Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல்-1

நிலவோடு கதை பேசும் தென்றல்-1

அத்தியாயம்-1

இன்று…

     கோயம்பேட்டில் சிக்னல் நிற்க எங்கிருந்தோ ஓடி வந்து ஏறினாள் தன்ஷிகா. படிக்கட்டில் ஏறியவள் கூந்தல் அலைபாய திரும்பி அங்கு இருந்த தோழிகளுக்கு விடைப்பெறும் பொருட்டு கை அசைத்தாள்.

      ”ஏய் பஸ் பிடிச்சிட்டேன்… மரியாதையா என் போனுக்கு 100 க்கு டாப் அப் பண்ணு சௌமி…” என்று மிரட்டி முறுவலித்தாள்.

       ”முதல்ல உள்ள போ.. படியில் நிற்காதே எருமை” என்று சௌமி சொல்ல தன்ஷிகா போலியாக கோவிப்பது போல கைகளை இடையில் வைத்து முறைத்தவள் படியில் ஏறும் பொழுது வைத்த பேக் எடுத்து பஸ்சினுள் ஏறினாள்.

    அங்கு டிக்கெட் கொடுப்பவர் தன்ஷிகாவை பார்த்து முறைத்து ”உள்ள போ மா..ஏற்கனவே பசங்க இப்படி பண்ணி உசிரை வாங்கறாங்க.. இதுல நீ வேறயா? காலங்காத்தல எங்குகிருந்து தான் வந்தியோ?” என்று சொல்ல ஜன்னல் அருகே சீட் இருக்க ஏறி அமர்ந்தவள்

     ”வந்தவாசி பக்கம் அங்க ஒரு மருதைகிராமம்” என்று டிக்கெட் எடுக்க டிக்கெட் கிழித்து கொடுக்க பெற்று கொண்டவள் அதனை வாட்ச் பட்டையில் சொருகி வைத்து தனக்கு பிடித்த பாடலை பதிவு செய்து இருந்தவைகளை எடுத்து போனில் ஒலிக்க விட்டு ஹெட் போனை காதில் புகுத்தி கொண்டாள்.

            இன்னும் நான்கு மணி அளவு நேர பயணம் அதிகாலை ஐந்து வேறு.. பாடலை இசைக்க விட்டு கொஞ்ச நேரத்திலே அந்த இசையின் பிடியில் கண் அயர்ந்தாள்.

        இரண்டு மணி நேர பயணம் சென்றதும் ஒரு இடத்திலே வண்டி நிற்க கண்டு கண்களை கசக்கி எழுந்திட கொட்டாவியை கையால் மறைத்து பின்னர் ஜன்னல் வழியே கண்களை திருப்ப இன்னும் தான் செல்ல இருக்கும் ஊருக்கு நேரம் இருக்கு என்றெண்ணி பையில் இருக்கும் நீரை எடுத்து குடித்தாள்.

         மீண்டும் ஹெட் செட் பாடலை கேட்டு ரசிக்க ஆரம்பித்தாள்.

      அதிலோ ‘இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக’ வந்தது எதற்காக என்றே பாடல் ஓட.. ‘நமக்கு பிறந்து இருக்கறது எங்க இருக்கோ’ என்றெண்ணியவள் ஹம் செய்து கொண்டே வந்தாள். அடுத்தடுத்து பாடலை பாடியவளுக்கு தெரியவில்லை இன்னும் சில மணி துளிகளில் அவளுக்கு அவன் அடையாளம் கண்டு விடுவோமென்று….

            தன்ஷிகா பற்றி சின்ன முன்னுரை கண்டு விடலாம்…

 அதற்குள்..
   தன்ஷிகா எம்‌எஸ்‌சி முடித்த கையோடு தங்கள் கிராமத்தில் ஏதேனும் ஆசிரியர் பணி பார்க்க ஆசையோடு வருகின்றாள். அக்கா அவந்திகா, மாமா கவியரசன், அம்மா கற்பகம், அப்பா கனகவேல். இது தான் அவளின் உலகம்.
           அதுவும் அக்கா அவளுக்கு மிகவும் பிடித்த உயிர். அக்கா சொல் தட்டமாட்டாள். அக்காவுக்கு குழந்தை இல்லை அது ஒரு குறை… அது என்னவோ தனக்கே அந்த குறை போல பாவித்து வேதனை கொள்வாள்.

     பள்ளி கல்லூரியில் பட்டாசு தான். இவளிடம் வம்பு செய்பவர்கள் நிச்சயம் மருத்துவமனையில் பெயர் பதிவு செய்து கொண்டு தான் இவளிடம் வம்பை வளர்க்கணும்.

        இந்த முறை படிப்பு எல்லாம் முடித்து முழுதாக சென்னைக்கு ஒரு பெரிய வணக்கம் வைத்து தான் ஊருக்கு கிளம்புகின்றாள்.

           போன முறையே கவியரசனிடம் எல்லா லக்கேஜையும் கொடுத்து விட முதுகில் ஒரு பையும் கையில் ஒரு பையும் மட்டுமே..

        இப்பொழுது ஊர் திருவிழாவுக்காக அக்கா வீட்டுக்கு நேராக செல்கின்றாள்.

     அவளின் அப்பா அம்மா கூட அங்கு இருப்பதாக சொல்லிட தன்ஷிகா தற்பொழுது அக்கா அவந்திகா வீட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றாள்.

          வேக வேகமாக ஹெட் செட் கழற்றி பையில் ஜீப்பில் திணித்து முதுகில் மாட்டும் பையை மாற்றி கொண்டாள். கையில் ஒரு பையை எடுத்து கொண்டு நிறுத்தம் வரும் முன்னே படியில் நிற்க போக டிக்கெட் கொடுப்பவரோ அவளை
     ”ஏம்மா நிறுத்தம் வந்ததும் இறங்க செய்துக்கலாம் எதுக்கு இப்படி படியில் நிற்கற?” என்று கேட்க நிறுத்தம் வந்ததும் இறங்காமல்
     ”எதுக்கா…? இந்த பஸ்சில் எத்தனை பேர் டிராவல் செய்வாங்க எல்லாரையும் உங்களுக்கு நினைவு இருக்கா? இருக்காது தானே அதான் என்னை நினைவு வச்சிகோங்க என் பெயர் தன்ஷிகா…. பை டிக்கெட்கார்…” என்றவள் பறக்கும் முத்தம் ஒன்றை உதடு குவித்து கொடுத்தாள். 

 அவரோ விசில் சத்தம் மட்டுமே கேட்டு நடப்பை உணர்ந்தார்.

       அந்த விசில் கூட தன்ஷிகா வாயில் கை வைத்து எழுப்பிய ஓசை என்று தாமதமாய் உணர்ந்தார் அவர்.

          முறுவலுடன் அவரோ பயணிக்க இங்கே கையை இடுப்பில் வைத்து கவியரசன் தன்ஷிகாவை முறைத்து கொண்டிருந்தான்.

         மெருண் வண்ண முழுக்கை சட்டை பட்டு வேஸ்டி முறுக்கேறிய புஜமும் வலிமையான தோள்களும் சிங்கம் போன்ற பார்வையும் இவளை கூர்ந்து முறைக்க கண்டு தன்ஷிகா ஒரு காதில் கையை வைத்து “சாரி மாமு… கொஞ்சம் அவனுக்கு என்னை மறக்காம இருக்கணும்ல அதான்.. சின்னதா இத்தனூண்டு சேட்டை…” என்று சொல்லியவளில் செய்கையில் புன்னகைத்தான். 

அந்த முறுவல் அவனின் முகத்திற்கு அதுவே பொருந்தும் அத்தனை அழகும் அதில் கவர்ந்தது.

      ”வாலு அதுக்கு பறக்கும் முத்தம் கொடுப்பியா…? ஏறு” என்று அவனின் சிகையை கை வைத்து அழுத்த அவன்  செயலுக்கு அடங்காத அவனின் கேசம் அலைபாய துவங்கியது.

      ”உங்களுக்கும் முத்தம் வேணுமா சொல்லுங்க கொடுக்கறேன் அதுக்காக இப்படி முறைக்காதிங்க” என்றதும் அவனின் இதழ் விரிந்தது.

      ”ஆனா அக்காவுக்கு தெரிந்து அக்கா ஓகே சொன்னா” என்று கண்ணடிக்க கவியரசன் முகம் இறுக்கத்தினை அடைந்தது.

       கொஞ்ச நேரம் பேசாமல் வந்தவன் அதே போல இருக்க “மாமா திருவிழா எப்படி இருக்கு? அம்மா அப்பா எப்போ வந்தாங்க? அக்கா எப்படி இருக்கா? எப்பவும் நான் வரும் பொழுது கூடவே இருப்பாளே? இப்போ ஏன் கூட்டிட்டு வரலை… மாமா அக்கா நல்ல செய்தி சொன்னாளா?” என்று கேட்க கேட்க காதில் எதையும் வாங்காமல் தன்னோட பாக்கெட்டில் இருக்கும் கயிறை குனிந்து அடிக்கடி பார்த்தபடி வந்தான்.

    கடவுளே நான் இவளுக்கு எப்படி புரியவைப்பேன்… என்று அமைதியாக வந்தான்.

           வீட்டுக்கு வந்ததும் யாரும் இல்லாமல் போக சாவி கொடுத்து என் ரூமில் மெரூன் கலர் பட்டு புடவை இருக்கும் போயி குளிச்சிட்டு அதனை கட்டிக்கிட்டு வா… உங்க அக்கா அங்க கோவிலில் இருக்கா… உன்னை குளிச்சு சேலை அணிந்து வர சொன்னா…” என்று நேரம் பார்த்தவன்
       ”பத்து முப்பதுக்கு நாம அங்க இருக்கணும் தன்ஷிகா” என்றான்.
       ”அடகடவுளே வந்த உடனே கலைப்பா இருக்கு ஒரு தூக்கம் போடலாம் என்று வந்தேன்… வந்ததும் கோவிலா? சரி இருங்க… எனக்கும் கோவிலில் ஒரு வேலை இருக்கு” என்று குளிக்க ஓடினாள்.
      தனது பாக்கெட்டில் இருக்கும் அந்த பொருளை தடவி தடவி பார்த்தான். அவனுக்கு வேர்த்தது. குளிக்க போனவள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாள். அதுக்கு பிறகு நடக்கும் நிகழ்வினை தாங்கி கொள்ள அவளுக்கு சக்தி கொடு மனபலம் கொடு இறைவா’ என்று எண்ணியவன் திரும்ப இமைக்காமல் பார்க்க வைத்திட செய்தாள் தன்ஷிகா.

     மெருன் கலர் பட்டு அவளின் தேகத்தினை தழுவி நிற்க அவளின் கேசம் தளர பின்னலில் இருந்தும் அவளின் நெற்றியை ஒரு முடி தவழ்ந்து கொஞ்சியது.

     கையில் இருக்கும் மூன்று முழம் மல்லியை கொடுக்க அதனை வாங்கியவள் தலையில் சுட ஏற்கனவே பட்டில் அருகே இருந்த நகைகளை அவள் அக்கா தான் எடுத்து வைத்து இருக்கின்றாள் என்றெண்ணி அணிந்து இருந்த தன்ஷிகா, அதில் அசல் கல்யாண பெண்ணாகவே தோற்றம் அளிக்க கவியரசன் இமைக்காமல் பார்த்தான்.

    ”ஏதேது பத்து முப்பது சொன்னிங்க இங்கயே நின்று கனவு காணறிங்க போங்க கோவிலுக்கு அப்போ தான் கனவு எல்லாம் பலிக்கும்” என்று சொல்லிட கவியரசன் முறுவலுடன் காரில் ஏறினான்.

      ”ஆமா இது என்ன கையில் கிருஷ்ணர் பொம்மை?” என்றான் கவியரசன்.

      ”அதுவா அக்கா குழந்தை பிறக்க இந்த கிருஷ்ணர் தொட்டில் பொம்மை வாங்கி வந்தேன். நம்ம ஊர் அரசமரத்தில் கட்ட” என்றதும் கவியரசனிடம் அதே அமைதி.

      அங்கே கோவிலில் கூட்டம் கொஞ்சம் போல இருக்க காரில் இருந்து  இறங்கியவளை கை பற்றி அழைத்து வந்தான் கவியரசன். பொம்மை எடுக்க போனவளை ”இங்க எல்லாரும் இருக்காங்க அப்பறம் எடுத்துக்கலாம்” என்று பதில் சொன்னான்.

           தன்னை எல்லோரும் புது மாதிரி பார்க்கின்றார்கள் என்ற யோசனயில் இருக்க தான் இன்று வந்தது.. அதுவும் இப்படி தனித்து வர இப்படி பார்ப்பது சகஜம் தான் என்றெண்ணி கொண்டாள்.
   தன்ஷிகா அம்மா அப்பா இருவரும் தன்ஷிகாவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்க கற்பகமோ நெற்றி சுழித்து சொடக்கிட்டாள்.

        அவந்திக்கா தான் நிலம் நோக்கி பார்வை பதித்தே இருக்க செய்தாள்.

             குருக்களிடம் ஆரம்பிங்க என்று சொல்லி விட அக்காவிற்காக வேண்டுதலில் கண்களை இறுக மூடி வேண்டுதலில் தன்ஷி இருக்க அர்ச்சனை தட்டில் கவியரசன் மஞ்சள் கயிறை வைத்தான்.

 தன்ஷிகாவோ வேண்டுதலில் தீவிரமாக இருக்க மஞ்சள் கயிறு ஏந்தி வந்த தட்டில் இருந்து அந்த கைகள் தன்ஷிகா கழுத்தில் மூன்று முடிச்சினை பொறுமையாக போட்டு முடித்தது.

         தனக்கு ஒருவன் தாலி அணிவித்து இருக்கின்றான் என்பதையே தன் மீது பூவும் அரிசியும் விழ இமை திறந்து பார்த்தவள் அந்நொடி தான் கண்டறிந்து கொதித்து எழுந்தாள். அதுவும் தாலி கட்டியவனை கண்டதும் பத்திர காளியாகவே மாறிப் போனாள்.

தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

7 thoughts on “நிலவோடு கதை பேசும் தென்றல்-1”

  1. Apdi yevandaaa kattunathu 🤔🤔🤔 first epi ye… Semma ponga…. But ipdi twist la muduchu eruka venaam😂… Waiting for next ud

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *