📖 Premium தளத்தில் கதைகள் வாசிக்க, 🛒 Amazon Kindle‑இல் கதைகள் வாசிக்க, ▶️ YouTube Channel‑இல் Audio novel கேட்க👇
Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 33

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 33

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

சற்றும் யோசிக்காமல் சட்டென தன்முன்னாலிருந்த டேபிள் வெயிட்டை எடுத்து அவரது காலருகில் எறிந்தாள்.

தன்னிச்சையாக அருணாச்சலம் நகர்ந்து விட அது அவரைத் தொடர்ந்து உள்ளே வந்து நாகாபரணத்தின் காலில் விழுந்தது.

“அய்யோ பட்ட காலிலேயே படுதே” முன்தினம் பூட்டு விழுந்த காலைப் பிடித்தபடி வலியில் முனகினார் அவர்

“அய்யோ ஸாரி சார் ஸாரி நான் கூட பெர்மிஷன் கேட்காம வரவும் ஏதோ திறந்த வீட்டுல நுழையும்ன்னு சொல்வாங்களே அது மாதிரி எதுவும் நுழைஞ்சுருச்சோன்னு நினைச்சு விரட்டுறதுக்காக டேபிள் வெயிட்டை வீசிட்டேன் ஸாரி சார்…” என்றபடி எழுந்து வந்தாள் அமிழ்தா.

“ஏய் என்னடி பண்றதையும் பண்ணிட்டு நாய்ன்னு வேற சொல்றியா?”

“நான் அப்படில்லாம் எதுவும் சொல்லலையே சார்… அது சரி… உங்களுக்கு கை எப்படி இருக்கு…” அவள் குறிப்பாகக் கேட்க அவள்முன் மானம் போகக்கூடாதென்பதற்காக, போட்டிருந்த கட்டை அவிழ்த்துவிட்டு வந்திருந்த கையைப் பார்த்தவர் வாயை மூடினார்.

அந்த டேபிள் வெயிட்டை எடுத்து அவளது கையில் கொடுத்த அருணாச்சலம் “கேட்காம வந்தது தப்புதான்மா… வேணும்ன்னா போய்க் கதவைத் தட்டிட்டு வரவா மேடம்” என்று சாந்த சொரூபராகக் கேட்டார்.

பதுங்கிப்பாய்கிற ரகம்… பிரதாப்பின் வார்த்தைகள் காதில் ஒலிக்க, எச்சரிக்கையடைந்தவள் “வேண்டாம் சார் வந்துட்டீங்கள்ல உட்காருங்க” என்று நாற்காலியைக் காட்டியவள், தானும் அமர்ந்தாள்.

“சொல்லுங்க என்ன விஷயம்?”

“நேத்து நீங்க நம்ம கட்டிடத்தை இடிச்சிட்டீங்க… சரி… அது இடிக்க வேண்டிய கட்டிடம் தான்…”

விளக்கம் கேட்டு ஏதாவது கோர்ட் நோட்டீஸ் வரும்… கொடுத்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தவளுக்கு அருணாச்சலத்தின் இந்த சுமூக நடவடிக்கை சந்தேகத்தையே கொடுத்தது… அதைக் காட்டிக்கொள்ளாமல் அவருக்கு ஆதரவாகப் பேசுவது போலவே “ நீங்க புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்… எல்லாரும் இவ்வளவு சீக்கிரம் தப்பை ஒத்துக்க மாட்டாங்க… இனி அந்த மாதிரி இடங்கள்ல கட்டிடம் கட்டாதீங்க…” என்றாள்.

“சரிங்க மேடம்…அப்ப மத்த இடங்கள்ல கட்டலாமா மேடம்?” அவரது அத்தனை மேடங்களில் எதை நம்பினாலும் அதீதப் பணிவை மட்டும் என்றுமே நம்பி விடாதே என்று அவளது தந்தை ஞானசேகரன் கொடுத்திருந்த அறிவுரையும் அவளுள்ளே எச்சரிக்கை மணியடித்தது.

“ம்ம்…இதென்ன சார் கேள்வி? உங்களுக்குச் சொந்தமான இடங்களா இருந்தா தாராளமா கட்டிக்கோங்க…”

“இந்த ஆபிஸ் நல்ல பழங்காலகட்டிடம் மேடம்…”

“ஆமாம்… வெள்ளைக்காரங்க கட்டினது…”

“ம்ம்… இதில இருக்கற கற்களை என்னோட கட்டங்களுக்காகப் பெயர்த்து எடுத்துக்கவா மேடம்?”

“வாட்?”

“ஆமாம் மேடம்… நாங்களும் என்ன பண்றது சொல்லுங்க… உங்களுக்கு முன்னாடி வேலை பார்த்த கலெக்டர் அருளாளன் என் மேல இருந்த சொந்த வெறுப்புனால என்னுடைய எல்லாக் கல் குவாரிகளையும் இயங்க விடாம பண்ணிட்டாரு மேடம்… கிட்டத்தட்ட மூணு வருஷமா அத்தனையும் பூட்டிக்கிடக்கு…இதனால எவ்வளவு கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுருக்கு தெரியுமா மேடம்…எவ்வளவு தொழிலாளர்கள் வேலை இழந்துருக்காங்கன்னு தெரியுமா மேடம்… அதனால தயவுசெஞ்சு எல்லா குவாரிகளையும் திரும்ப திறக்கறதுக்கு அனுமதி அளிக்கணும் மேடம்…” என்றபடி ஒரு மனுவை அவளிடம் கொடுத்தார் அவர்…

அதை வாங்கிப் பார்த்தவள் திகைத்தாள்… எத்தனையோ பேரின் கையெழுத்து எத்தனையோ பக்கங்களுக்கு நீண்டிருந்தது… ‘இல்லை தன்னுடைய அருள் இத்தனை பேரைப் பாதிக்கும் ஒரு செயலை செய்திருக்க மாட்டான்… அப்படியே செய்திருந்தாலும் அதற்குச் சரியான காரணம் இருந்திருக்கும்…’ மனதில் நினைத்ததையே அவரிடமும் கூறினாள்.

“சார்… நான் கேள்விப்பட்ட வரைக்கும் மிஸ்டர் அருளாளன் ரொம்ப நேர்மையானவர்… அவர் செஞ்சுருக்கார்ன்னா அதுக்கு ஏதாவது வேலிட் ரீசன் இருக்கும்… அதையும் யோசிக்கணும்… ஆனா நான் உங்களோட கோரிக்கையையும் கண்டிப்பா கன்சிடர் பண்றேன்” மாவட்ட ஆட்சியராகப் பதிலளித்தாள்.

“உங்கப்பக்கத்துல இருக்க ஒருத்தர்… ரெண்டுபேர்… சொல்றதை வச்சு நீங்களாவே அவர் நேர்மையானவர்ன்னு நினைச்சுக்காதீங்க மேடம்…” பிரதாப்பைக் குறிப்பாகப் பார்த்தபடி சொன்னவர், “உண்மையில் அந்த அருளாளனுக்கு என்மேல தனிப்பட்ட வெறுப்புகள் நிறையா இருந்தது…தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை அவர் வேலையில் காட்டுனார்… அதுதான் காரணம் மேடம்…”

‘போயா லூசுஇஅவன் தன்னுடைய சொந்த விருப்பை வேலையில் காட்டிருந்தா… இந்நேரம் உன் விளங்காத சாம்ராஜ்யத்துக்கு இளவரசனா இருந்துருப்பான்… அதைக்காட்டாததனாலதான் வீணாச் செத்துட்டான்… கண்ணுமுன்னாடி வந்து நின்ன மகனைத் தன்கையாலயே கொன்னுட்டு எவனோ ஒருத்தனை மகன்னு நினைச்சுத் தலையில வச்சுக் கொண்டாடிக்கிட்டு இருக்க…” என்று மனதில் நினைத்தவள் “அதான் நான் கன்சிடர் பண்றேன்னு சொல்லிட்டனே சார்…இப்ப எனக்குக் கொஞ்சம் வேற வேலை இருக்கு… சோ… பிளீஸ்…” என்றாள்.

“சரிங்க மேடம் பார்த்துப் பண்ணுங்க… உங்களுக்கு வேற எந்த உதவின்னாலும் தயங்காம என்னைக் கேட்கலாம்…” என்றபடி நகர்ந்தார் அவர்…

அவர்கள் செல்லவும் தன்னுடைய வழக்கப்படி ஒரு கிளிக் பேனாவை எடுத்து அழுத்தி அழுத்தி விடுவித்தபடி சிந்தனையில் ஆழ்ந்தவளுக்குக் குழப்பமே மிஞ்சியது…

அந்த மனுவை எடுத்து நிறுத்தி நிதானமாகப் படித்தாள்…

அருணாச்சலத்தைத் தவிர வேறு யார் வந்து கொடுத்திருந்தாலும் செய்தது அருளாளனைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் அவள் கண்டிப்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பாள்…

இந்த இருவர் என்பதுதான் அவளது மனதைக் குழப்பத்தில் ஆழ்த்தியது…

அருளிடமே கேட்டு விடலாமா? என்று அவள் சிந்தித்த கணம்… அவளது முன்னால் ஒரு கட்டுக்கோப்புகளை மேடம் என்றபடி அவளது பார்வைக்காக வைத்தார் பிரதாப்…சரி அதை அப்பறம் பார்ப்போம் என்று முடிவுசெய்தவள்,

“அந்த மனுவை பிரதாப்பிடம் கொடுத்து கொஞ்சம் இதோட உண்மைத்தன்மையை ஆராய சொல்லுங்க சார்…” என்றாள்…

“சரி மேடம்” என்றபடி வாங்கியவர் தயங்கிநிற்க, “என்ன சார்? இதுல அருளாளன் மேல எந்தத்தப்பும் இல்ல… அருணாச்சலம் சொன்னதெல்லாம் பொய்ன்னு சொல்லப்போறீங்க அதான” என்றாள்…

“இல்ல மேடம்…”

“என்னது?”

“ஆமாம் மேடம்… இந்த விஷயத்துல அருணாச்சலம் சொன்னது கரெக்ட்தான்மேடம்… அருள் சார் எதுக்காக அந்தக் குவாரிகளுக்கு சீல் வச்சாருன்னே தெரியல மேடம்…”

“நீங்க சொல்றது எனக்குப் புரியல… தகுந்த காரணமில்லாம அருளாளன் எதுக்கு அப்படி பண்ணப்போறாரு?”

“அதான் மேடம் எனக்கும் தெரியல… அருள் சார் அப்படிப்பட்டவர் கிடையாது …பொதுவாகவே கல் குவாரிகள்ல வெடி வைச்சு பாறைகளைத் தகர்க்கும் போது விபத்துக்கள் ஏற்பட்டு இறப்புகள் ஏற்படுறது வழக்கம்தான் … அப்படி ஒரு குவாரில நடந்த ஒரு விபத்தை வச்சு எல்லா குவாரிகளுக்குமே சீல் வச்சாரு மேடம்…இவ்வளவுக்கும் அந்த விபத்துல நிறைய பேருலாம் இறந்து போகல மேடம்… ஒரே ஒரு சின்னபொண்ணு மட்டும்தான்…”

‘சின்னப்பொண்ணுதான் எனவும் ஒருவேளை அந்த மாதவியாக இருக்குமோ? அருளுடைய விபரீத முடிவிற்கும் இது காரணமாக இருக்குமோ’ என்று தோன்ற, அருளிடமே கேட்டு விடலாம் என்று அவனை அழைக்கப் போன கணம்  அவளை அவளது அலைபேசி அழைத்தது.

சந்தனாதான்…

“என்ன சந்தனா இது வேலை நேரத்துல” எரிச்சலுடன் கேட்கப்போனவளை “அக்கா” என்றழைத்த தங்கையின் குரலிலிருந்த பதட்டமும் பயமும் தடுத்தது…

“என்ன சந்து?”

“அக்கா சீக்கிரம் கிளம்பி வாக்கா…”

“ஏன்? என்ன ஆச்சு?”

“வி…வி… விவேகன்…”

“விவேகனுக்கு என்ன?”

“தூ..தூ…தூக்குல தொங்கிட்டுருக்கான்க்கா…”

“என்னது?”

அமிழ்தா பதறி எழுந்த வேகத்தில் மேசையிலிருந்த பொருட்கள் சிதறி விழுந்தன…
         

                                                                                                                                        (தொடரும்…)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 33”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!