Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-13

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-13

துஷ்யந்தா-13

வீட்டிற்கு வந்தவள் அனிலிகாவிடம் பேசி முடித்தாள்.

திருமணத்தை கூறியதும் அனிலிகா ஆடிப்போனாள். அன்னையின் கால் துண்டித்ததை கூறியதும், நீ சொன்ன மாதிரி உன்னை சொல் பேச்சை கேட்க வைக்க அதை யூஸ் பண்ணிக்கிட்டான். எதுக்கோ உன் பிரெண்ட் தீபிகா சொன்ன மாதிரி ஜாக்கிரதையா இரு” என்று அனிலிகா கூறி முடித்தாள்.

“ம்ம்.. அனி அடிக்கடி போன் செய்தா தப்பா எடுத்துக்காதே. இப்ப எனக்கு இருக்கற ஒரே பிரெண்ட், வெல்விஷர் நீ தான். முடிந்தளவு நான் உடைந்திட மாட்டேன். ஆனாலும் உன்னோட பேசினா..” என்று முடிக்கும் முன்ன அனிலிகா “வாட் இஸ் திஸ் பிரகதி. இதை நீ கேட்கணுமா? எப்ப வேண்டும் என்றாலும் பேசு. உனக்காக போன் எப்பவும் சவுண்ட்லயே வச்சிருப்பேன்…” என்று தெம்பு ஊட்டினாள்.

“ம்ம்.” என்ற பிரகதியிடம் தயங்கி “பிரகதி… எ..எட்வின் இங்க தான் இருக்கான். உன்னோட பேசணுமாம்.” என்றாள்.

“அவனுக்கு இங்க நடந்தது தெரியுமா அனிலிகா?” என்று கேட்டாள்.

“இல்லை பிரகதி. உனக்கு மேரேஜ் ஆகிடுச்சுனு சொன்னேன். உடனே பிரகதி மாம் பார்த்து வச்சதா சொன்னாளே அவங்களானு கேட்டான். நானும் ஆமானு சொல்லிட்டேன். பேசறியா…?” என்றதும் “ம்ம்.. பேசறேன்.” என்றவள் “அனிலிகா.. அவனிடம் இக்கட்டான நிலையை சொல்லாதே… ஜஸ்ட் மேரேஜ் மட்டும் சொல்லு” என்றதும் போன் கை மாறியது.

“கங்கிராட்ஸ் பிரகதி. மேரேஜிக்கு இன்வெயிட் பண்ணலை. இப்ப எப்படி இருக்க?” என்றான்.

“அன்பார்சிலேட்டீ சடனா மேரேஜ் நடந்திடுச்சு எட்வின். இன்வெயிட் பண்ண முடியலை சாரி” என்றாள்.

“இட்ஸ் ஓகே பிரகதி. ஹௌ இஸ் யுவர் லைப். நான் அவரிடம் பேசலாமா? விஷ் பண்ணலாமா?” என்று கேட்டான்.

பிரகதிக்கு நெஞ்சடைத்தது. உன்னை அடித்தவன் தான் என்னை கட்டாயப்படுத்தி மணந்திருக்கின்றான். அதுவும் தாயை பணய கைதியாக கைக்குள் வைத்து ஆடுகின்றான். போலிஸிடம் சென்று முறையிட தெம்பில்லை. முன்பே தீபிகா திருமணத்தில் போலிஸ் அனைவரையும் கண்டிருக்கின்றாள்.

“சாரி எட்வின். அவர் வீட்ல இல்லை. நீ விஷ் பண்ணியதை சொல்லிடறேன். ஓகே பை” என்று தொடர்பை அணைத்து விட்டாள்.

தலை விண்ணென்று வாட்டியது. காபி குடிக்கலாமென தோன்றியது. ஆர்டர் செய்தால் அதற்கு வேறு தாயுக்கு உணவை கொடுக்காமல் வருந்த வைப்பானோவென யோசித்தாள்.

வேறு வழியில்லை… அவனிடம் பதிலுக்கு வாயடிக்கவே தனக்கு திடம் வேண்டுமென கீழே வந்தாள்.

கிச்சனில் வரவும் “காபி வேண்டும்” என்று கேட்டதும் இரண்டு நொடியில் மெஷினில் ரெடி செய்து நீட்டினாள் வேலைக்கார பெண்மணி.

‘இதை ஐந்து நிமிஷத்துல பிடிச்சி குடிக்க ஒரு வேலைக்காரங்களா… கடவுளே… நம்ம வீட்ல பட்டு இருப்பா… ஆனா அதுக்குனு இங்க மாதிரியா… இதென்ன யூனிபார்ம்மா… கண்ணை கட்டுது’ என்று மனதில் எண்ணி பருகினாள்.

டிவி காலையில் உடைத்த சுவடின்றி புதிதாக மாட்டியிருந்தது.

அடப்பாவி சொன்ன மாதிரியே உடனே பிக்ஸ் பண்ணிட்டான். காரும் வாங்கிட்டானா? என்று பருகி முடித்து எட்டி பார்த்தாள்.

தன் கண்ணையே நம்பாமல் ஆச்சரியமாய் பார்த்தாள். புதிதான வெள்ளை பென்ஸ் கார் காட்சியளித்தது.

என்னவோ அதிகப்படியான வாழ்வு தன்னை புதைக்குழியில் தள்ளியதாக எண்ணினாள்.

காபி குடித்து முடிக்க அதனை வாங்க பணிப்பெண் வந்து கையேந்தி நின்றாள்.

இதற்கு மேல் நான் வைக்கிறேன்னு என்று எழ மனமின்றி காலாற நடந்தாள்.

எதற்கு இத்தனை பெரிய ஹால் என்று எரிச்சலாக இருந்தது. தன் வீடே இரண்டு பேர் இருக்க அதிகமாக தோன்றும். இவன் ஒருவனுக்கு இப்படி எதுக்கு. அவனின் காலடி ஹாலில் ஒரு நாளைக்கு ஒரு முறை படுமா…? சந்தேகம் தான். வீட்டுக்குள் ஷூ போட்டு அறைக்குள் வரை வந்தது நினைவுற்றாள்.

கீழேயே மூன்று அறை பெரிதாக இருந்தது. மேல அவர்கள் அறைக்கு பக்கத்தில் இரண்டு. அதற்கும் மேலே ஒரறை என்று இருந்தது. ஏழறையை இருக்க நாளுக்கு ஒரு அறையில் தங்குவானோ இந்த 7½ என்று யோசனைக்கு போனாள்.

மாடியில் சில்லென்ற காற்று அவளை தழுவ, இதமாய் உணர்ந்தாள்.

அங்கேயே அமர்ந்து காலை கட்டி வேடிக்கை பார்க்க, சற்று நேரத்திற்கு பின் தன்னை யாரோ பார்ப்பதாக உறுத்த, இடது பக்கம் திரும்பினாள்.

விதுரன் அங்கே சுவரில் சாய்ந்து அவளை பார்க்க விறுட்டென எழுந்து கீழே செல்ல முயன்றாள்.

“மகாராணிக்கு வீடு பிடிச்சிருக்கும்னு பார்த்தா மாடி பிடிச்சிருக்கு போல..?” என்றான்.

பிரகதி எதுவும் பேசாமல் சென்றவளை, நான் கேட்டா பதில் தரணும். இப்படி திமிரா போக கூடாது. எனக்கு அது பிடிக்காது.” என்றான்.

சொல்ல சொல்ல பிரகதி கீழே இறங்க, முறுவலோடு துணைக்கு வந்தான்.

“பொதுவா வெளிநாட்டுல படிக்க போனவங்க எல்லாம் அந்த லைப்ல மிங்கிள் ஆகிட்டு இந்தியாவை இரசிக்க மாட்டாங்களாம். அவங்களுக்கு சென்னை ஒரு ஒவ்வாமையா போயிடும். வெளிநாட்டிலேயே இருந்திருக்கலாமோனு மனசு தவிக்கும்.

இப்ப உன்னோட நிலைமை அப்படி தானே.? வந்த இரண்டே நாளில் உன்னோட மொத்த வாழ்க்கையும் திருப்பி போட்டுட்டேன். நீயா நினைச்சா கூட இனி மாற்ற முடியாது.

பாவம்…. தோழி தீபிகா வாழ்க்கை போச்சு. தோழன் இன்பா வாழ்க்கை போச்சு. உன்னோட அம்மா கால் போச்சு. உன் நிம்மதி போச்சு. உன்னோட வாழ்வே நீ வாழ முடியாம போச்சு…” என்று உச்சு கொட்டியபடி வந்தான்.

“இத்தனை போனாலும் உன்னோட பக்கத்துல எதிரியா நிற்கறேனே… உன் வாழ்வும் போச்சு என்பதை சேர்த்து சொல்லு” என்று சத்தமாகவே கூறி முடித்தாள்.

விதுரன் அவள் பின்னால் வந்தவன் “என் வாழ்வு எங்கயும் போகாது. என்னோட என் இஷ்டப்படி தான் அமையும். பார்க்கறியா..” என்றவன் கன்னக் கழுத்தில் தன் வெட்ப காற்றை ஊதி முன்னேறி வந்தான்.

“உனக்கு இந்த சாஸ்திரம் சம்பிரதாயம் நம்பிக்கை இருக்கா? எனக்கு சுத்தமா இல்லை… ஆனா அதோட முறைப்படி நடக்க இருப்பது தான் சாந்தி முகூர்த்தமாம். என்னை கையை கட்டி வேடிக்கை பார்க்க வைக்குது. ரொம்ப நாளா இப்படியே தைரியமா நடமாட முடியாது. எப்படியும் இரண்டு மூன்று நாளில் அகப்படுவ. அப்ப பேசியதுக்கு எல்லாம் வட்டியும் முதலுமா திருப்பி தருவேன்” என்றவன் போனை கழற்றி வீசியெறிந்தான். அது மெத்தையில் ஒரு பகுதியில் சென்றடைந்தது.

பிரகதிக்கு உள்ளே நடுங்கினாலும் வெளியே காட்டிக்கவில்லை. சொல்வதை செயல்படுத்த தன்னை போல தாமதப்படுத்தாதவன். அதனால் அச்சம் கூடியது.

    விதுரன் படுத்துக் கொண்டு ஆழ்ந்து மூச்சி வரவும் பிரகதி அமைதியாய் வந்து படுத்து கொண்டாள். ஆனால் மெத்தையில் அல்ல சோபாவில்…
 
     சோபாவே மெத்தை போன்ற சுகத்தை தர உறங்கியதும் விதுரன் விழிகள் மெல்ல திறந்தது.

   ‘சாப்பாடு மட்டுமில்லை.. தூங்கறதும் இனி உனக்கு அடுத்து தான். என்னோட பாதுகாப்பில் நான் சரியா இருப்பேன்’ என்றவன் நிம்மதியாய் உறங்கினான்.

     அதிகாலை எழுந்ததும் பிரகதியை தேடி முடிக்க அவளோ காபி கப்போடு மாடியில் நிதானமாக திண்டில் அமர்ந்திருந்தாள்.

   விதுரன் தேடி களைத்த வேகத்தில் மீண்டும் தனதறைக்கு சென்றான். அவன் வந்ததோ சென்றதோ அறியாத பிரகதி மெதுவாய் காபி குடித்து அங்கிருந்த வண்ணம் மகக்ளை காண ஆரம்பித்தாள்.

      நேற்று போல அம்மாவை காண செல்லலாம் என்று காலையில் தயாராக சென்றாள், அவன் ஒன்று டூ இரண்டு என்ற நேரம் ஒதுக்கிவிட்டானே என்ற கடுமையை கரைத்து கொண்டிருந்தாள்.

    நேரத்தை நெட்டி முறிக்க முடியாது கீழே வர, உடற்பயிற்சி அறையிலிருந்து சின்னதாய் அரும்பிய வியர்வை துடைத்து விதுரன் வந்தான்.

      “ஹாய் குட் மார்னிங்… என்ன உன் பிரெண்ட் வீட்டுக்கு போகலையா? தீபிகா இன்பா? இல்லை கடல் கடந்து எட்வின் வீட்டுக்கு போக முடியலையேனு தவிக்கிறியா?” என்றான்.

     இவனிடம் பேச பிடிக்காது அறைக்கு போக விதுரனுக்கு சினம் எட்டி பார்த்தது. தடுத்து நிறுத்தி பார்வையில் வினா புரிந்தவனையை கண்டு எள்ளினாள்.

     “உன்னிடம் பேசவும் என்னோட மனசு ஒப்பலை. அப்படின்னா நீ என்ன ரேஞ்சுனு நீயே முடிவு பண்ணிக்கோ.” என்றவள் செல்ல, அவள் கைப்பற்றி அழைத்தமாய் நிறுத்தினான்.

    “என்னோட கார், டிவி மாதிரி நீ உயிரற்ற பொருட்களை சிதைக்கிற. நான் உயிரற்ற பொருட்களை சிதைக்கலை, உயிருள்ள உன்னையும் சிதைக்க கூடாதென யோசிக்கறேன். இதுக்கு மேல என்னடி என் ரேஞ்சு உன் கேரக்டரோட குறைந்திருக்கு?” என்றவன் உதறிவிட்டு அலுவலகம் செல்ல புறப்பட்டான்.

     பிரகதிக்கு அவனை கணிக்க முடியாது குழம்பியவள் தாயை பார்க்க, பதினொன்றுக்கே மருத்துவ வளாகத்தில் தவமிருந்தாள்.

   அன்னையிருக்கும் அறை தான் யாரும் அறிவிக்கவில்லை. விதுரனின் அறையாக நர்ஸ் ஒருவள் நேற்றைய அறையை சுட்டிகாட்டி “இங்க எவ்வளவு நேரமென்றாலும் இருங்க மேம்.” என்று காத்திருக்க வைத்து கிளம்பினாள்.

   பிரகதி எவ்வளவு கெஞ்சியும் “இந்த ஹாஸ்பிடல் டீனை விட இங்க விதுரன் சாரோட சொல்லுக்கு தான் பவர். பார்ட்னர் என்றாலும் விதுரன் சார் இந்த ஹாஸ்பிடலை அவரோட பேரண்ட்ஸ் இறந்தப்பின் நடத்தறது மேம்” என்று கூறி அகன்றிட தனியாய் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து விதுரனை திட்டி தீர்த்து சோர்ந்தவளாய் அமர்ந்தாள்.

     அந்த நேரத்தில் தீபிகா போன் வரவும் எடுத்து செவிமடுத்தாள்.

    “ஐ அம் சாரி பிரகதி.. நேற்று நீ வந்தப்ப விதுரன் மேலயிருந்த எல்லா கோபத்தையும் வச்சி பேசியதில் உன்னை ஹர்ட் பண்ணிட்டேன். நார்மலா பேசவேயில்லை. வெல்கம் டிரிங் கூட தரலை. ஆஸ்திரேலியா இருந்து வந்த உனக்கு விதுரனோட மேரேஜே ஷாக் தான்.” என்று பேசியவள் திடுக்கென சுதாரித்து “பிரகதி நீ தனியா தானே இருக்க? அவன் இல்லையே?” என்று கேட்டாள்.

     “இல்லை தீபிகா.. நான் ஹாஸ்பிடலில் இருக்கேன். அம்மாவை பார்க்கணும்னா ஒரு மணி டூ இரண்டு மணி வரைனு டைம் கொடுத்திருக்கான். மணி இப்ப தான் 11.27 ஆகுது. அம்மாவை பார்க்க விடலை. எந்த ரூம்ல இருக்காங்கனும் தெரியலை. தனியா உட்கார்ந்திட்டு இருக்கேன்” என்று பதில் தந்தாள். அவள் பேச்சில் ஏகத்திற்கு வருத்தம் மிகுந்திருந்தது.

      “எனக்கு லோகேஷன் அனுப்பு நான் உங்க அம்மாவை பார்த்துட்டு உன்னையும் நேர்ல சந்திச்சு பேசணும். மேபீ தனியா இருக்கனு சொல்லற. எனக்கும் உன்னிடம் தனியா தான் பேசணும்.” என்றாள்.

    பிரகதியும் லோகேஷன் அனுப்புவதாக கூறி கத்தரித்தாள். அதே போல அனுப்பி வைக்க, 12 மணிக்குள் வந்து சேர்ந்தாள்.
 
      மருத்துவமனை என்று கூறயியலாத வகையில் அவ்வறை மட்டும் ஒர் வீட்டின் அமைப்பில் இருந்தது.

     “உட்காரு” என்றதும் தீபிகா அமர்ந்ததும் தண்ணீரை கொடுக்க பருகி முடித்தாள்.

     “இந்த சனியன் வயிற்றுல இருந்து வெளியே வர்ற வரை இப்படி தான் மூச்சிரைக்குமாம்.” என்றதும் பிரகதிக்கு தீபிகா பேச்சு சங்கடத்தை கொடுத்தது. என்ன இருந்தாலும் அது குழந்தையாயிற்றே என்று தான் மனதிற்குப்பட்டது.

     “விதுரன் உன்னை உன் அம்மாவை காட்டி மிரட்டி வாழ்ந்துட்டானா பிரகதி? எதுவும் முடிவெடுக்கா நிலையில இருக்கியா. அவனை பழிவாங்க உன்னால முடியும். அவன் பேச்சை கேட்டு வாழ்ந்தா கொஞ்ச நாளில் நீ என்ன சொன்னாலும் நாய் குட்டி மாதிரி காலில் விழுந்திடுவான். என்ன அதுவரை நம்ப மாட்டான். நம்பிட்ட பிறகு நீ எதுனாலும் செய்யலாம். சொன்னாலும் கேட்பான்” என்று ஐடியா அலமுவாக மாறி ஆலோசனை வழங்கினாள்.

   பிரகதிக்கு தீபிகா பேச்சு எரிச்சலே அதிகரித்தது. பிரகதிக்கும் விதுரனை பழிவாங்கும் அளவிற்கு கோபம் இருந்தது. ஆனால் எதுவென்றாலும் முன் நின்று போராடும் ரகம் பிரகதி. தீபிகாவோ நம்பி கழுத்தறுக்கும் கலையை புகட்டுகின்றாள்.

    பிரகதிக்கு வராதவொன்று. அதுவுமில்லாமல் பெண்ணை மானபங்கபடுத்தி அவள் உடலை வைத்து பழி வாங்கும் வகையில் விதுரன் திட்டமில்லை என்று இந்த இரண்டு நாளில் அறிந்தால், அது மட்டுமல்ல தனது தாயின் உடல்நலத்திற்காக தானே அவன் காலை எடுத்திருக்க வேண்டுமென புரிந்ததும் சற்றே யோசித்து முடிவெடுக்க ஆரம்பித்தாள்.

   அவனுக்கு அவன் தலைமையில் நடந்தவையை மாற்றியதன் விளைவால் பேசிய ஏளத்திற்கு தன்னை இப்படி நடத்துகின்றான்.

      தீபிகா இன்பா திருமணம் மாற்றியிருக்கின்றான். அளவுக்கதிகமாக பேசிவிட்டான். தான் பழிவாங்க இது மட்டும் தான் காரணமா…? தன்னை தவிர்த்து தீபிகா இன்பா வாழ்வுக்காகவும் போராட வேண்டுமா? என்ற குழப்பம் தாக்கியது. இன்பா ஆளை விட்டா போதும் என்ற நிலையில் விதுரனை விட்டு தள்ளி சென்றுவிட்டான்.

   தீபிகா தான்… பாவம் அவள் இப்படி பேசுவது நியாயம் தானே… அவள் காதலித்தவனை விட்டு சசியை மணந்தால்… அவளின் மனம் பாடுபடும் உணர்வு எத்தகையது? தீபிகா மீது குறை கூற முடியாது. அபத்தமாக இருந்தாலும் அவள் பேச்சை செவியில் கேட்டுக் கொள்ளலாம். மனதில் ஏற்ற கூடாது. அவனுக்கு வேறொரு பாடம் புகட்ட வேண்டும் என்றே சிந்தனையுள் முழ்கினாள்.

    “நான் பேசிட்டு இருக்கேன் பதில் சொல்லு பிரகதி.” என்று தீபிகா தொடவும் நினைவலையிலிருந்து விடைப்பெற்றவள் “நம்பி கழுத்தறுக்க கூடாது. நான் இப்பவே அவனை மனுஷனாவே மதிக்கலை. விடு தீபிகா. அவனுக்கு என் மேரேஜ் பண்ணியதே வேஸ்ட் என்று புரிய வைப்பேன்.” என்றதும் பத்மாவதியை வீல் சேரில் நர்ஸ், இவர்கள் அறைக்கு அழைத்துவர தீபிகா பிரகதி பேச்சு தடைப்பெற்றது.

    பத்மாவதியை கட்டி கொண்டு கீழே அமர்ந்து “இப்ப பரவாயில்லையா அம்மா… உன்னை இங்க நல்லா பார்த்துக்கறாங்களா? டைம்முக்கு சாப்பிடறியா? டேப்லட் எடுத்துக்கறியா… பட்டு எங்கம்மா?” என்றாள்.

    “எந்த குறையும் இல்லை பிரகதி. என்னை ஒரு விஐபி பேஷண்டா தான் கவனிக்கறாங்க. என்ன நான் ஆசைப்பட்ட மாதிரி உனக்கு திருமணம் நடக்கலை. யாரோ என்னை பணய வச்சி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அன்னைக்கு ‘பிரகதி நீ நல்லாயிருக்கணும் அதுக்கு’ நீ எனக்காக பார்க்காதே. திருமணத்துக்கு ஒப்புக்காதேனு சொல்ல வந்தேன். ஆனா என்னால சொல்ல முடியலை.

   நீ எப்படி டா இருக்க? அவன் உன்னை கஷ்டப்படுத்தறானா?” என்று பத்மாவதி கேட்டு முடித்தார்.

     அந்த நிலையிலும் தன் நலனை யோசித்த தாயின் மனதுக்கு ஏன் கடவுள் இப்படி வீல் சேரில் அமர வைத்து விட்டாரென கோபம் வந்தது.

     “நான் நல்லாயிருக்கேன் மா. அவன் என்னை உடல் அளவுல காயப்படுத்தலை. உன்னோட பேச விடாம தான் தடுக்கறான். நீ கூட வந்துட்டா… மற்ற எந்த கஷ்டமும் எனக்கு பெரிசில்லை.” என்றாள் பிரகதி.

   தீபிகாவுக்கு உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தது.

      தாயும் மகளும் அழுது, கண்ணீர் கடலில் திளைத்து, நலத்தை அறிந்து பேசுவது.

   விதுரனை பழிவாங்கவோ தனக்கு ஆறுதலாகவோ யாரும் யோசிக்கவில்லையே என்ற தவிப்பு அதிகமாகியது.

    பத்மாவதியோ “அப்படியே ஆஸ்திரேலியா போயிடு மா. என்னை பற்றி கவலைப்படாதே.” என்று பேசிய நேரம் பத்மாவதியை அழைத்து வந்த நர்ஸ் தள்ளும் விசையில் உணவுகளை எடுத்து வந்து வைத்துவிட்டு செனறாள்.

     பத்மாவதிக்கு பிரகதியே ஊட்டி விட்டாள். தீபிகாவோ பெயருக்கு பத்மாவதியின் நலத்தை கேட்டு தனது வாழ்வு கருகியதாக கூறி முடித்தாள்.

    பாதி நேரம் கடந்திடவும் அழுத்தமான காலடியோசை கேட்டு மூவரும் திரும்பினார்கள்.

   விதுரன் நெற்றி சுருங்கி புருவமேறி சினத்தில் மூவரையும் கண்டான். அவன் உடல் மொழியே கூறியது இங்கு தீபிகா இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லையென.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *