Skip to content
Home » நீயென் காதலாயிரு-2

நீயென் காதலாயிரு-2

அத்தியாயம்-2

     “அந்த ப்யூட்டிஷன் தான் எடுத்துட்டு போயிருப்பா. இப்ப யாரு தங்க நகையை போடுறா அதுயிதுனு சொல்லி கவரிங் செட்டை மாத்திட்டு தங்கத்தை களவாடிட்டு போயிட்டா” என்று கற்பகம் பழிச்சுமத்தினார்.

   “சித்தி பொசுக்குன்னு யார் மேலையும் பழி சுமத்திடாதிங்க. கண்ணால பார்த்து ஊர்ஜிதமாகற வரை, இப்படி நாமளா பழியை வீசறது ரொம்ப தப்பு.” என்று கற்பகத்தின் வாயை அடைத்தாள் ப்ரியா.

    சந்தியாவோ “அவங்க தான் அக்கா கூடவேயிருந்தாங்க. இந்த ரூம்ல அக்காவுக்கு அடுத்து, இங்கயே இருந்தது அவங்க தான். நான் ஒரு போன் பண்ணி பார்க்கறேன்” என்று அவசரப்பட்டாள்.

  ப்ரியதர்ஷினி போனை வாங்கி வைத்து, “உடனே போன் போட்டு என்ன கேட்ப? நீங்க என் அக்கா நகையை திருடிட்டிங்களானா?” என்றதும் சந்தியா விழித்தாள். அவள் சொல்வது போல கேட்க முடியாதே.
 
   சந்தியாவோ “இல்லை ப்ரியா நகையை பார்த்திங்களா….னு..?” என்று இழுத்தாள்.

    “இது கிட்டதட்ட அப்படி தான். பதட்டத்துல தேடினா எப்பவும் கிடைக்காது. பொறுமையா தேடுவோம்.” என்று அமைதிப்படுத்த முயன்றாள் ப்ரியா.

   கற்பகமோ “பொறுமையா தேட இதுவொன்னும் கவரிங் நகை இல்லையடிம்மா. தங்க நகை… நேரம் போக போக எல்லாரும் பந்தி முடிச்சி கை நனைச்சி, தாம்பலம் வாங்கிட்டு, வீட்டுக்கு கிளம்புவாங்க. திருடினவங்களும் கமுக்கமா கிளம்பினா நீ இல்லாத நகையை எப்ப தேடி கண்டுபிடிப்ப?

   எங்க தொலைச்சோமோ அங்க தேடணும். இப்படி இருட்டுல தொலைச்சிட்டு வெளிச்சத்துல தேடலாம்னு முடிவுக்கட்டி நகை மொத்தமா போனப்பிறகு தேடினா கிடைக்காது. நகை விக்கிற விலையில மூன்று சவரன் என்ன சும்மாவா? உழைச்சி சேர்த்தவங்களுக்கு இல்லை அருமை தெரியும். அண்ணி என்னவோ சின்னப்பிள்ளை பேச்சையே கேளுங்க” என்று நொடித்து கொண்டார்.

   திருமணம் முடிந்தப்பின் நிம்மதியாக வலம் வரவேண்டிய பானுமதி-துரைசிங்கத்திற்கு இந்த தங்கநகை காணாமல், பெரிய தலைவலியை இழுத்து வைத்தது.

    “இந்த ரூம்லயே இருந்தா சம்பந்தியும் மத்தவங்களும் என்னாச்சுனு கேட்பாங்க. முதல்ல வந்தவங்களை கவனிப்போம்.” என்று துரைசிங்கம் கூட்டத்தை களைத்து விட்டார்.

    சந்தியா விலாசினி, ப்ரியதர்ஷினி இம்மூவரிடம் நகைத் தேடுதலை ஒப்படைத்தனர். ஆளாளுக்கு ஒருயிடத்தை அலசினார்கள்.
 
   திருமணத்திற்கு வந்தவர்களை நிம்மதியாக உபசரித்திடவும் வழியின்றி எண்ணமெல்லாம் காணாமல் போன நகையிலும், இப்படியாகிவிட்டதே என்ற கலக்கத்திலும் சுழன்றது.

   அதென்ன அதிசயமோ அந்த அறையில் நிறைய கப்போர்ட் மற்றும் ஷெல்ப் இருந்தது. இங்கு வந்தப்பொழுது ‘ஐ நிறைய ஷெல்ப் இருக்கு. நீட்டா திங்க்ஸை உள்ள வச்சிடலாம்’ என்ற குதூகலமிருந்தது. தற்போது அதையே பத்து பதினைந்து முறைக்கு மேல் தேடி களைத்தவர்களுக்கு இந்த ஷெல்ப் இருப்பதே எரிச்சலை தோற்றுவித்தது.

    இந்திரஜித், சந்தோஷ் இருவரும் அடிக்கடி வந்து “கிடைச்சதா?” என்று கேட்க உதடு பிதுங்கி இல்லையென்றனர் பெண்கள்.

     “கதவை தாழிட்டு இங்கிருக்க பைகளை செக் பண்ணிடலாமா?” என்று விலாசினி கேட்க ப்ரியதர்ஷினி ”அப்படி செய்தா நல்லாவாயிருக்கும்’ எடுக்காத மத்தவங்க மேல கெட்ட அபிப்ராயமா போகாது?” என்பதை முன்வைத்தாள்.

   “நாம தேடறோம்னு யாருக்கு தெரியப்போது. கதவை அடைத்து செக் பண்ணிடலாம்” என்று சந்தியா உரைத்தாள்.

   அதுவும் பார்த்திடலாமென்று கதவை தாழிட்டனர்.

சிலரின் சூட்கேஸை தவிர்த்து பையில் ஜிப்பை திறந்து அலசிபார்த்தனர்.

  துணிகளும் கவரிங் நகையும் காஸ்மெடிக்கும் குவிந்திருந்தது.

  முதுகுப்பை, தோள்பை எல்லாம் ஆராய்ந்து முடித்தனர். “ஆறு சூட்கேஸ் இருக்கு. பட் நம்பர் தெரியாம எப்படி ஓபன் பண்ணறது?” என்றுரைத்தாள் விலாசினி.

   “இந்திரஜித் அண்ணாவுக்கு இந்த மாதிரி நம்பர் லாக் பெட்டியை ஓபன் பண்ணற ட்ரிக்ஸ் தெரியும். ஒருமுறை அண்ணா இந்த மாதிரி நம்பர் மறந்துட்டு சூட்கேஸை திறக்க முடியாம இருந்தப்ப, ‘சின்ன ட்ரிக்ஸ் தான்’ அப்படின்னு அண்ணாவிடம் சொல்லி ஓபன் பண்ணிருக்கார். இருங்க நான் அவரை கூட்டிட்டு வர்றேன்.” என்று ஓடினாள் சந்தியா.

   “என்னவோ பண்ணுங்க. முடிந்தளவு தேடுவோம். எனக்கென்னவோ மனசு சரியில்லை.” என்று ப்ரியதர்ஷினி வாடியபடி இருந்தாள்.
 
   கொஞ்ச நேரத்திலேயே சந்தோஷ், இந்திரஜித் இருவருமே மணப்பெண் அறைக்கு வந்தார்கள்.

    ஐவரை தவிர்த்து யாருமில்லையென்றதும் இந்திரஜித் நண்பனின் அனுமதியோடு மற்ற பெட்டியை திறக்கும் வித்தையை காட்டினான்.

    சின்ன ட்ரிக்ஸ் இதுபோல யு-டூயூப்பில் இவ்வாறான நுணுக்கமான விஷயத்தை கண்டதுண்டு என்று கூறி பெட்டியை திறந்தான்.

    பெட்டியில் நகையிருந்தது. ஆனால் அது பெட்டி உரிமையாளரின் தங்க நகையாக  இருக்கவே பயத்தில் தொட்டு கும்பிட்டு மூடிவைத்தனர்.

   ஒவ்வொன்றாய் பார்வையிட, கதவு தட்டும் சப்தம் கேட்டது. இந்திரஜித், சந்தோஷ் உறைந்தனர்.

   “யாரு கதவு தட்டறது? இங்க துணி மாத்தறோம்.” என்று சந்தியா குரல் கொடுத்தாள்.

     “நான் தான்டி வந்திருக்கேன். கதவை திற” என்ற பானுமதி குரலில் மெதுவாக எட்டிப்பார்த்து கதவை திறக்க, பானுமதியோடு கற்பகமும் யமுனாவும் வந்தார்.

  “இன்னுமா தேடறிங்க? நீ என்னடா பண்ணற?” என்று மகன் சந்தோஷை கேட்டார்.
 
  “கதவை லாக் பண்ணிட்டு மத்த பையில தேடிட்டு இருக்கோம் அம்மா.” என்றதும், ‘கிடைச்சதா?’ என்ற பார்வையை வீசினார்.

  ‘இல்லை’ என்று முகமே பறைச்சாற்றியது. வாய் வார்த்தை வேறு தேவையா?
   
    யமுனாவோ நகை காணாமல் போனது தெரியாமல், “ப்ரியா அவர் கிளம்பறார். உன்னோட லக்கேஜை தந்தா எடுத்துட்டு போவார். நீ தானே வெயிட்டா இருக்கு, நான் பேக்-ஃபேக் எடுத்துக்கறேன்னு சொன்ன?” என்றதும் அந்த நேரம் தான் ப்ரியாவின் சூட்கேஸை இந்திரஜித் திறக்க, “அய்யோ அது என்னோடது” என்று கூற, அதற்குள் விலாசினி மேல் துணியை எடுத்திடவும், இதுவரை ஆட்டம் காட்டிய நகை பளபளத்தது.

   ப்ரியதர்ஷினிக்கோ அதிர்ச்சி என்றால் பானுமதிக்கு உச்சப்பட்ச பேரதிர்ச்சி.

     அங்கிருப்பவர்களில் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்து விழிக்க, பானுமதியோ கற்பகம் இருப்பதால், “அட உன்னிடம் நகை கொடுத்ததை மறந்தே போயிட்டேன்.” என்று கூறிவிட்டு விலாசினியிடமே கையில் கொடுத்து “சந்திரா கழுத்தில் போட்டுவிடு” என்று அணிவித்திட கொடுத்து அனுப்பிவிட்டார்.

  ப்ரியதர்ஷினிக்கோ ‘என்னிடம் எப்ப தந்தாங்க?’ என்ற குழப்பத்தில் நின்றாள்.

   “பாருங்க அண்ணி நான் தான் அப்ப மறந்து ப்ரியாவிடம் கொடுத்தேன். அப்பாடி இப்ப தான்  நிம்மதி.” என்று நிலைமையை சகஜமாக்கினார் பானுமதி.

   சூட்கேஸை யமுனா எடுத்து கொண்டு நகர்ந்திட, “நான் போய் அண்ணாவிடம் நகை இருக்கற தகவல் சொல்லிடறேன். பரிதவிப்பா இருப்பார்” என்று கற்பகமும் அவ்விடம் விட்டு அகன்றார்.

  தற்போது சந்தோஷ், இந்திரஜித் மற்றும் பானுமதி, சந்தியா, ப்ரியா என ஐவர் மட்டுமிருக்க, “உங்க அக்கா கல்யாணத்துல இன்னும் ஐந்து சவரன் பாக்கி போடணும்னு அவங்க வீட்ல அழுத்தம் கொடுக்க, என் மக நகையில கைவச்சிட்டியா? உண்ட வீட்டுக்கு ரெண்டகமா? என்னடியிது?”  என்று பானுமதி அதட்டி கேட்கவும், தான் ஏதேனும் கெட்ட கனவேதும் காண்கின்றோமா? என்ற அச்சத்தில் நின்றாள்.

  “சொல்லுடி?” என்று கை புஜத்தை பற்றி உலுக்கவும், “அத்தை நான் எதுவும் பண்ணலை. நகை எப்படி என் பெட்டில வந்துச்சுனு சத்தியமா தெரியாது. என்னை எப்படி தப்பா நினைச்சு பேசறிங்க. மனசு கஷ்டமாயிருக்கு அத்தை” என்று ஆற்றுமடை திறந்து விட்டது போல கண்ணீரை உகுத்தினாள்.

  “என்னடி நீலிக்கண்ணீர் வடிக்கிற? இந்த சூட்கேஸுக்கு தனி நம்பர் இருக்கு. அது உபயோகிகறவங்களுக்கு மட்டும் தானே தெரியும். அப்படியிருக்க உன் பெட்டியை பூட்டியது யாரு? இந்த நகை இதுல தானே இருந்தது. உன் கண் முன்ன தானே எடுத்தேன்.” என்று பானுமதி கோபத்தில் கொதித்தார்.

   இதுவரை அன்புக்காட்டிய உள்ளம் இப்படி பழியை சுமத்தவும் பேச்சற்று நின்றாள்.

   சந்தோஷ், சந்தியா இருவருமே கையை பிசைந்து வேடிக்கை பார்த்தனர்.

  இந்திரஜித்தோ, “ஆன்ட்டி என்னை மாதிரி யாராவது ஓபன் பண்ண தெரிந்தவங்க கூட நகையை எடுத்து தர்ஷினி பெட்டில வச்சிருக்கலாமே. அவ திருடியிருக்க மாட்டா” என்று உதவிக்கு வந்தான்.

   “இங்க பாருங்க தம்பி. நீங்க சொல்லறது வாஸ்தவம் தான். ஆனா அந்தளவுக்கு அறிவு இங்க யாருக்கும் இல்லை. அதுவும் இவ போனிலேயே பேட்டர்ன் நம்பரை அடிக்கடி மாத்தி பிரைவேஸி செட்டிங் எல்லாம் பத்திரமா பார்த்துப்பா. அப்படியிருக்க அவ பெட்டியை அஜாக்கிரதையா தான் வச்சிருப்பாளா?

இவ பெட்டி நம்பர் இவளுக்கு தான் தெரியும். இவங்க அக்காவுக்கு ஆறு மாசம் முன்ன நடந்த கல்யாணத்துல ஐந்து சவரன் நகை இன்னமும் போடலை. அதுக்கு தான் இப்படி திருடியிருப்பா.” என முடிவே கட்டினார்.

   கதவு தட்டும் சத்தம் கேட்க, துரைசிங்கமும் கவிதாவும் வந்தார்கள்.

   கவிதா மகளிடமும் அண்ணன் அண்ணியிடமும் சொல்லிவிட்டு கிளம்ப வந்தார். பாவம் மகள் பழி சுமந்து நிற்பது அறியாமல்….

     சந்தியா கதவை திறக்கவும், “என்னம்மா மருமகளிடம் நகையை கொடுத்து வச்சியா. இப்ப தான் நிம்மதி.” என்றார் துரைசிங்கம்.

பானுமதியோ முகம் இறுக்கமாய் இருக்க, ப்ரியதர்ஷினியோ உயிர் துறந்த வலியை முகத்திலேந்தி நின்றிருந்தாள்.

   கவிதாவோ அண்ணன் மனைவியிடம் வந்து, “யமுனா உண்டாகியிருக்கா மதினி அதனால நான் யமுனாவோடவே கிளம்பறேன்.” என்று நல்லவிஷயத்தை கூறினார்.

   இதே முன்பானால், ‘அப்படியா சங்கதி. நல்லவிஷயமாச்சே. பார்த்து புள்ளைய கவனிங்க மதினி.’ என்று வாழ்த்து கூறி மகிழ்ந்து பேசியிருப்பார். இன்றோ நிலைமை தலைகீழாகயிருக்க, மட்டுப்படுத்திய கோபத்தோடு முகத்தை வேறுபக்கம் திருப்பி அமைதிகாத்தார்.

   துரைசிங்கமோ “தங்கச்சி நல்ல விஷயம் சொல்லிருக்கு இரண்டு பேரும் இப்படி சிலையா இருக்கிங்க? மருமகளே என்னம்மா?” என்று ப்ரியாவை அப்போது தான் கவனித்தார்.

  கவிதாவும் மகளின் கண்ணீரை கண்டு அருகே வந்தார்.

   பானுமதி கணவரிடமும் ப்னியா அண்ணியிடமும், ப்ரியதர்ஷினி நகையை திருடியதாகவும், நகை அவள் பெட்டியிலிருந்ததையும்  குறிப்பிட்டார்.

   துரைசிங்கத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. “ப்ரியாவிடம் நீயே தந்திருப்ப, இல்லைனா சந்திரா தந்திருந்தா?” என்று கூறினார்.

  “நான் சந்திரா கழுத்துல தான் நகையை போட்டேன். சந்திரா ப்யூட்டிஸன் சொன்னதால இவளிடம் கொடுத்திருந்தா  இவளுக்கு தெரியும்ல? நம்மிடம் சொல்லிருக்கலாம்ல. பதறிட்டு தேடிட்டு இருந்தோம். சந்திராவுக்கு நினைவிருக்கும்னா நம்மிடம் சொல்லிருப்பாளே. நகையை ஐ-லைனார் போடறச்ச கழட்டி வச்சிருக்கா. அப்படின்னா இதை ப்ரியா தான் எடுத்திருக்கா?” என்று கூறி யமுனாவிற்கு ஐந்து சவரன் நகையை கொடுக்கும் முடிவில் இருந்ததாக எடுத்துரைத்தார்.

  யமுனாவை கண்டதும் புதுப்பெண் என்று தனியாக நலம் விசாரித்தப்போது, ‘எங்கத்தை… எங்க மாமியார் இன்னும் உங்க வீட்லயிருக்கறவங்க ஐந்து சவரன் போடலைனு அதையே கேட்கறாங்க. அம்மாவிடம் எதுவும் சொல்லலை. ப்ரியா தான் நான் பார்த்துக்கறேன்னு சொல்லிருக்கா’ என்ற பேச்சை வைத்து, பானுமதியாகவே ப்ரியா அதற்கு தான் திருடியதாக முடிவெடுத்தார்.

   கவிதாவோ “அண்ணி பார்த்து பேசுங்க. எம்புள்ளைங்களுக்கு உழைச்சு சம்பாதிக்க தான் தெரியும். திருடற பழக்கமோ பொய் பேசவோ தெரியாது.” என்று கவிதா முதல் முறையாக சத்தமாய் வாய் திறந்தார்.

   “பிள்ளை கொலையே செய்துட்டு வந்தாலும் பெத்தவளுக்கு மகன் தான். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. உங்க பொண்ணை நீங்க உயர்வா நினைச்சிக்கோங்க. அவ பெட்டில, அவ நம்பரை வேற யாருக்காவது சொல்லிருக்காளா? அவ பெட்டில தானே நகை இருந்துச்சு?” என்று பானுமதி குதித்தார்.

  “நீ என்னடி வாய் திறக்காம இருக்க? பதில் சொல்லுடி” என்று மகளை திட்டினார்.

  “இதுவரை அத்தை என்னை திட்டியதே இல்லைம்மா. முதல் முறை என் மேல திருட்டு பழி சுமத்தறாங்க என்னால எப்படிம்மா பேச முடியும்?” என்று உதடு நடுங்க, அழுதவாறு உரைத்தாள்.

   சந்தோஷை இந்திரஜித் முதுகை தட்டி, ‘பார்த்துட்டு இருக்க?’ என்பதாய் தள்ளினான்.

  “அம்மா… இப்ப இதை அப்படியே விடு. கல்யாணத்துக்கு வந்தவங்களை கவனிங்க. நம்ம நாலு பேருமே இங்க இருக்கோம். கதவும் ரொம்ப நேரமா தட்டிட்டு இருக்காங்க” என்று பானுமதியை துரைசிங்கத்தை மற்றவர்களை கவனிக்க அனுப்பினான்.  

   சந்தியாவை ‘சந்திரா பக்கமாக நில்’ என்று மேடைக்கு அனுப்பினான்.

  கவிதாவோ “இன்னும் என்னடி கல்லு மாதிரி நிற்கற. பழியை சுமந்துட்டு இங்கயே உலாத்தப் போறியா வா” என்று ப்ரியதர்ஷினியை இழுத்து செல்ல, சந்தியா, சந்தோஷ், பானுமதி, துரைசிங்கம் எல்லாம் வேடிக்கை தான் பார்த்தனர். தடுத்து பேசவில்லை. இந்திரஜித் மட்டும் “டேய் அவங்க போறாங்க” என்று கிசுகிசுத்தான்.

   “இங்கயிருந்தா அவளுக்கும் கஷ்டம் தான் போகட்டும். பிறகு பொறுமையா பேசிக்கலாம்.” என்று முடித்துக்கொண்டான்.

  கலங்கிய விழிகளோடு தர்ஷினி செல்ல, இந்திரஜித் வாசல் வரை பின்தொடர்ந்து வந்தான். அவனுக்கு தர்ஷினியிடம் என்ன பேசி ஆறுதலுரைக்க என்று துளியும் தெரியவில்லை.

   அன்பாய்  அழகாய் ஆரம்பித்த திருமணம், தன் மீது பழியை போட்டு திருப்பி அனுப்ப ப்ரியதர்ஷினி மண்டபத்தை திரும்பியும் பாராது நடந்தாள்.

-தொடரும்.
-Praveena Thangaraj

2 thoughts on “நீயென் காதலாயிரு-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *