Skip to content
Home » நீயென் காதலாயிரு-10

நீயென் காதலாயிரு-10

அத்தியாயம்-10

      இந்திரஜித் ப்ரியதர்ஷினி வேலை பார்க்கும் கடைக்கு வெளியே, இரவு அவளை தேடி வர, கடை அடைத்தும் அவள் அங்கேயில்லை‌.

    நகம் கடித்தபடி தூரத்தில் இருந்தவனுக்கு அவள் தங்கிருந்த இடம் தேடி வந்தான்.
 
    இரவு நேரம் பெண்கள் தங்கும் இடத்தில் இந்திரஜித் நெடுநேரம் இருக்க முடியுமா? அதனால் முகம் வாடி திரும்பிவிட்டான்.

  வீட்டிற்கு வந்து ஒரே புலம்பல். இதில் சந்தோஷிடம் பேச, அவனோ ‘ம்ம்ம்’ என்று ‘ம்’ கொட்டினானே தவிர வேறெதும் பேசவில்லை.

   இந்திரஜித்தே “என்னடா ‘உம்’ கொட்டிட்டு இருக்க? உன் குரலும் டல்லாயிருக்கு?” என்று கேட்டான்.

  சந்தோஷ் அதே சோர்வான குரலில் “விலாசினியிடம் மீட் பண்ணலாமானு கேட்டு சந்திச்சேன். அவளும் சந்தோஷமா வந்தா.

  நான் அவளிடம் ‘ப்ரியாவை விரும்பறதா நினைச்சி உனக்கு ப்ரியா மேல கோபமிருந்ததா’னு கேட்டேன். விலா மறைக்காம ‘ஆமா ரொம்ப கோபமா வரும்’னு சொன்னா.

   அடுத்து ‘எந்தளவு கோபம்?’ என்று கேட்டேன். அவ எதுவும் சொல்லாம யோசித்தா. அவ யோசிக்கவும் நான் உடனே ‘நகையை எடுத்து ப்ரியா சூட்கேஸ்ல வச்சி அவ மேல பழியை சுமத்தற அளவுக்கு கோபமா’னு கேட்டுட்டேன்டா. அவ நான் அப்படி பேசவும் கோச்சிக்கிட்டா” என்று ஸ்ருதி குறைந்து பதில் தந்தான்.

   “என்ன சொன்னாங்க உன் லவ்வர்.” என்று நக்கலாய் கேட்டான்.

   “என்ன சொல்வா? நகை காணாம போனதால ப்ரியா மேல பழி வந்து, அவ போனதே நீங்க சொல்லி தான் தெரியும். இதுல நானே அவமேல பழி போடுவேனா? இதான் நீங்க என்னை காதலிச்ச லட்சணம். அப்படின்னு நடையை கட்டிட்டு வேகமா போயிட்டா.” என்று கூறியதும் இந்திரஜித்தோ அமைதிக்காத்தான்.

  சந்தோஷ் இயல்புக்கு திரும்பி “சரி நான் நாளைக்கு சென்னை வர்றேன். ப்ரியாவோட பேசிட்டு அவ மனசை நோகடிச்சதுக்கு மன்னிப்பு கேட்கணும்.” என்றதும் இந்திரஜித் தொலைப்பேசி பேச்சிற்கு வந்தான்.
 
  “ஆஹ் வா வா.” என்று அணைத்து விட்டான்.

   ‘விலாசினி நகையை எடுத்து ஒளிச்சி வச்சிருப்பாளா? ஆனா நகை பழி போட்டதால தான் பிரிவு வந்ததே அவளுக்கு சந்தோஷ் சொல்லி தான் தெரியும்னா? அப்ப யாரு? இல்லை விலாசினியே நடிக்கறளா?’ என்று சிந்திக்க, மறுபக்கம் போனை வைத்த சந்தோஷும் ‘நான் காதலிக்கற விலாசினி அப்படிப்பட்டவளா? சே, அப்படியெல்லாம் இருக்காது. ப்ரியாவை நான் விரும்பறேன்னு ஒதுங்கி நின்றவ, நானா தானே இப்ப காதலிப்பதா சொன்னேன். அவளா நெருங்கலையே என்று தலையை தாங்கி கொண்டான்.

   இந்நாள் வரை காதலை கூறாத வலியென்றால், இப்பொழுது காதலை உரைத்து இப்படியொரு குழப்பம். ஒரு வேளை விலாசினி செய்யாத போது அவளிடம் இப்படி கேட்டிருந்தால், அவளை பொறுத்தவரை அளவுக்கு அதிகமாக தன் பேச்சு காயப்படுத்தியிருக்குமே என்று வருந்தினான்.  

    இவனின் சிந்தனையை ஆக்கிரமித்த விலாசினியும், ‘காதலிச்சா என்ன வேண்ணா பேசுவாரா? நான் ஏன் அவ மேல பழி சுமத்தணும். எவ்ளோ ஆசையா இருந்தேன். அவரா வந்து விரும்பறதா சொல்லும் போது. இப்படி நெஞ்சை அறுக்கற மாதிரி கேட்டுட்டாரே.’ என்று குமறி குமறி அழுதாள்.

     அப்பொழுது சந்தோஷ் தங்கை சந்தியாவும், தன் அண்ணன் கண்ணன் இருவரும் பைக்கில் வந்தார்கள்.
  கையில் திருமண ஆல்பம் இருந்தது. ஜன்னல் வழியே பார்த்துவிட்டு அவசரமாய் கண்ணீரை துடைத்தாள்.

    கற்பகம் வாசலில் வரவேற்று சிற்றுண்டி கொடுத்து உபசரித்து, “நேத்தே அண்ணியிடம் கேட்டேன். கல்யாண ஆல்பம் வந்துடுச்சானு. கொண்டா சந்தியா பார்ப்போம்.” என்று வாங்கி பார்த்தார்.

   சந்தோஷ் பேசிய பேச்சை ஒதுக்கிவிட்டு கல்யாண ஆல்பத்தை பார்க்க அன்னையருகே அமர்ந்தாள் விலாசினி.

   ஆல்பத்தில் சந்தியா, சந்தோஷ், ப்ரியதர்ஷினி, சந்திரா, விலாசினி, கண்ணன் என்று ஆறு பேர் கொண்ட புகைப்படங்களே முதலில் கண்ணை பறித்தது.
   விலாசினிக்கு ப்ரியா புகைப்படம் கண்டதும் சிறு எரிச்சல் மண்டியது.
  வேகமாய் பக்கத்தை திருப்ப, ப்ரியா இல்லாத ரிசப்ஷன் புகைப்படமேயில்லை எனலாம். திருமணம் முடியும் வரை எல்லா படத்திலும் முக்கால்வாசி சந்திராவோடு இணைந்து நின்றிருந்தாள்.

  சந்தியா கூட சில நேரம் ஆளைக்காணோம். ப்ரியா தான் பத்திரமாய் மொய் கவர், கோல்டு, கிப்ட என்று அனைத்தும் வாங்கி பையை பத்திரமாக பானுமதியிடம் ஒப்படைத்தது.

    அப்படிப்பட்டவளை எப்படி பழி சுமந்தவளாக மாறி சண்டையிட்டனரோ? ப்ரியா திருடுபவள் அல்ல, அப்படியென்றால் பழிசுமத்தியது யாராக இருக்கும்.’ என்ற சிந்தனை வேரிட்டபடி தான் புகைப்படத்தை அங்குலம் அங்குலமாக பார்த்தாள்.

   தன் தாய் கற்பகம் ப்ரியாவை முறைத்து நிற்பது கண்ணில்படவும், அதே சமயம், “இனி வர்ற போட்டோ எல்லாம் ப்ரியாவை காணோம். அப்ப தான் வெளியே போயிட்டாளா?” என்று கற்பகம் சந்தியாவிடம் வினா தொடுத்து கேட்டார்.

   “ஆமா அத்தை. நகையால ஒரு அக்கப்போர் வந்துச்சே அப்ப கிளம்பிட்டா. இனி வர்ற போட்டோல ப்ரியா இருக்க மாட்டா. எங்க அக்காவோட மாமியார் கூட ஆல்பம் பார்த்து கேட்டாங்க. அந்த பொண்ணு எங்க கல்யாணம் முடிஞ்சி போட்டோவுல அவ்வளவா காணோம்னு.

   அம்மா என்ன சொல்லறது என்று  வயிற்றுவலினு ஒதுங்கிட்டானு சமாளிச்சாங்க.” என்று சந்தியா பதில் தரவும், கற்பகம் ‘உம்கும்’ என்று சலித்தார்.

   விலாசினிக்கு தன் தாய் ஏதேனும் ப்ரியா மீது அதிருப்தி அடைந்தாரா? நானாவது சந்தோஷ் அத்தான் ப்ரியா கூடவே சுத்துவதால் அடிக்கடி தனியாக வந்து சந்தியாவிடம் நின்றேன். என்னை விட அம்மா தான் மணப்பெண் அறையில் வாசமிட்டது. அப்படியென்றால்?’ என்ற சந்தேகத்தோடு அன்னையை காண, சந்தியாவோ “அத்தை விலாசினி போட்டோ தனியா கேட்டிங்களாமே. போட்டோக்காரர் கொடுத்தார்” என்று கொடுத்தாள்.

  “ஏன்டிம்மா தனியா எம்பொண்ணை  எதுக்கு எடுப்பாங்க? எல்லாம் கல்யாணத்துக்கு தரகரிடம் காட்ட பொண்ணு போட்டோ கேட்கறாங்க. உங்கண்ணாவுக்கு கட்டிக்கொடுக்க ஆசைப்பட்டேன். அவன் தான் ப்ரியா பின்னாடி சுத்தறான். நாளைக்கு அவளை பார்க்க சென்னைக்கு போறானாமே? உங்கம்மா சொல்லி ஒரே புலம்பல்.

    என்ன தான் பிரச்சனை? நகையை முதல்ல காணோம். பிறகு ப்ரியாவிடம் கொடுத்ததா உங்கம்மா தான் சொன்னாங்க. பிறகு அந்த நேரம் எந்த சண்டையும் வேண்டாம்னு சூழ்நிலையை சமாளிச்சேன். ப்ரியா தான் எடுத்தானு விருந்து அன்னிக்கு ‘ப்ரியா வீட்ல ஏன் வரலை’னு கேட்க அண்ணி கண்ணு கலங்கி ஒப்பாரி வைக்கிறாங்க. சரி என்னவோ இரண்டு பேருக்கும் முட்டிக்கிச்சு விஷயத்தை ஆறப்போட்டா தன்னால சரியாகிடும்னு பார்த்தா, ‘உன் அண்ணன் ஒரு திருட்டு கழுதை பின்னாடி ஓடுறான்’னு அண்ணி தினமும் போன் பண்ணி புலம்பறாங்க. ஏன் உங்கண்ணாவுக்கு வேற பொண்ணே கண்ணுல தெரியலையா?” என்று கேட்டார்.
 
  சந்தியாவோ ஆல்பத்தை பத்திரப்படுத்தி மூடிவைத்து, “அதெல்லாம் அவனிடம் பலதடவை அம்மா சொல்லிட்டாங்க அத்தை. அவன் எங்க எங்க பேச்சை கேட்கறான். ப்ரியா ப்ரியானு அவ பின்னாடி சுத்தறான்.” என்று ஆற்றாமையோடு பேசினாள்.

  வீட்டில் பானுமதி சிங்கமுத்துவிடம் நிறைய வாக்கு வாதம் செய்துவிட்டான் சந்தோஷ். அதன் பிரதிபலிப்பே சந்தியா பேச்சு.

   “என்னமோமா, தரகரிடம் விலாசினி போட்டோ கொடுத்து மாப்பிள்ளை தேடலாம்னு உங்க மாமா சொன்னார். அதனால தனியா போட்டோ எடுத்தது.” என்று கவரை பத்திரப்படுத்திட சென்றார்.

  விலாசினி வேறொரு  சிந்தனையோடு அறைக்குள் அடைந்திட, கண்ணனோ “நமக்கு எப்போ கல்யாணம் சந்தியா” என்று அவளை நெருங்கினான்.

   “ஆசை தோசை முதல்ல விலாசினி அண்ணிக்கு கல்யாணம் நடக்கும் அப்பறம் தான் நமக்கு. நான் செகண்ட் இயர் படிக்கிறேன் தெரியுமா தெரியாதா?” என்று கண்ணனிடமிருந்து தள்ளி வந்தாள்.

   “சின்ன பொண்ணு ஆனா விவரம் தான்.” என்று தன்னிடமிருந்து தள்ளி தள்ளி செல்பவளை கண்டு புன்னகைத்தான்.

   அதன் பின் கண்ணன் கூடவே திரும்பி பைக்கில் புறப்பட்டாள் சந்தியா.

   வீட்டில் தந்தை இன்னமும் வராததால், கற்பகம் விலாசினி தனியாக இருக்க, “ஏன் அம்மா ப்ரியா நகை திருடியிருப்பானு நீ நம்பறியா?” என்றாள்.

   “எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ? யாருக்குடி தெரியும்? நமக்கேன் வம்பு” என்று இரவு சப்பாத்தி செய்ய மாவு பிசைவதற்கு செல்ல பின்னாடியே சென்றாள் விலாசினி.

   “உனக்கு சந்தோஷை ப்ரியா பின்னாடி சுத்தறது பிடிக்கலை. அதனால அவ மேல பழி சுமத்தினியா?” என்று தன் அன்னை என்றும் பாராது கேட்டாள்.

  எதிரே துவண்டிருப்பது தன் காதலன் சந்தோஷ் அல்லவா! அதற்காக தாயிடம் மல்லுக்கட்டி வார்த்தையை பிடுங்க ஆரம்பித்தாள்.
  
   “என்ன பேச்சுடி இது. பழி சுமத்தறாங்களா பழி. எனக்கு சந்தோஷ் அவ பின்னாடி போறது பிடிக்காது. உன்னை அவனுக்கு கட்டி வைச்சி, சந்தியாவை கண்ணனுக்கு கட்டி வைச்சி பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்க நினைச்சேன். ஆனா சந்தோஷ் அவ பின்னாடி போறான் என்ன செய்ய? அவ்ளோ தான்னு கை கழுவிட்டு உனக்கு மாப்பிள்ளை தேடறோம்” என்று பேசாமல் எழுந்து விட்டார்.
  தந்தை ஆறுமுகம் வரவும் விலாசினி மேற்கொண்டு பேசவும் தயங்கி நாளை கேட்டுப்போமென விஷயத்தை தள்ளிப்போட்டாள்.

   எப்படியும் சந்தோஷ் நாளை ப்ரியாவை பார்க்க போவதால் தானும் நாளை அன்னையிடம் விலாவரியாக கேட்போம். அப்படி இதற்கெல்லாம் காரணம் அன்னையாக இருந்தால்? என்று என்னும் போதே விலாசினி மனம் கதறியது.

   சந்தோஷை பிடிக்கும் ஆனால் அவனுக்கு ப்ரியாவை பழிசுமத்திய இந்த வீட்டில் காலடி வைப்பானா? காலடி வைக்கவே யோசிப்பவன் தன்னை மணப்பானா? முதலில் அவன் தன்னை சந்தேகிப்பது நியாயமா? என்று கடைசியாக அவன் கேட்ட விஷயத்தில் நின்றாள்.

   யாராகயிருந்தாலும் இப்படி ஐயம் வருவது இயல்பென மனம் எடுத்துரைக்க சந்தோஷ் மீதுயிருந்த கோபம் ஓடியது. ஆனால் அன்னை மீது காரணமற்ற கோபம் உள்ளத்தில் படர்ந்தது.
___

  அடுத்த நாள் காலை கடைப்பக்கம் வரவும் கடை உரிமையாளர் அன்வரோ, “என்ன தம்பி கடையில துணியை தேடாம பொண்ணை தேடறிங்களே. தப்பு தம்பி ஊர்விட்டு ஊர் வந்து பிழைக்க பார்க்கற பொண்ணிடம் பின்னாடி சுத்தறது. அதுவும் நீங்க அவளோட அத்தை பையனோட பிரெண்ட். இப்படி பண்ணறது நல்லாவாயிருக்கு?” என்றதும் தன் குட்டு வெளிப்பட்டதால் கடைக்காரரிடம் பேசமுடியாது நின்றான் இந்திரஜித்.

    “இனி இங்க துணி வாங்க வராதிங்க தம்பி” என்று கூறவும் இந்திரஜித் ப்ரியதர்ஷினியை காண அவளோ இந்தர் இருப்பதை கவனிக்காதது போல மற்றவரிடம் நன்றாகவே சிரித்து பேசி வேலையை கவனித்தாள்.

    இந்திரஜித் மெதுவாக கடையிலிருந்து வெளிவந்துவிட்டான். இன்று இந்தருக்கு அலுவலகம் விடுமுறை.
   இன்னும் இரண்டு மணி நேரத்தில் சந்தோஷ் வந்துவிடுவான் அப்பொழுது தர்ஷூவை பார்ப்போமென வீட்டுக்கு நடையை கட்டினான்.

    இந்திரஜித் போனதும் தான் ப்ரியதர்ஷினி நிம்மதியானாள்.
  
   “தேங்க்ஸ் சார். நீங்க கண்டிக்காம இருந்தா அவர் திரும்ப திரும்ப இங்கயே சுத்திட்டு இருப்பார்.
     எனக்காக அப்பா ஸ்தானத்துலயிருந்து யாரும் இதுவரை பேசியதில்லை.
  நீங்க தான் முதல் முறை இப்படி பேசறிங்க. இதை என் வாழ்வில் நான் மறக்க மாட்டேன். நீங்க வேலைக்கு ரெகமெண்ட் பண்ணி கொடுத்த இடத்தில நல்ல பெயர் வாங்கி உங்களுக்கு களங்கம் வராம பார்த்துப்பேன்.” என்று நன்றி தெரிவித்தாள்.

  “பெரிய பெரிய வார்த்தை பேசாதம்மா. எனக்கும் இரண்டு மகள்கள் இருக்காங்க. அதனால பார்க்குற பொண்ணுங்க மகளா தான் கண்ணுக்கு தெரியறாங்க. அந்த அல்லா உனக்கு நல்லதே செய்வார்.

  நீ தினமும் கும்பிடற கடவுளை நம்பும்மா.

  எப்பம்மா அங்க வேலைக்கு வரச்சொன்னாங்க?” என்று கேட்டார்.

  “மூன்று நாள் இருக்கு சார். வர்ற புதன் தான் வரச்சொன்னாங்க.  அதுவரை சும்மா தானே இருப்பேன்.  இங்க வந்து வேலை பார்க்கறேன் சார்” என்றாள் பணிவாக.

   “ஆகட்டும்மா” என்று அனுப்பி வைத்தார். கூடுதலாக இதுவரை வேலை பார்த்ததற்கு சம்பள பணத்தையும் கணக்கிட துவங்கினார்.

   மதியம் போல சந்தோஷ் வந்து சேரவும், இந்திரஜித் அவனை அழைத்து வந்து கடை முன் நிறுத்தினான்.

   இந்திரஜித் நிற்பதை பார்த்து கண்டுக்காத ப்ரியதர்ஷினி, சந்தோஷ் வந்து நிற்கவும், கடைமுதலாளியை தான் பார்த்தாள்.
  
   அவரோ ‘இதுயாரு?’ என்பதாக பார்வையால் கேட்டுமுடிக்க, “சந்தோஷ் சார் என்னோட மாமா பையன். அத்தை இவனுக்கு தான் என்னை கட்டி வைக்க நினைச்சாங்க. நான் அவனிடம் பேசிட்டு வர்றேன் சார். இனி என் வாழ்க்கையில தலையிட வேண்டாம்னு சொல்லிட்டு வர்றேன் சார்” என்றுரைத்தாள்.
  
   அன்வரோ உணவு நேரமென்பதால் சலுகை கொடுத்தார்.

    ப்ரியா சென்றதும் அருகேயிருந்த தோழிகளோ, எட்டி எட்டி பார்த்து சாப்பிட சென்றார்கள்.

  அன்வர் பாய் பெரும்பாலும் இளகிய மனம் கொண்டவர். தன்னிடம் வந்தவருக்கு உதவும் குணமுடையவர். அதனால் தற்போது பணிக்கு வந்த ப்ரியாவிடம் காட்டும் அக்கறையை தரம் பிரிக்கவில்லை.

   உதவு குணம் கொண்டவருக்கு புதிதாக வேலைக்கு வந்தவர்கள் என்ன? பழைய ஆட்களென்ன? இரண்டும் சமம் தானே.

  சந்தோஷ் இருக்குமிடம் வந்தவள், “என்ன சந்தோஷ்? எதுக்கு இங்க வந்த?” என்று கடுகடுவென கேட்டாள்.

  “நீ தான் சொல்லணும் ப்ரியா. இங்க ஏன் வந்த? எதுக்கு கஷ்டபடணும்? அங்க பழி சுமத்தினாலும் நீ பாட்டுக்கு உன் வேலைக்கு போயிட்டு வரவேண்டியது தானே. அப்பா சேர்த்துவிட்ட வேலைனு தானே வேண்டாம்னு உதறிட்ட?” என்று கேட்டான்.

    “இதில் என்ன சந்தேகம். ஒதுங்கணும்னு முடிவான பிறகு மொத்தமா வந்துடணும். அன்னைக்கு கல்யாண மண்டபத்துல நகை காணோம்னு என் மேல பழிசுமத்தி பார்த்தாச்சு. அதே மனசுல வச்சிட்டு நாளைக்கு கடையில ஏதாவது காணோம்னா என்னை தான் சந்தேகத்தோட பார்ப்பிங்க. வரவு செலவு கணக்கெழுதற வேலை. பணம் கொடுக்கல் வாங்கல்னு இருந்து அதுவா காணாம போனாலும் என்னை மாமா ஒர் பார்வை பார்த்துட்டா? என் மனசு செத்துடும். ஒவ்வொரு முறையும் தீக்குளிக்க முடியுமா சொல்லு?

    அதான் எதுக்கு வம்புனு நான் மொத்தமா வந்துட்டேன். இந்த வேலை எனக்கு பிடிச்சிருக்கு. இந்த இடம் எனக்கு பிடிச்சிருக்கு. இங்கிருக்கற மனுஷங்க ரொம்ப பிடிக்குது.
   என்ன தான் காலம் காலமா பழகி அன்பானவங்க பழியை போடறது ஒரு ரகம்னா, என்னிடம் கொஞ்ச நாள் பழக்கத்துல நான் எதனால இங்க வந்து வேலை பார்க்கறேன்னு தெரிந்தும் எனக்கு உதவி செய்யற அன்பானவங்களும் இங்க இருக்காங்க.” என்றுரைத்தாள்.

   “எங்கப்பா அம்மாவை யோசிக்கற? என்னை யோசிக்கலை.” என்று கேட்டான் சந்தோஷ்.

  ப்ரியாவோ “ஒருவிதத்துல இந்த பிரிவு உனக்கு சாதகமா போகும் சந்தோஷ். அத்தை மாமாவுக்கு என்னை அவங்க வீட்டு மருமகளா பார்க்க ரொம்ப ஆசை. இப்ப அது நடக்காது. இதை பயன்படுத்தி நீ விலாசினி விரும்பறதை சொல்லி கல்யாணத்தை முடிக்கலாம். 

    எத்தனை நாளைக்கு தான் என்னை பார்க்க வர்ற மாதிரி அவளை ரூட் விடுவ?

   அவ என்ன தாட்ஸ்ல இருக்காளோ? பட் இந்த சந்தர்ப்பத்தை விடாத. அத்தை மாமாவிடம் பேசி அவளை மேரேஜ் பண்ணிடு.

  நான் உன் பிரெண்ட் எப்பவும் பிரெண்டா தான் இருக்க ஆசைப்படுவேன். என் நலனை நான் பார்த்துப்பேன்.” என்றாள்.

   இந்தருக்கோ எதற்கு இத்தனை விரக்தி இவளுக்கு? என்று கோபம் முளைத்தது.

    “உனக்கு உன் மேல பழியை சுமத்தியது யாருனு தெரியும் அப்படி தானே?” என்று கேட்டான் சந்தோஷ்.

   ப்ரியா நொடியில் பேசா மடந்தையானாள்.
   தன்னை சமனிலைப்படுத்தி, “தெரியும். ஆனா அதை உன்னிடம் சொல்ல எனக்கு இ்ஷ்டமில்லை.” என்றாள் தர்ஷி.

   “அப்போ விலாசினி தான் இதை செய்தாளா?” என்று கேட்டதும் ப்ரியா முகம் கோபமானது.

   “முட்டாள்தனமா பேசாத சந்தோஷ். நீ அவளை விரும்பற. அப்படியிருக்கறப்ப அவமேல பழிசுமத்தாதே. ஒரு இடத்துல கெட்டது நடந்தா அதை யார் செய்தானு பார்க்கறப்ப, தவறு செய்தவங்களை அடையாளம் காணறதை விட ரொம்ப முக்கியமான விஷயம், நம்ம மேல அன்பு செலுத்தற நம்பிக்கையான ஆட்களை சந்தேகப்படக்கூடாது.
  
   இதே மாதிரி அவளிடம் கேட்டு தொலைக்காத. பிறகு உன் காதல் சொல்லாமலே… புட்டுக்கு… ‘புட்டுக்கும்’ என்று கூற வந்து நிறுத்திவிட்டாள். 

   “வேண்டாம் என் வாயால எதையும் உச்சரிக்க மாட்டேன். அப்பறம் தாதஸ்து தேவதைகள் வந்துடப்போகுது.

  என்னை பத்தி யோசிக்கறதை விட்டுட்டு, ஒழுங்கு மரியாதையா உன் காதலை சொல்லி அத்தை மாமாவிடம் பேசி விலாசினியை கல்யாணம் பண்ணற வழியை பாரு. அங்கிருந்து வந்துட்டான். எல்லாம் இவனை சொல்லணும்” என்று அருகேயிருந்த இந்திரஜித்தையும் திட்டினாள்.

       சந்தோஷ் ‘விலாசினி இல்லைனா யாரு?’ என்ற குழப்பமான முகத்தோடு நிற்க, ப்ரியதர்ஷினி திரும்பி செல்லும் முடிவோடு இரண்டெட்டு எடுத்து வைத்தாள்.

    அவளை பாய்ந்து வந்து கரம் பற்றினான் இந்திரஜித்.

  “எங்க ஓடற? அவன் லைப்பை விட்டு தள்ளு. எனக்கு ஒரு முடிவை சொல்லு. நீ என்னை விரும்பறியா?” என்று அவள் கரத்தை பிடித்திருப்பதிலும், வார்த்தையிலும் அழுத்தமாய் கேட்டான்.

   ‘இந்நாள் வரை பார்வை பேச்சு தினுசாக உள்ளதென ஒரு கணக்கில் தன்னை அவன் ‘சைட்’ அடிப்பதாக நினைத்திருக்க, இப்படி சந்தோஷ் எதிரே ‘காதலிக்கின்றாயா?’ என்றதும் ப்ரியதர்ஷினிக்கு நடுக்கம் கூடியது.

   சந்தோஷ் உறவுக்காரன் என்றால் கூட தொட்டு பேச அனுமதித்தது  இல்லை. இப்படி உரிமையாய் கையை பிடித்து வம்பிழுக்கும் இந்திரஜித்தை கண்டு அதிர்ந்தவளாக தர்ஷினி நின்றாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
 

1 thought on “நீயென் காதலாயிரு-10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *