தாரமே தாரமே வா-16
அத்தியாயம்-16
‘ஸ்விட்ச்ஆப் ஸ்விட்ச்ஆப்’ என்று வீட்டின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து துவண்டாள் ஐஸ்வர்யா. அதன் பின் விடாமல் முயன்றதில் தாமதமாக, பரத் தான் போனை எடுத்தான்.
”பரத் எப்படி டா இருக்க?” என்று தம்பியின் நலன் விசாரிப்பை ஆரம்பித்தாள்.
”நீ இல்லையா ரொம்ப ஜாலியா இருக்கேன்” என்றான் அவன். அவளோ
”நான் இல்லைனு என் ரூமில் போய் ஏசி போட்டுட்டு இருக்கியாடா” என்று கேட்க அந்த பக்கம் வைதேகி “யாரு கூட டா பேசிட்டு இருக்க” என்று கேட்க
”அக்கா மா” என்றதும் வைதேகி ஓடி வந்து பேச ஆசைக்கொண்டார். அதே நேரம் தணிகாசலம் வெளியே வந்து நின்றார்
”எப்படி இருக்க மா” என்று வைதேகி கேட்க அடுத்த நொடி ”வைதேகி.. உனக்கு என்ன சொல்லி இருக்கேன் அவளோட நீ பேசக்கூடாது….சொல்லி தானே.. போனை தூக்கி தூர எறிந்தேன்.. நான் இல்லாமல் வீட்டு போனுக்கு போட்டு பேசறிங்களா? என்னடி சொன்னேன் உனக்கு.? ஹ்ம் எனக்கு உண்மையானவளா இருந்தா அவளோட நீ பேச கூடாது சொன்னேன்ல” என்று கத்த வைதேகி போனை அப்படியே வைக்க சென்றார்.
வைதேகியிடம் இருந்து பிடுங்கி ”புரிந்ததா வை போனை” என்று கத்த இந்த பக்கம் பரத் ”அப்பா… அம்மா போன் செய்யலை.. அக்கா கூட இன்னிக்கு தான் போன் செய்தா.” என தெரிவித்தான்.
இங்கு இவளோ ”எதுக்கு இப்படி செய்யறிங்க. உங்க இஷ்டத்துக்கு தானே, நீங்க சொன்னபடி கல்யாணம் செய்தேன் இப்போ எதுக்கு அம்மாவை என்னிடம் பேச விடமா பண்றிங்க?” என கேட்டாள்.
”எல்லாம் உன் புருஷனிடம் கேளு… வை” என்று அணைத்தார் தணிகாசலம்.
‘தாய் வைதேகி அடித்தாலும் அப்பா தனக்கு தான் ஆதரவாக இருந்தார் எதனால் இப்படி… பெண்கள் தவறே செய்யவில்லை என்றாலும் பழி என்று வந்துவிட்டால் இப்படி தான் நடந்து கொள்வார்களா?’ என யோசித்தவள் கடைசியாக தந்தை சொன்னரே ‘ஏதோ உன் புருஷனிடம் கேள’ என அப்படி என்றால் ரித்தீஷ் மாமாவுக்கு இதில் என்ன சம்பந்தம்? என்று வர அங்கே அவனோ சமைக்க தேவையான சிலது எடுத்து கொண்டு வந்து சேர்ந்தான். காய்கறிகள் எல்லாம் ஐஸூவுக்கு பிடித்த வகைகள். அவன் வந்ததும் அமைதியாக இருந்தாள்.
குளித்து முடித்து வந்தவன் டேபிளில் மாதுளை அப்படியே இருக்க கண்டவன்
”ஏன் மாதுளை சாப்பிடலை…” என்றான்.
அவளோ ‘இவன் என்ன சொல்லி இருப்பான் என்னிடம் என்ன மறைத்து இருக்கான்’ என அவனையே பார்த்தாள்.
”என்ன மாதுளை உறிக்க சோம்பேறி தனம் இருக்கும் அதனால சாப்பிடலையா” இதே போல அம்மாவிடம் ‘போமா எனக்கு உறிச்சு தா உறிக்காம எல்லாம நானே சாப்பிட மாட்டேன்’ என பேசியது தோன்றி மறைய
”அம்மா போன் ஸ்விட்ச்ஆப்… வீட்டுக்கு போன் பண்ணினேன்” என்றாள் ஐஸ்வர்யா.
”மாமா இருந்தாரா?” என்று மட்டும் கேட்டான். அவன் கேட்கும் தோரணை அவள் அறியவில்லை.. எப்பொழுதும் போல அவளோ
”அங்க என்ன பண்ணி வச்சியிருக்கிங்க? அப்பா கத்திட்டு இருக்கார்…. அம்மாவை பேசவே விடாம பண்றார்… எதுக்கு? எனக்கு என்னனு தெரிலை…. எல்லாம் உன் புருஷனை கேளு சொல்லிட்டு வைத்துட்டார்” என்பதை சொல்லி முடிக்க நிம்மதி அடைந்தவன்
”வா சாப்பிட… பொங்கல் சட்னி” என்று ஏற்பாடு செய்து அழைத்தான்.
”எதுக்கு அப்பா அப்படி பேசினார்… நீங்க என்ன பண்ணி வச்சியிருக்கிங்க” என்றாள்.
”ரியா சாப்பிடு அதுக்கு பிறகு சொல்றேன்” என்றான்
”இல்லை எனக்கு இப்போ சொல்லுங்க… நீங்க என்ன சொல்லி வச்சிங்க” என எதிர்த்து கேள்வி கேட்டாள்.
”சாப்பிடு நீ.. நீ முதலில் பசி தாங்க மாட்ட’ என அவளிடம் ப்ளேட் எடுத்து நீட்ட அதனை தடுக்க போனவளின் கை தானக தட்டி விட பொங்கல் எல்லாம் சிதறி போனது.
”ரியா… என்ன பண்ற?”’ என்று கத்தியவன் கைகள் அரும்பாடுபட்டு முடக்கி இருப்பதை அவள் அறியவில்லை.
”சாரி நீங்க முன்னாடி முன்னாடி வச்சது எனக்கு வேணாம் சொன்னதும் தட்டி கீழே விழுந்துடுச்சு..” என்று அவள் பதற சூடான பொங்கல் எல்லாம் அவளின் ரீடிங் டேபிளில் சிதறியிருந்தது.
அதனை அவள் கையில் எடுக்க சூடான பொங்கல் கையை பதம் பார்த்திட ”அம்மா” என்றதும் அவனுக்குள் இருக்கும் மென்மை எட்டிப்பார்த்து விட்டது.
”என்ன பண்ற பொங்கல் இப்ப தானே செய்தது.. சூடா இருக்கும் அதை இப்படி எடுத்தா சுட தானே செய்யும்” என்று வாஷ்டேப் திறந்து நீரில் கையை சூடு போக காட்டினான்.
”சூடு அப்பவே போயிடுச்சு…” என்று அவன் சட்டையின் முதல் பட்டனை பார்த்து சொல்ல அவனோ ”வா ஸ்பூன் வைத்து தர்றேன் சாப்பிடு” என்றான்.
உண்டு முடித்து அவளே மறந்த வேளையில் ”மாமா என்னை அங்க வீட்டோட வர சொன்னார் உனக்கு தெரியும் ஆனா அவர் அது மட்டும் சொல்லலை… உன் வீட்டில் என் மகள் வாழ வசதி இல்லை.. இதுல படிக்க வைக்க முடியாது… அவள் தேவையை உன்னால பூர்த்தி செய்ய முடியாது. நீ வெங்..” என்றவன் பேசாமல் நிறுத்தி மற்றதை சொல்லாமல்
”அதெல்லாம் சொன்னார் என்னால முடியும் சொன்னேன்… அவர் நம்பலை.. அதனால என் ஒய்ப் இதுக்கு மேல நான் பார்த்துபேன் நீங்க அதுல தலையிடாதிங்கனு சொல்லிட்டேன்.. அந்த கோவத்தில அக்காவை இனி உன் தம்பி மனைவியிடம் நீ பேச கூடாது அப்படி இப்படி சொல்லி இருப்பார் அவ்ளோ தான் போதுமா….” என்றான். சிலதை அவன் மறைத்துவிட்டான்.
”இதுக்கு எதுக்கு அவ்ளோ கோவம்… அப்பா அம்மாகிட்ட என்ன சொன்னாரு தெரியுமா? நீ எனக்கு உண்மையா இருந்தா இனி போன் செய்ய கூடாது சொன்னேன்ல சொல்றார்.” என்று கேட்க ரித்தீஷ் திருட்டு முழி முழித்தவன்.
”அது உன் அப்பாகிட்ட தான் கேட்கணும் என்னை ஆள விடு…. எனக்கு செம தூக்கம் வருது” என்று போர்வை முழுதாக போற்றி உறங்கினான்.
இவக்கிட்ட காலேஜ்ல என்ன ஆச்சு என்று கேட்கலாம் என்று வந்தா, இவ நம்மளை கேள்வி மேல கேள்வி கேட்கறா., இவளை என்ன செய்ய? இவளை காயப்படுத்தியது போல நடந்திருந்தா இப்படியா இருப்பா? இவ நார்மலா இருக்கா, சோ அவனுங்களுக்கு தான் அப்போ ஆபத்து’ என முடிவு கட்டி, ரியாவை காண அவளோ உறங்கி இருந்தாள்.
துப்பட்டா இன்றிய அவளின் சுடிதார் தேகத்தினை இழுத்து பிடித்து கச்சிதமாக இருக்க கண்டவன், அவனுள் என்னவோ போலாக திரும்பி படுக்க கொஞ்ச நேரத்திலே மீண்டும் அவளையே காண செய்யும் கண்கள் எண்ணி சுதாரித்தவன். பேசாம வெளியே போய் படுத்துக்கலாம் என்று மாடியில் வாசலுக்கு வந்து கட்டிலை விரித்தவன் அதன் பிறகே உறங்கினான்.
அதிகாலையில் எழுந்து கொண்ட ரித்தீஷ் ஐஸ்வர்யா முழித்து இருக்க கண்டவன்
”காலேஜ் கிளம்பலை” என்றான்.
”நீங்க போங்க நானே போறேன்” என்று சொல்ல ரித்தீஷ் நேற்றைய பாதிப்பில் தன்னோடு வர தயங்குகின்றாள் என்றெண்ணி கொண்டான்.
அவன் கிளம்பும் நேரம் வரை அதே மெத்தையில் போர்வை இழுத்து போர்த்தி இருக்க கண்டவன்
”ஜுரமா..” என்றே கேட்க இல்லை என்பது போல தலை அசைத்தாள். அவனோ விடாது அருகே வந்து தொட்டு பார்க்க அப்படியே பின் வாங்கிட, தொட்டு பார்த்து ஜுரம் இல்லை என்று கிளம்பினாள்.
”கீழே இலா.. .இல்லை மகா ஆண்ட்டி இருந்தா வர சொல்றீங்களா? இல்லை இலா அவங்களோட போன் நம்பர் கொடுங்க… போதும்” என்று சொல்ல அவள் போனில் நம்பர் பதிவு செய்ய நெருக்கமாய் வர, அவளோ போர்வையை தன்னை சுற்றி மறைக்க பேசாமல் கிளம்பினான்.
‘என்ன இவரு நம்பர் கொடுக்கமா போறார்… ஆண்ட்டி கூப்பிட போயிருப்பாரா? என எழுந்து கொள்வோம் என்றால், அவன் ஆட்டோ சாவி இருக்க, எழவில்லை.
கொஞ்ச நேரத்திலே ஒரு பேப்பர் சுற்றி ஒன்றை எடுத்து வந்து அவள் டேபிளில் வைத்து…
”பையினா இருந்தா வீட்லயிரு.. அப்படி இல்லை காலேஜ் போகணும் என்றாலும் சொல்லு கீழே வெயிட் பண்றேன்” என பதில் எதிர்பாராது போனான்.
எழுந்தவள் அந்த கவரை பிரித்து பார்த்தாள். அவளுக்கும் சொல்லாமலே புரிந்தது. இது அவள் கேட்க நினைத்தது தான். உடனே குளிக்க சென்றவள் கல்லூரிக்கு கிளம்பி தயாராக வந்திட, அவனோ முகம் பார்க்காமல், அவளை காலேஜ் கொண்டு விட்டான். ரியா தான் ஏறியதில் இருந்து அவனையே பார்த்தவள் இமைக்க மறந்தாள்.
இன்று பாடத்தில் கவனம் சிதறி, பார்வை எங்கோ சென்றிருக்க கண்ட பூர்வீ கேட்க பயந்து அதற்காக கேட்கவும் முடியாது தவித்தாள்.
நேற்று போல மறைத்து எல்லாம் தாலி இல்லாமல் சாதாரணமாக தான் அணிந்திருந்தாள். வகுப்பு ஆசிரியர், பேராசியர் எல்லாம் கேட்க வெங்கட், திலீப், பிரபு, லேகா எல்லாம் சிரித்தனர். அவர்களை எல்லாம் பார்த்தவள் அதே திமிருடன்
”எங்க ரித்தீஷ் மாமாவுக்கு கல்யாண வயசு வந்துடுச்சு அவருக்கு ஏஜ் 30 அதனால அம்மா அவருக்கு கட்டி வைக்க ஆசை பட்டாங்க… எனக்கும் 21 ஆரம்பம் அதனால சட்டுன்னு மேரேஜ் பணனிட்டாங்க” என்றதும் மற்ற வீண் பேச்சுக்கள் பறந்தன.
கல்லூரியில் இவள் பயந்து நடந்தாளோ இல்லை நெளிந்தாலோ இவளை கிண்டல் செய்ய காத்திருந்த கும்பல், இவளின் தெளிவான பேச்சில் எதையும் கேட்டு கொள்ளவில்லை.
பூர்வீ தான் மெல்ல மெல்ல தயக்கம் உடைத்து ”என் ஐஸ்வர்யா, நீ இப்போ எல்லாம் உங்க மாமாவை மாமானு சொல்ற, அதுக்கு நீ நேற்று சொன்னியே காரணம் எல்லாம் ஓகே தான். ஆனா அதை தாண்டி நீ அவரை ரொம்ப மதிப்பு கொடுக்கற மாதிரி தெரியுது” என்றாள்.
”ஹ்ம் அப்படியா? எனக்கு எதுவும் தெரிலையே.” என்றாள்.
”இல்லை அன்னிக்கு நான் ரித்திஷானு தான் கேட்டேன் உன் முகத்தில ‘யாரை ரித்தீஷ்னு பேரை சொல்ற?’ என்ற மாதிரி ஒரு பார்வை பார்த்த…. நீ மரியாதை மட்டும் தான் கொடுக்கறியா இல்லை உங்க மாமா உன்னை மனைவியா உரிமை எடுத்ததும் இந்த மரியாதை கொடுக்கறியா?”
”மனைவியா உரிமைனா?” என்று ஐஸூ கேட்க, பூர்வீ சுற்றி முற்றி பார்த்து ஐஸூ காதில் என்னவோ கிசுகிசுத்தாள்.
”சீ சீ… ரித்தீஷூக்கும் எனக்கும் அப்படி எதுவும் நடக்கலை… அவர் நகம் கூட என் மேல படலை” என்று பதறி வேகமாக பதிலளித்தாள்.
“ஆனா அவர் மேல எனக்கு லவ் வந்துடுச்சு… இல்லை இல்லை எங்கயோ முன்னவே இருந்த காதல் அன்பு எல்லாம் இப்போ தான் எனக்குள் உணர ஆரம்பிச்சிருக்கேன்… அதான் உண்மை” என்றாள்.
”அப்பறம் என்ன உங்க மாமாகிட்ட காதலை சொல்லிட்டியா?” என்றாள் பூர்வீ.
”இல்லை பூர்வீ… சொல்லணும் ஆனா ஒரு விஷயம் உறுத்துது. மாமா பின்னால, நாங்க இருக்கற வீட்டு ஓனர் பொண்ணு இலா லவ்னு சுத்துது… மாமாவுக்கும் ஒரு லவ் இருக்குமானு பயமா இருக்கு.. ஆனா முந்தா நாள் வரை மாமா மனசு கஷ்டபடக்கூடாது, அவர் இலக்கியா கூட சேர்ந்து வாழட்டும் தான் முடிவு செய்தேன்.
காலையில் இருந்து என்னவோ மனசுல என் மாமாவை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாது என்று தீவீரமா இருக்கேன். மாமா கட்டிக்கும் பெண் கொடுத்து வைச்சவ. அது நானாகவே இருந்துட்டு போறேன். என்னால எவளுக்கும் விட்டுக்கொடுத்து வேடிக்கை பார்க்க மனசில்லை. ஆனா அந்த பொண்ணு தற்கொலை எல்லாம் பண்ண முடிவு எடுத்து, ஹஸ்பிடல் வரை போயிட்டா.. அதனால முதலில் அவளோட பழகி ப்ரெண்ட்ஸ்ஸாகி அவளுக்கு புரியரை மாதிரி எடுத்து சொல்லணும்” என்று சொல்ல பூர்வீ அதற்கு “அப்போ அந்த பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை தான் சூர்” என்று சிரிக்க தூரத்தில் ரித்தீஷ் கண்டு
”உங்க ஆளு வந்துட்டார் பா” என்றாள்.
ஐஸ்வர்யா கண்கள் அசையாமல் அவனை பார்க்க “ஓகே ஓகே இனி நான் கிளம்பறேன் உனக்கு நான் எல்லாம் தெரிய மாட்டேன்” என்று சொல்லி சிரித்தபடி கிளம்பினாள்.
ஐஸூ ரித்தீஷ் அருகே வந்து ‘பே’ என்று கத்த ரித்தீஷ் சுற்றி முற்றி பார்த்துவிட்டு ”விளையாடாதே ரியா ஏறு” என கிளம்பினான்.
இறங்கும் வரை அவனயே பார்த்தவள் பின்னர் பை சொல்ல அவனோ ”ரியா மாதுளை எல்லாம் உறிச்சு பாக்ஸ்ல வச்சிருக்கேன் எடுத்து சாப்பிடு” என்றதும் சிரிப்புடன் சரி என்றாள்
