Skip to content
Home » பிரம்மனின் கிறுக்கல்கள்-6

பிரம்மனின் கிறுக்கல்கள்-6

அத்தியாயம்-6

      ஆத்விக் மருத்துவமனை வந்ததும் மாமனார் மாமியாரை வீட்டுக்கு போக கூற தயங்கி நின்றான்.

    அத்தை மாமா என்று உரிமையாய் கூப்பிடவில்லை. யஷ்தவியையே ‘ங்க’ போட்டு மரியாதையாக விளிக்கின்றானே. தற்போது நேரம் தாழ்த்த வேண்டாம் அவர்களும் வயதானவர்கள் நேரத்திற்கு சாப்பிட வீட்டுக்கு போவது நல்லதல்லவா. போதாத குறைக்கு தந்தை போல அவர்களும் தங்கள் வாழ்வில் வருத்தம் கொண்டவர்களே.

      “நீங்க வேண்டுமின்ன வீட்டுக்கு போங்க அங்கிள். அங்க அவங்க தனியா இருப்பாங்க. அப்பாவை நான் பார்த்துக்கறேன்” என்று கூறினான்.

      சித்ராவோ புடவையை வாயில் பொத்தி “என்ன மாப்பிள்ளை இது. இன்னமும் சார் அங்கிள்னு. வாய் நிறைய மாமா அத்தைனு கூப்பிடுங்களேன். கூப்பிட முறையில ஒன்னும் கூடிடாதே.
  
       இந்த நேரம் சொல்லணுமானு தெரியலை. ஆனா சொல்லிட்டாவது உங்களுக்கு புரிந்து நடப்பிங்கனு எதிர்பார்க்கிறோம்.

    எங்க மக யஷ்தவி கல்யாணம் முடிச்சி ஆறு மாதம் தான் ஆச்சு. அதுக்குள்ள கொரான வந்து இறந்துட்டார். வாழ்ந்த கொஞ்ச நாட்களிலும் அவரோட திட்டுக்கும் அடிக்கும் உதைக்கு ஆளாகி தான் வாழ்ந்த. ஏதோ அவளை விட படிப்பு, பணம் சம்பாதிச்சானு மாப்பிள்ளைக்கு தாழ்வுமனப்பாண்மை.

      அடிவாங்கியே வாழ்ந்ததால தான் அவ வருணோட இறப்பை பெரிசா பாதிக்கலை. ஆண்களோட குணமே இப்படி தான்னு முடிவு கட்டி கல்யாணத்தை வெறுக்கறா. நீங்க மனைவியா ஏற்று அவளை பார்த்துப்பிங்கனு பார்த்தா சிநேகிதர்களா வாழறிங்களே.

   பத்து மாசம் ஆனதால தான் மறுமணம் பண்ணி வச்சோம். இப்படி  அந்த இறப்பிலிருந்து வெளிவராம இரண்டு பேரும் பெயருக்கு வாழுகிற வாழ்க்கைக்கா நாங்க உங்க கையில பிடிச்சி கொடுத்தது.
 
      குழந்தையை தத்தெடுக்க ஓகே சொன்னதால தான் கட்டிக்கிட்டா. அதுக்காக அந்த குழந்தையை வாழ வைக்கிறது மட்டும் வாழ்க்கையாகிடாதே. உங்க ரெண்டு பேரோட வாழ்வையும் யோசிங்க. இதுக்கு மேல அறிவுரை சொல்ல மனசில்லை.” என்று அவ்விடம் விட்டு சித்ரா அழுதபடி நகர்ந்தார்.

    பாலகுமாரோ “கல்யாணம் வேண்டாம்னு சொன்ன குழந்தையை மிரட்டி தான் வருணுக்கு கட்டி வச்சேன். என் மேல அதுக்குண்டான கோபமே யஷ்தவிக்கு போகலை. இதுல வருண் குடிச்சிட்டு அடிச்சி, திருமணம் மேல வெறுப்பை ஏற்படுத்திட்டு போயிட்டார். இருபத்தி மூனு வயசுல மறுமணம் நடந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை. எங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு.

      உங்க முதல் மனைவி மேல அன்பா இருங்க வேண்டாம்னு சொல்லலை. என் மகளும் இப்ப உங்க மனைவி தான். அட்லீஸ்ட் அங்கிள் சாரை விட்டுட்டு மாமானாவது கூப்பிடுங்கோ. கொஞ்சமாவது நிம்மதி வரட்டும்” என்று கையெடுத்து கும்பிட்டு சென்றார்.

      ஆத்விக்கிற்கு என்ன பதில் தர என்றே புரியவில்லை. ஆனால் தன்னை போல அவள் துணௌயை எண்ணி தவிக்காதது இது தான் காரணமென புரிந்தது.

   சந்தனா புகைப்படம் வைத்து தான் பல முறை ஏங்கி தவித்து அழுது இருந்தோம். யஷ்தவி வருணின் புகைப்படத்தை கூட காணாதது அவனுக்கு உறுத்தியது. இன்று தான் வருண் அவளை துன்புறுத்தி வாழ்ந்தது புரிய விடுதலை பெற்ற கிளியை என்னோடு கூண்டில் போட்டு மீண்டும் சிறகை உடைத்து விட்டனரே என்று தான் எண்ணினான்.

      தவறியும் தன்னால் அவளுக்கு துணையாய் மாறி காதல் பறவையாய் மாறலாம் என்றோ, அவள் தலை சாய தன் தோள் கொடுக்கலாமென எண்ண மறந்தான்.

     அன்பாளனை தூரத்தில் பார்த்து வெளியே காவலுக்கு அமருமா கூர்க்கா போல அமர்ந்தான்.

      எப்படியும் உடல்நிலை சரியானதும் தந்தையை தன்னோடு வைத்து நலமாய் பார்த்து கொள்ள வேண்டும் என்று திடமாய் முடிவெடுத்தான்.
   
     ஏற்கனவே அன்பாளன் அத்தகைய  முடிவோடு தான் மகனிடம்  தில்லுமுல்லு செய்கின்றார் என அறியாது போனான்.

    அவரவர் மற்றவர் நலனிற்கு கூட இங்கு நடிக்க வேண்டியதாக காலம் மாற்றியது. என்ன பலபேர் கெடுதலுக்காக நடிப்பார்கள். இங்கு மகன் வாழ்வை சரிப்படுத்த அன்பாளன் நடிப்பது தவறாய் படவில்லை.

    சித்ரா வீட்டுக்கு வந்தப்பொழுது பாவனாவிற்கு பால் சோறு ஊட்டி விட்டு வாயை துடைத்து விட்டாள் யஷ்தவி.

      “உன்னை கண்டு பெருமையா இருக்கு யஷ்தவி. அதே சமயம் இப்படி வாழ்க்கையை அழிச்சுக்கிற முட்டாள இருக்கியே.” என்று குமைந்தார் சித்ரா.

      “முட்டாளாவே இருந்துக்கறேன் மா. இப்ப என்ன சந்தோஷமா நிம்மதியா இருக்கேனே அது போதும்” என்று யஷ்தவி பால்கனி பக்கம் வந்து பாவனாவை தோளில் கிடத்தி தட்டி கொடுத்தாள்.

        தன் மகள் வயிற்றில் இருந்து வெளிவந்திருந்தாள் இந்நேரம் பிறந்து இருப்பாள். தற்போது பாவனாவுக்கு பால் சாதம் ஊட்டியதற்கு பதிலாக தன் உதிரத்தை பாலாக மார்பிலிருந்து அமுதம் பருக வைத்து வயிற்றை நிரப்பி இருப்பேனோ என்று எண்ணியவளின் இதயம் வலித்தது.

இன்று நிகழ்ந்தது போல அடிவயிறும் நெஞ்சும் துடித்தது.

      கொரானாவிற்கு தனிப்பிரிவு சென்று விட்டு அங்கு வருணும் யஷ்தவியும் அமர்ந்திருந்த நேரம் வருண் செய்த செயலால் தன் கரு உரு தெரியாமலே சிதைந்து போன நாட்கள். வருணிற்கு பதில் தானே இறந்திருக்கலாம் என்று இன்றும் இதயம் அடித்து கொண்டது.

     ஆனால் பாவானாவின் ஆழ்ந்த உறக்கத்தில் அவளை மெத்தையில் கிடத்தி, “நீ தான் என் மகளா என் கைக்கு வந்து சேர்ந்ததா நம்பறேன் பாவனா. உன்னை யாருக்காகவும் விடமாட்டேன். போராடி உன்னை தத்தெடுத்து இருக்கேன். உன்னை நல்லா படிக்க வச்சி ஆளாக்கி அழகு பார்க்கறது தான் என்னோட கடமை. என் வாழ்க்கையோட பிடித்தல் நீ தான்.” என்று முத்தமிட்டாள்.

    உறங்கும் குழந்தை அதை நீ சொல்லணுமா அம்மா என்பது போல இமை மூடி தூக்கத்திலும் சிரித்தது.

  குழந்தை உருண்டு விழக்கூடாதென கட்டிலை மட்டும் ஒரமாய் நகர்த்தினாள். சத்தமின்றி நகர்த்தி முடித்தவள், நேற்று கீழே உறங்கியது இன்றோ ஆத்விக் இல்லாததால் மெத்தையில் படுத்தாள்.

     இமை மூடி திரும்ப, ஒரு ஸெல்பில் புகைப்படங்களின் பிரேம் நான்கு இருக்க எடுத்து பார்த்தாள்.

     ஆத்விக் சந்தனா தோளில் உரிமையாய் கைப்போட்டு காதலோடு கண்கள் கலக்க இருவரும் பார்த்துக் கொள்ளைம் புகைப்படம், திருமணபுகைப்படம், ஹனிமூன் சென்றிருப்பார்கள் போல கொடைக்கானல் பார்கில் எடுத்த புகைப்படம், மற்றொன்று அலுவலகத்தின் கேன்டீனில் எடுத்தவை என்று நான்கு இருந்தது.

    நேற்று அன்பாளனின் பேச்சால் எடுத்து வைத்திருப்பானோ என்று தோன்றியது. காலையில் இருந்ததே என்று சிந்திக்க சற்று முன் சென்ற பொழுது எடுத்து வைத்தது புரிந்தது. தந்தைக்காக உடனே எடுத்து வைத்து விட்டானே என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

      சந்தனா அழகாக இருக்கின்றாள். கன்னக்குழியில் ஆத்விக் விழுந்திருப்பான் என்று கிரகித்தாள்.  தற்போது தன் கணவன் என்றோ, மற்றொரு பெண் என்ற அருகே இருக்கின்றான் என்ற உணர்வோ துளியும் இல்லாது பொருத்தம் பார்த்து ரசித்தாள்.

  கூடவே அவளையறியாது ஆத்விக்கோடு வருணை ஒப்பிட்டது மனம்.

     வருண் எல்லாம் அப்படியல்ல, எத்தனை முறை அவனின் அம்மா கூறினாலும் அசட்டையாய் இருப்பான். அவன் தங்கை செண்பா வந்தாலும் பெண் என்ற எகத்தாளத்தோடு தான் வரவேற்பான். ஆத்விக் தன்னை மரியாதையோடு ‘ங்க’ போடுவதை எண்ணி பார்த்தாள். வருணின் ‘ஏய் ஏய்’ என்ற வார்த்தை காதில் கேட்க உடல் பதற பாவனாவை அணைத்து கொண்டு இமை இறுகினாள்.

     மூடிய விழிகளுக்குள் வருண் வந்து தொலைய, தலையணையை இறுக பற்றினாள்.

     அடுத்த நாள் கண் திறந்தப் பொழுது கனவுகளில் இருந்து விடைப்பெற வில்லை நிஜமாகவே அவனிடமிருந்து விடைப்பெற்றதை எண்ணி விடியலை இதமாய் ரசித்தாள்.

   சிகையை அள்ளி முடித்து முகமலம்பினாள்.
    
     பொட்டு வைக்கும் பொழுது கைகள் சிறிதாய் அந்தரத்தில் நின்றது. இது கொஞ்ச காலமாய் இப்படி தான் அனிச்சையாய் கைகள் திலகத்தை தீட்ட, வருண் இறப்பு வந்து கண்ணாடி முன் உரைக்க, அதனை புறம் தள்ளி பிறந்ததிலிருந்து வைத்து பழகிய பொட்டை வைத்து கொள்வாள். காலைகடனை முடித்து குளித்து வந்தாள். பாவனா எழுவதற்குள் குளித்து விட்டாள் மற்ற நேரம் இம்மியளவு பிரியாமல் இருக்கலாமென்ற தீர்வு இது.

     சமையலறைக்கு சென்ற நேரம் சித்ரா பாலை சூடுபடுத்தி காபி கலந்து நீட்டவும் “தேங்க்ஸ் மா.” என்று பருகினாள்.

    “பக்த்துல தானே மருத்துவமனை மாப்பிள்ளைக்கு ஒரேட்டு காபி கொண்டு போய் கொடுத்திடலாமே. நான் பாவனா எழுந்ததும் பாலை ஆத்தி தர்றேன்” என்றார்.

      “அதெல்லாம் கேன்டீன்ல குடிச்சிப்பாங்க மா” என்று பதில் தர, சித்ரா பாலகுமாரை கையை பிசைந்து பார்த்தார்.

    ஒரு பேச்சுக்கும் ஆத்விக்கிற்காக செல்லாது தவிர்க்கின்றாளே என்ற ஆற்றாமை இருந்தது.

– கிறுக்கல்கள் தொடரும்.

பிரவீணா தங்கராஜ். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *