Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-26

47 / 100 SEO Score

அத்தியாயம்-26

“நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” -ஏசாயா 43:2

“கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்.” -மத்தேயு 7:7

“எல்லாவற்றிற்கும் ஒரு காலமும் உண்டு.” – பிரசங்கி 3:1

துகிராவின் வளைகாப்பு விழா மெதுவாக முடிவை நோக்கி நகர்ந்தது. வந்தவர்கள் செல்பவர்களுக்கு ரிட்டர்ன் கிப்ட் எடுத்து தரும் பொறுப்பு அஞ்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வீட்டின் தோட்டத்தில் தொங்கியிருந்த வண்ண விளக்குகள் இன்னும் மின்னிக் கொண்டே இருந்தன.
சில குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
மூத்தவர்கள் மெதுவாக நாற்காலிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த வீட்டில் நிறைய நாட்களுக்கு பிறகு, ஒரு முழுமையான குடும்பம் சந்தோஷம் இருந்தது.
சாரா அந்த சூழலை அமைதியாக ரசித்தாள்.
துகிராவை சுற்றி பெண்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அமுல்யா சித்தப்பா ரிஷியோடு சிரித்துக் கொண்டிருந்தாள். இஷான், வந்திருந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தான். சார்லஸ் மட்டும் அடிக்கடி சாராவை தான் பார்த்துக் கொண்டிருந்தான். இஷான் தங்கை பிரதன்யா சார்லஸ் சாராவை சாப்பிட வைக்கும் பொறுப்பை ஏற்றிருந்தாள்.

அமுல்யாவையும் சாப்பிட வைக்கும் பெரிய வேலை பிரதன்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அமுல்யா உணவை மறுக்க, சாராவோ “நான் ஊட்டி விட்டால் அமுலு குட்டி சாப்பிடுமோ?” என்று சாரா கேட்க குழந்தை அமுல்யாவோ சம்மதமாய் தலையாட்டினாள்.

பிரதன்யாவோ “இதென்ன புதுசா இருக்கு. அத்தை தானே ஊட்டி விடுவேன்.” என்று கேட்க, சாராவை கைகாட்டி, “இவங்களும் ஆன்ட்டி தானே?” என்று கேட்டாள்.

சாராவோ “அமுலுகுட்டி நானும் உங்கட ஆன்ட்டி தான்” என்று மடியில் வைத்து ஊட்டி விட்டாள்.

சார்லஸ் எதிலும் தலையிடவில்லை‌. சாரா மனம் விரும்பும் வண்ணம் விட்டுவிட்டான். சொல்லப் போனால் அவன் சாராவை ரசிப்பதில் சுற்றம் மறந்தான்.

பிரதன்யா பரிமாற, சாரா ஊட்டி விட, அமுல்யா மடமடவென உண்டு முடித்து அவளது குட்டி தோழனான அஞ்சனா சித்தியின் அண்ணன் மகனோடு விளையாட ஓடினாள்.
செல்லும் முன் “தேங்க்யூ சாரா ஆன்ட்டி” என்று முத்தம் வைத்தாள்.

அடுத்து சார்லஸ் சாரா சாப்பிட பிரதன்யா பிளேட் எடுக்க, “எனிக்கு இ- பிளேட்டே போதும் பிரதன்யா” என்று அமுல்யாவுக்கு ஊட்டி விட்ட பிளேட்டிலேயே வைக்க கூறினாள் சாரா.

“அச்சோ… அது எங்க அமுல்யாவுக்கு சாப்பிட்ட தட்டாச்சே” என்று பிரதன்யா வேண்டாமென கூற, “பரவல்லா… அமுலு குட்டி சிறுமி தான்னே.” என்று கூறி சப்பாத்தி வைத்து பன்னீர் ஊற்றிக்கொண்டாள்.

“பிரதன்யா இருக்கட்டும் விடு‌. சாராவுக்கு என்ன தோணுதோ அப்படியே இருக்கட்டும்” என்றான் சார்லஸ்.

இதையெல்லாம் கவனித்த பைரவியோ, சாரா அருகே வந்து, “குழந்தைங்க அவங்களா வந்து புதுசா கல்யாணமான தம்பதிங்களிடம் பழகி பேசி சிரிச்சு மடில உட்கார்ந்தாலோ, இல்லை பிறந்த குழந்தைங்க அவங்களோட மடில ஈரம் பண்ணிட்டாலோ, குழந்தைங்க எச்சி பண்ணியதை சாப்பிட்டாளோ உடனடியா அந்த கடவுள் அந்த திருமணமான ஜோடிக்கு குழந்தை வரம் தருவதா இந்துக்களோட நம்பிக்கை.
எங்க ஊரில் எனக்கு ஒரு அக்கா இருந்தாங்க. அவங்க இப்படி தான் கல்யாணமாகி குழந்தை வரமில்லை. அப்ப ஊர் பஸ்ல கோவிலில் போறப்ப ஒரு அம்மா குழந்தையை வச்சிட்டு நிற்க கஷ்டப்பட்டு இருந்தாங்க. குழந்தையை அவங்களிடம் கொடுத்துட்டு இருந்தாங்க. ஆனா பாரு… இப்ப மாதிரி பேம்பர்ஸ் இல்லை. குழந்தை ஈரம்படுத்திடுச்சு.
சடனா எங்கக்கா குழந்தையை பிடி ஈரப்படுத்திச்சுனு திட்டி தந்துட்டாங்க. அதுக்கு பிறகு குழந்தையே இல்லை. ஒரு நாள் குலதெய்வ சாமியிடம் குழந்தையில்லைனு எத்தனை முறை வேண்டினேன் ஏன் குழந்தை வரம் தரலைன்னு கேட்டு துவண்டுயிருக்காங்க. அன்னிக்கு நைட் கனவுல வந்து குலதெய்வ சாமி ‘நானா உனக்கு குழந்தை வரம் தந்தேன். பஸ்ல குழந்தை ஈரப்படுத்தியதுக்கே திருப்பி தந்து மறுத்துட்ட. அப்பறம் ஏன் தரணும்னு விட்டுட்டேன்னு சாமி வந்து சொல்லுச்சுனு சொன்னாங்க.” என்று பைரவி கூறினார்.

இஷானோ, “அம்மா… உங்க புராணத்தை ஆரம்பிச்சிட்டிங்களா. அக்கா கதை சித்தி கதைன்னு.” என்று இடைப்புகுந்தான்.
துகிராவுக்கு வளையலிட்டு ஊட்டி விட்டுவிட்டு, சற்று காதல் ரசத்தை பொழிந்துவிட்டு துகிராவின் கையைப்பிடித்து வந்து சேர்ந்தான். இது போன்ற கட்டுக்கதையை உலகில் யாரும் நம்ப மாட்டார்களே.

“போடா… நீ வேண்டுமின்னா பாரும்மா… எங்க வீட்டு அமுல்யாவுக்கு மனசார ஊட்டி விட்டு அதே தட்டில் சாப்பிட்டிருக்க, கூடிய விரைவில் நல்ல செய்தி சொல்வ.” என்றார் பைரவி.

சாராவுக்கு பைரவி பேசவும் பதிலுக்கு மென்னகையிட்டாள்.

“சரி போய் நேரத்துக்கு சாப்பிடுங்க. ஏய் பிரதன்யா அம்மாவை கூட்டிட்டு போய் சாப்பிட வை” என்று கூறி பைரவியை தங்கை பிரதன்யாவோடு அனுப்பி வைத்தான்‌.

“சார்லஸ் நானும் துகிராவும் இப்ப வந்துடறோம்.” என்று இஷான் நிறைமாச துகிராவின் கைப்பிடித்து அழைத்து சென்றான்.

சாரா முகத்தில் இருந்த அந்த அழகான அமைதி, சில நாட்களாக பறிப்போனதால், தெரியாமல் தேடி கொண்டிருந்த ஒன்று. இன்று அந்த அமைதி அவளிடம் இருந்தது.

“டாக்டர் சாரே, எனிக்கு இவ்விடம் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.

“என்ன காரணம்?” என்று சார்லஸ் கேட்க, சாரா சின்னதாய் சிரித்தாள்.

“இவ்விட எல்லாரும் ஆனந்தமாயி இருக்குன்னு தோணுது. யாரும் யாரையும் நெகட்டிவாய் செய்யற மாதிரி இல்லா, பாஸிடிவா இருக்கு. துகிரா சேச்சி, பைரவி ஆன்ட்டி, இஷான் சேட்டா, பிரதன்யா சேச்சி, சம்சரிக்கும் விதம் நன்னாயி.” என்றாள்.
சாரா இந்த ஒரு நாளில் எவ்வளவு மெதுவாக மனசை திறந்திருக்கிறாள் என்று அவனுக்கே புரிந்தது.
அந்த நேரம் விருந்தினர்கள் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர்.

சார்லஸ் சாரா சாப்பிட்டு முடித்து, கிளம்பவும் தயாராகி துகிரா முன் வந்தனர். “சாராவுக்கு சாப்பாடு பிடிச்சிருந்ததா?” என்று கேட்டாள்.

“பட்சனம் எல்லாம் நன்னாயிட்டு இருந்தது. ஒன்னு விடாம கழிச்சு” என்றாள்.

“ஆஹ்.. துகிரா… நாங்க கிளம்பறோம்” என்று சார்லஸ் உரைத்திட, துகிரா உடனே, “என்ன… இப்பவே கிளம்பறிங்களா?” என்று கேட்டாள்.

“ஹ்ம்… ரொம்ப லேட் ஆகுது துகிரா.” என்றான் சார்லஸ்.

“அதுக்கென்ன? இங்க ரூம் இருக்கு. நாளைக்கு போங்க.” என்றதும் சாராவும் உடனே துகிராவை பார்த்தாள்.
அவள் முகத்திலேயே, ‘இருக்கலாம்’ என்ற ஆசை தெரிந்தது. சார்லஸ் மறுக்கும் விதமாக முகமிருந்தது.

இஷான் சிரித்தபடி அருகே வந்தான். “துகி… விடு.” என்றான்.
ஏன் சார்லஸ் சாராவை தங்க கட்டாயப்படுத்தவில்லை.

“ஏன்?” என்றதாய் பார்க்க, “இவங்க இங்க தங்க மாட்டாங்க.” என்று இஷான் சிரித்தான். இஷான் கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி, “ஏன்னா…
டாக்டர் சார்லஸ் சார், மெடிக்கல் மீட்டிங் பெயர்ல… மனைவியை ஹனிமூனுக்கு கூட்டிட்டு வந்திருக்காரு. சர்ப்பிரைஸ் பண்ணற விதமா ஸ்விட்சர்லாந்து டிக்கெட் எடுத்துட்டார்.” என்று கூற சாரா சார்லஸை அப்படியா என்ற விதமாக பார்த்தாள்.
“இஷான்.. போற வழில சொல்ல நினைச்சேன். போட்டு உடைச்சிட்டிங்க” என்று சார்லஸ் செல்லமாய் முறைத்தான். சற்று முன் தான் அவனிடம் இதை தெரிவித்து கிளம்புவதாக இருந்தான். துகிரா இடையே தங்க கூற, எங்கே துகிரா மீதுள்ள நன்மதிப்பால், சாராவுக்கு இங்கிருக்கும் ஆசையால் ஹனிமூனை தவகர்ப்பானோ என்று இஷான் போட்டுடைத்தான்.

“அட துகிரா இங்க ஸ்டே பண்ண சொல்லறா. சாரா சிஸ்டர் இங்க ஸ்டே பண்ண ஆசைப்படறாங்க. சொல்லிட்டா, உங்களுக்கு சுவிட்சர்லாந்து போக நேரம் சரியா இருக்கும்” என்றான் இஷான்.‌

சாராவோ அதிர்ச்சியாக சார்லஸை பார்த்தாள்.
“ஹனிமூனா… அதும் சுவிட்சர்லாந்து?” என்று அவள் மெதுவாக கேட்டாள். சார்லஸ் முகத்தில் மறுக்கும் அவசரம் இல்லை. மெதுவான சிரிப்பு மட்டும் இருந்தது. சாரா முகம் மெதுவாக சிவந்தது.
“டாக்டர் சாரே…” என்று வெட்கத்தில் மெலிந்த குரலில் அழைத்தாள். துகிரா சாராவை பார்த்து கண் சிமிட்டினாள்.
“சரி சரி… போங்க. இப்ப நான் தடுத்தா கூட கேட்க மாட்டிங்க.”
சாரா இன்னும் வெட்கத்திலிருந்து வெளியே வரவில்லை.
அவள் மெதுவாக துகிராவிடம் சென்றாள். “சேச்சி… நான் போயிட்டு வர்றேன்” துகிரா அவள் கையை பிடித்தாள்.
“சந்தோஷமா இரு சாரா. நான் என் அக்கா துர்காவை மிஸ் பண்ணறேன். நீ கிரேஸை மிஸ் பண்ணற. நாம ஒன்னா பிறக்காதவங்களா இருக்கலாம். பட் சிஸ்டர் தான்” என்று கட்டிப்பிடிக்க இருவருக்கும் ஆனந்தக் கண்ணீர் உகுத்தியது.
சார்லஸ், இஷானை கட்டிப்பிடித்து விடைபெற்றான். “கவனமா போ.” என்றான் இஷான்.
“நீயும் துகிராவை பார்த்துக்கோ.”
அமுல்யா தூக்கக் கலக்கத்தில் இருந்தும், “பை சாரா ஆன்ட்டி… பை சார்லஸ் அங்கிள்” என்று கையை அசைத்தாள்.

சாரா அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். பிறகு… பைரவியிடம் பிளஸிங் வாங்கிவிட்டு ரிஷி-அஞ்சனாவிடமும், பிரதன்யாவிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

சார்லஸோடு இணைந்து மெதுவாக வெளியே நடந்தாள் சாரா. வீட்டின் வாசலை கடந்தபோது, அந்த வண்ண விளக்குகள் இன்னும் பின்னால் மின்னிக் கொண்டிருந்தது. இந்த முறை, சாராவின் மனசுக்குள் இருந்த இருள் களைந்திருந்தது.

சார்லஸ் சாரா இருவரும் தங்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று அன்றைய இனிய இரவை கழித்திட புறப்பட்டனர். வழியெங்கும் சாராவிடம் “துகிராவிடம் மெர்ஸியை விட என்னை விட நீ க்ளோஸ் ஆகிடுவ போலயே. இதுல அமுல்யா குட்டிக்கு சோறூட்டி விட்ட.” என்றவன் உற்சாக குரலை மறைத்து நிதானமாக, “பைரவி ஆன்ட்டி சொன்னது போல நம்ம சர்ச்ல கூட சிலர் சொல்லி கேட்டிருக்கேன். சில நேரம் கடவுளோட ஆசிர்வாதத்தை பகிர்ந்துக்கற ஊழியர்கள் சொல்லி. பட்… ஒரு விஷயம் மனோதத்துவ டாக்டரா சொல்வேன். நம்ம மனசு உடல் இரண்டுமே குழந்தையை தேடி பயணிப்பதை விட, நம்ம மனசை நம்ம காதலை தேடி பயணிச்சா, ஆட்டோமெடிக்கா, நம்ம காதல் குழந்தையா கையில தவழும்‌.” என்றான்.

அதன் பிறகு அறைக்கு வந்து சேர்ந்திட, கேரளா சேலை ஜிமிக்கியில் சாரா மீது மையலில் கிறங்கியிருந்தவன், இரவு பிரார்த்தனை முடித்து அசதியில் அயர்ந்தனர்.
உண்மையில் கேரளாவில் நிர்மலா வீட்டில், தனது அச்சன் வீட்டில், தனி வீட்டில் இருந்ததை காட்டிலும் இங்கு வெளியே வந்து பேசி சிரிக்க, மனம் இலகுவாய் மாறியதை சாரா உணர்ந்தாள். சாரா குழந்தை வரத்தை தேடி ஓடப்போவதில்லை‌. சார்லஸின் காதலை தேடி பயணிக்க போகின்றாள்.

சார்லஸ் தன் சாரா இருவருமே நாளை சுவிட்சர்லாந்து புறப்பட்டு செல்வார்கள். டாக்டர் சார் ஹனிமூன் செல்வதால் சில நாட்கள் க்ளினிக் மூடப்பட்டுள்ளதாக ரிஸப்ஷன் போர்டில் முன்கூட்டியே தகவல் எல்லாம் எழுதி வைத்து விட்டான் சார்லஸ்.

-தொடரும்.

1 thought on “பிரியமானவரே என் தேவதூதனே-26”

  1. Super sis nice epi👍👌😍 unmaiyave saravoda happiness parthu romba happy pa😘 kandipa evanga oru good pair dhan 🥰 seekirama avanga aasai padi kuzhandhi pirakanum🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!