குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த அருணாச்சலம் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்…
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
இருள் தன் கருமையை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருந்தது…
அதைப் பார்க்கும் போது தானும் எதையோ இழந்து கொண்டிருப்பது போல,
அல்லது…
இழந்து விட்டது போல,
இரவு முழுவதும் உறக்கம் வராமல் மொட்டைமாடி இருளில் உலாவிக்கொண்டிருந்த அருணாச்சலத்திற்கு தோன்றியது…
நேற்று மகனின் பிறந்தநாள்…
கடந்த பதினேழு வருடங்களாக இந்த நாளில் அவன் அருகிலிருக்க மாட்டானா? என்று ஏங்கியிருக்கிறார்.
ஆனால்,
நேற்று ஏனோ அவன் அருகில் இருந்தும் இல்லாதது போல ஓர் உணர்வு…
ஏன் என்று தெரியவில்லை…
அந்த நாள் அவருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை…
இவ்வளவுக்கும் மனைவி மகன் இருவரது ஆசைப்படியும்
எந்தவிதமான ஆடம்பரக்கொண்டாட்டமும் இல்லாமல் முழுநாளும் குடும்பத்துடன் மட்டுமே கழித்தார்…
மகன் நாள்முழுதும் கூடவே இருந்தும் தன்னுடைய மகனை நிரந்தரமாக இழந்து விட்டது போன்ற உணர்வு வாட்டியது… ஆனால் அப்படி நினைக்கக்கூட அவருடைய மனம் பயந்து மறுத்தது…
அவருக்கு எப்பொழுதும் இந்த நாளில் தன்னுடைய பத்து வயது மகனின் முகம்தான் நினைவில் நிற்கும்…
இந்த வருடம் நியாயமாக, அவருடைய மனதில் சக்தி இருந்திருக்க வேண்டும்… ஆனால்…
ஆனால்…
அதற்குப் பதிலாக அந்த… அந்த… அருளாளன் நிறைந்து நின்றான்…
எந்த விஷயத்தையும் அவர் செய்வதற்கு முன் யோசிப்பார்…
கவலைப்படுவார்… இப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது என்று?
ஆனால் செய்தபின் அது நல்ல விளைவைத் தந்தாலும் சரி…
மோசமான விளைவைத் தந்தாலும் சரி… பெரும்பாலும் மோசமான விளைவைத் தான் தந்திருக்கிறது…
ஆனால் அதனைப் பற்றி வருத்தப்பட்டதில்லை..
இவனது விஷயம் மட்டும்தான்… செய்வதற்கு முன் யோசிக்கவும் இல்லை… செய்தபின் இப்படிப்போய் செய்து விட்டோமோ என்று யோசிக்காமலும் இல்லை…
அவனைக் கொன்றெரித்த கணத்திலிருந்தே, அவனைக் கொன்றிருக்க வேண்டாமோ… என்ற எண்ணம் அவரைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது…
அவசரப்பட்டு விட்டோமோ என்று அடிக்கடி தோன்றியிருக்கிறது…
ஆனால் இன்று அந்த எண்ணவோட்டத்தின் வீரியம் அதிகமாக இருந்தது…
உண்மையில்….
அவருக்கு அவனை ரொம்பப் பிடிக்கும்… பார்த்தவுடனேயே அவனைப்பிடித்தது போல அவருக்கு யாரையும் பிடித்ததில்லை…பத்மினி உட்பட…
பிறந்தவுடன் தன் மகனைக் கையில் வாங்கியபோது தோன்றிய அதே பிடித்தம்தான் அவனைப் பார்த்ததும் தோன்றியது…
ஆனால், அந்தப்பிடித்தம் எந்தப்புள்ளியில் வெறுப்பாக மாறியது என்றுதான் தெரியவில்லை…
ஆனால் அவருடைய ஆழ்மனம் அவனைத் தான் வெறுக்கவில்லை என்று அடித்துக் கூறியது…
இந்த உண்மையை வெளி உலகத்திடம் கூறாவிட்டாலும் அவரது மனதிடம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்…
ஆம்…அவன் அவரால் வெறுக்க இயலாதவன்…
வெளியே எவ்வளவு முட்டிமோதினாலும் உள்ளே அவனது செயல்களைக் கண்டு அவருக்கு ஒரு மெச்சுதல்தான் தோன்றும்… என்னையே அசைத்துப் பார்க்கிறானே இவன் என்று… தன் மகன் சிறுவயதில் அவருக்கு ஆட்டம் காட்டும்போது… தோன்றும் மெச்சுதலைப்போல…
மீண்டும் அவனைத் தன் மனம் தன் மகனுடன் ஒப்பிட அவரது மனம் திடுக்கிட்டது…
கூடவே இன்னொரு சிந்தனையும் வந்தது… அவரது மகன் அரசு அத்தனை நாள் அவரது வீட்டிலேயே டிரைவராக வேலை பார்த்திருந்திருக்கிறான்…
அவனை தன்மகன் என்று ஏன் ஒருநாள் கூடத் தோன்றவில்லை என்ற யோசனை வந்தது…
ஒரு கணம்….
ஒருவேளை நாகாபரணம் சொன்னது உண்மையாக இருக்குமோ என்று கூட ஒருகணம் தோன்றிவிட தலையை மறுப்பாக உலுக்கினார் அவர்…
மனதில் வெறுமை மட்டுமே படர்ந்திருக்க…
அருகிலேயே இருந்தாலும் பிரிந்திருப்பதைப் போல மகனின் நினைவு மனதை வாட்ட உறங்கிக்கொண்டிருக்கும் மகனின் முகத்தைப் பார்த்தால் மனம் நிம்மதியடையும் என்று அவருக்குத் தோன்றியது…
விறுவிறுவென்று இறங்கி கீழே சக்தியின் அறையை நோக்கிச் சென்றார்…
மகனது உறக்கம் கலையாமல் இருக்க வேண்டும் என மெல்ல கைப்பிடி குமிழில் கைவைத்தவர் உள்ளே கேட்டுக்கொண்டிருந்த பேச்சுக்குரல் காதில் விழ, அப்படியே ஸ்தம்பித்து நின்றார்.
விவேகனைத் தேடி வந்த அமிழ்தா அவனுக்குப் பதிலாக அருளாளனின் கல்லறையின் முன் கன்னங்களில் கண்ணீர் வழிய ஒரு சிறுபெண் நின்று கொண்டிருக்க, அவளை நோக்கிச் சென்றாள்.
ஒருகணம் தயங்கியவள், அந்தப்பெண்ணின் தோளில் கைவைத்தாள்.
அவள் மெல்ல திரும்ப, “பாப்பா நீ யாருடா? உனக்கு அருளாளன் என்ன வேணும்?” என்றாள்.
அமிழ்தாவிடம் அந்தப்பெண் அதே கேள்வியைத் திருப்பிப் படித்தாள்.
“ நீங்க யாருக்கா? அருள் அண்ணனுக்கு உங்களை எப்படி தெரியும்?”
“நான் அமிழ்தா… அருளோட… பிரெண்ட்…”
“நான் மாதவி… நானும் அருள் அண்ணனோட பிரெண்ட்தான்” என்றாள் அவள்.
“மாதவி?” அமிழ்தாவின் விழிகள் விரிந்தன.
“ஆமாக்கா…அருள் அண்ணன் என்னைப்பத்தி உங்கக்கிட்ட சொல்லிருக்காங்களா?”
“ஆமாம்… ஆனா நிறைய இல்ல… “
“ஆனா அண்ணன் என்கிட்ட உங்களைப் பத்தி எதுவும் சொன்னதில்லையே…”
“நான் அவருக்கு வேலையில தான் பழக்கம்… அதனால… சொல்லாம இருந்திருக்கலாம்…”
“வேலையிலயா? அப்ப நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆக்கா? இல்ல…”
“ஐ.ஏ.எஸ்தான்டா… இப்ப இந்த ஊர் கலெக்டர்…”
மாதவி ஏதோ தீவிரமாக யோசிக்கவும் என்னம்மா? என்றாள் அமிழ்தா…
அவளது முகத்தைக் கூர்ந்து பார்த்தவள், “அக்கா நீங்க நல்லவங்களா? “என்றாள்.
‘இதென்ன இவள் திடீரென இப்படி கேட்கிறாள்? ‘ என்றிருந்தது அமிழ்தாவிற்கு…
இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது… நாயகன் பட கமலஹாசன் போல தெரியலையேப்பா என்று தான் சொல்லவேண்டும்…
“அது என்னோட சூழலைப் பொறுத்துடா… என் மனசாட்சிக்குச் சரின்னு பட்டதைச் செய்வேன்… அது பர்மிஷனோட அப்பப்ப தப்பும் செஞ்சுருக்கேன்… மனுஷிதான… “
மாதவி மேலும் யோசிக்க அமிழ்தாவும் அவளை யோசனையுடனே பார்த்திருந்தாள்…
பின் நிமிர்ந்த மாதவி “அக்கா… நீங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு எனக்குத் தெரியாது… ஆனா என்னோட உள்ளுணர்வு நீங்க நல்லவங்கன்னு தான் சொல்லுது… அதையும் அருளண்ணனையும் நம்பி அவர் கல்லறைக்கு முன்னாடி வச்சு உங்கக்கிட்ட இதைச் சொல்றேன்… ஏதாவது பண்ண முடியுமான்னு பாருங்கக்கா…” என்று சொல்ல ஆரம்பித்தாள்.
அவள் சொல்லச்சொல்ல அதிர்ச்சியை உள்வாங்கிய அமிழ்தா அப்படியே அருளாளனின் கல்லறை மீதே அமர்ந்தாள்…
“அக்கா அக்கா…” என்று மாதவி உலுக்க, “ஒண்ணுமில்லப்பா…” என்று லேசாகப் புன்னகைத்துவிட்டு எழுந்தாள்.
“ஏதாவது பண்ணுங்கக்கா…”
“கண்டிப்பா மாதவி…
ஆனா நீ பத்திரமாதானம்மா இருக்க, “
“நான் பத்திரமாதான்கா இருக்கேன்…அன்னைக்கு மாதிரியே என்னைக்கும் அருளண்ணன் எனக்கு எதுவும் ஆகவிடமாட்டாங்கக்கா… சரிக்கா… பாட்டி தேடுவாங்க… நான் வர்றேன்க்கா” என்று விட்டுக் கிளம்பினாள் அவள்.
சற்று நேரம் யோசனையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்திருந்த அமிழ்தாவிற்கு சந்தனாவின் போன் வரும் போதுதான் விவேகனின் நினைவே வந்தது..
இவனை மறந்துவிட்டோமே… எங்கே போயிருப்பான்? என யோசித்துக் கொண்டே போனை எடுத்தவளிடம் “அக்கா இப்ப விவேகன் சக்தியண்ணன் போனிலிருந்து கால் பண்ணான்… சக்தியண்ணன்தான் அவனை அவர்கூட கூட்டிட்டுப்போனாராம்…” என்று விவேகன் சொன்னதைச் சுருக்கமாகச் சொன்னாள்…
அதைக் கேட்டுவிட்டுப் போனைக் கட்செய்தவள் சக்தி… சக்தி… என்று தலையில் தலையில் அடித்தாள். அவனுக்குப் போன் செய்து பார்த்தாள். எடுக்கவில்லை…
பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய்க் கிளம்பியவளை நில்லு அமிழ்தா என அருளாளனின் குரல் தடுத்தது.
“எங்க போற?”
“அருணாச்சலம் வீட்டுக்கு… எனக்கு இதுக்குமேல சக்தியையும் விவேகனையும் அங்கே விட்டுவைக்கப் பயமா இருக்கு அருள்… பேசாம நேராப் போய் அவங்களைக் கூட்டிட்டு வந்துரப்போறேன் கையோட…”
“இல்ல அமிழ்தா… அப்படி பண்ணா அருணாக்குப் பயங்கரமா சந்தேகம் வரும்… அது ரொம்ப ஆபத்தானது…”
“ஆனா அதுக்காக அவர் அவ்வளவு மோசமானவர்ன்னு தெரிஞ்சும் அவங்களை எப்படி விட்டுவைக்கறது அருள் தைரியமா? எனக்கு ஒரு செகண்ட் நீங்க இறந்ததில்ல தப்பே இல்லன்னு கூடத் தோணிருச்சு தெரியுமா?”
ஆதங்கத்துடன் சொன்னவளைப் பார்த்து அமைதியாய்ப் புன்னகைத்தான் அவன்… அருளாளன்.
சக்தியும் விவேகனும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க கேட்க அருணாச்சலத்துக்குள் கோபம் கொந்தளித்தது…
ஏதோ சொல்லியவாறு எதேச்சையாகத் திரும்பிய விவேகன் அவரை அங்குப் பார்த்து அதிர,
அவனது அதிர்ச்சியைப் பார்த்துத் திரும்பிய சக்திக்கும் கண்கள் சிவக்க, ருத்ரமூர்த்தியாய் நின்று கொண்டிருந்த அருணாச்சலத்தைப் பார்த்து சப்த நாடியும் ஒடுங்கியது.
(தொடரும்....)
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sakthi solratha kekama ipo matikitta paru