அத்தியாயம்-19
இன்று தணிகாசலம் அழைத்திருக்க சனி ஞாயிறு வருவதால் இருவரும் கிளம்பினார்கள்.
“மாமா நீ இன் பண்ணி ஷர்ட் போடேன்” என்று நேயர் விருப்பமாக ஐஸூ கேட்க அப்படியே அணிந்து “ஓகே வா ரியா” என்று வந்து நின்றான்.
”மாமா எதுக்கு இப்படி படிய என்னை வைத்து வாரியிருக்க….” என்று சிகையை களைத்துவிட்டவள் அவனின் தலையில் நீரை தெளித்து ஹேர் டிரையர் கொண்டு காய வைத்தாள்.
அவனின் அலைப்பாயும் கேசம் கண்டு “இப்போ தான் நீ சூப்பர்…” என்று நெருங்கி வந்து சொன்னாள்.
நேற்றைய அதே வாசம் அவனுள் இம்சை செய்ய… ஷர்ட் பாக்கெட்டில் கையை விட்டவன் போனை எடுத்து பேசியபடி வெளியே நழுவினான்.
அவனுள் ரியா என்னவோ செய்து கொண்டிருக்க, அதற்கு அர்த்தம் தேடி கொண்டிருக்கின்றான் மனம் என்னும் அகராதியில்…
இலாவும் பேசாமல் செல்ல ரித்தீஷ் இருக்கும் மனநிலையில் அவன் அதனை உணரவில்லை… ஆனால் ஐஸூ இருவரையும் ஏதோ கொஞ்சமா பிரிச்சது போல மகிழ்வோடு நடந்தாள்.
ஒரு இடத்தில் மல்லிகை வாங்கி வைத்தவள் ரித்தீஷ் கண்ணாடியில் காண அவனோ ‘மாமா அக்கா ஏதாவது ஐஸூகிட்ட பேசினா ஐஸூ தங்குவாளா? என்ன இருந்தாலும் மாமா ஐஸூவை அப்படி தப்பாவே பார்க்கறது சரியில்லை… இன்னிக்கு தெளிவா சொல்லிடனும்’ என்று கண்ணாடியில் மீண்டும் பார்க்க அங்கே ஐஸ்வர்யா மல்லிகையை இருபக்கமும் முன்னால் போட்டு வளையலை ஆடி அசைத்து மகிழ, ஐஸூவின் குழந்தை முகம் தாண்டி அவளின் குமரி முகம் அவனுள் பதிந்த அன்று தோன்றிய நிலையில் இருக்க எங்கோ வண்டியை சிக்னல் பார்க்காமல் வந்து இடித்து நிறுத்தினான்.
”யோவ்… என்ன தண்ணியை போட்டுட்டு ஒட்டறியா?” என்று இடிபட்ட வண்டியில் இருக்கும் ஆட்டோகாரன் வந்து கேட்டான்.
ஐசு அவனை பார்த்து ”ஒய்… என்ன சவுண்டு விடறிங்க ஆட்டோக்கார்… அவர் என்னை சைட் அடிச்சுக்கிட்டே வந்து மோதியிருப்பார்…. என்ன மாம்ஸ் அப்படி தானே” என ஐஸூ கண்ணடித்து கேட்க ரித்தீஷ் அதிர்ந்தே போனான்.
ஒரு கணம் எதிரே இருக்கும் ஆட்டோகாரன் தவறாக நினைத்திட போகின்றான் என ”அண்ணா என் பொண்டாட்டினா…” என்றதும் தான் ஆட்டோக்காரன் பார்வையே மாறியது.
”நல்லா ஜோரா தான் அமைஞ்சியிருக்கு… தங்கச்சி சூப்பர்” என ஆட்டோ எடுத்து அவன் கிளம்ப ஐசுவோ ”தாங்க்ஸ் அண்ணோ” என்று சொல்லி சிரிக்க ரித்தீஷ் அதற்கு மேல அவள் பக்கம் திரும்பாமல் தான் வண்டியை ஓட்டினான்.
வீட்டுக்கு வந்ததும் வைதேகி முதலில் இருவரையும் அழைத்து வரவேற்றவர் தம்பியின் முகத்தை தான் உற்று உற்று நோக்கினார். தம்பியை எப்படி கஷ்டப்படுத்தி வைத்திருக்காளோ? என தவித்திருக்க மகள் அவளின் அறையிற்கு செல்வதாக இல்லை.. அப்படியிருக்க ஹாலில் இருப்பவனிடம் என்ன கேட்க முடியும்.
மகளின் முகமோ பூவாக புதுப்பொலிவிருக்க கண்டார் வைதேகி.
மகள் தாய்மையில் அப்படி இருக்கின்றாளா?! என வைதேகி அதிர்ந்து போனார்.
”டேய் பரத் அப்பா எங்கடா” என்று மகனிடம் பாய்ந்தார்.
”சாந்திரம் வர்றேன் சொல்லி இருக்கார்…” என பேஸ்கட்பால் விளையாட சென்றான். கொஞ்ச நேரம் சேனலை பார்த்து கொண்டிருக்க போடிக்க அறைக்குள் சென்றாள் ஐஸ்வர்யா.
கிடைத்த தனிமையில் தம்பியிடம் ”ஈஸ்வர் நீ எப்படி டா இருக்க? அவ உன்கிட்ட வம்பு செய்யாம இருக்காளா? உன்னை மரியாதையா நடத்தறாளா… ஏதாவது பேசு டா.. அக்கா மேல கோவமா? மாமா உன்னை அன்னிக்கு பேசியது…” என பதில் சொல்ல விடாமல் கேடடார்.
”ஐயோ அக்கா நிறுத்து நிறுத்து.. இந்த கேள்வி எல்லாம் நீ உன் பொண்ணுகிட்ட கேட்கணும். என்கிட்ட கேட்கற அவ தான் பாவம்.. இங்க இருக்கற ஏசி ரூம், வசதி எல்லாம் விட்டுட்டு இருக்கா?” என்றான்.
”டேய் அவளை கட்டி கொடுத்தது உனக்கு டா… நீ எப்படி பார்த்துப்பனு எனக்கு தெரியாதா.? ஆமா உன்னிடம் ஏசி கேட்டாளா அவ.?” என கேட்கும் தோரணையில் ஐஸ்வர்யா திட்டிவிடுவரோ என்று அவசரமாய்,
”ஐயோ அக்கா அவ எதுவுமே கேட்கலை… எனக்கே ஷாக் தான் அது நம்ம ரியவானு” என தன்னை மறந்து சிரித்தான். ரித்தீஷ் இவ்வீட்டில் சிரிப்பது அபூர்வம். இன்று சிரிக்கவும் அக்கா மனம் குளிர்ந்தது.
”அது யாருடா ரியா?” என வைதேகி கேட்க அசடு வழிந்தே ”அது அது நம்ம ஐஸூ தான் அக்கா… ஐஸ்வர்யா… ல அதனால ரியானு கூப்பிடுவேன்” என்றான். இதற்கே வைதேகிக்கு ஆனந்த கண்ணீர் வடிந்தது.
”இரு உனக்கு மோர் கொண்டு வர்றேன்” என்று செல்ல, போனில் இலாவிடமும் மஸ்தானிடமும் வாட்ஸ்ஆப் மெஸேஜில் பேசினான்.
இவனிடம் மோரை கொடுத்தவர், மகளிடம் கொடுக்க வர, ஐஸ்வர்யா படுத்தபடி காலை நீட்டி போனில் விளையாடினாள். அவளின் வயிற்றில் பார்வை பதித்த வைதேகி கதவை வெறுமென சாற்றி விட்டு,
”ஏன் டி தலைக்கு உத்தினியா?” என்று கேட்க மோரை பருகியவள் ஒரு மிடறை பருகி
”ஹ்ம்ம..” ஊதிக்கிட்டேன்… வரும் பொழுது கூட பாரு கொஞ்சம் ஈரமா இருக்கு” என்று வருந்தி அடுத்த மிடறை குடிக்க ‘இவளிடம் போய் கேட்டோம் பாரு’ என்று சொல்லி அடுத்த விதத்தில் கேள்வி ஆரம்பமானது.
”உங்க அப்பா வந்தப்பா நீ வாந்தி, தலைசுற்றல்னு இருந்தியாம்?”
”ஹ்ம்….” என்று குடிக்க ஆரம்பித்தாள்.
”அதுக்கு யாரு டி காரணம்” என்று கோவமும் நெஞ்சில் ஒரு வித பயமும் சேர கேட்டார் வைதேகி.
”வேற யாரு… நான் தான்… உன் தம்பி ரித்தீஷூக்கு சமைச்சு கொடுத்தேன் அதனால” என்றே சொல்ல முதலில் உன் தம்பி என்றதில் கோவம் வர அடுத்து ரித்தீஷ் என்று அவள் விளிக்க தம்பியை ஈஸ்வர் என்று தானே சொல்வேன் இவ என்ன ரித்தீஷ் சுருக்கி கூப்பிடற? அடுத்து என்ன சமைச்சாளா? இவளுக்கு சுட தண்ணீர் வைக்கவே தெரியாது’ என்ற அதிர்ச்சி மேல் அதிரிச்சியில்
”என்ன நீ சமைச்சியா?”
”ஹ்ம் மெனு சொல்றேன் கேட்டுக்கோ ரவை கஞ்சி…. பாகு காபி… கருகிய தோசை…” என்று பட்டியல் சொல்லி அப்படியே எழுந்து வந்து நீரை எடுக்க ஹாலுக்கு வந்து நின்றார்கள்.
”டேய் ஈஸ்வர் என்னடா சமைச்சா இவ” என்று கேட்டார்.
”அது காபி உப்புமா தோசை தான் அக்கா, காபில சக்கரை அதிகமாக போட்டுட்டா, ரவைக்கு தண்ணி அதிகமா ஊற்றிட்டா, அதனால அது கொஞ்சமா கொழகொழனு ஆகிடுச்சு…. தோசை சுட்டா நல்லா தான் வந்துச்சு ஆனா தீ அதிகமாயி அடியில் கொஞ்சம் கருப்பா இருந்தது. அவளோ தான்… சாரி அக்கா அவ தான் சமைக்கறேன்னு ஒரே அடம்… சின்ன வயசில துணிக்கு நீலம் போடறேனு ஒரு நீல முழுசும் காலி பண்ணினாளே அப்போ செய்த அதே அடம்.” என்றான் விரிவாக.
”அவளாவா சமைக்கிறேனு போனா…? என்று ஆச்சரியம் மாறாமல் கேட்டார்.
”பின்ன… அப்படி சமைச்சு சாப்பிட்டு தான் நேற்று புட் பாய்ஸன் ஆகிடுச்சு… ஒரே வாந்தி தலைசுற்றல் அதனால காலேஜ் போய் கூட்டிட்டு வந்தேன்” என்று சொல்ல வைதேகி மனம் ஏனோ மகளிடம் கேட்காமலே நிம்மதி அடைந்தது.
இந்த கூறுக்கெட்டவர் இருக்காரே…. அதுகுள்ள என்னவென்னவோ சொல்லி பயமுறுத்திட்டார். நல்ல வேளை அவருக்கு இந்த கல்யாண தேதி தலைக்கு ஊத்தின தேதி என்று ஒரு மன்னங்கட்டியும் தெரியாது.’ என்று மகளின் தலையை ஆதரவாக தடவி உச்சியில் இதழ் பதித்தார்.
”ம்மா முதலில் சமைக்க கத்து கொடு… பாவம் ரித்தீஷ்… சரியா…” அன்னையின் முறைப்பில் ரித்தீஷ் மாமாவே சமைக்குது” என்று முடிக்க
”கத்து கொடுக்கறேன்…. இங்க வா ஈரமா தானே இருக்கு சொன்ன, தலை துவட்டி விடறேன்” என்று தனியாக அவளின் அறைக்கு அழைத்து வந்து
”ஏன் ஐஸூ… நீ இந்த மாசம் தலைக்கு ஊத்திட்டியா?” என்று கேட்க
”ஓஹ் நீ அதை கேட்டியா ம்மா.. ஹ்ம்ம போன வாரம் தான்.. ம்மா டிரஸ் எல்லாம் எடுத்து வச்சியே அதை ஏன் ம்மா எடுத்து வைக்கலை..” என்றாள்.
”ஏன் கடையில் வாங்கிக்க வேண்டியது தானே?”
”போம்மா உனக்கு தெரியாதா எனக்கு தான் நாள் கணக்கு எல்லாம் நினைவு வச்சிக்க மாட்டேனு… தெரியும்ல… ரித்தீஷ் தான் சொல்லாமலே வாங்கி வந்து கொடுத்துச்சு.. உன் தம்பி ஸோ ஸ்வீட்” என வைதேகி கன்னத்தில் இதழ் ஒற்றி எடுத்தாள்.
”இந்த முத்தம் வாங்கி வந்து கொடுத்தவனுக்கும் கொடுத்தியா?” என்று வைதேகி பூடகமாக கேட்டார்.
”பச்… இல்லையே…” என்று வருந்தி சொல்லும் மகளை கண் இமைக்காமல் பார்த்தாள் வைதேகி.
இப்பொழுது என்ன பேசினோம் என்று யோசித்து வெட்கப்பட்டு ஐஸ்வர்யா அம்மாவின் சேலை இழுத்து முகத்தினை மறைக்க, வைதேகியோ மகள் இடக்காக பேசுவாள் அதில் ஏதேனும் கண்டு பிடிக்க முயல அவளோ மனதில் இருப்பதை அப்பட்டமாக புட்டு வைக்க கண்டு அதிர்ந்தே போனார்.
”ஏன் டி உலகத்துல ஏதாவது அதிசயம் நடக்குதா என்ன? என் தம்பியை பார்த்து பேசவே பிடிக்காத உனக்கு… ரித்தீஷ்னு ஸ்டைல கூப்பிடற… நான் சூடு போட்டு மாமானு கூப்பிட சொல்லியும் கேட்காதவ…. அப்பறம்… அவனுக்கு சமைக்க எல்லாம் கத்துக்கணும் சொல்ற… இங்க இருக்கறவரை தின்ன தட்டை எடுத்து வச்சி இருப்பியா… மகாராணி நல்லா சோபல உட்கார்ந்துக்கிட்டு கொறிக்க திங்கறது கூட எடுத்து வந்து கொடுக்கணும்… என்னாச்சு எல்லாம் மாறியிருக்கு” என்று கேட்டார் வைதேகி.
”நான் மட்டுமா மாறியிருக்கேன் அங்க பாரு உன் தம்பியை?” என்று வைதேகி கழுத்தை திருப்ப, அங்கே இன் செய்த ஷர்ட், அலைப்பாயும் கேசம் என்றிருக்கும் ரித்தீஷ் போனில் யாரிடமோ கவனமாக பேசிக்கொண்டிருந்தான்.
”பார்த்துட்டியா போதும்… இனி இப்படி ஆஹ்னு பார்க்காத அது என்னோட ரித்தீஷ்… இந்த ரியாவுக்கு மட்டும் சொந்தமானவன்” என்று உரிமையாய் அழுத்தமாக சொல்ல வைதேகி மகளின் முகத்தை திருஷ்டி சுழித்தார்.
”என் கண்ணு இது கேட்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?” அதே நேரம் தணிகாசலம் வந்து நின்றார். மகளுக்கு மனைவி சுற்றி வழித்து சொடக்கு செய்ய கண்டவர் பழங்களை நறுக்கி அவளுக்கு கொடுக்குமாறு உத்தரவு போட்டுவிட்டு சென்றார்.
இரவு உணவு உண்ண அமர தணிகாசலம் ரித்தீஷ் ஐஸூ பரத் என்று அமர வைதேகி பரிமாற தணிகாசலம் எடுத்து வைக்கும் பொழுது
”அவளுக்கு வை… பிள்ளைத்தாச்சி நல்லா சாப்பிடட்டும்” என்றதும் ரித்தீஷ் சாதம் தொண்டை குழியில் செல்லாமல் புரை ஏறிக்கொண்டது.
ஒரு டம்ளர் நீரை பருகியும் புரையேற ஐஸூ அவன் தலையில் தட்டி ”ஒழுங்கா சாப்பிட தெரியாது” என்றாள்.
மாமா அக்கா முன் இவள் தலையில் தட்ட செய்தது வேறு சேர்த்து அவனோ ”ரியா” என கண்களால் எச்சரித்தான்.
”ஆமா சாப்பிடும் பொழுது இப்படி ஏதாவது பேசினா மனுசனுக்கு என்ன தோணுமாம்…” என ஐஸூ தந்தையை முறைக்க, அவரோ ‘என்ன பேசினேன்… நல்லதை தானே சொன்னேன்’ என்று வைதேகியை பக்கம் பார்வை பதித்தார்.
”அவ ஒண்ணும் முழுகாம எல்லாம் இல்லை… சாப்பிட்டது ஒத்துக்காம வாந்தி எடுத்திருக்கா நீங்க தப்பா புரிஞ்சுட்டிங்க” என்று வைதேகி சொல்ல ரித்தீஷ் ஐஸூவை காண முடியாமல் தவித்தான்.
தணிகாசலமோ மகள் குழந்தை குட்டி என்று நேற்றிலிருந்து கனவுக்கோட்டை கட்டியிருக்க இன்றோ அதிர்ச்சியில் அது தரைமட்டமாக போனதை எண்ணி இரு வாயை அள்ளி உண்டவர் எழுந்துக்கொண்டார்.
அடுத்து எல்லோரும் அதே போல பேசாமல் சாப்பிட்டு கை அலம்பி கொண்டார்கள். பரத் விளையாட்ட சென்று வந்தமையால் உறங்க செல்ல ஹாலில் வெற்றிடமாக போனதும் ரித்தீஷ் தயங்கி தயங்கியே ரியா அறைக்கு வந்து கதவை தாழிட்டான்.
அடுத்த நிமிடம் ”வாங்க சார் வாங்க…” என்ற ரியாவின் குரலில் கொஞ்சம் அதிர்ந்துப்போனான்.
-தொடரும்.
