அத்தியாயம்-5
கோடம்பாக்கத்திலிருக்கும் தன் வீட்டு கேட்டை திறக்க, இந்திரஜித் தந்தை மோகன் வெளி பால்கனியில் பேப்பர் படித்து கொண்டிருந்தவர், பேப்பரை சற்று இறக்கி மைந்தனை கண்டார்.
“சித்ரா பையன் வந்துட்டான்.” என்று குரல் கொடுத்தார்.
”மணி ஐந்து ஆகுது. இப்பவே ஏன் அப்பா எழுந்துக்கறிங்க?” என்று காலை இறுக்கி பிடித்த ஷூவை கழற்றினான்.
“வாக்கிங் போகணும்னு நியூஇயருக்கு எடுத்த சபதம் என்னாகறது? இப்ப எழுந்தா தானே மெதுவா ரவுண்ட் அடிச்சி நடக்கலாம்” என்று கூறினார் தந்தை மோகன்.
அதற்குள் சித்ரா இருவருக்கும் காபியை எடுத்து வந்து நீட்டினார்.
பிரயாணம் செய்து வந்த களைப்பு, உடனடியாக அந்த காபியை வாங்கிக்கொண்டு பருகினான்.
இரண்டு மடக்கு குடித்து முடித்து, “அம்மா, அப்பா வாக்கிங் போறாருனு நினைச்சியா? நீ கொடுத்த காபியை குடிச்சிட்டு நம்ம பிரௌவுனியை இழுத்துட்டு காலையில வாக்கிங் வர்ற லேடிஸை சைட் அடிக்கிறார்.
அதோட கொஞ்ச தூரம் தான் நடக்கறார். பிறகு அந்த பார்க் இருக்குல அங்க உட்கார்ந்து ஜிம்ல பழகின ஆன்ட்டி கூட கடலை வறுக்கறார்.” என்று தன் பங்கிற்கு வந்ததும் வத்தி வைத்து தன் கடமை முடிந்ததாக வீட்டிற்குள் சென்றான்.
“டேய் டேய் வந்ததும் பொய் பேசறான். இவனை திருச்சிலயே இருந்துக்க சொல்லிருக்கணும்.
நான் சின்ன பொண்ணை சைட் அடிப்பேனா சித்ரா? இந்த வயசுல செய்யற காரியமா? வாக்கிங் வர்றவங்க எல்லாமே உன் வயசு பொம்பளைங்கம்மா. சும்மா கிராஸ் பண்ணறச்ச சிரிப்பாங்க. நான் பதிலுக்கு ஒரு மரியாதைக்கு சிரிப்பேன். அதை தப்பா சொல்லறான்.” என்று கூறவும் சித்ராவோ காலியான காபி கோப்பையை பிடுங்கினார்.
“இது தெரியாம தான் காபி போட்டு வாக்கிங் அனுப்பறேன். இனி வாக்கிங் ஜாக்கிங் எங்கயும் போகாதிங்க” என்று மிரட்டிவிட்டு சித்ரா கிச்சனுக்குள் நுழைந்தார்.
“சித்ரா சித்ரா அவன் சொல்லறதை நம்பறியே.” என்று மோகன் பின்னாலே சென்றார்.
சித்ரா-மோகன் இருவருமே மனம் ஒன்றிய ஆதர்ஷ தம்பதிகள். அதனால் நல்ல புரிதலும், சண்டையும் வராதென்ற அர்த்தமில்லை.
நொடிக்கொரு சண்டை உண்டு, இருவரும் புரியாமல் சண்டையிடுவார்கள். ஆனால் முடிவில் புரிந்துக்கொண்ட அன்போடு விட்டுக்கொடுப்பார்கள்.
சண்டையை பெரிதாக ஊதி தள்ள மாட்டார்கள். சண்டை முடிந்து அரைமணி நேரத்திற்குள் சுமூகமான பேச்சு வார்த்தையில் தங்களை மாற்றிப்பார்கள்.
இந்திரஜித் கொளுத்தி போட்டதால் சித்ராவை சமாதானம் செய்து, மோகன் மைந்தன் அறைக்கு படையெடுத்தார்.
இந்திரஜித் தலையை துவட்டியபடி வந்தவன் தந்தையை கண்டு விளுக்கென்று நகைத்தான்.
“ஏன்டா போற போக்குல கொளுத்தி போடற, என்னைக்காவது வெடி வெடிச்சா அப்ப தெரியும்” என்று கடிந்தார்.
“எங்க வெடிக்கவே மாட்டேங்குது” என்றவன் பனியன் அணிய துவங்கினான்.
“வேலைக்கு கிளம்பறியா? அதுவும் இவ்ளோ குயிக்கா? ரெஸ்ட் எடுக்கலையாடா?” என்றார் மோகன்.
“ஏகப்பட்ட வேலையிருக்குப்பா.” என்று சட்டை பட்டனை போட்டான்.
“மணி ஆறரை தானடா ஆகுது” என்றதும், “ம்ம்.” என்றவன் தலை வாறியவன், தந்தையிடம் திரும்பி, “ஏன்ப்பா? அம்மாவும் நீங்களும் ரிலேஷன் தானே?” என்றான் இந்திரஜித்.
“என்னடா இத்தனை காலத்துக்கு பிறகு கேட்கற?” என்று மீசையை தடவியபடி கண்ணாடியில் மகனுக்கு போட்டியாக அழகை கூட்டினார்.
“அப்பா நீங்களும் அம்மாவும் சின்ன வயசுலயிருந்தப்ப, அம்மா மேல நீங்க திருட்டு பழி போட்டிருந்தா அம்மா உங்களை கல்யாணம் பண்ணிருப்பாங்க?” என்று கேட்டவனை விசித்திரமாக மேலிருந்து கீழாக அலசினார்.
“ஏன்டா ஏன்…? நான் ஏன் அவ மேல திருட்டு பழி போடப்போறேன்? உனக்கென்ன எங்களை பிரிக்கற மாதிரியே கேள்வி கேட்கற?” என்று புரியாது கேட்டார்.
“சந்தோஷ் வீட்டு கல்யாணத்துல என்னடா நடந்துச்சு?” என்று சித்ரா முறுகலாய் நாலு நெய் தோசையை சுட்டு, மகனுக்கு தட்டில் இரண்டு வகை சட்டினியை வைத்து அறைக்கு வந்தார்.
“வாவ் அம்மா எப்படி?” என்றான்.
“தோசையா? என் கேள்வியா?” என்று புருவம் உயர்த்தி கேட்டார் சித்ரா.
“இரண்டும் அம்மா? சட்டுனு தோசை சுட்டு எனக்காக கொண்டு வந்து என் பசியை தீர்க்கறிங்க. அப்படியே என் கேள்வி எங்கிருந்து வந்ததுனு கரெக்டா யோசித்து பாயிண்ட்டை பிடிக்கறிங்க. பயங்கர ஜீனியஸ் அம்மா நீங்க.
இவ்ளோ அறிவை வச்சிட்டு அப்பாவை எப்படி தான் மேரேஜ் பண்ணினிங்களோ?” என்று வாறினான்.
“எங்களை ஓட்டறது விடுடா. சந்தோஷ் தங்கச்சி கல்யாணம் நல்லபடியா முடிந்ததா? என்ன திருட்டு பழி? சந்திரா மேல மாப்பிள்ளை வீட்ல திருட்டு பழி போட்டாங்களா?” என்றார் சித்ரா.
“இல்லைம்மா, இது வேற” என்று சந்தோஷின் அத்தை மகள் ப்ரியதர்ஷினியை பற்றி ஆதியும் அந்தமுமாய் அவன் கண்டதிலிருந்து விவரித்தான்.
“டேய் சந்தோஷோட அத்தை பொண்ணை நீ சைட் அடிச்சிருக்கியா? அவன் உன்னை திட்டலையாடா?” என்று மோகன் பதறினார். அதற்கு சற்றும் டென்ஷனாகாத சித்ரா, “இப்ப சந்தோஷிற்கு இல்லாத கவலை அந்த பொண்ணு ப்ரியதர்ஷினி மேல உனக்கென்ன ஆர்வம்?” என்று சித்ரா கேட்டதும் இந்திரஜித் மடமடவென தோசையை விழுங்கியவன் மெதுவாக மெல்ல ஆரம்பித்தான்.
சித்ரா மகனுக்கு ஊட்டியபடி, “மென்னுட்டே ஆன்சர் பண்ணு” என்று ஊக்கினார்.
“லவ் அட் பஸ்ட் சைட்” என்றவன் நீரை பருகினான்.
“இந்த விஷயம் சந்தோஷுக்கு தெரியுமா?” என்றார் சித்ரா. காதல் வந்ததால் நட்பு பாதிக்கப் போகின்றதென்ற கவலையில் கேட்டார்.
இந்திரஜித்தோ “அவன் ப்ரியதர்ஷினியை விரும்பலைம்மா. அதனால என் விருப்பத்தை மதிக்கறான்.
ஆனா இந்த இடைப்பட்ட திருட்டு பழியில் தர்ஷினி மனசு ஒடிஞ்சி போய் சென்னைக்கு வேலை தேடி போயிட்டா. ஐ மீன் இங்க வந்திருக்கா” என்றான் வாயெல்லாம் பல்லாக.
“இப்ப அவளை பார்க்க தான் காலையிலயே அரக்கபறக்க கிளம்பறியா?” என்று மோகன் கேட்டார்.
“அவ சென்னையில இருக்கா, ஆனா எங்கயிருக்கானு தெரியாது.” மீண்டும் நீரை பருகி முடித்து அன்னையின் சேலையில் வாயை துடைத்தான்.
“நிச்சயம் அந்த பொண்ணு டிரஸ் டிசைனரான வேலையை பார்க்க மாட்டா. வேற வேலையில இருக்கணும். என்னதான் டிரஸ் டிசைனிங்ல பெயர் வாங்கின ஸ்டூடெண்டாவே இருந்தாலும் இங்க சென்னையில படிச்சதுக்கு ஏற்ற வேலையா உடனே அமையாதுடா கண்ணா.” என்று நிதர்சனத்தை உரைத்தார் சித்ரா.
“அம்மா வேலையை விடுங்க. அவ திருடியிருப்பானு அவங்க அத்தை பழிசுமத்தியிருக்காங்க. சின்னதுல இருந்து பார்த்து வளர்ந்தபொண்ணு மேலயே பழிசுமத்தியிருக்காங்க.
ஆனா நீங்க அதை பத்தி எதுவும் பேசலை. உங்களுக்கு அவ மேல டவுட் வரலையா?” என்று கேட்டான்.
“என் பையன் அழகை மட்டும் பார்த்து விரும்ப மாட்டான். அதை தாண்டி அவளிடம் நல்ல குணத்தையும் தேடியிருப்பான். அப்படியிருக்க பொண்ணு நல்லப்பொண்ணுனு யார் வந்து சொல்லணும்? என் பையனுக்கு தெரியாதா?” என்று தாடைபிடித்து கொஞ்சினார். அதோட “அவங்க அத்தை சின்னதுலயிருந்து வளர்த்து பழிசுமத்திட்டாங்கன்னா அதுக்கு காரணம்… அதுக்கு காரணம்” என்று மகனின் பிபியை ஏற்றினார்.
“அம்மா ப்ளீஸ். என்ன காரணமாயிருக்கும்” என்று கேட்டான்.
“என்ன காரணம்னா? அவ சந்தோஷ் அம்மாவுக்கு மருமகளா போகக்கூடாதுனு கடவுளோட எண்ணம்.
கடவுளுக்கு இந்திரஜித்தோட அம்மாவான சித்ராவுக்கு தான் மருமகளா வரணும்னு ஆசையாம்.” என்று கூறவும் இந்திரஜித் அன்னை கன்னம் பற்றினான்.
“எஸ்… அம்மா எவ்ளோ ஈஸியா சொல்லிட்ட. இதான் இதே தான். எனக்குள்ள ஏன் அவங்க தப்பா எடுத்துக்கிட்டாங்கன்னு ஒரே குழப்பம்.
இந்நேரம் இந்த மிஸ்டேக் நடக்கலைனா அவங்க நிச்சயமா ப்ரியதர்ஷினியை எனக்கு கட்டிக்கொடுக்க யோசிக்கப்பாங்க. இப்ப மிஸ்டேக் எதுல ஆரம்பிச்சதுனு தெரிந்தா கூட இனி ப்ரியாதர்ஷினி சந்தோஷோட மேரேஜிக்கு ஓகே சொல்லமாட்டா. யாகூகூகூ” என்று கத்தி அன்னையை தட்டாமாலையாக சுற்றினான்.
“டேய் என் பொண்டாட்டியை விடுடா” என்று உரிமைப் போராட்டம் செய்தார் மோகன்.
இந்திரஜித்தோ “என் பொண்டாட்டி வரட்டும் நிறுத்தாம சுத்தி வோர்ல்ட் ரெக்கார்ட் பண்ணறேன்” என்று கனவுகளோடு பேசினான்.
சித்ரா மோகன் இருவரும் மகனை ஆச்சரியமாக பார்த்தனர்.
“ஓஹ்ஓஹ் சாரிம்மா. சாரிப்பா” என்றான் தன் ஆர்ப்பரிப்பை அடக்கியப்படி.
“அவ்ளோ பிடிச்சிருக்காடா?” என்று மோகன் கேட்கவும் சித்ராவோ “அவன் முகமே பிரகாசமா இருக்கு இதுல தனியா கேள்வி கேட்கறிங்க. ப்ரியா போட்டோ இருக்காடா?” என்று கேட்டதும் போனை துழாவினான்.
“சந்தன கலர் சேலையில் இருக்காளே அவ தான், எப்படியிருக்கா?” என்று காட்டினான்.
“டேய் அம்சமாயிருக்காடா. சீக்கிரம் தேடி கண்டுபிடி” என்று அன்னை கூறவும் லேசான முறுவல் ‘அவளை எங்கே தேடுவதென்ற மலைப்பு மீண்டும் எட்டிப் பார்த்தது.
“என்னடா எப்படி கண்டுபிடிக்கறதுன்னு யோசிக்கறியா?” என்று கேட்டதும் ஆமென்றான்.
“ஏன்டா அவ அக்கா வீட்டுக்கு போயிருக்க, அம்மாவை பார்த்திருக்க இன்னிக்கு கிடைக்கலைனாலும் என்னைக்காவது நீ விரும்பறதை நாங்களே வந்து சொல்லி பொண்ணு கேட்போம்டா. எதையும் யோசிக்காத. வேலைக்கு கிளம்பு” என்று தெம்பூட்டி சென்றார்.
மணி எட்டாகியிருந்தது அன்னை பேசிய மொழியில் ஆனந்தமாய் வேலைக்கு இருசக்கர வாகனத்தை எடுத்து கிளம்பினான்.
மகன் சென்றதும் சித்ராவும் மோகனும் ஒருவரை ஒருவர் பார்த்து “சீக்கிரம் நல்லது நடக்கணும்ங்க. ஒத்த புள்ளையா போயிட்டான். அவனுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழ்ந்தா தானே நமக்கும் திருப்தி.” என்று சித்ரா பேச, “எப்பவும் மீனாட்சி ராஜ்ஜியம் தான். சொக்கநாதன் தலையாட்டிட்டு இருப்பேனாக்கும். எப்ப கல்யாணம் வச்சாலும் வகை வகையா குழந்தையை பெத்து கொடுக்க சொல்லு. கடைக்கு கூட்டிட்டு போய் நான் பேரன் பேத்தியை கொஞ்சிக்கறேன்.” என்று கூறி மகனை போலவே மகனின் திருமணத்தை நடத்த பல கனவுகளோடு இருந்தார்கள்.
இங்கு தன் வரவை வைத்து ஒரு குடும்பமே மகிழும் என்பதை அறியாமல் மெஸ்ஸில் உணவு பிடிக்காமல் வேறு வழியின்றி தன் வயிற்றை நிரப்பினாள் ப்ரியதர்ஷினி.
போனை எடுத்து வேலைக்கு போட்ட இடத்தில் இன்டர்வியு வரச்சொன்னார்களா என்று பார்த்தாள். எதுவும் உவகை தரும் மெயில் வரவில்லை.
சாப்பிட்டதும் அரக்கபறக்க கடைக்கு வந்தாள்.
‘அன்வர் ரெடிமேட் ஷோரூம்’ கடைக்குள் நுழைந்தாள். அப்பொழுது தான் கடையை திறந்திருக்க, ஒவ்வொரு பொம்மையாக வெளியே எடுத்து வைக்க உதவினாள்.
ஆணியில் மாட்டிய உடைகளை விலைபட்டியலோடு வெளியே மாட்டி தூசியை தட்டினாள். கடையின் உள்ள அட்டைப்பெட்டியை எடுத்து ஓரமாக வைத்து நடைபாதையை பெருக்கினாள்.
பொலிவான முகம் சுறுசுறுப்பாய் வேலை செய்ய, எந்த ஓனருக்கு தான் பணி செய்பவளை பிடிக்காது? காலையிலயே சூடான தேனீர் வரவும் அதனை வாங்கி ப்ரியதர்ஷினி முன் நீட்டி “டீ குடிச்சிட்டு வேலையை பாரும்மா” என்று சலுகையாக கூறினார் அன்வர் பாய்.
மனம் நெகிழ்ந்து போனது. இங்கு வந்த இந்த இடைப்பட்ட நாளில், அன்னை காட்டும் கரிசனம் போல நிகழ்வது இதுவே முதல்முறை.
ஆனந்தப்பெருக்கோடு வாங்கி நன்றியுரைத்தாள்.
காபி கப்பை வெளியே போடும் நேரம், கோடம்பாக்கதுதிலிருந்து தி.நகர் வழியே இந்திரஜித் வண்டி ராக்கெட் வேகத்தில் சென்றது.
இந்திரஜித் சிறு கடையில் வேலை பார்க்கும் பெண்ணை சரியாக கவனிக்கவில்லை. அதே போல இருக்கும் துன்பத்திற்கு மத்தியில் போவோர் வருவோரை ப்ரியாவும் வேடிக்கை பார்க்கவில்லை. கண்ணாம்பூச்சி ஆட்டத்தை நடத்திவிட்டு இறைவனவன் அவனும் வேடிக்கை காண முன்னிருக்கையை பிடித்துக்கொண்டார்.
இனி இவர்களை சந்திக்க வைக்க போகும் ஹிந்து வேலை செய்ய வேண்டியது இவர்களை படைத்த இறைவனே.
-தொடரும்.
அருமையான பதிவு
Cute family
Nice story