Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-6

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-6

துஷ்யந்தா-6

இரவும் பாராது பத்மாவதிக்கு கால் செய்ய ஆரம்பித்தான் விதுரன்.

அவன் நினைத்தது போல இந்நேரம் என்னவோ யாரோவென பதறி போன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரகதி ‘எதுவானாலும் போனை பத்து மணிக்கு மேல சைலண்டில் போடணும் மாம். அப்படி அவசரம்னா லேண்ட்லைன்ல கால் பண்ணுவாங்க. அதனால போனை சைலண்ட்ல வச்சிக்கோ’ என்று கண்டிப்பாய் கூறி நடைமுறைப் படுத்திருந்தாள்.

அதனாலோ என்னவோ விதுரன் அத்தனை முறை முயன்றிட கூறியும் தர்மா தோல்வியை தழுவினான்.

தர்மாவோ “சார் கொஞ்சம் நேரம் கழிச்சு முயற்சி பண்ணறேனே.” என்று கேட்க முறைப்பை பதிலாய் தந்து “இதை விட என்ன வெட்டி முறிக்க போற” என்று கூறியதும் அடுத்து பேச தயங்கி விடாது தொடர்ந்தான்.

விக்னேஷிற்கே பாவமாய் தோன்றியது.

“சார் மேபீ அவங்க போனை சைலண்ட்டில போட்டுட்டு தூங்கியிருப்பாங்க சார். ஏஜ்டு பீப்பிள் டேபிளட் எடுத்திருந்தா தூங்கிட்டு தான் இருப்பாங்க. நீங்க மார்னிங் முயற்சி பண்ணினா குட் ரிசல்ட் கிடைக்கும்” என்று ஆலோசனை வழங்கினான்.

இந்த நயமாய் பேசிடும் எதிர் பேச்சு தான் தர்மாவுக்கு வரவில்லை. ஏதேனும் கூறினால் தவறாக சென்று இதுவரை திட்டு வாங்கியது தான் அதிகம். விக்னேஷ் மட்டும் எப்படி பதமாய் கூறிவிடுகின்றான். பயமின்றி… தன்னை விட ஒரு வருடம் முன் வந்து வலது கையாய் பங்கெடுத்ததன் சாமர்த்தியமா?

“இடியட்… போய் தூங்கு.” என்று விதுரன் வைத்து விட்டு போக கூறவும் தர்மா வீட்டுக்கு செல்ல ஓடினான்.

ஏற்கனவே தாமதமாக மாறினாலும் விக்னேஷ் சற்று நேரம் கழித்து விதுரனை சாப்பிட வைத்து சென்றான்.

ஆதித்யாவிடம் விக்னேஷ் “கூடிய சீக்கிரம் பிரகதி மேடமை இங்க எதிர்பார்க்கலாம் ஐயா. ஆனா அப்ப கூட நீங்க சொல்லற மாதிரி சார் நினைப்பாருனு சொல்ல முடியாது.” என்று கூற ஆதித்யன் சிரித்து கொண்டே “உன் வயசு என் அனுபவம் விக்னேஷ்” என்று முடித்திடுவார்.

விதுரன் சூரியன் எழுந்திடும் நேரத்திற்கு முன் எழுந்தான்.

விக்னேஷ் அதற்கும் முன் விதுரனுக்கு அழைத்து, “சார் பத்மாவதி அம்மா ஹரித்துவார்ல இருக்காங்களாம். எங்க இருக்காங்கனு கேட்டுட்டேன். வேற விவரம் கேட்கலாம்னா இப்ப வெளியே போறோம் நாலு மணிக்கு பேசறேன்னு வச்சிட்டாங்க.” என்று பதில் தந்தான்.

இட்ஸ் ஓகே விக்னேஷ். இத்தனை முறை கால் பண்ணியதற்கு ஏதும் கேட்கலையா?” என்று கேட்டான்.

“கேட்டாங்க சார். அது… சமாளிச்சிட்டேன்.” என்றதும் விதுரன் அணைத்து விட்டு நிமிர்ந்தான்.

“பிரகதி பிரகதி பிரகதி…” என்ற பெயர் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தாலும்  அலுவலகம் கிளம்பினான்.

இங்கு அதிகாலை தீபிகா தன்னை அலங்கரித்து தர்மா கொடுத்த விலாசம் இருக்குமிடம் தேடி சென்றாள்.

வாசலில் ஒரு பெண் செடிகளை பராமரித்து காய்ந்த சருகு இலைகளை மெல்ல மெல்ல தேடி வெட்டி கத்தரித்தாள்.

“ஏய் பொண்ணு இங்க இன்பா இருக்காறா?” என்று கேட்டதும் அந்த பெண்ணோ “உள்ளே தான் இருக்கார் நீங்க?” என்றதும் தீபிகா பதில் தராமல் உள்ளே சென்றிருந்தாள்.

மனதுக்குள் “அக்கா தங்கை ஆட்டுக்குட்டினு வீட்ல இருக்க வேண்டியது. கேள்விக்கேட்டு உசுரை வாங்கிட்டு. பிறகு எப்படி என்னை தேடி வருவான்’ என்று வீட்டின் அறையை இங்கும் அங்கும் தலையை திருப்பி சென்றாள்.

ஹால் அவளது அறையை விட சிறிதாக இருந்தது. “இன்பா இன்பா..” என்ற பொழுது ஒரு அறையிலிருந்து ஒரு கல்லூரி வயது பெண் எட்டி பார்த்து வந்தாள்.

அடுத்த அறையில் நுழைய போனவளை, “நில்லு… அவர் தூங்கிட்டு இருக்கார். யார் நீ?” என்றாள் வெளியே பார்த்த பெண். இம்முறை குரலில் சற்றே கூடுதல் ஒலியை தந்தாள்.

“இன்பாவை பார்க்கணும்னு சொன்னேன். காதுல விழலை.” என்றாள் தீபிகா.

“நீங்க யாருனு கேட்டேன் அது காதுல விழலையா?” என்று பதில் கேட்டாள்.

அதற்குள் இன்பா கண்ணை கசக்கி கொண்டு வெளியே வர தீபிகாவும் உள்ளே நுழைய இருவரும் சந்தித்தனர்.

இன்பாவோ மேடிட்ட வயிற்றோடு தீபிகா வந்ததை அறிந்து அதிராது காலையில் என் வீட்டுக்கு ஏன் வந்தாள் என்ற எண்ணத்தில் பார்த்தான்.

“இன்பா… இன்பா எப்படியிருக்க?” என்று அணைக்க போனவள் மாலையும் கழுத்துமாய் இன்பா வெளியே பார்த்த பெண்ணோடு இருந்த புகைப்படத்தை கண்டு ஸ்தம்பித்து நின்றாள்.

“கல்யாணம் பண்ணிட்டியா இன்பா?” என்றாள்.

“ஆமா. அஞ்சலி காபி. தீபிகாவுக்கும் சேர்த்து எடுத்துட்டு வா. பல் விளக்கிட்டு வர்றேன்.” என்று திரும்ப அதே அறைக்குள் சென்றான்.

தீபிகாவுக்கு தன் வாழ்வு கருமை சூழ்ந்த வனமாக காட்சிக்குள் சென்றது போல தவித்தாள்.

அறையை சுற்றி நோட்டமிட்டாள் கட்டில் பீரோ வாஷிங்மெஷின் கூடவே டிரஸிங் டேபிள் என்று அடைத்து வைத்து குறுகலான இடமாக இருந்தது. இதில் அட்டாச் பாத்ரூம் வேறா என்ற அசூசையை அடைந்தாள்.

“அண்ணி யாரு இது?” என்று கல்லூரி வயதுப் பெண் வந்து கேட்க “உங்கண்ணா லவ் பண்ணின பொண்ணு. நீ சாப்பிட்டு கிளம்பு. அத்தை கோவிலில் இருந்து வந்துடுவாங்க. இன்னும் கிளம்பலையானு கேட்கவா.” என்றதும் சாப்பிட அமர்ந்தாள்.

ஹாலில் உணவு மேஜை கிச்சனோடு சற்று ஓட்டியிருந்தது. இடைப்பட்ட இடத்தில் பூஜையறையாக மாடம் இருந்தது.

தீபிகாவுக்கு இன்பாவின் திருமணம் ஆனது புதிதென்றால் அவன் தன்னை காதலியென்று கட்டியவளுக்கு தெரிவித்து இருக்கின்றானே என்பது கூடுதல் ஆச்சரியமாக இருந்தது.

“காபி…?” என்று நீட்டவும் வாங்கி கொண்டு அஞ்சலியை எடைப்போட்டாள்.

‘எனக்கு சமமானவளா நீ.’ என்ற ஏளன பார்வை அதில் இருந்தது.

“இங்க எதுக்கு வந்த?” என்று முகம் துடைத்தபடி வந்தான்.

“என்ன கேள்வி இன்பா. உன்னை தான் தேடி வந்தேன். உனக்கு தெரியுமா… நீ எங்க இருக்கனு எனக்கு தெரியாது. நேற்று தான் தெரியும்.” என்று தீபிகா கண்ணீரில் கரைந்தாள்.

“முன்னவே தெரிந்தா மட்டும் என்ன பண்ண முடியும்.” என்றான் விரக்தியாக.

“இன்பா… என்ன பேசற. காலேஜில் நீ வா தீபிகா நீயும் நானும் எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போகலாம்னு அடிக்கடி சொல்வியே வா. இப்ப போயிடலாம்” என்று முட்டாள் தனமாக பேச்சை எடுத்து விட்டாள்.

அஞ்சலிக்கு இதயமே நின்றிடும் அளவிற்கு அதிர்வு தாக்கியது. நேற்று கூட தனது கை பட்டதற்கு அமிலம் பட்டவனாக ஒதுங்கி சென்றவன் தானே இன்பா.

“என்ன உளறுற தீபிகா. முன்ன காலேஜ் படிக்கிறப்ப பேசியது இப்ப எப்படி சரியாகும். உன் வயிற்றுல வளருவது அந்த சசியோட குழந்தை.” என்று புரிய வைக்க பேசினான்.

“குழந்தை தான் உனக்கு பிரச்சனை… கவலையா… நான் டிஎன்சி பண்ணிடறேன்” என்று பேச “அய்யோ அய்யோ… ஒரு தாய் பேசற பேச்சாடி இது. இன்பா யாருடா அது. விதுரன் சொன்னவளா” என்று இன்பா தாய் வத்சலா வந்து நின்றாள்.

“ஏய்… நீ என்ன அவ வாயை பார்த்துட்டு இருக்க. வேலைக்கு போகலை” என்று இரண்டாவது மகளை வேலைக்கு விரட்டினாள்.

“நீ என்ன இந்த பொண்ணுக்கு காபி ஊற்றி கொடுத்து உபசரிக்கிற. அறிவிருக்கா உனக்கு” என்று அஞ்சலியையும் திட்டினார்.

   “அம்மா… நான் பேசி அனுப்பறேன்.” என்று இன்பா கூறவும் தீபிகாவை தொட சென்றவன் அப்படி பிடிக்காது தவிர்த்தான். அஞ்சலியை பார்த்து சங்கடமாய் நின்றான்.

    அஞ்சலியோ “காபி” என்று இன்பாவிடம் நீட்டினாள்.

     இன்பா எடுத்து கொண்டு அஞ்சலியை ஒரு பார்வை பார்த்தான். அதில் இது நாள் வரை இல்லாத ஒர் உணர்வை அவளுக்கு வழங்கினான்.

      கதவை தாழிட்டு “உட்காரு”என்று சேரை எடுத்து முன் வைத்தான்.

      “இன்பா… என்னால அவங்க கட்டுக்குள்ள இருந்ததுக்கு காரணமே உன் உயிர் பயம் தான். இப்ப அந்த பயத்தை விட உன்னோட இருக்கணும். எனக்கு அந்த வாழ்க்கை வேண்டாம்.” என்று அழுதாள்.

     அவளின் அழுகை வெளியே கேட்டது. அஞ்சலிக்கு தவிப்பாய் இருந்தாலும் காட்டி கொள்ளாமல் சமையலை கவனித்தாள்.

     “இந்த கன்றாவி நான் பார்க்கணும்னு இருந்திருக்கு. இன்னும் என்னவெல்லாம் ஆகுமோ. உன் தலைவிதி என் மகனோட வாழ கொடுப்பினை இருக்கா என்னனு நீ முடிவெடுக்க போறியா இல்லையா” என்று புலம்பி தள்ளினார்.
   எதுவும் கேட்கும் நிலையில் அஞ்சலி இல்லை.
    
     “எப்பதிலருந்து இருந்து என்ன காப்பாற்ற சசியோட வாழ ஆரம்பிச்ச?   கல்யாணம் நடந்த அன்னிக்கு என்னை போட்டு அடிச்சானே அப்பவா?” என்றதும் ஆம் என்பதாய் தலையசைத்தாள்.

    “எனக்காக நீ சசியை கல்யாணம் பண்ணிக்கிட்ட. எனக்காக அவனோட வாழ்ந்த. எனக்காக இப்ப அவனோட கருவை சுமக்கிற. இப்ப எனக்காக என்னை தேடி வந்திருக்க எல்லாம் எனக்காக அப்படி தானே?” என்று இன்பா குரலில் இதற்கு மேலும் கேட்க வலித்து அஞ்சலி டிவிவின் ஒலியை கூட்டினாள்.

     பத்து நிமிட பேச்சுக்கு பின் தீபிகா கோபமாக வெளியேறினாள்.

  இன்பாவோ எதுவும் நடக்காதது போல டிவியை அணைத்தான்.

     “அம்மா எங்க?” என்றான்.

      “உங்க பெரிய தங்கை வீட்டுக்கு போறதா கிளம்பிட்டாங்க.” என்றவள் குரல் ஓடிந்திருந்தது.

     “அஞ்சலி நான் ஆபிஸ் லீவு போட போறேன். மூவி போகலாமா?” என்று கேட்டான்.

     அஞ்சலி குழப்பமாய் அதிர்ந்து தலையாட்டினாள். இன்பா தன்னோடு நடந்து வந்தது கூட இந்த திருமணமான நான்கு மாதத்தில் நடைப்பெறவில்லை.

      ஏதோ தன்னிடம் பேச தான் அழைத்திருக்கின்றானோ என்று புறப்பட தயாரானாள்.

  ஆவேசமாக சென்ற தீபிகா விதுரன் அலுவலகத்தில் வந்து நின்றாள்.

    விக்னேஷோ தீபிகா இங்கு வந்ததை நாசுக்காய் விதுரனின் அலுவலக மீட்டிங்கில் கூறிவிட்டு வந்தான்.

    வரவிருக்கும் புத்தாண்டிற்கு என்ன விதமான விளம்பரங்கள் கொண்டு தங்கள் புராடெக்ட் விற்பனையை அதிகரிக்க என்று கலந்தாலோசித்த கூட்டம் அது.

    விதுரன் தீபிகாவை காத்திருக்க கூறிவிட்டு, மற்றவர்கள் கூறும் ஒவ்வொரு விளம்பர கான்சப்டை கேட்டு தன் விருப்பை வெளியிட்டு முடித்தான்.

   டிவி, லேப்டாப், மொபல் என்ற விற்பனை அதிகமாக சென்றாலும் அவனின் இறக்குமதி  முதலிடம் வகிக்க தேவையானவற்றை பேசி முடித்து வந்தவரை கவனித்து அனுப்பினான்.

    அதன் பின்னரே அறைக்கு வந்து சேர, தீபிகா அதீத கோபத்தின் எல்லைக்கு சென்றிருந்தாள்.

    விதுரனிடம் “என் வாழ்க்கையை அழிச்சது நீ. ஆனா இன்பாவிடம் என்ன சொல்லி வச்சிருக்க. அவன் என்னை ஏற்றுக்கலை. நீ..நீ… ஏன்டா வந்த. நிம்மதியா போயிருக்கற என் வாழ்க்கையை கெடுத்திட்ட பாவி.

    வயிறெரிந்து சொல்லறேன். நீ நல்லாவே இருக்க மாட்ட டா.” என்று பதினைந்து நிமிடம் அரற்றினாள் தீபிகா.

    விதுரன் அனைத்தும் கேட்டு விட்டு அவளுக்கு பதில் கொடுத்தான். விக்னேஷ் அதில் வாயடைத்து போனான். கடைசியாக….

    “தேங்க்ஸ்… உன்னோட விஷ்ஷஸ் விரைவில் நிறைவேறினா உன்னிடம் சொல்லறேன். அப்பறம் சசியை ஏமாற்றி வேற ஏதாவது பிளான் போட்ட சும்மா விடமாட்டேன். போய் பிள்ளை பெற்று போட மிஷினா மட்டுமாவது இரு.” என்று பதில் தந்துவிட்டு வெளியேறினான்.

     விக்னேஷ் பிரகதி பற்றி டீடெய்ல் கிடைச்சுதா?” என்று சென்றவனின் குரல் தீபிகாவை அடைந்தே சென்றது.

     ‘அடப்பாவி என் வாழ்க்கையை அழிச்சது பத்தாதா… பிரகதி வாழ்க்கையை வேற ஆட்டி படைக்க போறியா’ என்று தீபிகா எதையும் செய்ய முடியாது திரும்பி நடந்தாள்.

      விக்னேஷ் சில பேப்பரை எடுத்து வந்து கொடுத்து, “சார் அந்த பத்மாவதி இன்னும் இங்க வரவே இருபது நாள் ஆகும். ஆனா பிரகதி வர இரண்டு மாதம் ஆகும். அவங்க படிப்பு முடிச்சி தான் வருவாங்க.” என்றான்.

     “சார் நாம அதுக்குள்ள பத்மாவதிக்கு டிரபிள் ஆர் பிரஷர் கொடுத்தா பிரகதி அடுத்த நிமிடமே வர வாய்ப்பு இருக்கு சார்” என்றான் தர்மா.

    “ஐ லைக் இட் தர்மா. குட் ஐடியா” என்றதும் தர்மா முகம் பிரகாசமாக விக்னேஷை கண்டு ஏளனமாக சிரித்தான்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *