Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-25

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-25

அத்தியாயம்-25

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   விமலா போனிலிருந்து “அக்கா.. இன்னிக்கு அண்ணா பார்க்கர் பேனா வாங்கி தந்துட்டார். அவரோட உழைப்பில்… அவரா. முன்ன தந்த பேனா நீங்க தந்த பேனானும் சொல்லிட்டார்” என்று அனிதா மகிழ்ச்சியில் விவரிக்க, பாரதியோ “சூப்பர்… உங்கண்ணாவுக்கு முன்னேறனும்னு வேகம் வந்துடுச்சு போலயே. என்னோட வாழ்த்துகளை சொல்லிடு. அடுத்த மாசம் பப்ளிக் எக்ஸாம்ல?”
என்றாள்.

“ஆமாக்கா” என்று அனிதா கூற, ”நல்லா படிச்சு எழுது அனிதா. ஆஹ் அனிதா நான் அப்பறம் பேசட்டா? இன்னிக்கு வேலை இன்னும் முடியலை.” என்று கத்தரித்தாள்.

   பக்கத்தில் அமர்ந்திருந்த ஒட்டு கேட்ட சரவணனோ, பாரதி குரலில் லேசான புன்னகை சிந்தினான்.

  அவனுக்கு பாரதியிடம் பேச பழக ஆசையாக இருந்தது‌. முன்பு போல பக்கத்து வீட்டு பெண்ணாக எண்ணி.. ஆனால் அதே சமயம் விலகி நின்றான்.
  
   பாரதி அன்று தானும் அம்மாவும் பேசியதை கேட்டு விட்டு என்ன நினைத்தாளோ? ஆனால் அன்று தவறாக பேசவில்லை. உண்மையை தானே சொன்னோம். அவளது நிலை, தன்னிலை எடுத்து கூறி காதலிக்க மாட்டாளன்று கூறியது சரிதானே?! ஆனால் அவள் அதை கேட்டு எவ்விதமான எண்ணத்தில் இருப்பாள். ஆமோதிப்பாக எடுத்துக் கொண்டாளா? இல்லை… இவனை இனி தள்ளி நிறுத்தி பழக வேண்டுமென எண்ணியிருந்தால்…

   எதுவென்றாலும் சரவணன் ஏற்கும் மனநிலையில் நின்றான். இம்முறை பாரதி தந்த பணத்தை முடிந்தால் திருப்பி தரவேண்டும் அது மட்டும் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

   இப்பொழுது பொறுப்பாய் பணியில் இருக்கின்றான். ஆனாலும் சம்பளம் மற்ற விதத்தில் ஈட்டும் பணமும் சரியாக இருந்தது. வீட்டிற்கு வாடகை, அனிதாவுக்கு படிக்க தோதுவாக சின்ன டேபிள், லைட், வீட்டில் அத்தியாவசிய பொருட்கள் என்று வாங்கினான்.
  
   முன்பு பாரதி வந்தப்பொழுது கீழே தானே அமர்ந்தாள். அந்த வருத்தமா அல்லது, வீட்டிற்கு யாராவது வந்தால் அமர்வதற்கு நல்ல நிலையான இருக்கையா என்று பார்த்து வாங்கினான். அப்பொழுது கூட பாரதி வீட்டில் இருந்தது போல வாங்கவில்லை. அந்த இருக்கையின் விலையை கேட்டான். முப்பதாயிரம் என்றதும் எச்சிலை கூட்டி விழங்கி மூவாயிரத்தில் இரும்பில் பொருத்திய சோபாவை வாங்கினான்.

   ஏற்கனவே துருப்பிடித்த கட்டிலில் ஒரு பகுதியில் செங்கல்லை வைத்து இருக்க, அதை மாற்றிவிட்டு ஓரளவு அதையும் வாங்கினான்.

  எல்லாமே கடனாக தான். சிறுக சிறுக இ.எம்.ஐயில் வாங்குவது போல தெரிந்தவரிடம் வாங்கினான். எல்லாமே அடிமட்டத்தில் பொருளாதார முறையில் மலிவான விலையில் விற்கப்படும் பொருட்கள் தான்.  எப்படி ஒரு இட்லி இரண்டு ரூபாயிலும் இருக்கும். பெரிய ஹோட்டலில் இருநூறு ரூபாய் என்றும் விற்கும். அது போல தான் வாங்கியது எல்லாமே நடுத்தர மலிவான விலையில் அவனுக்கு நிறைவான விலையில்….

    அப்படி வாழும் வாழ்வில், வேலைக்கு என்று தந்த பணம் மூலமாக பெரிதான பதவி வரவில்லை. ஆனால் அடுத்த கட்டத்தில் இயங்கினான்.

முன்பு குப்பைகளை கைமுறையாக சேகரிப்பது அல்லது தானியங்கி குப்பை அகற்றும் லாரியைப் பயன்படுத்தியோ திட மற்றும் திரவக் கழிவுகளைச் சேகரித்து, தினசரி ஏராளமான குடியிருப்பு மற்றும் வணிக இடங்களுக்குச் சென்று குப்பையை வாறி அகற்றும் பணியில் இருந்தான்.

இடையில் மாநில அங்கீகாரம் பெற்ற குப்பைக் கிடங்கிலோ,  கண்ணாடி, காகிதம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள், பயனுள்ள மறுசுழற்சிக்காக மற்ற வகை குப்பைகளிலிருந்து முறையாகப் பிரிக்கப்படுவதை உறுதி செய்து மேலீடத்தில் கணக்கு காட்டும் பணியில் இருந்தான்.

டயர் அழுத்தத்தை சரிபார்த்தல், திரவங்களை நிரப்புதல் மற்றும் அசாதாரண தேய்மானம் மற்றும் கழிவுக்காக இயந்திர பாகங்களை ஆய்வு செய்தல் போன்ற வழக்கமான பராமரிப்புகளையும்  அதில் நியமனமானான்.

இதற்கு நாற்பதாயிரம் லஞ்சமா? என்றாலும் பெரும்பாலும் துப்புரவு தொழில் அரசாங்கம் எடுத்து நடத்துவது குறைவு. எல்லாமே தனியாரிடம் தந்து தான் பார்க்கப்படுகின்றது‌.
  அரசாங்கத்தின் நேரிடை கட்டுப்பாட்டில் வருவது சிலதே. அதில் தான் தற்போது சம்பளம் வாங்குவது. இந்த வேலைக்கென்று நுழைந்திருந்தான். ஏதோ பாரதி பணம் ஒன்றும் இல்லாமல் போகாமல், நிஜமாகவே உதவியது.

   கைராசிக்காரி என்று அடிக்கடி நினைப்பான். முகராசி உடையவளே. பாரதி தன் வீட்டருகே இருந்திருந்தால் ஒருவேளை காதலை இலைமறையாக தெரிவித்திருப்போம் என்று கூட எண்ணினான்.

அனிதா பரீட்சையும் முடிந்தது. அவள் ஓரளவு நன்றாக தான் எழுதியிருந்தாள். தனக்காக படிக்கும் வழக்கத்தை விட, மற்றவர்கள் தன் மேல் வைத்த நம்பிக்கைக்காக படித்தவளுக்கு கூடுதலாக ஆர்வம் உண்டு. அதிலும் கீழ்மட்டத்தில் இருந்து மேலே வர நினைப்பவருக்கென்ற வேகம் உண்டல்லவா?! அந்த வேகம் அப்பெண்ணிற்கும் இருந்தது.

   சரவணன் பாரதி சந்திப்பு அதிகம் நிகழவிவ்லை. ஏன் போனிலும் பேசுவது கிடையாது என்பதால் அந்த பிரம்மனே ஒரு சந்திப்பை நிகழ்த்த நினைந்தான் போல.
 
அன்று பாரதி வழிநெடுக குப்பை அள்ளுபவர்களையும், வேலை செய்பவர்களையும், வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அன்று மட்டும் அல்ல… சரவணன் ஒரு டிப்பார்ட்மெண்ட் கடையில் ஒரு நாள் குப்பை அள்ளியதை நேரில் பார்த்தாலே, அன்றிலிருந்தே ரோட்டில் யாரேனும் குப்பை வண்டியையோ, குப்பையை அள்ளுபவரையோ, ஏன் துப்புரவு பணியாளர்கள் அணியும் உடையை கண்டாள் கூட திரும்பி பார்ப்பாள்.

   அவள் வேடிக்கை பார்த்தபடி வரவும், “பழனி பழனி டேய் ஆளு வர்றாங்க” என்று சரவணன் குரல், பாரதி சுற்றி முற்றி அக்குரலுக்குரியவனை தேட, அந்த பெரிய இயந்திரம் அவள் தலையை இடிக்க வரும் நேரம், “பாரதி” என்று இழுத்தான் சரவணன்.

   தன் தலைக்கு நேராக ராட்சத இயந்திரம் குப்பையை அள்ள கீழே வருவதை கவனிக்காமல் நடந்தவளுக்கு சரவணன் குரலும் அவன் இழுத்ததும், கீழே விழுந்து சிராய்ப்பு உண்டானது. ராட்சத இயந்திரம் டம்மென்று சப்தத்துடன் மறுபுறம் குப்பைக்கு மேல் அமிழ்த்தியது.

  இவ்ளோ குப்பை இருக்கற இடத்தில்,  அந்த வண்டியையும் அது தன் பக்கம் திரும்புவதையும் பாரதி கவனிக்கவில்லை.

“ஏம்மா… தடுப்பு போட்டு வேலை செய்யறோம். பிராக்கு பார்த்து வர்ற. இந்நேரம் தலையில மோதினா, என் வேலையில தான் மிஸ்டேக்னு கை வைப்பானுங்க.” என்று அந்த இயந்திரத்தை இயக்கிய பழனி கத்தினான்.

   ‘சென்னை கார்ப்ரேஷன் பகுதி வேலை நடக்கின்றது’ என்று தடுப்பு இருக்க, அதை பாரதி தற்பொழுது தான் கண்டாள்.

“டேய்.. தெரிந்த பொண்ணு தான். எதுவும் திட்டிடாத” என்று வேண்டுகோள் வைத்தான் சரவணன். ஏனெனில் ஏதேனும் பேசி பாரதி மனகாயம் அடைந்துவிட்டால்… எல்லாம் ஒரு அவசர எச்சரிக்கை செய்தான்.

  “எப்பவுமே உன்னை சுத்தி கவனம் இருக்காதா? இந்நேரம் தலையில் இடிச்சிருந்தா என்ன ஆயிருக்கோம்” என்று அதட்டவும் “இல்லை… இங்க குப்பையை பார்த்ததும் உன் நினைப்பு வந்துச்சு” என்றாள் பாரதி.

  ஒருமையில்… ‘குப்பையை பார்த்ததும் பாரதி உன் நினைப்பு வந்துச்சு’ என்றதும் சரவணன் நெற்றி சுருக்கி, “இப்ப குப்பையை அள்ளறது இல்லை. வேலை ஒழுங்கா நடக்குதா இல்லையா எங்க எந்த வேலைக்கு ஆளை நியமிக்கணும் என்ற வேலையில சுத்தறேன்.
  நீ தந்த நாற்பதாயிரம்” என்று முடித்துவிட்டவன், கையில் கட்டு வேறு கட்டியிருந்தது.

“கைக்கு என்னாச்சு” என்று பதறினாள்.

  “மட்கும் குப்பை மட்காத குப்பைன்னு பிரிச்சி தருவாங்க. இதுல மட்கும் குப்பையில் கண்ணாடி சில்லா போட்டு குப்பையில் தூரயெறிந்து இருப்பாங்க போல. மறுசுழற்சி பண்ணி உரமா மாத்தற இடத்துல எடுத்தேன். கையை கீறிடுச்சு. ரத்தம் நிற்காம வரவும் கட்டுப்போட்டு இருக்கு. எனக்கு பதிலா தான் இந்தா  அந்த பழனி இந்த வண்டில வேலை பார்க்கு” என்று ராட்சத இயந்திரம் குப்பையை தூக்கி எடுத்து அங்கு இருந்த லாரியில் போட்டு ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தார்.

  பாரதி சரவணனிடம், “அனிதாவுக்கு பரீட்சை ஆரம்பிச்சிடுச்சா?” என்று விசாரிக்க, “அடுத்த வாரம் எக்ஸாம்” என்றான்.

  “ம்ம்ம். ஆன்ட்டி எப்படியிருக்காங்க” என்று விசாரித்தாள்.

“முன்ன மூனு நாலு வூட்ல வேலைக்கு போகும். பாத்திரம் கழுவி துணி துவைச்சி வேலை பார்த்து காசு வாங்கும். இப்ப மூட்டுவலி வந்துடுச்சு. மாடிபடி ஏற கூடாதுனு சொல்லிட்டாங்க.” என்றவன் “பழனி… இறக்கும் பேது மெதுவா இறக்குடா.” என்று கத்திவிட்டு, “பாத்திரம் கழுவி கழுவி தண்ணில கை வச்சாளே ஏதோ கரண்ட் ஷாக் அடிக்கறாப்ல கை இழுக்குதுன்னு சொல்லுது.
  அதென்னவோ எங்களை மாதிரி ஆளுங்க, கொஞ்சம் உசந்தா, அடுத்து கடவுள் நோய் இழுத்து வச்சிடறார். முன்னேறவே விடமாற்றார் அந்த கடவுள்” என்று அந்த இறைவன் மீதே பழித்தூக்கி போட்டான்.
 
  இந்நேரம் பாரதி ஆமா கடவுள் என்பவன் இல்லை’ என்று தான் கூற வேண்டும். அவளுக்கு நிகழ்ந்த சம்பவத்தினால்… ஆனால் அவளோ, “கடவுள் மேல பழி போடுறதே வேலை. தீதும் நன்றும் பிறர்தரவாரா’

ஆன்ட்டியை ட்ரீட்மெண்ட் கூட்டிட்டு போனிங்களா?” என்று கேட்க “ம்ம்.. கவர்மெண்ட் ஆஸ்பத்திரில காட்டிட்டு வந்தேன். வயசாகுதுல அப்படி தான் இருக்கும்னு சொல்லிட்டாங்க. மாடிபடி ஏறாம தண்ணில கை வைக்காம சத்து மாத்திரை மட்டும் தந்திருக்காங்க.” என்றான்.

  “பிரைவேட்ல போகலையா?” என்றதற்கு அவளை மேலும் கீழும் பார்த்தான்.

“எந்த காலத்துக்குங்க பிரைவேட்ல பார்த்தது.” என்று பதிலளிக்க, பாரதியோ முறைத்தபடி நின்றாள்.
 
  “உங்க வேலை என்னவோ பார்க்க போங்க.” என்று சரவணன் அனுப்ப முயல, உதட்டை கோணித்து நடந்தாள்.

சரவணன் அவள் செல்ல அவளை பார்த்து உதடு விரிக்க, சற்று தள்ளி சென்ற பாரதியோ அவளுக்குள்ளும் புன்னகை விரிந்தது.

    அதே உற்சாகத்துடன் வீட்டுக்கு வந்தப்பொழுது, சௌந்திரராஜன் மணிமேகலை இருவருமே மகளை மகிழ்ச்சியாய் வரவேற்றனர்.
 
   கூடுதலாக அவள் அலுவலகத்தில் வேலை செய்யும் உதய் குடும்பத்தோடு இவள் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான்.‌
 
  தந்தையை குழப்பமாய் பார்வையிட, “உன்னை பார்க்க தான் வந்திருக்காங்க. போய் உட்காரு” என்று மணிமேகலை கூற உதய் பெற்றோருடன் அழைத்து வந்த காரணம் புரிந்தவளாக அமர்ந்தாள்.

உதய் தான் மௌனத்தை கலைத்தான். “சாரி பாரதி… உன்னிடம் பேசிட்டு, உன்‌ சம்மதம் தெரிந்தப்பின்ன தான், அம்மா அப்பாவை அழைச்சிட்டு வரணும்னு நினைச்சேன். ஆனா என்னால உன்னிடம் நேர்ல பார்த்து காதலிப்பதை சொல்ல முடியலை.
   உன்னை ஒரு மூனு வருஷமா பார்க்கறேன். ஒன்றரை வருஷமா காதலிக்கறேன்.
    நீ லாஸ்ட்ஒன் இயர் எதுக்கெடுத்தாலும் யாராவது பேசினாலே, திட்டுவியா… கோபப்படுவியா… உன்னிடம் நெருங்கவே பயமா இருந்தது.

   இப்ப ரீசண்டா நீ முன்ன மாதிரி அமைதியான பாரதியா பார்த்ததும்,  காதலை சொல்ல நினைச்சேன்.
  உங்கப்பாவை தற்செயலா பார்த்தேன். ஏதோ ஜோதிட நிலையத்துல.
  என் பொண்ணுக்கு கல்யாண யோகம் இருக்கானு நேத்து கேட்டு நின்றார். நான் உன்னை விரும்பறத சொல்லவும், ஒரு நாள் அப்பா அம்மாவோட வாங்கன்னு சொல்லிருந்தார்.

  என்னால தள்ளி போட முடியலை. வீட்ல பேரண்ட்ஸிடம் சொல்லி இன்னிக்கே கூப்பிட்டுட்டு வந்துட்டேன்.

  அப்பா அம்மாவுக்கு உன்னை போட்டோவுலயே பிடிச்சிருக்கு. அவங்க மேரேஜுக்கு முழுசம்மதம் சொல்லிட்டாங்க.
 
  உங்க வீட்ல கூட உங்கப்பா அம்மா பாரதி சம்மதிச்சா கல்யாணம் பண்ணி வைப்பதா வாக்கு தந்தாங்க” என்றதும் பாரதியின் கருவிழிகள் பெற்றவர்களை பார்த்து மீண்டும் உதயிடம் நிலைத்தது.

    “உன் விருப்பம் சொல்லு பாரதி” என்று ஆசையுடன் கேட்டான்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
 
  

6 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-25”

  1. M. Sarathi Rio

    மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 25)

    இந்த பாரதிக்கு ரொம்பவே அதிர்ஷ்டம் இருக்குதுன்னு நினைக்கிறேன், முதல்ல பிரஷாந்த், அடுத்து ரஞ்சித், இப்ப உதய். இவனுக்காவது ஓகே சொல்லுவாளா, இல்லை உதை கொடுத்து அனுப்புவாளா..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!