Skip to content
Home » தீரனின் தென்றல்-43

தீரனின் தென்றல்-43

தீரனின் தென்றல் – 43

Thank you for reading this post, don't forget to subscribe!

ஆதீரன் இப்போது இரவிலும் கூட தென்றல் வீட்டில் தான் தங்குகிறான்… எல்லாம் மகளின் கைங்கர்யம் தான்… எங்கே மதன் வீட்டுக்கு சென்றால் மீண்டும் தன்னை விட்டு சென்று விடுவானோ என்று பயத்தில் “இங்கேயே தங்குப்பா…” என்று உத்தரவு போட பொன்னி ஒரு அறையில் உறங்கிக் கொள்ள தந்தையும் மகளும் ஒரு அறையில் உறங்க தனித்து விடப்பட்ட தென்றல் ஹால் ஷோபாவில் காலை குறுக்கிக் கொண்டு படுத்திருக்க அதை கண்டு தீரனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

பொன்னிக்கும் மகள் கஷ்டப்படுவதாக தோன்ற மறுநாள் காலை கிச்சனில் சமைத்தபடி “பேசாட்டி என்ன கதவை திறந்து தானே வைச்சுட்டு படுத்தேன் உள்ளே வந்து தூங்க வேண்டியது தானே…” என்று தென்றல் காதில் விழும்படி பொன்னி கூற அவளோ யாரிடமோ பேசுவது போல கண்டு கொள்ளாமல் அலுவலகம் செல்ல கிளம்பி தயாராகி விட்டாள்.

தீரன் அன்று கடைசியாக அலுவலகம் சென்று வந்தது… அதன் பிறகு பொறுப்பு மொத்தமும் மதன் தலையில் கட்டிவிட்டு மகளோடு மகிழ்வாக பொழுதை கழித்து கொண்டு இருந்தான் ஆதீரன்.

அப்படி ஒரு முறை பார்த்து விட்டு தான் கீழ் ஃப்ளோர் வசந்தி ஆதீரனை அப்பா என்று அபூர்வா அழைப்பது குறித்து கேட்க பொன்னியும் மகளின் பெயர் கெடாதவாறு ‘ஏற்கனவே இருவருக்கும் திருமணம் முடிந்து மனச்சடவு ஏற்றப்பட்டு குடும்பம் பிரிந்தது’ என்று கூறிட

“அதுக்காக என்ன தான் கோபம் இருந்தாலும் சுமங்கலி பொண்ணு தாலியை கழட்டி வைக்கலாமா?” என்று தென்றல் கழுத்தில் தாலி இல்லாததற்கு இவர் ஒரு காரணம் கண்டு புரிந்து கொண்டு பேச அதன் பின்பே

“தாலி இல்லாமல் தென்றலுக்கு அவப்பெயர் தான் கிடைக்கும்… ஆதீரனுக்கும் தென்றலுக்கும் முறையா கல்யாணம் நடந்தா தான் அபூர்வா வாழ்க்கை கூட எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமா இருக்கும்… முடிஞ்ச அளவுக்கு உடனே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்.” என்று முடிவு செய்து கொண்ட பொன்னி அது சம்பந்தமாக பேச குமார் ரூபியை வீட்டிற்கு வரச் சொன்னார்.

அலுவலகம் சென்று விட்டு வந்து அசதியாக அமர்ந்த தென்றலுக்கு தான் எதை கொடுத்தாலும் விசிறி அடிப்பாள் என்று யூகித்த ஆதீரன் அவளுக்காக ஆசையாக வாங்கிய அவளுக்கு பிடித்த தின்பண்டங்களை ஒரு தட்டில் போட்டு அபூர்வாவிடம் கொடுத்து விட அதை கொட்டி‌ விடாமல் இரு குட்டி கைகளால் கெட்டியாக பிடித்து கொண்டு தத்தி தத்தி நடந்து தாயிடம் வந்த அபூர்வாவை அழகான புன்னகையோடு எதிர் கொண்டாள் தென்றல்.

“புவிக்குட்டி… என்னடா உன் வெய்ட்க்கு ஒரு ஸ்நாக்ஸ் ப்ளேட் தூக்கிட்டு வர?” தென்றல் கேலியாக கேட்டது புரிந்ததோ இல்லையோ…

“தெட்டு என்னை உக்காரு வை…” உத்தரவிட திண்பண்டம் கொட்டி விடாமல் மகளை தூக்கி அருகில் அமர்த்தி கொண்டாள் தென்றல்.

“தெட்டு… ஸ்கூல் போனேனா… ரைம்ஸ் படிச்சேனா… எனக்கு பசிக்குல..‌ அதான் நானு சாப்பித போதேன்..” என்று தட்டில் இருந்ததை எடுத்து தன் வாயில் போட

“அடிப்பாவி… நீங்க கொடுத்தா வாங்க மாட்டா னு இவகிட்ட கொடுத்தீங்க… இவளை பாருங்க தன்னோட வயித்தை நிரப்பிக்க போறா….” பொன்னி சொல்ல

“அத்தை… பூர்வி நேரா போய் தென்றலுக்கு ஊட்டினா தான் அவளுக்கு சந்தேகம் வரும்… அதனால நான் தான் இப்படி பண்ண சொன்னேன்… அடுத்த வாய் அவ அம்மாக்கு ஊட்டுவா பாருங்க…” என்று ஆதீரன் கூற அதே போல

“அம்மா… நீயு வேலை போனலே… உனக்கு பசிக்குதா?” என்று கிள்ளை மொழியில் தாயை விசாரிக்க

“ஆமாடா தங்கம்.. கொஞ்சம் லேசா பசிக்குது… நான் போய் ப்ரஷ் ஆகிட்டு வரேன் நீ சாப்பிடு” என்று எழப்போன தென்றல் கையை பிடித்து

“தெட்டுக்கு நானு ஊட்டுறேன்” என்று கூறி ஆதீரன் இவளுக்காக வாங்கி வந்திருந்த தேங்காய்பால் முறுக்கு… ரங்கநாதன் அடிக்கடி வெளியூர் சென்று வரும் போது எல்லாம் தென்றலுக்காக வாங்கி வரும் நொறுக்கி தீனி… மகள் ஊட்ட தந்தையின் நினைவு மன ஆழியில் நினைவலையாக மேலேழும்ப மகள் முன்பு கண்ணீர் வந்துவிட கூடாது என்று கட்டுப் படுத்திக் கொண்டாள் தென்றல்.

“எனக்கு போதும் புவிக்குட்டி… நீ சாப்பிடு…” தென்றல் சொல்லிட

“நானூ வந்தோனயே (வந்த உடனேயே) சாப்புத்தேன் தெட்டு… இது உனக்கு தான்..‌” என்று அபூர்வா சொன்ன பின்பே மூளையில் பொறிதட்ட

“புவிக்குட்டி.. நான் இதை வாங்கி வைக்கவே இல்லையே டா அப்பறம் யாரு அம்மம்மா வாங்கிட்டு வந்தாங்களா?” என்று கேட்க

“இல்ல என் அப்பா வாங்கி வந்தாரு… ச்சூப்பரா ஈக்கு தெட்டு… இந்த இன்னும் சாப்புது..” என்று மீண்டும் அபூர்வா தென்றலுக்கு ஊட்டப்போக

“வேண்டாம் குட்டிமா.. நான் கை கால் கழுவிட்டு அப்பறம் சாப்பிடுறேன் நீ சாப்பிடு..” என்று மகள் முன்பு வெறுப்பை காட்ட இயலாது எழுந்து உள்ளே சென்ற தென்றல் கிச்சனில் ஒளிந்து நின்று தான் உண்பதை பார்த்துக் கொண்டு இருந்த ஆதீரனை தீப்பார்வை பார்த்து விட்டு சென்றாள்.

தென்றல் தன்னை சுத்தம் செய்து கொண்டு வெளியே வர ரூபிணி மற்றும் சக்தி குரல் கேட்டது. எப்போதும் போல வந்திருப்பதாக தென்றல் நினைத்து ஹாலில் அமர சில நொடிகளில் சித்ரா மதனும் அடுத்த சில நிமிடங்களில் குமாரும் வர

‘ஏதோ சரியில்லையே… என்னவா இருக்கும்?’ என்று கவனிக்க துவங்கினாள் தென்றல். சக்தியையும் அபூர்வாவையும் “உள்ள ரூம்ல போய் விளையாடுங்க..” என்று அனுப்பி வைத்த பொன்னி

“குமாரு… இம்புட்டு நாளா நீ தான் எனக்கு மகனா தென்றலையும் பாப்பாவையும் பார்த்துக்கிட்ட.. அதனால உன்கிட்ட இதை பத்தி பேசி முடிவெடுக்க தான் வரச்சொன்னேன்…” என்று பீடிகையோடு பேச்சை தொடங்கினார் பொன்னி.

“சொல்லுங்க அம்மா… என்ன விஷயம்?” குமார் கேட்க

“அதான் ப்பா… இதுவரைக்கும் நாம எவ்வளவோ சொன்னோம் இவ கேட்கலை… இப்போ மகளுக்காக மனசு இறுங்கி மாப்பிள்ளைய அபூர்வா கூட பழக விட்டிருக்கா… ஆனா, அதுவே இவளோட பெயர் கெட்டு போக ஒரு காரணமா இருக்குதே…” பொன்னி சொல்லிக் கொண்டு இருக்கும்போதே

“அத்த… அது எப்படி இவ பெயர் கெடும்.. புரியிற மாதிரி சொல்லு அத்தை…” ரூபி இடைமறிக்க

“அடியே… தென்றல் கழுத்துல தாலி இல்ல… அபூர்வா மாப்ளைய அப்பா னு கூப்பிடுது… அப்போ இவங்களுக்குள்ள என்ன உறவு னு பேச்சு வரும் ல…” என்று பொன்னி இழுக்க

“அம்மா.. போதும் நிறுத்து… இப்போ உன்கிட்ட யாரு அப்படி சொன்னது? எதுக்கு நீ நான் வேண்டாம் னு சொல்றதை பத்தி மட்டும் பேசிட்டு இருக்க?” தென்றல் வெடிக்க

“நீ சும்மா இரு டி முதல்ல… உனக்கு என்ன தெரியும்? காலையில வெளியே வேலைக்காக போனா சாயங்காலம் வந்து கூட்டுக்குள்ள அடையுற மாதிரி நீ ரூம்க்குள்ள உட்கார்ந்துப்ப… உனக்கு எப்படி வெளியே யார் யாரு என்ன பேசுறாங்க னு தெரியும்? ஏற்கனவே உங்களுக்குள்ள ஏதோ தப்பான உறவு இருக்கிற மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க அக்கம் பக்கத்துல…

அதை வெளிப்படையா கேட்க முடியாம கீழ் வீட்டு வசந்தி உங்களுக்குள்ள என்ன உறவு னு கேட்குறா.. நான் தான் ஒரு மாதிரி உங்களுக்கு கல்யாணம் ஆகி பிரிஞ்சுட்டீங்க னு சொல்லவும் அவளும் அதை நம்பிட்டா… அவ நம்புன மாதிரி எல்லாரும் நம்புவாங்க னு என்ன நிச்சயம் தென்றல்..” பொன்னி கூற

“அதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கனுமா?” பொங்கினாள் காரணமின்றி…

“பின்ன… காலம் முழுக்க இப்படியே இருந்திட போறியா? தென்றல் சரியான அங்கீகாரம் இல்லாம அபூர்வா கூட அசிங்கப்படனுமா இந்த சமூகத்துல?” சித்ரா பொறுக்க முடியாமல் கேட்டு விட

“என்ன பேசுறீங்க சித்ரா? என் பொண்ணு ஏன் அசிங்கப்படனும்? அவளுக்கு அப்பா நான் இருக்கேன்…” ஆதீரன் சொல்ல

“சார்… நாங்க இல்ல னு சொல்லலை… ஆனா குழந்தையோட அப்பாங்கிறதுக்கு முன்ன அந்த குழந்தையோட அம்மாக்கு அவர் கணவர் ஆகிருக்கனும்…. அப்போ தானே இந்த சமூகம் அந்த குழந்தையோட பிறப்பை கூட மரியாதையா பார்க்கும்… இல்லைன்னா அதோட அர்த்தம் வேற சார்…” சித்ரா சொல்ல தென்றல் அதிர்ந்து பார்க்க ஆதீரன் உக்கிரமாக பார்த்தான் அனைவரையும்.

“டேய் மச்சான்… இப்போ எதுக்கு முறைக்கிற… என் தங்கச்சியும் மருமகளும் உன் பொறுப்பு தானே… அப்போ என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன பிரச்சினை உனக்கு?” குமார் கேட்க

“இந்த விஷயத்துல பிரச்சினை எனக்கு இல்ல… உன் தங்கச்சிக்கு தான்.. அவகிட்ட கேளு முதல்ல” என்றான் ஆதீரன்.

“அவகிட்ட கேட்குறதுக்கு முதல்ல நீ சொல்லு ண்ணா தென்றலை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா? தென்றல் மேல நீ வச்சிருந்த காதல் இன்னும் அப்படியே இருக்கா?” ரூபி கேட்க

“அந்த காதல் சுத்தமா இல்லடா…” என்று ஆதீரன் சொல்ல தென்றல் முதல் கொண்டு அதிர்ச்சியாக ஆதீரனை பார்க்க மெல்லிய புன்னகை உதட்டில் தவழ விட்டு

“அதைவிட அதிகமா.. நூறு மடங்கு ஆயிரம் மடங்கு அதிகமாக உண்மையா காதலிக்கிறேன் என் தென்றலை…” மொத்த காதலை குரலில் கூட்டி காற்றில் வருடும் மயில் தோகை போல மென்மையாக தென்றல் கண்களை பார்த்து ஆதீரன் சொல்ல

அவன் விழி வீச்சு தாங்க இயலாது தலை குனிந்த தென்றலுக்கு கண்கள் கலங்க “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை…” என்று உறுதியான குரலில் கூறிவிட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள் தென்றல்.

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

1 thought on “தீரனின் தென்றல்-43”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *