Skip to content
Home » தீரனின் தென்றல்-64

தீரனின் தென்றல்-64

தீரனின் தென்றல் – 64

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

“தீரா பாரேன் அஞ்சு வருஷத்துல நம்ம ஊரு எப்படி மாறிடுச்சு ல…” தாங்கள் சிறுவயதில் நடந்த ஓடிய தெருக்களை காட்டி சிலாகித்து கொண்டே வந்தாள் தென்றல்.

“ம்ம்.. ஆமா தென்னு…” தீரன் ஆமோதிக்க

“அம்மா இதுதான் உங்க ஊரா? உனக்கும் அப்பாக்கும் ஒரே ஊரா?” அபூர்வா கேள்வி எழுப்ப

“உங்க ஊரா இல்ல பூர்வி மா நம்ம ஊரு… இந்த ஊர்ல தான் நான் உங்க தாத்தா பூரணி பாட்டி உன் அப்பா அம்மா எல்லாரும் பிறந்து வளர்ந்தது..” என்று பொன்னி பழைய நினைவுகளில் சிலாகித்து சொல்ல

“அப்போ நான் எந்த ஊரூல பொறந்தேன் அம்மம்மா…?”

“நீ உங்கம்மா திருச்சில தங்கிருந்தப்போ பிறந்த…” பேச்சு சுவாரஸ்யத்தில் ரூபா சொல்லிவிட

“நான் மத்தும் ஏன் அங்க பொறந்தேன்.. இங்க ஏன் நான் பொறக்கலை?” தாடையை தட்டி அபூர்வா யோசனையில் மூழ்க தென்றல் சோகமாக அவள் கையை அழுத்தி  கண் பார்வையில் ஆறுதல் உரைத்தான் ஆதீரன்.

நல்லவேளை சக்தி நீ ஆச்சி ஊர்ல தான் பிறந்த என்று ரூபியின் அம்மா ஊருக்கு வரும்போது எல்லாம் கதைகதையாக சொல்ல அவளுக்கு இந்த சந்தேகங்கள் வரவில்லை…

என்னதான் தென்றல் “உனக்கு குணமாகவும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போகலாம்.” என்று குழந்தைக்கு சொல்வது போல சொன்னாலும் ஆதீரன் பிடிவாதமாக ஐந்தே நாட்களில் வீடு வந்து சேர்ந்தான். அதன் பின்னர் “சரி ஓய்வெடு” என்று கூறினால் தென்றல் ஆசைப்படி ஊருக்கு சென்றே தீரவேண்டும் என்று பேச்சை தொடங்கினான்.

“அத்தை அம்மா இறந்தப்போ அபூர்வா தென்றல் வயித்துல இருந்ததால என்னை கொள்ளி வைக்கக்கூடாது னு சொல்லிட்டாங்க நானும் அம்மா என்மேல கோபமா இருக்காங்க னு அவங்களுக்கு செய்யவேண்டிய எதுவுமே செய்யல… வருஷா வருஷம் அவங்க திதிக்கு ஏதாவது ஆசிரமத்துல ஒரு நாள் அங்க இருக்க எல்லாருக்கும் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுவேன் கோவிலுக்கு போவேன். பெருசா எதுவும் செய்யல…

மாமாவுக்கும் கூட நம்ம சொந்தங்கள் யாரும் இல்லாம அவரோட நண்பர் தான் இறுதிச்சடங்கு எல்லாம் செய்ததா குமார் சொன்னான். இப்போ அவங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து செய்யவேண்டிய கடமைகள் எல்லாம் செய்யனும் அப்போதான் அவங்க ஆத்மாக்கு நிம்மதி கிடைக்கும்.” என்று ஆதீரன் சொல்ல

“நானும் அதை நினைச்சேன் மாப்ளை… பித்ரு தோஷம் இருந்ததால கூட இப்படி உங்களுக்கு விபத்து நடந்திருக்கும் னு மனசுல தோணுச்சு..” என்று பொன்னி கூற

“அப்போ அதுக்கு என்ன செய்யனும் எப்போ செய்யனும் னு பார்க்கலாம் ம்மா… எங்க வைச்சு செய்யறதுன்னு ஏதாவது யோசிச்சீங்களா பாஸ்?” மதன் கேட்க

“மாமாவுக்கும் சரி அம்மாக்கும் சரி அவங்க பிறந்த ஊர்ல அவங்க பிறந்த பரம்பரை வீட்ல வைச்சு பண்ணினா தான் சரியா இருக்கும்.” ஆதீரன் சொல்ல

“தம்பி பொதுவா முன்னோர்களுக்கு வருஷ திதி கொடுக்காம விட்டா ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை தை அமாவாசை னு கூட பித்ருக்களுக்கு தர்பணம் பண்ணுவாங்க அதுல அவங்களோட ஆத்மா சாந்தி அடையும் னு பெரியவங்க சொல்லுவாங்க” என்று கமலம் சொல்ல

“அப்போ இன்னும் ஒருவாரத்துல தை அமாவாசை வருதே… அன்னைக்கே பண்ணிடலாம்.” என்று ஆதீரன் சொல்ல

“எது? இன்னும் ஒருவாரத்துல.. தீரா நீ இன்னும் முழுசா குணமாகலை” என்று தென்றல் அவனை கடிந்து கொள்ள

“பரவாயில்ல தென்னு… நம்ம ஊருக்கு போனா நம்ம ஊரு காத்தே என்னை சரி பண்ணிடும்… ப்ளீஸ் டி அதான் ஒரு வாரம் இருக்கே அதுக்குள்ள இந்த தலையில இருக்க கட்டு தையல் எல்லாம் ரிமூவ் ஆகிடும். கையிலயும் கட்டு கழட்டிடுவாங்க..” என்று ஆதீரன் சொல்ல முறைத்தாள் தென்றல்.

எப்படியோ கெஞ்சோ கெஞ்சல் கொஞ்சல் என்று அவளின் தலையசைப்பை வாங்கிட “ஆனா நீ ட்ரைவ் பண்ணக்கூடாது” என்று கண்டிப்பான கட்டளையோடு ஒப்புக்கொண்டாள் தென்றல்.

அதன் பின்னர் குமார் ஒருவாரம் விடுமுறை சொல்லிவிட்டு வர மதன் மூலம் நடந்து கொண்டிருந்த வேலைகளும் கூட ஒருவாரத்துக்கு ஒத்திப்போட்டான் ஆதீரன்.

சென்னையில் இருந்து மதன் காரை ஓட்டி வர பாதி தூரத்தில் குமார் ஓட்டிவர என்று இப்போது இவர்கள் தங்கள் கிராமத்தில் அடி எடுத்து வைத்திருக்க ரங்கநாதன் அன்னபூரணியின் பிறந்த வீடு தென்றல் ஓடியாடி தவழ்ந்த அவள் தந்தையின் வீடு தயாராக இருந்தது இவர்கள் வருகைக்காக…

ஊருக்குள் நுழைந்தபோதே ஊர் வாசம் நாசியில் ஏற அந்த நாள் நினைவுகள் நெஞ்சில் தாக்க ஒருமாதிரி உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தான் இருந்தனர் அனைவரும்…

ரங்கநாதன் இருந்த காலத்தில் அவரிடம் வேலை செய்து கொண்டு இருந்தவரையே வீட்டை பார்த்துக் கொள்ள பொறுப்பில் விட்டிருந்தான் ஆதீரன்.

தாங்கள் வரும் தகவல் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்க அவரும் வீட்டை தயார் செய்து வைத்திருந்தார். காரில் வந்தவர்கள் அனைவரும் இறங்கிட தென்றல் தீரன் இறங்குவதற்கு உதவினாள்.

வீட்டை பராமரித்துக் கொண்டிருந்த ராமசாமி ஓடிவந்து “வாங்க தம்பி… உடம்பு இப்போ பரவாயில்லையா? பொன்னி அக்கா எப்படி இருக்கீங்க? தென்றல் வாம்மா” என்று அழைக்க

அவரோடு வந்த அவரின் மனைவி மீனாள் “பொன்னி அத்தாச்சி… போங்க தாயா பிள்ளையா பழகிட்டு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல தோணலை… இந்த தென்றல் புள்ளை கூட எனக்கு மகளா நினைச்சேன் ஆனா என்கிட்ட சொல்லாம கொள்ளாம கண்காணாத இடத்துக்கு போயிட்ட இல்ல?” பாசத்தில் செல்ல கோபம் கொள்ள

“ஏய்… வந்தவங்களை வாங்கனு கூப்பிடாம வாசல்ல நிக்க வைச்சு வியாக்கியானம் பேசிட்டு இருக்க… போடி அங்குட்டு…” ராமசாமி அதட்ட

“சரி வாங்க எல்லாரும் உள்ள வாங்க… தென்றல் இதுதான் உன் குழந்தையா? அப்படியே பூரணி அக்கா தான் திரும்ப பிறந்த மாதிரி இருக்கு.. வாங்க குமாரு ரூபி… தென்றல் போனதும் அவளோட நீங்களும் அப்படியே போய்ட்டீங்க வாங்க முதல்ல குளிச்சிட்டு சாப்பிடுங்க அப்பறம் உங்களுக்கு இருக்கு” அன்பாய் மிரட்டல் விடுத்தார் மீனாள்.

“ஆதீ தம்பி உங்களுக்காக நாட்டுக்கோழி அடிச்சு குழம்பு வைச்சிருக்கேன்… பாருங்க இன்னும் ரெண்டே நாள்ல உங்க உடம்பு பூரணமா குணமாகிடும்… சரி நீங்க போய் குளிச்சிட்டு வாங்க…” என்றபடி மீத வேலைகளை கவனிக்க அவர் செல்ல

கூடத்தில் வந்து நின்றவர்கள் ஏற்கனவே இந்த வீட்டில் இருந்த நினைவுகளில் கண்ணீர் அணை கட்ட தென்றல் தந்தை தூணில் சாய்ந்து அமரும் ரங்கநாதன் மடியில் தலை வைத்திருக்கும் நினைவுகள் நெஞ்சில் அலைமோத கண்ணீர் கரை புரள அந்த தூணை கட்டிக் கொண்டு அழுதாள் தென்றல்.

பொன்னி அவளை தேற்றும் நிலையில் இல்லை அவருக்கும் அந்த வீட்டோடான நினைவுகளில் கண்ணீர் சொரிய “தென்றல் வேண்டாம் மா… பாரு பாப்பா பார்க்குறா…” என்று கமலாம்மா தான் தோன்றினார்.

“தென்றல் போதும்… போய் குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வா பாப்பா பசியோட இருப்பா… ரூபி சித்ரா நீங்களும் போங்கமா அத்தை எதையும் நினைக்காதீங்க போங்க…” என்று ஆதீரன் சொல்ல அனைவரும் குளித்து தயாராகி வர அறைக்கு சென்றனர்.

மதனையும் குமாரரையும் அழைத்துக் கொண்டு ஆதீரன் வீட்டின் பின்பக்கம் சென்று கொல்லையில் இருந்த பாத்ரூமில் குளித்து தயாராகி வந்து அனைவரும் ஒன்றாக கீழே அமர்ந்து இலை போட்டு பரிமாறினர் ராமசாமி மீனாள் இருவரும்.

பின்னர் பகல் முழுவதும் வீடு மற்றும் அதனருகில் இருந்த இவர்கள் வயல் என்று சுத்தி பழைய கதைகள் எல்லாம் பேசிக் கொண்டு இருக்க இரவு வந்தது.

குமார் ரூபி சக்தி ஒரு அறையில் சித்ரா மதன் ஒரு அறையில் தென்றலின் அறையில் தீரனும் தென்றலும் அபூர்வாவோடு தங்கியிருக்க பொன்னியும் கமலமும் கூடத்தில் உறங்கிக் கொள்வதாக கூறிவிட்டனர்.

தன் சிறுவயது அனுபவங்களை மேலோட்டமாக நினைவுகூற அதிலிருந்து தோண்டி துருவி கேள்வி கேட்டு படுத்திக் கொண்டு இருந்த அபூர்வாவை போராடி உறங்க வைத்தனர் தீரனும் தென்றலும்…

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

3 thoughts on “தீரனின் தென்றல்-64”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *