Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-44

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-44

துஷ்யந்தா-44

இன்பா ஒரு நொடியில் விதுரனின் அவதாரம் கண்டு பின் நகர, விதுரனோ கூலாக சௌமி அருகே வந்து, “உங்க அண்ணா சொல்லறது கரெக்ட். பணக்காரங்க பிரைன் வாஷ் பண்ணிடுவாங்க.

நான் இங்க வந்தது என் சுயநலத்தில் தான். அதை மறைக்க எனக்கு அவசியமில்லை. என்னால உங்க அண்ணனை அடைச்சி என் விருப்பபடி இதுக்கு முன்ன சசிக்கு கல்யாணம் நடத்தினேன். இப்பவும் உன்னை கடத்தி கூட்டிட்டு போய் அடைச்சி திருமணம் பண்ணி வைக்க முடியும்.

பட் தீபிகா சம்மதிச்சு ஏமாற்ற பார்த்தா அதனால என் விதுரநீதி சரினு சொல்லுச்சு. ஆனா நீ அப்படியில்லை.

திருமண வாழ்வு என்பது கட்டாயத்துல வந்து கட்டிலில் சங்கமத்து வெறும் காமத்துல உயிரா சிசு உருவாகறது இல்லை. அப்படியிருந்தா அது கம் தடவின வாழ்க்கை. எப்ப வேண்டுமென்றாலும் ஓட்டுதல் இல்லாம பிசுபிசுத்து தகர்ந்திடும். இது தீபிகா சசிக்கு கற்றுக் கொடுத்த, வாழ்வில் நான் கற்றுக்கிட்ட பாடம்.

பிரகதியும் கூட என்னோட கட்டாயத்துல தான் மணந்தா. அதோட பாதிப்பு தான் எட்வின் பக்கத்துல மணப்பெண்ணா மாறிட்டாளோனு தோனுது. ஒரு வேளை பத்மாவதி அத்தையை நான் பக்குவமா பார்த்து பேசி, பிரகதியை விரும்பியதை கூறி அவங்க சம்மதத்தோட, தீபிகா எண்ணத்தை பிரகதியிடம் புரிய வச்சி நான் அவளிடம் முறையா திருமணம் பண்ண சம்மதம் கேட்டு முடிவெடுத்திருக்கலாம். அப்படி பண்ணியிருந்தா மேபீ என் தரப்புல இருந்து யோசித்து இருப்பா. இல்லை என் செயலுக்கான காரணத்தை மதிச்சிருப்பா.

என் பிரகதி இப்பவும் என்னை மதிக்கிறா., புரிஞ்சிக்கிறா.., ஆனா என் செய்கையை ஏற்று என்னை அரவணைக்க தயங்குறா, இந்த தயக்கம் முறையான சம்மதத்தில பெற்றிருந்திருப்பேனோனு சந்தேகம் முளைக்குது.

அந்த ஒரு காரணத்துக்காக தான் சௌமி உன்னிடம் சசியை பற்றி அபிப்ராயம் கேட்கறேன். இப்பவும் காசை வாரி இறைச்சா தூரத்து சொந்தத்துல கட்டிக்கொடுக்க நீ நான் என்று டிமாண்ட் இருக்கு. ஆனா தகுதி…?

அந்த தகுதி உன்னிடம் இருக்குனு நம்பறேன். அன்னிக்கு எங்க தாத்தா இறந்தப்ப ஒரு வார்த்தை சொன்ன நினைவுயிருக்கா? மதிப்பில்லாத இடத்தில குபேரனே இருந்தாலும் நாம இருக்க வேண்டாம்க்கானு பிரகதியை அழைச்சிட்டு போனியே. அதான்… அந்த ஒன்னு தான் உன்னை உற்று நோக்க வச்சது.

உங்கண்ணாவிடம் சொல்லு… இந்த ஏழை பணக்காரன் கான்சப்ட் எல்லாம் விதுரநீதிக்கு தெரியாது. குட் பேட்… இதான் யோசிப்பான் இந்த விதுரன்.

ஓகேவோ நாட் ஓகேவோ எதுனாலும் சொல்லு. அப்பறம் தன்வீக்கு வர்ற வெள்ளி பிறந்த நாள் குடும்பத்தோட வந்துடுங்க” என்று வணக்கம் வைத்து புறப்பட்டான்.

சௌமியா சிலையென நின்றாள். இன்பாவும் விஜயலட்சுமியும் “வேலையை பாருங்க.” என்று கூறிட அமைதியாய் கழிந்தது.
அஞ்சலியோ குழந்தையை பார்த்துக்கொண்டு அறையில் இன்பாவையே நோட்டமிட்டாள்.

தனியாக பேசுகின்றான். சில நொடி தலையசைக்கின்றான். சில நொடி சோகமாகின்றான். இப்படியே இரவு வரை கடத்தினான்.

சௌமியாவோ சாப்பிட்டு படுத்து கொண்டாள். அவளுக்கு சசியை இதுவரை அலுவலக தலைமையாளராக மட்டும் கண்டிருக்கின்றாள்.

நன்றாக வேலையை செய்வான். யாரிடமாவது சில விஷயம் சொல்ல கஷ்டப்படுவான். போன் ஆப் மூலமாக கட்டளை பிறப்பிப்பான். தன்னிடம் கூட இதுவரை அப்படியொன்றும் சிரித்து பேசியதில்லை அவன்.

தான் ஏதேனும் கூற வந்தால் மறுப்பவனிடம் விதுர் சார் என்னை டிசைட் பண்ண சொல்லிட்டார். நானே முடிவெடுக்க பர்மிஷன் தந்தார் என்ற வார்த்தை உதிர்த்து விட்டாள் மறுத்து பேசாது அமைதியாகி விடுவான்.

இரண்டு முறை திக்கி அவமானமாக உணர்ந்தவன் அதன் பின் மெயிலிலேயே விவரத்தையும் ஒப்பந்தத்தையும் பேசிடுவான்.

முன்னே வந்து தயங்கி கேலியான சூழலா அல்லது இதமான தென்றலா என்று பார்த்து பார்த்து அடியெடுத்து வைப்பவன்.

ஆதித்யா தாத்தா இறந்த பொழுது நடுகல் போல நின்றானே என்று திட்ட கூட செய்தாள். எத்தனை வருத்தம் அவமானம் வாழ்வில் சந்தித்து நின்றானோ?

அன்று உதிர்த்த ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு சசிக்கு மனைவியாக விதுரன் முடிவெடுப்பதில் ஆச்சரியம் கொண்டாள். தாத்தா இறந்த கணம் அவனால் சசியின் நலனை கருத்தில் கொண்டு தன்னை நோட்டமிட முடிந்ததே.

விஜயலட்சுமியும் இன்பாவும் பேசிக் கொள்வது சற்று சிறிதளவு ஒலியில் கேட்டது.
அஞ்சலி அண்ணி இடைப்புகுந்து என்னவோ “தீபிகா கணவன் என்பது தான் உங்களுக்கு இடிக்குதா? விதுரன் அண்ணன் இல்லைனா உங்க பிரகதி மூலமா உறவுனு ஏன் புத்தி போகமாட்டேங்குது” என்று திட்டுவது சௌமி அறை வரை கேட்டது.

ஏன் இந்த அண்ணாவுக்குமே அம்மா அண்ணியை பிடிக்காமல் கட்டி வைத்தார். இன்றோ பூம்பூம் மாடு போல தலையசைத்து அண்ணியின் பேச்சுக்கு செவி சாய்க்கின்றானே அண்ணன் இன்பா.

இங்கு கட்டாயப்படுத்தி திருமணம், பெரியவர் பார்த்து செய்து வைத்த திருமணம் என்ற இரண்டுமே வழக்கில் ஒரே புள்ளியாய் சந்திக்கிறது.

இங்கு திருமணம் முடிந்தப்பின்னும் கணவன் மனைவியின் வாழ்வு அவர்களின் விருப்பு வெறுப்பை ஒன்றில் மட்டுமே பேட்டரி போட்ட ரிமோட்டாக ஓடுகிறது.

சரி என்ன அவசரம் அதான் நேரம் உள்ளதே நீ உறங்கு என்றது மனசாட்சி. சௌமி உறங்கவும் கனவில் ஆதித்யா வீட்டில் சசியின் கரம் பற்றி யுகனின் குழந்தை முகம் பிளராக தோன்றியது.

‘அம்மா விட்டுட்டு போகாதே’ என்பது போன்ற உணர்வு முகம். அன்று தோன்றிய நிகழ்வில் இன்று அவளுக்கு அப்படி பிம்பமாய் இமைக்குள் வந்தான்.

பிரகதியோ எட்வின் அனிலிகாவோடு கை நிறைய பரிசு பொருட்களை வாங்கி வந்தாள்.

தன்வீ பிறந்த நாளுக்கு ரிட்டர்ன் கிப்ட் கொடுக்க வேண்டுமென விதுரன் யோசனையாக வெள்ளியில் குட்டி கிருஷ்ணன், குட்டி விநாயகர், குட்டி லட்சுமி என்று பெட்டியில் எண்ணிக்கையை கூறி மொத்தமாய் வீட்டிற்கு வந்திறக்கி விட்டான்.

பற்றாத குறைக்கு தன்வீ கைகள் தொடும் அனைத்து பொம்மையும் விதுரன் பேக் செய்ய சொல்லியிருந்தான்.

பிரகதிக்கு வேடிக்கையாய் இருந்தது.

இரவு வெளியே சாப்பிட்டு வரவும் தன்வீ விதுரனோடு நெஞ்சில் சட்டமாய் அமர்ந்து அவன் நெஞ்சு முடியில் கொலுசு காலில் உரசினாள்.

அதெல்லாம் இரசித்து கொண்டு அவளிடம் விளையாடினான்.

தன்வீ இங்கு வந்த சில நாள் ‘ம்ம்மா’ என்று விளிப்பாள். இன்றோ ப்ப்பா’ என்று பொக்கை பல் தெரிய கூற, அதை பல முறை கேட்டு கேட்டு முறுவளித்தான்.

பிரகதி அனிலிகாவோடு பிறந்த நாள் விழாவை கொண்டாட, டெகரேட் செய்ய ஆரம்பிக்க, பணியாட்களோ நீங்க என்ன பண்ணணும்னு சொல்லுங்க நாங்க செய்யறோம் என்றதில் வேகமாக அலங்காரம் முடிந்தது.

வீட்டையே விழா மண்டபம் போல மாற்றியிருக்க, அந்நாளும் வந்தது.

தன்வீயை அலங்காரம் செய்ய ஆரம்பித்தாள். அனிலிகாவோ கண்ணுக்கு இந்த ஷேட் போடு. இந்த ஹெட் பேண்ட்” என்று தந்து கொண்டிருக்க, அனைத்தும் முடித்து பிரகதி நிமிர அங்கே அனிலிகா இல்லை. விதுரன் மட்டும் கன்னத்தில் கை வைத்து மகளை பெருமையாய் பார்த்தான்.

பிரகதி அவனை கண்டு தடுமாற, மெதுவாய் அருகே வந்தவன் அவள் கையை பற்றி, முத்தமிட்டு “தேங்க்ஸ் என் மகளை ரெடிபண்ணியதுக்கு” என்று தூக்கினான்.

சசியோ யுகனை அழைத்து வந்தமையால் தன்வீயை சுற்றி அவன் விளையாட நேரங்கள் நகர்ந்து கொண்டேயிருந்தது.

சசிக்கு இப்பொழுது வரை கூறவில்லை அதனால் திருமணம் பற்றி பேச்சு எழவும், எப்பவும் போல எழுந்திட செய்வானோ என்று தயார் படுத்த முனைந்தான்.

அதற்கேற்றார் போல பரமகுரு யுகனை கண்டு கொஞ்சி மகிழ, சசிதரன் எட்டி நின்று பர்ஸில் போட்டோவில் தீபிகாவை கண்டு உள்ளுக்குள் வெதும்பினான்.

கோமதி அந்த பக்கம் வந்தவர் “இன்னமும் என்ன டா அதே போட்டோ வச்சி பார்த்துட்டு இருக்க. தரகர் எத்தனை போட்டோ காட்டியிருக்கார் தெரியுமா?குழந்தை என்றோ பேச்சு திக்கும் என்றோ தெரிந்து எந்த வித தயக்கமில்லாம திருமணத்துக்கு சம்மதிச்சு இருக்காங்க.” என்று பிடுங்கி தூரயெறிந்தார்.

சசிதரன் சத்தமின்றி அதனை எடுத்து கிழித்தெறிந்தான். அவனுக்கு பரமகுருவை கண்டதும் தான் பர்ஸிலிருந்த போட்டோவே நினைவு வந்தது.

“சித்தி சொல்லற மாதிரி திருமணத்துக்கு தயாராகு. உன்னோட விலைமதிக்க முடியாத அன்பை நீ விலைமதிக்க முடியாதவளுக்கு தான் தரணும். நான் பொண்ணு பார்த்திருக்கேன். உனக்கும் யுகனுக்கும் செட்டாவா.” என்று கூற சசிதரன் மௌனமாய் யோசித்தான்.

“கல்யாணம் பண்ணிக்கறேன் யாரை வேண்டுமென்றாலும் பாரு. போன முறை என்னோட விருப்பம் தவறா போயிடுச்சு. நீயும் அம்மாவும் முடிவெடுத்து யாரை முன்னிருத்தினாலும் எனக்கு ஓகே” என்றவன் நொடிந்து இருந்தான். அவனால் யுகனை பார்த்துக் கொள்ள தெரியவில்லை. அலுவலகம் பெரிய சுமையாக அவன் தலையில் விழுந்த உணர்வு. எப்படியாவது தன்னை விடுவிக்க எண்ணினான்.

தீபிகா இறந்து இந்த ஒன்றரை வருடமாக அன்னையின் புலம்பலில் பலதும் கடந்து விட்டான்.

யுகன் பேச ஆரம்பித்த பிறகே அம்மா வேண்டும் என்று பேச அவனுக்கு பதில் தர சங்கடப்பட்டான்.
இதுவும் கோமதி தான் பேரனை விட்டு மகனிடம் மணக்க வைக்க போட்ட திட்டம்.

திட்டமென்றாலும் உண்மை நிலவரம் அது தானே. இதுநாள் வரை முயன்று கொண்டிருக்கின்றார்.

சசி.. இன்னிக்கு அந்த பொண்ணை தன்வீ பெர்த்டே முன்னிட்டு இன்வெயிட் பண்ணட்டேன். அவங்க பேமிலிக்கு உன்னை பிடிச்சிருந்தா கண்டிப்பா அவங்க வருவாங்க” என்றான். சசிக்கோ தட்டாமாலையாக ஒர்நொடி சுழன்றது.

“ஏன் விதுர…ன் அவச..சர்…ரமா… கொஞ்ச..ம் நேர்…ர…மெடுக்க கூடாதா. அ..த்..துவும் இ..இ..ன்னிக்கு நா..நா..ன் இ..ங்க இருக்…க மாட்டே..ன் கிளம்பிடறேன். ப்ளி…ஸ் என்னை விடு.” என்று யுகனை தூக்கினான். அவசரப்பட்டு சற்று முன் வார்த்தை விப்டுவிட்டு திருமணம் என்றதும் ஓடப்பார்த்தான்.

“எங்க ஓட போற. இந்ததடவை தவறெல்லாம் சரியாக மாற்றி காட்டுவேன். டிரஸ்ட் மீ.” என்றான் விதுரன்.

“ம்ம்.. போ.. போன.. முறை..யே.. என்னா..ல.. தான். தவறாச்சு.” என்றான்.

“சரி உன் தவறு என் தவறு எல்லாமே சரியாகும். ப்ளிஸ் உட்காரு” என்று விதுரன் கோர்ட் கை பட்டனை மாட்டிக்கொண்டு நகர்ந்தான்.

அவனுக்கு சௌமியா வருவாளா மாட்டாளாயென்ற யோசனை ஓடியது.

பிரகதியிடம் வந்தவன் அவளிடம் பேசிக்கொண்டே, “உன் பிரெண்ட் இன்பா வர்றானா இல்லையானு தெரியுமா?” என்று கேட்டான்.

“ஏன் உங்க மியாவிடம் போன் பண்ணி கேட்க வேண்டியது தானே.” என்று வெடித்தாள்.

“அடியேய்… கொல்லாதே… உனக்கு தெரிந்ததை சொல்லு.” என்றான்.

“எனக்கு தெரிந்தது எல்லாம் நீ மட்டும் தான் டா. சரியோ தப்போ தீபிகா மூலமா தான் உன்னை எனக்கு தெரியும். நீ அவளை பற்றி பேசாதேனு சொல்லியும் என் வாய் அவளை இழுக்காம நம்ம கதைக்கு முன்னுரையோ முடிவுரையோ போட முடியலை.

அவளால தான் பிரச்சனைனு பக்கத்துல இருந்தும் தெரிந்துக்கலை.

என்னை என்ன பண்ண சொல்லற. நான் ஒன்னும் முட்டாளா சுத்தலை. நீயே சொல்லு.

உனக்கு ஒருத்தரால பிரச்சனை வர்றப்ப பிரெண்டை நம்புவியா? இல்லை அந்த பிரச்சனைக்கு காரணமான அந்த ஒருத்தரை நம்புவியா?” என்றாள் பிரகதி.

விதுரன் இப்ப எதுக்கு அதெல்லாம் என்பதாய் பார்த்தான்.

“நான் அப்படி தான் அவளை நம்பினேன். உனக்கே தெரியும் உன்னோட எண்ட்ரி எப்படிப்பட்டதுனு.

தீபிகா நம்ம சாப்பாட்டில் விஷம் கலந்ததை எனக்கு எப்படி தெரியும்? நீ பேசறதும் உன்னோட ஆக்டிவிட்டிஸும் தானே என்னால வெறுக்க முடிஞ்சது.

அப்படியிருக்க உன்னோட ஒரே வீட்டில இருந்ததும் நான் புரிஞ்சுப்பேனா எப்படி முடியும். என்னோட பக்கத்துல இருந்து உன்னை பார்க்கறப்ப எல்லாம் நீ கெட்டவனா தானே தோற்றம் தந்த.

என்னை கூப்பிட்டு உட்கார வச்சி பேசினியா? பேசினியா டா.? இரண்டு மாதம் கணவன் மனைவியா வாழலாம் வானு சொன்னப்ப கூட டிவோர்ஸ் பேப்பரை ரெடி பண்ணிட்டு தானே கூப்பிட்ட?” என்றாள்.

“இப்ப எதுக்கு முடிஞ்சதை பேசற? பாப்பா பெர்த்டே ஆரம்பிக்க போகுது.” என்றான்.

“நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு. உன்னை விரும்பி தானே என்னை கொடுத்தேன் ஒப்பந்தத்துலயா ஒன்னா சேர்ந்தோம்.

நீ தானடா ஒருத்தனை கொன்ன. நான் வர்றப்ப குபுக்குனு இரத்தம் வந்து என் மேல தெளிக்கிறப்ப, அந்த சூடான ரத்தம் என்னோட இதயத்தை பாதிக்காதா? எனக்கென்ன தெரியும் அவன் நாலு உயிரை அழித்தவன் என்றும், நீ மன்னிச்சு விட்டும் திருந்தாம வந்து உன் கையில செத்து போக வந்தான்னு.

எட்வின் பார்த்துக்கிட்ட லைப்ல திரும்ப மேரேஜ் பண்ணலாமானு கேட்டப்ப எனக்கு அந்த கொலை தான் முன்ன வந்தது. பயமா இருந்தது டா. கொலையை பார்த்தும் எப்படி உன்னோட வாழ்வேன். கண்ணை மூடினா நீ அவனை கொன்றது தான் வந்துச்சு. என்னை என்ன பண்ண சொல்லற. இரண்டு மாத வாழ்வை அந்த ஒரு நாள் புரட்டி போட்டுச்சுனு சொன்னா நம்புவியா?

நீ சொன்னியே ஒரு நாள்ல உன்னை புரட்டி போட்டது என் செய்கை அதனால தான் என்னை பத்து மாசம் தேடினேனு சொன்ன. எனக்கு அப்படி தான். ஒரு நாள்ல உன்னை விட்டு விலக என்னை புரட்டி போட்டுடுச்சு விதுரா.” என்று பிரகதி மேல் மூச்சு வாங்க பேசினாள்.

“ஐ அன்டஸ்டேண்ட் பிரகதி. நான் உன்னை புரிஞ்சிக்கிட்டேன். அதனால தானே அனிலிகா எட்வினை தங்க அனுமதிச்சேன்.” என்றான்.

“அப்பறம் ஏன் சௌமியா?” என்றாள் இம்முறை கண்களில் காஜோலை தாண்டி கண்ணீர் வழிந்தது.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.







3 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-44”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *