எங்கே இவர்களையெல்லாம் நாம் பார்த்தோம் என சிந்தித்தபடி நின்றிருந்தான் திவாகர். கண்கள் அவளது கழுத்தில் தவழ்ந்த மஞ்சள் கயிற்றைத் தீண்டி மீண்டது.
அவளைத் தொடலாமா.. அழைக்கலாமா.. எனத் தயங்கியபடி நின்றிருந்தான் திவாகர். அதற்குள் அந்த அறைக்குள் அவளைத் தேடிக்கொண்டு பாட்டியம்மாள் வந்துவிட, அவர் கையில் காபி டம்ளரைப் பார்த்தவன் ஆர்வமாகக் கைநீட்டினான்.
அவரோ, “உங்களுக்கும் வேணுமா தம்பி? கொஞ்சம் இருங்க… வேற எடுத்துட்டு வாரேன்.” என வார்த்தையை மட்டும் தந்துவிட்டு, நாசிதுளைக்கும் அந்த சூடான, மணம்மிக்க காபியை வானதியிடம் தந்தார்.
“கண்ணு… இந்தாம்மா.. நேத்திருந்து எதுவுமே சாப்பிடலையே.. காபியாச்சும் குடிம்மா… என் கண்ணில்ல…?”
‘இங்க ஒருத்தன் தவியாத் தவிக்கறேன் காபிக்காக, வேணான்னு சொல்லுறவ கிட்டப்போயி கெஞ்சிட்டு இருக்குது பாரு கிழவி!!’
அவள் எப்படியும் வேண்டாமென்பாள், வாங்கிக் குடித்துவிடலாம் என ஆவலுடன் நின்றான் திவாகர். அவளோ, கண்ணைத் துடைத்துவிட்டு, பவ்யமாகக் காபிக் கோப்பையை வாங்கி, அதன் வாசனையை முகர்ந்து, ஆசுவாசமாகி, மெல்ல ரசித்து அதைப் பருகத்தொடங்க, அவள் காபிஅருந்தும் அழகைக் கண்டவனது பசி இன்னமும் அதிகம்தான் ஆகியது.
ஏமாற்றத்துடன் வெளிக்கூடத்துக்கே திரும்பி வந்தான் அவன். இரண்டு மணியளவில் ஈமக்கிரியைகளை முடித்துவிட்டு வேதாசலமும் மற்றவர்களும் வந்துவிட்டிருந்தனர். தகன சடங்கு செய்ய ஆண்வாரிசு இல்லாததால், மின் தகனம் செய்துவிட்டு வந்திருந்தனர்.துக்கவீட்டில் நடந்த அவசரக் கல்யாணம் இப்போதுதான் அனைவரின் வாய்க்கும் அவலாகியிருந்தது.
சுற்றியிருந்தோர் ஏதேதோ கிசுகிசுக்க, வேதாசலம் மகனருகில் வந்தார்.
“போயி வானதிகிட்ட ஒருவார்த்தை ஆறுதல் சொல்லுப்பா.. கண்ண மூடி கண்ணத் தொறக்குற நேரத்துல, குடும்பத்தையே இழந்துட்டு அனாதையா நிக்கறா அந்தச் சின்னப் பொண்ணு. பாவம்யா… அவங்க குடும்பத்துக்கே செல்லப்பொண்ணு அது. அவளை அவிக அய்யனும், அண்ணனும் எப்படித் தாங்குவாங்க தெரியுமா? இப்ப திடீர்னு அவங்களெல்லாம் இல்லைன்னு சொன்னா, அவளோட நிலமை எப்படியிருக்கும், யோசிச்சுப் பாரு…யாரும் அப்படி அனாதையா ஆகக்கூடாது திவா. இனி அவ நம்ம குடும்பத்துல ஒருத்தி. உன்னோட மனைவி. இனி நீதான் அவளோட ஆறுதல். உனக்கு இதையெல்லாம் ஏத்துக்கக் கஷ்டமாகத் தான் இருக்கும்… இருந்தாலும், அவளை நினைச்சு, கொஞ்சம் பெரியமனசு பண்ணுப்பா…”
கெஞ்சுதலாகக் கேட்கும் தந்தையைப் பதறிப்போய்த் தடுத்தான் அவன்.
“என்னப்பா… செய்னு சொன்னா நான் செய்யப்போறேன். அதுக்கு ஏன்… பெரிய வார்த்தையெல்லாம்…”
அவர் பேச்சை மீறாமல் மீண்டும் வானதியின் அறைக்கே சென்றான் அவன். அதற்குள் அந்தப் பாட்டியின் உதவியுடன் தனது பொருட்களை ஓரளவுக்கு திரட்டி முடித்திருந்தாள் அவள். மேற்கொண்டு பேச்சுகளின்றி, கண்ணீருடன் அவள் முகத்தை வருடிக்கொடுத்துவிட்டு அந்தப் பாட்டி புறப்பட்டுவிட, ஏனைய உற்றார் உறவினர்களும் வேதாசலத்திடமும் வானதியிடமும் ஆறுதல் சொல்லிவிட்டுப் புறப்பட, குனிந்த தலையை நிமிராமல் வீட்டைப் பூட்டிவந்து திவாகருடன் காரில் அமர்ந்துகொண்டாள் வானதி.
வழிநெடுகிலும் மௌனமாய் கண்ணீர்விட்டபடியே வந்தவளைப் பார்த்தபோது பாவமாகத்தான் இருந்தது அவனுக்கும். முத்துப்பட்டியை அடைந்தபோது, வீட்டு வாசலில் தாய் மீனாட்சி கண்ணில் கவலையோடும் கையில் நல்லெண்ணைக் கிண்ணத்தோடும் நின்றிருந்தார். உடன் அண்ணி பானுமதியும் நின்றிருந்தார். வானதி மீனாட்சியைக் கண்டதும் ஓடிச்சென்று அவரை அணைத்துக்கொண்டு மீண்டும் அழத்தொடங்க, அவர் விழிகளிலும் நீர் கசிந்தது. திவாகருக்கு தான் நரகத்தில் நிற்பதுபோல் இருந்தது. தன் விருப்பமின்றி நடந்துமுடிந்த திருமணம் ஒருபுறம், தன்னால் கைவிடப்பட்ட காதலியின் குமுறல் ஒருபுறம், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருக்கும் பசி ஒருபக்கம்!
கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு தூரத்து வானத்தை வெறித்தபடி அவன் நிற்க, வேதாசலம் மனைவியையும் மருமகளையும் தேற்றும் வழிதெரியாமல் அவர்களுடன் மௌனமாக நின்றார். மணி மூன்று ஆகியிருக்க, அவருக்குமே பசிக்கத்தான் செய்தது.கணவனின் மனமறிந்த மனைவியாய், அவர்களை சீக்கிரம் தீட்டுக் கழித்து உள்ளே அழைத்துச்செல்லும் வேலைகளைத் தொடங்கினார் மீனாட்சி. செட்டிநாட்டு வீடென்பதால் அகன்ற முன்வாசலும், உயர்ந்த திண்ணைகளும், முன்பகுதியில் விசாலமான வாசல்நிலமும், சாணம்பூசி மெழுகப்பட்டிருந்த தரையும் சேர்ந்து ஒரு அரண்மனைபோல இருந்தது அவர்கள் இல்லம்.வானதிக்கும் திவாகருக்கும் தலையில் நல்லெண்ணை தேய்த்துவிட்டவர், இருவரையும் வெளிமுற்றத்தில் போட்டிருந்த பலகையில் அமரவைத்து, தண்ணீர் ஊற்றி, வேப்பிலைகள் பறித்துவந்து, இருவருக்கும் சடங்கு சுற்றிவிட்டார்.
திவாகரையும் வானதியையும் தம்பதியாக நிற்கவைத்துப் பார்த்த மீனாட்சிக்கு, ஆனந்தக் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
“அம்மா வானதி… நீ இந்தவீட்டு மருமகளா வாரதுக்கு நாங்க குடுத்து வெச்சிருக்கணும்மா. எதை நினைச்சும் மனசைக் குழப்பிக்காத கண்ணு… நாங்க இருக்குறோம் உனக்கு”
இருவரையும் நிற்கவைத்து ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்தனர் மீனாட்சியும் பானுவும். மெல்லிய விசும்பலுடனே நின்றிருந்தாள் வானதி. ஈரம் சொட்டச் சொட்ட அவளருகில் நின்றிருந்த திவாகருக்கோ, உள்ளே பெருநெருப்பே கனன்றுகொண்டிருந்தது. ஆரத்தி எடுத்துமுடிந்ததும் விறுவிறுவென உள்ளே நுழைந்து தன்னறைக்குச் சென்று கதவடைத்துக்கொண்டான் அவன். ஆயினும் அவனைக் கவனிக்கும் ஆர்வமோ, மனநிலையோ அங்கே யாருக்கும் இருக்கவில்லை. வேலைக்காரப் பொன்னையன் வானதியின் பெட்டிகளை எடுத்துச்செல்ல, திவாகரின் அறைக்கதவு பூட்டியிருப்பதால் அதை பானுவின் அறையில் வைக்குமாறு கட்டளையிட்டார் மீனாட்சி.
பானு பரிவுடன் வானதியை உள்ளே அழைத்துச் சென்று குளியலறையைக் காட்டி, மாற்றுடைகளையும் பையிலிருந்து எடுத்துத் தந்தாள்.வானதிக்கு அவளை எப்படி அழைப்பதெனத் தெரியாமல் தடுமாற, பானுவே, “நான் திவாவுக்கு அண்ணி. பானுமதி. நீ என்னை அக்கான்னே கூப்பிடலாம்மா. மாமா நடந்ததை எல்லாம் ஃபோனுல சொன்னாக.. உனக்கு யாரும் இல்லைனு மட்டும் நினைச்சுக்காத.. இது இனி உங்க வீடும்மா. நாங்க எல்லாரும் இருக்கறோம் உனக்காக” என ஆறுதலளித்தாள். தலைமுழுகி, உடைமாற்றி, ஒரு மெல்லிய நீலநிற காட்டன் சுடிதாரில் அவள் வர, மீனாட்சி அவளைப் பூஜையறைக்கு அழைத்தார். அவள் தயங்கியபடி வாசலிலே நின்றாள்.
அதற்குள் வேதாசலமே, “கோவிலுக்கு போறத்துக்குத்தான் கட்டுப்பாடு. இது நம்ம வீடு, நம்ம சாமி. நீ தாராளமா உள்ள போலாம். மனசார வேண்டிக்கிட்டு விளக்கை ஏத்தும்மா” என அனுமதி தர, அவர் பேச்சை மறுக்காமல் அவர் கூறியபடி செய்தாள் அவள். நெற்றியிலும் தாலியிலும் பானுமதி குங்குமத்தை இட்டுவிட்டாள். அவள் தலையை வாஞ்சையோடு வருடிய மீனாட்சி, “எப்படி வளர்ந்துட்ட… உன்னைப் பாத்தே வருஷக்கணக்கா ஆயிடுச்சு. என்னால இன்னைக்கு கடைசி சடங்குக்குக் கூட வரக்கூடாமப் போயிடுச்சு..” எனப் பேசப்பேசவே கண்ணீர் வடிக்க, வானதிக்கும் கண்ணீர் வந்தது.
“அட, இப்பதான் பிள்ளை அழுகைய நிறுத்துச்சு.. அதுக்குள்ள என்ன பேச்சு பேசறவ..!?” என வேதாசலம் அதட்ட, தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவளை சாப்பாட்டு மேசைக்கு அழைத்துப்போனார் மீனாட்சி. அதற்குள் எதிரில் திவாகரும் சாப்பிடத் தயாராக வந்துவிட, தந்தையும் தாயும் ஒரு அதிருப்திப் பார்வையைத் தெளித்துவிட்டு வானதியை அவனருகில் அமரவைத்தனர். மீனாட்சியும் பானுமதியும் எவ்வளவோ வற்புறுத்தியும், இரண்டு விள்ளலுக்குமேல் சாப்பிட மறுத்துவிட்டாள் அவள். திவாகரோ இதுவரை சாப்பாட்டைப் பார்த்திராதவன்போல அள்ளியெடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“வானதி.. நீ போயி தூங்கி ரெஸ்ட் எடும்மா. சாயந்திரம் ஜோசியர் வருவாரு, ஜாதகம் பார்த்து, பொருத்தம், பரிகாரம் எல்லாம் பார்த்து, வரவேற்புக்கு நல்ல நாள் குறிக்கணும்… கல்யாணம்தான் அவசரத்துல நடந்துடுச்சு. உங்கப்பா உன் கல்யாணத்துக்கு எத்தனை கனவு வச்சிருந்தாரோ…”
மீண்டும் மீனாட்சி காயத்தைத் தொடும்படி பேசவும், வேதாசலம் முறைத்தார். வானதி தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு, “இப்போதைக்கு எதுவுமே வேணாம்” எனக் கூறிட, அவளது குரலில் தொனித்த உறுதியிலும் கோபத்திலும் துணுக்குற்றான் திவாகர். அவளை மேலும் கட்டாயப்படுத்தாமல், அமைதியாகிவிட்டனர் வேதாசலமும் மீனாட்சியும். அதுவே திவாகருப் புதிதாக இருந்தது. அன்னையும் தந்தையும் ஒருபொழுதும் தாங்கள் நினைத்ததை நடத்திமுடிக்காமல் இருந்ததே இல்லை. கரைக்கும் விதத்தில் கரைத்துக் கல்லையே கரையச் செய்து காரியம் சாதிக்கும் சாதுர்ய மனிதர்கள். அண்ணனின் திருமணத்தை எப்படி நடந்தினார்கள் என்பதை அருகிலிருந்து பார்த்தவன் அவன்.
எனவேதான் தன் திருமணத்தைப் பற்றி அலைபேசியில் சாடைமாடையாக அவர்கள் பேசத்தொடங்கிய அடுத்தநாளே விமானம் பிடித்து ஊருக்கு வந்திருந்தான் அவன், தன் காதலைப் பற்றிப் பக்குவமாக வெளியிட. எப்படியும் ஒரு பூகம்பம் நடக்குமென ஊகித்து, அதற்குச் சிறிது தயாராகவே வந்திருந்தான். ஆனால் இப்படிப் பிரளயமே வெடிக்குமெனக் கனவிலும் நினைக்கவில்லை அவன்.
வானதி சாப்பிடாமல் எழுந்துசெல்ல, வேதாசலம் மகனைக் குற்றஞ்சாட்டும் பார்வை பார்த்தார். அந்தப் பார்வையே அவனை நடுங்கவைத்தது.
“உன் பொண்டாட்டியை உன்னோட ரூமுக்கு அழைச்சிட்டுப் போ தம்பி.”
கேள்வியாகக் கேட்காமல் கட்டளையாகத் தந்துவிட்டு அவர் திரும்பிவிட, திவாகருக்குக் காரணமின்றி அவள்மீது வெறுப்பு வந்தது.