Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-38

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-38

துஷ்யந்தா-38

      கண்ணை கசக்கி ”குட்மார்னிங் டெ” என்றவன் விறிட்டென எழுந்தான்.
    
    ஏதோ தீயை மித்திதவன் போல போர்வையை உதறி முகம் திருப்பி குளியலறைக்கு சென்றான்.

   நொடிகளும் தாமதிக்காது அலுவலகமும் கிளம்பினான்.

   டை அணிந்துக் கொண்டே, “எனக்கு தேவை என் குழந்தை மட்டும் தான். என்னை அவமதிச்சு போன என் எக்ஸ் ஓய்ப் இல்லை. நானா தப்பா நடந்தா என்னை இந்த கத்தியால குத்திடு” என்று முன்பு அவள் குத்திய கத்தியை எடுத்து மேஜையருகே வைத்து விட்டு தன்வீக்கு மட்டும் முத்தமிட்டு வெளியேறியிருந்தான்.

      பிரகதி முன்பு வெட்கம் கெட்டு அவனோடு உறவாடியது கூட அவமானமாக உணரவில்லை. வெட்கமும் தயக்கமுமாக உணர்ந்தாள். இன்று ஏனோ அவமானமாக பதிவானது.

   அவனை அவமதித்து போனதாக குற்றம் சாட்டுகின்றான். எத்தனை முறை அடுத்தவர்களை காயப்படுத்தாதே என்று வாதாடி தோற்று இவன் செவிக் கொடுக்காமல் போனதன் விளைவு, தான் தனது முடிவை தேடி ஓடியது.

   உண்மை தான் குழந்தையை பற்றி மூச்சு விடவில்லை. கடைசி நாளில் அந்த விவாகரத்து பத்திரத்தோடு தனது ஒப்பந்த கடிதத்தில் அந்த விதியை பார்க்காமல் இருந்தால் சொல்லியிருப்பாள்.
     அவன் தான் இந்த இடைப்பட்ட நாளில் கருத்தரித்தால் குழந்தையை பெற்று கொடுத்து என்னோடு இருக்க வேண்டும் என்று விதுரநீதி இயற்றினானே. 

    அது தானே கூறயியலாது தவிர்த்தாள்.

   வெறும் ஒப்பந்தப்படி அவள் ஒன்றும் இணையவில்லையே. அவன் கூறிய விதத்தில் யோசித்து அவனை பிடித்து தானே விரும்பினாள். விரும்பிய கணம் கரு உருவாகாமல் தவிர்க்க மாத்திரையை அவள் தேடவில்லை. ஏன் அதை அவள் யோசிக்கவேயில்லை. காலம் முழுக்க வாழ ஆசைக் கொண்டவனிடம் குழந்தை உருவாகிடுமோ என்று பயப்படவில்லை.

   தவறென இட்டுக்கட்டினால் அது எட்வினை மணக்க ஒப்புதல் அளித்ததே. அதுக்கூட குழந்தையோடு தனியாக நான் என்று இருந்தால் விதுரன் கண்டறிந்திடுவான் என்றல்லவா எட்வினை மணக்க சம்மதித்தேன். விதுரன் பார்வைக்கு எட்வினை மணந்து அவன் கு..” நெஞ்சடைத்தது அவளுக்கு.

    முன்பு இலகுவாக எண்ண வைத்து விதுரனிடம் தப்பிக்க முடிவெடுத்தவை. ஆனால் இன்று அவளுக்கே குமட்டியது. அப்படியென்றால்… விதுரனுக்கு…

  அவனின் கோபம் கூட நியாயம் என்று புரிகிறது. ஏற்க முடியவில்லையே…

     குழந்தையை விதுரனிடம் கொடுக்க கூடாதென முடிவெடுத்தாள் அவளே தனித்து நின்றிருக்கலாம். அவனிடம் சண்டிராணியாக நிற்க தெரியாதவளா?

    தெரிந்து இரண்டு கொலை. மூன்று சாபம் தெரியாமல் எத்தனையோ..? அதெல்லாம் பிள்ளையை தீண்ட கூடாதென எண்ணினாள். தற்போது அவளுக்கு மனம் சமாதானம் அடையவில்லை.

     திமிரோடு நடந்தாலும் உனக்கு மேல் நான் திமிர் பிடித்தவளென காட்டலாம். அவன் நியாயவாதியாக விதுரநீதி இயற்றினான். பெண்ணவளும் நியாயவாதியே… மனம் துவள்கின்றதே.

   மனம் வீட்டிலேயே அடைந்திட மனழுத்தமும் அடைத்தது.

   தனக்கென யாருமில்லாத பொழுது எங்கே செல்வாள்?
   போன முறை ஆதித்யா தாத்தா இருந்தார். அவரோடு பேச ஆசையாக இருந்தது. இம்முறை அவரும் இல்லை. அவர் இருந்திருக்கலாம் தன் மன வேதனையை கூறவாது.

    இன்பா மனைவி வளைகாப்பு பிறகு உயிர் நீத்துவிட்டாரே. இன்பா மனைவி அஞ்சலி வளைகாப்பு… இந்நேரம் குழந்தை பிறந்திருக்குமே. ஓரேட்டு பார்த்து வந்தாலென்ன?இன்பா விதுரனின் அலுவலகத்தில் இருக்கும் பொழுது பேசினால் கோபம் கொள்ள மாட்டானென கிளம்பினாள்.
 
    குழந்தைக்கு நகை ஒன்றை வாங்கினாள்.
     இன்பாவுக்கு அழைத்து அஞ்சலி எங்கே இருக்கின்றாளென கேட்க எண்ணினாள். ஆனால் அவனுக்கு தெரிந்திடும். இன்பதிர்ச்சி கொடுக்கயியலாது. அப்பொழுது தான் சௌமியாவுக்கு அழைத்தாள்.
  
     “ஹாய் அக்கா… வீட்ல தான் இருக்கேன். அண்ணி எங்க வீட்ல தான் இருக்காங்க. அண்ணி வீட்ல அவங்கப்பா மட்டும் தான். அதனால குழந்தை வச்சி கஷ்டப்படுவாங்கனு அம்மாவையே பார்த்துக்க சொன்னாங்க.” என்று கூறினாள்.

    “ஓகே ஓகே வர்றேன். அஞ்சலியிடம் சொல்லாதே.” என்று புறப்பட்டாள். 
    
    பிரகதி இன்பா வீட்டில் நுழையும் நேரம் இன்பாவின் அம்மா விஜயலட்சுமி வரவேற்றார்.

    “வாம்மா… சௌமியா கொஞ்ச நேரம் முன்ன சொன்னா. அதுக்குள்ள வந்துட்டிங்க. வீடு போட்டது போட்டபடியிருக்கு” என்று அழைத்தார்.

    “சொல்லிட்டாளா… வீடுனா அப்படி தான அம்மா இருக்கும்.” என்று பழங்களை நீட்டினாள்.
  
      அஞ்சலி தூங்கிட்டு இருக்கா. சௌமி எழுப்பு” என்று அவசரப்படுத்த, “அம்மா… இருக்கட்டும். குழந்தை பெற்ற உடல் ஓய்வு தேவைப்படும்.” என்றதும் சௌமி பிரகதி அருகே அமர்ந்தாள்.

    “அக்கா பாப்பா பேரு என்ன?” என்று சௌமி தூக்கி கேட்டாள்.

     “தன்வீ” என்றாள்.

    “அர்த்தம் அக்கா. காரணமில்லாம வைக்கமாட்டிங்களே.” என்று சௌமி கேட்டாள்.

      “தன்வீ னா… அழகான உருவமும் இளகிய மனமும் செயலில் பாந்தமும் இருக்கறவங்க.” என்றவள் இளகிய மனம் இருக்க வைத்ததாக கூறவும் “அண்ணியும் அண்ணாவும் கூட பெயர் தேடிட்டு இருக்காங்க.” என்றாள் சௌமியா.

     “அக்கா.. போன முறை வந்தப்ப பாப்பா இருந்ததை சொல்லவேயில்லையே… போங்கக்கா.” என்று கொஞ்சிக் கொண்டே கோபித்து கேட்டாள்.
 
     “என் நிலைமை அப்படி சௌமி.” என்று கூறிய நேரம் அஞ்சலி விழித்து குழந்தையை தூக்கி வந்தாள்.

    “வாங்க… நீங்க வருவிங்கனு அவர் சொல்லலையே…” என்று வந்து பேச, பிரகதி அஞ்சலி குழந்தையை வாங்கி அக்குழந்தைக்கு செயின் அணிவித்து மகிழ்ந்தாள்.

     “நான் வந்தது இன்பாவுக்கே தெரியாது.” என்றவள் சிறிது நேரம் பேசினாள்.

   மதிய உணவு அங்கே தான் உண்டாள். தன்வீ கொஞ்ச நேரம் உறங்கவும் நேரம் போனது.
 
    தன்வீயை அழைத்து சௌமி மாடியில் வேடிக்கை காட்ட சென்றிருந்த நேரம் “சௌமியாவுக்கு இப்ப எப்படி? லாஸ்டா டெஸ்ட் ரிசல்ட் சொன்னிங்க?” என்றாள்.

      “அது வாய்ப்பு இருக்கு. ஆனா முன் வந்து கல்யாணம் பண்ண யாரும் வரமாட்டறாங்க. தெரிந்தே எப்படி? தயக்கம் காட்ட தானே செய்வாங்க. எல்லாரும் எதிர்பார்க்கறது குழந்தையை தானே. சௌமி கல்யாணமே வேண்டாம். வேலைப் பார்த்து என்னை நானே கவனிச்சிப்பேன். என்னை நிம்மதியா இருக்க விடுங்க போதும்னு சொல்லறா. என்ன முடிவெடுக்கனு அவருக்கு தெரியலை. இரண்டு மாதம் போகட்டும்னு இருக்கோம். குழந்தை பிறந்த நேரம் அத்தைக்கு ஒரு கல்யாண நேரம் அமைச்சி தருவா” என்று அஞ்சலி பேச பிரகதி உதட்டில் புன்னகைக்க முயன்று தோற்றாள்.

     திருமணம் என்பதே குழந்தையை மையப்படுத்தி தானா? என்ற எரிச்சல் மேலோங்கியது.

    பிறக்காதவர்களுக்கு என்ன செய்வார்கள். அவர்களும் வாழ நல்லிதயம் கொண்டவன் வரமாட்டானா என்ன? திருமணமாகியப் பின் அறிந்தால் ஏற்றுப்பார். மனைவியின் மனம் புரிந்து. திருமணம் ஆகும் முன் ஏற்பது கடினம் தானே என்று நிதர்சனம் பறைச்சாற்றியது.

   ரொம்ப நேரமாச்சு… நான் கிளம்பறேன். அஞ்சலி உடம்பை பார்த்துக்கோங்க. வர்றேன்… சௌமியா போயிட்டு வர்றேன்” என்றாள்.

    விஜயலட்சுமி வழியனுப்பி அடிக்கடி வந்து போக கூறினார். இன்பாவுக்கு நல்ல தோழியாக என்றும் வரணும்.” என்ற கோரிக்கையோடு.
 
   “எனக்கு யாரிருக்க. கண்டிப்பா வருவேன்” என்று பத்மாவதி வயது கொண்ட விஜயலட்சுமியிடம் ஆசி பெற்று கிளம்பினாள்.

   சௌமியா வாசல் வரை வந்து தயங்கினாள்

     “அக்கா.. ஒரு உதவி. உங்களிடம் கேட்க கூடாதுனு தான் நினைச்சேன். பட் என்னால அண்ணாவுக்கு பாரமாவோ அம்மாவுக்கு கஷ்டம் கொடுத்தோ இருக்க முடியலை. அண்ணி சொல்லிருப்பாங்க.

  எனக்கு இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம். சுயமா நிற்க ஒரு வேலை போதும். முடிஞ்சவரை அண்ணா கூட இருக்கேன். முடியாதப்ப ஓர்கிங் ஹாஸ்டல் பார்த்துப்பேன். என்னையே நான் பார்த்துக்க ஒரு வேலை மட்டும் வாங்கி தர்றிங்களா. அண்ணாவுக்கு நல்ல சம்பளம் தான் ஆனாலும் எனக்குனு ஒன்னு வேண்டும். நான் அகவுண்ட்ஸ் முடிச்சிருக்கேன். டேலி பார்ப்பேன்.” என்றாள்.

    “அடுத்த முறை வேலை கையில இருக்கும்.” என்று வாக்கு கொடுத்து புறப்பட்டாள்.

     வீட்டுக்கு வந்த பொழுது விதுரன் கால் மேல் கால் போட்டு கைகளை இரண்டு பக்கமும் சோபாவுக்கு தோள் கொடுத்தது போல நீட்டியிருந்தான்.

      அவனின் சிவப்பேறிய கண்கள் கோபத்தை பறைச்சாற்றியது. ஒளிவிளக்குகள் பாதிக்கு மேல் அணைந்திருக்க வீட்டில் யாருமில்லையெனவும் உறுதிப்படுத்தியது.

     முதலில் ஒளிவிளக்கை ஒளிரச் செய்தாள். குழந்தையை சோபாவில் வைத்து விட்டு காபி போட சென்றாள்.

    குழந்தையை தூக்காமல் ஒரேயிடத்தில் வெறித்தவனை கண்டு உள்ளுக்குள் லேசாய் பதறியது. ஆனாலும் அவனுக்கே பாவம் செய்தவை எண்ணி குற்றவுணர்வின்றி இருக்க தான்  மட்டும் ஏன் அஞ்ச வேண்டும். பிரகதி எப்பொழுதும் போல இரு.’ என்று காபி போட்டு அவனிடம் நீட்டினாள்.

    அவனோ கொதிகலனோடு நிமிர, “எனக்கு ஒரு வேலை வேண்டும்” என்றதும் காபி கோப்பையை தட்டி விட்டான்.
 
   அது சோபா முழுவதும் சிதறியது.

   “என்ன தான் பிரச்சனை உனக்கு. உன் குழந்தை வந்தாச்சு. தப்போ சரியோ நானும் இருக்கேன். என்ன கோபம். இங்க பாரு… நானும் மன்னிக்க முடியாத தப்பு செய்தேன். ஆனா அது உன்னை மட்டும் காயப்படுத்தும். ஆனா நீ செய்யறது மற்றவர்களை.

   உன்னை காயப்படுத்த எனக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு. நீ காபி தட்டி விட்ட நான்.. நான்… ம்ம்… டிவியை தள்ளி தட்டி விடுவேன். இல்லை… சோபாவை மான்ஸ்டர் படத்துல வர்ற மாதிரி எரிச்சிடுவேன்.” என்று கத்தி முடித்தாள்.

      அவளின் பேச்சும், முகபாவணையும் அவனுக்கு முறுவல் தோற்றுவிக்க, கோபம் தளர்ந்தவனாய் இருந்தான். வெளியே பார்க்க அதே சினத்தை காட்டினான்.

   “வேலைக்கு நீ போக வேண்டாம். வர்றதா இருந்தா என் கம்பெனி… ஆனா நீ அங்க வேண்டாம். அங்க வந்த மாடில செத்தவனை பத்தி பேசி பேசி என்னை மாடிலருந்து குதிக்க வச்சிடுவ. ரிப்பீட்டட் வோர்ட்ஸ் சொல்லி கொல்லுவ.” என்றான்.

     “வேலை எனக்குனு சொன்னேனா.. சௌமியாவுக்கு.” என்றாள்.

     “சௌ…. மியா?” என்றவன் புருவமுடிச்சோடு அவள் பக்கம் திரும்பினான்.

    “ம்ம்…” என்றாள்.

    “குண்டு தக்காளி மாதிரி கொஞ்சம் பூசின உடம்பு, இடுப்பு வரை ஹேர் பின்னி, ஏதோவொரு பிங்க் க்ளிப் டிசைன் கூட… ஆஹ்… மயில் டிசைன்.

   கண்ணு கூட காஜோல் போடாம என்னை பார்த்து அக்கா… என்று பம்மிட்டு பயந்துச்சு அந்த பொண்ணா… சரியாவே பார்க்கலை. அவளுக்கு எதுக்கு?” என்றான் கேஷுவலாக.
    
   பிரகதியோ கையிலிருந்த காபியை அவன் மேலே கொட்டும் அளவிற்கு சினமெனும் லாவா வெடிக்க தயாராகியிருந்தது.

    இது அவளுக்கான வேலையல்ல. அதனால் பொறுத்து பற்கலை கடித்து “அவளே தான்.” என்றாள். 

    ‘நல்லா க்ளிப் டிசைன் அளவுக்கு சொல்லிட்டு சரியா பார்க்கலையாம். முகற கட்டைய பாரு. எல்லாம் ஒய்ப் இல்லைனா தாடி வச்சி தேவதாஸ் ஆவாங்க. இவன் மட்டும் க்ளின் சேவ்டுல சுத்துவான்.’ என்று முனங்கினாள்.

     அவள் முனங்கல் காதில் கேட்டாலும் யோசனை செய்தவன் “இப்பத்திக்கு வேலை எடுக்கலை. ஆனா நீ ரொம்ப கெஞ்சி கேட்கறதால ஒரு வேலையை உருவாக்கி தர்றேன்.

     ‘அடப்பாவி நான் கெஞ்சினேனா?’ என்ற லுக்கை விட்டாள்.

   ஏற்கனவே நீ பார்த்தது தான் செகரட்ரி ஒர்க். வந்து பார்க்க சொல்லு. பெரிசா நாலேட்ஜ் இருக்க வேண்டாம். கண்ணுக்கு குளிர்ச்சியா பொம்ம மாதிரி இருந்தா போதும். உனக்கு கொடுத்த அதே ரூல்ஸ் தான் சேரி கட்டணும்.” என்றான்.

     பிரகதிக்கு எரிச்சல் அதிகமானது. எப்ப பாரு பொம்மை மெஷின் நான் என்ன அலங்கார பொருளா? என்று.
   
      “ஆக்சுவலி ரொம்ப கோபத்துல இருந்தேன். மச் பெட்டர். நியூ பேஸ். எனக்கு எண்டர்டெயின்மெண்டா இருக்கும்.” என்று குழந்தையை எடுத்து கொண்டு மாடியில் இருக்கும் தங்கள் அறைக்கு சென்றான்.

     பிரகதியோ ஹாலில் நடையோ நடை நடந்து, ‘எதுக்கு கோபமா இருந்தான். சௌமிய இவனுக்கு வேலை பார்க்க அனுப்பலாமா? இவன் பேச்சே தினுசா இருக்கு.
  
     இவன் கற்சிலை தான். ஆனா என்னையே மயக்கின துஷ்யந்தன். பாவம் சின்ன பொண்ணு இவனோட ‘நீங்க நல்லவனா கெட்டவனா’ என்ற டிபரண்ட் பேஸை பார்த்து பயந்துட்டா. ஏற்கனவே மாடில போய் கழுத்தை அறுத்தான். இந்த மாடினாலே பக்குனு இருக்கு.’ என்றவளின் மனம் தங்களின் மாடியை எண்ணி சிந்தனை ஓடியது.

   இங்கிருந்த பொழுது ஒப்பந்தமிட்ட இரண்டு மாதமும் மாடியில் தான் அவனும் அவளும் உறங்கியது.

    குளிர் காற்று உடலை சில்லிட வைத்தாலும் பிரகதி போர்வையாய் போர்த்தி அணைத்திருந்தது அவனை தான்.

    அந்த நாட்கள் மட்டும் வாழ்வில் இருந்துவிட்டு, அலுவலக மாடி இன்சிடெண்ட் தன் வாழ்விலிருந்து யாரேனும் எடுத்திட்டால்(காலமும் கடந்து போவோம் வா-அதர்வாகிட்ட டைம் டிராவல் இருக்கு வேணுமா😜) மகிழ்ச்சியாய் இருப்பாள்.

    அப்படியொரு மாயம் நடக்காதவொன்று. ஆனால் நல்ல நல்ல இனிய நினைவை மீட்டெடுக்கலாம்.

      குழந்தைக்கு பால் சாதம் கலந்து தங்களறைக்கு வந்து நின்றாள்.

       நிலா கதையை கூறி ஜன்னல் வழியே காட்டி ஊட்டினாள்.

    குழந்தை உணவை மறுத்து தட்டிவிட, “ஹலோ… ஒரு ஹெல்ப்” என்றாள்.

     என்ன என்பதாய் ஒர் பார்வை வைத்தான்.

   “குழந்தை சாப்பிடலை. நிலா காட்டினா சாப்பிடுவா. இங்க நிலா சரியா தெரியலை.” என்றாள்.

    “அதுக்கு…. ஸ்பேஸ்ஷிப் வாங்கி தரணுமா…?” என்றான் இடக்காக.

     “நீ ஒரு ஆணியும் வாங்காதே… மாடிக்கு போகலாம்.” என்றாள். கடைசி வாக்கியம் பேசும் போது குரல் உள்ளுக்குள் சென்றது.

      “போ..” என்றான் மொட்டையாக.

   “குழந்தையை யார் பிடிச்சிப்பா. நான் சாப்பாடு ஊட்டுவேன். தண்ணி யார் கையில வச்சிப்பா. இங்க இருக்கறவங்களை ஈவினிங் ஆனா அவுட் அவுஸ்க்கு பேக் பண்ணிடற” என்று அடக்கினாள்.

     குழந்தையை தூக்கி கொண்ட விதுரன் “வந்து தொலை” என்று முன் சென்றான்.

    ”லண்டனில் இதெல்லாம் தனியா தானே பண்ணினா. இங்க என்னவாம்” என்று சத்தமாகவே முனங்கினான்.

     “பாப்பா கட்டிலில் உட்கார்ந்தா விளையாடிட்டே பார்ப்பா. இந்த ரும்ல கட்டில்?” என்றவள் விதுரன் முறைப்பில் வாயை மூடினாள்.

      அதிகம் எதிர்பார்க்கிறோமோ… நாமளா போயிட்டு நாமளா..  எதிர்பார்த்தா கேவலமா தான் லுக் விடுவான்.’ என்று அசட்டு தனமாய் தன்னையே நொந்து மாடிக்கு ஏறினாள்.

       மாடியில் அதே கட்டில் அதே திரைசீலை, கூடாரமாக மாற்றியிருந்தான். மழை வெயிலுக்கு கட்டில் மெத்தை பாழாகாமல் பாதுகாத்தான் எனலாம்.

     கூடாரம் போன்றதில் சில ஸ்விட்ச்சை தட்டவும் வானம் அழகாய் தெரிந்தது. கூடாரமாக தேவைக்கு ஏற்ப மாட்டிக்கும் விதமாக அமைத்திருந்தான்.

       “கட்டிலில் தூசி இருக்க போகுது.” என்று பிரகதி கூற, “தினமும் இங்க வருவேன். யூஸ் பண்ணிட்டே இருக்கற இடம் தான். நீட்டா தான் வச்சிப்பேன்.” என்று பதில் தந்தான்.
   
   அந்த பதிலில் கோபம் இருந்ததா… சோகம் இருந்ததா.. பரிதவிப்பா… இனிய நினைவூட்டலா.. வகைத்தறியாத சொல்லாடலாக பேசியிருந்தான்.
 
     மெத்தையில் மகளை அமர்த்தி நிலா காட்டி உணவூட்ட, மழலையில் நிலாவை பார்த்து கண்களை உருட்டி விளையாட்டு மூடோடு சாப்பிட்டாள். நீரை புகட்டி (bib)பிப்பை அகற்றினாள்.

     தோளில் போட்டு தட்டிக் கொண்டே நடந்தாள்.

    விதுரன் மெத்தையில் தலையணையை முதுகுக்கு ஒட்டு கொடுத்து அமர்ந்து இமை மூடியிருந்தான்.

    பழைய நினைவுகள் அவனை வாட்டியது. விதுரன் முகம் ஏதோ வேதனையை தாங்கியிருக்க பிரகதி, “கஷ்டமாயிருக்கும்… கீழே போயிடலாம்” என்றாள்.

    இமை திறவாமலேயே… “கஷ்டம் எல்லாம் இல்லை. இங்க தான் என் கற்பு போச்சேனு பீல் பண்ணிட்டு இருக்கேன்” என்றான்.

    “என்னது..?” என்று பிரகதி முழிக்க, “பின்ன என்னோட கற்பு தான் போச்சு. அதோட பலன் தான் என் குழந்தை உதிச்சது. அப்படி பார்த்தா என் கற்பு தான் போனது. ஏன் ஆண்களுக்கு கற்பு இல்லையா… எங்களுக்கும் கற்பு வெட்கம் மென்மை இருக்குமா” என்று போக்கிரி விஜய் போல கூறி எழுந்து கீழே சென்றான்.

    பிரகதி மகளை வைத்து சிரித்து விட்டாள்.

      அவன் இங்கிருந்தால் இதேயிடத்தில் உறங்கியிருப்பாளோ என்னவோ. தற்போது தனியாக மாடியில் இருக்க பயந்து கீழே ஓடினாள்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

5 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-38”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *