அத்தியாயம்-3
திருமணம் முடிந்து மறுவீட்டு அழைப்பு, கறிவிருந்து, என்று எதற்கும் ப்ரியதர்ஷினி, கவிதா செல்லவில்லை.
முகத்திலறைந்தது போல திருட்டு பழியை போட்டவர்கள் முன் கறிவிருந்துக்கு செல்ல பிடிக்குமா?
யமுனா கறிவிருந்துக்கு செல்ல தயாரானவளை கவிதா போக வேண்டாமென்று கூறிவிட்டார். யமுனா ‘ஏன்மா எதுக்கும்மா?’ என்று வீடியோ போனிலேயே குடைந்தாள்.
அன்னை முகமும், தங்கை முகமும் சரியில்லையென்றதும் ‘என்னாச்சு?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள்.
“நீங்க சொல்லலை அத்தையிடம் போன் போட்டு கேட்கறேன்” என்று பேசவும், கவிதா வாய் திறந்து மண்டபத்தில் நடந்ததை விவரித்தார்.
இனி உறவு என்பதையே தலைமுழுகியாயிற்று என்றுரைத்தார். அதன் பின் யமுனாவும் தொந்தரவு செய்யவில்லை.
யமுனா கணவன் ராஜா கூட, “என்னடி உங்க அத்தை மாமா நமக்கு புதுத்துணி எல்லாம் எடுத்து ரிசப்ஷன், கல்யாணம், மறுவீட்டு அழைப்பு கறிவிருந்து எல்லாத்துக்கும் கலந்துக்க சொன்னாங்க. நீ என்ன பொசுக்குன்னு வேண்டாம்னு உட்கார்ந்திருக்க?” என்று கறிவிருந்துக்கு செல்லாமல் இருப்பவளை பார்த்து கேட்டார் ராஜா.
ஆறுமாதமே முடிந்த திருமண வாழ்வில், கருவுற்றுயிருக்கின்றாள் யமுனா. இந்த நேரம் நடந்தவையை கூறினால் தன் தங்கையை கணவர் நம்புவாரா? என்ற ஐயம் துளிர்க்க “அம்மா தான் உண்டாயிருக்க, ஒருயிடமா இருக்க சொல்லிட்டாங்க. உங்களை மட்டும் என்றால் நீங்க தயங்குவிங்கன்னு ப்ரியாவும் மாமாவை அலைக்கழிக்காத. நானே ப்ரியாணி எடுத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டா” என்று பொய்யுரைத்தாள்.
கவிதா பெரிய மகளிடம் ‘மாப்பிள்ளை ஏதாச்சும் கேட்டாறா?’ என்று கேட்க, “அவர் துருவி துருவி கேட்டார். நான் சமாளிச்சிட்டேன் அம்மா” என்றாள்.
இப்படியொரு பொய் என்பதால் அடுத்த பத்து நிமிடத்தில் தன் தூக்குவாளியில் பக்கெட் பிரியாணி வாங்கி யமுனா குடும்பத்திற்கு கொடுக்க முடிவெடுத்தார் கவிதா.
பக்கத்து பக்கத்து ஏரியா என்பதால் உடனடியாக ப்ரியாணி வாங்கி தூக்கில் வைத்து கவிதாவே கொண்டு சென்றார்.
ப்ரியதர்ஷினி மனம் என்னப்பாடு படுமென சொல்லித்தான் தெரியவேண்டுமா? பித்து பிடித்தவள் போல இருந்தாள்.
யமுனா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் நேரம், ப்ரியதர்ஷினி அப்பொழுது தான் பெரியவளாய் ஆளானாள். அதன் பின் ப்ரியாவுக்கு சேலைக்கட்டி அழகு பார்த்து கொஞ்ச நாளிலேயே கவிதா கணவர் தியாகு இறந்துவிட்டார். அன்றிலிருந்து இன்று வரை ப்ரியாவுக்கு துரைசிங்கம்-பானுமதி ஒரு மாரல் சப்போர்ட்.
கணவரை இழந்ததால் கண்டிப்போடு பிள்ளைகளை வழிநடத்த கவிதா முடிவெடுத்து அடக்கவொடுக்கமாக நடத்தினார்.
அதற்கெல்லாம் செல்லம் கொஞ்சுவது போல பானுமதி இருப்பார். அதனாலேயே அதிகளவு நெருக்கமுண்டு.
இரண்டு மூன்று நிறுத்தத்தில் வீடு என்பதால் நினைத்த நேரம் செல்வாள் ப்ரியா.
யமுனாவை கட்டிக்கொடுத்த இடம் தான் அரைமணி நேரப்பயணம். கவிதா கடையில் வாங்கிய பக்கெட் பிரியாணி, வறுவல், தொக்கு, பச்சடி, அல்வா என்று கூடவே பழங்களென தன் இரண்டு கட்டப்பையில் வைத்து ஆட்டோ பிடித்து இறங்கினாள்.
யமுனாவின் கணவர் ராஜா ஒரே பையன் என்பதால் பெற்றோரை தவிர்த்து துளைத்திடும் கேள்விகள் வராது.
அதுவரை சந்தோஷமாக சமாளிக்க முயன்றார்.
எத்தனை நாள் சமாளிக்கப் போகின்றாளென்று விதிக்கே தெரியும்.
ராஜாவின் அம்மாவிற்கு இப்பொழுது தான் பல்செட் கட்டியிருந்தார்கள். அதன் விளைவால் சற்று முகம் வீக்கமிருந்தது. மற்றவரை சந்திக்க கூச்சப்பட்டு திருமணத்திற்கு வரவில்லை. அதனால் ‘திருமணம் நல்லபடியாக நடந்ததா?’ என விசாரித்து கொண்டார்.
ராஜா தந்தை பெரிதாக எங்கும் செல்ல விரும்பாதவர். அதோடு சொன்ன சொல்படி நகை நட்டு, பணம் என்பதை எதிர்பார்த்து வராததால் சற்று முறுக்கு காட்டி திரிபவர்.
அதனால் உணவை கொடுத்துவிட்டு பெரிய மகளிடம் பேசிவிட்டு, வீடு திரும்பும் முடிவில் இருந்தார்.
ப்ரியா ஒரே அழகை. புலம்பல், வெறித்த திக்கற்ற பார்வை இப்படியே இருப்பதாக கவிதா யமுனாவிடம் கூறினாள்.
“என் வீட்டுக்காரர் சந்தோஷிற்கு போன் போட்டா தெரிந்திடும் அம்மா.” என்று தயங்கினாள்.
“அதுவா தெரியவந்தா சொல்லு பார்த்துக்கலாம். ஆனா என் மக தப்பு செய்யலை. அதையும் தெளிவா சொல்லிடு” என்று நடையை கட்டினார்.
யமுனா போன் போட்டு தங்கைக்கு ஆறுதலாக பேச முயலலாம். ஆனால் தங்கை போனை எடுத்தால் தானே?
ஒரு வாரம் கடந்திருக்கும். சந்தோஷ் பைக்கில் அவனும் அவன் தங்கை சந்தியாவும் வந்திருந்தார்.
கவிதா மட்டும் வீட்டில் துணியை உலர்த்தினார்.
அந்நேரம் இருவரும் வந்து சேரவும் சிறுசலமுமின்றி இருவரையும் பார்த்து துணியை பிழிந்தார்.
“ப்ரியா எங்கத்தை?” என்று வந்தான் சந்தோஷ். அவன் வாய் தான் கேட்டது. கண்கள் அறையெங்கும் அளவிட்டது. கால்கள் சமையல் அறை, படுக்கயறை, மாடிக்கு என்று தாவியது.
சந்தியாவோ நின்றயிடத்திலிருந்து அண்ணனை தான் அளவிட்டாள்.
எங்கும் ப்ரியதர்ஷினி இல்லை என்றதும் அத்தையிடம் திரும்ப வந்து “அவயெங்கத்தை?” என்றான்.
“அவ செத்து ஒரு வாரம் ஆகுதுப்பா. இப்ப வந்து கேட்கற? உன் தங்கச்சி கல்யாண நாள் அன்னைக்கு தானே உங்கம்மா சவமா என்னோட அனுப்பினா. உனக்கு தெரியாதா? நீயும் அங்க தானே இருந்த” என்று கூறவும் சந்தோஷிற்கு தலைகுனிவாய் போனது.
“அத்தை அந்த நேரம் எது பேசினாலும் தப்பா போகும். கல்யாண மண்டபத்துல பிரச்சனை பெரிசாக வேண்டாம்னு தான் அமைதியா இருந்தேன்.
அடுத்தடுத்த நாள் சந்திராவை நல்லபடியா அனுப்பற வரை வேலையிருந்தது அத்தை. சந்திராவை அனுப்பிட்டு நேரா இங்க தான் வர்றேன். ப்ரியா எங்கத்தை?” என்று தவிப்பாய் கேட்டான்.
“நல்லதுப்பா. சந்திரா நல்லப்படியா புகுந்த வீட்டுக்கு போயிட்டாளா? ரொம்ப சந்தோஷம். என் மக இரண்டு நாள் முன்ன தான் அனாதையா வேலைக்கு போறேன்னு கிளம்பிட்டா. இனி இங்க எப்ப வருவாளோ?! அவளா மனசு வைக்கணும். அவ மனசு தான் செத்துடுச்சு. இல்லையில்லை கொன்னுட்டிங்க” என்று சேலை முந்தானையில் வாயை மூடி அழுது அறைக்குள் அடைந்தார்.
சந்தோஷ் தலையிலடித்தபடி பின் தொடர்ந்து “எங்கத்தை இருக்கா. அத்தை ப்ளிஸ்” என்று அவர் அமர்ந்திருந்த பாதமருகே மண்டியிட்டு கேட்டான்.
“எம்பொண்ணு நிம்மதி எனக்கு முக்கியம் சந்தோஷ். தயவு செய்து பழிச்சுமத்தியதோட விட்டுடுங்க. நீ தேடிப்போய் புதுசா வேற பிரச்சனையை இழுத்துடாத. அதுக்கும் எங்க மேல பழிப்போட்டாளும் போடுவாங்க. இங்கயிருந்து கிளம்புப்பா” என்றவர் கையெடுத்து கும்பிட, சந்தோஷ் செய்வதறியாது நின்றான்.
“அண்ணா போலாம்” என்று சந்தியா கூப்பிட, சந்தோஷ் துவண்டவனாய் வெளியேறினான்.
கவிதா கதவை அடைத்து வைத்துவிட்டு மகள் இல்லாத அறையை வெறித்தார்.
ப்ரியதர்ஷினி, சந்திரா திருமணத்திற்கு அணிந்த பட்டுப்புடவை இன்னமும் மெத்தையிலேயே இருக்க, அதனை எடுத்து முகத்தில் வைத்து கண்ணீர் வடித்தார்.
தனியாக குழந்தை சென்னை மாநகரத்தில் என்ன செய்கின்றாளோ? தங்கயிடம், உணவு, எல்லாம் அவளே பார்த்துக் கொள்வதாக கூறி பள்ளியில் படித்த தோழியை நம்பி கிளம்பிவிட்டாள்.
அங்க சுதா என்பவளை மட்டுமே தெரியும்? அவளுக்கு படிப்பு வரவில்லையென்று பன்னிரண்டாவது முடித்ததும் கட்டி கொடுத்தார்கள். அவளை நம்பி சென்று எங்கே தங்குவளோ? எப்படி சாப்பிடுவாளோ? இங்கனயே இருந்த இரண்டு நாளாய் பச்சை தண்ணியை தான் குடித்தாள். அன்ன ஆகாரமே தான் ஊட்டி விட்டப்பிறகு சாப்பிட்டவள், அங்க போய் சாப்பிடாம கொள்ளாம தனியா இருப்பாளோ” என்று கேட்டதற்கெல்லாம், “அம்மா… முன்ன இங்கிருந்து வேலைக்கு போக முடிவெடுத்தேன்.
காரணம்… நம்ம சுற்றி சொந்தங்கள் இருக்கு, தனியா உன்னை அக்காவை விட்டு வெளியூருக்கு போகணுமானு யோசித்தேன். இனி சொந்தம் எதுவுமில்லைம்மா. அக்காவுக்கு நகை வாங்கணும், இங்கயே இருந்தா என்னால நிம்மதியா இருக்க முடியாது. புரிஞ்சுக்கோம்மா. நான் ஒன்னும் சாகமாட்டேன். தனியா வாழ கத்துக்கறேன். அவ்ளோ தான்” என்று பிடிவாதம் பிடித்து பெட்டியை கட்டிவிட்டாள்.
கண்ணீரை துடைக்க துடைக்க அமுதசுரபி போல வரவும், மகளுக்கு கை தானாக அலைப்பேசி வழியாக எண்ணை தொடர்பு கொண்டாள்.
“ப்ரியா எப்படிடி இருக்க?” என்று கேட்கவும் குரலே கவிதா அழுததை காட்டி கொடுத்தது.
“அம்மா இன்னும் எத்தனை நாளுக்கு என்னை நினைச்சி அழுவ? இங்க வந்து சுதா மூலமா வுமன்ஸ் ஹாஸ்டலில் தங்கிட்டேன். மெஸ்ல சாப்பிடறேன். வேலையும் கிடைச்சிடுச்சு. நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம்.” என்றாள் அன்னையை குளிர்விக்கும் பொருட்டு.
“அதுக்குள்ள எப்படிடி வேலை கிடைக்கும்?” என்று தேம்பினார்.
போனையே பார்த்து “மரியாதைக்குரிய வேலை தான்மா. தி.நகர்ல சேல்ஸ் கேர்ள். இது தற்காலிக வேலை தான். படிச்ச படிப்புக்கு வேற வேலை கிடைக்கறவரை இந்த கடையில இருப்பேன்.” என்றுரைத்தாள்.
தடுக்கி விழுந்தால் ஆயிரம் கடை. இதில் பெரிய கடையில் வேண்டுமென்றால் ஒப்பந்தமாக கையெழுத்து போட்டு இருக்க வேண்டும். இது அளவில் சிறிய கடையே. சுதா அங்கு தான் பணிப்புரிகின்றாள் அதனால் எந்தவிதமான ஒப்பந்தமின்றி கடையில் சேர்ந்துவிட்டாள். கடையில் சேர்ந்ததும் சுதாவோடு தங்குமிடம் கேட்டு பக்கத்திலேயே ஒரு வுமன்ஸ் ஹாஸ்டலில் சேர்ந்துவிட்டாள். உணவெல்லாம் மெஸ்ஸிலேயே பார்த்துக் கொள்வதாக முடிவெடுத்துள்ளாள்.
“சரிம்மா எப்ப பிடிக்கலைனாலும் வீட்டுக்கு வாம்மா.” என்று நலன் விசாரித்து போனை வைத்தார்.
சந்தோஷ் வந்ததை உரைத்திட மனம் வரவில்லை. பானுமதி அப்படி மண்டபத்தில் பேசும் போது சிலையாக நின்றியிருந்தான்.
அப்படிப்பட்டவன் வந்து சென்றதை எதற்கு உரைக்க வேண்டும்? என் மகளுக்கு எந்த ஆசையும் இனியும் வளர தேவையில்லை என்று முடிவெடுத்தார் கவிதா.
ஒருபக்கம் முடிவெடுத்தால் போதுமா? அங்கே அவன் கேட்க வேண்டுமே?!
சந்தோஷ் சந்தியாவை வீட்டில் விட்டுவிட்டு மாடிக்கு வந்தான்.
அங்கே இந்திரஜித் அங்குமிங்கும் நடந்தவன், சந்தோஷை கண்டு ஓடிவந்தான். “தர்ஷினியை பார்த்தியா? எப்படியிருக்கா? பேசினியா? என்று தொடர்வண்டியாய் வினா தொடுத்தான்.
சந்தோஷ் மறுப்பாய் தலையசைத்து, “அவ அங்க இல்லைடா. எங்கப்போனானு தெரியலை. அத்தை என்னிடம் சொல்லக்கூடாதுனு உறுதியா இருக்காங்க.” என்றான்.
இந்திரஜித்தின் இதயம் பலமிழந்து போனது. எப்படியாவது அவளை சந்தோஷ் சந்திப்பான், பேசுவான் என்றல்லவா எண்ணினான்.
பழைய ஒட்டுறவு சந்தோஷிடம் வந்தால், தன் மனதை பறித்தவளிடம் நட்பாகிட துடித்தான்.
‘கண்டதும் காதல்’ எல்லாம் நகைப்பிற்குரிய விஷயமாக கருதியவன் இந்திரஜித். சந்தோஷ் அடிக்கடி சந்தியா சந்திராவை பற்றி பேசும் போது ப்ரியதர்ஷினி விலாசினியை பற்றியும் பேசுவான்.
விலாசினி எட்டியிருந்து பழகும் குணம். ப்ரியதர்ஷினி அறந்தவாலு. என்னிடம் எங்கள் வீட்டு ஆட்களிடமும் உரிமையாக வந்து பழகும் கொள்ளைக்காரி என்பான்.
அதனால் தான் வந்ததும் ப்ரியாவை காணும் ஆவலில் அவளை போலவே வாய் துடுக்குடன் பேச ஆரம்பித்தான் இந்திரஜித்.
ப்ரியாவிற்கு எடுத்ததும் இப்படி பேசினால் ஒதுங்கிக் கொண்டாள். ஒருவேளை சந்தோஷ் அறிமுகம் செய்து இரண்டு முன்று சந்திப்பில் பேசியப்பின் துடுக்காய் விளையாட்டாய் வார்த்தை விழுந்தால் மல்லுக்கு நின்று, கூடகூட பேசியிருப்பாள்.
அவளது அமைதி தன்னிடம் மட்டும் முகம் திருப்ப, ஏன் என்ற காரணத்தோடு அவளையே விழுங்கினான்.
சின்ன சின்ன முகமாற்றம், சிரிப்பு, அவள் வந்தவர்களை உபசரித்த விதம், என்று ஒவ்வொரு துளியாய் ரசிக்க ஆரம்பித்தான்.
மனம் அவள் பின்னால் முழுதும் சென்றதை அறியாது.
ஒரு பெண் பார்க்கும் நிகழ்வில் சட்டென ‘பொண்ணை பிடித்திருக்காப்பா?’ என்ற தரகர் வினாவிற்கு பெண்பார்க்கும் படலத்தில் கலந்துக்கொண்ட யாவருக்கும் திருப்தி வந்தால் எப்படி நிறைவாக மணக்க சம்மதிப்பார்களோ அவ்வாறு தான் இந்திரஜித் மனம் எண்ணியது.
ப்ரியதர்ஷினியை விரும்ப ஆரம்பித்து மணக்க எண்ணி கனவுகளை காண ஆரம்பித்தான்.
சந்தோஷின் அன்னை பானுமதி, ப்ரியதர்ஷினியை பார்த்து, அன்பை கொள்ளையடித்தால் என்றால் மகிழலாம். நகையை கொள்ளையடித்ததாக திருட்டு பட்டம் கட்டியதால் அவள் துவள, அங்கிருந்து சிலையாக சந்தோஷ் வேடிக்கை பார்க்க, இந்திரஜித் மனம் ஒப்பவில்லை.
எந்தகணம் அவளுக்காக சொந்தங்கள் வாய் திறக்காத போது அவனாக பேசினானோ அப்பொழுதே அவன் மனம் மொத்தமாய் உறுதிபூண்டது.
ப்ரியதர்ஷினியை தன்னவளாக மாற்றிடும் முடிவை. ஆனால் அவளோ வீட்டிலிருப்பாளென்று எண்ணியிருக்க, ப்ரியாவை காணோம் என்றதை இந்திரஜித்தால் ஏற்கமுடியவில்லை.
இங்கயே இருந்தவரை நண்பனை துளைத்தெடுத்து விட்டான். ‘அந்த பொண்ணை பார்க்கணும்டா. பாவமா இருக்குடா. என்ன பண்ணறா? ஏதுனு ஒரு எட்டு போய் கேட்போம்’ என்றான்.
இந்திரஜித் எண்ணத்தை உணர்ந்ததால், சந்தோஷும் சங்கடத்தோடு சென்ற அத்தை மகளை காண தங்கையை அழைத்து வந்தான்.
அப்படியிருந்தும் சிட்டாய் எங்கோ சென்றதாக கூற, கறிவிருந்து முடித்து சந்திரா சென்ற, அடுத்த நாளே ப்ரியதர்ஷனி வீட்டுக்கு வந்தவனுக்கு ஏமாற்றமே.
-தொடரும்.
அருமையான பதிவு