Skip to content
Home » நீயென் காதலாயிரு-8

நீயென் காதலாயிரு-8

அத்தியாயம்-8

      இந்திரஜித் சென்றப்பின் அன்றைய நாள் ப்ரியதர்ஷினிக்கு சோர்வாய் தான் நகர்ந்தது.

அதற்கு நேர்மாறாக அலுவலகம் கூட செல்லாமல் சந்தோஷிற்கு போனில் அழைத்தான்.
 
   “சந்தோஷ் தர்ஷியை பார்த்துட்டேன்டா.” என்று அனுமான் ‘கண்டேன் சீதையை’ என்று ராமரிடம் கூறியது போல சுருங்க கூறி மகிழ்ச்சியை பகிர்ந்தான்.
 
சந்தோஷிற்கு நிம்மதி வந்தது. “எங்கடாயிருக்கா? என் மேல கோபமா இருக்காளா?” என்று தயக்கமாய் கேட்டான்.

   “சந்தோஷ் அவ யார் மேலயும் கோபப்பட்ட மாதிரி தெரியலை.  மனசொடிஞ்சி போனதா தான் தெரியறா.
   அப்பறம் நான் அவளிடம் தனிப்பட்டு எதுவும் பேசலை. அவ ஒரு கடையில சேல்ஸ் கேர்ளா இருக்கா. ரொம்ப நேரம் இருந்தா, இருக்கற வேலை போயிடுமோயென்ற பயம் அவ கண்ணுல பார்த்தேன். அதனால ஏன் பழியை சுமந்துட்டு இருந்தனு மட்டும் கேட்டேன். அவ அதுக்கு கூட சரியா பதில் தரலை.

   நான் இப்ப வீட்டுக்கு ரிட்டர்ன் போறேன். அவ வீட்டுக்கு திரும்பறப்ப தனியா பேசிக்கறேன். கடையில வியாபார நேரம் என்று ஒதுங்கிட்டேன். அதோட என்னை பார்த்தா அவ திணறுறா, கொஞ்சம் நிதானமாகட்டும்.” என்று மடமடவென மொழிந்தான். அவன் பேசிய வேகம் இத்தனை நாள் தேடலில் பெற்ற சோர்வை நீக்கியது.

    “பக்கத்து ஏரியாவா டா. எங்ககெங்கயோ தேடி அலைந்த. கடைசில உன் பக்கத்துல தான் இருக்கா.
    நான் இப்ப உடனே வரமுடியாது இந்தர். இரண்டு நாள்ல சனி கிழமை வருது. அப்ப சென்னை வர்றேன்.

   இந்தர்… நீ ப்ரியாவை விரும்பறதை அவளிடம் சொல்லிட்டியா?” என்று அவசரமாய் கேட்டான் சந்தோஷ்.

   “ஏன்டா இந்த சிட்டுவேஷன்ல முதல்ல எதை சொல்லறது? அவ திருட்டு பழி சுமந்து இங்க வந்திருக்கா. முதல்ல அதுக்கு யார் காரணம்னு பார்க்கணும். அவளிடம் முதல்ல தெரிந்த பையனா பேசி பார்க்கறேன். மேபீ நான் பேசற தோரணையே என் காதலை சொல்லிடும். ஆனாலும் வாய் திறந்து சொல்ல மாட்டேன்.
    முதல்ல அவ மனசுல இருக்கற கவலையை களைந்துடணும். இரண்டாவது தான் என் காதலை சொல்லி சம்மதம் வாங்கணும்.

    ஆமா நீ விலாசினியிடம் காதலை சொன்னதுக்கு என்ன ரிசல்ட் வந்துச்சு?” என்று கேட்டான் இந்தர்.

    “அவளா, ஆபிஸ் பக்கமா வந்தா. நானும் உங்களை விரும்பறேன். ஆனா நீங்க ப்ரியாவை விரும்பறதா நினைச்சிட்டு ஒதுங்கிட்டேன்னு சொன்னா.
   ப்ரியா மேல திருட்டு பழி வரலைனா நீங்க அவளை தான் விரும்பியிருப்பிங்களானு கேட்டா.

    அப்படியில்லை அதுக்கு முன்னவே விரும்பறேன்னு சொல்லவும், ‘எனிவே ப்ரியா இங்கிருந்து போகவும் தான் நான் உங்க கண்ணுக்கு தெரிந்திருக்கேன்னு பேசறா.
    இத்தனை நாள் அவளை பார்க்க வந்ததையோ, அவளை பார்த்து ஜொள்ளுவிட்டதையோ அவளுக்கு புரியலை. எனக்கு இந்த கண்ணால பேசறது வரலை ” என்று பேசவும், இந்திரஜித்திடம் பெரிய மௌவுனம்.

    சந்தோஷ் பேசிக்கொண்டே சென்றவன் நண்பன் தன்னை கேலி கிண்டல் எதுவும் செய்யாமல் இருக்க, “இந்தர்” என்றதும், “ஆஹ் சந்தோஷ் லைன்ல இருக்கேன்” என்றான்.

   “என்னடா யோசிக்கற? சத்தமேயில்லை நான் பேசியதை கேட்டியா? இல்லை தர்ஷூ கூட டூயட்ல பாரீன் போயிட்டியா” என்று சிரிப்பாய் கேட்டான்.

    இந்திரஜித்திற்கு துளியும் கேலி கிண்டல் என்று அக்கணம் பேச தோன்றவில்லை.”சந்தோஷ் ப்ரியா திருட்டு பழி சுமந்தா யாருக்கு பெனிபிட் என்று யோசி. அதோட அவ சூட்கேஸ் லாக்கர் நம்பரை தெரிந்தவங்க தான் ப்ரியா மேல பழி விழுணும்னு பிளான் பண்ணிருப்பாங்க.
   நான் ப்ரியாவை ஈவினிங் ஆர் நைட் சந்திப்பேன். அவளிடம் கேட்டுக்கறேன். போனை வைக்கிறேன்டா வீட்டுக்கு வந்துட்டேன் அம்மாவிடம் அவங்க மருமகளை பார்த்ததை ஷேர் பண்ணணும்” என்று கூற, சந்தோஷ் “ஓகேடா” என்று வைத்தான்.
  
   சந்தோஷ் மனம் இந்தர் பேச்சில் சுழன்றது. ப்ரியாவிற்கு பழியை சுமந்து துரத்தி விட்டால் யாருக்கு பெனிவிட்?’ என்று யோசிக்க, தன் ஆருயிர் காதலி விலாசினியாக இருக்குமா? என்ற அதிர்ச்சி தான் அவனுக்குள் முதலில் தாக்கியது.

   ப்ரியா இல்லாமல் தினமும் தாய் பானுமதி புலம்புவது அவன் அறிந்ததே. தந்தையும் இந்த பிள்ளை இப்படி நடந்தாளானு இன்னமும் அதிர்ச்சியா இருக்கு. மருமகளா தானே பார்த்தோம்’ என்று வார்த்தைக்கு வார்த்தை கூறுவதை சந்தோஷ் இந்த இடைப்பட்ட நாட்களில் கேட்டிருக்கின்றான்.

   அப்படியென்றால் தன்னை விரும்பிய விலாசினிக்கு ‘தான் ப்ரியாவை விரும்புவதாக எண்ணி, ப்ரியா மீது கோபமிருந்து திருட்டு பழியை சுமத்தியிருப்பாளா?’ என்றதும் சந்தோஷ் இதயம் சுருக்கென தைத்தது.

   தான் காதலித்த பெண் அப்படியா? என்ற ஒன்று விதிர்க்க வைத்தது.

    ப்ரியாவிற்கு இந்த பழி காலம் முழுக்க கூடாதென்று தோன்றியது.
   அதனால் விலாசினியிடமே கேட்டுவிட முடிவெடுத்தான்.

  இந்திரஜித் தன் நண்பனின் காதலில் ஆட்டம் காண வைத்தது மட்டுமில்லாமல் தாயையும் பிடித்து உலுக்கியபடி ஹாலில் நடனமாடினான்.

   “என்னடா மீட்டிங் போகணும். அவசரம் அதுயிதுனு சலிச்சிட்டு அப்பாவிடம் கோச்சிட்டு போன. இப்ப ஆடிட்டு பாடிட்டு வர்ற? ஆமா இதென்ன சட்டையில சேரு? அச்சோ” என்று சித்ரா கவனிக்க, “கறை நல்லது மம்மி.” என்று ஆங்கில பாடலுக்கு ஏற்ப அன்னையின் கையை பிடித்து சுழற்றி ஆடவைத்தான்.

   “என்ன புது சட்டை வாங்கியிருக்க?” என்று கடை பெயரை கண்டு மைந்தனின் முகத்தை கவனிக்க, “இந்தர் என்ன சந்தோஷமான விஷயமா?” என்றதும் “யூ ஆர் பிரிலியண்ட் மம்மி. என்ன விஷயம்னு கண்டுபிடி” என்று அன்னையை உட்கார வைத்து அன்னையின் முகத்தை பார்க்க சித்ராவோ “என் மகன் கொஞ்ச நாளா தர்ஷினி தர்ஷினினு ஒருத்தியை தேடி சோர்ந்துட்டு சுத்தனான். இப்ப ‘பளிச் பளிச்’சுனு முகமிருக்குன்னா? என் மருமகளை எங்கயாவது சந்திச்சிருப்ப” என்று நடந்தவையை யூகித்து புட்டு புட்டு வைத்தார்.‌

‌ “என் ஸ்வீட் ஹார்ட் மம்மி. தர்ஷினியை பார்த்துட்டேன், கொஞ்சம் போல பேசிட்டேன். ஆனா நிறைய பேசணும் மம்மி. இப்ப பேச முடியாது. துணி கடையில சேல்ஸ் கேர்ளா இருக்கா” என்றவன் குரல் தயக்கத்தை தாங்கியிருந்தது.

   என்ன தான் காதல் என்றாலும் துணிக்கடையில் வேலை பார்ப்பவள் மருமகளா? என்ற முகதூக்கல் வந்துவிட்டால்? அந்த பயத்தோடு அன்னையை ஏறிட்டான்.

   “சந்தோஷ் என்னிடம் போன்ல அவ வேற ஏதோ அக்கவுன்ட் சம்மந்தமா வேலை பார்ப்பதா சொன்னான். இப்ப சேல்ஸ் கேர்ள்னா எந்தளவு பாதிப்படைந்து இங்க வந்து சேர்ந்திருப்பா?” என்று மைந்தனுக்கு ஏற்ற அன்னையாக கேட்டதும் தான் இந்தருக்கு மூச்சு வந்தது.

   “ஆமா அம்மா. அவ அங்க 12000 சம்பளத்துல கணக்கெழுதுற வேலை பார்த்தா. இதே சென்னை என்றால் அதிக சம்பளம் கிடைச்சிருக்கும். சொந்த வீடு உறவுகள் இருக்க பாதுகாப்பா வர்ற சம்பளம் போதும்னு வாழ்ந்தா. இப்ப அங்க இருக்க பிடிக்காம ரோஷப்பட்டு 6000-7000 சேல்ஸ் கேர்ள் வேலைக்கு வந்துட்டா.

   கூடிய சீக்கிரம் அவ மேல பழியை போட்டவங்க யாருனு கண்டுபிடிச்சி, என் லவ்வை அவ அக்சப்ட் பண்ண வச்சி, கல்யாணம் பண்ணி நம்ம வீட்ல என் கூடவே வச்சிக்கணும்.

   அதோட அவளுக்கு இங்க நல்ல வேலையும் தேடிதரணும். அவ என் காதலை அக்சப்ட் பண்ணிப்பாளாம்மா?” என்று எதிர்பார்ப்போடு அன்னையை கேட்டு நின்றான்.

    சித்ரா என்ன சொல்லிவிடப் போகின்றார். எல்லா அன்னையும் போல தன் மகன் எண்ணியது ஈடேற ஆசைக்கொண்டவராக “கண்டிப்பா என் பையனோட காதலை மறுப்பாளா?” என்று நெட்டி முறித்தார்.

   இந்திரஜித் சோபாவில் சாய்ந்தவனாக விட்டத்தை பார்த்து, ‘மறுக்க வாய்ப்பிருக்கு’ என்று மனதிலேயே கூறிக்கொண்டான்.

   ஆபிஸில் சொன்ன பொய்யிற்காக, வீட்டிலிருந்த மெடிக்கல் கிட் வைத்து, பெயருக்கு ஒரு கட்டு போட்டு அதனை போட்டோ எடுத்து அவனது தலைமை அதிகாரிக்கு அனுப்பிவிட்டு, காலாட்டி முந்திரி வறுவலை கொரித்தான்.

  அக்கணம் அலுவலகம் முடிந்து மோகன் மகனை கண்டு பதட்டமாய் வந்தார்.
  
   “என்னடா ஆச்சு. காலையில சிடுசிடுன்னு கிளம்பறப்பவே நினைச்சேன்” என்று மகனின் கையை தீண்ட, அவனோ முந்திரியை வாயில் வைத்து, வலது கை கட்டை பிரித்து காட்டினான்.

   “ஒன்னும் ஆகலையா?” என்று நிம்மதியடைந்த மோகன் மகன் தன்னை பதட்டமாக்கியதை எண்ணி, “எதுக்கு இப்படி பண்ணிட்டு திரியற? முகத்தை தூக்கிட்டு, அடிப்பட்டதாக நடிச்சிட்டு” என்றார்.

   “அப்பா உங்களுக்கும் எனக்கும் டிரஸ் வாங்கியிருக்கேன்” என்று சம்மந்தமேயில்லாமல் மகன் பேசவும், “டேய் நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் நீ என்ன பேசற. காதலிச்சா, காதலிக்கறவனும் அவனை சுத்தியிருக்கறவங்களையும் சந்தோஷமா மாத்தணும். இப்படி உம்முனு இருந்தா நல்லாவேயில்லை. அதுவும் நீ அப்படியிருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. காலையிலயிருந்து உன் முகம் டல்லாயிருக்க, என்னால வேலை செய்ய முடியலைடா” என்று ஆதங்கமாய் தன்னிலையை பதிவு செய்தார்.

  உண்மை தானே ஒரே மகன் தங்கள் வாழ்வில் அனைத்து சந்தோஷத்தையும் ஈடுகட்ட பிறந்தவன். இப்படி காதலென்று அவன் முகம் வாட்டம் கொண்டால் தந்தை விரும்புவாரா?

    “அப்பா இனி உம்முனு இருக்க மாட்டேன். இந்த டிரஸ் உங்க மருமகளை பார்க்க வச்சது. இந்த டிரஸ் உங்க மருமகளிடம் பேச வைக்க வாங்கியது.” என்று இரண்டு சட்டையை எடுத்து காட்டினான்.

மோகன் அந்த உடையை வாங்கி தன் மீது வைத்து, “மருமக டிசைன் பண்ணின டிரஸாடா?” என்று கேட்டு பார்க்க, “அதெல்லாம் இல்லை’ என்று நடந்தவையை விவரித்தான்.

   மோகன் மொத்தமாய் கேட்டுவிட்டு, “சட்டை டிஸைன் சுமாரா இருந்தப்பவே நினைச்சேன். இது கம்பெனி காரன் தயாரித்த சட்டைனு.
   ஆமா எங்க மருமக வேலை செய்யறா?” என்று கேட்கவும் அந்த துணிக்கடையின் கவரை எடுத்து காட்டினான்.

   “பேஷ் பேஷ் ஒருநாள் நேர்ல சந்திச்சு பேசணும்.” என்றார் மோகன்.

   துணி கவரை தள்ளி வைத்தவன், “முதல்ல நான் பேசணும், பழகணும், அவ என்ன மனநிலையில இருக்கானு தெரிந்துக்கணும். என் காதலை அவ ஒத்துக்கணும், என்னை ஏத்துக்கணும், அப்பறம் பொறுமையா உங்களை கூட்டிட்டு போறேன்.” என்று ஆயாசமாக கூறினான்.

   மோகன் மனைவி சித்ராவை பார்த்து ‘என்னம்மா இது?’ என்ற ரீதியில் கையை நீட்டி கேட்க, “பையன் சொன்னா சரியா இருக்கும்ங்க” என்றார் சித்ரா.

  அதன் பின் “இதென்னடா கையில கட்டு நாளைக்கு ஆபிஸுக்கு இந்த கட்டு போட்டுட்டு போகணுமா?” என்று தன் கையில் கட்டு போட்டு பார்த்து அப்பாவியாய் மனைவியிடம் ‘எனக்கு நல்லாயிருக்கா?’ என்ற பாவணையில் பார்க்க, ‘சும்மாயிருங்க கையில கட்டுப்போட்டுட்டு’ என்று எடுத்துவிட்டார் சித்ரா.

   “பொய் சொல்லிட்டேன் அதை ஸ்மூத்தா மெயின்டெயின் பண்ணணும். இல்லைனா முக்கியமான மீட்டிங் ஏன்டா வரலைனு கழுத்தை பிடிப்பாங்க. பதில் சொல்லி நாக்கு தள்ளிடும். அதுக்கு ஒரு கையால கஷ்டப்பட்டு ஒரு வாரம் லீவு கேட்டு வீட்ல இருக்க வேண்டியது தான்.” என்று தந்தையை பார்த்து கண்சிமிட்டினான்.

இவன் ‘ஜகஜாலகேடிம்மா’ என்று மனைவியிடம் பேசி சிரித்து நேரம் கழித்தார்கள்.

     மணி ஒன்பதாக, முப்பாட்டன் காலத்து கடிகாரம் ஒன்பது தடவை சத்தமிட்டு அடங்கியது.

    இந்திரஜித்தோ, வேகவேகமாய் எழுந்து, “அம்மா நான் அவளை போய் பார்த்துட்டு வர்றேன். பத்து மணிக்கு கடை மூடறதா பக்கத்துல கேட்டு தெரிந்துக்கிட்டேன்.” என்று அவசரமாய் சிகையை கையால் கோதினான்.

  “டேய் இந்த கட்டு தேவையா?” என்று கேட்டார் மோகன்.

“இருக்கட்டும் அப்பா. என்ன ரியாக்ஷன் தர்றானு பார்க்கறேன். மனசுல துளியூண்டு நான் இருந்தா பதறுவளே” என்று வலது கையை கட்டுப்போட்டு முடிச்சிட்டான்.

   “அதெல்லாம் இந்நேரம் பதறிட்டு தான் இருப்பா. உன்னை இங்க பார்த்து காலையிலருந்து கவலையா சுத்திட்டு இருப்பா” என்று மோகன் சிரிக்க, “உங்களை வந்து வச்சிக்கறேன்.” என்று ஓட்டமெடுத்தான்.

   தன் பைக்கை உதைத்து ப்ரியதர்ஷினி இருக்கும் கடைக்கு விரைந்தான்.

  அவன் வந்து சேர நேரம் பிடித்தது. தி.நகர் மாம்பலம் என்றால் கூட்டத்திற்கு குறைச்சலில்லையே. பைக்கை சந்து பொந்தில் விட்டு தன்னவள் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்து சேர அப்பொழுது தான் ஒவ்வொரு பொம்மையாக கடைக்குள் எடுத்து வைத்தார் காலையில் சந்தித்த மனிதர்.

     ப்ரியதர்ஷினி முகம் இறுக உடல்நிலை சரியில்லாதவள் போல அங்கிருப்பதை அறிந்துக்கொண்டு அவளுக்காக காத்திருந்தான்.

   மணி பத்தாகவும் கைப்பையை எடுத்து, கூட வேலை பார்க்கும் சுதாவிடம் கையசைத்து தனியாக நடந்தாள். சுதா அவள் வீட்டிற்கு வேறு பக்கம் செல்ல தர்ஷினி மறுபக்கம் நடந்தாள்.

     “நான் வேண்டுமின்னா டிராப் பண்ணவா தர்ஷி?” என்று பைக்கில் அருகே வரவும் அவன் வருகையை எதிர்பார்த்தவள் போல மெதுவாக அவன் பக்கம் திரும்பினாள்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

1 thought on “நீயென் காதலாயிரு-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *