Skip to content
Home » நீயன்றி வேறில்லை-7

நீயன்றி வேறில்லை-7

தந்தையின் கட்டளைக்கிணங்க வானதியை தன் அறையில் தங்கிக்கொள்ள ஏற்றுக்கொண்டான் திவாகர்.

இன்னும் உயிர்ப்பிக்காத அலைபேசியும், இதயத்தை உறுத்தும் ரூபாவின் நினைவுகளுமே அவன் மனதை ஆக்கிரமித்திருக்க, வானதியை ஏறிட்டுப் பார்க்கவும் தோன்றவில்லை அவனுக்கு.

தனிமைவிரும்பி அவன்.

எனவே பால்கனிக்குச் சென்று தன் விதியை நினைத்து கலங்கிக் குழம்பி, தன் தலையைக் கைகளில் தாங்கியபடி நின்றிருந்தான். யாரோ தன்னைப் பார்த்ததுபோல் உணர்ந்து அவன் திரும்ப, அதே நேரத்தில் வானதியும் அறைக்குள் போகத் திரும்ப, அவளைக் கவனித்துவிட்டவனுக்கு, அவளுடன் நடந்த உரையாடல்கள் மீண்டும் சிந்தனைக்கு வந்தன.

அவளைத் தெரியவில்லை எனக் கூறியபோது ஏன் முறைத்தாள்? அவளை எங்காவது பார்த்திருக்கிறோமா? முகத்தைப் பார்த்தால் ஏதேதோ நினைவடுக்குகளில் அடிக்கடி ஒளிந்து விளையாடும் முகம்போல இருக்கிறதே.. அவர்கள் குடும்பப் புகைப்படத்தைக் கண்டபோதுகூட ஏதோ மறந்ததை நினைவுபடுத்த சிரமப்படும் உணர்வு வந்ததே

உண்மையில் இவள் யார்? அப்பாவின் இத்துணை நெருங்கிய நண்பர் குடும்பமென்றால், ஏன் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட அவர்களைப் பற்றிப் பேசவில்லை அவர்? திடீரென இன்று, அவர்கள் இறந்துவிட்ட பிறகு, எங்கிருந்து வந்தது உறவும் பாசமும்? அம்மா  கூட என்னிடம் எதுவுமே சொன்னதில்லையேஆனால் வானதியை தான் பெற்ற மகள்போல ஆராதிக்கிறாரே?

என்மேல் ஏதோ கோபத்தில் இருப்பதுபோல் தோன்றுகிறது.. அதுவும் ஏன் என்ன என்று ஒன்றும் புரியவில்லை. இருக்கிற குழப்பங்களில் அதுவும் சேர்ந்து கழுத்தறுக்கிறது! சே!’

அவளிடமே கேட்டுவிடலாம் என வேகமாக உள்ளே வந்தான் அவன். ஆனால் அவள் முகத்தைப் பார்த்ததும் மீண்டும் சிந்தனைச் சங்கிலி அறுபட, அவளை எங்கே பார்த்திருக்கிறோமென மீண்டும் முதலிலிருந்து யோசிக்கத் தொடங்கினான். அவளது பார்வையை உணர்ந்து, மெல்லத் திணறி, “எக்ஸ்க்யூஸ்மீ… என்னை.. நான்.. யாருன்னு.. உன– உங்களுக்கு முன்னாலவே ஏதாவது தெரியுமா?” என்று கேட்டுவிட்டான்.

அவனை விழிவிரித்து ஆயாசமாக ஒருகணம் பார்த்தாள் அவள்.

பின், கோபமுகத்துடன், “என்னை மறந்தமாதிரி உன்னை நான் மறக்கறதுக்கு எனக்கு எவ்வளவு நாளாகிடும்? உன் நினைப்பே எனக்கு வேணாம்! சே!!” என்று பொரிந்துவிட்டு அவள் வெளியேற, நாம் என்ன தவறாகக் கேட்டுவிட்டோம் எனப் புரியாமல் திகைத்துநின்றான் திவாகர்.

கண்முன்னால் இருப்பதை எப்போது வேண்டுமானாலும் சமாளிக்கலாம்… காணாத தூரத்தில் இருக்கும் காதலியை, ப்ச், முன்னால் காதலியை இப்போது சமாளிப்போம் என்று முடிவெடுத்து, கைபேசியை உயிர்ப்பித்தான் அவன்.

குறுஞ்செய்திகள் எண்ணிக்கை நூறைத் தொட்டிருந்தது. அழைப்புகளும் குறையாமல் வந்திருந்தது.

முதலில் கெஞ்சலாகவும் அழுகையாகவும் வந்த செய்திகள், கொஞ்சகொஞ்சமாய் கோபமும் ஏமாற்றமும் கலந்து, இறுதியில் சோகத்திலும், நிதர்சனத்தை ஏற்று அமைதியிலும் முடிந்திருந்தன.

‘I understand. Goodbye DV’

நான்கு மணி நேரத்தில் இத்தகைய பக்குவமான மனப்போக்கில் இந்த சோகத்தை சமாளித்த ரூபாவை நினைத்து மனதில் நிம்மதி பிறந்தாலும், ஒருவருடக் காதல்..  அது வெறும் நான்கு மணிநேரத்தில் முற்றுப்பெற்றதை நினைத்தபோது துணுக்குற்றான் அவன்.

ரூபாவுக்கு மீண்டும் அழைத்தபோது இணைப்புக் கிடைக்கவில்லை.

அதுவே அவள்தரும் பதிலாக ஏற்றுக்கொண்டு, அவளது எண்ணைக் கைபேசியிலிருந்து அழித்தான் அவனும்.

ரூபாஎன்னை மன்னித்துவிடு. கணநேரத்தில் முடிந்துபோய்விட்டதால் இந்தக் காதல் பொய்யென ஆகாது. உன்னுடன் நான் கொண்டிருந்த பந்தம் நிஜமானது, ஆண்டாண்டு காலத்துக்கும் அழியாதது. உன்னுடன் கழித்த ஒவ்வொரு நொடியுமே எனக்கு இன்பம்தான்

முடிந்துபோகுமென முன்னரே தெரிந்திருந்தால், உன் நேரத்தை வீணடித்து, உன் மனதைப் புண்படுத்தியிருக்க மாட்டேன். முழுக்க முழுக்க என் தவறுதான் இது. அதற்காக என்னால் செய்யமுடிந்த ஒரே பிராயச்சித்தம், உன்னை அணுகாமல் இருப்பதே, உனக்கான இடைவெளியை உனக்குத் தருவதே.

உன்னை மறக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால், நீ இல்லாத வாழ்க்கை நிச்சயமாக முன்போல் இருக்காது. உனக்காக என் மனதில் நான் அளித்த இடம், ஒரு வெற்றிடமாகவே எப்போதும் இருக்கும்…’

கண்ணீர் கண்ணோரம் திரள, அதை வழியவிடாமல் துடைத்துவிட்டு, தன் கணினியின் முன் அமர்ந்து, எவ்வளவு சீக்கிரம் தன்னால் அமெரிக்கா செல்ல முடியுமெனப் பார்க்கத் தொடங்கினான் அவன்.

__________________________________

கோபமும் அழுகையும் மனதினுள் போட்டிபோட, அவனது அறையிலிருந்து வெளியேறி, பானுவின் அறைக்குள் வந்து நின்றாள் வானதி.

ஹரிணியும் பானுவும் ஏதோ பேசிக்கொண்டிருக்க, இவளைப் பார்த்ததும் பரிவுடன் அழைத்துத் தன்னருகில் அமரச் சொன்னாள் பானு.

“என் சொந்த ஊரு மானாமதுரை. ஒரு வகையில மாமாவுக்கு தூரத்து சொந்தம். வீட்டுல பாத்து வச்ச பரிசம்தான்.  கல்யாணமாகி எட்டு மாசம் தான் ஆகுது. போன வருஷம் ஆகஸ்ட்ல கல்யாணம் நடந்தது. அவிகளுக்கு ஒருமாசம் தான் லீவு இருந்ததுன்னு சொல்லி, சவுதி கிளம்பிப் போயிட்டாக.

பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுக்கணும்னு என்னை இங்க விட்டுட்டுப் போயிட்டாக.. இன்னும் மூணு மாசத்துல வருவாக. தினமும் ஃபோன் பண்ணுவாக, அடிக்கடி வீடியோ கால் பண்ணுவாக.. ஆனா, பக்கத்துல இருக்கமாதிரி வருமா? ஹரிணி இருந்ததால, எனக்கு பெருசா ஒண்ணும் சங்கடமில்ல. இப்ப நீயும் வந்துட்ட… எனக்குக் கவலையில்ல”

சிரித்தாள் ஹரிணி.

“அண்ணி எப்பவுமே இப்படித்தான்… கிண்டலாவே பேசுவாங்க! இவங்க தனியா இருக்காங்கன்னு நான் வந்தேனாம்!! பேச்சைப் பாத்தீங்களா? ரெண்டு அண்ணனுகளும் ஆளுக்கொரு நாட்டுல உக்காந்து கிடக்கையில நான்தான் இங்க தனியா இருந்து போரடிச்சு புழுங்கிட்டு இருந்தேன்… அண்ணி வந்ததுக்கப்பறம் தான் ஜாலியா இருக்கு!!”

“அதான் உன் துணைக்கு உங்க அடுத்த அண்ணனும் ஒரு அண்ணிய கூட்டிட்டு வந்துட்டானே!!”

இம்முறை அவர்களுடன் சேர்ந்து வானதியும் சிரித்தாள்.

“சின்ன அண்ணி.. நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்குது. உங்க கன்னத்துல குழி விழுகுது… செம்மையா இருக்கீங்க”

ஹரிணி கண்கள்மின்னக் கூற, வானதி தன்னிச்சையாகக் கன்னத்தைத் தொட்டாள்.

உன் கன்னத்துல குழிவிழுகுது மத்தாப்பூ!! மறுபடி சிரியேன்.. நான் தொட்டுப் பாக்கறேன்..”

அவள் ஏன் சோகமாகிறாள் எனப் புரியவில்லை இருவருக்கும். தாங்கள் ஏதேனும் தவறாகச் சொல்லிவிட்டோமோ என இருவரும் நினைத்துப் பயந்தனர்.

நல்லவேளையாக வானதியின் கைபேசி அடித்துக் காப்பாற்றியது.

பக்கத்துவீட்டு அண்ணன் கூப்பிட்டிருந்தார்.

“ஹலோ.. சொல்லுங்கண்ணா?”

“ஆஸ்பத்திரியில இருந்து கூப்பிட்டிருந்தாக… டெத் சர்ட்டிபிகேட் வந்து வாங்கிக்கச் சொல்லி.. அதுதான் சொல்றதுக்கு கூப்டேன்மா.”

“சரிண்ணா.. நான் பாத்துக்கறேன்..”

மாமாவிடம் சென்று, மருத்துவமனை வரை செல்வதாகக் கூற, அவரோ திவாகரை சத்தமிட்டு அழைத்தார்.

“தம்பி, வானதியைக் கூட்டிட்டு ஆஸ்பத்திரி வரைக்கும் போயி, செய்ய வேண்டியதை செஞ்சுட்டு வாங்க”

அவன் எதும் கூறுவதற்குள் அவளே அவசரமாக மறுத்தாள்.

“வேணாம், பரவாயில்லை மாமா.. நானே போயிட்டு வந்துடறேன்”

“ஏம்மா..? அவனும் வரட்டும். அமெரிக்கா போயிட்டு, நம்ம ஊரையே மறந்துட்டான்மா. ஊருக்குள்ள போன மாதிரியும் இருக்கட்டும், உனக்கு ஒத்தாசையாவும் இருக்கட்டும். ரெண்டு பேரும் போயிட்டு வாங்க”

திவாகருக்கு அவள்முன்னால் தன்னை மட்டம் தட்டும் அப்பாவின்மேல் வருத்தமாக இருந்தது. ஆனாலும் எதுவும் பேசாமல் சென்று தனது அரைக்கால் சட்டையை மாற்றி, பேண்ட் அணிந்துகொண்டு, தயாராகி வந்தான்.

வானதி காரில் காத்திருக்க, அவன் வந்து ஏறிக்கொண்டதும் ஓட்டுனர் காரை செலுத்தினார்.

மாலை மங்கத் தொடங்கிய வேளை அது… ஜன்னல் வழியாக இளம்சூடான காற்று வந்து முகத்தைத் தழுவ, வானதி கண்களை பாதி மூடி அதை ரசித்தபடி வந்தாள். திடீரென, சாலையில் ஏதோ குளறுபடியாகி, தங்கள் வாகனத்தின்மீது மோதுவது போல் வந்துவிட்டு விலகிச் சென்ற இருசக்கர வாகனத்தை வசைபாடினான் திவாகர்.

“Idiot!! கண்ணை எங்க வச்சுட்டு ஓட்டிட்டு வர்றான்?? விட்டா இடிச்சிருப்பான்! அப்றம் யார் அவனைத் தூக்கிட்டு ஆஸ்பத்திரி போறது?”

ஒரு கோபத்தில் கத்தியவன், சட்டென அருகிலிருப்பவளின் நிலையை உணர்ந்து, கவனமாக அவள்புறம் திரும்பிப் பார்த்தான். அவளோ அதிர்ச்சி மாறாத முகத்துடன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதுபோல இருந்தாள்.

வானதிக்கு, அவன் கூறிய வார்த்தைகள் வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. நேற்றைய நினைவுகளை அசைபோட்டாள் அவள்.

நேற்று காரை யார் ஓட்டி வந்திருப்பார்?? அப்பாவோ, அண்ணனோ, இருவருமே மிதவேகத்தில் மட்டுமே வண்டியைச் செலுத்துவர். யாருக்கும் வேகமாகச் செல்வது பிடிக்காது. விக்கியைப் போல சிறந்த, கவனமான ஓட்டுனரை யாரும் பார்க்க முடியாது. அப்பாவுமே ஒருபோதும் காரின் கட்டுப்பாட்டை இழந்ததில்லை.

மூச்சுவிடுவது போல, சாப்பிடுவது போல, எப்போதும் காரை ஓட்டும் பழக்கமுள்ளவர்கள் இருவரும். பின் எப்படிக் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து சரிந்து விபத்து ஆகியிருக்கும்? அப்படியே ஆகியிருந்தாலும், எதிலுமே மோதிடாத பட்சத்தில், எங்கிருந்து மூவர் இறந்துபோகும் அளவுக்கு தாக்கமும், அழுத்தமும் வந்தது?’

இதுவரை சோகத்தில் உழன்றதால் யோசிக்க மறந்த பல கேள்விகள் மனதில் தலையெடுக்க, அவற்றுக்கு விடைதேடும் எண்ணத்துடன் மருந்துவமனையை அடைந்தாள் அவள்.

2 thoughts on “நீயன்றி வேறில்லை-7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *