Skip to content
Home » நீயென் காதலாயிரு-9

நீயென் காதலாயிரு-9

அத்தியாயம்-9

    வேண்டாவெறுப்பாய் திட்டி தீர்க்கும் முடிவோடு திரும்பியவளின் பார்வை இந்திரஜித்தின் வலது கை கட்டால் திட்ட வந்த வார்த்தைகள் மாயமாகி “என்னாச்சு?” என்று உயிரே போனது போல துடித்தாள்.

   அவளது உடல்மொழியே அவனுக்காக கவலைக் கொள்வதை அப்பட்டமாக எடுத்துரைக்க, இந்தரஜித் ஆனந்தமாய் வலது கையை பார்த்து “ஒன்னும் ஆகலை தர்ஷி. காலையில சொன்ன பொய்காக ஆக்டிங். ஆனா நீ பதறிட்டு கண்கலங்க தவிக்கறப்ப எனக்கெதுனாலும் பரவாயில்லைனு தோணுது.” என்றான் ரசனையாக.

  அவன் என்னவோ காதல் வசனம் பேசி ரசித்திருக்க, போன கோபம் பாதி வழியில் நின்று அதிவேகமாய் அவனை திட்ட வார்த்தை அம்புகளாக விழுந்தது.

  “அறிவிருக்கா உனக்கு? எது எதுல விளையாடணும்னு இல்லை. ஆளும் மூஞ்சியும்.

   என்னடா வேணும் உனக்கு? ஒரு நாள் கூட பேசி பழகாத பொண்ணுக்கிட்ட நீயா வந்து பேசிட்டு நிற்கற?” என்று ‘ரோடு’ என்றும் பாராமல் கத்தினாள்.

   அங்கே அவ்வழியை கடந்த பலரும் இருவரை தான் திரும்பி திரும்பி பார்த்து தேமேயென்று சென்றார்கள்.

   “நிதானமே பிரதானம். ஏன் இப்படி பதறிட்டு இருக்க. நான் உன் மாமன் மகனோட பிரெண்ட் தானே? எனக்கு என்ன ஆனா உனக்கென்னம்மா? ஏதோ காலையில பார்த்தோம். சந்தோஷ் தேடச்சொன்னானு ப்ரியா என்ற பொண்ணு டிரஸ் டிசைனரா இருக்கானு தேடி அலைந்தேன்.

  காலையில பார்க்கவும் வியாபரம் செய்யற கடையில பேச வேண்டாம்னு போயிட்டேன். இப்ப வந்து நலம் விசாரிக்கலாம்னா தாம் தூம்னு குதிக்கற?” என்று பேசவும் சந்தோஷிற்காக தான் என்னை தேடினானா? ஆனால் இவன் பார்வை பேச்சு? என்றவளின் சிந்தனை தடுமாறியது.

     இந்திரஜித் பேசவும் அமைதியாகி நடக்கவும், “எதுக்கு பழியை சுமந்துட்டு வந்துட்ட? அங்கயே இருந்து நான் நகையை எடுக்கலைனு வாதிட வேண்டியது தானே? நீ பாட்டுக்கு கல்யாண வீட்லயிருந்து புறப்பட்டுட்ட?” என்று பேசவும், ப்ரியதர்ஷினி நின்றாள்.

   இந்திரஜித் அருகே வந்து, “ரொம்ப தேங்க்ஸ் அங்க சந்தோஷ் கூட வாய் திறந்து எனக்காக பேசலை. நீங்க அவ திருடலைனு என் மேல நம்பிக்கையா பேசியதற்கு. அதுக்காக இங்க சந்தோஷ் தேட சொன்னதுக்காக என்னை தேடி அலைந்திருக்க வேண்டாம்.

   என்னை என் போக்குல விட்டுடுங்க. நான் திருடலைனு என் மனசாட்சிக்கு தெரிந்தா போதும். அதை சந்தோஷிற்காக நிரூபிக்கணும்னு இல்லை.

  இப்படி பப்ளிக்ல என்னிடம் வந்து பேசாதிங்க. எனக்கு பிடிக்கலை.
   இந்த சந்திப்பு இன்னியோட முடியட்டும். அன்னைக்கு எனக்காக பேசியதுக்கு தேங்க்ஸ்.” என்று வணக்கம் வைத்து நடந்தாள்.

   இந்திரஜித் அவளை நடக்கவிட்டு பைக்கை உயிர்பித்தான்.

   திரும்பி பார்க்க கூடாதென்று மனதில் வலுத்துக்கொண்டு நடந்தாள். ஆனாலும் அவள் பின்னால் இந்தர் வருவது உள்ளுணர்வால் அறிந்திருந்தாள்.

  சங்கடமான உணர்வு எவ்வாறு கூறுவதென்று ப்ரியதர்ஷினிக்கே தெரியவில்லை.
  
  வேகமாய் நடந்து தங்கியிருக்கும் வுமன் ஹாஸ்டலுக்குள் நுழைந்து கேட்டை பூட்டும் நோக்கத்தில் அப்படியே இந்திரஜித் இருக்கின்றானா என்று தேடுவதை முகத்தில் காட்டிக்காமல் விழியால் நாலாபக்கமும் அலசினாள்.

    இந்திரஜித் அந்த தெருவில் இல்லை என்றதும் சிறு ஏமாற்றம் கொண்டது மனம்.

   அவன் வரவேண்டுமென்று எதிர்பார்த்தாயா? என்றது மூளை.
  
    மனமோ பதில் அளிக்க கூட முடியாமல் சோர்ந்து போய் நேராக அறைக்கு சென்றாள்.

மதியமே சாப்பிடவில்லை தொண்டைக்குள் உணவு இறங்கவில்லை. மாலையில் பிரட் வாங்கியிருக்க அதில் சக்கரையை போட்டு விழுங்கினாள்.

  இரண்டு பிரட் இறங்கவும் மூன்றாவதை உள்ளுக்குள் தள்ள முடியவில்லை. நன்றாக அன்னையின் கையால் குழைவான சாதம் சூடான குழம்பு, தொட்டுக்க காய்கறி என்று சாப்பிட்டு பழகியிருக்க, இந்த பிரட் எல்லாம் வாயுக்கு சுவை சேர்க்கவில்லை.

  ஏதோ வெறும் வயிற்றோடு இருந்தால் வயிற்றுவலி வந்துவிடும்.  இங்கே இதயமிருக்கும் இடமே உச்சபட்ச வலியை கொடுக்க, வயிற்று வலியை வேறு இழுத்து வைப்பானேன் என்று சிறிதளவு வயிற்றை நிறைத்து கொண்டாள்.

   இந்திரஜித் தன்னை பார்த்ததை எப்படியும் சந்தோஷிடம் உரைத்திருப்பான். சந்தோஷ் தன்னை பார்க்க வருவானா? அவன் அன்றே சிலையாக நின்றான். இன்று மட்டும் நான் திருடவில்லையென்று அறிந்து ஓடிவருவானா என்ன?

    இரவெல்லாம் இந்திரஜித்தின் புண்ணியத்தில் உறக்கம் தாமதமாக வந்தது.
 
  அடுத்த நாள் விழிக்கும் நேரம் இந்திரஜித் என்பவனை மறந்து வேலைக்கு புறப்பட்டாள்.

    காட்டன் உடை, மெஸ்ஸில் சூடான டீ, உப்புமா என்று கிடைத்ததை உண்டுவிட்டு வேலை செய்யும் கடையை நோக்கி நடந்தாள். இதுவொரு வசதி நடந்தே வேலைக்கு வந்திடலாம்.

   என்னதான் அரத பழைய இடமென்று சின்ன இடத்தில் தங்க வசதியும் சுவையற்ற மெஸ்ஸும் கிடைத்தாலும், பணிக்கு செல்ல விரும்பியிருந்தாள்.

   பழக்கப்படாத வேலை, ஆனாலும் வண்ண வண்ண உடைகளை எடுத்து காட்டி வாடிக்கையாளரை கண்டு நேரம் ஓடிவிடுகிறது. என்ன கால் கடுக்க நிற்பது தான் கால்வலியை கொடுக்கிறது.

   அந்த கால்வலி தான் திருட்டு பழி சுமத்திய அத்தையின் அன்பு மாறியதை மறக்க, உறங்கவும் வழிவகுக்கிறது.

     அங்கே இவளுக்கு முன்னால் இந்திரஜித் நின்றிருந்தான். கடைஉரிமையாளரிடம், “நேத்து வாங்கிட்டு போன சட்டை எங்கப்பாவுக்கு பிடிச்சிருக்கு சார் அவருக்கு கல்யாண நாள் வருது. பட்ஜெட்டும் எனக்கேத்தது போல இருக்கவும் இங்கயே வாங்கிடலாம்னு வந்துட்டேன்.” என்று பேசினான்.

   “நல்லது தம்பி. தம்பி நேத்து கைல கட்டுயில்லையே. என்னாச்சு?” என்று அக்கறையாய் விசாரித்தார்.

   “நேத்து விழுந்துட்டேன் சார். சட்டையில கறை பட்டப்பவே உஷாரா இருந்திருக்கணும். ரிட்டர்ன் போறப்ப விழுந்துட்டேன். நல்ல வேளை ஒன்னும் ஆகலை.” என்று பேசியவன், “அண்ண சட்டை வாங்கிட்டு வந்துடறேன்” என்று ப்ரியாவை பார்த்து உரிமையாளரிடம் நழுவினான்.

   ப்ரியா இருக்குமிடம் வந்து ரெடிமேட் ஷர்ட் கேட்டான்.

    “திரும்ப எதுக்கு வந்த?” என்று பற்கடித்து கேட்டாள்.
 
   “இதென்ன கதையா இருக்கு. இது உன் கடையில்லை. நீ வேலை பார்க்குற. நான் இங்க ஷர்ட் வாங்க வந்தேன். எங்கப்பாவுக்கு கல்யாண நாள் வருது.” என்று சின்சியராக ஷர்டை தேர்ந்தெடுத்தான்.
 
   அவன் கூறுவது அப்பட்டமான பொய். தன்னை காண தான் இப்படி முதல் வாடிக்கையாளராக வந்து நிற்பது புரிந்தது. கேட்டால் மட்டும் இல்லை என்று சாதிப்பான்.

   கடுகடு முகத்தோடு ஷர்ட் எடுத்து தந்துவிட்டு நின்றாள்.

   “அப்பாவுக்கு நான் செலக்ட் பண்ணி எடுத்துக்கறேன். எனக்கு நீ செலக்ட் பண்ணிடறியா தர்ஷி?” என்று சில்மிஷமாய் கேட்டான்.

   மௌவுனமாய் துணியை எடுத்து போட்டு விலையும் சைஸ்ஸும் சொல்லி “வேற டிசைன் பார்க்கறிங்களா சார்” என்று காது கேளாதவளாக பவ்வியமாக கேட்டாள்.  
 
   “இந்த டிசைன் தான் வேண்டும். ஆனா என் சைஸ்கு பெர்பெக்டா பொருந்தணும்.” என்றதும் அவன் பேச்சு என்னவோ துணியிலிருக்க கண்கள் அவளை தான் களவாடிக் கொண்டிருந்தது.

     “சந்தோஷோட அத்தை பொண்ணு நான். தயவு செய்து என்னிடம் இப்படி பார்வை வீசாதிங்க” என்று குரல் உசத்தி கூறினாள்.

   “என்ன பார்வை?” என்று தெரியாதவன் போல கேட்டதும், தனக்கு பின்னாலிருந்த கண்ணாடி பிம்பத்தை காட்டி இதுல உங்க கண்ணை பாருங்க. அதுல கண்ட ரசனையும் வழியுது.” என்று கூறிவிட்டு “சார் இதை செலக்ட் பண்ணிட்டார்.” என்று கைக்கு கிடைத்ததை வாங்கிவிட்டதாக பில் போட அனுப்பினாள்.

  “என்னை விரட்டுறதுலயே இருக்க? ம்ம்ம் எங்க அம்மாவுக்கு ஒரு சேலை வேண்டும். அதையும் எடுத்து கொடு. ஏய் சேலையை இப்படி ஏனோ தானோனு எடுக்காத. எங்கமம்மி காட்டன் சேலை ரப்பா இருக்கற மாதிரி கட்டுவாங்க. அதுல ஒரு கெத்து இருக்கும்.” என்று விவரித்தான்.

    ப்ரியதர்ஷினி அவன் கூறியதை கேட்டு எடுக்க திரும்பும் நேரம், நீ கூட காட்டன் சுடி தான் போடுற? காட்டன் தான் பிடிக்குமா?” என்று கையை தடவியபடி கேட்டான்.

     எதற்கும் பதில் அளிக்காமல் திமிரோடு ஒரு சேலையை மட்டும் எடுத்து பில் போட அனுப்பிவிட்டாள்.

   இரண்டு மூன்று வினா தொடுத்து சீண்டி பார்த்தான். ப்ரியதர்ஷினி சுத்தமாய் கண்டுக்கவில்லை. அதன் பலன் அலுவலகம் செல்லும் நேரமும் நெருங்க பில் போட்டு பெற்றுக்கொண்டான். அலுவலகத்திற்கு எடுத்து செல்லும் தனது முதுகுப்பையில் உடைகளை பில் போட்டு எடுத்து வைத்தவன் “வர்றேங்க” என்று பொதுவாய் கூறிவிட்டு சென்றான்.

    அன்வர் இந்திரஜித் சென்றதும் ப்ரியதர்ஷினி அருகே வந்து, “நாளையிலருந்து நீ வேலைக்கு வரவேண்டாம்மா.” என்று குண்டைத்தூக்கி போட்டார்.

   “சார்?” என்று கவலையோடு குரல் எழுப்ப, நானும் இரண்டு நாளா பார்க்கறேன். நீ சரியில்லைம்மா. அந்த தம்பி இம்புட்டு காலையில வரணும்னு அவசியமில்லை. அதை மீறி கடை திறக்கறப்பவே வந்து கால் கடுக்க நின்று வியாபாரம் பண்ணிட்டு போறார். காரணம் என் கடை துணியில்லை. இங்க நின்று வியாபாரம் செய்யற உன்னால தான்னு நேத்தே புரிஞ்சுக்கிட்டேன்.

    ஆமாம்மா.  நீ நேத்து காலையில இவரை பார்த்ததிலருந்து தனியா தவிச்ச, இன்னிக்கு கதிகலங்கி நின்ற, எல்லாம் பூதக்கண்ணாடில பார்க்காம தெரியுது.

   எதுக்கும்மா அவன் துரத்தணும். பார்க்க நல்லப்பையனா தெரியறான்.” என்று இந்திரஜித்திற்கு உதவினார் அவர்.

   “தனக்கிருக்கும் கவலைக்கு மடமடவென வெள்ளமாய் தன் தாய் தந்தை பற்றி உரைத்தாள்.

   மொத்தமாய் உரைத்துவிட்டு நின்றவளிடம், மீண்டும் ‘இனி இங்க வேலைக்கு வரவேண்டாம்மா” என்றார்‌ அதே கறார் குரலில்.

    “சார் திருடினு நினைச்சி துரத்தறிங்களா?” என்றாள் வருத்தமாய். இரண்டு மாதம் ஆனதில் ஓரளவு விரைவில் கிட்டிய நற்பெயர் சிதைந்துவிட்டதா? என்று கவலையானாள்.

    “இல்லைம்மா படிச்ச பொண்ணு அதுக்கு ஏற்ற வேலை பார்க்கணும். படிக்காத பொண்ணுங்க இப்படி சேல்ஸ் கேர்ளா வேலை பார்த்தா கரெக்டா வரும். அவங்களுக்கு படிச்ச வேலை கிடைக்காது. இந்த மாதிரி கிடைச்சா தானே உண்டு. அப்படி பார்த்தா உன் வேலை இன்னொரு படிக்காத பொண்ணுக்கு உதவும்” என்று கூறவும் ப்ரியதர்ஷினி கையை பிசைந்து நின்றாள்.

  கடை உரிமையாளர் அன்வரோ, “கவலைப்படாதம்மா எனக்கு தெரிந்த இடத்துல வேலை சொல்லி பார்க்கறேன். நிச்சயம் வேலை கிடைக்கும்.

   நமக்கும் நாலு பெரிய மனுஷங்க தெரியும்மா. இல்லைனா இந்த தி.நகர்ல இத்தனை கடையிருக்கறப்ப நம்ம கடை ஓடுமா. எல்லாம் ரெகுலர் கஷ்டமர் இருக்கறது தான்.” என்றவர் கடையில் கல்லாப்பெட்டியில் ஓரமாய் விசிட்டிங் கார்டாக இருந்ததில் அவர் தேடும் கார்டை எடுத்தார்.

   அதிலிருந்த பத்து இலக்க எண்ணிற்கு அழைப்பை தொடுத்தார்.
  
    முதலில் நலம் விசாரித்து, பேசிவிட்டு ப்ரியதர்ஷினிக்கு வேலை கேட்டு வைத்தார். ப்ரியதர்ஷினிக்கு திகைப்புடன் நோட்டமிட்டாள். அன்வர் பாய் உருது மொழியில் பேசிக்கொண்டிருக்க, தன்னோடு வேலைப்பார்க்கும் மற்றவர்கள் வருவதை கண்டு முறுவல் புரிந்தாள்.
  
   அன்வரோ கடைசியாக ‘மாஷா அல்லாஹ்’ என்று கூறி போன் துண்டிப்பை முடித்தார்.

   இந்த அட்ரஸ்ல போய் பாரும்மா. வேலை கொடுக்கறாங்க. அக்கவுண்ட்ஸ் தானே?” என்று கேட்க வேகமாய் தலையாட்டினாள்.

   “சரிம்மா இன்னியோட இங்கயிருக்கறவங்களிடம் சொல்லிடு” என்று கூற, ஆனந்த கண்ணீரோட “சாதி மதம் எல்லாம் ஒன்னுமேயில்லைனு இந்த மாதிரி மனிதாபிமானத்தோட மனிதர்கள் தங்களுக்கு உதவி செய்யறதால தான் தெரியுது. ரொம்ப நன்றி சார்” என்று கும்பிட்டாள்.

   “அட வேலைக்கு போய் பாரும்மா. அப்பறம் நன்றி சொல்லு” என்று அவளை அனுப்பி வைத்தார்.

    ப்ரியதர்ஷினி ஒரு சிறிய வட்டத்தில் ஊருக்குள் இருந்தவள். இன்று அந்த ஊரை தாண்டி, சென்னை வந்து பலதரப்பட்ட மக்கள் புழங்கும் இடத்தில் அவள் மனிதர்களின் மனதை சம்பாதித்து இருக்கின்றாள்.

   அதை எண்ணவே பெருமிதம் பொங்கியது. தன் வாழ்க்கை வட்டம் பெரிதாக பல நல்ல மனிதரை சந்திக்க வாய்ப்புண்டு என்று நம்பினாள்.

    அன்றைய பொழுது மிகவும் ரம்மியமாக சென்றது என்றால் அது மிகையல்ல.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

1 thought on “நீயென் காதலாயிரு-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *