அத்தியாயம்- 1
மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து துணைச்சாலைக்குள்
நுழைந்தது அந்தச் சிவப்பு பொலெரோ கார்.
காலை வெளிச்சம் கண்ணாடிகளில் பட்டுப் பிரதிபலிக்க, சீரான வேகத்தில்
வண்டி சென்றுகொண்டிருக்க, எவ்வித இரைச்சலுமின்றி நிசப்தம்
நிலவியது காரினுள்.
ஓட்டுனர் சம்பளத்திற்கு வேலை செய்பவர் என்பது அவரது
உடல்மொழியிலேயே தெரிந்தது. அவரது பணிவான உருவத்திற்கு
நேரெதிராய், அவரது அருகில் அமர்ந்திருந்தவரது கம்பீரமான உடல்வாகு
இருந்தது. அகவை ஐம்பதைத் தொட்டிருந்தாலும் இன்னும் தேகத்தில்
குறையாத முறுக்கும் கண்களில் அழியாத ஒளியும் இருந்தது அவரிடம்.
பின்சீட்டில் அமர்ந்திருந்த வாலிபனோ அந்த மண்ணுக்கும் மனிதருக்கும்
எவ்விதத் தொடர்பும் இல்லாதபடி இருந்தான். கருப்பு ஜீன்சும் இளமஞ்சள்
சட்டையும் அணிந்து காதில் இயர்பாட் மாட்டி, வெறும்வாயை மென்றபடி,
கைபேசியின் தொடுதிரையில் லயித்திருந்தான் அவன். முகத்தில் தெரிந்த
அமெரிக்கச் சாயல் கண்கூசச் செய்யுமளவு முரண்காட்டியது. முன்னால்
அமர்ந்திருந்தவரின் மகன் தான் நான் என்று இவன் சத்தியம் செய்தால் கூட
நம்ப முடியாது.
“தம்பி.. காலைல சாப்ட்டுட்டு தானே வந்த?”
பெரியவர் வேதாசலம் தனது சீட்டிலிருந்து திரும்பி மகனிடம் கேட்க, அந்த
சீமந்தப் புத்திரனோ இயர்பாட் மாட்டியிருந்ததால் காதுகேளாதவன்
போலவே அமர்ந்திருந்தான். தான் கேட்டதற்குப் பதில் வராமல் போகவே
தனக்குள் முனகிக்கொண்டு இன்னும் சத்தமாக அவளை விளித்தார் அவர்.
“தம்பி திவா!!”
வேறு எவரும் இப்படி அவரை அவமதித்திருந்தால் நடப்பதே வேறு. மகன்
என்பதனால் அவனை மன்னிக்க மட்டுமே முடிந்தது அவரால். ஓட்டுனரும்
இந்த சம்பாஷணையைக் கவனித்தாலும், முதலாளி மீது கொண்ட
பயம்கலந்த மரியாதையால் அமைதியாக இருந்தார்.
மூன்றாவது முறையாகக் கூப்பிட்ட போது தெய்வத்தின் அருளால் அவன்
செவிகளை அவரது குரல் எட்ட, இடது காதிலிருந்து இயர்பாடைக்
கழற்றிவிட்டு அவசரப் பணிவுடன், “அப்பா.. என்னப்பா?” என்றான் திவாகர்
என்ற அந்த யுவன் .
“நாம போற இடத்துல கொஞ்சம் நேரமாகும்ப்பா. அதான் காலைல
சாப்டியான்னு கேட்டேன்..”
“ஓ.. அம்மா குடுத்தாங்கப்பா. ரூம்லயே சாப்பிட்டேன்”
“ஒரு நாள் எல்லார் கூடவும் வந்து உக்காந்து சாப்பிட்டா நாங்க
வேணாமுன்னு சொல்லிடுவோமா என்ன?”
அவன் அசட்டையாகச் சிரித்தான்.
“எல்லாரும் பயங்கர எர்லியா சாப்டறீங்க.. எனக்கு ஜெட்லாக் ஆகுதுப்பா”
“என்ன தம்பி.. ஊருக்கு வந்து ஒருவாரம் ஆகப்போகுது. இன்னும் அந்த
வியாதி சரியாகலையா?”
அப்பாவின் அறியாமைக்காகத் தனக்குள் சலித்துக்கொண்டு, “அது வியாதி
எல்லாம் இல்லப்பா.. சும்மா ஒரு கண்டிஷன். அவ்ளோதான். நான் இங்க
கண்டிஷன் ஆகிட்டா அப்பறம் திரும்பிப் போகும்போது அங்க கஷ்டமா
இருக்கும்” என விளக்கமளித்தான் அவன்.
அன்னியதேச வாழ்க்கைக்காக சொந்த வீட்டில் உறவுகளை மதிக்காமல்
தான்தோன்றித்தனமாகத் திரியும் மகனை நினைத்து வருத்தம்தான்
கூடியது அந்தப் பெரியவர் மனதில்.
அந்த அமெரிக்க ஆடவன் மீண்டும் தன் காதை இயர்பாட்-ஆல்
அடைத்துக்கொண்டு தன்னுலகில் மூழ்கிக்கொண்டான். சட்டென அவனது
கைபேசி அதிர்வலைகள் தர, திரையில் தெரிந்த எண்ணைப் பார்த்ததும்
அவன் முகம் மாறியது. அழைப்புப் பொத்தானை தொட்டுவிட்டு காதில்
மாட்டியிருந்த கருவியின் மூலமே பேசினான் அவன்.
“ஹெலோ..”
“டார்லிங்.. ஊருக்குப் போனதும் என்னை மறந்துட்டியா?”
நுனிநாக்கு ஆங்கிலத்தில் கிளிப்பேச்சுப் போல எதிர்முனையில் குரல்
ஒலிக்க, அவளது குரலையும் தாண்டி டிஸ்கோ இசை காதைக் கிழித்தது.
நல்லவேளை இயர்பாடில் அழைப்பை ஏற்றோம் என
சந்தோஷப்பட்டுக்கொண்டான் அவன்.
“ஹேய்.. நான் அப்பா கூட கொஞ்சம் வெளிய வந்திருக்கேன். நான்
வீட்டுக்குப் போய்ட்டுக் கூப்டறேன்”
அவனும் ஆங்கிலத்திலேயே குரல்தாழ்த்தி பதிலளித்தான். காரில்
அமர்ந்திருந்த மற்ற இருவருக்குமே தான் பேசுவது புரியாது என்று
நன்றாகவே தெரியும் அவனுக்கு.
“டார்லிங்… நாம பேசி மூணு நாளாகுது. எப்ப கூப்ட்டாலும் அஞ்சு
நிமிஷத்துக்கு மேல பேச மாட்டேங்கற, என்னதான் பண்ணுறியோ அங்க!”
“ஏய்.. நான் என்ன பண்ணுவேன்! எங்க அப்பா கிராமத்துல பெரிய மனுஷர்.
இங்க அவரைக் கேட்டுத் தான் ஊர்க்காரங்க எதுன்னாலும் செய்வாங்க.
அவர்கூட நான் ஒழுங்கா டைம் ஸ்பெண்ட் பண்றதில்லையாம். அதான்,
அவரைப் பத்தித் தெரிஞ்சுக்கறதுக்காக அவர் கூடவே இன்னிக்கு
என்னையும் கூட்டிட்டுப் போறார். ஏதோ இழவு வீடாம். நாங்க போய் ஆறுதல்
சொல்லணுமாம்.. இந்த மக்களும் இவங்க பழக்கங்களும்..”
அவன் பேசுவது புரியவில்லை என்றாலும் அவனது தொனியில் யாரையோ
இகழ்கிறான் என்று நன்றாகப் புரிந்தது பெரியவருக்கு. மகன்
தாய்மண்ணைப் பற்றி அன்னிய மண்ணிடம் தூற்றுவதை நினைத்து
வருந்த மட்டுமே முடிந்தது அவரால்.
சிறுவயதில் இருந்தே ஆங்கில மோகம் தன் இரு மகன்களையும்
ஆட்கொண்டுவிட, அவர்களது ஆசைக்குத் தடைபோட இயலாமல் தந்தை
அன்பால் அவர்களது விருப்பத்திற்கு விட்டுவிட்டார். விளைவு, மூத்த மகன்
அரேபியாவிலும், இளைய மகன் அமெரிக்காவிலும் வேலை. வருடத்திற்கு
ஒரு முறை மட்டுமே குடும்பத்தாருக்குத் தலைகாட்டிவிட்டு மீண்டும்
தங்களது கூட்டுக்குப் பறந்துவிடுவர் இருவரும். அவரது ஒரே ஆறுதல்
பள்ளியில் பயிலும் தனது கடைக்குட்டி மகள்தான். ஆனால் அவளும்
வேறொரு வீட்டுக்கு வாழப்போக வேண்டியவளாயிற்றே!
இம்முறை இளையமகன் ஏதோ முக்கியமான விஷயம் என்று ஒருமாதம்
முன்னதாகவே விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்துவிட,
தன்னையும் தன்மக்களையும் பற்றி அவன் புரிந்துகொள்ள வேண்டும்
என்பதற்காக அவனைத் தன்னுடனே தன் வேலைகளுக்கெல்லாம்
அழைத்துச் செல்கிறார் அவர். நேற்றுத் தங்கள் குலதெய்வம் கோவிலுக்குக்
கூட்டிச் சென்றபோதும் எங்கும் வராமல் மதில்சுவரில் அமர்ந்து
கைபேசியுடனே உறவாடிக்கொண்டிருந்து அவரை
வேதனைப்படுத்தினாலும், தளராமல் இன்று அவனை அழைத்துக்கொண்டு
செல்கிறார்.
மகனுக்கோ அப்பாவின் மனச்சங்கடங்களை உணரமுடியாமல் அவனது
பிரச்சனைகள் இருந்தன. அதைப்பற்றித் தான் உரையாடிக்
கொண்டிருந்தான் தற்பொழுது.
“டார்லிங்.. நீ போய் ஆறு நாள் ஆகுது. இன்னுமா நம்ம லவ் மேட்டர உங்க
வீட்டுல சொல்லல… எப்படா சொல்லப் போற, இதுக்காகத் தானே ஒருமாசம்
முன்னாடியே போன?”
“நீ நினைக்கற மாதிரி இது ஒண்ணும் ஈஸி இல்ல. எங்க அப்பா கோபப்பட்டா
என்ன நடக்கும் தெரியுமா?
அப்றம் எங்க அம்மா. அவங்க ரொம்ப பாவம்டி. இந்த ஒரு வாரம் எப்படிப்
பாத்துப் பாத்து எனக்கு எல்லாம் செஞ்சாங்க தெரியுமா?
எங்க குடும்பத்தில எப்பவுமே பெரியவங்க பாத்து நிச்சயம் பண்ணித் தான்
கல்யாணம் பண்ணுவாங்க. நான் போய் திடீர்னு ஒரு பொண்ணை
விரும்பறேன்னு சொன்னா எல்லாரும் எவ்ளோ ஷாக் ஆவாங்க…
அம்மா ரொம்பவே வருத்தப்படுவாங்க. அதான்.. சரியான டைம் பாத்து
ஸ்மூத்தா இந்தப் பேச்சை எடுக்கலாம்னு இருக்கேன். சும்மா
அவசரப்படுத்தாத..”
கிசுகிசுக் குரலில் அப்பாவுக்குக் கேட்டுவிடக் கூடாதென்று அதிவேகத்தில்
வார்த்தைகளை போனுக்குள் அனுப்பினான் அவன். அப்பா என்றால்
மிகவும் மரியாதை தான் அவனுக்கு. சிறுவயதில் அப்பாவின் முறுக்கு
மீசைக்கும் மிரட்டும் விழிகளுக்கும் பயப்படாத நாளே இல்லை.
அவளிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன், கார் இப்போது
கிராமத்திற்குள் நுழைந்திருப்பதைக் கண்டான். தெருக்கள் திரும்பியபோது,
இங்கெல்லாம் தான் முன்னரே எப்போதோ வந்திருந்ததுபோல்
உணர்ந்தான் திவாகர். பெரியவர் புரிந்ததுபோல் அவனைத் திரும்பிப்
பார்த்தார்.
“இந்த இடம் ஞாபகம் இருக்கில்ல திவா? உனக்கு அஞ்சு வயசு ஆகறவரை
நாம இங்கதான் குடியிருந்தோம்..”
“ம்ம்..”
படிகம்போல் தெளிவான ஞாபகங்கள் இல்லாவிட்டாலும், மங்கலான
புகைமண்டிலம்போல் ஏதோ இருந்தது அவனுள்.
ஒரு வீட்டின் முகப்பில் வண்டி நின்றதும் இருவரும் இறங்கி உள்ளே
சென்றனர். பலரும் வந்து தந்தையை வணங்கிவிட்டுக் கைகளைப்
பிடித்துக்கொள்வதைப் பார்த்தான் அவன். தந்தையின் முகத்திலும் ஒருபாடு
சோகம் சேர்ந்துகொண்டதையும் கண்டவன், அப்படி யார்
இறந்துபோயிருப்பார் எனத் தெரிந்துகொள்ள விரும்பினான்.
தங்களுடன் வந்த ஓட்டுனரிடம் திரும்பி, “அங்கிள்.. அப்பாவுக்குத்
தெரிஞ்சவரா?” என சன்னமான குரலில் கேட்டான் அவன்.
அவரும் தாழ்வான குரலில், “ஆமாங்க தம்பி. உங்கய்யாவுக்கு ஆரம்ப
காலத்தில நெறயா உதவி பண்ணினவிக. நல்ல சிநேகிதரு. குடும்பத்தோட
ஆக்ஸிடண்ட்ல இறந்துட்டாங்க.. பாவம் தம்பி.. உங்களுக்குக் கூட அவிக
மகனைத் தெரியுமுன்னு நினைக்கறேன்..” என்றார்.
அமெரிக்க நண்பர்களைத் தவிர வேறு எவரையும் பெரிதாக
நினைவில்கொள்ள சிரமப்படவில்லை அவன். எனவே தலையை மட்டும்
அசைத்துவிட்டு, அப்பாவுடன் உள்ளே சென்றான்.
மூன்று சடலங்கள் வீட்டின் நடுவே கிடத்தப்பட்டு வெள்ளைத்துணி போட்டு
மூடப்பட்டிருக்க, எழுந்த முகச்சுழிப்பை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு
நின்றான் திவாகர். கூடமெங்கும் பெண்கள் ஒப்பாரி வைக்க, படிக்கட்டில்
உலகின் மொத்த சோகத்தையும் தாங்கிக்கொண்டு முழங்காலில்
தலையைக் கவிழ்த்தபடி கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஒரு
இளம்பெண்.
“அழாதம்மா வானதி..” எனத் தேற்றியபடியே அவளிடம் சென்றார்
வேதாசலம்.
-Madhu_dr_cool
Wowww… Startingae romva nalla irukku. Super super 🥰🥰🥰
Thanks for reading. Keep supporting!
Super start…. 🥳
Thanks. Pls keep supporting. ✌️
STARTED NICE
Thank you
Good start
Super pa nice starting 👌
Good start👍👍👍