பௌவம்-2
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
ரதியிருக்கும் மனநிலைக்கு அவள் தன் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்தாள். பிரேம் எட்டிப் பார்த்து விட்டு தன் அத்தையிடம் “அவளுக்குத் தலைவலி அத்தை டேப்லட் இருக்கா” என்றான்.
“அவ மாத்திரை எல்லாம் போட மாட்டா மாப்பிள்ளை. தைலம் பூசுவா. அதுவும் யாராவது தேய்ச்சி விடணும். இப்ப மீன் ஏறா கை வச்சா தைல வாடை வரும். கொஞ்ச நேரம் படுக்கட்டும். நான் இதெல்லாம் முடிச்சிட்டு பூசறேன். அதுவரை தூங்கட்டும்.” என்று மீனை வெட்டவும் இறாலை உறிக்கவும் வேலையைப் பார்க்க பணியாட்களான கிரிஜாவிடம் ஏவினார்.
தைலம் மட்டும் எங்கே இருக்கு என்று கேட்டு எடுத்து வந்து ரதி நெற்றியில் பூசிவிட, சட்டெனத் திகைத்துப் பிரேம் என்றதும், சாதரணமானாள்.
“கொஞ்ச நேரம் படுத்து எழுந்தா பீல் பெட்டர் ரதி.” என்று இதமாகத் தேய்த்து விட்டுச் சென்றான்.
கண்கள் மூட குருவை சந்தித்த முதல் நாள் கண் முன் வந்து இம்சை செய்தது. குருவை நினைக்கக்கூடாது என்று இறுக இமை மூடினாலும் அந்த நிகழ்வை வந்து செல்வேன் என்று காட்சி படமாக மாயம் செய்தது.
2018 செப்டம்பர்
ஆர்பரிக்கும் கடலலை ஓயாமல் கரையை வந்து முத்தமிட்டுச் சென்றது. மாலை நேரம் பகலவன் தண்ணீரில் அமிழ்ந்து தன்னைக் குளிர்வித்தான்.
அக்கணம் தான் தூரத்தில் ஒரு சிறுமியிடம் மணல் வீடு கட்ட உதவுவது போல ஒர் டிப்டாப் ஆசாமி கவுன் அணிந்த பெண்ணின் காலை தடவியவாறு சுற்றி முற்றி நோட்டமிட்டு கையைத் தொடைக்கு மேலே ஏற்ற முயன்றான்.
ரதி பார்த்துவிட்டு அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழவும் அந்த டிப்டாப் ஆசாமியை யாரோ எட்டி மிதிக்க மணலில் உருண்டான்.
உருண்ட வேகத்தில் அவனோ ஓட முயல அந்த இளைஞன் மேலும் இரு உதை கொடுக்க, தப்பிக்க எண்ணிய ஆசாமியோ ஓட முயன்றான்.
அந்த இளைஞன் என்னவோ கத்துவது மட்டும் தூரத்திலிருந்த ரதிக்குப் புலப்பட்டது. என்ன பேசினான் என்பது கேட்கவில்லை. ஒரு வேளை அவனின் சென்னை பாஷை கேட்டிறிந்தால் ரதி அப்பவே சற்று இரண்டடி தள்ளி நின்றிருப்பாள்.
அவனின் செய்கை மட்டும் கண்டவளுக்கு நாயகனாய் அவதாரம் அளித்திருப்பான். அவன் அருகே வந்து நன்றி சொல்ல, “உன்னோட பொண்ணா.” என்ற கேள்வி தான் குரு கேட்டான்.
“சேசே தூரத்தில் பார்த்தேன். அந்த அயோக்கியனை செய்கை பார்த்துகிட்ட வருவதற்குள் நீங்க முந்திக்கிட்டு அடிச்சிட்டிங்க.” என்றவள்.
“ஹாய்… வாட் இஸ் யுவர் நேம். வேர் இஸ் யுவர் பேரண்ட்ஸ்” என்று ஆங்கிலத்தில் அந்த சிறுமியிடம் உரையாடவும் குரு தன் நாவின் சென்னை செந்தமிழை பேச்சை அடக்கி கொண்டான்.
முதல் முதல்ல ஒரு பெண் அதுவும் அழகு தூக்கலாக ஒருத்தி தன்னிடம் பேச தன் கச்சடா மொழியை மறைத்தான்.
அவளையே பார்த்தவன் நன்றாகவே வயதின் ஏற்றத்துக்குரிய வேலையில் சைட் அடித்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் குழந்தை தன் தந்தை இருக்கும் திசைக்குக் கையை நீட்ட அவரோ கையில் புகையை இழுத்து விட்டிருப்பது புலப்பட்டது.
அவளை இழுத்துக் கொண்டு நடந்தவையைச் சொல்லி திட்டி கையில் ஒப்படைத்தாள்.
நன்றி கூறி இனி கவனமாகப் பார்த்துக் கொள்வதாகக் கூறவும், கிளம்ப முற்பட்டாள்.
குருவோ அவள் தன்னிடம் ஏதேனும் பேசுவாளோ என்பது போலத் தவிக்க, “அப்பா பைக் பக்கத்தில என்னைத் தான் தேடறார். நான் கிளம்பறேன்.” என்று நடந்தாள்.
நிறுத்தி பெயரை கேட்க குருவும் ஆசைதான். ஆனால் அவளின் தோரணை கண்டு நமக்குச் செட் ஆகாது என்று அவனாகவே விட்டு விட்டு அவனுமே புறப்பட்டான்.
விதி வலியது போலும். இவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தியே தீருவேன் என்று சண்டித்தனம் செய்ய, அதற்கு மறுநாளும் சந்திப்பை தொடர வைத்தது.
ரதிதேவி வீட்டில் அவளின் தோழிகள் வந்து அரட்டையடிக்கச் சற்று நேரம் அருகே தான் பீச் என்பதால் அனைவரும் காரில் கிளம்பி வந்திருந்தனர்.
தோழிகள் சோளத்தை வாங்கி உண்டு கொண்டு கடலை இரசித்து, தங்கள் போனில் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.
ரதிதேவியும் சேர்ந்து போட்டோ எடுக்க எங்கிருந்தோ ஒரு பட்டத்தின் நூல் அவள் முன் வந்து புகைப்படத்தினில் இடையூறு செய்ய, அதனை எடுக்க முனைந்தாள். அதே நேரம் அந்தப் பட்டம் விட்ட சிறுவர்களோ இழுக்கக் கையில் மாஞ்சா இழுப்பட்டது.
“ஸ்..ஆ…” என்ற் நூலை விடவும் சிறுவர்கள் பயந்து ஓடவும், ஓடியதில் ஒருவன் குருவை மோதி ஓட முயல, “இன்னா டா… திருடிட்டு ஓடறியா” என்றவன் நேற்று பார்த்த பெண்ணைக் கண்டதும், தலையைக் கோதி சட்டையைச் சரிப்படுத்தி, காலர் பட்டன் கீழே இரண்டு பட்டனை திறந்து விட்டவன், என்னவோ இன்டர்வியூ செல்பவனாக அவசரமாகப் பட்டன் மாட்டி அவளைக் கவனித்தான்.
கையில் இரத்தம் சொட்டவும் சிறுவனின் ஓட்டமெதற்கென அறிந்து கொண்டான்.
“ஏன்டா… மாஞ்சா நூலை இத்தனை பேர் இருக்கற இடத்துல வூட்டுகீற. எங்கடா கெட்சது. போலீஸான்டா சொல்லி உள்ள தள்ளவா.” என்று மிரட்டினான்.
“கீழ கிடச்சிதுனா வுடு என்ன.” என்று ஓடினான்.
“எங்கிந்தோ…” என்றவன் பேச்சை சற்றே நிறுத்தி நிதானமாக்கி, “எங்கயோ கீழ கிடந்த நூலை எடுத்து விளையாண்டு இருப்பாங்க அதான்.” என்றவன் “இரத்தம் கொட்டுதுங்க. கையை மேல தூக்கி பிடிங்க.” என்றதும் ரதி குருவை கண்டு மென்னகைக் முயன்றாள்.
அதற்குள் தோழிகள் தண்ணீர் விட்டு அலம்ப, “இரத்தத்தைத் துணி போட்டு கட்டுங்க. அதான் கர்ச்சீப் வச்சி இருப்பிங்களே.” என்றதும் தோழிகளும் ரதியும் இவ்வளவு நேரம் யோசிக்காத மடத்தனம் கண்டு ரதி தனது கைக்குட்டையை நீட்ட, தோழியொருத்தி கட்டி முடித்தாள்.
கூடவே கிசுகிசு “குரலில் யாருடி இது. எங்களிடம் சொல்லவேயில்லை.” என்று இடித்தாள்.
“சும்மா இரு ரெஜி, பிரெண்ட் அவ்ளோ தான்.” என்றாள்.
“ஹாய் நான் ரெஜி. உங்க பேர் என்ன” என்று ரெஜி கேட்டதும். மற்ற தோழியோ “ஏய் ரெஜி யாருனே தெரியாது.” என்று முறைக்க, “நம்ம ரதி பிரெண்ட் பா.” என்றதும் குரு அப்படியா என்பது போலப் பார்த்தான்.
ரதியும் மறுக்கவில்லை சின்னதாய் சிநேக புன்னகையைச் சகந்தினாள்.
“என் பேரு குருநாதன் ங்க” என்றவன் பதிலோ ரெஜிக்கு இல்லை ரதிக்கு தான் கூறியதாக நின்றான்.
ஒவ்வொருத்தராய் பெயர் சொல்லி நின்றனர். குருவுக்கோ இவ பெயர் தெரியலையே என்பதாய் தவித்தான்.
“நாங்க ரதிதேவி காலேஜ். நீங்க சேம் ஏரியாவா?” என்றதும் தான் இவள் பெயர் ரதிதேவி என்று யூகித்துக் கொண்டான்.
“ஆமாங்க. இங்க தான் வூ… தள்ளி கொஞ்ச தள்ளி வீடு இருக்கு.” என்று விழித்தான். சரளமான தங்கள் பாஷை வந்து தன்னைக் காட்டி கொடுக்கப் போகின்றது என்று அளவாகப் பேச முயன்றான்.
“ஓகே பா. நேரமாச்சு… பை” என்று கிளம்பவும், ரதியும் பத்தெட்டு நடந்து சென்றவள், “ஒரு நிமிஷம்” என்று தோழிடம் கூறிவிட்டு குரு அருகே வந்தாள்.
“ஐ அம் சாரி. உங்க பெயர் கூடத் தெரியாது. பிரெண்ட் கேட்டதும் தப்பா எடுத்துப்பாங்களோனு பிரெண்டுனே சொல்லிட்டேன். நீங்களும் இதே ஏரியா தானா?”
“ஆமாங்க.” என்றான்.
“இங்க அடிக்கடி வருவிங்களா…?” என்றாள்.
“காத்தோட்டமா… நடக்கச் செய்வேன்க” என்றான் குரு.
“நான் காலையில வாக்கிங் போறச்ச இருக்க மாட்டிங்க. ஈவினிங் வாக்கிங்கா.” என்றதும் அசட்டுத் தனமாகச் சிரித்தான்.
“ஓகே பை கேட்ச் யூ லேட்டர்.” என்று போகவும்.
“அய்யோ அய்யோ… அந்தப் பொண்ணு என்னான்ட பேசிட்டு போகுது. இன்னா கலரு.” என்று பெருமூச்சோடு பார்த்து இரசித்தான்.
“ரொம்ப மூச்சு விடாதே எத்தனை லவ்வரு கீதோ.” என்ற பெண் குரல் கேட்டதும் திரும்ப, மஹா கையில் சுண்டல் டின்னோடு நின்றிருந்தாள்.
“நீயா.” என்று ஏளனமாகக் கடந்தான்.
“இன்னாது… நீயா..னு சலிச்சிட்டுகிட்டே போற. தோ பாரு குரு. லவ் சொல்லி ஆறு மாசம் ஆச்சு. என்னை மதிக்காம போற. இது நல்லதுகில்ல. என்கு என்ன குறை டா. பாரு ம்னு ஒத்த வார்த்தை சொல்லு காலம் முழுக்கச் சுண்டல் வித்து, மீன் வித்துக் கஞ்சி ஊத்தறேன்.” என்று ஒரு சுண்டல் பொட்டலத்தை நீட்டினாள்.
“தேங்ஸூ ஆனா உன்கும் என்கும் செட்டாகாது போ” என்று அவள் நீட்டிய சுண்டலை மட்டும் பிடுங்கி கொண்டு வாயில் ஒவ்வொன்றாய் மென்றபடி சென்றான்.
மஹாவோ இருட்டுவதற்குள் விற்றுவிட்டு கிளம்ப வியாபரத்தை நோக்கி கவனம் செலுத்தினாள்.
பட்டினப்பாக்கம் படகு ஒட்டிய இடத்தில் சாய்ந்து நன்றாக வானத்தைப் பார்த்து மல்லாந்து படுத்தவன். அந்தப் பொண்ணு காலையில வாக்கிங் வருமாமே. நாளைக்கு ஒருக்கா பார்க்கலாம்” என்றவன் மனம் எதுக்குப் பார்க்கணும் என்ற எதிர்கேள்வி கேட்கவில்லை. காலாட்டி கடலை இரசித்தவன் நேரம் கடக்க வயிற்றின்பசி சத்தம் கேட்க வீட்டை நோக்கி போனான்.
கடற்கரைக்கு நேரெதிரே ஓட்டு வீடு. ஓரே ஒரு அறை அதிலே சின்னதாய் தடுப்புக் கொண்ட சமையலறை, தன் தாய் துணி துவைப்பதை கண்டவன்.
“மொவ்… இன்னா இந்த நேரத்துல துவைக்கிற. சமைச்சியா இல்லையா.” என்றான் குரு.
“டேய் வீட்டு வேலை செய்யப் போன இடத்துல நேரமாச்சு டா. நேத்தே தொவைக்கலை. இப்ப தொவைச்சா தான் நாளைக்குக் காயும்.” என்று துவைப்பதில் ஆர்வம் காட்டினார்.
“அப்ப சமைக்கலையா.?” என்றான் ஏககடுப்பில்.
“அந்தா கீது பாரு. வெண்டாக்காய் புளிக்குழம்பு ஊத்தி சோறு தின்னு. வேலை செய்த இடத்துல குடுத்தாங்க.” என்றதும் “பே செமையா பசிச்சிது. நேரத்துக்கு வந்து ஒரு மீனு, கருவாடு வறுத்து ரசம் வைக்க மாட்ட” என்று சலிப்படைந்தான்.
“நான் நேரத்துக்கு வரணும்னா. நீ காலகாலத்துக்கு ஒரு வேலைக்குப் போகணும் டா.” என்று பேச எதிர்வாதம் வருமா இனி.
“ரேகம்மா இந்தா பிரியாணி எக்ஸ்டா இருக்கு.” என்று கொடுக்க “ஏண்டி உன்கு மட்டும் எப்படி அடிக்கடி எக்ஸ்டா வரும்.”
“ம்ம்… ஒரு பொட்டலம் வாங்கினா ஒரு பொட்டலம் ப்ரீ. புடி” என்றதும் “ஏண்டி வேலையா கீறேனு தெரிதுல அங்க வை. உள்ளாரா ஒருத்தன் பசிக்கு மீனு கொண்ட கருவாடு கொண்டானு சொல்றான் அவனுக்கு பிரியானி கொடு” என்றதும் உள்ளே வந்தவள் பிரியாணி பொட்டலத்தை குரு மடி மீது போட்டுக் கண் சிமிட்டி சென்றாள்.
அவனோ இவள் தாயிடம் பேசிய சேட்டையிலே புரிய துவங்கியது. அது தனக்கென வாங்கியிருப்பாளென.
அதற்குக் காதல் என்று பூசி மொழுகி உணரத்துவங்க அவன் மனம் பரபரக்கவில்லை. அவன் வயிறு மட்டும் எடுத்து சாப்பிடு என்று சொல்வதாக எண்ணி உண்ண துவங்கியிருந்தான்.
காதல் வேண்டாமாம். பிரியாணி சுண்டல் மட்டும் வேண்டுமா?
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
Nice epi அருமை அருமை…👌👌👌😊❤️
Intha story um nalla iruku.
Good start Nice 👌
Nice start
Ipo tha padika aarambikara…. Starting eh arumai sis 👌👌👌
nice!!!
Super start