் எந்தக்காயமும் இல்ல,
ஆனாலும் பசங்க ஏதாவது ஆகிருந்தான்னு எகிறிட்டானுங்க.
முத்திப்போய் அந்த ஆளுங்க நீங்க என்ன பண்றீங்கன்னு பாக்குறோம்டான்னு பஸ்ஸை எங்க அண்ணன்கிட்ட எடுத்துட்டு போறாம்ன்னு இங்கத் தூக்கிட்டு வந்துட்டாங்க.”

” இந்த எம்எல்ஏ…..சை… அப்ப பசங்கல்லாம் இங்கதான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்களா?”

“இல்லக்கா. யாரோ அருணாச்சலமாம் அவர் சின்னபசங்ககிட்டல்லாம் ஏன் வம்பு பண்றீங்கன்னு விடச்சொல்லவும் விட்டுட்டாங்களாம்.
ஆனா என்னை விட்டுட்டுப் போயிட்டாங்கக்கா.”

“என்னது?”

“ஆமாக்கா விட்டுட்டுப் போயிட்டாங்க.”

“அதெப்படி விட்டுட்டுப் போவாங்க, உன் பிரெண்ட்ஸ் உன்னைத் தேடலையா?”

“நான் எங்கக்கா என் பிரெண்ட்ஸ் கூட வந்தேன்.
என் பிரெண்ட்ஸ் இந்த டூருக்கு வரலை.
ஒரு ஆர்வக்கோளாறுல பேர் கொடுத்துட்டேன்.
ஆனா ஒரு பக்கியும் பேசமாட்டேங்குதுங்க. அதுங்க செட்டுசெட்டா வந்துருக்குங்க போல.
அதுங்களுக்குள்ளயே என்ஜாய் பண்ணிட்டு வருதுங்க.
அதான். நான் இங்க ஸ்டே பண்ணிட்டேன்.”

அவள் காதைப் பிடித்துத் திருகியபடி, “அதாவது அவங்க உன்னைத் தெரயாம விட்டுட்டு போல. நீ என்னைப் பார்க்கவும் கழண்டு வந்துருக்க அப்படித்தான” என்றாள்.

“ம்ம் அப்படியும் சொல்லலாம்… ஆஆஆஆஆ….அக்கா…நீ முதல்ல காதை விடுக்கா.”

“உன் மேம் நம்பர் கொடு முதல்ல” என அவளிடம் ஆசிரியரின் அலைபேசி எண் வாங்கித் தொடர்பு கொண்டாள்.

“மேடம். வணக்கம். நான் சந்தனாவோட அக்கா அமிழ்தா பேசுறேன்.”

“ஐ.ஏ.எஸ் ஆபிசர் அமிழ்தா மேடம்?”

“எஸ் மேம். நான் சந்தனாகிட்ட பேசணும். கொஞ்சம் போன் கொடுக்கறீங்களா?”

‘பேசு’ என்று அருகிலேயே நின்றிருந்த தங்கை சைகை காட்ட, அவளை முறைத்தவளுக்கு அந்த பஸ்ஸில் பரபரப்பு தொற்றுவதை உணர முடிந்தது.

“மே….டம்”

“பதறாதீங்க, அவ என்கூடதான் இருக்கா.
ஆனா எப்படி இவ்வளவு கேர்லஸ்ஸா இருக்கீங்க.
விட்டுட்டுப் போயிருக்கீங்க? அதை விட இவ்வளவு நேரமா தேடாம இருந்துருக்கீங்க. ஒவ்வொரு தடவை ஏறி இறங்குன பிறகும் அட்டென்டன்ஸ் எடுக்க மாட்டீங்களா?
நான் இந்த ஊரில வேலை பார்த்ததால சரி. இல்லாட்டினா என்ன ஆகிருக்கும்.? உங்களை நம்பிதான அனுப்புறோம்”

“மேடம் சாரி மேடம் அங்க இருந்த பரபரப்புல இதைக் கவனிக்கல. எப்படி மிஸ் ஆனான்னு தெரியல.”

“சரி.மத்தவங்க சரியா இருக்காங்களான்னு செக் பண்ணுங்க.
இவளை எங்க வெயிட் பண்ணச்சொல்ல? எப்ப வந்து கூட்டிட்டுப் போறீங்க?”

“இல்ல மேடம் …அதுவந்து சாரி மேடம்… இங்க மலை மேல ஏற ஆரம்பிச்சுட்டோம் இதுக்கு மேல திரும்பி வந்தா திரும்ப வந்து மலையேற ரொம்ப லேட்டாகிரும் மேடம். ஏற்கனவே லேட்தான் மேடம்.
இங்க மத்த எல்லாரும் கரெக்டா இருக்காங்க மேடம்.
ஒரு பொண்ணுக்காக திரும்ப வர முடியாது மேடம்.
நீங்க கொஞ்சம் உங்க சிஸ்டரைக் கேர் பண்ணிக்கோங்க மேடம்.
வரப்ப நாங்க பிக்கப் பண்ணிக்குறோம் மேடம்.
ஸாரி மேடம்.
இனிமேல் இப்படி நடக்காது மேடம்.
ரியலி வெரி வெரி ஸாரி மேடம்…”

“சரி, நீங்க நாலுநாள் கழிச்சு திரும்ப இங்க வரவும் கால் பண்ணுங்க. இனி போற இடத்துலயாவது ஒழுங்கா அட்டன்டன்ஸ் எடுங்க.காலேஜ்ல மட்டும் பீரியடுக்கு பீரியட் எடுக்குறீங்கல்ல”

அவள் போனைக் கட் செய்யவும் அதை உறுதிபடுத்திக்கொண்டு,
“ஐயோ என் செல்லக்குட்டி…
அந்த பவுடர்டப்பாக்கு செம டோஸ்.
எத்தனை தடவை சும்மா பேசுறதுக்குக் கூட உங்கக்கா கலெக்டர் ங்கற திமிரான்னு திட்டும் தெரியுமா?
என் மனசுல இருக்க ஆதங்கத்தை எல்லாம் போக்கிட்ட…
அப்ப நாலு நாள் அக்காகூட ஜாலி…” என்று குதித்தாள் சந்தனா.

மனதுள் சிரித்தவள் ‘வந்துத்தொலை’ என அவளை வீட்டில் கொண்டு போய் விட்டாள்.

இறங்கும் போது,

“அக்கா ப்ளுடூத் கொடுக்கா…”

“ப்ளுடூத்தா?”

“ஆமாக்கா? நீ வரவரை எனக்கு போர் அடிக்கும்ல. அதுக்குதான் படமாவது பார்ப்பேன்.”

“ஆனா எங்கிட்ட இல்லையேடி.ரிப்பேர் ஆகிருச்சு.”

“அக்கா சின்னபுள்ளத்தனமா விளையாடத…
இப்பதான பேசிட்டு இருந்த. அதுக்குள்ளயுமா ரிப்பேர் ஆகும்?”

“இப்ப பேசிட்டு இருந்தனா? என்ன உளர்ற…”

“ஆமாக்கா இப்பதான் அந்த எம்எல்ஏ ஆபிஸ்ல பேசிட்டு இருந்தியே. வெட்டவெளியைப் பார்த்து வெறிச்சுக் கத்திகிட்டு இருந்த…
அப்ப ப்ளுடூத் தான காதில மாட்டிருப்ப”.

“நீ என்ன சொல்ற, எப்ப அப்படி பேசிட்டு இருந்தேன்னு சொல்ற……….” அமிழ்தா தீவிரமாகக் கேட்டாள்.

“எக்கா கொடுக்க இஷ்டமில்லன்னா இல்லன்னு சொல்லு.
இப்படில்லாம் பொய் சொல்லாத.
நான் உன் மூஞ்சில வேப்பிலை அடிக்கறதுக்கு முன்னாடிதான தனியா பேசிட்டு இருந்த…”

“தனியா பேசிட்டு இருந்தனா? நீ என்னடி சொல்ற…”
அமிழ்தாவின் முகம் அதிர்ச்சியை அப்பட்டமாய்க் காட்டியது.

(தொடரும்…)

2 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *