Skip to content
Home » நீயென் காதலாயிரு-21

நீயென் காதலாயிரு-21

அத்தியாயம்-21

   இந்திரஜித்தை அவன் பெற்றோர் இருவருமே ஒரு அடி கூட நகராமல் நின்றனர்.

   “அத்தை உங்க வீட்டு நாய் வச்சி மிரட்டுவீங்களா? அது பிறந்து ஆறு மாசம் தானே ஆச்சு? குட்டி பப்பியாச்சே, அதுக்கு சரியா கடிக்க வராது.

  அதுக்கு பதிலா நீங்க தர்ஷுவை வச்சி என்னை கடிக்க வைக்கலாம். நல்லாவே கடிப்பா. இங்க பாருங்க வர்றப்ப பஸ்ல ‘டென்ஷனா இருக்கு இந்தர்’னு சொன்னா. நான் விளையாட்டு காட்டி மனசை மாத்தி சிரிக்க வைக்க ட்ரை பண்ணினேன். மனசாட்சியேயில்லாம என்னை கடிச்சிட்டா.” என்று கைவளைவை காட்டினான்.

   ப்ரியதர்ஷினிக்கோ வரும் போது அவன் செய்த சேட்டைக்கு ஆசையாக கடித்து விட்டாள். அதை இப்படி போட்டு கொடுப்பதை கண்டு பின் நகர்ந்தாள்.

  கவிதாவின் பார்வைக்கு ப்ரியா பொசுங்காமல் உயிர் பிழைத்தால் எனலாம்.

   கவிதாவுக்கு தன் மகளா ஒரு ஆடவனோடு இந்தளவு விளையாடியிருப்பது என்ற‌ கோபம் உருவானது.

   ”அத்தை இந்நேரம் என் தர்ஷு மேல யார் பழிசுமத்தியதுனு அங்க சந்தோஷ் வீட்ல தெரிந்திருக்கும். சாரி தர்ஷு நான் அந்த ஆடியோவை அவனுக்கு அனுப்பிட்டேன்.‌ என் ப்ரியதர்ஷினி அழக்கூடாது. நீ எப்பவும் சிரிக்கணும்.” என்றவன் கண்ணீரை துடைத்து விட்டான்.

   கவிதாவுக்கு ஒர்கணம் மகளின் கண்ணீரை துடைக்கவும் ஒரு கரம் வந்துவிட்டதா? என்ற நிம்மதி வந்தது. இதற்கு முன் பேசியதை எண்ணி அமைதியானார்.‌

   ப்ரியதர்ஷினியோ “ஏன் இந்தர் இப்படி செய்த? சந்தியா இப்ப என் மேல இன்னமும் கோபத்துல இருப்பா” என்று கையை தட்டிவிட்டாள்.

   “அச்சசோ அத்தைக்கு சந்தியாவை பத்தி சொல்லவேயில்லை. இப்ப நீயா உலறுறியே தர்ஷு” என்றதும் கவிதா மகளை நோக்கி வந்தார்.‌

‌‌”அவயெதுக்கு உன்‌மேல பழிப்போடணும்?” என்று கேட்க, “அத்தை மாமாவுக்கு நான் சந்தோஷை கல்யாணம் பண்ணிப்பேன்னு, என்‌மேல அதிகப்படியா பாசம் காட்டினாங்க. அவளுக்கு அது பிடிக்கலை. மாமா வீட்ல எப்பவும், என்னை தான் தூக்கி வைக்கறாங்கனு நினைச்சி பழிசுமத்திட்டா.

   நான் கடைசியாக என் சூட்கேஸுக்கு நம்பர் போட்டு‌ லாக் செய்தப்ப உன்னோட பிறந்த நாள் நம்பர் தான் போட்டேன் ம்மா.  அப்ப அவ ஏய் அத்தையோட பிறந்த நாளை தான் நம்பரா வச்சிருக்கியானு கேட்டா. நான் ஆமானு சொன்னேன்.
‌‌
   பழிசுமத்தி நான் அழுதுட்டு இருந்தப்ப, அவ தான் நிம்மதியா கையில தாளமிட்டபடி  நின்றா.

   இங்கிருந்து சென்னை போகறப்ப அவளிடம் நான் கேட்டேன். ஏன் என்‌மேல பழிப்போட்டனு‌.

  முதல்ல மறுத்து நாடகமாடினா. அப்பறம் ஆமானு ஓத்துக்கிட்டா. என்னை, அத்தை , மாமா சந்தோஷ் முன்னிலைப்படுத்தி பேசறது, சபையில நிற்க வைக்கிறது அவளுக்கு அதெல்லாம் பிடிக்கலையாம். நிறைய பேசினா.‌ இனி நான் இங்க இருக்க மாட்டேன், நீ பழிசுமத்தியதை யாரிடமும் சொல்ல மாட்டேன் சந்தோஷமாயிருனு கிளம்பிட்டேன்.

   இப்ப எனக்கும் சந்தோஷுக்கும் கல்யாணமும் நடக்காதுனு ரொம்ப சந்தோஷமாயிருப்பா, அவளுக்கு தெரியலை நானும் சந்தோஷும் எப்பவும் கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு. இப்ப தேவையில்லாத வேலை பார்த்து, மாமா-அத்தையிடம் திட்டு வாங்கியிருப்பா. பாவம் சந்தியா‌.” என்று கூற இந்திரஜித் உச்சுக் கொட்டி கேலி செய்தான்.

   ‌ “என்னத்த பாவம்? அதெல்லாம் அவ தவறை உணரமாட்டா.‌ நாம் தான் உடைஞ்சிப்போய் இருக்கணும்” என்று கவிதா கலங்கினார்.

  இந்தரோ “அத்தை அதெல்லாம் விலாசினி மூலமா அவங்க வீட்டுக்கு தெரியலாம். நமக்கு அது தேவையில்லாதது. பானுமதி ஆன்ட்டி, துரை அங்கிளுக்கு தெரிந்ததே அது போதும். நாளைக்கே கூட ப்ரியாவிடம் மன்னிப்பு கேட்பாங்க.” என்று ஆருடம் கூறினான்.‌

   “மன்னிப்பு கேட்டு என்னவாக போகுது தம்பி. இனி உறவு என்றது அறுந்துப்போச்சு” என்று கண்களை துடைத்து மகளை பார்வையிட்டார்.
     
    ப்ரியதர்ஷினி இந்தரை சத்தமின்றி திட்டுவதை கண்டவர், “தம்பி இது ஆம்பளைங்க இல்லாத வீடு. அக்கம் பக்கம் பார்த்தா கண்ணு, காது வச்சி ஏதாவது பேசுவாங்க. தயவு செய்து நீங்க கிளம்புங்க.” என்று இந்தரை பார்த்து கூறிவிட்டு, ”நீங்களும் மன்னிச்சிடுங்க. என்னடா இது வீட்டுக்கு வந்தவங்களை இப்படி அனுப்பறோம்னு தப்பா நினைக்காதீங்க.” என்றவர் சித்ரா மோகனிடமும் கூறினார்.

   அவர்கள் அமைதியாக இந்தரை பார்த்தார்கள்.

   ப்ரியாவிடம் “அக்காவுக்கு முறுக்கு அதிரசம் சுட்டு வச்சிருக்கேன். அதை இவங்களுக்கு கொண்டு வந்து கொடுத்துட்டு காபி போடு போ” என்று‌ விரட்டினார்.‌

   ப்ரியா ஒரு பக்கம் அன்னை கூறியதை போல முறுக்கு, அதிரசம் கொடுத்துவிட்டு காபி போட கிச்சனுக்குள் நுழைந்தாள்.

   ”அண்ணி… நீங்க இப்ப குழப்பத்துல இருக்கிங்க. சந்தோஷ் அப்பா அம்மா ப்ரியதர்ஷினியை மருமகள்னு கூப்பிட்டு பழகியதையும், இப்ப நாங்க உரிமையா பழகறதும் பயப்படறிங்க.

   கொஞ்ச நாள் போகட்டும். உங்களுக்கே ப்ரியாவை என்‌மகன் நல்லா பார்த்துப்பான்னு தோணும். அப்ப நாம சந்திச்சு நிதானமா பேசுவோம்‌.” என்று சித்ரா கூற, மோகனோ, “தங்கச்சி முறுக்கு டேஸ்டா இருக்கு. கொஞ்சம் பேக் பண்ணி கொடும்மா‌” என்றார்.

   கவிதா திகைத்த படி விழிக்க, இந்தரோ “அத்தை நீங்களே இன்னிக்கு இங்க இருக்க சொன்னாலும் அம்மா விட மாட்டாங்க. வீட்லயிருந்து கிளம்பறப்பவே ஹோட்டல் புக் பண்ணிட்டோம். அதனால தர்ஷினியை இங்க விட்டுட்டு உங்களிடம் எங்க காதலை பகிர்ந்துட்டு, நாங்க அங்க போயிடுவோம். அப்பறம் லீவு முடியறப்ப எங்களோட தர்ஷுவை கூட்டிட்டு போயிடுவேன்.

   கோ-இன்சிடெண்டா அவளும் அப்பாவும் ஒரேயிடத்தில் வேலை பார்க்கறாங்க. அப்பாவால தான் என்‌ தர்ஷுவை சந்திச்சேன்.” என்றதும் கவிதா மகளை தான் வினோதமாக பார்த்தார்.‌

     “காபி எடுத்துக்கோங்க தம்பி” என்று இந்தரை பேசவிடாமல் தடுத்தார். இந்திரஜித் பேசினால் அவன் பக்கம் மனம் சாய்கின்றது. மகளுக்கு ஏற்றவனோ என்று அடிக்கடி எண்ணங்கள் குறுட்டுத்தனமாக சென்று வருகிறது.

    “பையன் பேசினா நாம விழுந்துடுவோம். அந்தளவு வார்த்தையில நெயிர்ச்சி இருக்கும். இங்கிலிஷ்ல என்னடா சொல்வாங்க?” என்று மோகன் கேட்க, இந்தரோ ‘சாக்லேட் பாய்’ அப்பா” என்று காலர் பட்டனை ஒன்று சேர்த்து நல்லவனாக காட்டினான்.‌

   ”மாமா இவன் சாக்லேட் பாய் இல்லை. ப்ளே பாய்.” என்று கூறியதும் கவிதா முறைத்த‌ முறைப்பில் இந்தரின் இருக்கைக்கு அருகே அமர போனவள் சித்ரா அருகே நின்று விட்டாள்.

   “அப்பறம் வர்றேங்க. ப்ரியாவை திட்டாதிங்க‌. அங்க ஒரே அழுகை. சந்தோஷ் நிச்சயதார்த்தத்துக்கு கூட அத்தை மாமா இன்வெயிட் பண்ணலை. இந்த சந்தோஷாவது என்னிடம் சொன்னானா? அப்படியிப்படி அழுது முகம் வாடிப்போச்சு. இங்க இரண்டு நாள் உங்க கையால சாப்பிட்டு மனசு விட்டு இருக்க சொல்லுங்க.” என்று‌ சித்ரா எழுந்தார்.

   கவிதா வேகமாய் கிச்சனுக்கு சென்று ஒரு டிபன் பாக்ஸில் முறுக்கை எடுத்து வைத்து நீட்டினார்.‌

    “எடுத்து போய் சாப்பிடுங்க” என்று‌ மட்டும் கவிதா நீட்ட பெற்றுக் கொண்டார் சித்ரா.

    இந்தரோ “அத்தை‌ அவளை போன்ல பேச சொல்லுங்க. எனக்கு இங்க வேற டைம்பாஸ் இல்லை” என்று அங்கிருந்த முறுக்கை கடித்தபடி கூற, கவிதாவுக்கு இப்படியும் மனிதர்களா? என்ற ரீதியில் வியந்தாள்.‌

     வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

   இந்தரை கடைசி நிமிடம் வரை திட்டியபடி ப்ரியா முனங்க, கவிதா அதையெல்லாம் கண்டும் காணாதது போல இருந்தார்.

  இந்தர் சென்றதும் வீட்டில் வந்து தட்டு டம்ளரை எடுத்து வைத்தார்.

    “அம்மா இந்தரை நான் கூப்பிடலை. அவனா தான்‌ வந்தான்.” என்றவளை “முழுப்பெயர் என்ன?” என்றார் கவிதா.

   ”இந்திரஜித்‌… மாமா அத்தை கூடயிருக்கவங்க நெருக்கமானவங்க இந்தர்னு கூப்பிடுவாங்க.” என்று விவரிக்க, “நீ இந்தர்னு கூப்பிடற? அந்தளவு நெருக்கமா? பக்கத்துல உட்கார்ந்து வந்திருக்க? அந்த தம்பியை கடிச்சி விளையாடியிருக்க?” என்றதும் ப்ரியா அமைதியாக தலைகவிழ்ந்தாள்.‌

    கவிதா வேறதுவும் கூறாமல் சென்றிட, ப்ரியதர்ஷினி அன்னையின் மனதில் என்ன ஓடுகின்றதென்று அறியாது விழித்தாள்.

ஆட்டோவில் திருச்சியில் தங்க முடிவெடுத்து, ஹோட்டலுக்கு போகும் வழியில் இந்தரோ, “ப்ரியாவை திட்டாம இருப்பாங்களாம்மா” என்று கேட்டதும் தான் தாமதம்.

  மகனை இடித்து, “எதுக்குடா அவ உன்னை கடிச்சி விளையாடியதை அவங்களிடம் சொன்ன.‌ ப்ப்ப்பா என்னம்மா முறைச்சிட்டாங்க. கண்டிப்பா திட்டு விழும். நல்லா அவளை அவங்க அம்மாவிடம் போட்டு கொடுத்துட்டு வந்திருக்க” என்றார் சித்ரா.

    இந்தரோ மறுப்பாய் தலையாட்டி சிரித்து, ‘”அம்மா அவ என்னிடம் இந்தளவு நெருக்கமா, அன்பா இருப்பதை சொல்லிருக்கேன். நிச்சயம் அந்த நேரம் கோபமாயிருந்தாலும் யோசிப்பாங்க.”. என்றான்.

    மோகனோ “ஏன்டா சந்தோஷ் வீட்டுக்கு போகணுமா?” என்று கேட்டு முடிக்க, “இல்லைப்பா ஹோட்டல் ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்கணும். நாளைக்கு வேண்டுமின்னா போகலாம்.
   அம்மா வேற திருச்சி கோவிலுக்கு போக கேட்டிருக்காங்க” என்று கூற ஆட்டோ அவர்கள் சொன்ன ஹோட்டல் முன்‌வந்து நின்றது.

கீழே உணவகம், மேலே அறைகளெடுத்து தங்குமிடமாக இருந்தது. தங்கள் போனிலேயே புக் செய்ததை அறிவித்து பணத்தை கொடுத்து அறையின்‌ சாவியை வாங்கிக் கொண்டனர்.‌

   கதவு திறந்ததும் இந்திரஜித் தன் ஆறடி சரீரத்தை நீட்டி நிமிர்ந்திட, சித்ராவோ முகம் அலம்ப சென்றார்.

   மோகனோ “காபி டிபன் எல்லாம் மருமக வீட்ல முடிச்சாச்சு. நைட் டிபன் மட்டும் கீழே முடிச்சிடலாம்.

‌அந்த டிவி ரிமோட் எடு இந்தர். மேட்ச் பார்ப்போம்” என்று கூற இந்தரோ டிவி ரிமோட்டை கொடுத்து சுவரில் முதுகை சாய்த்து தந்தையும் மைந்தனும் கிரிக்கெட்டில் மூழ்கினார்கள்.‌

   சித்ராவோ போனை எடுத்து, ப்ரியாவுக்கு அழைத்து, “அம்மா திட்டினாங்களா ப்ரியா?” என்று கேட்க, “நீங்க கிளம்பினதுலயிருந்து அம்மா என்னிடம் பேசலை அத்தை. அமைதியா இருக்காங்க.” என்று கூறினாள்.‌

   “சரிம்மா ஏதாவதுன்னா உடனே போன்‌ பண்ணு. நாங்க கூடவேயிருப்போம். சரியாடா தங்கம்” என்று கூற “சரிங்கத்தை” என்று துண்டித்து கொண்டார்கள்.

‌  “அங்க என்ன போன்ல? கிச்சனுக்கு வந்து சப்பாத்தி மாவு பிசைந்து கொடு. பூரி பூரினு சுட்டா ஐந்தாறு முழுங்க வேண்டியது. கூடமாட ஒத்தாசை செய்யறதில்லை” என்று கவிதா கூப்பிட, ‘இனி போனை கையில எடுத்தாலே இந்த அம்மா பத்ரகாளியா மாறலாம். எதுக்கோ போனை தூரவைப்போம்’ என்று வைத்துவிட்டு துப்பட்டாவை சோபாவில் போட்டுவிட்டு கிச்சனில் உதவ சென்றாள்.

எப்படியும் உடனடியாக வெடிக்கா விட்டாலும் அடிக்கடி தனக்கு கொட்டு வைத்து திட்டி தீர்ப்பார்கள். அது நிச்சயம் நடக்கும்.

   மாவு பிசைந்தபடி அமைதியாக இருக்க, “நீ விரும்பறது யமுனாவுக்கு தெரியுமா டி?” என்று கேட்டார் கவிதா‌.

    “இல்லைம்மா. சந்தோஷுக்கு மட்டும் தெரியும் அதுகூட இந்தர் சொல்லிருப்பான்” என்றாள்.

   கவிதா மார்க்கமாய் முறைத்துக் கொண்டு, “உன்னை தேடி சந்தோஷ் கூட யமுனா வீட்டுக்கெல்லாம் போய் விசாரிச்சிருக்காராமே இந்த பையன்.

    இப்ப தான் யமுனாவிடம் போன்ல சொன்னேன்.‌ அவ அன்னைக்கே  சந்தோஷும் சந்தோஷ் பிரெண்டும் வீட்டுக்கு வந்ததா சொல்லறா.

   கற்பகம் அக்கா வேற அன்னைக்கு மண்டபத்துல உன்னை நோட் பண்ணினாங்களாம். இந்த பையன் தான்‌ வலிய வந்து பேசி உன்னையே விழுங்கறாப்ள பார்த்தததா.” என்றதும் ப்ரியா மௌவுனம் காத்தாள்.

  கவிதாவோ “‌‌அம்மாவை மீறி அவர் தான் வேண்டும்னு போவியா?” என்று கேட்க மறுப்பாய் தலையசைத்து “நீ என்னை கஷ்டப்பட்டு வளர்த்தம்மா. உன்னை சங்கடப்படுத்தி நல்ல வாழ்க்கை வந்தாலும் போக மாட்டேன்.‌ அக்காவுக்கு எப்படி நீயா நல்லது செய்தியோ, அதே போல எனக்கு நீ செய்து, இந்த உலகத்துல தனியாள நீ இரண்டு பொண்ணுங்களை நல்லா வளர்த்து நல்லபடியா கல்யாணம் செய்தனு பேர் வாங்கணும்.

அதை விட்டு‌ சின்ன‌ பொண்ணை சரியா வளர்க்கலை அதனால் அது இஷ்டத்துக்கு ஓடிப்போச்சுனு கெட்ட பெயரை வாங்கி தரமாட்டேன்.” என்று உருட்டினாள்.

   சப்பாத்தி மாவை தான் உருட்டினாள். அவள் வார்த்தையில் உருட்டல் இல்லாமல் நியாயமாய் பேசினாள் ப்ரியதர்ஷினி.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
 

8 thoughts on “நீயென் காதலாயிரு-21”

  1. Super sis nice epi 👌👍😍 wow dharshini azhaga pesi avanga Amma va perumai paduthita pa semma🥰😘 endha indhar nalla avala avanga Amma kita pottu kuduthutan🤣

  2. Kalidevi

    Superb epi ena tha kovam vanthalum amma konjam yosika aarambichitanga priya so yosikatum time kodu un nallathukaga yosipanga thane ne eppadi unga amma ku therium inga irunthu kelambum unga amma sammadhamnkedaikum

  3. M. Sarathi Rio

    நீயென் காதலாயிரு…!
    (அத்தியாயம் – 21)

    இந்த ப்ரியா அம்மா ஏன் இம்புட்டு தயங்குறாங்கன்னே தெரியலையே..? தயங்குறாங்களா, இல்ல பயப்படறாங்களா..?
    இந்தர் ஃபேமிலி தான் ரொம்ப வெளிப்படையா பேசறாங்க தானே. அப்புறம் எதுக்கு ஒரு மாதிரி கட் & ரைட்டாவே அவங்க கிட்ட பேசுறாங்களோ. நம்ம பொண்ணைத் தேடி இத்தனை அக்கறையோட, நேசத்தோட
    ஒரு அலயன்ஸ் வந்தததுக்கு சந்தோஷம் தானே படணும்
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *