Skip to content
Home » சொந்தமும் கொண்டாட்டமும் – மிருதுளா அஷ்வின்

சொந்தமும் கொண்டாட்டமும் – மிருதுளா அஷ்வின்

“அம்மா… அம்மா….” என்று உரக்க அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள் வாசுகி.

வாசுகி வீட்டினுள் வரும் போது அவளது தாயார் தினசரி நாளிதழ் ஒன்றை காலை நீட்டி சுவற்றில் சாய்வாக அமர்ந்தபடி வாசித்துக் கொண்டிருந்தார்.

அவள் வருவதை புன்னகையுடன் எதிர்கொண்டு விட்டு மீண்டும் நாளிதழில் பார்வையை திருப்பினார்.

“எம்மா நான் இப்படி காட்டு கத்தல் கத்திகிட்டே வீட்டுக்குள்ள வரேன். நீ என்னடான்னா ஒரு சின்ன விசாரிப்பு கூட செய்ய மாட்டீங்கிற…!?”

“கத்திகிட்டே வீட்டுக்குள்ள வர்றவ நான் கேட்காட்டி சொல்லாம விட்டுடப் போறியா என்ன? சொல்ல வந்த விஷயத்தை சட்டுன்னு சொல்லு” என்றார் அவரும் மென்மையாக.

ஆனால் அவள் அடுத்த பேச்சுகளை பேசும் முன்னரே அருகிலேயே வைத்திருந்த கடலை மிட்டாயும் தண்ணீரையும் கையில் தந்தார். “இந்தா இதை கடிச்சிட்டு, குடிச்சிட்டு அப்புறம் விஷயத்தை சொல்லு” என்றார் காந்தா. மகள் வரும் நேரம் சரியாக உணர்ந்தே இருந்தார்.

வாசுகி தையலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே தொலைதூர கல்வியில் பி.ஏ வரலாறு படிப்பவள். அவளின் மிக பெரிய கனவே ஜில்லா கலெக்டர் ஆவது தான். அந்த கனவை சாதிக்க வேண்டி, முழு முயற்சியில் ஈடுபட்டு பரிட்சைக்கு தயாராகி வரும் துடிப்பான பெண்.

காந்தாவின் கணவர் ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர். தற்போது அருகில் உள்ள வங்கியிலும், போஸ்ட் ஆஃபீசிலும் எழுத தெரியாத மக்களுக்கு உதவியாக சேவை மனப்பான்மையோடு சலான் எழுதுவது, ரசீதை பெறுவது, யாரை எவ்வாறு அணுகி தங்களின் குறையை தீர்ப்பது என்று சொல்லி கொடுத்து துணை புரிபவர். ஊர் மக்களின் சேவையில் கவனத்தை செலுத்துபவர்.

“இப்ப சொல்லுடி உன்னோட சமாச்சாரத்தை” என்றார் காந்தா.

“அம்மா இந்த பண்டிகையை எல்லாம் எவன் தான் கண்டுப்பிடிச்சானோ?! ஒரே எரிச்சலா வருது!” என்றாள்

“அடியே… இந்த பண்டிகைக்கு தான்டி நானும் உங்க அப்பாவும் ஏக்கத்தோடு காத்துகிட்டு இருக்கோம். விசேஷம் நாளில் தான் குடும்ப மொத்தமும் ஒன்னு கூட வீடு முழுக்க மகிழ்ச்சி பெருகும்….” என்றார் இன்முகத்துடன்.

“க்கும் நீ ஆசைப்பட்ட மாதிரியே உன் புள்ளைங்க அவனுங்க குடும்பத்தோட வராங்களாம்…” காந்தாவுடைய முகம் பூரிப்பில் பொங்கியது.

“ரொம்ப தான் குஷியோ… வீடே கூட்டமாகிடும் நான் எப்படி என்னோட படிப்பை பார்க்கிறதாம்?” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு!

மேலும் “ஒரே சத்தமா இருக்கும்… கூச்சலும் வாக்குவாதமும்… கூடவே உன்னோட உடம்பு வலி புலம்பலும்…. இது எல்லாம் அவசியமா? அண்ணன்கள் அண்ணிகள் பிள்ளைகள், கூடவே பெரியம்மா பெரியப்பா சித்தப்பா, சித்தி, அவர்களின் பிள்ளைகள், எல்லாரும் ஊர் திருவிழா முடியும் வரை இருக்கப் போறாங்களாம்!” என்றாள் சுணக்கமாக.

“வாசுகி… இது எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம். ரொம்ப நாள் கழித்து சொந்தங்களை பார்க்கும் போது, நமக்கு இவ்வளவு உறவுகள் இருக்கு… அப்படிங்கிற நினைப்பே ஒரு உத்வேகத்தை கொடுக்கும் தெரியுமா?”

“அடப்போம்மா… நீ கிச்சனே கதின்னு இருப்ப; அப்பா திண்ணையே கதின்னு இருப்பாரு; என்கூட ஒரு நிமிஷம் உங்களால் பேச முடியாது… பத்தாகுறைக்கு நீ என்னையும் சேர்த்து வேலை வாங்குவ?” என்றாள்.

“அப்ப உன் பிரச்சனை வேலை செய்யறது தானா?” என்றார் நக்கலாக.

“இல்லையா பின்ன?! ஒரு நாளுக்காக ஆசைப்பட்டு, ஒன்பது நாள் உடல் நோவு தேவையா?… என் படிப்பும் கெட்டுப் போகும்”

“என்னடி படிப்பு பொல்லாத படிப்பு? நீ கலெக்டர் ஆகும் போது இன்னும் அதிகமான மக்களை சந்திக்கணும், அவங்க குறைகளை களையனும், மாவட்டம் முழுசும் கேம்ப் போகனும், அரசு நிர்வாகத்தை பார்க்கணும், மந்திரிகளை சந்திக்கனும், நலத்திட்டங்கள் யோசிச்சு செயல்படுத்தனும்… இன்னும் எவ்வளவோ இருக்கு? வீட்டுக்குள்ளே உன்னால ஒரு இருபது பேரை சமாளிக்கத் தெரியாதவள், ஜில்லாவை ஒழுங்காக நிர்வகிக்க முடியுமா? எனக்கு சந்தேகமாக இருக்கு” என்று முகத்தை தோளில் இடித்தார்.

“அம்மா… நான் என்ன சொல்றேன்… நீ என்ன சொல்லிட்டு இருக்க? இப்ப தானே பொங்கல் முடிஞ்சுது… அதுக்குள்ள இன்னொன்னு… கூடவே ஆங்காங்கே சின்ன சின்ன ஊர் நிகழ்ச்சி வேற… நாம மூன்று பேர் மட்டும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கு… இது போதுங்கறேன்” என்று சலித்துக் கொண்டாள்.

“வாசுகி… மனுஷங்க வேணும். யாருமே யாரையுமே சார்ந்து இருக்காம இந்த உலகத்தில் வாழ முடியாது. பெரியவங்க யாரும் முட்டாள்கள் இல்ல… ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு.

பொங்கல் தைத்திருநாள் எதுக்கு? உழவன் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். அது விவசாய நடவடிக்கைகளின் முடிவைக் குறிக்கிறது. அறுவடைக்குப் பிறகு, விவசாயிகள் வயலில் இருந்து பயிர்களை வியாபாரம் செய்வதற்கும், சேமிப்புத் திட்டங்கள் மற்றும் நிலத்தைப் பதப்படுத்துவதற்கும் நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். இந்திர தேவனுக்கும் சூரிய பகவானுக்கும் இயற்கைக்கும் அற்பணம் செய்யும் நாள்.

அதையே வருஷ பிறப்பா கொண்டாடுவதில்லை ஏன் தெரியுமா? அப்பப்ப சில வரலாறுகளில் ஆவணி மாதம் வருடப்பிறப்பு, தைமாதம் தான் வருடப்பிறப்பு என்று மாற்றிக் கொண்டே இருந்தது நீயும் படிச்சிருப்ப. ஆனா வான ரீதியாக, அறிவியல் ரீதியாக சித்திரை மாதம் சிறப்பு வாய்ந்தது.

வான ரீதியாக சொல்லனும்னா, நம்ம தமிழ் நாட்காட்டியில், சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாள் தான் சித்திரை முதல் நாள். அதே அறிவியல் ரீதியாக சொல்லனும்னா, பூமி சூரியனை சுற்றி வருவது நீள்வட்ட பாதையில்… அப்ப பூமியின் வேகம் சூரியனிலிருந்து அதன் தூரத்தைப் பொறுத்து அதன் சுழற்சியின் வேகமும் மாறுபடும். பூமி 360 டிகிரின்னு கணக்கு… 12 பாகமா பிரிச்சு வகுத்தால், முப்பது டிகிரி கோணம் கிடைக்கும். 12 தமிழ் மாதங்களை ஒவ்வொரு பாகமா வெச்சு கணக்கிட்டா, பூமி சரியாக நேர் திசையில் சூரியன் உதிக்கும் இடமாக கருதுவது சித்திரையில் தான்.”

“நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியவே இல்லம்மா? நான் போறேன்… உங்களோட பேசினா எனக்கு படிப்பு போகும்!” என்றாள் வாசுகி.

“கொக்குக்கு ஒன்னே மதின்னு இருக்கக்கூடாது. எல்லாமே அறிவு தான்… கத்துக்கோ விசாலமான அறிவு சிந்திக்க வைக்கும்” என்றார் காந்தா.

“பூமி சூரியனைச் சுற்றி வரும்போது மற்றும் ஒரு குறிப்பிட்ட நிலையில் பூமியின் பூமத்திய ரேகை மற்றும் சூரியனின் நிலை சமக்கோட்டில் சீரமைக்கப்படும். 0 டிகிரி. அதாவது இது பெரும்பாலும் மாலுமிகள் மற்றும் கடற்படையினரால் பயன்படுத்தப்படுகிறது. சூரியனுக்கும் பூமியின் பூமத்திய ரேகைக்கும் இடையிலான கோணம் 0 டிகிரி ஆகும். பூமியின் பூமத்திய ரேகை 0 டிகிரியில் ஒரே கோட்டில் சூரியனைக் கடக்கும் விதிமா பூமியிலிருந்து சூரியனுக்கு ஒரு கோட்டை வரையும்போது பூமிக்கு நேராக இருப்பது போல தோற்றம் அளிக்கும். இது சூரியன் உதயமாகும் போது நல்லாவே தெரியும். நீ வேணா நாளைக்கு காலையில சூரிய உதய நேரத்துல போய் பாரு. பூமி முப்பது டிகிரி சாய்வாக நகர்ந்து போனால், நம்ம கண்ணுக்கு சித்திரையிலிருந்து ஒவ்வொரு மாசமும் சூரியன் தெற்கு, தென்கிழக்கு நோக்கி நகர்ந்து போயிட்டு திரும்பவும், வடக்கு, வடகிழக்கு நோக்கி திரும்பி வருவது மாதிரி தோணும். இது எல்லாமே பூமியோட சுற்று பாதையால தான். அதனால் தான் சித்திரைத் திருநாள் ரொம்ப விசேஷம் வாய்ந்தது.” என்றார் காந்தா. அதை கேட்டு ஆச்சரியமாக நோக்கினாள் வாசுகி.

“வீட்டிலேயே இருக்கும் உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்மா? சீரியல் பார்த்தா இதெல்லாம் தெரியுமா என்ன?!” என்று கேட்டாள்.

“நாலு புக்கு படிச்சு, அறிவு சார்ந்த நாலு பேரு கிட்ட பேசினாலே போதும்… நமக்கு தெரிய வரும்… வீட்டுல இருக்கும் பெண்களுக்கு ஊர் வம்பும், புரளியும் தான் கவனம்ன்னு நினைச்சா நாங்களா பொறுப்பு. வீட்டில் உள்ள பெண்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு நீங்களா நினைசுக்கறீங்க” என்றார் காந்தா.

“அப்படின்னா எல்லா விழாவுக்கும் எதுவும் அர்த்தம் இருக்கா என்ன?”

“இருக்கே… நான் ஏற்கனவே சொன்னது தான். காரணம் இல்லாம முன்னோர்கள் எதுவுமே செய்யல. சித்திரை ஆடி மாசம் விவசாயம் விதைத்து பூமியில் உயிர் விதைக்கிறோம். அப்ப பூமி மட்டும் இல்லாம நாமளும் சூடா இருப்போம்.. அதை தணிக்க தான் குளிர்ச்சி உணவை எடுக்கச் சொன்னாங்க புரட்டாசி சூடு வேறு விதம்… அதனாலே மாமிசம் கம்மியா எடுக்க சொன்னாங்க. விதை விதைச்சதும் இரண்டு மூன்று மாதத்தில் மழை பெய்யும். அதான் ஐப்பசி, கார்த்திகை மாதம் இருட்டு அதிகம் அதான் வாசலில் விளக்கை நேரத்துடன் ஏற்றி வைத்தோம். கூடவே மழை பெய்த காரணத்தால், பூச்சி பொட்டு கண்டதும் வெளியே வரும் அப்போ வெளிச்சம் இருக்கும் இடத்தை நெருங்காமல் இருக்க தான் கார்த்திகை விளக்கு. மார்கழியில் காலையில் குளிர் அதிகம் ஆனா ஓசோன் லேயர் பூமிக்கு பக்கத்தில் ரொம்பவும் இருக்கும். அதை சுவாசிக்கும் நமக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும், உடம்பும் நல்லாருக்கும். இது எல்லாம் ஒரு சில காரணங்கள் தான். இதை விட வேறு சில காரணங்கள் கூட இருக்கலாம்.”

வாசுகி இவையெல்லாம் கேட்டு அதிசயித்துப் போனாள்.

“உனக்கு இன்னொன்னு சொல்றேன்…” என்றவர், தினசரி நாட்காட்டியில் ஒரு நாளை காண்பித்து, “கெர்ப்பொட்டம் ஆரம்பம் போட்டிருக்கே… அப்படின்னா என்னனு தெரிஞ்சுக்கனுமா?” என்று வினவினார் காந்தா.

“என்ன? தெப்ப திருவிழா மாதிரி எதாவது ஊருல திருவிழாவா இருக்கும்… இல்லையா? நீங்களே சொல்லிடுங்க” என்றாள் வாசுகி. அதை கேட்டு கிண்டலாக சிரித்தார் காந்தா.

“கர்ப்ப ஓட்டம் அது தான் திரிஞ்சு கெர்ப்போட்டம் ஆகிப்போச்சு.” வாசுகி திருதிருவென விழித்தாள்.

“ஒரு பொண்ணு கர்ப்பம் ஆனா, அவளுக்கு பிள்ளை பெற பத்து மாதம் ஆகும் இல்லையா… அதே தான் மழைக்கும் கார்மேகங்களுக்கும். மழைக்காலம் முடிஞ்சு அடுத்த வருஷமும் மழை வேணும்னா, சீசன் முன்னாடி ஒரு மாசம் வெயில் அடிச்சா நீராவி மேகங்களில் போயிடும்மா என்ன? கார்மேகங்களும் பத்து மாசம் சுமந்து மழையை தருது. மார்கழி மத்தியில் தொடங்கி, தை மத்தியில் வரைக்கும் கர்ப்ப ஓட்டம் ஆரம்ப காலம். அது கொஞ்ச கொஞ்சமா வலுத்து ஐப்பசியில் மழைக்காலம் ஆகுது. மார்கழியிலிருந்து ஐப்பசி வரைக்கும் எண்ணி பாரு பத்து மாசம் கணக்கு சரியா வரும்” என்று எழுந்தார்.

கூடவே, “இதெல்லாம் காலங்காலமாக கணக்கிட்டு செயல்படுத்தினார்கள். அந்த காலத்தில் பெரும்பாலான வீடுகள் கூட்டுக்குடும்பம் தான். அவங்க தன் நிலத்துக்காகவும், மக்களுக்காகவும் இயற்கைக்காகவும் பண்டிகை கொண்டாடினார்கள்.

ஆனா இந்த காலத்தில் எல்லாரும் தன் வாழ்க்கைக்காக வெவ்வேறு காரணங்களுக்காக தனித்தனியே சிறு குடும்பமாக மாறிவிட்டதை தப்பு சொல்ல முடியாது. அதனால் இப்ப உண்மையான முறையான காரணங்களுக்காக பண்டிகை கொண்டாடாமல் குடும்பம் ஒன்னு சேர கொண்டாட்டதுக்காக ஏங்கறோம். வருஷத்தில் பத்து அல்லது பதினஞ்சு நாள் தான் விழாக்கள். அதை கொண்டாடுவதில் என்ன தப்பு?

குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒன்றாக பார்த்து பேசி இன்பமாக இருப்பது எவ்வளவு பெரிய வரம். நீ நல்லா இருக்கியா நான் நல்லா இருக்கேன் அப்படின்னு விசாரிப்பதில் என்ன ஆகிடப் போகுது?” என்று கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து எழுந்தார்.

பிறகு, “வாசுகி மனிதர்கள் எப்போதும் கூட்டம் கூட்டமா இருக்கத்தான் விரும்புவோம். ஆட்டு மந்தை மாதிரி. கூட்டத்திலிருந்து பிரிஞ்சு தூர தேசம் போனவனை கேட்டுப்பார். நம்மாள், நம் மொழி பேசும் ஒருவனை கண்டுவிட மாட்டோமா என்று தேடுவான். அப்படி கண்டுவிட்டால், ஒன்றாக பேசி மகிழ, இந்த விழாக்களை தான் காரணம் காரியமாக மாற்றுவான். இல்லாட்டி தூர தேசத்தில் எதற்கு தமிழ் சங்கம், தெலுங்கு சங்கம் கன்னட சங்கம் என்று விதவிதமான சங்கங்கள் இருக்கின்றன!?” என்று அத்தனை பெரிய சாராம்சம் பொருந்திய விஷயங்களை அநாயாசமாக பேசி விட்டு சென்ற அன்னையை உற்று பார்த்தவள், சிகரத்தின் உயரத்தில் வைத்து நோக்கினாள்.

அன்றிலிருந்து அவளது எண்ணங்களில் மாற்றம் நிகழத் தொடங்கியது. அவளும் எல்லாவற்றையும் ஆவலுடன் எதிர்நோக்க ஆரம்பித்தாள்.

9 thoughts on “சொந்தமும் கொண்டாட்டமும் – மிருதுளா அஷ்வின்”

  1. Kalidevi

    Superb story. Nalla msg ipo yarukum ithellam therirathu illa pasanga padikuranga aana book la irukurathu mattum tha ellame therinjikanum . Sonthangalum irukanum than

  2. Avatar

    மிகவும் அருமை சகோதரி.

    ரொம்ப நல்லா எழுதி இருக்கே.

    ஒரு சிறுகதையில் எத்தனை விதமான தகவலை திரட்டி கொடுத்து இருக்கே.

    சூப்பர்மா

    வாழ்த்துகள்💐💐💐

  3. CRVS2797

    இதுக்குத் தான் சொல்லுவாங்க கற்றது கையளவு, கல்லாதது உலகளவுன்னு. தவிர, அந்த காலத்து பெரியவங்களோட
    அனுபவ (பட்டறிவு) அறிவு இருக்கே, அதுக்கு நிகர் எதுவுமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *