Skip to content
Home » நீயென் காதலாயிரு-12

நீயென் காதலாயிரு-12

அத்தியாயம்-12

ஞாயிறு அதுவும் இந்திரஜித் நன்றாக இழுத்து போர்த்தி உறங்கியிருந்தான். நேற்றெல்லாம் போர்வை போர்த்தி படுத்துவிட்டானே தவிர நீண்ட சிந்தனைக்குள் தான் முழ்கியிருந்தான்.

அதனால் காலை இன்னமும் கண் திறக்காது இருந்தான். சந்தோஷிற்கு அந்த உறக்கம் ஆச்சரியத்தை தந்தது.

“டேய் உன்னால எப்படிடா தூங்க முடியுது.” என்று நண்பனை உலுக்க, சோம்பல் முறித்து எழுந்தவன், “தூக்கத்துக்கும் காதலுக்கும் என்னடா சம்பந்தம்?” என்றான்.

   நண்பனிடம் பதிலுரைத்தபடி தன் போனில் சில சில்மிஷ வேலையை பார்த்தவன் பல் தேய்க்க சென்றான்.

   பத்து நிமிடத்தில் சந்தோஷ் எண்ணிற்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
  
   “புது நம்பரா இருக்கு?” என்று சந்தோஷ் எடுத்ததும் அவன் காது சவ்வு கிழிந்தது. எதிர்புறம் ப்ரியா வஞ்சனையின்றி தன் தோழனை திட்டினாள்.

   “ஏய் எதுக்கு திட்டற ப்ரியா? அவன் என்ன செய்தான்?” என்று அப்பாவியாய் கேட்க, “உன் பிரெண்டை கேளுடா. இன்னொரு முறை அவன் எனக்கு மெஸேஜ் பண்ணினா அவ்ளோ தான் கொலைப் பண்ணிடுவேன்” என்று கடைசியாக கத்தி போனை துண்டித்தாள்.

   எதிரே மோகனும் சித்ராவும் “யாரு சந்தோஷ் போன்ல ப்ரியாவா? என்னாச்சு?” என்ற ரீதியில் நின்றார்கள்.

   “ஆமா ஆன்ட்டி. ப்ரியா தான் பேசினா.  இவன் என்ன செய்தான்னு தெரியலை. புது நம்பர்லயிருந்து கண்டபடி திட்டறா? இவனுக்கு எப்படி அவ நம்பர் தெரிந்தது? என்ன மெஸேஜ் அனுப்பினான்னு தெரியலையே” என்று குழப்பமாய் இந்தரின் அறைக்கு வந்து கதவை தட்ட, பல் விளக்கிய இந்தரோ, கதவை திறந்து, ‘என்ன?’ என்பதாக கேட்டான்.

   “ப்ரியா நம்பர் எப்படி கிடைச்சதுடா. அவளுக்கு என்னனு மெஸேஜ் அனுப்பின? தாம்தூம்னு குதிக்கறா? என்னை கண்டமேனிக்கு திட்டறா” என்று கேட்டதும் இந்தர் பற்பசையால் உண்டான நுரையோடு நகைக்க, சிரிப்பை அடக்காமல் வாஷ்பேஷனில் துப்பினான். முகம் அலம்பி வாய் கொப்பளித்து டவலால் துடைத்தபடி, “என்னனு திட்டினா?” என்று ஆர்வமாய் கேட்டான்.

  சித்ராவோ சூடான டீயை ஆற்றி, குடிக்கும் பக்குவத்தில் மைந்தனுக்கு கொடுக்க, அதனை வாங்கி மிடறு மிடறாய் பருகினான்.

  “என்ன திட்டினாளா? ஏன்டா உன் பிரெண்ட் இப்படியிருக்கான். அறிவில்லை என் நம்பர் கிடைச்சா இஷ்டத்துக்கு குட்மார்னிங் சொல்வானா. இவனை எல்லாம் பிரெண்ட்னு சொல்லற? இதுல தங்கை கல்யாணத்துல ஆயிரம் வேலை இருந்தும் இவனை போய் கூட்டிட்டு வர போயிருக்க. இவன் பிரெண்ட்ஷிப்பை இப்பவே கட் பண்ணு. இல்லை நடந்ததை மறந்துட்டு நானே அத்தையிடம் போட்டு கொடுப்பேன்னு சொல்றா. அப்படி என்னடா அனுப்பின.” என்றதும் சித்ரா மோகன் அதேயிடத்தில் நிற்கவும், “ஜஸ்ட் குட் மார்னிங் தான்டா அனுப்பினேன்” என்று நல்ல பிள்ளையாக கூறவும் சித்ராவும் மோகனும் இது நம்பற மாதிரி இல்லையே என்று பார்த்துக் கொண்டார்கள்.

   சித்ராவோ மைந்தன் ஏதோ விளையாட்டு தனமாக என்னவோ அனுப்பியதை பூடகமாக அறிந்து சமையல் கட்டிற்கு செல்ல, மோகனோ, “நான் வாக்கிங் கிளம்பறேன். சின்ன பசங்க சகவாசத்தை முதல்ல விட்டொழிக்கணும்” என்று புலம்பி அகன்றார்.

   இந்தரின் தாய் தந்தை அவ்விடத்தில் இல்லையென்றதும் சந்தோஷோ, “டேய் அவ கத்தற டோன், மீன் மார்க்கட்ல சண்டை வர்ற மாதிரி சத்தமா சவுண்ட் விடறா. என்ன அனுப்பினா?” என்று நண்பன் போனை எடுத்தான்.

   அதில் “ஹாய் டியர் தர்ஷுனி குட்டி. குட் மார்னிங், நல்லபடியா தூங்கனியா? இல்லை நான் உன் கை பிடிச்ச அழுத்தம் வலியை தரவும், நைட்டெல்லாம் என் நினைப்பால தூங்கமுடியாம தவிச்சியா?

   என் சாதாரண பிடிக்கே இப்படி முகத்தில வலிக்காட்டினா எப்படி டார்லிங்? உன்னை டைட் ஹக் பண்ணும் போது, கிஸ்…” படிப்பதை நிறுத்திவிட்டு போனை இந்தரிடமே நீட்டினான்.

  “என்னடா க்ரீன் க்ரீனா பேசியிருக்க? இந்தர் இது நீ தானா? டேய் அவளிடம் நேர்ல உதைப்பட போற.” என்று சந்தோஷ் கூற, இந்தர் போனை வாங்கி சார்ஜரில் போட்டுவிட்டு, “உதையா? நானா? டேய் அவளை நேத்து கைப்பிடிக்கிறப்பவே இன்னொரு கையால அவ போன்லயிருந்து என் நம்பருக்கு கால் பண்ணியது எதுக்கு? உதை வாங்கவா, அவஉள்ளத்தை வாங்கடா.” என்று கவிதையாக மொழிந்தான்.

   சந்தோஷோ “எனக்கென்னவோ டவுட்டா இருக்குடா. ப்ரியா எல்லாம் அவபின்னாடி சுத்தற பசங்களை கூப்பிட்டு வச்சி செவுள்ல விடுவா. ஸ்கூல் படிக்கறப்ப என் பிரெண்ட் சுந்தர் பிரப்போஸ் பண்ணினான்டா. அவளே அவனை அடிப்பின்னிட்டா.

   எதுக்கோ பையனை பார்த்துக்கோங்க அம்மா” என்று சித்ராவிடம் முடித்தான்.

     சித்ரா சமைத்து வைத்த பூரியும் மசாலாவும் செய்து வைத்திருக்க, அதனை வெளுத்து வாங்கும் முடிவோடு காலை உணவு அமைந்தது இந்தருக்கு.

   சந்தோஷோ பூரியை கையில் வைத்து “பூரின்னா ப்ரியா உயிரை விடுவா. ஏதோ மெஸ் சாப்பாடு எல்லாம் எப்படி தான் சாப்பிடறாளோ? எங்கத்தை சமைச்சதை தவிர வேறயெங்கையும் அவ ருசித்து சாப்பிட மாட்டா. எங்க வீட்டு கல்யாணத்துல தேவையேயில்லாம பழிசுமந்துட்டு அவ இப்ப கஷ்டப்படறா? விலாசினி பழியை போட்டாளோனு ஒரு பக்கம் சந்தேகம் வருது. ஆனா நேத்து ப்ரியா அவளிடம் இப்படி பேசி தொலைக்காத அப்படின்னு சொல்லறா.
   வேற யாராயிருக்கும்னு ஒரு முடிவுக்கு வரமுடியலை.” என்று வருந்தினான்.

    சந்தோஷ் பேசவும் பூரியை சுவைக்க வாயருகே கொண்டு சென்ற இந்தரோ, டிபன் பாக்ஸில் நான்கைந்து பூரியை பார்சல் செய்ய ஆரம்பித்தான்.

   “என்னடா ஞாயிறு அதுவுமா டிபன் கட்டற? என்று சித்ரா வந்தார்.

  ” எப்படியும் சந்தோஷ் கிளம்பும்போது பிரியாவை சந்திக்கணும்னு சொல்லிட்டு இருந்தான். அப்படியே நானும் சந்தோஷ் கூட போய் பிரியாவிடம் பேசுவேன் அந்த நேரம் வெறும் கையோட போறதுக்கு பதில் பூரியை கொடுப்பேன்.” என்றவன் சந்தோஷ் பக்கம் திரும்பி “ப்ரியா மேல யார் பழிதூக்கி போட்டா என்பது தெரிந்துக்கற வரை நான் அவளை விரும்பறதை யாரிடமும் சொல்லாத. முக்கியமா விலாசினியிடம்.” என்று கூறியதும் சந்தோஷ் தலையாட்டினான்.

    தன் நண்பனுக்கு விலாசினி மீது சந்தேகம் உதித்திருப்பது புரிந்துக்கொண்டான் சந்தோஷ். ஆனால் அவள் அப்படியில்லை என்று வாய் திறக்க முடியாமல் தலையாட்டலோடு முடித்து கொண்டான்.

   மோகன் வாக்கிங் முடித்து வந்திருக்க, இந்தர் தாய் சித்ரா இருவரிடமும் தன் ஷோல்டர் பையை மாட்டி கொண்டு விடைப்பெற்றான் சந்தோஷ்.

   “இவனை கூட்டிட்டு உங்க மருமகளை பார்த்துட்டு, பேசிட்டு பிறகு இவனை டிராப் பண்ணிட்டு வர்றேன் அம்மா” என்று இந்தர் கூறவும் மோகனோ, “டிபன் பாக்ஸ் பத்திரம் டா. உன் மேல இருக்கற கோபத்துல டிபன்பாக்ஸை தூக்கியெறிய போறா. அது உன்னோட பெயர் சூட்டுவிழாவுக்கு மண்டபத்தில் விழா கொண்டாடினோம். அப்ப வந்தவங்களுக்கு எங்கப்பா ரிட்டர்ன் கிப்டா அந்த காலத்துலயே கொடுத்தது.” என்று முன்னெச்சரிக்கையாக கூறவும் இந்தரோ அன்னை தந்தையை உறுத்துவிட்டு பறந்திருந்தான்.

   சாலையில் வேகமாக செல்லவும் காற்றில் இந்தரின் கேசம் அலைபாய்ந்தது. “பார்த்தியாடா எங்கம்மா அப்பாவுக்கு நான் அடிவாங்கினாலும் ஓகே. டிபன் பாக்ஸுக்கு எதுவும் ஆகக்கூடாதாம்.” என்று கேலியாக பயணித்தான்.

    ப்ரியதர்ஷினி தங்கியிருக்கும் இடத்திலிருந்து அவள் பணிக்கு செல்லும் பாதையில் நின்றிருந்தார்கள்.

  சந்தோஷ் தன் அத்தை மகளுக்காக முதுகுப்பையோட தவமிருந்தான்.

  இந்திரஜித்தோ காலையிலேயே குட்டி குட்டி சமோசா வாங்கி  திண்றுக்கொண்டிருக்க, அங்கே நடை வியாபாரமாக கீசெயின் விற்றுக் கொண்டிருந்தவன் இந்தர் கண்முன்னால் வந்து வந்து ஏதேனும் வாங்க கூறி இம்சித்தான்.

‌  இந்தரோ இரு சிவப்பு இதயம் தொங்கும் விதமாக இருந்ததை வாங்கினான்.

பணத்தை வாலெட்டிலிருந்து  எடுத்து கொடுத்தவன், கீசெயின் வாங்கும் நேரம் ப்ரியதர்ஷினி அந்த பக்கம் நடந்தாள். சந்தோஷ் மறுபுறம் வேடிக்கை பார்ததிருக்க நைஸாக ஓடும் முடிவில் வேகமாய் நடந்தாள்.
 
   இந்தரோ பத்து ரூபாய் நோட்டை திரும்ப பெற்றவனாக, “சந்தோஷ் ஒருத்தி கமுக்கமா ஓடறாடா.” என்று சுட்டிக்காட்ட, ப்ரியா இந்தரை திரும்பி முறைத்தாள்.

    ‘இவன் கூட தேமேனு எங்கயோ வேடிக்கை பார்த்துட்டு இருக்கான். ஆனா இவன் இருக்கானே கீசெயின் வாங்கினா கூட கண்ணு எப்படி தான் என்னை பார்த்துச்சோ, பொல்லாத கண்ணு.’ என்று முனங்கியபடி நின்றாள். சந்தோஷ் ப்ரியாவை இடைமறித்திருந்தான்.

    “ஊருக்கு போறேன் ப்ரியா” என்றான் சந்தோஷ். எப்பவும் போல “ப்ரியா இல்லை தர்ஷினி” என்று பல்லை கடித்தாள்.

   “தர்ஷினினு கூப்பிட தான் இந்தர் வந்துட்டானே. அவன் கூப்பிடுவான். வீட்ல தர்ஷினி தர்ஷு என்று அவங்க அம்மா அப்பாவிடம் உன்னை பத்தி தான் சதா பேச்சு.” என்றதும் அவளால் அக்கணம் மறுத்திட வாய் வரவில்லை. அப்பா அம்மா வரை என்னை பற்றி பேசியிருக்கின்றானா? என்ற ஆச்சரியம் அடிக்கண்ணால் இந்தரை கவனித்தாள்

     கீசெயினை அவள் பார்க்கும் பக்கமாக ஆட்டினான்.
   அதில் சுள்ளென்ற கோபம் வெளிப்பட, நிமிர்ந்தாள்.

     “உனக்காக சும்மா இங்கயே நின்னுட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அந்த சின்ன பையன் சுத்தி சுத்தி கீசெயின் வாங்கிக்கறிங்களா அண்ணா? கர்ச்சீப் வாங்கிக்கறிங்களா அண்ணா? பப்பிள்ஸ் விடறது வாங்கிக்கறிங்களா அண்ணானு மினி வியாபாரி மைண்ட் செட்ல என்னையே துரத்தினான்.
 
  பாவம் அவனுக்காக வாங்கினேன். பப்பிள்ஸ் விடறதுலாம் இப்ப வாங்க முடியாது பாரு. நமக்கு குழந்தை வந்தப்பிறகு அதை வாங்கிக்கறேன்னு பிராமிஸ் பண்ணிட்டு கீசெயின் வாங்கினேன்.” என்று அவள் முகத்தின் முன் ஆட்டினான்.

   “எனக்கு தேவையில்லை.” என்று சந்தோஷ் பக்கம் திரும்ப, “நான் உனக்கு கொடுக்க வாங்கலையே. அச்சோ எங்கம்மா வீட்டு சாவியை போட ஒரு சாவி கொத்து கேட்டாங்க. அதுக்கு வாங்கினேன் தர்ஷு. நீ ஆசையா உனக்கு கொடுப்பேன்னு நினைச்சியா? ஐ அம் சாரி டியர்.” என்றான் உதடுமடித்து குறும்பு சிரிப்போடு.

    தர்ஷினியோ வாயை பிளந்தபடி, “நான் ஒன்னும் ஆசையா கேட்கலை. அதுவும் என் அத்தை பையன் இருக்கறப்ப உன்னிடம் நான் ஏன் கேட்கப்போறேன்?” என்று சீறினாள்.

   லேசாக கோபம் இந்தர் மீது, அடிக்கடி தன்னை சீண்டுகின்றானே என்று.
 
    இந்திரஜித்தோ சந்தோஷை முன்னே தள்ளி, “இவன் தான் விலாசினியை விரும்பறான். உனக்கு அது நல்லாவே தெரியும். அப்பறம் எதுக்கு சீன் போடற. நீ சிங்கிள் தானே? என்னோட மிங்கிள் ஆனா நான் தான் வாங்கி தரணும். அவனில்லை.” என்றுரைத்தான்.

       “சந்தோஷ் இவனை போக சொல்லு எனக்கு இவனை பார்க்கவே பிடிக்கலை.” என்று கத்தினாள். 

   “தர்ஷும்மா சந்தோஷ் திருச்சி கிளம்பறான். அவன் பை-பை சொல்ல வந்தான். அவன் தான் இங்கிருந்து போகணும். இது நம்ம ஏரியாடி செல்லம். நான் இங்க தான் இருப்பேன். உன் நெஞ்சில் இடம் பிடிப்பேன் பார்க்கறியா?” என்று சவாலாய் மொழியவும் இந்தர் பேச்சை கேளாதவள் போல “சந்தோஷ் எந்த திருட்டு பழியாலையும் நான் இங்க வரலை. எனக்கு  திருச்சில சம்பாத்தியம் பத்தலை. அதுக்கு தான் வேலைக்கு இங்க சென்னை வந்தது.

  மத்தபடி பழியை ஒரு சாக்கா வச்சி அம்மாவிடம் சொல்லிட்டு வந்தாச்சு. நான் அப்படி தான் நினைச்சிக்கிட்டேன். தயவு செய்து நடந்த நிகழ்வை தூரப்போட்டு வீட்ல யாரிடமும் ஆர்கியூ பண்ணாம, குயிக்கா விலாசினியோட கல்யாணத்தை முடிச்சிடு. அப்ப தான் அத்தை மாமா சந்தியா எல்லாரும் சந்தோஷப்படுவாங்க.” என்று கூறவும் சந்தோஷ் அவளை கட்டி பிடித்து நின்றான்.

   “ஒருவேளை விலாசினி தான் பழியை சுமத்தியிருந்தா எனக்கு அந்த காதல் வேண்டாம் ப்ரியா” என்று குலுங்கினான்.

   ப்ரியாவோ நண்பனை தன்னிடமிருந்து பிரித்து, “லூசாடா  நீ. விலாசினி இல்லைனு சொல்லிட்டு இருக்கேன். சும்மா அவளையே கார்னர் பண்ணற. அவ ரொம்ப நல்லவ. உன்னை உயிருக்கு உயிரா விரும்பறா. நீ என்னை விரும்பறதா நினைச்சி ஒதுங்கி வழிவிட நினைச்சவ. அவளை தப்பா பேசாத. அப்படி பேசியிருந்தா மன்னிப்பு கேளு.” என்றதும் சந்தோஷ் நிமிர்ந்தான்.

   “ஆமாடா அவ நல்ல பொண்ணு. மனசை காயப்படுத்தி உடைச்சிடாத” என்று கடிகாரத்தை பார்த்தாள்.

  “எனக்கு டைம் ஆச்சு. அன்வர் பாய் எனக்கு நிறைய நல்லது செய்யறார். அப்படியிருக்க அட்வான்டேஜா நான் லேட்டா போக விரும்பலை. அதனால நான் கிளம்பறேன். நீயும் ஊருக்கு போ. அவளிடம் நல்லபடியா பேசு. வீட்ல கல்யாணத்தை முடிவு பண்ணினா எனக்கு ஒரு மெஸேஜ் பண்ணு. தயவு செய்து போன் எல்லாம் எல்லோர் முன்னாடி பண்ணிடாத.
  ஆஹ் முக்கியமா போறப்ப இவரை இழுத்துட்டு போயிடு. நாலு நல்ல புத்திமதி சொல்லிடு” என்றவள் புறப்பட, இந்தரோ அவள் கைப்பற்றி கொண்டு வந்த லஞ்ச் பாக்ஸை திணித்தான்.

   அவள் மறுத்து திருப்பி தர,‌ அவனோ வாங்காமல் விளையாட்டு காட்டி, அவளிதழில் பார்வை பதிக்க, விழுந்தடித்து ஓடினாள்.

    சந்தோஷ் ப்ரியா மீது பழிப்போட்டது விலாசினி இல்லையென்றதும் மனம் குதூகலம் அடைந்தான்.

   எப்பேற்பட்ட பாரம் இறங்கிய உணர்வில் அவன் திளைக்க, இந்தரோ விலாசினி இல்லைனா அவங்க அம்மாவா?’ என்ற ரீதியில் சிந்திக்க ஆரம்பித்தான்.

   ப்ரியாவிடம் பேசும் போதெல்லாம் கடுகடுவென முகத்தை வைத்து தன்னையும் அவளையும் கண்டது அவர்கள் ஒருவர் தானே? என்ற எண்ணவோட்டத்தில் திளைத்தவனை சந்தோஷ் உலுக்கி, “டேய் என்னை பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு உன் தர்ஷு கூட டூயட்டை கன்டினியூ பண்ணு.
பஸ்ஸுக்கு நேரமாகுது டா. அப்பறம் பஸ் போயிட்டா பணம் வேஸ்ட். ” என்றதும் இந்தரோ “ஆமா உன் அத்தை பொண்ணோட டூயட் ஆடிட்டாலும்” என்று அலும்பலோடு இருசக்கர வாகனத்தை உயிர்பித்தான்.
 
   -தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

1 thought on “நீயென் காதலாயிரு-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *