Skip to content
Home » நீயென் காதலாயிரு-4

நீயென் காதலாயிரு-4

அத்தியாயம்-4

     சந்தோஷ் போனில் ‘உன்னிடம் பேசணும் விலாசினி’ என்று அனுப்பியதற்கு ‘சரி காலேஜ் விட்டதும் மாலை சந்திப்போம்’ என்று பதில் அனுப்பினாள் விலாசினி.

  அவன் தன்னை காண வந்ததே அதிசயம். இதில் தன்னிடம் என்ன பேசப்போகின்றார் என்று தயங்கி நடந்து வந்தவளிடம் சந்தோஷ் இந்திரஜித் இருவரும் எதிரே வந்தனர்.

  சாலையில் நின்று பேசுவதற்கு பதிலாக ஒரு சின்ன காபி ஷாப்பில் அமர்ந்தனர்.
  அப்படியொன்றும் பிரைவேஸி பேசும் இடமல்ல. இந்த இடத்தில் ஆட்கள் நடமாட்டம் உண்டு. தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்தால் அன்னையிடம் கூட வீட்டில் போட்டு தரலாம். என்னவொரு பிளஸ் என்றால் அவள் பேசப்போவது மாமன் மகனிடம் தான். யாரும் போட்டு தந்தாலும் கவலையில்லை.

     இந்திரஜித் அமைதியாக வேடிக்கை பார்க்க, சந்தோஷ் தடுமாறினான்.

  ப்ரியதர்ஷினியிடம் நன்றாக பேசும் சந்தோஷிற்கு விலாசினியிடம் தயக்கமிருந்தது.

   இந்திரஜித் பொறுமை காற்றில் பறந்து, “ஏங்க ப்ரியா எங்கயிருக்கா? போன்ல பேசினிங்களா? என்று கேட்டு விட்டான்.

   “என்னனு தெரியலங்க. அவளுக்கு போன் பண்ணினா ரிங்கே போகலை. இந்த லீவுல தான் நேர்ல போய் பார்த்து விசாரிக்கணும்னு இருந்தேன்.

   யமுனாவிடம் போன் பண்ணி கேட்டதுக்கு பானு அத்தைக்கும் ப்ரியாவுக்கு சண்டை. இனி ஒட்டுறவு என்பது எங்களுக்கு வேண்டாம்னு அம்மா முடிவெடுத்திருக்காங்க. ப்ரியா இங்க இல்லை வேலைக்கு எங்கயோ போனதா மட்டும் பேசினா.” என்று கூறவும் சந்தோஷ் அமைதியாக இருந்தான்.

    “வேறெதும் சொல்லலையா?” என்று இந்திரஜித்தே கேட்டான்.

   “இல்லைங்க ஏன்?” என்றவள் சந்தோஷின் முகத்தை பார்த்து “இவர் ஏன் உம்முனு இருக்கார்?” என்று கேட்டாள்.

  சந்தோஷ் திருமண மண்டபத்தில் நடந்த களோபரம் விலாசினிக்கு தெரியாததால் அதை கூற வர, இந்திரஜித் அவன் கையை பிடித்து அழுத்தி தலையை மறுப்பாய் அசைத்தான். நண்பன் பகிரவேண்டாமென்ற செய்தியை உடல்மொழியால் வெளிப்படுத்த, “சரி நீ கிளம்பு. நேரமாகப்போகுது” என்று கைகடிகாரத்தை பார்த்துரைத்தான் சந்தோஷ்.

   இந்திரஜித்தோ “ப்ரியதர்ஷினியை பத்தி டீடெய்ல் தெரிந்தா உடனே சொல்லும்மா எங்கயிருக்கா? என்ன பண்ணறானு.” என்று எழுந்தார்கள்.

   “சரிங்க” என்றவள் சந்தோஷின் வாடிய முகத்தை கண்டு புறப்பட்டாள்.
   அவளுக்கும் பானுமதி அத்தைக்கு ப்ரியாவை சந்தோஷிற்கு மணக்க ஆசையுண்டு என்ற அளவிற்கு தெரியும். அதனால் சந்தோஷ் கவலையை தன் கவலை போல பாவித்தாள்

   சந்தோஷை விட அருகிலிருந்தவன் முகம் இன்னமும் வாடி வதங்கியிருந்தது.

   சந்தோஷ் பைக்கில் இந்திரஜித் பின்னால் அமர்ந்தவன், “எங்கடா போயிருப்பா?” என்று கேட்டான்.
  
   “நமக்கு தெரிந்தது இந்த திருச்சி. இதை தவிர்த்து எங்கடா யோசிக்க? வெளியூர்னா தூத்துக்குடி பக்கம் தெரிந்தவங்க இருக்காங்க. ஆனா சொந்தமே வேண்டாம்னு யோசித்தா எங்க போவா?” என்று வெதும்பியபடி பதில் தந்தான் சந்தோஷ்.

  “ஏன்டா… அவங்க அக்கா கன்சீவா இருந்தாங்களே. அவங்களிடம் கேட்டுப் பார்க்கலாமே. ஒருவேளை அங்க தெரியவரலாம்?” என்று கேட்டதும் சந்தோஷோ தலையாட்டி மறுத்தான்.
 
  “சந்தியாவை கூட்டிட்டு அன்னைக்கு வீட்டுக்கு போனதுக்கே தங்கச்சி அம்மா அப்பாவிடம் போட்டுக் கொடுத்துட்டா. அம்மா ஒரே திட்டு. அவ சந்திரா கல்யாணத்தையே நிறுத்தியிருப்பா. தேவையில்லாம இனி அங்க போகாத. அவளை மனசுல வச்சிட்டு சுத்தாதனு கண்டிப்பா சொல்லிட்டாங்க” என்று பானுமதி திட்டியதை உரைத்தான்.

   “எனக்காக கடைசியா ப்ரியதர்ஷினியோட அக்காவிடம் மட்டும் கேட்கலாம். போன்ல வேண்டாம் நேர்ல போய் விசாரிச்சிக்கலாம். ப்ளீஸ்டா.” என்று இந்திரஜித் வற்புறுத்த, இதுவரை இந்திரஜித் தன்னிடம் மட்டுமில்லை யாரிடமும் கெஞ்சியதில்லை என்றதால் யமுனாவை பார்க்க இருசக்கர வாகனத்தை யாமுனாவின் மாமியார் வீட்டுபக்கம் திருப்பினார்கள்.

     இந்திரஜித் திருச்சிக்கு வந்தது நண்பனின் தங்கை திருமணத்திற்காக. இன்னமும் இங்கேயே இருக்க முடியுமா? அதனால் விலாசினியிடம் கேட்டாயிற்று, அடுத்து யமுனாவிடம் கேட்டுவிட்டு, அங்கேயும் பதில் இல்லையென்றால் தனது ஊருக்கு திரும்ப வேண்டும்.

  அன்னை தந்தை வேறு போன் போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். ‘என்னடா திருச்சி ஊர் பிடிச்சி அங்கயே சுத்தறியா?’ என கேலி செய்து ‘எப்ப வருவ?’ என்ற வினா தொடுத்தபடி இருக்கின்றனர்.

   ‘வர்றேன் அம்மா வர்றேன் அம்மா’ என்று எத்தனை முறை உதிர்ப்பது. இந்திரஜித்தும் தனது உத்தியோகத்தை விடுத்தல்லவா வந்திருக்கின்றான்.
   
   யமுனா வீட்டில் அவள் கணவர் ராஜா இல்லை, அதே போல மாமனார் ரத்னவேலும் இல்லையென்று தெரிந்தது.

   யமுனா திருமணத்தில் சந்தோஷை ராஜாவின் தாய் பார்த்ததால் அறிமுகம் எளிதானது.

  ராஜா தாயார் விசாலாட்சி சந்திரா திருமணம் பற்றி விசாரிக்க, சந்தோஷ் யமுனாவை பார்த்து அவள் அத்தையிடம் நாசூக்காய் பதிலுரைத்தான்.
  
   யமுனா மாமியார் தங்களை நல்லபடியாக வரவேற்றதிலேயே அவர்களுக்கு மண்டபத்தில் நடந்த விஷயம் தெரியாததுயென புரிந்து, அதற்கு தகுந்தது போல நலம் விசாரித்து பேசினான்.

   “ப்ரியதர்ஷினி எங்க யமுனா. போன் போட்டா எடுக்கலை?” என்று கேட்க, காபி பலகாரம் என்று தட்டில் வைத்து உபசரித்து முகத்தை இறுக்கமாக வைத்தவள், “அவ வேலைக்கு வெளியூர் போயிட்டா சந்தோஷ்.” என்றாள் மொட்டையாக.

    “இந்தா பேசிட்டு இருங்க. பாத்ரூம் போயிட்டு வர்றேன்” என்று விசாலாட்சி செல்லவும், அவர்கள் தலை மறையவும் “இங்கிருந்து போயிடுங்க சந்தோஷ். என் தங்கை பட்ட வேதனை போதும். இங்க நீங்க பழி சுமத்தியது எதுவும் தெரியாது. தேவையில்லாம அதை தெரியவச்சி என் வாழ்க்கையை கெடுத்துடாதிங்க. என் தங்கை நகையை திருடலை.” என்று பொங்கினாள்.

  சந்தோஷிற்கும் யமுனாவிற்கும் மாச வித்தியாசமே. அதனால் இருவருமே பெயரிட்டு அழைத்து கொள்வார்கள்.

   “இங்க பாரு யமுனா. நான் ப்ரியாவை சந்தேகப்படலை. அவயெங்க?” என்று கேட்டான்.

   “அவளை எதுக்கு தேடறிங்க. சந்தேகப்பட்டாலும் படலைனாலும் அந்த இடத்துல வாயை மூடி நின்றதா அம்மா சொன்னாங்க. போதும் இனி ப்ரியா அவ வாழ்க்கையை வாழ்வா தொல்லைப் பண்ணாதிங்க. அவயொன்னும் உங்களை மனசுல வச்சிட்டு திரியலை. பானுமதி அத்தை மருமகளேனு பேசுவாங்க. அவளும் அன்பா பழகுவா. அவ்ளோ தான்.
 
  இங்கிருந்து போங்க” என்று விரட்டாத குறையாக பேசினாள் யமுனா.

  இந்திரஜித் இடைப்புகுந்து, “ஓகே கிளம்பறோம். ப்ரியதர்ஷினி எங்கனு சொல்லுங்க. மீதியை அவளிடம் பேசிக்கறோம்” என்று நகராமல் நின்றான்.

  “எதுக்கு ப்ரியாவை தேடறிங்க தம்பி. அவ தான் சென்னையில வேலைனு போயிட்டாளே.” என்று இந்திரஜித் பேசியதை கேட்டபடி வந்தார் விசாலாட்சி.

   “சென்னையில எங்க பெரிம்மா?” என்று கேட்க, “ஏதோ துணிகடையில  டிசைனரா வேலை பார்க்கறதா சொன்னாளே. அம்மாடி மருமகளே  சென்னையில எந்த ஏரியா?” என்று உட்கார முடியாமல் பேச கடினப்பட்டார்.

    “நீங்க ஏன் அத்தை கஷ்டப்படறிங்க? நான் சொல்லிக்கறேன். நீங்க போய் தூங்குங்க. சந்தோஷுக்கு டைம் ஆச்சாம் கிளம்பறானாம்” என்று கூறினாள். இங்கு மாமியாரிடம் டிசைனராக உள்ளதாக பொய் கூறியிருந்தாள் யமுனா.

  சேல்ஸ் கேர்ள் என்றால் அதற்கும் எட்டுக்கட்டிடலாம்.

  சாமர்த்தியமாக கிளம்ப கூறியவளை எண்ணி வறட்டு சிரிப்பை உதிர்த்து எழுந்தான் சந்தோஷ்.

    வாசல்வரை வழியனுப்ப மாமியார் உரைத்திடவும் முந்தானையை  இடையில் முடித்து வந்தாள்.

   “இங்க பாருங்க அவ சென்னையில இருக்கா. அவ்ளோ தான். அவளை நிம்மதியா இருக்க விடுங்க. உங்களால தான் நம்பரை கூட மாத்திட்டா. இனி வீட்டுக்கு வராதிங்க.” என்று கையெடுத்து கும்பிட்டாள் யமுனா.

   சந்தோஷோ நண்பனை காண “போலாம் சந்தோஷ்” என்று இந்திரஜித் பைக்கை உயிர்பித்தான்.

  இருசக்கர வாகனத்தில் சென்றபடி “சென்னையில எங்கனு தேடறது டா?” என்று சந்தோஷ் கேட்டான்.

   “அந்த ஆன்ட்டி சென்னையில துணிகடையில டிசைனர் சொன்னாங்க. சோ ஏதோ பொட்டிக் கடையில இருக்கலாம். மோஸ்டா பேமஸான துணிகடையா இருக்கற ஏரியால தேடலாம்.” என்று தெம்பானான்.

  “என்னவோ நீ சொல்லற? கடல்ல குண்டூசி தேடுற நிலைமையா இருக்கும்.” என்று சந்தோஷ் கூறினான்.

    அன்று இரவே திருச்சியிலிருந்து ஏசி பஸ்ஸில் சென்னைக்கு புறப்பட படிக்கட்டில் ஏறினான் இந்திரஜித்.

    சந்தோஷ் அப்பொழுது கூட ”முடிவே பண்ணிட்டியா?” என்ற வார்த்தையை நண்பனிடம் கேட்டான்.

   இந்திரஜித் அதற்கு ஆமென்பதாக தலையாட்டி முடித்தான்.

    “எதுக்கும் விலாசினியிடம் கேட்டுட்டேயிரு. ஏதாவது சொன்னா தகவல் கொடு. அப்பறம் யமுனா அவங்களிடமும் கேட்டுப்பாரு.
    விலாசினி வீட்ல உங்கம்மா தான் நகையை கொடுத்து வச்சதா சொன்னதால விலாசினி எப்பவாது போன் பேசினா ப்ரியா எடுக்க வாய்ப்புண்டு.” என்று முதுகுப்பையை தோளில் சுமந்து நண்பனை அணைத்து விடுவித்து பேருந்துக்குள் நடந்து ஜன்னல் இருக்கையில் அமர்ந்தான். 

  சந்தோஷ் ஜன்னல் பக்கம் வந்து “போனதும் போன் பண்ணுடா” என்றான்.

   இந்திரஜித் சரியென்று கூற கொஞ்ச நேரத்தில் பேருந்து புறப்பட்டது. ஹெட்செட்டில் மெல்லிசை பாடலை கேட்டபடி இந்திரஜித் சென்னைக்கு பயணத்தை ஆரம்பித்தான்.

   சென்னை புதுயிடமல்ல, பிறந்து வளர்ந்து, பள்ளிப்படிப்பு, கல்லூரி இதோ தற்போது உத்தியோகம் முதல் எல்லாம் அங்கு தான். அதனால் சென்னை என்றதும் ஒரு திருப்தி.

  என்ன தான் சென்னை என்று அறிந்தப்பின் ஒரு மகிழ்ச்சி கிட்டினாலும், சந்தோஷ் கூறியது போல கடலில் குண்டூசி தேடுவதற்கு சமம்.

    எப்படியும் தேடி பார்த்திடும் முடிவில் மெய் தேடல் ஆரம்பமானது.

    யாரை தேடி வருகின்றானோ அவளோ, கால்கடுக்க காலையிலிருந்து பணியில் நின்றபடி, ஆடை வாங்க வருபவர்களுக்கு உடையை எடுத்து காட்டி சோர்ந்து போனாள். சேல்ஸ் கேர்ள் பணியில் காலையிலிருந்து நிற்பது பழக்கமில்லாது அவதியுற்றாள்.

   மனமோ வேறு பணிக்கு தேடுதலை தொடுத்து அலைப்பேசியில் நோண்டிக் கொண்டிருந்தாள்.

    சாப்பாட்டை கூட மறந்தவளாக படுத்திருந்தாள். போனை பார்த்தபடி இருக்க, யமுனா அழைத்தாள்.

   “சொல்லுக்கா எப்படியிருக்க?” என்று கேட்டு எழுந்தமர்ந்தாள்.

   “சாப்பிட்டியா?” என்றதும் அங்கிருந்த பார்சல் தோசையை பிரித்தாள். மெஸ் உணவு அந்தளவு பிடிக்கவில்லை. வெளியே வாங்கிவந்திருந்தாள்

    “சாப்பிட்டுட்டு இருக்கேன்” என்று கூறவும், யமுனா தங்கையிடம் “உன்னை தேடி சந்தோஷ் வந்தான்.” என்றுரைத்தாள்.

   “ம்ம் நேத்தே நீ சொன்ன சந்தோஷ் சந்தியா வந்ததை” என்று தோசையை பிய்த்து சிறு சிறு விள்ளையாக விழுங்கினாள்.

   யமுனாவோ “அது நம்ம வீட்டுக்கு அன்னைக்கு வந்தாங்க. இன்னிக்கு என் வீட்டுக்கு சந்தோஷும் அவன் பிரெண்ட் சேர்ந்து வந்தாங்க” என்றதும் ப்ரியதர்ஷினி வாயருகே கொண்டு போன உணவை நிறுத்தினாள்.

   “இந்திரஜித்? கல்யாண வீட்ல வந்திருந்தாரே அவரா?” என்று கேட்டாள் ப்ரியா.

   “ம்ம் அவரே தான்” என்றதும் ப்ரியா கைகள் உணவை துழாவியது.

   “என் மாமியார் சென்னையில இருப்பதா சொல்லிட்டாங்க. பட் தி.நகர்னு தெரியாது. நீ சேல்ஸ் கேர்ள் என்பதை கூட சொல்லலை. டிரஸ் டிசைனர் என்று சொல்லிட்டு இருந்தாங்க.” என்றதும் விரக்தியாக சிரித்தாள் ப்ரியா.

    கொஞ்ச காலம் டெய்லரிங் கோர்ஸில் டிசைனிங் கற்றுக்கொண்டது என்னவோ வாஸ்தவம் தான். ஆனால் அதெல்லாம் எந்த மூலைக்கு? என்னவோ எங்கே இருக்கேன்னு சொல்லலையே அது போதும் என்பதாக பெருமூச்சு வெளியிட்டாள்.

    “நீ சாப்பிட்டியா?” என்று அக்காவை கேட்டாள்.

   “உங்க மாமா இன்னமும் வரலை. அம்மாவிடம் பேசிட்டு வெயிட்டு பண்ணுவேன். மாமா வந்திடுவார். பிறகு தான் சாப்பிடணும்” என்றாள்.

  “ஏன் வாயும் வயிறுமா இருக்க சீக்கிரமா சாப்பிட என்னவாம்?” என்று தங்கை என்பதை தாண்டி அக்காவை கடிந்தாள்.

  “எங்க சாப்பிடலாம்னு உட்கார்ந்தா மாமனார் ஏதாவது பேசிடறார். இந்த நகையை எவன் கண்டுபிடிச்சான். முன்கூட்டியே எங்களால இவ்ளோ தான் போடமுடியும்னு சொல்லி கல்யாணம் பண்ணிருக்கலாம். எப்பபாரு இப்படியே ஏமாத்திட்டாங்களேனு ராகம் பாடறார். அவர் இருக்கறப்ப சாப்பாட்டுல கை வைக்க முடியுதா?  அதானால உங்க மாமா வந்தப்பிறகு லேட்டா என்றாலும் சேர்ந்து சாப்பிடறேன். அதுக்குள்ள என் மாமனார் தூங்க போயிடுவார்” என்று மனக்குமறலை கொட்டினாள்.

   “இரண்டு நாள்ல அம்மா நகையை கொண்டாந்துடும். சும்மா வீட்ல ஓரமா இருந்துட்டு வாயில்லாத பூச்சியா ஆடாத. கல்யாணம் பண்ணின நகையை போட்டு வீட்டுக்கு வந்தது, முழுதா அந்த வீட்டு பொண்ணு என்ற உரிமையோட தான்.

   உரிமையா எடுத்து போட்டு சாப்பிடு. உன் புருஷன் வெளியே போய் வேலை பார்த்தா, நீ வீட்லயே வேலை பார்க்கற. சும்மாவா பாத்திரம் தேய்த்து, துணி துவைச்சி, வீட்டை சுத்தமா வச்சிட்டு, பெரியவங்களுக்கு ஒத்தாசையா கூடயிருக்கறது, அதோட வயிற்றுல பிள்ளையை சுமக்குற. வீட்டுக்கு வாரிசு தர்ற மருமகளை தாங்கணும். சும்மாவா குழந்தை வானத்துலயிருந்து குதிக்கும். உன் உசுரும் மறுபிறப்பு. அதனால சங்கடபடாம வாழு, லேட் நைட்ல சாப்பிடாத” என்று அதட்டினாள்.

  “சரிடி. நீ உடலை கவனிச்சுக்கோ. அந்த சந்தோஷ் அவன் பிரெண்ட் வந்ததை அம்மாவிடம் சொல்லவா?” என்று கேட்டாள்.

  “வேண்டாம். அம்மாவுக்கு தெரிந்தா புலம்பும். சந்தோஷ் சந்தியா வந்ததையே என்னிடம் சொல்லாம தவிர்க்கறாங்க.
  இப்ப சந்தோஷ் இந்திரஜித் அங்க  வந்ததை தெரியப்படுத்த வேண்டாம். நீ உன் வேலையை பாரு. உன் மாமியாரா அம்மாவிடம் சொல்லிட்டா ஆமா அம்மா மறந்துட்டேன்னு சொல்லிடு.” என்று கூறினாள்.

   “யமுனா” என்ற ராஜா குரல் கொடுக்க, “மாமா வந்துட்டார் போய் என்னனு பாரு” என்று அணைத்து கொண்டாள்.

  சாப்பிட்ட கை காய்ந்திருக்க கை அலம்பினாள் ப்ரியதர்ஷினி..

    சந்தோஷ் ஏன் என்னை தேடறான். அவன் என்னை தேட அவசியமேயில்லையே. இந்த இந்திரஜித் எதுக்கு ஊருக்கு போகாம இன்னமும் சந்தோஷ் கூட சுத்தறார்? இந்நேரம் கூட அத்தை என்னை களவானியா தானே நினைச்சிட்டு இருப்பாங்க?’ என்ற எண்ணம் தோன்ற, தலையணையை கட்டிக்கொண்டாள். பொசுக்கென்ற கண்ணீர் தலையணையை ஈரமாக்கியது.

  அன்று மண்டபத்தில் சந்தோஷ் வாய் திறக்கவில்லை. ஆனால் இந்திரஜித் எனக்காக வந்து பேசினான். ‘அவ திருடியிருக்க மாட்டா’ என்றானே, அவனுக்கு எப்படி என் மீது நல்லபிப்ராயம் வந்தது? அத்தை என்னோட குணம் தெரிந்தவங்க. அவங்களே பழியை சுமத்த, இந்தர் மட்டும் என் மேல பழியை சுமத்தலை’  என்று எண்ணியவளுக்கு சிறு நிம்மதி வரவும் அப்படியே  துயில் கொண்டாள். அது வேலையின் அலுப்பில் தானாக கிடைத்த வரம்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

1 thought on “நீயென் காதலாயிரு-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *