Skip to content
Home » தீரனின் தென்றல்-53

தீரனின் தென்றல்-53

தீரனின் தென்றல் – 53

Thank you for reading this post, don't forget to subscribe!

“வாங்க ஆதீ… வாம்மா… ஆதீ நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்… நல்லா இருக்கியா மா தென்றல்… அடடே தங்கக் குட்டி தாத்தா கிட்ட வாங்க… உங்க பெயர் என்ன?” என்று அன்புடன் விசாரித்து வரவேற்றார் தர்மலிங்கம்.

“ஆதீ.. உன்னை இப்படி பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? அம்மாடி தென்றல் எல்லாமே நீ இப்போ ஆதீ கூட இருக்கிறதால தான்… கடைசி வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்” மனதார ஆசிர்வதித்தார்.

அவர் மட்டும் இன்றி அங்கு இருந்ததில் முக்கால்வாசி பேருக்கு ஆதீரனையும் அவன் ஆளுமையையும் கண்டவர்கள் தான்… ஆனால் இந்த மிடுக்கான தன்னவள் அருகில் இருக்க கர்வமாக காதலான பார்வையோடு நிற்கும் இந்த ஆதீரனை அனைவருமே அதிசயித்து பார்க்க பகட்டாய் உடை அணிந்து தன் நண்பர்கள் புடை சூழ நின்றிருந்த ஷ்ரதா தென்றலை வெறுப்பாக பார்த்தாள்.

அங்கு இருந்ததில் ஆதீரனுக்கு பழக்கமான அனைவரும் அவனின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்க தென்றல் உதட்டில் ஒட்ட வைத்த புன்னகையோடு நிற்க உளமார்ந்த மகிழ்வோடு அனைவர் வாழ்த்தையும் ஏற்றான் ஆதீரன்.

சில நிமிடங்கள் கழிய யாரோ தன்னை உறுத்து விழிப்பது போல தோன்ற தென்றல் சாதாரணமாக பார்ப்பது போல தன்னை சுற்றி நோட்டமிட்டாள். கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஷ்ரதாவின் வெறுப்பான பார்வையால் வந்த வெம்மை தான் தன் அசௌகரியத்திற்கு காரணம் என்று புரிய ஏனோ அவளை வெறுப்பேற்ற வேண்டும் என்று தோன்ற அபூர்வாவின் உடை மற்றும் செய்ன் என்று சரி செய்யும் சாக்கில் ஆதீரன் அருகில் கொஞ்சம் நெருக்கமாக நிற்க திடீரென தென்றலின் தீண்டலில் தவித்துப் போனான் ஆண் மகன்…

“என்னாச்சு? தென்னு” உள்ளே சென்ற குரலில் அவளின் செய்கைக்கு காரணம் தேட தென்னு என்றதும் முறைத்தாள்.

“இல்ல திடீர்னு பக்கத்துல வந்ததும் பேச்சு காணாம போச்சு..” என்று மென்று விழுங்க

“நீ பாட்டுக்கு அவளை இறுக்கமா பிடிச்சிருக்க அவளோட ட்ரெஸ் குத்தும் ல… இதுல செய்ன் அதோட ஹூக் புவிக்குட்டி கழுத்துல குத்திடும் ல..” என்று வாய்க்கு வந்ததை கூற அவனும் தலையாட்டி கேட்டுக் கொண்டான்.

இதையெல்லாம் தூரமிருந்து பார்த்த ஷ்ரதா வயிறு எரிய “ஏய் ஷ்ரதா உங்க அப்பாக்கு இல்லாத பணமா செல்வாக்கா? அதுவும் உன்னோட அழகுக்கு மயங்கி ஆயிரம் பேர் உன்னை கட்டிக்க க்யூல நிப்பாங்க… நீ ஏன்டி இந்த ஆதீரன் பின்னாடி சுத்திட்டு இருக்க?” ஷ்ரதாவின் தோழி என்ற பெயரில் அவள் பணத்தில் உல்லாசமாக சுற்றி திரியும் ஒருத்தி கேட்க அவளை பார்த்த ஷ்ரதா,

“நீ சொல்றது உண்மைதான் லில்லி.. என்னோட அழகுக்கும் என் அப்பாவோட சொத்துக்கும் மயங்கி என் கால்ல விழுந்து கிடக்க ஆயிரம் பேர் கிடைப்பாங்க தான் ஆனா இவனை மாதிரி ஒருத்தன்… என்னோட அழகுக்கு மயங்காம அப்பாவோட பணத்துக்கு அடிபணியாம அவனோட திமிரு தான் எனக்கு பிடிச்சது லில்லி… அந்த திமிரை மொத்தமா நான் அடக்கனும் எனக்கு அடங்கி என்கிட்ட அடிமை மாதிரி அவன் இருக்கனும் நான் அவனை ஆட்டி வைக்கனும் னு உள்ளுக்குள்ள ஒரு வெறி…” என்று அந்த வெறி கண்ணில் பிரதிபலிக்க ஷ்ரதா கூற இவர்கள் அருகில் வந்தான் ஒருவன்…

ஷ்ரதாவின் தோழன் என்று என்னைக்கு வாய்ப்பு கிடைக்கும் இவளை மடக்கலாம் என்று திட்டமிட்டு காத்திருக்கும் இன்னொரு பிஸ்னஸ் மேனின் ஒரே குடும்ப வாரிசு..

“யெஸ் ஷ்ரதா… நீ சொல்ற மாதிரி அவனை பார்க்குற ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி தோணத்தான் செய்யும்… ஆனா அவனை கண்டிப்பா உன்னால அடைய முடியாது…  ஏன்னா நீ அவனை அடக்கனும் ஆளனும் னு சொன்னியே… அதே மாதிரி அவனோட ஒருத்தி வாழ்ந்திட்டு இருக்கா… அதுவும் இவ்வளவு நாள் ஆதீ முகத்துல இல்லாத சிரிப்பு கம்பீரம்… இது எல்லாத்துக்கும் சொந்தக்காரி.. அவளை என்ன செய்ய போற?” என்று இவளை பார்த்து நக்கலாக கேட்க

“எனக்கு அவனை அடைய இவ தடையா இருந்தா இவளை கொல்லவும் தயங்க மாட்டேன்..” என்று சூளுரைத்தாள் ஷ்ரதா.

தென்றல் மற்றும் குழந்தையை ஒரு இருக்கையில் அமர்த்தி தானும் தென்றல் அருகில் அமர்ந்தான் ஆதீரன். அங்கிருந்த சிறிய மேடை போன்ற அமைப்பில் வந்து நின்ற தர்மலிங்கம் தன் நிறுவனத்தின் விழாவிற்கு தன் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி கூறியவர் இத்தனை காலம் தன் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளிகள் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த தர்மலிங்கம் இத்தனை ஆண்டு காலம் தன்னோடு தொழில் முறை நட்பு வைத்திருந்த தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவரும் நினைவு கூர்ந்து தன்னைப் போல் இங்கு வந்திருக்கும் இளம் தொழிலதிபர்கள் தங்கள் வாழ்வில் வளர்ச்சி பெற சில அறிவுரைகள் கூறி வந்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக விருந்தினை உண்ணுமாறு கேட்டுக் கொண்டு தன் உரையை முடித்துக் கொண்டார் தர்மலிங்கம்.

பஃப்ஏ சிஸ்டம்… வகைவகையான உணவுகள் வேண்டும் என்பவை தேவையான அளவிற்கு பரிமாறப்பட அவரவர் தங்களுக்கு வேண்டுவதை பெற்று உண்டு கொண்டு இருக்க தென்றல் அபூர்வாவை அமரச் சொல்லி விட்டு ஆதீரன் இருவருக்கும் தேவையான உணவை எடுத்து வர சென்றிருக்க இவர்கள் அருகில் வந்து அமர்ந்தாள் ஷ்ரதா.

அவளை ஏறெடுத்துப் பார்த்து விட்டு அலட்சியமாக தென்றல் கண்டு கொள்ளாமல் இருக்க ஷ்ரதாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. அனைவரையும் கவனித்து கொண்டே வந்த தர்மலிங்கம் தென்றல் இருக்க அங்கே ஷ்ரதா முறைத்தபடி அமர்ந்திருக்க தன் மகள் குணம் அறிந்து அருகில் வந்தார்.

“தென்றல்.. என்னமா சாப்பிடலையா? ஆதீ தம்பி எங்க?” என்று கேட்க

“அது ஃபுட் எடுக்க போயிருக்காரு சார்…”

“ஓ.. சரிம்மா.. இவ என் பொண்ணு ஷ்ரதா நீ பார்த்தது இல்லைல… ஷ்ரதா… இவங்க நம்ம ஆதீ தம்பியோட மனைவி தென்றல் பொண்ணு அபூர்வா..” என்று பரஸ்பரம் அறிமுகம் செய்து வைக்க

“ஓ… தெரியுமே சார்.. எங்களுக்குள்ள நல்ல அறிமுகம் இருக்கு.. இல்லையா ஷ்ரதா?” என்று தென்றல் ஷ்ரதாவிற்கு மட்டும் தன் நக்கல் புரியும் வகையில் கேட்க

“அப்படியா? என் பொண்ணை தெரியுமா உனக்கு?” தர்மலிங்கம் ஆச்சரியமாக கேட்க

“ஒருமுறை என் ஹஸ்பண்ட் ஆதீரனை பார்க்க உங்க பொண்ணு வந்திருந்தாங்க… ஒரு மனைவியா நான் அவங்களுக்கு என்ன மரியாதை கொடுக்கனுமோ கொடுத்து அனுப்பினேன்…” என்று தென்றல் சொல்ல தர்மலிங்கம் ஏதோ ஒரு தவறு தன் மகளால் நிகழ்ந்துள்ளது என்று புரிந்து கொண்டார்.

“மன்னிச்சிடும்மா… அம்மா இல்லாத பொண்ணு னு சின்னதுல இருந்து செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன்… வளர்ந்த அப்பறம் அதை என்னால மாத்த முடியாம போச்சு…” என்று தர்மலிங்கம் தன் மகளின் செயலுக்கு வருத்தம் தெரிவிக்க

“இட்ஸ் ஓகே சார்.. ஆனா நான் சொன்னா கோவிச்சுக்காதீங்க நான் சொல்றது தப்பும் கிடையாது.. நான் கிராமத்துல வளர்ந்த பொண்ணு எங்க ஊர் பக்கம் எல்லாம் கன்னுக்குட்டியை சுதந்திரமா தான் விடுவாங்க..‌ ஆனா சரியான பருவம் வரும் போது அந்த மாட்டுக்கு மூக்கணாங்கயிறு னு ஒன்னு போடுவாங்க… அது போட்டா மாட்டுக்கு வலிக்காதா னு நான் அந்த மாட்டுக்காரர் கிட்ட கேட்டேன்.. இப்படி மூக்கணாங்கயிறு போட்டா தான் மாடு நம்ம கட்டுப்பாட்டுல இருக்கும் னு சொன்னாரு..

மாட்டுக்கு சொல்றது மனுஷங்களுக்கும் பொறுந்தும் சார்… நீங்க உங்க பொண்ணை கட்டுப்படுத்த வேண்டிய நேரத்துல கட்டுப்படுத்தாம விட்டீங்க… இப்போ பேசுனது உங்களுக்கு கஷ்டமா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க சார்.. எனக்கு எதையும் மனசுல வச்சுக்கிட்டு மறைக்க தெரியாது…

அப்பறம் சார்… உங்க பொண்ணால ஆதீரன் வாழ்க்கையில நல்லது தான் நடந்திருக்கு..” என்று தென்றல் கூற ஷ்ரதாவும் தர்மலிங்கமும் புரியாமல் பார்க்க

“அதாவது சார் உங்க பொண்ணு ஆதீரனை தொந்தரவு பண்ணினதால தானே வேலையை விட்டு போனாரு… அதைத்தவிர உங்க கம்பெனி வேலையை விட ஆதீரனுக்கு காரணம் இல்லை… அப்படி வேலையை விட்டு போய் தான் சொந்தமா கம்பெனி ஸ்டார்ட் பண்ணி இன்னைக்கு இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காரு…” என்று தென்றல் ஷ்ரதாவின் தொந்தரவிலும் ஒரு நியாயம் கண்டு கூற உண்மையாகவே மனதுக்குள் மெச்சிக் கொண்டார் தர்மலிங்கம்…

தென்றல் பேசியதை கொஞ்சம் தள்ளி இருந்தே முழுமையாக கேட்ட ஆதீரனுக்கு அவளை நினைத்து இன்னும் பெருமை கூடியது… ஆனால் எதையும் கேட்காதது போல ஆதீரன் இயல்பாக வர இவர்களும் அப்படியே இருந்து கொண்டனர்.

விருந்து முடித்து வரும் போது இருவர் இடையே இருந்த மாயத்திரை லேசாக விலகிக் கொண்டது என்னவோ உண்மை.. இது இப்படியே தொடருமா… விதியின் பிடியில் தான் அனைத்தும் இருக்கிறது…

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *