Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-37

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-37

துஷ்யந்தா-37

    ஆதித்யா இறக்கும் முன் விதுரன் வாழ்வு பூர்த்தியாகவில்லையே பேரனின் இல்லற வாழ்வு இப்படியானதே என்று நெஞ்சு பிடித்து பிரகதியை அச்சப்படுத்திட போனில் ‘விதுரனின் மகள் தன்வீ’ என்று போட்டோவை காட்டி அவரை சமாதானம் செய்தாள்.

    அவருக்கோ கொல்லு பேத்தியை பார்த்த திருப்தி ஏற்பட, இனி விதுரன் எப்படியும் தன்வீயை அறிவான். மீண்டும் பிரகதியை விடமாட்டான் என்று நிம்மதியாய் கண்ணை மூடினார்.

   அவருக்கு தெரியாதா விதுரனின் உடமை யாரிடமும் விட்டு வைக்க மாட்டானென்று. அதுவும் அவன் இரத்த பந்தத்தை வாரிசை விடுவானா? என்று எண்ணி இறந்தவரை இன்று எண்ணிய கணத்திலும் நீர் வழிந்தது பிரகதிக்கு.

    அன்று அனிலிகா கையிலிருந்த தன்வீ விதுரனின் சிம்ம குரலில் கத்தவும் வீறிட்டு அழுதாள். ஆனாலும் விதுரன் அந்த குழந்தை அருகே செல்லவில்லை. தன்னையும் எட்வினையும் துரத்துவதில் குறியாக இருந்தவன் கவனிக்கவில்லையென எண்ணினாள்.

   ஆனால் விதுரனோ தன்னை தாண்டி பிரகதி யாரையும் மணக்க மாட்டாள் அப்படி மணக்க போகின்றாளென்றால் காரணம் இருக்குமோயென்று மூளையை குடைந்தான்.

    தாத்தாவின் பதினாறு நாள் கழித்து படையெடுத்தான்.

   தன்வீ பிரகதி கையிலே இருக்க, மாதங்களை கணக்கெடுத்தான்.  நொடியில் தன் மகளென யூகித்தான்.

     அப்பொழுதே அழைத்து வர முடிவெடுத்தான். ஆனால் எட்வின் முகத்தில் கரிப்பூசி, அல்வா தந்து அனுப்பவே எமகாதகனின் மனம் எடுத்துரைத்தது. திருமணம் வரை எட்வினை வரவைத்து மகளை தூக்கினான்.

      எட்வினுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையாக விதுரநீதி எழுதப்பட்டது.

    தன்னிடம் தன்வீயை மறைத்த காரணத்திற்கு பிரகதிக்கு தண்டனையில்லாமலா?! அவளையும் அழ வைத்து அடுத்த பிளைட் ஏறி பதற வைத்து வரவழைத்தான். அந்த ஒரு நாள் பிரகதி மகளை எண்ணி அழுவாளென அவன் அறிந்ததே.

     கண்ணீர் வடிய துடைத்தவள் தன்வீயை அணைத்து உறங்கினாள்.

      அடுத்த நாள் காலை விதுரன் வந்து மகளை தூக்க, பிரகதி எழுந்துக் கொள்ளவில்லை.

    அழுதழுது உறங்கியிருப்பாளென அவனாகவே யூகித்து விட்டான்.

விதுரன் குளியல் அறைக்கு செல்லவும் பிரகதி குழந்தைக்கு தேவையான பாலை சூடுபடுத்த கீழே சென்றாள். குழந்தை உறங்கியிருக்க, அவளை சுற்றி தலையணை சுவராக வைத்து சென்றாள்.

       பால் சுட வைத்து எடுத்து வரும் போது கால்சட்டை மட்டும் அணிந்து விதுரன் மகளை கையில் ஏந்தி கொஞ்சிக் கொண்டிருந்தான்.

      “தன்வீ குட்டி… உனக்கு உங்கம்மா மாதிரியே மூக்கு. குட்டி மிளகாய்… டெவில் குட்டி…” என்று கொஞ்ச  பாலை டேபிளில் வைத்து அவனிடமிருந்து விளுக்கென்று குழந்தையை பிடுங்கினாள்.

     “என் குழந்தை மேல கை வைக்காதே. குழந்தையை போய் டெவில்லு சொல்லற.. ராட்சஸா..” என்று அணைத்திருக்க தன்வீயோ அன்னையிடமிருந்து தந்தையை பார்த்து சிரித்தது.

     “சரி சொல்லலை… கொடு” என்று ஆசையாய் கை நீட்ட, “என் குழந்தையை நீ தொடாதே.” என்று முகம் திருப்பினாள்.

     “ஏய்… என்ன பிரச்சனை உனக்கு. அது என் குழந்தை.” என்று வாங்க ஆரம்பிக்க அவனிடம் தராமல் இது என் குழந்தை மட்டும் தான் தரமாட்டேன்” என்று உச்சஸ்தாதியில் கத்தினாள்.

   குழந்தை தாயின் கத்தலும் தந்தையின் ஆக்ரோஷமும் கண்டு புரியாது வீறிட்டு அலற ஆரம்பித்தது.
   
     “ஏன்டி இப்படி பண்ணற. பாரு குழந்தை பயப்படுது.” என்றான்.

    “இப்ப நான் கத்தறதை பார்த்து பயப்படுது. ஆனா உன்னிடம் இருந்தா நீ செய்யற எல்லாத்துக்கும் குழந்தை பயப்படும்.” என்று கூறினாள்.

     “அப்ப நான் எப்படி குழந்தையை கொஞ்ச… என் குழந்தைகாக தான் இங்க உன்னை திரும்ப விட்டதே. இல்லை… நீ என்ன நம்பாம போனதுக்கும் தாலியை விசிறி எறிந்தததுக்கும் உன்னை இந்த வீட்ல காலடி எடுத்து வைக்க விட்டிருக்க மாட்டேன்.” என்றான்.

    “ஓ… அப்படியா… எனக்கிருக்கற கோபத்துக்கு நான் கூட இங்க வரமாட்டேன். நீ தான் வேதாளம் மாதிரி குழந்தையை தூக்கிட்டு வந்து இம்சை பண்ணற” என்றாள்.

      “இனாப் பிரகதி… நம்ம சண்டைக்கு எண்ட் கார்டு போடு. குழந்தையை கொடு” என்று நின்றவனிடம் “கொடுக்கறேன். காலையில ஒன் ஹவர் நைட் ஒன் ஹவர் நீ குழந்தையை தொடலாம் கொஞ்சலாம். அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட அதிகப்படியா என் குழந்தையை தொடக்கூடாது.” என்றாள்.

     “என்ன ரிவேன்ஜ் எடுக்கறியா… என்னிடம் மோத… உங்கம்மாவை பார்க்க விட்ட கணக்குக்கு..?” என்றான். தற்போது குரல் மாற்றம் பெற்றிருந்தது.

     “ஆமா… எங்கம்மாவிடமிருந்து என்னை பிரிச்சி ஒன் ஹவர் டைம் கொடுத்தப்ப எனக்கு எப்படியிருந்தது. உனக்கு இப்ப திருப்பி தர்றேன். அப்ப தான் அடுத்தவங்க மனசு எப்படி கொதிக்கும்னு புரியும்” என்று நடந்தவளை தடுத்தான்.

      “இங்க பாரு தடுக்கற வேலையை பார்த்த இங்க இருக்க மாட்டேன். நானும் என் குழந்தையும் போயிடுவோம். இந்த உலகத்தை விட்டே” என்றதும் விதுரன் ஸ்தம்பித்தான்.

     மேல் மூச்சு வாங்க பேசி முடித்தவளை கண்டு, டைம் சொல்லிடு” என்றான்.

     மார்னிங் செவன் டூ எயிட், நைட் எயிட் டூ நைன்” என்றாள்.

    “என்ன விளையாடறியா… செவன் டூ எயிட் பாப்பா தூங்குவானு லிண்டா சொன்னா. நைட் எயிட் டூ நைன் நான் ஆபிஸ்ல இருப்பேன்.” என்று கூறினான்.

     “அதெல்லாம் எனக்கு தெரியாது.” என்றவளை மூக்கு முட்ட முறைத்தவன்.

    “இங்க பாரு… டைம் எனக்கு செட்டாகாது. டைய்லி இரண்டு மணி நானா எந்த டைம் தோதோ அப்ப குழந்தையை தூக்கிப்பேன். கடுப்படிக்காதே… என்னை மாறுனு சொல்லிட்டு நீ தான் என்னை மாதிரி மாறிட்டு வர்ற” என்றான்.

     “இப்ப தெரியுதா… உன்னை மாதிரி மாறினாளே அவங்க அராஜகம் பண்ணறாங்கனு புரிதா. அப்படின்னா… நீ பண்ணறது எந்த லிஸ்டுனு இப்பவாது தெரிந்துக்கோ” என்றவளை நெருங்கி வந்து குழந்தையை பறித்தான்.

     “நான் அராஜகம் பண்ணாம இப்ப பேசிட்டு இருக்கறதுனால தான் நீ இப்படி நிம்மதியா இருக்க. இல்லை..  மஞ்சத்துல என்னிடம் மயங்கின பிரகதியா ஓடுங்கியிருப்ப. திரும்ப முதலிலிருந்து ஆரம்பிச்சா தாங்க மாட்ட” என்றவன் கடினம் குறைந்து குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தான்.

     “உங்கம்மாவுக்கு பழைய விதுரன் எப்படி ரியாக்ட் பண்ணுவானு மறந்துட்டா டா செல்லம். அப்பா கார்னர் பண்ண ஆரம்பிச்சா உன்னை வச்சே உங்கம்மாவை ஆட்டிப்படைப்பேனு தெரியலை. பேபி பிறந்தாலும் சின்ன பொண்ணுல…” என்று குழந்தையிடம் தாயை பற்றி கொஞ்சியவாறு பேசினான்.

    பிரகதிக்கு எரிச்சலாக இருக்க பாலை எடுத்து பருக கொடுக்க பிடுங்கி “பீடிங் பாட்டலை கொடு நானே கொடுத்துப்பேன்” என்று பாட்டிலை வாங்கிக் கொண்டான்.

     பிரகதி அங்கிருக்க பிடிக்காமல் குளிக்க சென்றாள்.

      விதுரன் அலுவலகம் செல்ல கோர்ட் அணிந்து டையை கட்டிக்கொண்டே மகளிடம் விளையாடி மகிழ்ந்தான்.

   பிரகதிக்கு தன்வீ சிரிக்கும் சப்தமெல்லாம் அத்தனை ஆனந்தம். லண்டனில் விளையாடுவாள் சிரிப்பாள் ஆனால் இது வேறொரு உறவை மேம்படுத்தியது.

     தந்தை மகள் உறவும் புனிதமானது அழகானது. என்ன தான் “டெவில் கிங்” என்று விதுரன் தன்னிடம் கெட்ட பிம்பத்தை பெற்று இமயமளவு வெறுப்பை சம்பாதித்தாலும், ‘துஷ்யந்தா’ என்ற தான் அவனை நேசித்த காலமும்

        பணியாட்கள் நிறைய பேர் அங்கும் இங்கும் தெரிய விதுரன் அமைதியாய் மாடியறைக்கு விரைந்தான்.

      அவளோ அவன் செல்லும் வரை மேலே செல்லாமல் ஆட்டம் காட்டினாள்.

     விதுரனுக்கு அது புரியாமலில்லை. கீழே வந்தவன் சாப்பிடும் நேரம் குழந்தைக்கு இட்லியை மசித்து கொண்டிருந்தவளை கண்டு, “இந்த பூனை கண்ணை கட்டிக்கிட்டா உலகம் இருட்டா தெரியும்னு சொல்லுமாம். நீ என்னை தவிர்த்தா உன்னோட வாழ்வில் நான் இல்லைனு அர்த்தமாயிடாது.
 
   இரண்டு நொடி போதுமா? இந்த சர்வெண்ட்ஸ் எல்லாம் அவுட்அவுஸ் போக வைக்க. லூசு தனமா யோசிக்காதே.

   ஏற்கனவே உன்மேல கொலை காண்டுல இருக்கேன். எட்வின் கையை பிடிக்க போயிட்டனு. என்னை சீண்டாதே. நானா ஒதுங்கி தான் இருக்கேன்.” என்றவன் கைஅலம்பி அவள் சேலை நுனியில் வாயை துடைத்து விட்டு தன்வீக்கு முத்தம் வைத்து புறப்பட்டான்.

     குழந்தையை மதியம் போல டப்பில் குளிக்க வைத்தாள். கையால் நீரை துழாவ, தன்னருகே நிழல் தென்பட நிமிராமலேயே அது விதுரன் என அறிந்தாள்.

        குழந்தைக்கு வெதுவெதுப்பான நீரில் மெதுவாக ஊற்ற, ஷாம்பு தேட விதுரன் எடுத்து நீட்டினான்.

       குழந்தைக்கு அவள் தேய்க்க அவன் நீரை ஊற்ற குழந்தை வாத்து பொம்மையை கையில் வைத்து விளையாடியபடி இருந்தாள்.

        “குழந்தையை சீக்கிரம் குளிப்பாட்டி டிரஸ் மாத்தி ரெடி பண்ணு. கோமதி சித்தி குழந்தையையும் உன்னையும் பார்க்கணும்னு சொன்னாங்க. வந்துட்டு இருக்காங்க.” என்று தகவலை கூறிவிட்டு நகர்ந்தான்.

     சுடிதார் அணிந்து குழந்தைக்கு உடைமாற்றி வந்தவள் கீழே வந்த கணம் யுகன் கோமதியின் அருகே அமர்ந்திருக்க, சசி விதுரன் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

     பிரகதி வந்ததும் இயல்பாய் குழந்தையை வாங்கி மடியில் வைத்து கொஞ்சி யுகனிடம் காட்டி “தன்வீ பாப்பாடா. அப்பாவுக்கு விதுரன் தம்பி மாதிரி, உனக்கு தன்வீ தங்கச்சி. குட்டி பாப்பா எப்படியிருக்கா?” என்று குழந்தையை வருடி கைபிடித்து நின்ற யுகனிடம் கேட்க, “விதுரன் சித்தப்பா மாதிரி இருக்கா” என்று குதுகலித்தான்.

     “ஆமா டா குட்டி சித்தப்பா மாதிரியே புருவம்.” என்று குழந்தையின் புருவத்தை வருடினான்.

     “ஏன் உங்க சாயலுக்கு பதிலா என்னோடதா மட்டும் இருந்தா சந்தேகம் வந்திருக்குமோ?” என்றாள் பிரகதி.

    யுகன் புரியாமல் விழிக்க விதுரன் பற்கடிக்கும் சப்தம் ஹாலில் தெளிவாய் கேட்டது.

     “உங்க சண்டையை குழந்தை வச்சிட்டு போடாதிங்க.

   ஏன் மா… ஒர் வார்த்தை எங்களிடம் சொல்ல என்ன? உனக்கு அம்மா பத்மாவதி மட்டும் தானா? இந்த வீட்ல ஒரு பொண்ணு நானும் இருக்கேன். பெரியவங்கனு ஒரு பேச்சுக்கு சொல்லிட்டு போயிருக்கலாம். பேசி தீராத பிரச்சனை ஏதாவது இருக்கா.? எனக்கு வந்த மருமகள் தான் காது கொடுத்து கேட்க மாட்டா.

   பிரகதி… உன்னிடம் இதை எதிர்பார்க்கலை. உன்னை முதல் முறை பார்த்தப்ப இப்படி எனக்கு வீட்டுக்கு வந்தவங்களை உபசரிக்கற மருமக கிடைக்கலையேனு பீல் பண்ணிருக்கேன்.” என்று வீட்டுக்கு பெரியவராய் கோபத்தோடு உரிமையாய் கேட்டார்.

    பேச வச்சிட்டு வேடிக்கை பார்க்கறான் பாரு. சித்தி ஒரு கொலை பண்ணினேன். பிரகதி பார்த்தா. அப்பறம் எப்படி என்னோட வாழ்வானு சொல்ல வேண்டியது தானே. இடும்பா… என்று மனதில் விதுரனை வைதாள்.

     “சித்தி இவளை மாதிரி மருமகளா… நல்லா எதிர்பார்த்திங்க போங்க. பிறகு கத்திய வச்சி நைட்டு போட்டு தள்ளிடுவா. நானாவது நம்ம வீட்ல இருந்து நாலு உசுரு போச்சேனு ரீஸன் வச்சிருந்தேன். இவ இங்கிருந்து போக முடியலைனு கூட கத்தியால குத்துவா. டெவில் குயின் சித்தி.” என்றான்.
  
    இவன் என்ன சொல்லறான். நாலு உசுரா? என்று குழம்பினாள்.

     “பழசை பேசாதே டா. கசக்க தான் செய்யும். குழந்தை வந்துடுச்சு. சண்டையை மூட்ட கட்டிட்டு நிம்மதியா வாழுங்க. உங்க ஜோடியாவது நிலைச்சு இருக்கணும். இவனுக்கு தான் அந்த கொடுப்பினை இல்லை.” என்று கண் கலங்கினார்.

    சசியோ எதுவும் பேசாமல் எழுந்து வெளியேறினான்.

    “ஏன் சித்தி அவன் இருக்கறப்ப இப்படி பேசறிங்க. எத்தனை முறை சொல்ல. இதுல அவன் தப்பென்ன?” என்று கேட்டான் விதுரன்.

     “போடா… திக்குவாயா இருந்தாலும் நீ நான் பொண்ணு கொடுக்க வந்தவங்களை விட்டுட்டு அப்ப என்ன பேசினான். எனக்கு யாரையும் பிடிக்கலைனு சொன்னான். அப்பவே என் பேச்சை கேட்டிருந்தா ஒரு பிள்ளைய பார்த்து நம்ம தூரத்து சொந்தத்தில கட்டியிருப்பேன்.

     இவனா பேங்க்ல பார்த்தேனு சொல்ல, போதாத குறைக்கு அவளை கட்டாய கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்த, இப்ப பிள்ளைய பெத்துட்டு குடி டிரக்ஸ்னு போய் இறந்துட்டா. யுகனை வச்சிட்டு நான் இல்ல தவிக்கறேன். என் வயசு எப்ப வேண்டுமென்றாலும் உசுரு போகும். குழந்தை வச்சிட்டு தனியா கஷ்டப்படணுமா?” என்று அழுதார்.

     “சித்தி என்னயிது அழுவறிங்க. அவனை ஹர்ட் பண்ணறதே நீங்க தான். எப்ப பாரு குறையை சுட்டிக்காட்டி பேசிட்டு இருக்கிங்க. வந்த மருமகளிடம் இரண்டு அதட்டு போட்டு பேச தெரியலை.” என்றதும் பிரகதி நிமிர்ந்தாள்.

    அவளை கண்டுக்காது, “மோட்டிவேஷனா பேசி அவனை சியர் அப் பண்ணி தூக்கி விடணும் சித்தி அதை விட்டு நீங்களே…

    எனக்கு தான் வீட்ல இருந்து அதட்டி பேச யாருமில்லை. அநாதையா சுத்திட்டு இருக்கேன். அவனுக்கு என்ன சித்தி நீங்க இருக்கிங்க.
  அவனிடம் நான் பேசறேன். இப்ப ப்ரீயா விடுங்க” என்றதும் கண்ணை துடைத்தார்.

   “ஏதோ நீ இருக்கற தைரியம் தான் என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க வைக்குது. இல்லை… என்ன துவண்டிருப்பேனோ. சரி மருகளே… உன்னையும் குழந்தையும் பார்க்க தான் வந்தேன். திருப்தியா இருக்கு. வீட்டுக்கு வா. யுகனுக்கும் தன்வீயோட விளையாட நேரம் போகும். உனக்கும் பொழுது போகும்.” என்று பேச இன்முகமாய் மாற கடினப்பட்டு இருந்தாள்.

    விதுரன் பொசுக்கென ‘அநாதையா சுத்திட்டு இருக்கேன்’ என்ற வார்த்தை அவளை வட்டமிட்டு வாட்டியது.

      அவனுக்கு மனைவி மகள் என்ற இருவர் இருக்கின்றோமே என்று நொடியில் வந்து சென்றது. அடுத்த நொடி அவன் நிழலும் மகளின் மேல் படாமல் இருக்க தானே எட்வினை மணக்க திருமண உடை அணிந்து சர்ச் வரை சென்று விட்டாய் என்றது மனம்.

    விதுரனுக்கு எப்படியிருக்குமோ?

     “டெவில் குயின். சித்தி பை சொன்னாங்க” என்றதும் சாரி அத்தை வேற நினைவில் இருந்துட்டேன். கண்டிப்பா வர்றேன். நீங்களும் யுகனை கூட்டிட்டு வாங்க.” என்றாள்.

     அவர்கள் சென்றதும் பின்னாலேயே விதுரனும் சென்று விட்டான்.

     பிரகதிக்கு தன்வீயை வைத்து வீட்டை அலசினாள்.

       திருமண புகைப்படம் அப்படியே இருக்க வருடினாள்.

     அவள் இருந்த நிலைக்கு மென்னகைக்கவில்லை. ஆனால் விதுரன் முகமலர்ச்சி ஈர்த்திருந்தது.

       எல்லாம் மறந்து வாழவும் முடியவில்லை. இனி இவனை விட்டு செல்லவும் விடமாட்டான். இந்த இடைப்பட்ட நாட்களில் தான் மாறுவோமா? என்ற எண்ணங்கள் மனிதலேயே அரைப்பட்டது.

      விதுரன் இரவு வந்த பொழுது குழந்தையை வாங்கிக் கொண்டான்.

     அவனிடம் வீம்பு செய்யவில்லை. அவன் அத்தையிடம் பேசிய பொழுது  நாலு உசிரு போச்சேன் சொன்னானே… என்னவா இருக்கும்? ஒரு கொலையை பண்ணியிருக்கான். அதை சாமர்த்தியமா வேற யாரோ செய்ததா சரண்டர் ஆகிட்டாங்க.

   என்னயிருந்தும் கொலை செய்தது தப்பில்லையா? என்று மனதில் உழன்றது.

    ஆனால் முகம் காட்டினால் தானே? அவனுக்கு அவன் குழந்தை போதும் என்பதாக அவளை மட்டும் தாங்கினான்.

     தன்னை ஒரு பொருட்டாகவே அறையில் மதிக்கவில்லை. இரண்டு நாள் இப்படியே கழியவும் மனம் வெதும்பினாள்.

      அன்று இரவு தாமதமாக வரவும் மதுவை நாடியதை கண்டு கோபமாக குழந்தையை கொடுக்காமல் விடுத்தாள்.
   
     “ஓ… மேடம் டிரிங்க்ஸ் அடிச்சிருந்தா குழந்தையை கொடுக்க மாட்டிங்க சரிதான்.” என்றவன் மாடிபடியில் இரண்டு இரண்டு படியாய் தாவினான்.

     சாப்பிடாமல் உறங்குவது அவளுக்கு சங்கடம் கொடுத்தது. ஆனால் அவனிடம் கேட்டால் இது தான் சாக்கென்று தன்னை ஆட்சி செய்ய எண்ணலாம்  அவன் நிலையில் அவன் இறங்காமல் இருக்க தானும் இறங்க போவதில்லை என்று வீம்பு பிடித்தாள்.
   
இது வீம்பு என்றும் கூறிடயியலாது. ஒரு உயிரை தன் கணவன் கொன்றதை கண்ட நிலை மாறாமல் ஆட்டிப் படைப்பதன் நிலை.

      அவனை தான் புரிந்துக் கொள்ளவில்லையா? என்றதை விட இது விதுரநீதி இவனை மாற்ற இயலாது என்ற அச்சமே அவளை படுத்தியது.

     அறைக்குள் வந்து உறங்க அவனோ நேற்று போலவே மெத்தையை ஆக்கிரமித்து இருந்தான்.

    குழந்தை அதற்கான கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்.

     குழந்தை மெத்தையை தன்னருகே நகர்த்தி மெத்தையின் இடது பக்கம் உறங்க முயன்றாள்.

   சற்று நேரம் கடந்திருக்க இடையில் விதுரன் கைகள் படர்ந்தது.

     விதுரன் மயக்கத்தோடு உறக்கத்திலிருக்க, ‘டெவில் குயின்’ என்னை விட்டு போகாத்…” என்றவன் இடையை இறுக்கினான்.

     பிரகதிக்கு மூச்சு முட்டியது. இது அவன்… தன் துஷ்யந்தன்… தன்னை தேடி இந்த அறையில் தன்னை மட்டும் நேசித்து தன்னையே சுற்றி வருபவன்.

    அணைக்கவோ, தள்ளி நிறுத்தவோ இரண்டும் முரண்பாடாய் தவிக்க இமை மூடி அப்படியே விரைத்தாள்.

    விதுரன் மட்டும் பிடி விடாமல் அணைத்திருந்தான் காலை வரை.

    எழுந்ததும் இவன் தான் திட்டுவோம் என்று திணற போகின்றான் என்று இமை திறந்தவாறு அவனின் பதட்டத்தை இரசிக்க காத்திருந்தாள்.

    ஆனால் எழுந்தவனின் செய்கையோ அதற்கு நேர்மாறாக இருந்தது.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-37”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *